IIN 71

முந்தைய தலைமுறை ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் நியூரோலெப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் டார்ட்ரைவ் டிஸ்கின்சியா என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத குறைபாடு உண்டாகும். இது சில சமயங்களில் தீவிரமடையவும் வாய்ப்புண்டு. டார்ட்ரைவ் டிஸ்கின்சியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மருத்துவர்களிடம் சோதிப்பது அவசியம். இரண்டாம் தலைமுறை சைக்காட்டிக்ஸ் மருந்துகள் பழைய தலைமுறை மருந்துகளை விட எல்லா விதத்திலும் சிறந்தவை. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் விகிதாச்சாரமும் குறைவு. பைபோலார் குறைபாடு அல்லது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆன்டி டிப்ரசண்டுகளால் இயலாத சூழலில் இவை  பயன்படுத்தப்படுகின்றன. இதை நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது மனநல மருத்துவர்கள் அவர்களது எடை, இரத்த சர்க்கரை அளவு மற்றும் லிபிட் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

                       -From the website of National Institute of Mental Health

குழந்தைகளைத் தேடும் வேலை கொடைக்கானலில் ஆரம்பித்திருக்க கலிங்கராஜன் காரிலேயே பொன்மலையிலிருந்து கொடைக்கானலுக்குப் போய்விட்டார். குழந்தைகளைத் தேடும் பணியில் முன்னேற்றம் இருந்தால் தங்களுக்குத் தெரிவிக்கும்படி மார்த்தாண்டன் கொடைக்கானல் காவல்நிலைய ஆய்வாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

“கண்டிப்பா சார்… இப்ப தான் டூரிஸ்ட் அதிகமா வர்ற இடங்கள், சம்மர் கேம்ப் நடந்த இடங்களைச் சுத்தி தேட ஆரம்பிச்சிருக்கோம்… சந்தேகப்படுற மாதிரி எதாச்சும் வண்டி சிக்குச்சுனா சோதனை போடச் சொல்லிருக்கேன்.. ஈவ்னிங்குள்ள பசங்களை கண்டுபிடிச்சிருவோம் சார்” என்று நம்பிக்கையளிக்கும் விதமாகத்  தான் அவரும் பேசினார்.

இதன்யா யோசனையில் ஆழ்ந்துவிடவும் மார்த்தாண்டன் அவளைத் துரிதப்படுத்தும் வேலையைச் செய்தார்.

“குழந்தைங்களை கடத்துனதே உங்களை வேலை செய்யவிடாம முடக்குறதுக்குத் தானோனு சந்தேகமா இருக்கு மேடம்… நீங்க இப்பிடி உக்காந்தா அந்தக் கொலைகாரன் நம்மளோட  நெக்ஸ்ட் மூவ் ஒவ்வொன்னையும் இதே வழில தடுப்பான்… நம்ம இந்தத் தடவையும் திசை திருப்பப் படுவோம் மேடம்… ப்ளீஸ், நம்ம இன்னைக்குச் செய்யணும்னு நினைச்ச வேலைய செஞ்சிடுவோம்… இதுக்கு மேல நம்ம டிலே பண்ண முடியாது மேடம்”

இதன்யாவின் மனதின் ஒரு ஓரம் மூன்று குழந்தைகளின் முகங்களே மாறி மாறி திரைப்படம் போல வந்து கொண்டிருந்தன.

மார்த்தாண்டன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால் நவநீதத்தையும் கோபாலையும் கைது செய்வதற்காக கான்ஸ்டபிள்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள் இதன்யா.

“குழந்தைங்க கிடைக்குற வரைக்கும் என்னால எதையும் யோசிக்க முடியாது” என்று சொல்லிவிட்டாள்.

மார்த்தாண்டனும் வேறு வழியின்றி மகேந்திரனோடு இரு கான்ஸ்டபிள்களையும் ஒரு பெண் காவலரையும் அனுப்பி வைத்தார்.

