IIN 75

மொத்த இணையத்தையும் ஒரு பரந்து விரிந்த கானகத்தோடு ஒப்பிட்டால், அங்கே தெளிவாக நகரும் பாதைகள் தான் பிரபல தேடுபொறிகளான கூகுள் போன்றவை. இவை பயனர்கள் வெகு விரைவில் தாங்கள் தேடிய விவரங்களை அறிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் அந்தப் பாதைகளைத் தாண்டியும் காடானது அடர்ந்து யாருடைய பார்வையும் படாத சில இடங்களிக் கொண்டிருக்கும் அல்லவா! அவை தான் இணையத்தின் மறைவான பகுதியான டார்க் வெப். அந்த டார்க் வெப்பில் அனைவருடைய அடையாளங்களும், செயல்களும் மறைவாக இருக்கும். புதையல் வேட்டைக்குச் செல்ல தனிப்பட்ட வரைபடங்கள் வைத்திருப்பார்களே, அதைப் போல டார்க் வெப்பில் ஒரு விசயத்தைத் தேடவேண்டும் என்றால் அதற்கென பிரத்தியேக வழிகள் உள்ளன.

                                                          -From Internet

சட்டத்துக்குப் புறம்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சர்வர்களை ஹேக் செய்து முடக்கிய வழக்கில் ஸ்ரீயும் ஏகலைவனுடைய நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளரும் விசாரிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் சைபர் க்ரைம் பிரிவினர் நீதிமன்றத்திடம் விசாரணைக்கான ஆணையொன்றை வாங்கியிருந்தனர்.

அவ்வாறு விசாரிக்கப்பட்ட போது தான் எப்படி  தனக்கு ஏகலைவன் அறிமுகமானான் என்பதை ஸ்ரீ கூறியிருந்தான். ஸ்ரீ கூறிய தகவல்களை அவனது பார்வையிலிருந்தே காண்போம்.

பேராசிரியர் தேவநாதனிடம் இளங்கலை கணினி அறிவியல் பயின்ற மாணவன் தான் ஸ்ரீ. அவனது வயதுக்குரிய குறுகுறுப்பின் காரணமாக இருள் இணையத்தைப் பற்றி எப்படியோ கேட்டறிந்தவன் அதைப் பயன்படுத்த ஆர்வம் கொண்டான்.

அதற்கென இருக்கும் பிரத்தியேக உலவியை உபயோகித்து அதிலுள்ள சில வலைதளங்களைப் பார்வையிடவும் செய்தான். ஒரு வலைதளத்தில் நாம் நுழைந்தோம் என்பதற்கு சான்றாக எந்த ஹிஸ்டரியும் அந்த டார்க் வெப் உலவியில் பதிவாகாது. சர்ஃபேஸ் வெப்பில் நாம் காணக்கூடிய குக்கீஸ் செட்டிங்ஸ் எதுவுமே டார்க் வெப் தளங்களுக்குக் கிடையாது. அந்த உலவியில் நாம் என்ன தேடினோம் என்பதை ஐ.பி அட்ரஸை வைத்து கூட கண்டறிய முடியாது.

ஒரு இணைப்பைத் தொட்டால் பலவித என்க்ரிப்டட் பக்கங்கள் மூலம் அந்த உலவி நீங்கள் சரியாக எதை யூ.ஆர்.எல் மூலம் தேடுகிறீர்கள் என்பதையே கண்டறிய முடியாதபடி செய்துவிடும்.

இதையெல்லாம் அறிந்தவன் பொழுதுபோக்குக்காக டார்க்வெப்பிலிருக்கும் சில தளங்களில் உலாவுவதை வழக்கமாக்கிக்கொண்டன்.

பேராசிரியர் தேவநாதனுக்கு அவன் மிகவும் பிடித்த மாணவன் என்பதால் அடிக்கடி அவரது வீட்டுக்கு அவன் வருவதுண்டு. அப்படி ஒருமுறை அவனை அழைத்தவர் அவன் டார்க்வெப்பை பயன்படுத்துவது கண்டறிந்து அறிவுரை கூற அச்சமயம் பார்த்து ஊர்த்திருவிழாவுக்காக அவரிடம் நன்கொடை வாங்க வந்திருந்த நிஷாந்த் அதைக் கேட்டுவிட்டான்.

பேராசிரியர் அறிவுரை சொன்னதும் கிளம்பிய ஸ்ரீயைத் தனியே சந்தித்தவன் டார்க்வெப் பற்றி விபரங்கள் கேட்க அவனோடு ஒட்டிக்கொண்ட வந்த பிரகதியும் அதைத் தெரிந்துகொண்டாள்.

