IIN 78

திடீரென PTSDயின் பாதிப்பினால் நோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் தங்களை அமைதிப்படுத்த சில தடுப்புமுறைகளைக் கையாளுவார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆழ்ந்து மூச்சை எடுத்துவிடுவது, தசைகளை இலகுவாக்குவது போன்றவை. முதலில் PTSD எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கிக்கொடுப்பது அவசியம். அவர்களின் அனுபவம் மற்றும் உணர்வுகளை பகிர்வதை ஊக்குவிக்க வேண்டும். கூடவே இந்தப் பாதிப்புக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைப் புரியவைக்கவேண்டும். இந்தப் பாதிப்பு PTSD குணமாக கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். PTSD  பாதிப்பைத் தூண்டும் காரணிகள் இருக்கக்கூடிய சூழலை தவிர்க்க நோயாளிக்கு உதவவேண்டும்.

                                                          -From Internet

இதன்யா, முரளிதரன், மார்த்தாண்டன், மகேந்திரன் நால்வரும் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

சற்று முன்னர் தான் மார்த்தாண்டன் தூத்துக்குடி விமானநிலைய அதிகாரி ஒருவரிடம் மொபைலில் பேசி ஏகலைவன் எங்கே சென்றிருக்கிறான் என்ற விவரத்தைக் கேட்டறிந்திருந்தார்.

அவன் சென்னைக்குத் தொழில் விசயமாகச் சென்றிருப்பது தெரியவந்தது. அப்போது கொஞ்சம் ஆசுவாசப்பட்டாள் இதன்யா. காரணம் ஏகலைவன் சென்னை விமானநிலையத்துக்கு வருகை தந்ததோடு பேராசிரியர் தேவநாதனின் வீட்டில் தான் தங்கியிருக்கிறான், அதுவும் பிரகதி வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு தான் அவன் வந்திருக்கிறான் என்று அவர் நிஷாந்திடம் சொன்னது தான். நிஷாந்திடம் முரளிதரன் தனது விசாரணையை முழுவதுமாக முடித்துக்கொண்டதும் அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.

“என்ன சார்?” என்று குழப்பமாக வினவிய இதன்யாவிடம் பின்னர் சொல்கிறேன் என கண் காட்டியவர் அவன் சென்றதும் விசாரணைக்குழுவினர் அனைவரையும் அலுவலக அறைக்குள் அழைத்தார்.

அங்கே அனைவரும் ஒன்றுகூடியதும் முதலில் இதன்யா போன வேலை என்னவாயிற்று என்று விசாரித்தார் அவர். இதன்யா நிதானமாக விசாரணைக்குழுவினரிடம் ஏகலைவனின் பிரச்சனையை விவரித்தவள் அவனது இந்தக் குறைபாட்டின் காரணமாக இனியாவின் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்ற தனது ஐயத்தை அங்கே வெளிப்படுத்தினாள்.

 “வாய்ப்பிருக்கு… இதே டவுட் நிஷாந்துக்கும் இருக்குனு அவன் விசாரணைல சொன்னான்” என்ற முரளிதரன் நிஷாந்தின் வாக்குமூல வீடியோவை அங்கே இருந்த எல்.ஈ.டி திரையில் ஒளிபரப்பினார்.

நிஷாந்தும் அவரும் பேசுவது மட்டுமே அடுத்து அந்த அலுவலக அறைக்குள் கேட்டது.

முரளிதரன் முதலில் நிஷாந்திடம் வினவியது மெய்யாகவே இனியாவைக் காதலித்தாயா என்று தான். அவன் புன்சிரிப்போடு இக்கேள்வியை எதிர்பார்த்ததாகச் சொன்னான். காரணம் பிரகதியைத் தான் காதலிப்பது இதன்யாவுக்குத் தெரிந்ததுமே இந்த விசாரணையை எதிர்பார்த்தேன் எண்றான் அவன்.

தொடர்ந்து தனது சிக்கலான காதல் கதையை அவரிடம் விவரிக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக யாருமே எதிர்பார்க்காத சில முக்கியமான விசயங்களையும் பகிர்ந்துகொண்டான்.

