IIN 73

65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது அவர்களைக் கூடுதல் கவனமெடுத்து கண்காணிப்பார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கூடுதல் கவனம் அவசியமாகிறது. மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் பலம் சில வயதானவர்களுக்கு இருக்காது. என்ன தான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் மனநல பாதிப்புக்கான மருந்தை உட்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியான மாற்றத்துக்கு ஆட்கொள்ளப்படுவார்கள். அதோடு அவர்கள் குணமாகும் வேகமும் குறையும். வயதான நோயாளிகளுக்கு இம்மருந்துகளைக் கொடுக்கும் முன்னர் அவர்களிடம் கட்டாயம் மனநல மருத்துவர் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளை எடுத்துக்கொள்வதால் வரக்கூடிய பக்கவிளைவுகளை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அதோடு அவர்களுக்குத் தேவையான டோசேஜையும் தீர்மானிக்க வேண்டும்.

                       -From the website of National Institute of Mental Health

கோபாலை விசாரிக்க ஆரம்பித்திருந்தார் முரளிதரன். உடன் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அமர்ந்திருந்தார்கள்.

“எதுக்காக கிளாரா ஆதாரங்களைப் புதைச்சு வச்சதா பொய் சொல்லி எங்களோட கவனத்தைத் திசை திருப்புனிங்க? உங்களுக்குக் கிளாரா மேல என்ன பகை? யார் உங்களை அவங்க மேல பழி போட சொல்லி ஸ்டேசன் வரைக்கும் அனுப்பி வச்சாங்க?”

கேள்விகள் அடுத்தடுத்து வந்தாலும் பதில் வரவில்லை அவரிடமிருந்து.

இனியா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்த எந்த சந்தேகத்துக்குரிய நபரையும் அடித்துத் துன்புறுத்தாமல் விசாரித்து தான் உண்மையை வரவழைத்திருந்தார்கள் சிறப்பு விசாரணை குழுவினர்.

ஆனால் நவநீதமும் கோபாலும் இவ்வளவு அழுத்தக்காரர்களாக இருப்பது அவர்கள் இவ்வழக்கில் முன்பு கடைபிடித்த மென்மையான அணுகுமுறையையே மாற்றிவிடும் போல இருந்தது.

நவநீதமாவது ஐந்துக்கு இரண்டு முறை வாயைத் திறந்து பாதி உண்மைகளைக் கூறினாள். ஆனால் கோபாலோ அமுக்குணி போல அமர்ந்திருந்தாரேயொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

“இப்பிடியே உக்காந்திருந்தா நாளைக்கு மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர் படுத்துறதுக்கு முன்னாடி நீங்க ஸ்டேசன் பாத்ரூம்ல அடிக்கடி வழுக்கி விழவேண்டியதா இருக்கும்”

மார்த்தாண்டன் மறைமுகமாக எச்சரிக்கவும் கோபாலின் முகம் வெளிறியது. ஆனாலும் க்ஷண நேரத்தில் அதையும் சமாளித்துக்கொண்டார்.

“நீங்க என்ன கேட்டாலும் என்னால பதில் சொல்ல முடியாது… எதுவா இருந்தாலும் நான் மாஜிஸ்திரேட் கிட்ட தான் சொல்லுவேன்” என்றார் திமிராக.

“என்னடா செய்யுறதையும் செஞ்சுட்டு திமிரா பேசுற?” என கோபத்தோடு மகேந்திரன் அவரைக் கன்னத்தில் பளாரென அறைய நிலைகுலைந்து தரையில் விழுந்தார் கோபால். தரையில் விழுந்தவரின் உதடு கிழிந்து உதிரம் வழிந்தபோதே மூச்சிறைப்பு வந்துவிட்டது அவருக்கு.

கண்கள் சொருக மூச்சுக்கு ஏங்கி வாயைப் பிளந்துகொண்டு அவர் திணறிய காட்சி அபாயம் என உணர்ந்து வேகமாக அவருக்கு முதலுதவி செய்ய முயன்றார்கள் மூவரும்.

