IIN 74

இருள் இணையம் அல்லது டார்க் வெப் என்பது சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையமாகும். இதை சாதாரணமான ப்ரவுசர்கள் மூலம் பயன்படுத்த முடியாது. இதற்கென பிரத்தியேகமாக ப்ரவுசர்கள் உள்ளன. அவை என்க்ரிப்டட் வழிகள், மற்றும் பாயிண்டுகள் மூலம் பயனர்களின் அடையாளம் வெளிப்படாமல் டார்க் வெப்பில் தேடவோ செயல்படவோ வைக்கின்றன. இங்கே சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைமருந்து விற்பனை, கிரெடிட் கார்ட் எண்கள் பரிமாற்றம், கள்ளப்பணம், கணக்குகளை ஹேக் செய்வது போன்றவை நடந்தேறும். அதே நேரம் சட்டத்திற்குட்பட்ட சமூக வலைதளங்கள், சில கம்யூனிட்டிகளும் டார்க் வெப்பில் இயங்குகின்றன.

                                                          -From Internet

ஏகலைவனோடு தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தார் மனுவேந்தன். இருவரும் தற்போது தான் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்துவிட்டுத் திருநெல்வேலியிருந்து பொன்மலைக்குத் திரும்பியிருந்தார்கள்.

நவநீதத்தையும் கோபாலையும் ஜாமீனில் எடுக்க முடியாத ஏமாற்றம் இருவருக்கும் இருந்தது. அதிலும் ஏகலைவனின் முகத்தில் ஏமாற்றத்தோடு துளி எரிச்சலும் கலந்திருந்தது.

காரணம் திருநெல்வேலியிருந்து காரில் வரும்போது முன்னாள் அமைச்சரிடம் வழக்கு குறித்து உரையாடிய போது அவர் அளித்த பதில் தான் அவனை எரிச்சலூட்டியிருந்தது.

“இதுக்கு முன்னாடி உங்களுக்கு எதிரா இருந்த சாட்சிகளை முறியடிச்சு வெளிய வர  நீங்க செஞ்ச முயற்சிக்கு நான் நிறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்… இப்ப எங்க கட்சியோட தலைமையே ஆட்டம் கண்டு போயிருக்கு…. தேர்தல் தோல்விக்குக் காரணமான ஆளுங்களை ஓரங்கட்ட கட்சிக்குள்ள நிறைய சதி நடக்குது… அந்த லிஸ்டுல நான் தான் முதல்ல இருக்கேன்… ஏன்னா உங்களுக்கு நான் நிறைய உதவி பண்ணிருக்கேன்… ஊட்டில இருக்குற உங்க தேயிலைத்தோட்ட ஊழியர்கள் போராட்டத்தைப் போலீஸை ஏவி கலைச்சதுல ஆரம்பிச்சு இந்தக் கேஸ்ல உங்களை எதிர்க்க துணிஞ்ச ஐ.பி.எஸ் ஆபிசருக்கு சஸ்பென்சன் குடுக்க வச்ச வரைக்கும் என்னோட பங்கு அதிகம்… அதுல்லாம் இப்ப எனக்கு எதிரா திரும்பியிருக்கு… மன்னிச்சிடுங்க… என்னால இப்ப உங்களுக்கு உதவ முடியாது… காலம் மாறுறப்ப காட்சிகளும் மாறும்… அப்ப கட்டாயம் நான் உங்களுக்கு உதவுறேன்”

அரசியல்வாதிக்கே உரித்தான நழுவல் பதிலோடு ஆசாமி கழண்டுகொண்டதும் ஒவ்வொரு முறையும் அந்தக் கட்சிக்கு நிதி கொடுத்ததை எண்ணி கடுங்கோபம் வந்தது ஏகலைவனுக்கு. தேர்தல் பத்திரம் மட்டுமே அவர்கள் கட்சிக்காக கோடிக்கணக்கில் அவன் வாங்கியிருக்கிறானே! அதற்கெல்லாம் நன்றி காட்ட வேண்டாமா?

மனுவேந்தன் அவனை நிதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

“உங்களால அரசியல்ரீதியா சட்டரீதியா இதை சரிபண்ண முடியாம போகலாம்… ஆனா உங்க மேல இருக்குற பயம் யாருக்கும் இன்னும் குறையல… அதை மறந்துடாதிங்க… என்னால முடிஞ்ச எல்லா விதத்துலயும் நான் ட்ரை பண்ணி அவங்களை வெளிய கொண்டு வருவேன்… நீங்க என்னை மனப்பூர்வமா நம்பலாம்… இது விசயமா மினிஸ்டரை நான் மீட் பண்ணுறேன்… இப்ப ரூலிங் பார்ட்டில இருக்குற சிலர் எனக்கு நெருக்கமானவங்க… அவங்களை வச்சு காய் நகர்த்துறேன்… உங்க கிட்ட நான் கைநீட்டி வாங்குன ஒவ்வொரு ரூபாவுக்கும் நான் நன்றியோட இருப்பேன் ஏகலைவன்… நம்பிக்கைய இழந்துடாதிங்க” என்று உள்ளார்ந்த நன்றியோடு சொன்னவரை நம்பிக்கையோடு ஏறிட்டான் அவன்.