“நான் முதல்ல பிரகதியை தான் லவ் பண்ணுனேன்… கிராமத்துல வளந்த எனக்குக் கோவில் விவகாரம் சம்பந்தமா சென்னைக்குப் போய் தேவநாதன் வீட்டுல தங்குன சமயங்கள்ல அவளோட மாடர்ன் அழகுல ஒரு மயக்கம்… அவளும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சா… முதல்ல எங்க காதல் ஸ்மூத்தா போச்சு… ஆனா அவ கொஞ்சநாள் ஆனதும் ஓவர் டாக்சிக்கா பிஹேவ் பண்ணுனா… காரணம் எனக்கு ஏகலைவன் மாமா எழுதிவைக்கப்போறதா சொன்ன சொத்து… அவர் என்னை வாரிசா அனவுன்ஸ் பண்ணுவார்ங்கிறதை அவ கிட்ட நான் ஷேர் பண்ணுன தேதில இருந்து அவ புது பிரகதியா மாறிட்டா… என்னை வேற ஒரு பொண்ணுக்கு விட்டுக்குடுக்க அவ தயாரா இல்ல… அதுக்கு முன்னாடி வரைக்கும் லவ், ப்ரேக்கப் எல்லாம் அவளுக்கு சாதாரணம்ங்கிற ரீதில பேசுனவ திடீர்னு பணத்துக்காக மாறுனதும் எனக்குள்ள கசப்பு உண்டாச்சு… அந்த டைம்ல தான் இனியா என்னைக் காதலிக்குறதா சொல்லிட்டு வந்து நின்னா… எனக்கு அவ மேல லவ் எதுவும் வரல… ஒருத்தி கிட்ட சிக்கி நான் படுற பாடு போதாதாங்கிற விரக்தி… இனியா ரொம்ப சின்னப்பொண்ணு வேற… ஆனா அவ என் பேச்சைக் கேக்கல… தொடர்ந்து என்னை லவ் பண்ணுனா…

ஒரு கட்டத்துல என் மனசு என்னை அறியாம பிரகதியையும் இனியாவையும் கம்பேர் பண்ணி பாத்துச்சு… ஏன்னா எனக்கு அவளைப் பத்தி ஒரு உண்மை தெரிய வந்துச்சு” என நிறுத்தினான் நிஷாந்த்.

“என்ன உண்மை?” – முரளிதரன்.

“அவ டார்க்வெப்ல செய்யுற கேவலமான வேலை… தேவா அத்தை பேரை சொல்லி மாமா கிட்ட பணம் பறிக்குற கீழ்த்தரமான காரியம் ஸ்ரீ மூலமா எனக்குத் தெரிய வந்துச்சு… ஆனா நான் அவ கிட்ட அதை பத்தி பேசல… நான் நினைச்சிருந்தா அப்பவே மாமா கிட்ட அதுல்லாம் பொய், பித்தலாட்டம்னு சொல்லிருக்கலாம்… பட் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருந்தேன்.. என்னையும் என் அம்மாவையும் இத்தனை வருசம் பாத்துக்கிட்ட மனுசனோட பலவீனம் தேவா அத்தை… அவங்க ஆன்மாவா உலாவுறதா அவர் நம்புனார்… அந்த நம்பிக்கை அவரைச் சந்தோசமா நடமாட வச்சுது… அதை கெடுக்க நான் விரும்பல… பிரகதி கிட்ட சண்டை போட்டா அவ ரொம்ப மோசமா எதையும் செஞ்சு மாமா மனசைக் காயப்படுத்திடுவானு அவளையும் கண்டுக்காம விட்டுட்டேன்… அந்த நேரத்துல தான் இனியாவோட உண்மையான காதல் என்னை ஈர்த்துச்சு… ஆனாலும் அவளை அப்பிடியே நம்பாம ‘ஈ.டி.எஸ்’ ஐடி மூலமா அவ கிட்ட பேசுனேன்”

“எதுக்காக அனானிமஸ் ஐடிக்கு அந்த நேமை வச்ச நீ?”

