IIN 76

Post Traumatic Stress Disorder என்பது ஒரு அதிர்ச்சியான சம்பவத்திற்கு பின்னால் உருவாகும் மனரீதியான பாதிப்பு ஆகும். அந்த அதிர்ச்சியான சம்பவம் நோயாளிக்கு நடந்திருக்கலாம் அல்லது அவர் அச்சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். PTSDயைத் தூண்டும் பொதுவான காரணிகள் பாலியல் துன்புறுத்தல், போர்க்கால கொடுமைகள், குழந்தை பருவ துன்புறுத்தல், குடும்ப வன்முறை, நெருங்கியவரின் உயிருக்கோ உடல்நலனுக்கோ உண்டாகும் ஆபத்துகள் போன்றவை ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பாதிப்பு சம்பந்தப்பட்ட தொந்தரவான சிந்தனைகள், உணர்வுகள், கனவுகள், ஹாலூசினேசன்கள் உண்டாகும். 

                                                          -From Internet

வியர்க்க விறுவிறுக்க விசாரணை அறைக்குள் அமர்ந்திருந்தாள் பிரகதி. அவளது தந்தை வெளியே சைபர் க்ரைம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அவளது காதில் கேட்காமல் இல்லை.

அவளுக்காக சண்டையிடும் தந்தை இருந்தும் இப்படி பயப்படுகிறாள் என்றால் அவளுக்கே தான் செய்தது மிகப்பெரிய தவறு, அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது புரிந்துவிட்டதாக தானே அர்த்தம்!

மூன்று வருடங்கள் அவள் பட்ட கஷ்டம் அனைத்தையும் ஸ்ரீ மூன்று மணி நேர வாக்குமூலத்தில் சிதைத்துவிட்டான். இன்னும் அவளை விசாரிக்க வேண்டிய அதிகாரி வரவில்லை. வந்துவிட்டால் கிட்டத்தட்ட பயத்தில் மாரடைப்பு கூட வந்துவிடும் விளிம்புநிலை பயத்துடன் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள் பிரகதி.

என்ன கேள்விகளைக் கேட்பார்கள்? எப்படி பதில் சொன்னால் தப்பிக்கலாம்? விசாரணை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து சில குற்றவாளிகள் தப்பிக்கிறார்களே அம்முறையைக் கையாளலாமா?

பல்வேறு சிந்தனைகள் அவளது மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. அவளது சிந்தனைகளைக் கலைத்தது விசாரணை அறையின் கதவு திறக்கும் ஓசை. யாரோ நடந்துவரும் சத்தம் கூட கேட்டது.

அமைதியாய்த் தன்னைக் காட்டிக்கொண்டு பதுமை போல அமர்ந்திருந்தவளின் முன்னே வந்து நின்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

 அவரைப் பார்த்ததுமே நடுக்கம் கண்டது பிரகதிக்கு.

“என்னம்மா விசாரணைய ஆரம்பிக்கலாமா?” என்று மிரட்டலாகக் கேட்டபடியே அமர்ந்தார் அந்த அதிகாரி. கூடவே பெண் காவல்துறை அதிகாரி ஒருவரும் இருந்தார். ஆனால் விசாரிக்கப்போகிறவர் என்னவோ ஆண் அதிகாரி தான் என்பது பிரகதிக்குப் புரிந்துபோனது.

“நான் கேக்கப் போற கேள்விகள் எல்லாத்துக்கும் உண்மைய சொல்லணும்… தப்பித் தவறி பொய் சொல்லணும்னு யோசிச்ச, போலீஸ் ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்.. லை டிடக்டிங் டெஸ்ட் வச்சு உண்மைய கண்டுபிடிச்சுடுவோம்… அதனால உன் தண்டனை தான் அதிகமாகும்… என்ன சொல்லுற? உண்மைய சொல்லுவியா?” என அவர் அதட்டியதும் தூக்கிவாரிப்போட்டது பிரகதிக்கு.

