IIN 72

மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ கொடுத்தால் கட்டாயம் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

                       -From the website of National Institute of Mental Health

கொடைக்கானல் அரசு மருத்துவமனை…

மிச்செல், ஜென்னி மற்றும் நித்திலராஜன் மூவருக்கும் சுயநினைவு திரும்பிவிட்டது.  மூவருக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டுக் கொடைக்கானல் காவல்துறை ஆய்வாளரிடம் தனியே பேச வந்தார் கலிங்கராஜன்.

“குழந்தைங்க கிட்ட கிட்னாப்பர்ஸ் பத்தி விசாரிக்கணும் கலிங்கராஜன்” என்றவரை

“வேண்டாம் சார்… நான் கேஸை வாபஸ் வாங்கிக்குறேன்” என்று சொல்லி அதிரவைத்தார் அவர்.

“என்ன சார் சொல்லுறிங்க? இது எவ்ளோ சீரியசான கேஸ் தெரியுமா? இன்னைக்கு உங்க பசங்களைக் கடத்துனவங்க நாளைக்கு எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவாங்க… புரிஞ்சு தான் பேசுறிங்களா நீங்க?” என்று அவரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் காவல்துறை ஆய்வாளர் சுனில்.

“என் பசங்களை இந்தக் கடத்தல்காரனுங்க கண்ணுக்குப் புலப்படாத இடத்துக்கு அழைச்சிட்டுப் போயாச்சும் காப்பாத்துவேன் சார்… அவங்களோட போராட எனக்கு தெம்பு இல்ல… என் மூத்தமகளை இழந்துட்டேன்… என் பொண்டாட்டியோட துரோகத்தால நிலைகுலைஞ்சு போயிருக்கேன்… இப்ப எனக்குனு இருக்குறது என்னோட மூனு பசங்க மட்டும் தான்… அவங்களை எக்காரணத்துக்காகவும் இழக்க விரும்பல சார்… ப்ளீஸ் நான் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று பிடிவாதமாகக் கூறினார் கலிங்கராஜன்.

சுனிலுக்கு வந்ததே கோபம்!

“என்ன சார் விளையாடுறிங்களா? இன்னைக்கு மானிங்ல இருந்து சாப்பிடாம தண்ணி குடிக்காம இவ்ளோ ஏன் நேச்சர் காலை கூட அட்டெண்ட் பண்ணாம நானும் என் ஸ்டேசன் ஆளுங்களும் உங்க புள்ளைங்களைத் தேடி அலைஞ்சிருக்கோம்… நீங்களும் பொன்மலைல இருந்து வந்தப்ப கடத்துனவங்களைச் சும்மா விடக்கூடாதுனு வீரவசனம் பேசுனிங்க, மறந்து போச்சா? இப்ப என்ன திடீர்னு பல்டி அடிக்குறிங்க? எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லாம உங்க கூட கொடைக்கானலைச் சுத்தி பாத்தோம்னு நினைச்சிங்களா? இன்னைக்கு நீங்க கேஸை வாபஸ் வாங்கிடுவிங்க… நாளைக்கே அவனுங்க வேற பணக்கார வாரிசுகளை டார்கெட் பண்ணி கடத்துனா எங்க பேர் தான் டேமேஜ் ஆகும்… ப்ரஸ் மீடியா எல்லாம் முன்னாடி நடந்த கடத்தலை கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் சுனில் அலட்சியமா கையாண்டார்னு என் பேரை நாரடிப்பாங்க”

“சார் அவங்க வேற யாரையும் கடத்த மாட்டாங்க… அவங்க டார்க்கெட் என் பசங்க இல்ல… நான் தான்” என்றார் கலிங்கராஜன்.

“என்ன சார் சொல்லுறிங்க?”

காவல்துறை ஆய்வாளரிடம் குழந்தைகளைக் கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பிறகு கலிங்கராஜனின் மொபைல் எண்ணுக்கு அந்த மிரட்டல்காரனிடமிருந்து அழைப்பு வந்ததைக் கூறினார் அவர்.