“என் மாமாவுக்கு தேவா அத்தை மேல இருந்த காதலை நினைச்சு நான் பிரமிச்ச தருணங்கள் அதிகம்.. சோ அந்த நேரத்துல ஏகலைவன் தேவசேனாங்கிற நேம் என் மைண்ட்ல ஸ்ட்ரைக் ஆனதும் அதையே ஷார்ட்டா அனானிமஸ் ஐ.டிக்கு வச்சிட்டேன்… இது எல்லாமே டார்க்வெப்ல தான் செஞ்சேன்… ஸ்ரீ எத்தனையோ தடவை டார்க்வெப் பத்தி சொன்னப்ப வராத குறுகுறுப்பு அப்ப வந்ததால அந்த வழியா போய் இனியாக்கு ரெக்வஸ்ட் குடுத்து பேசுனேன்… இனியா ஒரு ப்யூர் சோல்னு தெரிஞ்சதும் நான் அந்த ஐ,.டில பேசுறதை நிறுத்திட்டேன்… ஒரே ஒரு தடவை மாமாவோட லேப்டாப்ல அந்த ஐடியை நான் லாகின் பண்ணுனேன்… லாக் அவுட் பண்ண மறந்துட்டேன்… அதே ஐ.டிய வச்சு ஏகலைவன் மாமா என் இனியா கிட்ட பேசுனதும் எனக்குத் தெரியும்”

அவனது வாக்குமூலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இதன்யாவுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. இவன் மறைத்த உண்மைகள் இன்னும் எத்தனையோ என்ற எரிச்சல் வேறு அவளுக்கு!

“அவங்க கான்வர்சேசன் எல்லை மீறி போகல… ஆனா மாமாவோட பிஹேவியர் கொஞ்சம் கொஞ்சமா மாறுச்சு… அவரோட கவனம் இனியா பக்கம் திரும்ப ஆரம்பிச்சுது… இனியாக்கு ராமபாணப்பூ பிடிக்கும்னு அவருக்குத் தெரியும்… அவருக்கும் அந்தப் பூ ரொம்ப பிடிக்கும்… மாமா அடிக்கடி இனியாவோட வீட்டுக்குப் போறதை நான் கவனிச்சேன்… பட் என் மைண்டுக்குள்ள எந்தச் சந்தேகமும் வரல… அப்புறம் இனியா அப்பா என்னைத் திட்டுனது, அதை தொடர்ந்து நடந்த எல்லாத்தையும் நான் இதன்யா மேடம் கிட்ட விசாரணைல சொல்லிட்டேன்”

“இன்னும் நீ முழுசா உண்மைகளை சொல்லல நிஷாந்த்… உன் மாமாவ பத்தி இவ்ளோ தூரம் உண்மை தெரிஞ்சும் நீ இதுக்கு முன்னாடி நடந்த விசாரணைல வாயைத் திறக்கல… இன்னும் நீ பிரகதி கூட சுத்திட்டுத் திரியுற… இதுக்குலாம் என்ன அர்த்தம்?” அதட்டலாக வினவினார் முரளிதரன்.

“எனக்கு போலீஸ் மேல நம்பிக்கை இல்லனு அர்த்தம்… என் இனியாவ கொன்னவன் யாருனு நானே கண்டுபிடிக்க நினைச்சேன்னு அர்த்தம்”

கடினக்குரலில் நிஷாந்த் சொல்லவும் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். திரையில் முரளிதரன் அவனையே ஆழ்ந்து நோக்க நிஷாந்த் தொடர்ந்து பேசினான்.

“இனியா இறந்தது கூட தெரியாம சென்னைல இருந்து இந்த ஊருல வந்து இறங்குன நான் நேரா போனது என் மாமா வீட்டுக்கு… அன்னைக்கு மாமா கிட்ட பிரகதி செய்யுற தில்லாலங்கடித்தனத்தைச் சொல்லி அவளோட வலையில இருந்து அவரை மீட்கணும்னு நினைச்சு அங்க போனேன்… அங்க என்ன பாத்தேன் தெரியுமா?”

நிஷாந்தின் குரல் உடைந்திருந்தது.

“ஏகலைவன் மாமா அவரோட பெட்ரூம்ல இருந்த தேவா அத்தை போட்டோ கிட்ட மொபைல்ல இருந்த இனியாவோட போட்டோவ காட்டி பேசிக்கிட்டிருந்தார்… என்ன பேசுனார் தெரியுமா?”