முரளிதரனோ விசாரணைக்குழுவுக்கான அலுவலக அறையில் அமர்ந்து இதன்யா இதுவரை சொன்ன தகவல்களை வைத்து சந்தேகப்பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருந்தார்.

இம்முறை விசாரிக்க வேண்டிய நபர்களின் பட்டியலில் முத்துவும் ஜானும் இடம்பெற்றிருந்தனர். அதைவிட முக்கியமாக ஜானின் மகள் சோபியாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஜானுக்கும் கலிங்கராஜனுக்கும் இடையே ஏதோ இரகசியம் உள்ளதாக முரளிதரனுக்குத் தோன்றியது. அந்த இரகசியத்தை சோபியா அறிந்திருப்பாள் என்ற நம்பிக்கை!

அதை விட முக்கியமாக பாதிரியார் பவுலும் ராக்கியும் இன்னும் கூட இனியாவின் மரணத்திலுள்ள சில இரகசியங்களை மறைக்கிறார்கள் என்றே தோன்றியது. காரணம் நவநீதம் கிளாராவின் படுக்கைக்குக் கீழே மறைத்து வைத்த சால்வையை பாதிரியார் வீட்டிலிருந்து வரும்போது கொண்டு வந்ததாக ஊழியர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்திருந்தாரே!

நிஷாந்தும் சந்தேகப்பட்டியலில் இருந்தான். இனியாவைக் காதலித்ததாகச் சொன்னவன் இன்னொரு பெண்ணை நீண்டநாட்கள் காதலித்ததாக உளறியதை இதன்யாவே தனது காதால் கேட்டிருக்கிறாள்! கூடவே முரளிதரன் பேராசிரியர் தேவநாதன் வீட்டைக் கண்காணித்த போது கான்ஸ்டபிள் எடுத்த வீடியோவில் அவனும் பிரகதியும் நெருக்கமாக இருந்த காட்சியை அவரும் பார்த்திருந்தார்.

இப்படி பழைய ஆட்களே சந்தேகப்பட்டியலில் இடம்பெற்றிருக்க அதில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டிய ஆளாக ஏகலைவனை இணைக்கச் சொல்லியிருந்தாள் இதன்யா.

காரணம் என்னவென அவளுக்கும் மார்த்தாண்டனுக்கும் மட்டுமே தெரியும். அவனைக் கண்காணிக்க ஒரு கான்ஸ்டபிளை மஃப்டியில் உலாவ விட்டிருக்கிறார்கள். அவனைப் பற்றி சாவித்திரியிடம் தன்மையாக விசாரிக்கும் முடிவுக்கு வந்திருந்தாள் இதன்யா.

ஒருவழியாகச் சந்தேகப்பட்டியலும், விசாரிக்க வேண்டிய நபர்களின் பட்டியலும் தயாரானது.

அதே நேரம் ஏகலைவனின் வீட்டுக்குள் புகுந்த மகேந்திரன் நவநீதத்தையும் கோபாலையும் கைது செய்யயுமாறு கான்ஸ்டபிள்களுக்கு உத்தரவிட அவர்களும் தங்கள் கடமையை ஆற்ற விரைந்தார்கள்.

கோபாலின் கையில் விலங்கை மாட்டிய தருணத்தில் ஏகலைவனின் குரல் அங்கே ஒலித்தது.

“என் வீட்டுக்கே வந்து என்னோட ஸ்டாஃப்சை அரெஸ்ட் பண்ண உங்களுக்கு யாரு அதிகாரம் குடுத்தது?” என்று கேட்டபடி கோபத்தோடு வந்தான் அவன்.

நவநீதம் காரிடாரில் ஒளிந்து நிற்பதைப்  பார்த்த பெண் கான்ஸ்டபிள் அவளைக் கைது செய்ய எத்தனிக்க கை நீட்டி தடுத்தான் அவன்.

