IIN 70

ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் சைக்கோஸிஸ் நோய்க்கு கொடுக்கப்படுகின்றன. சைக்கோஸிஸ் என்பது உண்மையான நிகழ்வுகளுடன் இருக்கும் தொடர்பை இழந்து ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்தும் வியாதி ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிக்கடி மாயை மற்றும் பிரமையால் ஆட்கொள்ளப்படுவார்கள். அளவுக்கதிகமான போதைமருந்து உபயோகத்தாலும், ஸ்கிசோஃப்ரீனியா, பைபோலார் குறைபாடு மற்றும் அதீதமான மன அழுத்தத்தால் இந்த சைக்கோஸிஸ் நோய்க்கு ஆளாகிறார்கள். மனநல மருத்துவர்கள் இந்நோயாளிகளுக்கு ஆன்டி சைக்காடிக்ஸ்களோடு சேர்த்து இன்னும் சில மருந்துகளையும் கொடுத்து மயக்கம் மற்றும் மனச்சோர்வுக்கு இவர்கள் ஆட்படுவதைக் குறைக்க முயலுவார்கள்.

                       -From the website of National Institute of Mental Health

கலிங்கராஜனின் வீட்டில் குமாரி கொடுத்த கிளாராவின் மருத்துவ அறிக்கை கோப்பினை புரட்டிக்கொண்டிருந்தாள் இதன்யா. நித்திலராஜனை கருவுற்றிருந்தபோது எடுக்கப்பட்ட மருத்துவச்சோதனைகள், ஸ்கேன் ரிப்போர்ட்கள் அடங்கிய அந்த கோப்பின் கடைசி பக்கத்தில் இருந்த அறிக்கையைக்  கண்டும் விட்டாள்.

அதை எடுத்து வாசித்துப் பார்த்தவள் கிளாரா பொய் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள்.

அவளருகே அமர்ந்திருந்த குமாரியோ இதை ஏன் இதன்யா இவ்வளவு ஆர்வமாகப் பார்க்கிறாள் என்ற கேள்வியோடு அவளது முகமாற்றத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

இதன்யா கிளாராவுக்கு ‘பிட்டட் கெரட்டோலிசிஸ்’ இருப்பதாகச் சொன்ன அறிக்கையை மட்டும் எடுத்துக்கொண்டாள். அதைக் குமாரியிடம் காட்டினாள்.

“இந்த மெடிக்கல் ரிப்போர்ட்படி பாத்தா கிளாராவால மண்ணுல கை வைக்க முடியாது… அவங்க தோட்டத்துல மண்ணைத் தோண்டி ஆதாரங்களைப் புதைச்சிட்டிருந்ததை பாத்ததா கோபால் சொன்னது வடிகட்டுன பொய்னு இதுல இருந்தே தெரியுது… அண்ட் நவநீதம் இஸ் த மெயின் கல்ப்ரிட்… அவ கிளாராவோட பெட்டுக்குக் கீழ இருக்குற சீக்ரேட் ட்ராயர்ல சால்வைய வச்சதை ஒரு ஸ்டாஃபோட ஒய்ப் பாத்திருக்காங்க… இதெல்லாம் வச்சு பாத்தா யாரோ கிளாராவ ப்ளான் பண்ணி இந்தக் கேஸ்ல சிக்க வச்சிருக்காங்கனு ப்ரூவ் ஆகுது… தப்பு செய்யாத ஒருத்தி இந்தக் கேஸ்ல தண்டனை அனுபவிக்குறது நியாயமில்ல… கிளாரா ஜெயில்ல இருந்து வெளிய வரணும்னு உங்களுக்கு ஆசை இருக்கா?”

குமாரி கண்கள் பனிக்க ஆமென்று தலையசைத்தார்.

“அப்ப நான் சொல்லுறபடி செய்யுங்க” என்றவள் இனியாவின் வழக்கில் வந்த தீர்ப்பில் தங்களுக்கு சம்மதமில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி குமாரியிடம் விளக்கினாள்.

