IIN 77

PTSD தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்கொலை முடிவு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதில் இறங்குவார்கள். சிலரோ மற்றவர்களை வார்த்தை மூலமோ உடல்ரீதியாகவோ காயப்படுத்துவார்கள். எந்தச் சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்களோ அந்தச் சூழல் வந்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை தடுக்க ஆரம்ப கட்டத்தில் தெரபி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து வெளிவரலாம். சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இல்லையென்றால் அவர்களின் பாதிப்பு தீவிரமடையும்.

                                                          -From Internet

பொன்மலையின் விடியலின் ரேகைகள் பரவத் தொடங்கியிருந்தபோது ஊருக்கு வரக்கூடிய முதல் அரசு பேருந்தில் வந்து இறங்கினார்கள் சாவித்ரியும் நிஷாந்தும். தென்காசியில் தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்துக்குத் துஷ்டி கேட்க சென்று திரும்பியிருந்தார்கள் அன்னையும் மைந்தனும்.

ஊர்  மக்கள் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவாறு அன்னையும் மகனும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.

வாசல் தெளித்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுப்பெண்மணி “வந்துட்டிங்களா சாவித்திரிக்கா? நேத்து உங்க மகனைத் தேடி போலீஸ்காரங்க வந்தாங்க… நீங்க தென்காசில இருந்து திரும்பி வந்ததும் நிஷாந்தை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிருக்காங்க… என்ன நிஷாந்து, மறுபடியும் எதுவும் செஞ்சு மாட்டிக்கிட்டியா?” என்று நக்கலாகக் கேட்கவும் சாவித்திரியின் முகத்தில் கலக்கம்.

நிஷாந்தோ போலீஸ் என்ற வார்த்தையிலேயே பீதியுற்றான்.

சாவித்திரி மகனை அவசரமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“இந்தத் தடவை என்ன செஞ்ச?” என்று அவரும் கேட்க

“நீங்களே இப்பிடி கேட்டா என்னம்மா அர்த்தம்?” என்று சோகமாக வினவினான் அவன்.

சாவித்திரி தலையைப் பிடித்துக்கொண்டார்.

“உன்னை மாதிரி ஒரு புள்ளைய பெத்தவ வேற என்ன தான் செய்வா? இங்க பாரு நிஷாந்த், இன்னொரு தடவை என் தம்பி கிட்ட உனக்காக போய் நிக்க எனக்குப் பிடிக்கல…. என்ன செஞ்சனு மறைக்காம சொல்லு… உனக்காக நான் போலீஸ் கிட்ட பேசிப் பாக்குறேன்” என்றார்.

“நான் என்ன சொன்னாலும் போலீஸ் நம்ப மாட்டாங்கம்மா… நீங்க போய் எனக்காக பேசுனா அவங்க இரக்கப்படுவாங்கனு நினைக்குறிங்களா? அந்த லேடி ஆபிசர் இதன்யாக்கு என் மேல இரக்கம் எல்லாம் கிடையாது… அப்பிடி இருக்குற மாதிரி காட்டிக்கிட்டு உங்க கிட்ட இருந்து தகவல் கறக்க முயற்சி பண்ணுவாங்க… இந்தத் தடவை என்ன நடக்கணுமோ நடக்கட்டும்… நான் என்ன விளைவு வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கிறேன்மா” என்று சொல்லிவிட்டான் அவன்.

அன்னையும் மகனும் பதபதைப்புடன் இருக்கையில் பத்து மணி வாக்கில் கான்ஸ்டபிள் ஒருவர் நிஷாந்தை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்தார்.

நிஷாந்தும் அவரோடு கிளம்பிய அரைமணி நேரத்தில் இதன்யா அங்கே வரவும் சாவித்திரியின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. நிராசையோடு அவளை வரவேற்றவர் அமரச் சொன்னார்.

“உங்களுக்குக் குடிக்க தண்ணி கொண்டு வர்றேன் மேடம்”

சமையலறைக்குச் செல்ல எத்தனித்தவரை எதுவும் வேண்டாமென சொல்லித் தடுத்தாள் இதன்யா.