மீண்டும் அவன் குரல் உடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினார் முரளிதரன். நிஷாந்த் தண்ணீரை அருந்தினான். தன்னை நிதானப்படுத்திக்கொண்டு ஏகலைவன் போல பேசி காட்ட ஆரம்பித்தான்.

“இவளை உன்னோட மறுபிறவினு நம்புனேன் தேவா… உன்னை மாதிரியே அழகு, உன்னை மாதிரியே ஃபாரன்சிக் ஃபீல்டுல ஆர்வம், உன்னை மாதிரியே ராமபாணப்பூ மேல காதல், உன்னை மாதிரியே அப்பாவால புறக்கணிக்கப்பட்டு அவரோட அன்புக்கு ஏங்குற சூழல்னு ஒவ்வொரு விசயத்துலயும் உன்னை ஞாபகப்படுத்துனா தேவா… நீ அடிக்கடி சொல்லுவல்ல, நான் மறுஜென்மம் எடுப்பேன்னு… இவ தான் உன்னோட மறுஜென்மம்னு நம்பி மனப்பூர்வமா நான் இவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன்… வயசு வித்தியாசம், இந்த உலகம் என்ன நினைக்கும்னு எதை பத்தியும் கவலைப்படாம இவளைக் காதலிச்சேன்… தப்பு தப்பு, இனியாவா பிறந்த என் தேவாவ காதலிச்சேன்… ஆனா இவ என்ன பண்ணுனா தெரியுமா தேவா? என்னை விட்டுட்டு அந்தப்  பொடிப்பையன் நிஷாந்தைக் காதலிச்சா… அது கூட பரவால்ல… இப்ப செத்தே போயிட்டா தேவா… என் தேவா எனக்குச் சொந்தமாகாம எப்பிடி செத்துப்போவா? அப்ப தெரிஞ்சுது இவ நீ இல்லனு”

மூச்சு வாங்க நிறுத்தியவன் “அப்ப தான் சார் இனியா செத்துப்போனது எனக்குத் தெரியும்… எவ்ளோ வலிச்சுது தெரியுமா எனக்கு? பிரகதி பிரச்சனைய மாமா மூலமா முடிச்சிடணும், நல்லா படிச்சு பெரிய வேலைக்குப் போய் இனியாவைக் கல்யாணம் பண்ணி அவ கூட எப்பிடிலாம் வாழணும்னு நிறைய கனவு இருந்துச்சு சார் எனக்கு… ஒருநாளா இருந்தாலும் நான் அவ கூட வாழ்ந்திருக்கேன் சார்… அப்பிடி பாத்தா ஷீ இஸ் மை ஒய்ப்… அவளை நான் இழந்துட்டேன்ங்கிறதை இப்ப வரைக்கும் இந்த நொடி வரைக்கும் என்னால நம்பவே முடியல” என்று சொல்லிவிட்டுத் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

அடக்கமாட்டாத அழுகை அது! இம்முறை அவனது அழுகையில் இதன்யாவுக்கு எந்தப் போலித்தனமும் தெரியவில்லை. அவன் அழட்டுமென அமைதியாய் அமர்ந்திருந்தார் முரளிதரன். மூச்சு முட்ட அவன் அழுது தீர்த்துவிட்டு நிதானமடைந்தபோது தான் இதன்யா அங்கே வந்தாள். உடனே விசாரணை தடைபட்டது.

பின்னர் மீண்டும் வாக்குமூலம் ஆரம்பித்தது.

“அப்புறம் இனியாவோட மர்டர் பத்தி போலீஸ் விசாரணை ஆரம்பிச்சப்ப தான் எனக்கு மாமா மேல சந்தேகம் வந்துச்சு… அவர் இனியாவைக் கொலை பண்ணிருப்பாரோங்கிற சந்தேகத்துல தான் நான் அவர் அவர் ஆசையா வளத்த ராமபாணக்கொடி மேல ஆசிட் ஊத்துனேன்”

இது என்ன  புதுக்கதை என்பது போல திரையைப் பார்த்தவர்கள் எண்ணிக்கொண்டார்கள்.