“நீங்க கிளாராவுக்கு இரத்தச் சொந்தம், கலிங்கராஜனும் நீங்களும் மனசு வச்சா இந்த கேசை ரீ-ஓப்பன் பண்ண முடியும்” என்று அவள் சொல்லி முடிக்கையில்

“அதுக்கு அவசியமே இல்ல… அவ ஜெயில்லயே கிடக்கட்டும்” என்று கோபமாக ஒலித்தது கலிங்கராஜனின் குரல்.

இந்த மனிதர் திடீரென இங்கே எப்படி முளைத்தார் என குமாரி யோசிக்க, அவரோ இறுகிய முகத்தோடு இதன்யாவைப்  பார்த்தபடி வீட்டுக்குள் வந்தார்.

வந்தவர் “அந்தக் கொலைகாரிக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இன்னொரு தடவை இந்த வீட்டுப்பக்கம் வராதிங்க மேடம்… இன்ஃபேக்ட் நீங்க இங்க வர்றதுல எனக்கு உடன்பாடு இல்ல” என்றார் வெளிப்படையாக.

இதன்யா அதற்கெல்லாம் அசரவில்லை. தன் கையிலிருந்த மருத்துவ அறிக்கையை அவரிடம் கொடுத்தாள்.

“இதைப் படிச்சுப் பாருங்க”

கலிங்கராஜனும் படித்தார். அவருக்கு அதில் எழுதப்பட்டிருந்த மருத்துவ ரீதியான வார்த்தைகளின் பொருள் முழுமையாக விளங்கவில்லை என்றாலும் கிளாராவுக்கு எதுவோ தோல் ரீதியான ஒவ்வாமை என்றளவுக்குப் புரிந்தது.

“இதை வச்சு என்ன ப்ரூவ் பண்ண நினைக்குறிங்க மேடம்?”

“இந்த ரிப்போர்ட்படி மண்ணுல கை வச்சாலோ செருப்பு இல்லாம மண்ணுல நடந்தாலோ கிளாராக்கு அலர்ஜி வரும்… கிளாராவ அரெஸ்ட் பண்ணுனதும் நாங்க நடத்துன மெடிக்கல் எக்சாமினேசன்ல அவங்களுக்கு அலர்ஜி எதுவும் வந்ததா கோட் பண்ணல… கோபால் சொன்ன மாதிரி அவங்க தான் ஆதாரத்தைக் குழி தோண்டி புதைச்சாங்கனா கண்டிப்பா அவங்களுக்கு கையில அலர்ஜி ஆகிருக்கணும் சார்… இதுல இருந்தே தெரியுது, யாரோ கிளாராவை வேணும்னு இந்தக் கேஸ்ல சிக்க வச்சிருக்காங்க”

கலிங்கராஜன் நெற்றியைத் தடவிக்கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.

“இன்னும் எத்தனை நாள் இந்தக் கேஸை நான் கட்டிக்கிட்டு அழணும்னு தெரியல… இப்ப ரீ-ஓப்பன் பண்ணுறதால மட்டும் என்ன மாறிடப்போகுது?” என்றார் அவர் சலிப்போடு.

அவரது மனதில் இருந்த பயமே வேறு. அடிக்கடி அவருக்குப் போன் செய்து பேசும் மர்ம மனிதன் இதன்யாவுடன் பழகினால் குழந்தைகளையே இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்றானே! அந்தப் பயம் இன்னும் தீரவில்லை அவருக்கு.

அடுத்து அவன் போன் செய்வானோ என்ற பயத்தின் முன்னே கிளாரா அநியாயமாகத் தண்டிக்கப்பட்டதெல்லாம் அவரது புத்திக்கு உறைக்கவில்லை.

“என்ன சார் இப்பிடி பேசுறிங்க? உங்க ஒய்ப் மேல உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்… ஆனா உங்க மகளைக் கொன்ன உண்மையான கொலைகாரன் யாருனு கண்டுபிடிச்சு அவனுக்குத் தண்டனை வாங்கி தரணுங்கிற எண்ணம் கூடவா இல்ல?” என்று சிடுசிடுத்தபடி அந்த மருத்துவ அறிக்கையை வாங்கிய இதன்யா அதைக் குமாரியிடம் கொடுத்தாள்.