“உக்காருங்க.. உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்றாள் அவள்.

சாவித்திரியும் அமைதியாக அமர்ந்தார்.

“நிஷாந்த் இந்த தடவை என்ன செஞ்சான்னு தெரியல மேடம்… ஆனா அவன் மனசறிஞ்சு தப்பு எதையும் செஞ்சிருக்க மாட்டான்… அவன் மேல கொஞ்சம் கருணை காட்டுங்க” என்றார் அவர்.

பெற்ற மனம் பித்தாயிற்றே!

இதன்யாவோ மென்மையாக முறுவலித்தாள்.

“நான் பேச வந்தது நிஷாந்தைப் பத்தி இல்ல… உங்க தம்பி ஏகலைவனை பத்தி” என அவள் சொன்னதும் சாவித்திரியின் வதனத்தில் மெல்லிய குழப்பம்.

“என் தம்பிய பத்தி என்ன பேசணும்?” தயக்கத்தோடு இழுத்தார் அவர்.

“பேச நிறைய இருக்கு… இப்போதைக்கு எனக்குத் தெரிய வேண்டியது அவரோட சைக்காலஜிக்கல் கண்டிசன் எப்பிடி இருக்குங்கிறது தான்”

சாவித்திரி தயக்கத்தோடு அவளை ஏறிட்டார்.

“அது…” என்று வார்த்தைகளை யோசித்துவிட்டு விழுங்கியவர் தவிப்பது இதன்யாவுக்கே தெரிந்தது.

“என் தம்பி பைத்தியக்காரன்னு நினைச்சிடாதிங்க… அவன் ரொம்ப நல்லவன்… ஆனா சின்ன வயசுல இருந்தே அவன் இருந்த சூழல் அவனைக் கொஞ்சம் பாதிச்சிடுச்சு… கூடவே தேவாவோட மரணம் அவனை ஒரேயடியா உடைச்சிடுச்சு… இத்தனை வருசமா அவன் சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட தெரபி எடுத்துக்கிறான்… அவனோட மனரீதியான பிரச்சனைக்கு மருந்தும் சாப்பிடுறான்… ஆனா அவன் பைத்தியம் இல்ல மேடம்”

தனது உடன்பிறவா சகோதரன் மீது எந்தளவுக்குச் சாவித்திரிக்குப் பாசம் இருக்கிறதென இதன்யாவுக்குப் புரிந்தது. அவரது கரத்தை ஆதுரமாகப் பற்றித் தட்டிக் கொடுத்தாள் அவள்.

“என்னால புரிஞ்சிக்க முடியுது.. ஹீ இஸ் சைக்காலஜிக்கலி அஃபெக்டட் பெர்சன்… அவரோட அந்தப் பாதிப்பு அக்யூரேட்டா என்னனு தெரியணும்… எனக்கு இனியா கேஸ்ல சின்னதா ஒரு டவுட் இருக்கு… அதனால தான் கேக்குறேன்… உங்களால அவரோட மெண்டல் கண்டிசன் பத்தின ரிப்போர்ட்சை எனக்குக் கொண்டு வந்து தரமுடியுமா?” என்று கேட்டாள் அவள்.

சாவித்திரியோ பரிதவித்துப் போனார். இதன்யாவுக்கு என்ன பதில் அளிப்பதென புரியாமல் விழித்தார்.