மனுவேந்தன் விடைபெற்றுக்கொள்ள ஏகலைவன் களைப்போடு தனதது வெய்ஸ்ட் கோட்டைக் கழற்றியெறிந்தவன் தனது மடிக்கணினியை ஆன் செய்தான்.

ஆன் செய்ததும் ‘பாப்-அப் மெசேஜ்’ ஒன்று உதயமானது. டார்க்வெப்பிலிருந்து தகவல் வந்திருக்கிறதென்பதை அறிந்ததும் முகம் ஒளிர அதைத் திறந்தவன் “ஹாய்! லாங் டைம் நோ சீ! தேவாவை மறந்துட்டிங்களா நீங்க?” என்ற செய்தியைப் பார்த்ததும் துடித்துப் போனான்,.

உடனே மடமடவென டார்க் வெப்பிலிருக்கும் அந்த பாராநார்மல் தளத்தில் தனக்கு இருக்கும் பயனர் ஐடியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தான் ஏகலைவன்.

பரபரப்போடு எதையோ தேடியவன் தான் தேடியதைக் காணவில்லை என்றதும் ஏமாற்றமடைந்தான். அவனது மனம் துடித்தது. உடனே தனக்கு வந்திருந்த செய்திக்குப் பதில் அனுப்ப ஆரம்பித்தான்.

“இப்ப நீ எங்க இருக்க தேவா? யார் கூட இருக்க?”

செய்தி அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தான்.

ஐந்து நிமிடங்கள் ஆகியும் எந்தப் பதிலும் வரவில்லை எதிர்தரப்பிலிருந்து.

அந்த ஐந்து நிமிடங்களில் ஐந்து இலட்சம் முறை மரணித்து நரகத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருப்பான் அவன்.

ஒரு வழியாக பதிலும் வந்து சேர்ந்தது.

“நான் இப்ப ஒரு பொண்ணு கூட இருக்கேன்… அவளும் என்னை கூடிய சீக்கிரமே விட்டுடுவேன்னு சொல்லிருக்கா ஏகா… அதுக்கு அப்புறம் பழையபடி நான் போக்கிடம் இல்லாம அலையணும்”

உடனே பதறியடித்து பதிலைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தான் அவ்ன.

“ஏன்? அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?”

“அவளுக்குப் பணப்பிரச்சனை… அவசரமா அவளுக்கு எழுபத்தைஞ்சு லட்சம் வேணுமாம்… பாவம் அவங்கப்பாக்கு கிட்னி ட்ரான்ஸ்ப்ளாண்டேசனுக்கு பணம் வேணும்னு  அலையுறா”

ஏகலைவன் புருவம் சுருக்கி யோசித்தான். பின்னர் மடமடவென தட்டச்சு செய்தான்.

“அவளோட அக்கவுண்ட் நம்பர் டீடெய்ல்ஸ் எல்லாம் நீ அனுப்பு தேவா… உன்னை மூனு வருசமா பாதுகாக்குறவளுக்கு இதைக் கூட நான் செய்யமாட்டேனா?”

உடனே கணினி திரையில் வங்கிக்கணக்கு எண் விபரங்கள் வந்தன.

அதில் பெயர் என்ற இடத்தில் ‘D.Pragathi’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் வந்த விபரங்கள் நமக்குத் தேவையில்லை.

ஆம்! ஏகலைவனுக்கு டார்க் வெப் மூலம் செய்தியனுப்பி பணம் வாங்கியவள் பிரகதியே! இதன் பின்னே மூன்று ஆண்டு பழமையான கதை ஒன்று உள்ளது. அதைச் சொல்வதற்கான நேரம் இதுவல்ல!

பணப்பரிவர்த்தனை முடிவடைந்ததுமே ஏகலைவன் அடுத்த செய்தியை அனுப்பினான்.

“நீ எனக்கு மெசேஜ் பண்ணி ரொம்ப நாளாகுது தேவா… அதனால நான் ரெண்டாவது தடவையும் ஏமாற பாத்தேன்… இன்னைக்கு எனக்கு மெசேஜ் பண்ணி நீ என்னை அந்த ஏமாற்றத்துல இருந்து காப்பாத்திருக்க” என்றான் அவன்.