ஆனால் அதற்கெல்லாம் கோபாலின் மூச்சிறைப்பு அடங்கவில்லை என்றதும் உடனடியாக பொன்மலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அவரை.

அங்கே அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கோபாலை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாகக் கூறினார். மகேந்திரன் அறைந்த அதிர்ச்சியில் மூச்சிறைப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என்றார் அவர். இருள் நிறைந்த தூசியான சிறைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்பது அவரது இரண்டாவது ஊகம்.

“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தான் மெடிக்கல் செக்கப் டீம் வந்தாங்க… அப்ப இந்தாளு ஆஸ்துமா பத்தி மூச்சு கூட விடல டாக்டர் சார்” என்று ஆற்றாமையோடு கூறினார் மகேந்திரன்.

“அவரை அப்சர்வேசன்ல வச்சு கண்காணிக்கணும் சார்… நாளைக்கு மானிங் தான் என்னால அவரை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு மருத்துவர் சென்றுவிட மார்த்தாண்டனும் மகேந்திரனும் கான்ஸ்டபிள் ஒருவரை அவசர சிகிச்சை  பிரிவுக்கு முன்னர் காவலுக்கு வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதற்குள் காவல் நிலையத்தில் நவநீதத்தை விசாரித்துக்கொண்டிருந்த இதன்யாவுக்கு இத்தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. அவளும் பதற்றத்தோடு முரளிதரனிடம் என்னவென வினவினாள்.

“கோபாலை நாளைக்கு மானிங் தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க இதன்யா மேடம்… அந்தாளு நம்ம நினைச்சதை விட அழுத்தக்காரன்… நாளைக்கு மானிங்கே ஏகலைவன் லாயரோட வர வாய்ப்பிருக்கு… என்ன செய்யலாம்?” என்று கேட்டார் அவர்.

“அவங்களை ஜாமீன்ல எடுக்க முடியாதளவுக்கு தான் நம்ம அரெஸ்ட் பண்ணிருக்கோம்… ஏகலைவன் இவங்களை பாதுகாக்க துடிக்குறார்… அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு நான் இன்னைக்கு மானிங்ல இருந்து யோசிச்சிட்டிருக்கேன்… ஒருவேளை மறுபடியும் நிஷாந்துக்காக களம் இறங்குறாரா அந்தாளு?” என தன் பங்குக்கு அவரிடம் வினவிய இதன்யா நவநீதம் சொன்ன தகவலை அவரிடம் பகிர்ந்து கொண்டாள்.

“ஃபாதர் பவுலை நம்ம விசாரணைக்குள்ள கொண்டு வரணும் மேடம்… அதை விடுங்க… நவநீதம் சொன்ன சாத்தான் உண்மையான சாத்தானா தான் இருக்கணும்னு என்ன அவசியம்? அது ஒரு மெட்டஃபரா இருக்கலாமே” என்று தனது ஊகத்தை வெளிப்படுத்தினார் முரளிதரன்.

“தட் மீன்ஸ்?”

“கொஞ்சம் யோசிங்க… சாத்தான்னாலே தீயசக்தி… அது கெட்டதை மட்டும் தான் செய்யும்.. மனுசங்க மனசுல தீய எண்ணங்களைத் தூண்டும்… அவங்களைத் தனக்கு அடிமையாக்கி தன் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கும்… தன்னை மீறி போறவங்களோட உயிரை எடுத்துடும்… இப்பிடி தான் எல்லா மதங்கள்லயும் சொல்லப்பட்டிருக்கு… இந்தக் குணங்கள் எல்லாம் உள்ள ஒரு மனுசனைத் தான் இவங்க எல்லாரும் சாத்தான்னு சொல்லுறாங்களோனு எனக்கு சந்தேகம்”

இதன்யாவின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன. அடுத்த நொடியே அவளது கண்களில் சந்தேகம் குடிகொண்டது.