“அவன் பேர் கெட்டுப் போயிடுமோனு பயம் வருது… என் சித்தப்பாவும் சித்தியும் பணக்கார வாழ்க்கையில மூழ்கி அவன் கூட நேரம் செலவளிச்சது இல்ல… எப்பவாச்சும் நான் அவனைப் பாக்க வர்றப்ப என் கிட்ட ஒட்டிப்பான்… ரொம்ப பாசக்காரன்… ஆனா பெத்தவங்க அன்புக்கு ஏங்கி அது கிடைக்காதுனு உறுதியானதும் அவன் கொஞ்சம் கொஞ்சமா இறுகிப்போயிட்டான்… வயசுக்கு மீறுன முதிர்ச்சியான பேச்சு, செயல்னு தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கிட்டான்… அப்பவே அவனை டாக்டர் கிட்ட சித்தி அனுப்புனாங்க… அவனும் கொஞ்சம் கொஞ்சமா மாறுனான்… அப்புறம் அவனோட பதினெட்டு வயசுல என் சித்தி சித்தப்பா ஃப்ளைட் ஆக்சிடெண்ட்ல இறந்து போனதும் கடல் மாதிரி இருக்குற தொழில் சாம்ராஜ்ஜியமும் சொத்தும் அவன் கட்டுப்பாட்டுக்குப் போச்சு… ரொம்ப நம்பிக்கையான நலம்விரும்பிகள் அவனுக்கு உறுதுணையா நின்னு சரியான வயசுல அவன் கிட்ட தொழில் பொறுப்பை ஒப்படைச்சாங்க… அப்ப இருந்து அவன் பிசினஸை தன்னோட கண்ட்ரோல்ல வச்சு ரொம்ப சிறப்பா நடத்த ஆரம்பிச்சான்… எனக்கு அப்ப கல்யாணம் ஆச்சு… என் வாழ்க்கைல நான் மூழ்க ஆரம்பிச்சிட்டேன்… இதுக்கு இடையில அவன் என்ன ஆனான்னு கூட நான் யோசிச்சது இல்ல… என் புருசன் இறந்ததும் போக்கிடம் இல்லாம நான் மறுபடியும் என் பிள்ளையோட இந்த ஊருக்கு வந்தேன்… அப்ப இருந்து இப்ப வரைக்கும் எங்களை அவன் தான் பாத்துக்குறான்… அவன் தேவாவ ரொம்ப காதலிச்சான்… கிட்டத்தட்ட பைத்தியக்காரன் மாதிரி… அவ இறந்ததை அவனால ஏத்துக்க முடியல… தேவா இறந்துட்டானு யார் சொன்னாலும் அடிக்க ஆரம்பிச்சான்… ஒரு கட்டத்துல அவனோட மூர்க்கத்தனம் அதிகமானதும் என் சித்தப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் அவனை சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட தெரபிக்கு அனுப்பி வச்சார்… அப்ப இருந்து அவன் தெரபில தான் இருக்கான்… மருந்தும் சாப்பிடுறான்… தேவாவ பத்தி யார் பேசுனாலும் அவன் இப்பவும் மூர்க்கமாகிடுவான்… அவனைப் பொறுத்தவரைக்கும் தேவா அவனோட தேவதை… கிட்டத்தட்ட கடவுள் மாதிரி… அன்பே இல்லாத வாழ்க்கைல உண்மையான அன்பையும் காதலையும் ஏகலைவனுக்கு அறிமுகம் பண்ணி வச்ச தேவதை… அவ இறந்ததை என்னாலயே ஏத்துக்க முடியாதப்ப என் தம்பி அவளோட காதலை அனுபவிச்சவன் மேடம்… அவனால எப்பிடி ஏத்துக்க முடியும்?”

பேச்சின் முடிவில் அடக்கமாட்டாமல் அழத் தொடங்கினார் சாவித்திரி.

“அழாதிங்கம்மா” அவருக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினாள் இதன்யா. சில நிமிடங்கள் சாவித்திரியின் அழுகை நீடித்தது. பின்னர் மெதுவாகத் தேறியவர்

“இப்பவும் சொல்லுறேன்… என் தம்பியும் என் மகனும் எந்தத் தப்பும் செஞ்சிருக்கமாட்டாங்க…. நீங்க இனியா மரணத்தோட அவனைச் சம்பந்தப்படுத்தி சந்தேகப்படுறிங்கனு தோணுது… அவன் சைக்கோ இல்ல மேடம்… நீங்க இப்ப போய் அவனோட ட்ரீட்மெண்ட் ரிப்போர்ட்டைக் கேட்டா அவனே உங்க கிட்ட குடுப்பான்… அவன் கிட்ட எந்த மூடுமந்திரமும் இரகசியமும் இல்ல” என்று உறுதியாய்க் கூறினார்.