“என் பெர்மிசன் இல்லாம இவங்க ரெண்டு பேரையும் நீங்க அரெஸ்ட் பண்ண முடியாது” என்றான் ஏகலைவன் பிடிவாதமாக.

மகேந்திரனுக்கோ எரிச்சல் மண்டியது. இதன்யாவைக் கொலை செய்ய முயன்றவனிடம் மரியாதையாக நடந்துகொள்ள அவருக்குமே விருப்பமில்லை. ஆனால் செய்கிற வேலை மரியாதையானது ஆயிற்றே! அதற்கான நாகரிகத்தை அவர் கடைபிடித்து ஆகவேண்டிய கட்டாயம்!

“இங்க பாருங்க சார்! ஆதாரம் இல்லாம நாங்க அரெஸ்ட் பண்ண வரல… இந்தக் கேஸ்ல நாங்க சந்தேகப்படுற யாரை வேணாலும் அரெஸ்ட் வாரண்ட் இல்லாம ஸ்டேசனுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு கோர்ட்டே சொல்லிடுச்சு… ரெண்டு அக்யூஸ்டுக்குச் சப்போர்ட் பண்ணி உங்க மரியாதைய இழந்துடாதிங்க… எங்க கடமைய செய்ய விடுங்க.. உங்க ஸ்டாஃப்ஸ் மேல ஓவர் அன்பு இருந்துச்சுனா லாயர் வச்சு கோர்ட்ல மூவ் பண்ணுங்க… ப்ளீஸ் மூவ் அ லிட்டில்”

ஏகலைவன் புகைச்சலாக வழிவிடவும் மகேந்திரனுடன் வந்தவர்கள் கோபாலையும் நவநீதத்தையும் கைது செய்தார்கள்.

“சார் எனக்கு எதுவும் தெரியாது… ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க… புள்ளைக்குட்டிக்காரன் சார் நானு” என்று கோபால் கதற கதற அவரை இழுத்துச் சென்றார்கள் கான்ஸ்டபிள்கள்.

அதே நேரம் காரிடாரில் ஒளிந்திருந்த நவநீதம் அங்கிருந்து ஓட முயல பெண் கான்ஸ்டபிள் அவளைச் சுற்றி வளைத்துப் பிடித்தார்.

“எனக்கே தண்ணி காட்ட பாக்குறியா நீ?” என்று கடுமையாக திட்டியபடி அவளது கரத்தில் விலங்கை மாட்டினார் அவர்.

“என்னை விடுங்க… நான் எந்தத் தப்பும் பண்ணல… நான் சாத்தானோட கட்டளைய நிறைவேத்துனேன்… அதுக்கு ஏன் என்னை அரெஸ்ட் பண்ணுறிங்க? உங்க யாரையும் சாத்தான் சும்மா விடமாட்டாரு… நீங்க எல்லாரும் அழிஞ்சு மண்ணோட மண்ணா போயிடுவிங்க” என்று சித்தம் கலங்கியவளைப் போல அலறியவளை அடக்கியபடி அழைத்துச் சென்றார் கான்ஸ்டபிள்.

ஏகலைவன் கையாலாகாத்தனத்துடன் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மகேந்திரன் அவனிடம் ஏளன முறுவலை வீசிவிட்டுக் காவல் வாகனத்தை நோக்கி சென்றார்.

காவல் வாகனம் தனது வீட்டிலிருந்து கிளம்பும் வரை காத்திருந்த ஏகலைவன் விறுவிறுவென பங்களாவுக்குள் சென்றான். அவன் செய்த அடுத்த காரியம் மனுவேந்தனைத் தொடர்பு கொண்டதே!