கலிங்கராஜன் அச்சத்தோடு அழைப்பை ஏற்றதும் அவன் ஏகவசனத்தில் அவரைத் திட்ட ஆரம்பித்தான். கலிங்கராஜன் திகைக்கும்போதே மூன்று குழந்தைகளையும் கடத்தியது நான் தான் என்று கூறியிருக்கிறான் அவன்.

கலிங்கராஜன் அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார். ஏதோ மிரட்டுகிறார்கள் என்று கொஞ்சம் அலட்சியமாக இருந்தது தவறோ? அந்தத் தவறுக்குத் தண்டனை தான் இன்று தன் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு வந்த அச்சுறுத்தல் போல. இச்சம்பவத்தால் கலிங்கராஜன் கதி கலங்கி போனார்.

“இதன்யா சொன்னதைக் கேட்டு கேசை ரீ-ஓப்பன் பண்ண ஹைகோர்ட் வரைக்கும் போனது எவ்ளோ பெரிய தப்புனு இப்ப உனக்குத் தெரிஞ்சிருக்கும்…. இது வெறும் சாம்பிள் தான்… இன்னொரு தடவை அவளோட விசாரணைக்கு நீயோ உன் குழந்தைங்களோ ஒத்துக்கிட்டிங்கனா கசாப்பு கடைல ஆடு வெட்டுற மாதிரி உன் கண்ணு முன்னாடி ஒவ்வொருத்தரையும் கொல்லுவேன்… ஜாக்கிரதை… ஒழுங்கா கேஸை வாபஸ் வாங்கிட்டு ஊர் போய் சேரு”

இதன்யாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகச் சொல்லிக்கொண்டு அவளுக்கு உதவினோம் என்றால் இந்த விபரீதம் நடந்துவிடுமென பயந்தார் கலிங்கராஜன்.

“உங்க நிலமை எனக்குப் புரியுது சார்… ஆனா உங்களோட பயம் அவங்களை இன்னும் தைரியமா தப்பு செய்யத் தூண்டும்ங்கிறதை மறந்துடாதிங்க… அது எப்பிடி சார் குழந்தைங்களைக் கடத்துனவன் பேச்சை நம்பி எதையும் செய்யத் தயாரா இருக்கிங்க… ஆனா உங்க குழந்தைங்களைத் தேடிக் கண்டுபிடிச்ச எங்க பேச்சைக் கேக்கமாட்டேன்னு அடம்பிடிக்குறிங்க” என சுனில் அதிருப்தியோடு பேசவும் கையெடுத்துக் கும்பிட்டார் கலிங்கராஜன்.

“என் நிலைமைய புரிஞ்சிக்கோங்க சார்”

காவல்துறை ஆய்வாளர் சுனில் வேறு வழியின்றி கலிங்கராஜனின் புகாரை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டபோது கான்ஸ்டபிள் ஒருவர் அவசரச்செய்தியோடு ஓடோடி வந்தார்.

“சார் கோக்கர்ஸ் வாக் பக்கத்துல கிடைச்ச சி.சி.டி.வி ஃபூட்டேஜை வச்சு குழந்தைங்களை அழைச்சிட்டு வந்தவனுங்க ரெண்டு பேரை அங்க இருந்த பாப்கார்ன் கடைக்காரர் ஒருத்தர் அடையாளம் காட்டுனார்… அவங்க கார் நம்பரும் வீடியோல ரெக்கார்ட் ஆகிருக்கு”

சுனில் இப்போது என்ன சொல்கிறீர்கள் என்பது போல கலிங்கராஜனைப் பார்த்தார். அவரோ திகைத்துப் போய் நின்றார்.