“நீங்க சொன்ன மாதிரி அது மெட்டஃபரா இருந்தா, ஏன் முத்து தனக்கு சாத்தானோட குரல் கேக்குறதாவும் உருவம் தெரியுறதாவும் சொன்னான்? அது ஹாலுசினேசனா? இல்ல நம்மளை ஏமாத்த இவங்க எல்லாரும் போடுற நாடகமா?”

“ஹண்ட்ரெட் பர்சென்டேஜ் அது ஹாலூசினேசன் தான் மேடம்… நல்லா கவனிச்சு பாருங்க…. சாத்தானோட குரல் கேட்டுச்சுனு சொன்னது  யாரு? ரோஷண்  அண்ட் முத்து ரெண்டு பேரும் தான்… இவங்க ரெண்டு பேருக்கும் தீவிரமான மனபாதிப்பு இருந்திருக்கு… அதோட சாத்தான் வழிபாடுங்கிற பேருல போதைமருந்தை பயன்படுத்தி ‘ட்ரக் அப்யூஸ்’கு ஆளாகிருக்காங்க…. இப்ப முத்து அதுக்காக மருந்தும் சாப்பிடுறான்… அதோட விளைவா ஹாலூசினேசன் உருவாகிருக்கலாம்… ரோஷணுக்கு இந்தச் ஸ்டேசன்ல உருவான மாதிரியே”

முரளிதரன் சொல்வதை வைத்துப் பார்த்தாலும் தர்க்கரீதியாகச் சரியாகத் தானே உள்ளது. யாரோ ஒருவன் இந்தச் சாத்தான் வழிபாடு என்ற திரைக்குப் பின்னே மறைந்திருக்கிறான் என்பது உறுதி.

நவநீதம், கோபால், நிஷாந்த், ரோஷண், பாதிரியார் பவுல் போன்றவர்கள் அவனால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகள்! அந்த மனிதனைத்  திரைக்குப் பின்னே இருந்து வெளியே இழுத்து வந்து சட்டத்தின் முன்னே நிறுத்தியே ஆகவேண்டும் எனத் தீர்மானித்தாள் அவள்.

எனவே அடுத்து விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய நபர் பாதிரியார் பவுல் என்று முடிவு செய்தவள் தன் முடிவை முரளிதரனிடம் தெரிவித்தாள்.

“அவரை வாரண்ட் இல்லாம அரெஸ்ட் பண்ண முடியாது மேடம்… ரிலிஜனை வச்சு ப்ளே பண்ண வாய்ப்பு இருக்கு” என்று முரளிதரன் சொன்னதை அவளும் ஆமோதித்தாள்.

நாளைக்கு மறுநாள் இருவரையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களை தங்கள் கஷ்டடியில் வைத்து விசாரிக்க அவகாசம் கேட்க தீர்மானித்து இருவரும் போலீஸ் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினார்கள்.

மறுநாள் காலையில் இதன்யா காவல்நிலையத்துக்கு வந்ததும் அங்கே நின்று காவலர்களிடம் விவாதம் செய்துகொண்டிருந்த ஏகலைவனைப் பார்த்து எரிச்சலுற்றாள்.

மீண்டும் தவறு செய்தவர்களைத் தப்ப வைக்க திட்டமிடுகிறான் என்று கறுவிக்கொண்டே அவனிடம் வந்தவள் “இன்னைக்குக் கோபாலையும் நவநீதத்தையும் மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்தப்படுத்தப்போறோம்… எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கோங்க…  இங்க நின்னு அன்வான்டட் ஆர்கியூமெண்ட்ஸை வச்சு எங்க வேலைய செய்யாம தடுத்திங்கனா உங்க மேல சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதா இருக்கும்” என்றாள் கோபத்தோடு.