பயத்தோடு தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஸ்ரீ உன்னைப் பத்தி சொன்னான்… நீ பணத்துக்காக டார்க் வெப்ல பணக்காரர் ஒருத்தரை ஏமாத்துனியா? அந்தக் கதைய முழுசா சொல்லு… கேப்போம்” என்றார் அவர்.

விசாரணைக்கான வீடியோ பதிவு ஆரம்பமானது. பிரகதியும் மெதுவாகப் பேசத் துவங்கினாள்.

“ஸ்ரீ மூலமா எனக்கு டார்க்நெட் பத்தி தெரிய வந்துச்சு… ஒரு கியூரியாசிட்டில அதுல இருக்குற நிறைய சைட்டுக்கு நான் விசிட் பண்ணிருக்கேன்.. சில சைட்ல இருந்து பொருட்களும் வாங்கிருக்கேன்”

“என்னெல்லாம் அங்க வாங்குன?”

“ஐ ஃபோன் நார்மலான ஈகாமர்ஸ் சைட்ல வாங்குறதை விட அங்க விலை கம்மியா இருக்கும்… அது போக எலக்ட்ரானிக் கெஜட்ஸ் சிலது அங்க வாங்கிருக்கேன்”

“ம்ம்ம்… எப்பிடி க்ரீப்பி நூடுல்ஸ்ங்கிற பாராநார்மல் சைட் உனக்கு அறிமுகம் ஆச்சு?”

“எனக்கு ஹாரர் ஸ்டோரி படிக்க பிடிக்கும் சார்… யூடியூப்ல க்ரீப்பி நூடுல்ஸ் சேனல்ல போன்-சில்லிங் ஹாரர் ஸ்டோரிஸ் எல்லாம் ஷார்ட் வீடியோவா போடுவாங்க… இதை விட ஹாரரான அனுபவம் வேணும்னா எங்க டெலிக்ராம் குரூப்புக்கு வாங்கனு சொன்னாங்க… அங்க தான் டார்க்நெட்ல அவங்க சைட் இருக்குறது எனக்குத் தெரியவந்துச்சு…. அப்பிடி தான் க்ரீப்பி நூடுல்ஸ் டார்க்வெப்சைட் எனக்கு  அறிமுகமாச்சு… அங்க நிஜமாவே ஹாரரான எக்ஸ்பீரியன்சை யூஸர்ஸ் ஷேர் பண்ணுவாங்க… படிக்க இன்ட்ரஸ்டா இருக்கும்… டெய்லியும் நைட் அந்த சைட் பாக்காம நான் தூங்க மாட்டேன்.. அந்தச் சைட்டுக்கு மெயின் வருமானம் ‘சோல் ஆக்சன்னு’ சொல்லப்படுற ஆன்மாக்களை ஏலம் விடுறது மூலமா தான் வருதுனு யூஸர்ஸ் பேசிப்பாங்க… ஒவ்வொரு நாட்டுலயும்., ஒவ்வொரு பிராந்தியத்துலயும் பாரா நார்மல் ஆக்டிவிட்டீஸ், கோஸ்ட், ஸ்பிரிட்ஸ் இதெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணுற மந்திரவாதிங்க இருப்பாங்க… அந்த சைட் அவங்க கூட டை-அப் வச்சு யூஸர்சுக்கு தெரிஞ்ச இறந்து போனவங்களோட ஆன்மாவை யார் ஏலம் எடுக்குறாங்களோ அவங்க மேல ஏவி விடுவாங்க… அந்த ஆன்மாவ வச்சு அதை ஏலம் எடுத்தவங்க சட்டத்துக்குப் புலப்படாம தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செஞ்சுப்பாங்க”

பிரகதி சொல்லிக்கொண்டே போக அமைதியாய் அமர்ந்திருந்த பெண் காவல் அதிகாரியின் இதழில் ஏளனச்சிரிப்பு உதயமானது.