“ஸ்ரீ கேஸை கவனிக்க வேண்டாமா சார்?” என்றவரிடம்

“அந்த ஸ்ரீயும் மேனேஜரும் எக்கேடு கெட்டா எனக்கு என்ன? இப்ப என்னோட ஸ்டாப்ஸ் ரெண்டு பேரை போலீஸ் இனியா மர்டர் கேசுக்காக அரெஸ்ட் பண்ணிட்டாங்க… நீங்க என்ன செய்விங்களோ எனக்குத் தெரியாது, அவங்களை ஜாமீன்ல எடுத்தே ஆகணும்” என்று கட்டளையிட்டான் ஏகலைவன்.

“ஆப்டர் ஆல் வேலைக்காரங்களுக்காக ஏன் சார் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க?” என்றார் மனுவேந்தன்.

“இசிட்? நீங்களும் எனக்காக வேலை பாக்குற ஒரு ஸ்டாஃப் தான்ங்கிறதை மறந்துட்டிங்க போல… கலிங்கராஜனோட ஸ்டாஃப்ஸா இருந்தப்ப நிம்மதியா இருந்தோம், இந்த ஆளு வீட்டுக்கு வந்ததும் நம்ம நிம்மதி போச்சுனு அவங்க நினைச்சுடக் கூடாது… அட் எனி காஸ்ட் அவங்களை நான் இந்தக் கேஸ்ல இருந்து காப்பாத்தியே ஆகணும்” என்றான் அவன் ஆவேசமாக.

மனுவேந்தனின் குரல் கொஞ்சம் தணிந்தது.

ஏன் இந்த மனிதர் வேலைக்காரர்களுக்காக இந்தளவுக்குப் பரபரப்பு அடைகிறார் என்று யோசித்தபடியே “சரி சார்… நான் ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுறேன்”  என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார் அவர்.

ஏகலைவனின் பங்களாவிலிருந்து பொன்மலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள் கோபாலும் நவநீதமும். இருவரையும் விசாரணை அறைகளுக்குள் தனித்தனியே அடைத்து வைக்கும்படி கட்டளையிட்டார் மார்த்தாண்டன்.

இன்னும் நவநீதத்தின் அலறல் ஓயவில்லை. அவள் விடாமல் சபித்துக்கொண்டே இருந்தாள்.

இதன்யா ஏற்கெனவே கலிங்கராஜனின் பிள்ளைகள் காணாமல் போன செய்தியைக் கேட்டு அமைதியிழந்து போயிருந்தவள் நவநீதத்தின் காட்டுத்தனமான அலறல் உண்டாக்கிய எரிச்சலுணர்வைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போனாள்.

நேரே விசாரணை அறைக்குள் புயலாக நுழைந்தவளைக் கண்டதும் நவநீதத்தின் அலறல் சுவிட்ச் போட்டாற்போல நின்றது. இதன்யாவின் வதனத்திலிருந்த கோபம் அவளது நாவை மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள செய்தது என்றால் அது மிகையில்லை.

“என்ன உன் அலறல் இந்த ஊர் மலையில பட்டு எதிரொலிக்குது? மேடம்கு என்ன வேணும்?” என்று கோபத்தோடு அவள் கேட்டதும் எச்சிலை விழுங்கியவள்

“அதில்லங்க மேடம்… நான்..” என்று தடுமாறத் துவங்கினாள்.

இதன்யா போதும் என்பது போல கையை உயர்த்தியவள் “நீ யாரு, என்னென்ன வேலையெல்லாம் பாத்திருக்கனு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் உன்னை அரெஸ்ட் பண்ணிருக்கோம்.. ஒழுங்கா கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லி, செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டனா உனக்கு நல்லது… இல்லனா நான் உன் வாயில இருந்து உண்மைய வர வைப்பேன்… இன்னொரு தடவை உன் குரல் உயர்ந்துச்சுனா நடக்குறதே வேற… இன்னும் கொஞ்ச நேரத்துல நான் விசாரணை பண்ண வருவேன்… அதுவரைக்கும் கப்சிப்னு இந்த ரூமுக்குள்ள இருக்கணும்” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

நவநீதம் பயத்தில் உறைந்து போய்விட்டாள். அவள் மனக்கண்ணில் தான் செய்த தவறுகள் எல்லாம் படமாக ஓட ஆரம்பித்தன.