சொன்னதோடு மட்டுமன்றி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தவர் “இப்பவே நீங்க என் கூட வாங்க மேடம்… நான் அவன் கிட்ட பேசி எல்லா ரிப்போர்ட்டும் வாங்கி தர்றேன்” என்று இதன்யாவை ஏகலைவனின் வீட்டுக்கு அழைத்தார்.

இதன்யாவுக்குமே அவருடன் செல்வது சரியெனத் தோன்றியது.

வீட்டைப் பூட்டிவிட்டு இதன்யாவை அழைத்துக்கொண்டு ஏகலைவனின் வீட்டுக்குக் கிளம்பினார் சாவித்திரி.

அங்கே போனாலோ “சார் நேத்து நைட் வெளியூருக்குப் போயிட்டாரே” என்றார் காவலாளி.

“தொழில் விசயமா போயிருப்பான் மேடம்… என் கிட்ட ஒரு சாவி இருக்கு… வாங்க போகலாம்” என்று சாவித்திரி இதன்யாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

ஏகலைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் சாவித்திரி. எனவே காவலாளி அவரைத் தடுக்கவில்லை. அவருடன் இதன்யா வந்தது தான் உறுத்தலாகத் தோன்றியது அவருக்கு.

ஆனாலும் முதலாளியின் தமக்கையிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தார் அவர்.

சாவித்திரி ஏகலைவனின் பங்களாவுக்குள் இதன்யாவை அழைத்துச் சென்றவர் அவனது படுக்கையறைக்குள் சென்று மருத்துவ அறிக்கைகள் வைத்திருக்கும் மேஜையறையைத் திறந்தார்.

இதன்யா அவரைத் தொடர்ந்து அந்த அறைக்குள் பிரவேசித்தவள் ஆளுயர புகைப்படத்தில் பளீர் புன்னகையோடு ஒருவித தேவதைத்தனத்துடன் காட்சியளித்த தேவசேனாவை ஆர்வத்தோடு நோக்கினாள்.

பேரழகி தான்! வெறும் அழகு மட்டுமில்லை! அந்த வதனத்தில் சொட்டிய கம்பீரம் தனிக்களையைக் கொடுத்தது அவளுக்கு! கிட்டத்தட்ட ஏகலைவனுக்கு இருக்ககூடிய கரிஷ்மா அவளுக்கும் இருந்தது.

இப்படிப்பட்ட பேரழகியை எப்படி ஒருவனால் மறக்க முடியும்? அவள் இல்லை என்பதை எப்படி அவனால் ஏற்றுக்கொள்ள முடியும்? முதல் முறையாக இதன்யாவின் மனம் ஏகலைவனுக்காகப் பரிதாபம் கொண்டது.

“இதோ இருக்கு மேடம்”

ஆண்டுகள் குறிப்பிடப்பட்டு ஏகப்பட்டு கோப்புகள் அவள் பார்வைக்குக் கிடைத்தன அந்த மேஜையறையில்.

அதில் ஒன்றை தேடி எடுத்து இதன்யாவிடம் நீட்டினார் சாவித்திரி.

“இது தான் அவனை டாக்டர் கிட்ட செக்கப்புக்கு ஃபர்ஸ்ட் டைம் அனுப்புனப்ப அவர் குடுத்த ரிப்போர்ட்”

இதன்யா அதை வாங்கி வாசித்தவள் மருத்துவ உலகில் புழங்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் ஒன்பது வயது சிறுவனான ஏகலைவனுக்கு இருந்த மனரீதியான பிரச்சனை என்னவென்பதைப் படித்து கண்டறிந்தாள்.

‘சைக்கோபதி’!