ஏகலைவன் இவ்வளவு நேரம் காவலர்களிடம் சண்டை போடாத குறையாகப் பேசிக்கொண்டிருந்தவன் இதன்யாவைக் கண்டதும் முறுவலித்தான்.

“குட்மானிங்’ என்றான் அதே முறுவலோடு.

இதன்யாவுக்கு அந்த முறுவலில் உவப்பில்லை. எரிச்சலோடு அவனை உறுத்து விழித்தாள்.

“உங்களோட கோவத்தை மனசுக்குள்ள மறைச்சிக்கிட்டு ஏன் நடிக்குறிங்க மிஸ்டர் ஏகலைவன்? நிஷாந்துக்காகக் கூட நீங்க ஸ்டேசன் பக்கம் வந்ததில்ல… உங்க சிஸ்டரையும் லாயரையும் தான் அனுப்பி வச்சிங்க… ஆனா இப்ப நீங்களே வந்திருக்கிங்க… என்ன விசயம்? கிளாராவ மாட்டிவிட்டதுல உங்க பங்கு எதுவும் இருக்குதா?” என்று வெடுக்கென கேட்டாள் அவள்.

ஏகலைவன் பதிலளிக்காது முறுவலித்தவன் “இப்பவும் ஆட்களை அனுப்பி வேலைய முடிச்சிருக்க முடியும்… பட் நான் உங்களைப் பாக்கணும்னு வந்தேன்” என்றான்.

இதன்யா முகத்தைச் சுழித்தவள் “ஃபார் வாட்?” என்றதும்

“நான் அன்னைக்குச் சொன்னது மாதிரி இந்தக் கேஸ்ல உன்னால ஜெயிக்கவே முடியாது… என் ஆளுங்களை விடுறது நல்லது” என்றான் அமைதியாக.

இதன்யா வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தாள்.

“போன தடவை கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு… இந்த தடவை கட்டாயம் நான் கொலைகாரனைக் கண்டுபிடிப்பேன்… சார் ஏன் என்னைத் தடுக்குறதுல இவ்ளோ ஈகரா இருக்கிங்க? போன தடவை தப்பிச்சிட்டோம், இந்தத் தடவை மாட்டிப்போம்ங்கிற பயமா?” என நக்கலாகக் கேட்டவள் “கோபாலை டாக்டர் சர்டிபிகேட்டோட டிஸ்சார்ஜ் பண்ணி மாஜிஸ்திரேட் கிட்ட அழைச்சிட்டுப் போக டைம் ஆகுது… உங்க ஆர்கியூமெண்டை நீங்க அங்க வச்சுக்கோங்க” என்றபடி உள்ளே போய்விட்டாள்.

ஏகலைவன் மொபைலில் மனுவேந்தனுக்கு அழைத்து மாஜிஸ்திரேட்டைச் சந்திக்க வரும்படி கூறினான்.

கோபாலுக்கு திடீரென மூச்சிறைப்பு வர காரணம் மகேந்திரன் அவரை அடித்தது இல்லை, சிறையிலிருந்த தூசியும் தும்பும் தான் என்று மருத்துவர் அறிக்கை கொடுத்துவிட அவரும் நவநீதமும் திருநெல்வேலிக்கு இதன்யா, முரளிதரன், மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரன் என்ற நால்வரின் காவலில் அழைத்துச் செல்லப்பட்டு மாஜிஸ்திரேட் முன்னே ஆஜர் படுத்தப்பட்டார்கள்.

“இவங்களை பதினைஞ்சு நாள் விசாரிச்சே ஆகணும் சார்… ஜாமீன் குடுத்துட்டிங்கனா இவங்களை விசாரிக்க முடியாது… இவங்க ஏதாச்சும் சாக்குபோக்கு சொல்லி விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டாங்க சார்… அதுலயும் இந்த ரெண்டு பேரும் எவிடென்சை ஃபேப்ரிகேட் பண்ணி செய்யாத குற்றத்துக்கு ஒருத்தரை மாட்டிவிட்டிருக்காங்க… அதுக்குச் சாட்சியா சிலர் இருக்காங்க” என்று இதன்யாவும் முரளிதரனும் சாட்சிகளைப்  பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள்.