இப்படி தான் நிஷாந்தும் பிரகதியும் டார்க்வெப்பிற்குள் நுழைந்தார்கள். முதலில் நிஷாந்துக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் அவனிடம் காதல் கொண்ட பிரகதியோ இருள் இணையத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் தினசரி போய்வருவதை வாடிக்கை ஆக்கியிருந்தாள்.

இந்நிலையில் தான் ஏகலைவனின் தனிப்பட்ட உபயோகத்துக்கான மடிக்கணினியில் அவனது போட்டி நிறுவனத்தினர் ஏதோ மால்வேரை மின்னஞ்சல் மூலம் இன்ஸ்டால் செய்துவிட முக்கியமான அரசு டெண்டர் ஒன்று அவனது கையை விட்டு நழுவியது.

கூடவே அவனது மடிக்கணினியில் ஏகப்பட்ட தொழில்நுட்பக்கோளாறுகளும் உண்டாக ஏதேனும் வைரஸ் தாக்குதலாக இருக்குமோ என ஏகலைவன் சந்தேகித்தான்.

அலுவல்ரீதியான அனைத்து இரகசியங்களும் அடங்கிய அந்த மடிக்கணினியை எந்த தொழில்நுட்பம் தெரிந்த நபரிடமும் கொடுக்க அவனுக்கு யோசனையாக இருந்தது.

இந்நிலையில் தான் நிஷாந்த் அவனுக்கு ஸ்ரீயைப் பற்றி கூறினான். அப்போது ஸ்ரீ தனிப்பட்ட முறையில் ஹேக்கிங் பற்றி வகுப்பு ஒன்றில் இணைந்து படித்துக்கொண்டிருந்தான்.

அவனுடன் இருந்த பழக்கம் காரணமாக நம்பிக்கையோடு வேலையை ஒப்படைக்கலாமென ஏகலைவனிடம் உறுதியளித்தான் நிஷாந்த். அந்த வேலை தொடர்பாக பேராசிரியர் தேவநாதன் வீட்டில் சில நாட்கள் ஏகலைவன் தங்கிவிட ஸ்ரீயும் அவனது மடிக்கணினியிலிருந்த ‘மால்வேரைக்’ கண்டறிந்து சரி செய்து கொடுத்தான்.

ஏகலைவனின் தொழில்சம்பந்தப்பட்ட எந்த விவரங்களும் அழியாமல் பாதுகாக்கப்படவும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி தனது கணினி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஸ்ரீயை அணுகுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் ஏகலைவன்.

ஸ்ரீயுடனான பழக்கம் மற்றும் பிரகதியின் டார்க்வெப் பைத்தியம் காரணமாக நிஷாந்துக்கும் அதைப் பயன்படுத்தலாமா என்ற குறுகுறுப்பு எழுந்தது.

ஸ்ரீயிடம் விவரம் கேட்டறிந்து அவனும் இருள் இணைய உலவியைப் பாதுகாப்பாக மொபைலில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறான்.

ஆனால் பிரகதியோ அவனை விட ஒரு படி மேலே போய் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறாள். அதற்கு காரணம் ஏகலைவன் அவளது வீட்டில் தங்கிய சில நாட்களில் தேவநாதனிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள்.

ஸ்ரீயிடம் டார்க்வெப்பிலிருக்கும் ஒரு பாராநார்மல் இணையதளத்தைக் காட்டி அதில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்களே எப்படியென பிரகதி வினவியிருக்கிறாள்.

அது மூடநம்பிக்கைகளுக்குப் பெயர் போன தளம். பேய், பிசாசு, சாத்தான் பற்றிய நம்பிக்கைகள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உண்டு.

உதாரணமாக தாய்லாந்து மக்களிடையே ஆவிகளை அடிமையாக வைத்து விரும்பிய காரியங்களை செய்துகொள்ளும் முறை நிலவி வருகிறது.

அந்த ஆவிகளை ஏலத்தில் எடுக்கும் முறை கூட சில டார்க்வெப் தளங்களில் நடமுறையில் உள்ளது. பணம் கொடுத்து அந்த ஆவிகளை வாங்குபவர்கள் அதை தனக்கு வேண்டாதவர்களை பழி தீர்க்கவும், செல்வம் சம்பாதிக்கவும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட தளத்தைத் தான் ஸ்ரீயிடம் பிரகதி காண்பித்திருந்தாள்.