“என்னம்மா கலர் கலரா ரீல் விடுற? ஏன் சார் இந்தப் பொண்ணுதான் உண்மைய சொல்லாம ஏதோ ஹாலிவுட் படத்தோட கதைய சொல்லுறானா அதை நீங்களும் கேக்குறிங்களே?” என்று அதிருப்தியாய் உயரதிகாரியிடம் முணுமுணுத்தார்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கமலி… இவ சொல்லுறதை தான் ஸ்ரீயும் விசாரணைல சொன்னான்… இது எதுவும் கட்டுக்கதை இல்ல… அவன் க்ரீப்பி நூடுல்ஸ் டார்க்வெப்சைட்டை நம்ம ஸ்டேசன் சிஸ்டம்ல ஓப்பன் பண்ணி காட்டுனான்… அதுல இந்தப் பொண்ணோட யூஸர் ஐடி இவ ஏலம் விடப்போற ஆன்மாவோட நேம் மத்த விபரங்கள் எல்லாமே இருந்துச்சு….

எப்பவுமே குற்றவாளிய பொய் சொல்லவிட்டு வேடிக்கை பாக்குறதுல எனக்கு  உடன்பாடு கிடையாதுனு உங்களுக்குத் தெரியும்ல?” என்று அவர் சொல்லவும் அமைதியானார் அவர்.

நீ தொடர்ந்து சொல் என்பது போல பிரகதியை அவர் பார்க்க அவளும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள்.

“இப்பிடி நாட்கள் போனப்ப ஒரு நாள் ஏகலைவன் சார் எங்க வீட்டுக்கு வந்தார்… அவரோட பெர்சனல் அண்ட் அபிஷியல் யூசேஜ் லேப்டாப்பை ரைவல் கம்பெனிஸ் மால்வேர் மூலமா ஹாக் பண்ணுனதை சொன்னார்… நிஷாந்த் மூலமா ஸ்ரீ பத்தி கேள்விப்பட்டவர் எப்பிடியாச்சும் அவனை வச்சு அவரோட லேப்டாப்பை சரிபண்ண அப்பா கிட்ட ஹெல்ப் கேட்டார்… அப்பாவும் ஸ்ரீ கிட்ட அவருக்காக ரெகமண்ட் பண்ணவும் ஒரு வாரம் எங்க வீட்டுல ஸ்டே பண்ணி அவன் சாரோட லேப்டாப்பைச் சரி பண்ணுனான்… அப்பவும் டார்க்வெப்சைட் பத்தி அவங்க பேசிப்பாங்க… இதுக்கு இடையில தான் அப்பா ஒரு நாள் ஏகலைவன் சார் கிட்ட ஏன் கல்யாணம் பண்ணாம இருக்கிங்கனு கேட்டார்… அவர் தன்னோட காதலிய மறக்க முடியலனு சொன்னார்… அவங்க மறுபடி பிறந்து வந்தா பாத்துக்கலாம்னு சொல்லி அந்தப் பேச்சுக்கு ஃபுல்ஸ்டாப் வச்சிட்டார்… ஆக்ஸ்வலி அவரோட நெஃப்யூ நிஷாந்த் என்னோட லவ்வர்… அவனை ஏகலைவன் சார் அவரோட பிசினஸ் சொத்து எல்லாத்துக்கும் வாரிசாக்குறதா வாக்கு குடுத்திருந்தார்… எனக்குப் பணக்காரனைக் கல்யாணம் பண்ணி லக்சரி லைஃப் வாழணும்னு ஆசை…. அதனால அவனை லவ் பண்ணிட்டிருக்கேன்… அவன் கிட்ட இருக்குற முக்கியமான பிரச்சனை, வாரிசு ஆகுறதுக்கு முன்னாடி ஏகலைவன் சார் கிட்ட எதுக்காகவும் கைநீட்டமாட்டேன்ங்கிற அவனோட பிடிவாதம்… அது எனக்குப் பிடிக்கல.. அப்ப தான் எனக்கு ஏகலைவன் சார் கிட்ட இருந்து பணம் கறக்க ஒரு ஐடியா உதயமாச்சு… அவரோட காதலியோட தூரத்து உறவுக்காரப்பொண்ணுனு பொய் சொல்லி க்ரீப்பி நூடுல்ஸ் டார்க்வெப்சைட்ல யூஸர் ஐடி ஓப்பன் பண்ணுனேன்… ஏகலைவன் சாருக்கு ஸ்ரீ மூலமா டார்க்வெப் பத்தி தெரிஞ்சதால அவருக்கும் அதை யூஸ் பண்ணலாமா வேண்டாமாங்கிற கியூரியாசிட்டி இருந்துச்சு… அதை பயன்படுத்தி க்ரீப்பி நூடுல்ஸ் சைட்டுக்குள்ள அவரை வரவைக்க நிஷாந்த் கிட்ட ஏகப்பட்ட பொய் சொன்னேன்… அவனும் அவர் கிட்ட அந்தச் சைட்டை பத்தி சொல்ல, அவர் அங்க யூஸர் ஐடி க்ரீயேட் பண்ணிட்டு வந்தார்… என்னோட புரொஃபைலை பாத்துட்டு விசாரிச்சப்ப நான் ப்ளான் பண்ணுனபடி தேவசேனாவோட ஆன்மா என் கூட இருக்குனு நம்ப வச்சேன்… அதை காரணம் காட்டி அவர் கிட்ட இது வரைக்கும் ஆறு தடவை பணம் கறந்திருக்கேன்”

