IIN 67

மனநல மருத்துவர்கள் ஸ்டிமுலண்ட் வகை மருந்துகளை மனப்பிறழ்வுக்குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிமுலண்ட் வகை மருந்துகள் எச்சரிக்கையுணர்வு, கவனம் மற்றும் ஆற்றலைக் கொடுப்பதோடு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தைச் சீராக்குகிறது. இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். இது ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளின் ADHD குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்த மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன.

                       -From the website of National Institute of Mental Health

மார்த்தாண்டன் முன்னே பவ்வியமாக நின்று கொண்டிருந்தார் அந்த மனிதர். அவர் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் சொல்லவும் செய்தார்.

“சோ கடைசி நாள் அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கையும் வித்தியாசமா இருந்திருக்கு?”

“ஆமா சார்… அவங்களை யாருமே கவனிக்கலனு நினைச்சாங்க… ஆனா நான் அவங்களைப் பாத்தேன் சார்”

“இதை எங்க வந்து சொல்ல சொன்னாலும் சொல்லுவிங்களா?”

“கண்டிப்பா சொல்லுவேன் சார்”

“சரி… இப்ப நீங்க கிளம்பலாம்”

செல்பவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் மார்த்தாண்டன். எதையோ நோட்பேடில் எழுதியவர் மகேந்திரன் வரவும் என்னவென்பது போல பார்த்தார்.

“நியூஸ் பாத்திங்களா சார்? இதன்யா மேடம் சஸ்பெண்ட் ஆனதுக்குப் பின்னாடி இருந்த சதிய பத்தி எல்லா சேனல்லயும் பரபரப்பா நியூஸ் போகுது” என்றவர் தனது மொபைலில் யூடியூப் செயலியில் ஓடிய செய்தியைக் காட்டினார்.

“சைபர் க்ரைம் அதிகாரிகளின் முயற்சியால் தேசியமயமாக்கப்பட்ட இரு வங்கிகளின் சர்வரை முடக்கிய ஹாக்கர் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரியான இதன்யா வாசுதேவனின் கணக்கில் சில கார்பரேட் நிறுவனங்களிலிருந்து பணம் கையூட்டாகப் பெறப்பட்டது போல காட்டுவது தனக்குக் கொடுக்கப்பட்ட வேலை எனவும் அதை செய்வதற்காகவே அதிகாரியின் கணக்கு இருந்த வங்கி மற்றும் அந்த இரு கார்பரேட் நிறுவனங்களின் கணக்குகள் இருந்த வங்கியின் சர்வரை முடக்கியதாகவும் அந்த ஹாக்கர் கூறியுள்ளார். இந்தச் சதி வேலைக்குப் பின்னே இருப்பது பிரபல தொழிலதிபர் ஒருவர் என்ற செய்தி காவல்துறை வட்டாரங்களில் கசிந்து வருகிறது. அவருக்குச் சில அரசியல் கட்சிகளும் ஆளுங்கட்சியும் உதவி வருவதால் ஏற்கெனவே ஒரு கொலைவழக்கிலிருந்து தப்பித்திருக்கிறார் என்றும், அந்தக் கொலைவழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி இதன்யா வாசுதேவனைப் பழிவாங்கவே அவர் இந்த ஹாக்கரை வைத்து இத்தகைய முறைகேடான செயலைச் செய்துள்ளார் என்றும் நம்பத்தகுந்த காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் பணத்தைக் கையூட்டாகப் பெற்று அந்த தொழிலதிபரை கொலை வழக்கில் சிக்கவைக்க முயற்சித்ததாக இதன்யா வாசுதேவன் மீது துறை ரீதியான நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டதென ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மனவருத்தத்துடன் இச்செய்தியை நமது நிருபரிடம் பகிர்ந்துகொண்டார்”

அடுத்து ஆங்கில செய்தி சானல் ஒன்றின் பிரைம் நியூஸ் ஒன்றைக்காட்டினார் அவர்.

“A case of bribery and false accusation : TN Govt revokes IPS officer’s suspension – The state government has revoked the suspension of IPS officer Idhanya Vasudevan, who had been placed under suspension in connection with a case of bribery and false accusation of a suspect in a murder case while she was Special Investigation Team officer in Ponmalai”