‘சோல் ஆக்சன் (Soul Auction)’ எனப்படும் ஆன்மாக்களை ஏலம் விடும் தளம் அது. அங்கே பணம் கொடுத்து, அந்த ஆன்மாக்களுக்கு நெருக்கமானவர்கள் அவற்றின் பெயரில் பயனர் ஐடி ஓப்பன் செய்து கொள்வார்கள்.

அந்த ஆன்மாவால் எதையெல்லாம் செய்யமுடியும் என்று பட்டியலிடுவார்கள். விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து அந்த ஆன்மாக்களை உடைமையாக்கிக்கொள்வார்கள். இவை அனைத்தும் அமானுஷ்யம் சம்பந்தப்பட்டவை.

இதெல்லாம் இந்த டிஜிட்டல் உலகத்தில் முட்டாள்தனமென ஒரு சாரார் சொன்னாலும் இன்றளவிலும் டார்க்வெப்பில் ஆன்மாக்களின் ஏலம் ஜரூராக நடைபெறுவது மூடநம்பிக்கைகள் என்றுமே ஒழியாது என்பதற்கு ஆதாரம்.

ஸ்ரீ அந்த தளத்தைக் கண்டதும் முதலில் ஜெர்க் ஆனான். பின்னர் இந்தத்  தளத்தை ஏன் ஆர்வமாகப் பார்க்கிறாய் என வினவினான்.

“வலைல ஒரு திமிங்கலம் மாட்டிருக்கு ஸ்ரீ… அதை வச்சு பணம் பாக்கலாம்னு இருக்கேன்… நீ கொஞ்சம் கோ-ஆப்பரேட் பண்ணேன்”

“எனக்கு உன் சங்காத்தமே வேண்டாம் தாயே… என்ன வேலைனு சொல்லு, செஞ்சு தர்றேன்… அப்புறம் நீயாச்சு இந்த சைட்டாச்சு… என்னை விட்டுரு… இதுல்லாம் க்ரிமினல் அஃபன்ஸ்… கவனமா இரு… மாட்டிக்கிட்டா டின் கட்டிருவாங்க போலீஸ்” என்று எச்சரித்து அவள் கேட்ட உதவிகளைச் செய்ததோடு நழுவிக்கொண்டான் ஸ்ரீ.

அவள் கேட்ட உதவி மிகவும் சிறியது தான். டார்க் வெப்பில் உலாவத் தெரிந்தவளுக்கு அதில் பயனர் ஐடி உருவாக்குவதற்கு கொஞ்சம் பயம். அதை மட்டும் செய்து தருமாறு தான் அவனிடம் கேட்டாள்.

அதாவது ஆன்மாக்களை ஏலம் விடும் தளத்தில் தேவசேனாவின் பெயரில் ஒரு பயனர் ஐடியை உருவாக்கி அதைக் காட்டி ஏகலைவனிடம் பணம் பறிப்பதே அவளது திட்டம். தேவசேனாவைப் பற்றி அவர்கள் வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் உணர்வுப்பூர்வமாக ஏகலைவன் தேவநாதனிடம் சில விவரங்களைப் பகிர்ந்திருந்தான்.

திருமணம் பற்றி பேசியவரிடம் தேவசேனாவே மறுபடி பிறந்தால் மட்டுமே அது சாத்தியமென ஏகலைவன் கூறியபோது அவன் கண்களில் மின்னிய ஆசையும் காதலும் ஒளிந்திருந்து அவனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பிரகதியின் பார்வைக்குத் தப்பவில்லை. எனவே தான் அந்த இணையதளத்தைப் பார்த்ததும் திட்டம் தீட்டினாள் அவள்.

ஸ்ரீயும் பயனர் ஐடியை ஓப்பன் செய்து கொடுத்தான். ஆனால் ஏகலைவனுக்கு டார்க் வெப்பை எப்படி அறிமுகப்படுத்துவது? அதற்காக தான் காதலன் நிஷாந்தை வைத்து அவனது மடிக்கணினியில் டார்க் வெப் உலவியை இன்ஸ்டால் செய்து அவ:ள் சொன்ன தளத்தை சும்மா வேடிக்கை பார்ப்பது போல காட்டச் செய்தாள்.

நிஷாந்த் இதெல்லாம் எதற்காக என்று கூட தெரியாமல் அவள் சொன்னாளே என்பதற்காக செய்திருக்கிறான்.

ஏகலைவனும் அதில் தேவசேனாவின் பெயர் மற்றும் விபரங்களைப் பார்த்ததும் உள்பெட்டியில் தகவலனுப்பி விவரம் கேட்க, பிரகதியோ தேவசேனாவின் தூரத்து உறவு என்று சொல்லியிருக்கிறாள்.