“என் சந்தேகத்தை க்ளியர் பண்ணிக்க தான் பிரகதி கிட்ட காதல் நாடகத்தை மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுனேன்.. அவ தேவசேனானு ஏமாத்தி மாமா கூட பழகுறா… சோ இனியாவ மர்டர் பண்ணுனதுல மாமாவோட பங்கு இருந்தா கட்டாயம் அவ கிட்ட அவர் ஷேர் பண்ணிருக்க வாய்ப்பு இருக்குனு யோசிச்சேன்… இப்பவும் நான் அவ கூட அந்த உண்மைய தெரிஞ்சிக்க தான் பழகுறேன்… என்னை நம்புங்க சார்… பிரகதி மேல எனக்கு வந்தது இனக்கவர்ச்சி… ஆனா இனியா மேல எனக்கு வந்தது ஆத்மார்த்தமான காதல்… உங்களுக்குத் தெரியாத விசயம் ஒன்னு சொல்லுறேன்… நான் சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட தெரபி எடுத்துக்குறேன்”

முரளிதரன் பார்வையைக் கூர்மையாக்கிக்கொண்டார்.

நிஷாந்த் விடைத்த நாசியோடு “என்னால இனியாவ மறக்க முடியல சார்… நடந்த எல்லாம் கனவா இருக்கணும்ங்கிற வேண்டுதலோட தான் என்னோட ஒவ்வொரு நாளையும் நான் ஆரம்பிக்குறேன்… ஆனா ஒவ்வொரு நாளோட ஆரம்பமும் இனியா இனிமே இல்லடானு எனக்குச் செருப்பால அடிச்ச மாதிரி புரியவைக்குறப்ப செத்துடலாம் போல இருக்கும் சார்… இதெல்லாம் மீறி என்னை வாழ வைக்குறது எது தெரியுமா? எனக்கு அப்புறம் என் அம்மா நிலமை என்னாகுமோங்கிற பயமும், என் இனியாவைக் கொன்னவனை என் கையால துடிக்க துடிக்க கொல்லாம சாகக்கூடாதுங்கிற வைராக்கியமும் தான் என்னை உயிரோட நடமாட வச்சிட்டிருக்கு சார்” என்றான்.

முரளிதரன் பெருமூச்சோடு “இதெல்லாம் நீ முன்னாடியே சொல்லிருக்கலாம்பா” என்றதும்

“அப்பிடி சொல்லிருந்தா அந்தக் கொலைகாரன் என்னைக் கொன்னுட்டு சட்டத்துல இருந்து தப்பிச்சிருப்பான் சார்”

“உனக்குக் கொலைகாரன் யாருனு தெரியுமா? எனி ஐடியா?”

தெரியவில்லை என்பது போல மறுப்பாய் தலையசைத்தான் நிஷாந்த்.

“ஆனா எனக்கு மாமா மேல சந்தேகம் இருக்கு” என்பதை மட்டும் தீர்மானமாக உரைத்தான் அவன்.

அதற்கு மேல் வாக்குமூல வீடியோ முடிவுக்கு வரவும் நால்வரும் அடுத்து என்ன செய்வதென தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தபோது கான்ஸ்டபிள் ஒருவர் துணையோடு கோபாலும் நவநீதமும் பொன்மலை அரசு மருத்துவமனையிலிருந்து காவல் நிலையத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்கள் இருவரையும் விசாரித்து முக்கியமான கேள்வியொன்றுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதல்லவா!

இருவரையும் ஒரே விசாரணை அறையில் இருக்கும்படி பணித்துவிட்டுக் கான்ஸ்டபிள் வந்து தகவல் சொன்னதும் இதன்யாவும் முரளிதரனும் அவர்களை விசாரிக்க அங்கே வந்து அமர்ந்தனர்.

நவநீதம் சோர்வாக விழித்தாள் என்றால் கோபாலோ பயத்தில் மிரண்டு போயிருந்தார்.

இதன்யா  கரங்களை மேஜையின் மீது கோர்த்து வைத்தவள் “சாத்தான்ங்கிற பேர்ல உங்களை ஆட்டிவச்சவன் யாரு?” என்று கேட்க இருவரின் பயமும் இன்னும் அதிகரித்தது. என்ன பதில் சொல்வார்கள் அவர்கள் இருவரும்?