“சோ உன் காதலன் பணம் செலவளிக்கலனு இப்பிடி ஒரு மோசடியை பண்ணிருக்க… அந்தாளு எப்பிடி இதை நம்புனார்? அவர் ரொம்ப க்ளவரான பிசினஸ்மேன் ஆச்சே?” என்று அதிகாரி அதிசயிக்க

“அவருக்கு அந்தளவுக்கு தேவசேனா மேல காதல்னு நிஷாந்த் சொல்லிருக்கான் சார்… அவங்க மரணத்தை அவரால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல… இன்ஃபேக்ட் அவருக்கு போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்சார்டர் இருக்கு… இந்த இன்ஃபர்மேசனை என் கிட்ட நிஷாந்த் ஷேர் பண்ணுனான்… அவர் அதுக்கு மருந்தும் எடுத்துக்குறார்… இந்தியாலயே பெஸ்ட் சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட தெரபி செஷன்ஸ் அட்டென்ட் பண்ணுறார்… அதனால தான் அவரோட நம்பிக்கை கூட என்னால ஈசியா ப்ளே பண்ண முடிஞ்சுது” என்று தலை குனிந்தபடி கூறினாள் பிரகதி.

அதிகாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இறுதியாக ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சமிருந்தது. அதையும் கேட்டார் அவர்.

“அவர் கூட தொடர்ந்து டார்க்வெப் மூலமா பேசுறதை உன் பேரண்ட்ஸ் தடுக்கலயா?”

“அப்பாக்கு ஃபர்ஸ்ட் தெரிய வந்தப்ப பயங்கரமா திட்டுனார்… ஆனா அப்புறம் ஒன்னும் சொல்லல… அம்மாக்கு இதெல்லாம் இன்னும் தெரியாது சார்… நானும் ஏகலைவன் சார் கிட்ட அடிக்கடி பேசமாட்டேன்… இந்த மூனு வருசத்துல ஆறு தடவை தான் அவர் கிட்ட பேசிருக்கேன்… அதுவும் பணத்தேவைக்காக மட்டுமே”

“அப்ப மத்த நாட்கள்ல?”