அடுத்தடுத்த வீடியோக்களில் ஹாக்கர் ஸ்ரீ நீதிமன்றத்துக்குக் காவல்துறை அதிகாரிகளோடு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி ஓடியது. மாஜிஸ்திரேட் இந்த வழக்கை விசாரித்து ஹாக்கருக்குப் பணம் கொடுத்து இவ்வாறு செய்யச் சொன்ன நபரை விரைவில் கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தார். கூடவே ஹாக்கர் ஸ்ரீயை காவல்துறை கஷ்டடியில் வைத்து விசாரிக்கவும் ஆணை பிறப்பித்தவர் இதன்யா மீது சுமத்தப்பட்ட பழி பொய்யென நிரூபிக்கப்பட்டதால் அவளது சஸ்பென்சன் செல்லாதென தீர்ப்பளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு அரசு அவளது சஸ்பென்சனை திரும்ப பெறுவதாக அறிவித்தது, விரைவில் அவள் பணிக்குத் திரும்பலாம் போன்ற செய்திகள் அடுத்தடுத்து வரவும் மார்த்தாண்டன் நிம்மதியாகப் புன்னகைத்தார்.

“உண்மைய கொஞ்சநாள் மறைச்சு வைக்கலாம்… ஆனா ஒரேயடியா அழிச்சுட்டுப் பொய்யை உண்மையாக்க முடியாது” என்றார் அவர்.

இந்தச் செய்தியை ஏகலைவனும் தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இருந்த ஆத்திரத்துக்கு ஸ்ரீ மட்டும் எதிரில் இருந்தால் அவனது கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பான். இப்போது காவல்துறையில் மாட்டியவன் தன்னையும் சேர்த்து இழுத்துவிட்டால் இத்தனை நாட்கள் கட்டிக் காப்பாற்றிய பெயர், புகழ் எல்லாம் ஒரேயடியாக மண்ணாய் போய்விடும்.

ஏனெனில் ஸ்ரீக்குப் பணம் கொடுத்து இதன்யாவை இவ்வாறு சிக்க வைத்து பணியிடைநீக்கம் செய்து பழி தீர்த்துக்கொண்டவன் அவன் தானே! ஸ்ரீயின் ஹாக்கிங் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்து இக்காரியத்தைச் செய்தவன் மாட்டிக்கொள்வோமென இதுவரை யோசித்ததேயில்லை. இதோ ஸ்ரீ மாட்டிக்கொண்டான். இனி அவன் மட்டும் தன் பெயரை உளறிவிட்டால் என்னவாகும்?

ஏகலைவனின் மூளை பரபரவென யோசித்தது. உடனே நிஷாந்தின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

அவன் அழைப்பை ஏற்றதும் “நான் சொல்லுறதை செய்… உடனே சென்னைக்குக் கிளம்பு… அங்க போனதும்…” என வரிசையாகக் கட்டளைகளை விதித்தவன் “நல்லா ஞாபகம் வச்சுக்க, என்ன ஆனாலும் ஸ்ரீ என் பேரை வெளிய சொல்லிடக்கூடாது” என்று ஆணையிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

சோஃபா கம் பெட்டில் அமர்ந்து எதிரே புன்னகையோடு கண்கள் கனிய ஓவியமாக மாட்டப்பட்டிருந்த தேவசேனாவைப் பார்த்தான் அவன்.

“நீ சிரிக்குறியா தேவா? உனக்கு என்ன? என்னைத் தனியா விட்டுட்டு ரொம்ப தூரமா போயிட்ட… உன்னோட துணை இல்லாம இங்க ஒருத்தன் பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்குறதைப் பாத்தா உனக்குச் சிரிப்பா தானே இருக்கும்… ஆனா ஒன்னு, நான் அவ்ளோ சீக்கிரம் என் தோல்விய ஒத்துக்கமாட்டேன் தேவா”

அவன் தீர்மானமாகச் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் “சார் காபி” என்றபடி அந்த அறைக்குள் பிரவேசித்தாள் நவநீதம்.

சட்டென பார்வையை வாயில் பக்கம் திருப்பிய ஏகலைவனின் கண்கள் கோபத்தில் அக்னியாய் தகித்தன. அந்தப் பார்வையின் வெம்மை தாங்காமல் நவநீதம் நடுங்க தொடங்கினாள்.

“நான் உன் கிட்ட காபி கேட்டேனா? இந்த மாதிரி அதிகபிரசங்கித்தனம் பண்ணுறது எல்லாம் கலிங்கராஜன் வீட்டுல வேலை செஞ்சதோட நிறுத்திக்கணும்னு சொல்லித் தானே உன்னை என் பங்களால வேலைக்குச் சேர்த்தேன்… மறந்துட்டியா?” என அவன் சிம்மக்குரலில் உறுமவும் அவள் வெலவெலத்துப் போனாள்.

“அதில்லங்க சார்,.. ரெண்டு நாளா இந்நேரத்துல நீங்க காபி குடிச்சிங்க… அதான் இன்னைக்கும்…” என்று நடுங்கியபடியே கூறியவளை எரிப்பது போல் முறைத்தான் அவன்.