“இவருக்கு இனியாவ பத்தியும் கவலை இல்ல, கிளாராவை பத்தியும் கவலை இல்ல… கிளாரா உங்க மேல வச்ச அன்புக்கும் நம்பிக்கைக்கும் நீங்க நன்றிக்கடனா எதுவும் செய்ய நினைச்சிங்கனா ஹை கோர்ட்ல அப்பீல் பண்ண இவரைச் சம்மதிக்க வைங்க”

சொன்னதோடு தன் கடமை முடிந்ததென இதன்யா கிளம்பிவிடவில்லை. அந்த மருத்துவ அறிக்கையை மொபைலில் படம் பிடித்துவிட்டுத் தான் சென்றாள். அவளது தலை மறைந்ததும் குமாரி கண்ணீருடன் கலிங்கராஜனைப் பார்த்தார். அவரோ தலைக்கு மேல் தொங்கிய சாண்டலியரை வெறித்துக்கொண்டிருந்தார்.

குமாரி எதையும் யோசிக்கவில்லை. நெடுஞ்சாண்கிடையாக கலிங்கராஜனின் காலில் விழுந்தார் அப்பெண்மணி. கலிங்கராஜன் திடுக்கிட்டுப் போனார்.

“என்ன பண்ணுறிங்க நீங்க? என்னை விட வயசுல மூத்தவங்க… இப்பிடிலாம் செஞ்சு என்னைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதிங்க” என்று பதறியவராக சோபாவிலிருந்து எழுந்துகொண்டார் மனிதர்.

ஆனால் குமாரி அவரது காலை விடவில்லை.

“தயவுபண்ணி கிளாராவைக் காப்பாத்துங்க சார்… எனக்கு இரத்தச்சொந்தம்னு இருக்குறவ அவ மட்டும் தான்… நான் பாத்து வளந்த பொண்ணு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்குறானு தெரிஞ்சும் அமைதியா இருந்தேன்னா நான் எல்லாம் மனுச ஜென்மமே இல்ல.. கிளாரா வேற ஒரு உறவுக்கு ஆசைப்பட்டது தப்பு தான்… நானும் அதுக்கு உடந்தையா இருந்தேன்… உங்க கோவத்தை என் கிட்ட காட்டுங்க சார்… கேஸை ரீ-ஓப்பன் செய்ய அப்பீல் பண்ணுங்க சார்”

“ஐயோ என் நிலமை புரியாம நீங்க வேற பேசுறிங்களே?”

கவலையாகச் சொன்ன கலிங்கராஜன் குமாரியை எழுந்திருக்கும்படி வேண்டிக்கொள்ள அவரும் எழுந்து நின்றார். கை கூப்பி கண்ணீர் விட்டார் அவர்.

“நான் என்னால முடிஞ்சதை செய்யுறேன்… அவ மேல தப்பு இல்லனு இந்தத் தடவை தீர்ப்பு வந்தாலும் நான் அவளை என்னோட மனைவியா ஏத்துக்கப்போறதில்ல… என் பிள்ளைங்க:ளுக்கு அம்மாவா அவ என் வீட்டுல இருக்கலாம்… அவ்ளோ தான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு தனது அறைக்குள் போய்விட்டார் கலிங்கராஜன்.

குமாரிக்கு அப்போது தான் நிம்மதியானது. இனி கிளாரா விடுதலை ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

இதன்யா தனக்குக் கிடைத்த ஆதாரத்தை நேரே மார்த்தாண்டனிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இந்தக் கேஸ் ரீ-ஓப்பன் ஆச்சுனா இதுல நான் இருப்பேனானு தெரியாது… ஆனா நீங்க கட்டாயம் இருப்பிங்க… சோ இதெல்லாம் உங்க கிட்ட இருக்குறது தான் சரி மார்த்தாண்டன் சார்”

‘சப்போஸ் கோர்ட்ல பழைய டீமே இந்தக் கேஸை ரீ-இன்வெஸ்டிகேட் பண்ணலாம்னு சொன்னா நீங்க வருவிங்கல்ல?”

“அதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மினு தோணுது… எதுவா இருந்தாலும் எலக்சன் முடிஞ்சு ரிசல்ட் வந்தா தான் தெரியும்” என்று பூடகமாக உரைத்தாள் இதன்யா.