“சில பேய்ப்படங்கள், மறுஜென்ம படங்கள்ல வர்ற மாதிரி சீக்கிரம் நான் உங்களுக்காக பிறந்து வருவேன்.. இந்தப் பொண்ணைத் தொந்தரவு பண்ணாதிங்கனு சொல்லிடுவேன் சார்”

விசாரணை முடிவடைய வீடியோ பதிவும் நிறுத்தப்பட்டது. இரு அதிகாரிகளும் பிரகதியைக் கண்டிக்கும் பார்வை பார்த்தனர்.

“உன்னோட பணத்தாசைக்காக ஒரு மனுசனோட மனநலத்தோட உணர்வுகளோட நீ விளையாடிருக்க… ஹீ இஸ் சைக்காலஜிக்கலி சேலஞ்ச்ட்… இதெல்லாம் பொய்னு தெரியவந்துச்சுனா அந்தாளோட மோசமான பக்கத்தை நீ பாக்கவேண்டியதா இருக்கும்… ஹீ இஸ் அ மான்ஸ்டர்… பிசினஸ்ல தனக்கு எதிரா நிக்குறவங்களை இருக்குற இடம் தெரியாம அழிச்சிடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன்… உன் அப்பா லாயரோட வெளிய வெயிட் பண்ணுறார்… இந்தப் பணமோசடிய தனிகேஸா நாங்க ஃபைல் பண்ணப்போறோம்… உன் தரப்பு வாதத்தை நீ லாயர் மூலமா கோர்ட்ல வச்சுக்கலாம்.. யூ மே கோ நவ்”

பிரகதி அமைதியாக எழுந்து வெளியேற பெண் காவல் அதிகாரி கமலியோ அவளை காவலில் வைக்காமல் அனுப்பியது தவறு என்றார்.

அவளை விசாரித்த காவல் அதிகாரியோ குரலைத் தணித்துக்கொண்டார்.

“அந்தப் பொண்ணை கஷ்டடில வைக்க கூடாதுனு மேலிடத்து ஆர்டர்… அதை மீறுனா இன்னும் ஆறு மாசத்துல எனக்கு வரப்போற புரமோசன்ல கை வைப்பாங்க… இது தேவையா எனக்கு?” என்று சொல்ல

“அதுவும் சரி தான் சார்… இந்த மாதிரி ஏமாத்துற ஜென்மங்களுக்கு ஸ்ட்ராங்கான பேக்ரவுண்ட் இருக்கு… சட்டத்துல உள்ள ஓட்டைய வச்சு எப்பிடியும் வெளிய வந்துடுதுங்க.. இதுக்கு இடையில நம்ம ஏன் மாட்டிக்கிட்டுச் சீரழியணும்?” என்று கமலியும் ஒதுங்கிக்கொள்ள, பிரகதியை அழைத்துக்கொண்டு வழக்கறிஞரோடு அங்கிருந்து கிளம்பினார் தேவநாதன்.

காரிலேறியதும் மகளிடம் படபடப்போடு பேச ஆரம்பித்தார் அவர்.

“இன்னும் ரெண்டு நாள்ல நீ சிங்கப்பூர்ல இருக்குற உன் அத்தை வீட்டுக்குக் கிளம்புற… இந்தக் கேஸை நான் பாத்துக்குறேன்” என்றார்.

“அப்பா நிஷாந்த்?” என்று பிரகதி தயங்க

“நீ ஏமாத்துனது அவனோட மாமாவைனு தெரிஞ்சா உன் பக்கம் அவன் திரும்பிக்கூட பாக்க மாட்டான் பிரகதி… அந்தாளு கிட்ட சுருட்டுன வரைக்கும் லாபம்… நீ சிங்கப்பூர் போயிடு.. நீ போய் ஒன் வீக் கழிச்சு நானும் அம்மாவும் அங்க வந்துடுவோம்” என்று தனது திட்டத்தை விவரித்தார்.

“அப்பா கோர்ட் கேஸ்னு அந்த ஆபிசர் சொன்னாரே?”