“இங்க பாருங்க சார்… எடுத்தேன் கவிழ்த்தேன்னு நீங்க இந்தக் கேஸை வாபஸ் வாங்கிட்டு உங்க பசங்களோட கண்காணாத இடத்துக்குப் போயிடுவிங்கனு வச்சுக்கலாம்… அங்க மட்டும் இவனுங்க வரமாட்டானுங்களா? உங்க கம்ப்ளைண்ட் தான் இவனுங்களை நாங்க பிடிக்குறதுக்குக் காரணமா இருக்கப் போற கருவி… அதை எங்க கையில குடுத்திங்கனா உங்க குழந்தைங்க உயிருக்கு இருக்குற ஆபத்தை நிரந்தரமா அழிச்சிடலாம்… என்ன சொல்லுறிங்க?”

கலிங்கராஜனும் சில நொடிகள் நிதானித்தார். ஏன் தற்காலிகத்தீர்வை நோக்கி ஓடவேண்டும்? கொஞ்சம் பொறுமையாகத் தான் இருந்து பார்ப்போமே என்று தீர்மானித்தவராக “நான் கேஸை வாபஸ் வாங்கல சார்… அதே நேரம் அந்த கிட்னாப்பர்சை நீங்க அரெஸ்ட் பண்ணுற வரைக்கும் நான் பொன்மலைக்குப் போக விரும்பல… அங்க போனா இதன்யா மேடமை பாக்கணும்னு பசங்க அடம்பிடிப்பாங்க… அவங்களை என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது… அவங்களுக்கு என்னாகுமோ ஏதாகுமோனு பயந்துக்கிட்டே வேற இருக்கணும்” என்றார் சுனிலிடம்.

“நாளைக்கு ஈவ்னிங்குள்ள அவங்களை நாங்க பிடிச்சிடுவோம்” என்றவர் கலிங்கராஜனுக்குத் தைரியம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

கிளம்பும் முன்னர் கலிங்கராஜனின் ரிசார்ட்டிற்கு இரவுநேர பாதுகாப்புக்காக இரு கான்ஸ்டபிள்கள் செல்லும்படி ஆணையிட்டு விட்டு தான் சென்றார்.

காவல் நிலையத்துக்குச் செல்லும் வழியில் பொன்மலை காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் அவர்.

புகாரை வாபஸ் வாங்காமல் கலிங்கராஜனைத் தடுத்துவிட்டதாக மார்த்தாண்டனிடம் கூறியவர் சி.சி.டிவி பதிவுகள் கிடைத்த விவரத்தையும் தெரிவித்தார்.

“அதை வச்சு கிட்னாப்பர்சை தேடுற முயற்சில இறங்கிருக்கோம்… இன்னைக்கு சிவராத்திரி தான்” என்றார் இலகுவாக.

மறுமுனையில் மார்த்தாண்டனும் அதையே கூற இருவரும் சிரித்தார்கள்.

“கலிங்கராஜனை மிரட்டுன ஆளுங்களோட மொபைல் நம்பரை சைபர் க்ரைம்ல குடுத்து டீடெய்ல்ஸ் கேட்டிருக்கோம்… இன்ஃபேக்ட் அவர் ஏன் இதன்யா மேடம் கிட்ட ஹார்ஷா பேசுனார்னு தெரிஞ்ச டெலிகாம் கம்பெனிய கான்டாக்ட் பண்ணலாம்னு கூட இருந்தோம்… பை காட்ஸ் க்ரேஸ் நீங்களே அவங்க என்ன பேசினாங்கனு சொல்லிட்டிங்க… சோ இத்தனை நாள் கலிங்கராஜனை மிரட்டுன ஆளுங்க தான் பசங்களைக் கடத்தவும் செஞ்சிருக்காங்க… அதுவும் இதன்யா மேடம் சொன்னதால அவர் கேஸை ரீ-ஓப்பன் பண்ண பெட்டிசன் போட்டதுக்கு வார்ன் பண்ணுற விதமா… எனி ஹவ், தேங்க்யூ சோ மச் ஃபார் கிவிங் மீ த டீடெய்ல்ஸ் சார்… சைபர் க்ரைம்ல இருந்து அவங்களோட லொகேசன் ட்ராக் பண்ணுன தகவல் வந்துச்சுனா ஐ வில் ஷேர்”

“ஓ.கே மார்த்தாண்டன்”

சுனிலிடம் பேசி முடித்த பிறகு இதன்யாவிடம் அவர் சொன்ன விவரம் அனைத்தையும் கூறினார் மார்த்தாண்டன்.