முதலில் ஏகலைவன் நம்பாவிட்டாலும் பின்னர் பிரகதியின் பேச்சை நம்ப ஆரம்பித்திருக்கிறான். அவளுக்குள் தேவசேனா வாழுகிறாள் என்று எண்ணுமளவுக்கு அவனை நம்ப வைத்து அவ்வபோது பணம் பறித்திருக்கிறாள் பிரகதி.

எக்காலத்திலும் தேவசேனாவின் ஆன்மாவை ஏலத்தில் விடாதே என்று மட்டும் ஏகலைவன் பிரகதியிடம் கோரிக்கை வைத்திருக்கிறான். அவளும் சரியென்றிருக்கிறாள்.

இந்த வேலை தேவநாதனுக்குத் தெரிய வந்ததும் அவர் மகளைக் கடிந்து கொண்டார். ஆனால் பணம் வரவும் அவரது வாயும் அடைபட்டது.

அடிக்கடி பணம் பறித்தால் அவனுக்குச் சந்தேகம் வந்துவிடுமென வெறுமெனே அவனிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தவள் இந்த விசயத்தை நிஷாந்திடம் மறைத்து வைத்ததாக ஸ்ரீ கூறியிருந்தான் அவனது வாக்குமூலத்தில்.

கூடவே அந்த ஏகலைவனின் மூலமாகத் தான் மேலாளர் அறிமுகமானார் என்றும் கூறிவிட்டான். அதாவது தன்னையும் மேலாளரையும் காப்பாற்றிக்கொள்ள பணப்பறிப்பு எனும் குற்றத்தில் ஸ்ரீ பிரகதியை மாட்டிவிட்டுவிட்டான்.

அவனது வாக்குமூலத்தை முழுவதுமாகப் படித்த இதன்யா தலையில் கையை வைத்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.

மகேந்திரனால் இப்போதும் ஸ்ரீயின் வாக்குமூலத்தை நம்ப முடியவில்லை.

“அந்தாளு நம்ம கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான்… அவன் எப்படி மேடம் காதலியோட ஆன்மா இன்னொரு பொண்ணுக்குள்ள இருக்குனு நம்பியிருப்பான்? இந்த ஸ்ரீ பொய் சொல்லுறான்… இவன் கேசை திசை திருப்புறதா தோணுது… ஏகலைவன் அந்தளவுக்கு முட்டாள் இல்ல” என்றார் அவர்.

இதன்யாவுக்கோ தன்னைப் பார்த்து ஒரு முறை அவன் தேவா என்று அழைத்த தருணம் நினைவுக்கு வந்தது. அவனுக்கு மனரீதியான பாதிப்பு இருக்கலாமென அவளை யோசிக்க வைத்த தருணம் அது!

எந்த ஒரு சக்தி வாய்ந்த மனிதனுக்கும் பலவீனம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். ஏகலைவனின் பலவீனம் அவனது காதலி தேவசேனாவாக இருக்கலாமோ?

அந்தப் பலவீனத்தை எப்படியோ அறிந்த பிரகதி அதை வைத்து பணம் கறந்திருக்கிறாள் என்றே இதன்யாவுக்குத் தோன்றியது.

முரளிதரனிடம் வாதமும் அதுவே.

“தன்னை ரொம்ப சக்திவாய்ந்தவனா, யாராலயும் தொட்டுப் பாக்க முடியாதவனா ஏகலைவன் காண்பிச்சுக்கிறார்… அந்த பிம்பத்துக்குள்ள ஒளிஞ்சிருக்குற பலவீனம் தான் தேவசேனா மேல அவர் வச்சிருக்குற காதல்… அந்தக் காதல் கைகூடாததால அவர் மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கலாம்… எனக்கும் இதன்யா மேடம் சொல்லுறது தான் உண்மையா இருக்குமோனு சந்தேகம் வருது”

மார்த்தாண்டன் இரு பக்கத்து கூற்றத்தையும் கேட்டுக்கொண்டார்.

“எப்பிடியும் க்ரைம் ப்ராஞ்ச்ல இருந்து பிரகதிய விசாரணைக்குக் கூப்பிடுவாங்க… அந்தப் பொண்ணு செஞ்சது தப்பு… அவ விசாரணைல என்ன சொல்லுறானு பாப்போம்” என்றார் அவர்.