மறுமுனையிலிருந்த பிரகதிக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும் பொதுவாக பதிலொன்றை அனுப்பினாள்.

“உங்களை எப்பவும் நான் ஏமாறவிடமாட்டேன்… நான் மறுபடி உங்களுக்காக பிறக்குற வரைக்கும் நீங்க காத்திருப்பிங்க தானே?”

எத்தனையோ மறுஜென்ம திரைப்படங்களில் வரும் வசனம்! அதைப் படித்ததும் பரவசமாகிப்போனான் ஏகலைவன்.

“கண்டிப்பா! இருபது வருசத்துக்கு மேல உனக்காக காத்திருக்கேன் தேவா… இனியும் காத்திருப்பேன்”

அவனது பதில் திரையில் வந்ததும் படித்து பார்த்த பிரகதி சிரித்துக்கொண்டாள்.

பைத்தியக்காரன் என்று ஏளனமாக எண்ணியபடி “அப்பா” என தேவநாதனிடம் பேச அங்கிருந்து சென்றுவிட்டாள்.

சிலரின் அதீத பைத்தியக்காரத்தனம் தான் பலரின் ஏமாற்றுவேலைக்கு மூலதனம் என்பதை ஏகலைவனுக்கு யார் புரியவைப்பது?

என்றாவது ஒருநாள் தேவசேனா மறுபிறவி எடுப்பாள் என்ற நம்பிக்கையோடு மனநல மருத்துவர் கொடுத்த மாத்திரையை விழுங்கிக்கொண்டான் அவன்.

அதே நேரம் இதன்யா பொன்மலை காவல் நிலையத்திலிருந்து பாதிரியார் பவுலைக் காண கிளம்பினாள்.

“அரெஸ்ட் வாரண்ட் இன்னும் வரலையே இதன்யா மேடம்?” என்ற முரளிதரனிடம்

“இப்ப நான் அவர் கிட்ட பேசி பாக்க தான் போறேன்… அதுவரை நவநீதம் கிட்ட நீங்க விசாரிங்க முரளி சார்… அவ வாய்ல இருந்து சாத்தானா தன்னை உருவகப்படுத்தி இவங்களை எல்லாம் கண்ட்ரோல் பண்ணுற அந்த நபர் யாருங்கிற தகவலை உங்களால மட்டும் தான் வாங்க முடியும்” என்றாள் அவள்.

முரளிதரனும் சரியென்றுவிட்டு விசாரணை அறைக்குள் செல்ல அவள் பாதிரியாரின் வீட்டுக்குக் கிளம்பினாள். சீருடையில் தான்.

அங்கே போய் கதவைத் தட்டியதும் திறந்தவன் ராக்கி. இதன்யாவைக் கண்டதும் வழக்கம் போல மருண்டவன் “வாங்க மேடம்” என வரவேற்றான்.

இதன்யாவின் கண்கள் பாதிரியார் எங்கே என அலசத் துவங்கின. அவள் கண்களுக்கு அவர் புலப்படவில்லை என்றதும் ராக்கியிடம் பாதிரியார் எங்கே என விசாரிக்க ஆரம்பித்தார்.

“ஃபாதர் முக்கியமான வேலை விசயமா கொல்லம் போயிருக்காங்க மேடம்” என்றான் அவன்.

அவன் இந்நேரத்தில் பாதிரியாரின் வீட்டிலிருப்பதைக் கண்டதும் “காலேஜ் ரீ-ஓப்பன் ஆக இன்னும் நாள் இருக்கு… நீ இந்நேரம் சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம்ல தான இருந்திருக்கணும்… இங்க என்ன பண்ணுற?” என விசாரிக்க ஆரம்பித்தாள்.

“அங்க இப்ப நான் வொர்க் பண்ணல மேடம்… ஃபாதர் என்னை திருநெல்வேலில ஒரு கம்பெனில சேர்த்துவிடுறதா சொன்னாங்க… அடுத்த வாரம் அங்க ஜாயின் பண்ணப்போறேன்” என்றான் அவன்.

“எதுக்காக ரிலீவ் ஆனனு தெரிஞ்சிக்கலாமா?”

“அங்க வேலை பாத்தா நல்ல சம்பளம் கிடைக்குது… ஆனா மனசுக்கு நிம்மதியில்ல மேடம்… என் அண்ணன் அங்க வேலை பாத்தப்பவும் இதே நிலமை தான்… வேண்டாம்னு விட்டுட்டேன்” என்றான் அவன்.

இதன்யா மெச்சுதலாக அவனைப் பார்த்தவள் “ஃபாதரோட பெர்சனல் மொபைல் நம்பர் கிடைக்குமா ராக்கி?” என்று கேட்க அவனும் மொபைல் எண்ணை அளித்தான்.