ஏகலவைனோ கோபாலின் உடல்நிலையையும் சோபியாவின் பாதுகாப்பையும் காரணம் காட்டி கோபால் மற்றும் நவநீதம் இருவருக்கும் ஜாமீன் வழங்கவேண்டுமென மனுவேந்தனை வைத்து அழுத்தம் கொடுத்தான்.

மாஜிஸ்திரேட் அந்த வழக்கின் தீவிரத்தன்மையை அறிந்தவர். அந்த வழக்கில் விசாரணை செய்த காரணத்துக்காக இதன்யாவின் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து அவளைக் கொலை செய்ய நடந்த முயற்சி வரை அவரது காதுக்குப் போகாத செய்திகளே இல்லை எனலாம்.

எனவே ஆழ்ந்து யோசித்து நவநீதம் மற்றும் கோபாலை ரிமாண்டில் வைத்து விசாரிக்க ஆணை பிறப்பித்து அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

கோபால் மற்றும் நவநீதம் இருவருக்கும் முகம் வெளிறிப்போனது. ஏகலைவனை இருவரும் மிரட்சியோடு பார்க்க அவனோ ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாதவனாக அங்கிருந்து மனுவேந்தனோடு கிளம்பினான்.

“மேடமும் சாரும் வண்டில ஏறுங்க… இனிமே தான் இருக்கு உண்மையான விசாரணை” என்று மகேந்திரன் முஸ்தீபோடு சொல்லிவிட்டு காவல் வாகனத்தை நோக்கி கை காட்டியதில் இருவரும் பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள்.

அவர்களை ஏற்றிக்கொண்டு காவல் வாகனம் திருநெல்வேலியிலிருந்து பொன்மலைக்குக் கிளம்பியது.

பதினைந்து நாட்கள்! இந்தப் பதினைந்து நாட்களில் நவநீதத்திடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவது வெகு சுலபம். கோபாலையும் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம்.

அடுத்து விசாரிக்க வேண்டிய நபராக பாதிரியார் பவுலைத் தீர்மானித்தாயிற்று! திட்டமிட்டபடி விசாரணையைக் கொண்டு போகவேண்டுமென முரளிதரனிடம் பேசிக்கொண்டு காவல் வாகனத்தில் பயணித்த இதன்யா பொன்மலைக்குள் நுழையும்போது தேவாலயத்தின் வாயிலில் நிஷாந்தும் பாதிரியார் பவுலும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.

நிஷாந்தோடு சேர்ந்து பேராசிரியர் தேவநாதனும், அவரது மகள் பிரகதியும் நினைவுக்கு வந்தார்கள். கூடவே ஹேக்கர் ஸ்ரீயும் தான்.

ஒரு இளம்பெண்ணின் கொலையில் ஆரம்பித்த விசாரணை எங்கெங்கோ பயணித்தாலும் திசை மாறவில்லை என்றே தோன்றியது இதன்யாவுக்கு.

அதே நேரம் பாதிரியாரிடம் பேசிவிட்டு வீட்டுக்குப்  பொடிநடையாகக் கிளம்பிய நிஷாந்தின் மொபைலுக்குப் பிரகதியிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவன் என்னவென வினவவும் “அப்பாவோட ஃப்ரெண்டுக்குச் சொந்தமா ஆலப்பில ஒரு ரிசார்ட் இருக்கு… அதை விக்கப்போறாராம்… அதனால அப்பா அந்த ரிசார்ட்டை வாங்கலாம்னு இருக்கார் நிஷாந்த்” என்றாள் அவள்.