ஆம்! சைக்கோபதியால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகள் உளவியல் மருத்துவரிடம் சிறுவயதிலேயே சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவன் அவன்.

அவனைப் பரிசோதித்த மருத்துவர் அவனிடமிருந்த சைக்கோபதியின் அறிகுறிகளை வரிசைப்படுத்தியிருந்தார்.

யாரிடமும் நட்பாகப் பழகும் குணமில்லை, பிற உயிரினங்களிடம் இரக்கம் காட்டும் பண்பு குறைவு, பிடிவாதம், முரட்டுத்தனம், மற்றவர்களைச் சாமர்த்தியமான பேச்சால் வளைப்பது இதெல்லாம் சிறுவனான ஏகலைவனுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இரக்கமே இல்லாமல் பூனைக்குட்டி ஒன்றை கழுத்தை அறுத்துக் கொன்றதாக அவனது பெற்றோர் மருத்துவரிடம் கூறியதும் அந்த மருத்துவ அறிக்கையில் பதிவாகியிருந்தது.

இதன்யாவுக்கு அதிர்ச்சி! உடனடியாக அவனது அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் மடமடவென தனது மொபைலில் படம் பிடித்துக்கொண்டாள்.

கிட்டத்தட்ட நான்காண்டுகளில் அவனது சைக்கோபதி மட்டுப்பட்டிருந்தது என மருத்துவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் சில ஆண்டுகள் இடைவெளி விட்டு அவனது இருபத்தெட்டாவது வயதிலிருந்து மீண்டும் அதே உளவியல் மருத்துவரிடம் அவன் சிகிச்சைக்குப் போனது அறிக்கை ஒன்றை வருடத்தோடு பார்த்ததும் தெரிந்தது.

அதை எடுத்துப் பார்த்தவள் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘Post traumatic Stress Disorder’ என்ற வாக்கியத்தைப் படித்ததும் இந்தப் பாதிப்புக்காகத் தான் அவன் இன்று வரை தெரபிக்குச் சென்று கொண்டிருக்கிறான் போல என்று எண்ணினாள்.

அனைத்து மருத்துவ அறிக்கைகளின் முக்கியமான பக்கங்களையும் மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இதன்யா சாவித்திரியிடம் “உங்க தம்பியும் மகனும் அப்பாவினு நீங்க நம்புறிங்க… நானும் அதை நம்பணும்னு  ஆசைப்படுறிங்க… உங்க ஆசை நிறைவேறட்டும், உங்க நம்பிக்கை பலிக்கட்டும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்… சில சமயத்துல ஆசை நிராசையாகலாம்.. நம்பிக்கை உடையலாம்.. அதை தாங்கவும் நீங்க உங்க மனசைத் தயார்ப்படுத்திக்கோங்க… உங்க உதவிக்கு தேங்க்ஸ்மா” என்று மனப்பூர்வமாக நன்றி கூறிவிட்டு அவரோடு ஏகலைவனின் வீட்டிலிருந்து கிளம்பினாள்.

அவள் பொன்மலை காவல் நிலையத்தை அடைந்ததும் முரளிதரன் நிஷாந்திடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாக மார்த்தாண்டன் கூறினார்.

“சைபர் க்ரைம் ஸ்டேசன்ல இருந்து எனி அப்டேட்? வாட் அபவுட் பிரகதி? அவளைக் கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணியாச்சா?” என்று விசாரித்தபடி விசாரணைகுழுவின் அலுவலக அறைக்குள் சென்றாள் இதன்யா.

“அந்த விவகாரத்தை அவுட் ஆப் கோர்ட்ல பேசி முடிச்சதா நம்பத்தகுந்த ஒருத்தர் சொன்னார் மேடம்” என்றார் அவளைத் தொடர்ந்து அங்கே வந்த மகேந்திரன்.

இதன்யாவுக்கு அதிர்ச்சி!