அதை தனது மொபைலில் சேமித்தவள் “உன்னைப் பொறுத்தவரைக்கும் ஃபாதர் எப்பிடிபட்டவர்?” என்று மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

அவன் பதில் சொல்லத் தயங்கவும் “ஜஸ்ட் பொதுவா கேக்குறேன்… விருப்பம்னா சொல்லு” என்றாள்.

ராக்கி தயக்கம் உடைத்து நன்றியுணர்ச்சியோடு பாதிரியார் பவுலைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

“ஃபாதர் ரொம்ப இளகுன மனசுள்ளவர்… எங்கம்மாவோட சொந்த ஊர் தான் ஃபாதருக்கும் சொந்த ஊர்… அப்பா இறந்ததும் இந்த ஊர்ல நாங்க வாழ வழியில்லாம தவிச்சப்ப ஊர்ப்பாசத்துக்காக எங்களுக்கு ஆதரவு குடுத்தவர் ஃபாதர் பவுல் தான்… என்னையும் அண்ணனையும் அவர் ரொம்ப பாசமா பாத்துக்கிட்டார்… அவரோட ஃபாதர் ஸ்தானத்துக்கு யார் மேலயும் பற்று இல்லாம இருக்கணும், ஆனா அதை மீறி எங்க ரெண்டு பேர் மேலயும் பாசம் வச்சிட்டதா அடிக்கடி சொல்லுவார்… அண்ணா கடைசி வரைக்கும் அவரைப் புரிஞ்சிக்கவேல்ல… அவர் சொன்னதைக் கேக்காம சாத்தான் வழிபாடு, தனிவீடு எடுத்து தங்குறது, என்னையும் அவன் பாதைக்குத் திருப்புனதுனு இருக்குறவரைக்கும் அவன் ஃபாதரோட பேச்சை ஏகப்பட்ட தடவை அலட்சியப்படுத்திருக்கான்… ஆனா ஃபாதர் அவன் இறந்ததுக்கு அப்புறம் கூட…”

உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்தினான் ராக்கி. கண்களில் உளறிவிட்டோமோ என்ற பயம் வந்துவிட வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான் அவன்.

இதன்யா புன்சிரிப்போடு அதைக் கவனித்தவள் “யூ ஆர் ரியலி லக்கி… ஃபாதர் மாதிரி ஒரு கார்டியன் இல்லனா உன் வாழ்க்கையும் திசைமாறிருக்கும்… ஃபாதர் கொல்லத்துல இருந்து திரும்புனதும் அவர் கிட்ட நான் கிறிஸ்டியானிட்டி பத்தியும் சாத்தான் வழிபாடு பத்தியும் கொஞ்சம் விசாரிக்க வேண்டியது இருக்கு.. மத்தபடி இது வேலை சம்பந்தப்பட்ட என்கொயரி இல்ல… எனி ஹவ், உன்னோட புதுவேலைக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்று சொல்லி வாழ்த்திவிட்டு இடத்தைக் காலி செய்தாள்.

பாதிரியார் கொல்லத்திற்கு சென்றதாகக் குறிப்பிட்டதும் அவளுக்கு முத்து கொல்லத்தில் தலைமறைவாகியிருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

அவர் பொன்மலைக்குத் திரும்பியதும் விசாரணை வளையத்துக்குள் அவரைக் கொண்டுவருவது அவசியமென்பதை ராக்கி பாதியில் நிறுத்தி விழுங்கிய சொற்கள் உறுதிபடுத்தின.

நடந்தே காவல்நிலையம் சென்று கொண்டிருந்தவள் நிஷாந்தும் அவளது அன்னை சாவித்திரியும் பேருந்து  நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

அவனிடமும் விசாரணை நடத்தியாகவேண்டும். அவனது காதலி பிரகதி, தேவநாதன் இந்த இருவரையும் நல்லவிதமாகவே அவளால் நினைக்க முடியவில்லை.

அவள் பொன்மலை காவல் நிலையத்தை அடைந்ததும் சென்னை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலிருந்து முக்கியமான தகவல் ஒன்று ஃபேக்ஸ் மூலம் வந்திருப்பதாக மகேந்திரன் கூறவும் மெல்லிய பரபரப்பு இதன்யாவைத் தொற்றிக்கொண்டது.

“ஹேக்கர் ஸ்ரீ ஷாக்கிங்கான ஸ்டேட்மெண்ட் ஒன்னு குடுத்திருக்கான் மேடம்” என பலமான முஸ்தீபுடன் அவளை வரவேற்ற அடுத்தடுத்து சொன்ன தகவல்கள் இதன்யாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.