“எனக்கு என்ன வேணும்ங்கிறதை டிசைட் பண்ண நீ யாரு? கெட் லாஸ்ட்” என்று கத்தித் தீர்த்தான் அவன்.

பயந்து போன நவநீதம் அங்கிருந்து ஓடிவிட்டாள். அவள் போன பிறகும் கோபம் அடங்காமல் நின்றான் ஏகலைவன்.

அதே நேரம் இதன்யாவின் வீட்டில் அவளிடம் கைகுலுக்கி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தான் ப்ராணேஷ்.

“ஃபைனலி சஸ்பென்சன் ரிவோக் ஆகிடுச்சு போல… கங்கிராட்ஸ்… வாட் நெக்ஸ்ட்?” என்று விசாரித்தான்.

“ஐ ஹேவ் டு கோ டூ பொன்மலை… அங்க உள்ள போலீஸ் ஆபிசர்ஸ் கிட்ட ஒரு வேலைய ஒப்படைச்சிட்டு வந்திருக்கேன்… அதுல மட்டும் ரிசல்ட் பாசிட்டிவ்னு வந்துச்சுனா மறுபடியும் கொஞ்சநாள் அங்க வொர்க் பண்ணுற மாதிரி சிச்சுவேசன் வரலாம்” என்றாள் அவள்.

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மயூரிக்கோ மீண்டும் அவளை அங்கே அனுப்பவே இஷ்டமில்லை. மகளின் உயிருக்கு இரண்டாம் முறையும் உலை வைக்கப் பார்த்த மக்கள் வாழும் ஊர் அல்லவா! ஆனால் அவள் போயே தீருவேன் என்றல்லவா தீர்மானமாகக் கூறுகிறாள்.

மருமகனிடம் சொல்லி அவள் மனதை மாற்றலாமா என வாசுதேவனிடம் கேட்டார் அவர்.    

“சும்மா இரு மயூரி… அவங்க ரெண்டு பேரும் விவகாரத்து வேண்டாம்னு சொல்லி டிவோர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்குறேன்… நீ மருமகன் கிட்ட எதையும் சொல்லி அதால அவங்களுக்குள்ள மறுபடியும் பிரச்சனை வந்துட்டா முதலுக்கே மோசமாகிடும்… இதன்யா முடிவு பண்ணுனதை நம்ம மாத்தணும்னு நினைக்க வேண்டாம்.. அவ பாதுகாப்பா இருப்பா” என்று சொல்லி மயூரியை அடக்கிவிட்டார் அவர்.

பின்னர் ப்ராணேஷ் அங்கிருந்து போய்விட முரளிதரன் இதன்யாவின் மொபைலுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

“கங்கிராட்ஸ் மேடம்… இனிமே ஒவ்வொன்னா நீங்க எதிர்பார்த்த மாதிரியே நடக்கும்… உங்க அடுத்த ப்ளான் என்ன?”

“இனியா மர்டர் கேஸ்ல கிளாராவ அரெஸ்ட் பண்ணுனோம்ல, அதுக்குப் பின்னாடி நிறைய பசில்ஸ் மறைஞ்சிருக்குறதா எனக்குத் தோணுதுனு சொன்னேன்ல… அது என்னனு கண்டுபிடிக்குறதுக்கான முயற்சில ஆல்ரெடி இறங்கிருக்கேன்… அதுல ஒரு பார்ட் தான் புரொபசர் வீட்டைக் கண்காணிக்க சொன்னது… இன்னொரு பார்ட்டை மார்த்தாண்டனும் மகேந்திரனும் பொன்மலைல செஞ்சிட்டிருக்காங்க… எனக்குத் தேவையான பாயிண்ட்ஸ் மட்டும் கிடைச்சுதுனா ஐ வில் டேக் ஃபர்தர் ஸ்டெப்ஸ்”

“உங்க முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் மேடம்… இன்னும் நான் புரொபசர் தேவநாதன் வீட்டைக் கண்காணிக்குறதை நிறுத்தல… என் உள்ளுணர்வு இன்னும் அங்க எதுவோ நடக்கப்போகுதுனு சொல்லுது”

“இதுக்கு மேல என்ன சார்?” என இதன்யா புரியாமல் கேட்க

“கண்டிப்பா நடக்கும் பாருங்க மேடம்… நான் நினைச்சது நடந்தா கட்டாயம் உங்க கிட்ட ஷேர் பண்ணுவேன்” என்றார் முரளிதரன் அழுத்தமாக.

அவரது மதிப்பீட்டுத்திறன் பற்றி ஏற்கெனவே அறிந்தவள் என்பதால் சரியென்றாள் இதன்யா.