“வாட்! இது கிரிமினல் அஃபென்ஸ்… இதை எப்பிடி அவுட் ஆப் கோர்ட்ல பேசி முடிக்க முடியும்? ஏதோ தப்பு நடக்குது” என்று படபடத்தவள் சென்னை சைபர் க்ரைமில் தனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவரிடம் பிரகதி பற்றிய தகவலைக் கூறி நிலவரம் என்னவென விசாரித்து சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்.

அவரும் அரைமணி நேரம் கழித்து இதன்யாவின் எண்ணுக்கு அழைத்தார்.

“அந்தப் பொண்ணு தப்பு செஞ்சதை ஒத்துக்கிட்டா… ஆனா அவளைக் கஸ்டடில வைக்காம வீட்டுக்கு அனுப்பிவச்சிட்டாங்க போலீஸ்… அந்தப் பொண்ணோட லாயர் கூட பேசுன கான்ஸ்டபிள் ஒருத்தர் கூடிய சீக்கிரமே அந்தப் பொண்ணு ஃபாரீனுக்குத் தப்பிச்சு ஓடிடும்னு சொன்னார் மேடம்”

“ஹவ் இஸ் இட் பாசிபிள்?” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள் இதன்யா.

உடனே ஏகலைவனின் நினைவும் வந்தது.

தேவசேனாவை தேவதை பெண்ணாக எண்ணுபவன், அவன் மீது திருமணம் தாண்டிய உறவு இருக்கிறதென சொன்னதற்காக தன்னைக் கொல்லுமளவுக்குத் துணிந்தவன், தேவசேனாவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணம் பறித்து அவனது உணர்வுகளுடன் விளையாடிய பிரகதியை மட்டும் எப்படி எளிதில் விடுவான்?

யோசிக்கும்போதே அவனும் வெளியூர் சென்றிருப்பது புத்தியில் உறைத்தது. இதன்யாவின் மூளை எதுவோ தவறு நேரப்போகிறதென யோசிக்கும்போதே மார்த்தாண்டன் அங்கே வர “சார் தூத்துக்குடி ஏர்போர்ட் அத்தாரிட்டிக்குக் கால் பண்ணி ஏகலைவனோட ட்ராவல் டெஸ்டினேசன் பத்தி விசாரிங்க” என்றாள்.

அவரும் அதை விசாரிக்க சென்றுவிட உடனடியாக பேராசிரியர் வீட்டில் என்ன நடக்கிறதென தெரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது.

யாரிடம் விசாரிக்கலாமென யோசிக்கும்போதே நிஷாந்தின் நினைவு வந்தது. வேகமாக விசாரணை அறைக்குள் பிரவேசித்தவள் முரளிதரனிடம் விசாரணையைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு உடனடியாக பிரகதியின் எண்ணுக்கு அழைத்துப் பேசும்படி நிஷாந்துக்குக் கட்டளையிட்டாள்.

அவன் செய்யாமல் விழிக்கவும் “கால் பண்ணுடா… இட்ஸ் எமர்ஜென்சி” என இதன்யா கத்தவும் நிஷாந்த் பிரகதியின் எண்ணுக்கு அழைத்தான்.

அது சுவிட்ச் ஆப் என வரவும் தேவநாதனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும் பிரகதி எங்கே என கேட்டான். மொபைலை லவுட் ஸ்பீக்கரில் போட்டான் அவன்.

“அவ இன்னைக்கு மானிங் ஃப்ளைட்ல சிங்கப்பூர் போயிட்டா நிஷாந்த்” என்று சொன்னார் தேவநாதன்.

சிங்கப்பூரா என அவன் திகைக்க இதன்யாவோ முரளிதரனை எல்லாம் முடிந்துவிட்டதென்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தாள். ஏகலைவனின் மருத்துவ வரலாறை முழுவதுமாக அறிந்தவளால் அவ்வாறு தானே எண்ண முடியும்? ஒருவேளை பிரகதியைப் போல அவனும் சிங்கப்பூருக்குப் பயணப்பட்டிருந்தால் என்னவாகும் அவள் நிலை?