தேர்தலுக்குப்  பின்னே என்ன அதிசயம் நிகழுமென மார்த்தாண்டனுக்குத் தெரியாது. ஆனால் இதன்யா மீண்டும் தங்களது விசாரணை குழுவில் இடம்பெறுவாள் என்று மட்டும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

அதே நேரம் ஹாக்கரை வைத்து வங்கிகளின் சர்வர்களை முடக்கி இதன்யாவின் வங்கிகணக்கில் குளறுபடி செய்ய சொன்ன ஏகலைவனின் மேலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது ஏகலைவன் மீது தனக்குள்ள விசுவாசம் இதன்யாவை இங்ஙனம் செய்யத் தூண்டியது என்று சொல்லிவிட்டார்.

அது பச்சைப்பொய் என்று இதன்யாவுக்குத் தெரியும். என்ன செய்வது? அவள் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால் வேறெதையும் யோசிக்க விரும்பவில்லை அவள்.

அவளைக் கொலை செய்ய முயன்ற வழக்கு வேறு உள்ளது. அதையும் பணத்தால் இருட்டடிப்பு செய்ய பார்ப்பான் ஏகலைவன்.

எனவே தனது கவனத்தை இனியா வழக்கின் பக்கம் திருப்பிக்கொண்டாள் இதன்யா. தான் இருந்தாலும் இல்லை என்றாலும் உண்மையான கொலையாளியைக் கண்டறிய மார்த்தாண்டனுக்கு உதவ வேண்டு,மெனத் தீர்மானித்தாள்.

இந்நிலையில் குமாரி வற்புறுத்தி  கேட்டுக்கொண்டதால் பிரபல வழக்கறிஞர் ஒருவரை வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இனியாவின் கொலைவழக்கின் தீர்ப்பில் தங்களுக்குச் சம்மதமில்லை எனக் கலிங்கராஜன் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே தேர்தலும் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவில் ஆளுங்கட்சி தோல்வியைச் சந்திக்க எதிர்கட்சி ஆட்சியமைத்தது. ஆளுங்கட்சிக்கு இணக்கமாக இருந்த அதிகாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் இந்த ஆட்சிமாற்றம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்தது.

இந்தச் சூழலில் கலிங்கராஜன் கிளாராவிற்கு இருக்கும் ஒவ்வாமையைக் காரணம் அவர் மேல்முறையீடு செய்யவே, உயர்நீதிமன்றமும் இனியாவின் கொலைவழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதுவும் முன்பு விசாரித்த அதே சிறப்பு விசாரணை குழு உறுப்பினர்களே விசாரிக்கவேண்டுமென ஆணையிட்டது.

இதன்யாவின் பணியிடைநீக்கம் செல்லாதென்பதால் அவள் மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

மறுநாள் முரளிதரனும் பொன்மலைக்கு வந்துவிட இருவரது உடமைகளும் போலீஸ் குவார்ட்டர்சில் குடியேறின.

அந்நாளன்று கலிங்கராஜனின் வீட்டிலோ கலவரம் நடந்தேறியது.. கொடைகானலுக்குச் சம்மர் கேம்ப் சென்றிருந்த அவரது மூன்று குழந்தைகளும் அங்கேயே யாரோ அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதாக சம்மர் கேம்ப் நடத்திய அமைப்பினர் மொபைலில் கலிங்கராஜனுக்குத் தகவல் அனுப்பியிருந்தார்கள். காவல்துறையில் புகாரளித்திருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

எது நடக்கவே கூடாதென குழந்தைகளை இவ்வளவு தூரம் அனுப்பினாரோ அது நடந்துவிட்டது. கலிங்கராஜன் நிலைகுலைந்து போய்விட்டார். இன்னும் குமாரியிடம் எதையும் கூறவில்லை. கிளாரா சிறைக்குச் சென்றதிலிருந்து குமாரிக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு வந்தவாறு இருப்பதால் இதைச் சொன்னால் அவருக்கு எதுவும் ஆகிவிடுமே என்ற பச்சாதாபத்தால் நடந்த சம்பவத்தின் கொடுமையைத் தனக்குள் அடக்கிக்கொண்டவர் அடுத்து என்ன செய்வதென யோசிக்க ஆரம்பித்தார்.

பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம் அவரைப் பதறவைத்தது.

தனது அதிகாரத்தை வைத்து கொடைகானலெங்கும் பிள்ளைகளைத் தேடுமாறு சொன்னவர் அங்குள்ள காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க கொடைக்கானலுக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

அப்போது அவரது எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவன் அந்த மர்ம நபரே தான்.

எடுத்ததும் ஏகவசனத்தில் கலிங்கராஜனைத் திட்ட ஆரம்பித்தான் அவன்.

“நான் அவ்ளோ தூரம் சொல்லியும் உன் வீட்டுக்கு அந்த இதன்யா வந்திருக்கா… நீ அவ சொன்னதை கேட்டு உன் பொண்டாட்டி மேல விழுந்த கொலைப்பழிய துடைக்க கேஸை ரீ-ஓப்பன் பண்ணிருக்க… என்னை ரொம்ப லேசா எடை போட்டுட்ட கலிங்கராஜன்… உன்னைச் சும்மாவிடமாட்டேன் நான்.. உன் பசங்களைக் கிட்னாப் பண்ணுனது என்னோட ஆட்கள் தான்… அவங்க உயிருக்கு எந்தக் கேரண்டியும் இல்ல… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழந்தையோட பாடி பார்ட் உன் வீட்டுக்குப் பார்சல்ல வரும்… அதை வாங்க காத்திரு”

“இல்ல… இல்ல… என் பசங்களை எதுவும் பண்ணிடாத… ப்ளீஸ்”

கலிங்கராஜனின் அலறலைக் கேட்க அங்கே அவன் இணைப்பில் இருக்கவேண்டுமே! இணைப்பைத் துண்டித்துவிட்டான் அவன்.

கலிங்கராஜன் பதறியடித்துக்கொண்டு பொன்மலை காவல்நிலையத்துக்கு ஓடோடி வந்தார்.

“இதன்யா மேடம் எங்க?” என்று பதறியவர் அவள் விசாரணைக்குழுவின் அலுவலக அறையிலிருந்து வெளியே வரவும் அவளை நோக்கி ஓடினார்.

“என் பசங்களை அவன் கடத்திட்டான் மேடம்…. எப்பிடியாச்சும் காப்பாத்துங்க” என்று கரங்குவித்து அழுதார் அவர். அழுதபடியே சம்மர் கேம்பில் நடந்த சம்பவத்தை அவளிடம் கூறினார்.

இதன்யா இது என்ன புதிய பிரச்சனையென அதிர்ந்தவள் கொடைக்கானல் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினாள். குழந்தைகளின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் கொடைக்கானல் காவல்நிலையத்துக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

 விவரங்கள் அனுப்பியதும் “அவன் உங்களை எத்தனை நாளா இப்பிடி பயமுறுத்திக்கிட்டே இருக்குறான்? ஏன் இதை போலீஸ் கிட்ட சொல்லல?” என்று கலிங்கராஜனிடம் கேட்டாள் இதன்யா.

“குழந்தைங்களை இனியாவ மாதிரியே கொன்னுடுவேன்னு மிரட்டுனான் மேடம்” என்றார் அவர் கண்ணீரோடு.

“கவலைப்படாதிங்க… குழந்தைங்களை பத்திரமா அழைச்சிட்டு வரவேண்டியது எங்க பொறுப்பு” என தைரியம் கொடுத்தவள் அந்த மர்ம நபரின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டாள்.

அந்த எண் யாருடையது? எங்கே இருந்து அழைப்பு வருகிறது என்பதை விசாரிக்கச் சொன்னாள் அவள்.

கிளாராவைச் சிக்கவைக்கும் தீர்மானத்தோடு சந்தேகத்துக்கு இடமாக நடந்துகொண்ட நவநீதத்தையும் கோபாலையும் கைது செய்ய அவர்கள் தயாரான நேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென இதன்யா எதிர்பார்க்கவில்லை.