“சோ இனியாவோட கேஸ் ரீ-ஓப்பன் ஆனது அந்த மிரட்டல்காரன் அலையஸ் கிட்னாப்பருக்குப் பிடிக்கல… அவனுக்கும் இனியாவை கொலை பண்ணுன கில்லருக்கும் சம்பந்தம் இருக்கும்னு தோணுது” என்றாள் அவள்.

பின்னர் மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவள் “ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணி வச்சோம்… அவங்களை இண்ட்ராகேட் பண்ணல… நான் அந்த வேலைய பாக்கப் போறேன்” என்று விசாரணை அறையை நோக்கி விரைந்தாள்.

உள்ளே வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த நவநீதம் இதன்யாவைக் கண்டதும் பதற்றமடைந்தாள்.

அவள் வேகமாக எழுந்து நிற்கவும் உட்காரும்படி கைகாட்டிவிட்டு அவளுக்கு எதிர்ப்புற இருக்கையில் அமர்ந்தாள் இதன்யா.

“சோ விசாரணைக்குப் போகலாமா?” என்று கைகளைச் சொடுக்கியவள் “எதுக்காக கிளாராவோட சீக்ரேட் ட்ராயர்ல இனியாவோட ரத்தக்கறை படிஞ்ச சால்வைய வச்ச?” என்று கேட்க நவநீதமோ திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தாள்.

தான் செய்ததை யாருமே கவனித்திருக்கமாட்டார்கள் என்ற அலட்சியத்தில் தான் மக்கள் மாபெரும் தவறுகளை சின்ன உறுத்தல் கூட இல்லாமல் செய்துவிட்டுத் தைரியமாக நடமாடுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிற்பாடு தான் தனது செயல்கள் அறிவீனத்தின் உச்சம் என்பதைப் புரிந்துகொண்டு நொந்து போகிறார்கள். அவர்களின் பிரதிநிதியாகவே நவநீதத்தை இதன்யா பார்த்தாள்.

“நான் வேணும்னு தான் செஞ்சேன் மேடம்” என்றாள் அவள்.

“ஏன்? எதுவும் காரணம்?” இதன்யா வீடியோ பதிவை ஆன் செய்துவிட்டுக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.

“உங்களுக்கே தெரியும், எனக்கு கிளாராம்மா மேல என்ன கோபம்னு..” என்றவளை

“அது பழைய கதை… அதுல எத்தனை சதவிகிதம் பொய் கலந்திருக்குனு இனிமே தான் தெரியும்.. இப்ப நான் கேட்ட கேள்விய நீ சரியா புரிஞ்சிக்கலனு தோணுது… செய்யாத கொலைக்காக கிளாராவை ஏன் மாட்டிவிட்ட? உன்னை அந்தச் சால்வையை கிளாரா ரூம்ல வைக்கச் சொன்னது யாரு? யாரோ ஒருத்தர் உனக்கு, கோபாலுக்கு எல்லாம் கமாண்டிங் பொசிசன்ல இருக்காங்க… அந்த ஒருத்தர் யாரு?” என்று இடைமறித்து கேள்விகளைத் தொடுத்தாள் இதன்யா.