“இதைச் சொல்லவா எனக்குக் கால் பண்ணுன?” என்று அவன் சிடுசிடுக்கவும்

“அதுக்கு இல்லடா… பணம் கொஞ்சம் ஷார்ட்டேஜ் ஆகுது” என்றாள் தயக்கத்துடன்.

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“நீ உன் மாமா கிட்ட கேட்டு…”

பிரகதி முடிக்கும் முன்னரே கொந்தளிக்க ஆரம்பித்தான் நிஷாந்த்.

“மாமா என்னை அவரோட வாரிசா அறிவிக்குற வரைக்கும் அவர் கிட்ட எதுக்கும் கை நீட்டக்கூடாதுங்கிற என்னோட நிலைப்பாடு தெரிஞ்சும் இப்பிடி கேட்டா என்ன அர்த்தம் பிரகதி? வேற ஏதாச்சும் வழில பணத்தை அரேஞ்ச் பண்ணுங்க… கடன் கூட வாங்குங்க… எனக்கு அந்தச் சொத்து மேல உரிமை வந்ததும் நானே அந்தக் கடனை அடைச்சிடுறேன்… பட் இப்ப என்னால மாமா கிட்ட ஒரு ரூபாய் கூட வாங்கித் தர முடியாது… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?”

கறாராகப் பேசிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட மறுமுனையில் பிரகதியோ ஏமாற்றத்துடன் உதட்டைப்  பிதுக்கினாள் அவளருகே அமர்ந்து இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தேவநாதனிடம்.

“இப்ப என்னம்மா செய்யலாம்?”” என அவர் குயுக்தியோடு கேட்டதும்

“நம்ம பழைய வழிய யூஸ் பண்ணுவோம்பா… இவன் கெடக்குறான் சுண்டக்கா பையன்” என்று ஏளனமாக உரைத்தவள் இகழ்ச்சியான முறுவலுடன் தனது அறைக்குச் சென்று தனது மடிக்கணினியை  ஆன் செய்தாள்.

அடுத்து அவள் நுழைந்தது இருள் இணையத்தின் ஈவிரக்கமற்ற பக்கங்களில் தான்! நாம் பார்க்கும் ‘சர்ஃபேஸ் இண்டர்நெட்’ போன்றதில்லை ‘டார்க்நெட்’. அதில் பெரும்பாலும் நடப்பவை சட்டத்துக்கும், ஒழுக்க விழுமியத்துக்கும் புறம்பான நடவடிக்கைகளே!

இருள் இணையத்தைப் பயன்படுத்தி குறுக்குவழியில் பணம் ஈட்டும் வழிமுறைகள் ஏராளம்! அதில் ஒன்றை தான் பிரகதி செய்து கொண்டிருக்கிறாள் கடந்த நான்காண்டுகளாக! அது ஒழுக்க விழுமியத்துக்கு அப்பாற்ப்பட்ட தவறில்லை என்பதால் பேராசிரியரும் மகளைக் கண்டுகொள்ளவில்லை.

இதோ அவள் முன்னே இருள் இணையத்தில் நீண்டநாட்களாக இயங்கிவரும் பிரபல வலைதளம் ஒன்று விரிந்தது. அது பாராநார்மல் செயல்பாட்டுக்கென டார்க்நெட்டில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் எத்தனையோ வலைதளங்களில் ஒன்று!

அதில் தனது பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் போட்டு லாகின் செய்தாள் பிரகதி. இனி பணம் கிடைத்துவிடுமென்ற குஷியில் நிஷாந்தை மறந்து குறிப்பிட்ட ஒரு பயனர் ஐ.டியைக் க்ளிக் செய்து அதனுடன் தனிப்பட்ட உரையாடல் நடத்தும் பகுதியில் செய்தி அனுப்பினாள்.

“ஹாய்! லாங் டைம் நோ சீ! தேவாவை மறந்துட்டிங்களா நீங்க?”

பதில் வரும் வரை காத்திருக்கப் பிடிக்காமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தாள் பிரகதி.