“அதுல்லாம் சும்மா… ஏகலைவன் தரப்புல இதை தனி கேஸா நடத்த பிரியப்படலனு அவரோட லாயர் சொல்லிட்டார்… உன்னை ஏகலைவன் மன்னிச்சிட்டு விட்டுட்டார்னு நம்ம லாயர் கிட்ட அவரோட லாயர்  மனுவேந்தன் சொல்லிருக்குறார்… அது மட்டுமில்ல, இனியா மர்டர் கேஸ்ல ஏகலைவன் பேரும் நிஷாந்த் பேரும் மறுபடி அடிபடுதாம்… வெளிய ரெண்டு போலீஸ்காரங்க பேசிக்கிட்டாங்க… இதுதான் நமக்கு நல்ல வாய்ப்பு… இருக்குற பணத்தை எடுத்துக்கிட்டு இந்தியாக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுச் சிங்கப்பூருக்குத் தப்பிச்சு ஓடிடலாம்”

தந்தையின் அறிவுரைக்குச் செவிமடுத்தாள் பிரகதி. அதே நேரம் அவளது காதலனை மறுநாள் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென சிறப்பு விசாரணைக்குழுவினர் தீர்மானித்தனர் பொன்மலையில்.

அவனை விசாரிப்பதற்கான ஆணையை மாஜிஸ்திரேட்டிடமிருந்து மகேந்திரன் வாங்கி வந்துவிட்டார். நிஷாந்தின் அண்டை வீட்டாரிடம் விசாரித்தவரை அவனும் சாவித்திரியும் தென்காசிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. அவர்கள் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள் என பக்கத்துவீட்டுப்பெண்மணி கூறினார்.

மறுநாள் பொன்மலை மண்ணை மிதித்ததும் அவனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துவிடவேண்டுமென துடிப்போடு பேசிக்கொண்டிருந்தார் மார்த்தாண்டன்.

இதன்யாவோ தனக்குத் தெரிந்த மனோதத்துவ மருத்துவரிடம் ஏகலைவன் குறித்து சற்று முன்னர் உரையாடியிருந்தாள். அவனுக்கு மனரீதியான பாதிப்பு இருக்குமென அவர் அறுதியிட்டுச் சொல்லவில்லை.

அவனது மருத்துவநிலை பற்றி தெரிந்தால் மட்டுமே அது சாத்தியமெனச் சொல்லியிருந்தார் அவர். அது பற்றி சாவித்திரியிடமிருந்து தகவல்களைப் பெறவேண்டுமென தீர்மானித்தாள்.

வீட்டுக்குக் கிளம்பலாமென எத்தனித்தவள் “அந்த நவநீதம் எப்பிடி இருக்கானு ஹாஸ்பிட்டல்ல போய் பாத்துடுவோம் மேடம்” என்ற முரளிதரனின் கூற்றை ஏற்றுக்கொண்டாள்.

முந்தையதினம் நவநீதத்தை முரளிதரன் விசாரிக்க போகையில் அங்கே காய்ச்சல் கண்டு பிதற்றிக்கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு  மாஜிஸ்திரேட்டிடம் ஆஸ்துமாவுக்கான சிகிச்சை வேண்டுமென விண்ணப்பித்த கோபாலையும் அங்கே மருத்துவரின் கண்காணிப்பில் விட்டவர்கள் அவருக்குக் காவலாக கான்ஸ்டபிள் ஒருவரை அங்கே நிறுத்திவிட்டுக் காவல்நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.

இதோ மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தவர்கள் நவநீதத்துக்கு வைரஸ் காய்ச்சல் தான் என்று மருத்துவர் சொன்னதும் நிம்மதியுற்றனர். கூடவே மறுநாள் கோபாலை டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாகவும் அவர் கூற பெருமூச்சுடன் மருத்துவமனையிலிருந்து போலீஸ் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினார்கள் இதன்யாவும் முரளிதரனும்.