இனி எப்படி தப்பிப்பாள்? யாரை நம்பி யாருக்காக இதெல்லாம் செய்தாளோ அந்நபர் வந்து அவளைக் காப்பாரா? அவர் வரவில்லை என்றால் உதவுவதற்கு என ஒருவர் கூட இல்லாதவள் அவள். மனம் நொந்து போய் அவள் விசாரணை அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.

அவளோடு கைது செய்யப்பட்ட கோபாலின் நிலையும் அதுவே. பதினொன்றும், ஒன்பதுமாக இரு ஆண்பிள்ளைகளின் தகப்பன் அவர். பணத்திற்காக புத்தி பிசகி கிளாராவை இக்கட்டில் மாட்டிவிட்டார். யாரும் தன்னைக் கண்டறியப்போவதில்லை என்ற தெனாவட்டு. அவரது நல்ல நேரம் கைதான பிறகு கிளாரா தனக்கு இருக்கும் பிரச்சனையைச் சொல்ல முடியாதளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனாள். கூடவே அவள் ஏகலைவனோடு திருமணம் தாண்டிய உறவில் இணைவதற்காக செய்த செயல்கள் எல்லாம் ஊடகங்களில் பேசுபொருளாகுமே என்ற அவமான உணர்வு அவளை அமைதியாக்கியிருந்தது.

ஆனால் உண்மை எப்போதும் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லையே! என்றாவது ஒருநாள் அது விழிக்கையில் பொய்யினால் கட்டப்பட்ட கோட்டை தவிடுபொடியாகியே தீரும்.!

அது தான் இப்போது நடந்திருக்கிறது. கோபால் இட்டுக்கட்டிய கதைக்கு நவநீதத்தின் செயல் இன்னும் உரம் போட்டதால் உண்டான மாபெரும் விளைவை இத்தனை நாட்கள் உறங்கிக்கொண்டிருந்த உண்மை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

அன்று மாலை வரை இதன்யா அவர்கள் இருவரையும் விசாரிக்க வரவில்லை. கொடைக்கானலில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டார்கள் என்ற செய்தி வரும் வரை அவளுக்குள் இருக்கும் பதபதைப்பு அடங்காது.

அவளும் காத்திருந்தாள். அன்று மாலை ஐந்து மணிக்கு கொடைக்கானலில் இருந்து செய்தி வந்தது. குழந்தைகள் மூவரும் கோக்கர்ஸ் வாக் பகுதியில் மயங்கிய நிலையில் கண்டறியப்பட்டார்கள் என்று.

இதன்யாவுக்கு அப்போது தான் நிம்மதி பிறந்தது.

“யார் அவங்களைக் கிட்னாப் பண்ணுனதுனு தெரிஞ்சுதா? குழந்தைங்க இப்ப எங்க இருக்காங்க?” என்று விசாரித்தாள் அவள்.

“அவங்க மூனு பேரையும் ஜி.ஹெச்சுக்கு கலிங்கராஜன் துணையோட சப் இன்ஸ்பெக்டர் அழைச்சிட்டுப் போயிருக்கார் மேடம்… மயக்கம் தெளிஞ்சதும் தான் குழந்தைங்க கிட்ட விசாரிக்கணும்… பை த வே, அவங்களை எக்சாமைன் பண்ணுன டாக்டர் உடம்புல எந்தக் காயமும் இல்லனு உறுதியா சொல்லிட்டாங்க” என்றார் கொடைக்கானல் காவல்துறை ஆய்வாளர்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க விசாரிச்சிட்டு அப்புறமா டீடெய்ல்சை ஃபேக்ஸ்ல அனுப்பிடுங்க… இது, இனியா மர்டர் கேஸை ரீ-ஓப்பன் பண்ணி விசாரிக்குறது பிடிக்காம யாரோ செஞ்ச விசம வேலைனு தோணுது… உங்களோட ரிப்போர்ட் வந்துச்சுனா கிட்னாப்பர்சுக்கும் இனியா கேஸ்ல எங்களுக்கு ஆட்டம் காட்டுற கில்லருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குதானு செக் பண்ண எங்களுக்கு ஈசியா இருக்கும்”