“அதுக்கு முன்னாடி நம்ம நிஷாந்த் கிட்ட சில விசயத்தைக் கேட்டு உறுதிபடுத்திக்கணும்… அதோட இந்தக் கேஸ்ல அவனும் ஒரு சஸ்பெக்ட்… போன தடவை அவன் குடுத்த ஸ்டேட்மெண்ட்ல நிறைய பொய் இருக்கு… அவனும் எதையோ மறைக்குறான்… ஃபாதர் கொல்லத்துல இருந்து வர்றதுக்கு முன்னாடி அவனை கஸ்டடிக்கு எடுத்து விசாரணைய ஆரம்பிக்கணும்… அதுக்கு முன்னாடி ஏகலைவனைப் பத்தி சாவித்திரி கிட்ட தீர விசாரிக்கணும்… நான் சாவித்திரி கிட்ட விசாரிக்குறேன்… நீங்க நிஷாந்தை விசாரிங்க… எவ்ளோ சீக்கிரம் இந்த விவகாரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் இனியா கேஸ்ல உள்ள முடிச்சும் அவிழும்னு தோணுது” என்ற இதன்யா பின்னர் நினைவு வந்தவளாக “நவநீதம் அந்தச் சாத்தான் பத்தி ஏதாச்சும் சொன்னாளா முரளி சார்?” என்று கேட்டாள்.

“நான் இன்னும் அவளை விசாரிக்கல மேடம்.. அதுக்குள்ள இந்த ஃபேக்ஸ் வந்துடுச்சு… இதுல இருக்குற உண்மைய டைஜஸ்ட் பண்ணுறதுக்குள்ள நீங்க வந்துட்டிங்க… இதோ இப்பவே அவ கிட்ட விசாரிச்சு உண்மைய வெளிய கொண்டு வர்றேன்” என்று விசாரணை அறைக்குக் கிளம்பிப்போனார் முரளிதரன்.

அதே நேரம் ஏகலைவன் அவனது அறையிலிருக்கும் தேவசேனாவின் புகைப்படத்தின் முன்னே நின்று புலம்பிக்கொண்டிருந்தான்.

“எனக்கு உன்னைப் பாக்கணும்ங்கிற ஏக்கம் அதிகமாகிட்டே போகுது தேவா… உன் கிட்ட ரெகுலரா பேசணும், உன் கையை பிடிச்சுக்கிட்டே நடக்கணும், தூக்கம் வராத இரவுகள்ல உன் மடியில படுத்து கதை  பேசணும்னு எனக்குள்ள இருக்குற ஆசை ஒவ்வொன்னும் இன்னும் மடியாம என்னை இம்சை பண்ணுது… சொல்லப்போனா முன்னைவிட இப்ப இந்த ஆசைகளோட வீரியம் அதிகமாகிடுச்சு தேவா… இதை நான் சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட சொன்னா அவர் எனக்கு ‘போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்சார்டர்’னு (Post Traumatic Stress Dsiorder) சொல்லுறார்… உன் மரணம் குடுத்த அதிர்ச்சியை என்னால ஏத்துக்க முடியாம உன் ஆன்மா இன்னும் என்னைச் சுத்தி உலாவுது, அது மறுபிறவி எடுக்கும்னு நான் நம்புறதா சொல்லுறார்… ரீசண்டா அந்த மறுஜென்ம விசயத்துல நான் ஏமாந்ததும் அவர் என்னோட மெடிசின் டோசேஜை இன்க்ரீஸ் பண்ணிட்டார் தேவா… நீயே சொல்லு, நான் என்ன பைத்தியமா?” என்று கேட்டான் அந்த புகைப்படத்திடம்.

எப்பேர்ப்பட்ட புத்திசாலியும் காதலில் பைத்தியமாகிவிடுவான். அப்பேர்ப்பட்ட ஆண்மகனுக்குக் காதல் முறிவு அதிலும் காலத்தின் கட்டாயத்தால் நிரந்தமான முறிவு ஏற்படுமாயின் அவன் சித்தம் கலங்கி போவது இயல்பே!

தேவசேனாவின் மரணம் ஏகலைவனை இந்நிலைக்குத் தள்ளிவிட எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி குளிர் காய்ந்து பணம் பறித்த பிரகதியோ சென்னையிலுள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் மிரட்சியோடு விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.

அவள் விசாரிக்கப்படுகையிலேயே சைபர் க்ரைம் காவல்நிலையத்திலிருந்து யாரும் அறியாவண்ணம் ஒரு காவல்துறை அதிகாரி மொபைலுடன் மெதுவாக நகர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தார்.

யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்தவர் தனது மொபைலில் யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

“ஹலோ சார்! இங்க ஒரு எதிர்பாராத திருப்பம் நடந்திருக்கு”

பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர் அடுத்து வரப்போகும் மாபெரும் சூறாவளிக்கான காரணியாகத் தனது மொபைல் அழைப்பு இருக்கப்போவதை அறியவில்லை.