நவநீதத்துக்குச் சடுதியில் வியர்வை உற்பத்தியானது. அணிந்திருந்த காட்டன் புடவையைத் திருகி திருகி கொலை செய்துகொண்டிருந்தவள் இதன்யா பதிலைப் பெறாமல் விடப்போவதில்லை என்பது புரிந்ததும் வாயைத் திறந்தாள்.

“எனக்கு கிளாராம்மா மேல நிறைய வருத்தம் உண்டு மேடம்… கலிங்கராஜன் ஐயா மாதிரி எல்லா வேலைக்காரங்களையும் அவங்க சமமா நடத்துனதில்ல… குமாரிக்கு மட்டும் எப்பவும் முன்னுரிமை குடுப்பாங்க… அவ சொல்லுறதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு என்னையும் ஜானையும் நிறைய தடவை அவமானப்படுத்திருக்காங்க… அதுல ஒன்னு தான் எங்க மேல குமாரி திருட்டுப்பழி போட்டப்ப அவங்களும் ஒத்து ஊதுனது… நானும் மனுசியும் தானே? எனக்குக் கோவம் வரும் தானே? அவங்களைப் பழி தீர்க்க வாய்ப்பு கிடைக்குமானு நானும் ஜானும் காத்திருந்தோம்…. அவங்க ஏகலைவன் சாரை வளைச்சுப் போட நினைச்சதை எங்களுக்குச் சாதகமா பயன்படுத்தி அவங்களையும் எங்களை மாதிரி சாத்தான் குரூப்புக்குள்ள கொண்டு வந்தோம்… ஆனா அதுல இருந்து அவங்க பாதில நழுவிட்டாங்க… அது எனக்கும் ஜானுக்கும் பெரிய ஏமாற்றத்தைக் குடுத்துச்சு… எனக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கணும்னு காத்திருந்தேன்…. அதை எனக்கு நான் நம்புன சாத்தானே குடுத்தார்” என்றாள் அவள்.

மீண்டும் சாத்தானா? சில நாவல்களில் வருவது போல கன்னம் கன்னமாக அவளை அறைந்துவிடுமளவுக்கு இதன்யாவுக்கு வெறியேறியது.. ஒன்று சாத்தான் பெயரைச் சொல்லி யாரோ ஒருவன் இவர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கி தனது காரியத்தைச் சாதித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் சாத்தான் மீது பழியைத் தூக்கிப்போட்டு இவர்கள் தன்னை முட்டாளாக்க நினைத்திருக்க வேண்டும்.

இரண்டில் எந்த ஏற்பாட்டிலுமே இதன்யாவுக்குப் பிடித்தமில்லை. அறிவியலின் அளப்பரிய வளர்ச்சியால் இறைவனையே கேள்விக்குள்ளாக்கும் உலகத்தில் சாத்தான் செய்யாத கொலைக்கான பழியை ஒருத்தி மீது போடச்சொன்னார் என்று சொல்கிறாள் இவள்!

எரிச்சல் மேலிட “அந்தச் சாத்தான் தான் ஃபாதர் பவுல் கிட்ட இருந்து சால்வைய வாங்கிட்டு வரச் சொன்னாரா?” என்று கேட்க அதற்கும் ஆமென தலையாட்டி இதன்யாவின் கோபத்தை பன்மடங்காக்கினாள் அவள்.

“சாத்தான் எங்க வச்சு சொன்னார்? உன் கனவுல வந்தாரா?” என்று நக்கலாக வினவினாள் இதன்யா.

“நாங்க சாத்தான் குரூப் வழிபாட்டுக்குப் போவோம்ல… அங்க வச்சு சொல்லுவார்” என்றாள் நவநீதம்.

“சோ உங்க சாத்தானைப் பத்தி ஃபாதருக்கும் தெரியும்”

இம்முறை நவநீதம் திடுக்கிட்டாள்.  வாய் விட்டு உளறினோமே என்று அவள் பயத்தில் எச்சிலை விழுங்க இதன்யா வெற்றிப்புன்னகை பூத்தாள்.