“கண்டிப்பா மேடம்… நாங்க அங்க இருந்தவங்க கிட்ட யார் குழந்தைங்களை அங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனாங்கனு விசாரிக்க ஆரம்பிச்சிருக்கோம்… அங்க உள்ள சி.சி.டி,வி ரெக்கார்டை வச்சு கிட்னாப்பர்ஸை கண்டுபிடிச்சுடுவோம்”

“ஓ.கே சார்… கேரி ஆன் யுவர் என்கொயரி”

அழைப்பைத் துண்டித்தாள் இதன்யா. குழந்தைகள் கிடைத்த சந்தோசத்திலிருப்பார் என்று எண்ணி கலிங்கராஜனின் மொபைல் எண்ணுக்கு அழைத்தாள் அவள்.

ஆனால் அவரோ எடுத்ததும் என்னையும் என் குழந்தைகளையும் நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று கெஞ்சவும் குழம்பிப்போனாள்.

“என்ன சார் இப்பிடி பேசுறிங்க?”

“நீங்க ஆசைப்பட்டப்படி இனியா மர்டர் கேஸை ரீ-ஓப்பன் பண்ணியாச்சு.. இதோட என்னை விட்டுருங்க… ஒருத்திய பறிகுடுத்துட்டு மனம் நொந்து போனவன் நான்… மிச்சம் இருக்குறவங்களைக் காப்பாத்துற கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கு…. செத்துப்போனவளுக்காக உயிரோட இருக்குறவங்களோட பாதுகாப்புல என்னால அலட்சியமா இருக்கமுடியாது… ப்ளீஸ் மேடம்… உங்க விசாரணை எல்லாம் கிளாராவோட நிறுத்திக்கோங்க… இதுக்கு மேல அந்த ஆளோட மிரட்டலுக்குப் பயந்துட்டே என்னால வாழமுடியாது… நான் என் பசங்களோட ஃபாரீன்ல செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்… உங்க சங்காத்தமே வேண்டாம் மேடம்”

கோபத்தோடு அழைப்பைத்  துண்டித்தார் கலிங்கராஜன்.

காலையில் அவ்வளவு தூரம் கதறி மிரட்டியவனின் மொபைல் எண் வரை கொடுத்தவர் இப்போது இப்படி பேசுகிறார் என்றால் அந்த மிரட்டல் விடுத்த நபர் மீண்டும் அவரை மிரட்டியிருக்கிறான் என்று தானே அர்த்தம்! இனி கலிங்கராஜனிடம் இருந்து எந்தத் தகவலும் பெறமுடியாது. ஆனால் அவரது எண்ணுக்கு அந்த மிரட்டல்காரன் அழைத்திருப்பானே! அவன் என்ன பேசியிருப்பான் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியை நாடுவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதன்யா உடனே மகேந்திரனை அழைத்தாள்.

“நான் மானிங் குடுத்த நம்பரை சைபர் க்ரைம்ல குடுத்து டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண சொன்னிங்களா? எப்ப அவங்க ரிப்போர்ட் அனுப்புவாங்க?”

“இன்னைக்கு நைட் எட்டு மணிக்குள்ள எல்லா டீடெய்ல்சையும் மெயில் பண்ணுறதா சொல்லிருக்காங்க மேடம்”

சைபர் காவல் நிலையத்திலிருந்து வரும் தகவலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் இதன்யா.