அவரிடம் பேசிய பிறகு நிம்மதியாக உணர்ந்தாள் அவள். அடுத்து என்ன? பொன்மலை கிளம்ப வேண்டியதுதான். ஏற்கெனவே அவள் வரத் தாமதம் ஆனதும் ரசூல் பாயும் முபீனாவும் மொபைலுக்கு அழைத்து விசாரித்துவிட்டார்கள். கூடவே அஸ்மத்தும்.

அவர்களிடம் நடந்த அனைத்தையும் சொன்னதோடு சஸ்பென்சன் ரத்தாகப் போவதையும் கூறியிருந்தாள் இதன்யா.

அங்கே இந்நேரத்துக்கு மார்த்தாண்டனும் மகேந்திரனும் அவள் கொடுத்த வேலையை முடித்திருப்பார்கள். இனியும் தாமதிக்காமல் பொன்மலைக்குப் போவதே சிறந்தது.

எப்படியும் ஹாக்கர் ஸ்ரீ விவகாரத்தில் ஏகலைவன் சிக்கிக்கொள்வான் என்று அழுத்தமான நம்பிக்கை அவளுக்கு. ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கத்தோடு ஏகலைவன் நிஷாந்தை சென்னைக்கு அனுப்பிவைத்த செய்தி அவளுக்குத் தெரியாதல்லவா!

இதன்யா தூத்துக்குடிக்கு விமானம் ஏறிய அதே நேரத்தில் நிஷாந்த் சென்னைக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் வழக்கம் போல பேராசிரியர் தேவநாதன் வீட்டுக்குச் செல்ல அக்காட்சியை அவனுக்குத் தெரியாமல் அந்த வீட்டைக் கண்காணித்த கான்ஸ்டபிளின் ஸ்பை கேமரா பதிவு செய்தது.

அவனைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு அணைத்த பிரகதி “நீ இப்ப இங்க வந்தது கூட நல்லதுக்குத் தான்… இனியா கேஸை விசாரிச்ச லேடி ஆபிசருக்கு நம்ம லவ் பத்தி எப்பிடியோ தெரிஞ்சிடுச்சு நிஷாந்த்… ஸ்ரீக்காக சைபர் க்ரைம் ஆபிசுக்குப் போனப்ப அந்த லேடி அங்க இருந்தாங்க… நம்ம லவ் பத்தி தெரியும்னு அவங்க சொன்னதும் நான் உறைஞ்சு போயிட்டேன்…. யாருக்கும் தெரியாம நம்ம லவ்வை இரகசியமா வச்சிருந்தோம்… அவங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது? அப்பா உனக்காக அலிபி குடுத்திருக்கார்… அதை வச்சு உன்னையும் அப்பாவையும் மறுபடி அரெஸ்ட் பண்ணிடுவாங்களா நிஷாந்த்? நீ இனியாவ லவ் பண்ணுனதாலயும் அதுக்குச் சாட்சி இருந்ததாலயும் தான் கேரளாவுல நடந்த கேஸ் கூட கம்பேர் பண்ணி இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆகிருக்க… இப்ப அது பொய்னு தெரிஞ்சா மறுபடி உன்னை ஜெயில்ல போட்டுருவாங்களா? அப்பிடி நடந்துச்சுனா உன் மாமா உன்னை அவரோட வாரிசா அனவுன்ஸ் பண்ண முடியாதே! நம்ம ஃபியூச்சர் ப்ளான் எல்லாம் வேஸ்டா நிஷாந்த்?” என உணர்ச்சிவசப்பட்டு அழாத குறையாக வினவினாள் அவள்.

நிஷாந்துக்கும் இத்தகவல் அதிர்ச்சியே! இப்போது என்ன செய்வது என்ன அவனுக்குக் குழப்பமானது. என்ன செய்தாலும் இதன்யாவிடம் மாட்டிக்கொள்வது திண்ணம் என நிஷாந்தின் மூளை அவனை எச்சரித்தது. இந்த உண்மை மட்டும் மாமாவுக்குத் தெரிய வந்தால்? நினைத்தாலே நாடி நரம்பெங்கும் அச்சம் இரத்தத்தோடு சேர்ந்து ஊடுருவிப் பாய்ந்தது. ஏனென்றால் இந்நாள் வரைக்கும் ஏகலைவனைப் பொறுத்தவரைக்கும் நிஷாந்த் – இனியா தான் காதலர்கள். பிரகதி வெறுமெனே அவனது தோழி மட்டுமே! புலிக்கும் சிங்கத்துக்குமிடையே மாட்டிக்கொண்டு என்ன செய்வதென தெரியாது விழித்தான் நிஷாந்த்.