IIN 56

சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவே!
-From Psychologytoday site


சக்கரவர்த்தி தேயிலை தோட்டம்….
தன் முன்னே நின்று கொண்டிருந்த லாரிகளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள் இதன்யா. அவளுக்கு எந்த லாரி அவளை விபத்துக்குள்ளாக்கியது என்பதெல்லாம் உயிர் பிழைக்கவேண்டுமென்ற பதற்றத்தில் நினைவில் பதியவில்லை.


எனவே தடுமாற்றத்துடன் மீண்டும் மீண்டும் மூன்று லாரிகளையும் பார்த்தவள் மார்த்தாண்டனிடம் தெரியவில்லை என உதட்டைப் பிதுக்கினாள்.
“சரி விடுங்க மேடம்…” என்றவர் கண்களால் ஏகலைவன் காரிலிருந்து இறங்கி தங்களை நோக்கி வருவதைக் காட்டினார்.
அதைப் புரிந்துகொண்டவளாக இதன்யாவும் உரத்தக்குரலில் “நீங்க என்ன பண்ணுவிங்களோ எனக்குத் தெரியாது மார்த்தாண்டன் சார்.. என்னை ஆக்சிடெண்ட் பண்ணுன லாரி எதுனு கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சே ஆகணும்” என்றாள் .
தனது பேச்சின் சாராம்சம் அவனைப் பாதிக்கிறதா என்று பார்க்க திரும்பியவள் ஏகலைவனிடம் எந்த மாற்றமும் இல்லையென்றதும் காலையில் நவநீதம் தன்னிடம் சொன்னதைப் பற்றி அவனிடம் கேட்கலாமென்ற முடிவுக்கு வந்தாள்.
வந்தவனோ மார்த்தாண்டனிடம் “அந்த போலி டிரைவர் க்ளீனர் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா இன்ஸ்பெக்டர் சார்?” என அக்கறையாய் விசாரித்தான்.
“விசாரிச்சிட்டிருக்கோம்… அவனுங்க மட்டும் மாட்டட்டும், அவனுங்களை அனுப்பி வச்சவனை சட்டப்படி சிறப்பா கவனிச்சு அனுப்புவோம்” என்றார் மார்த்தாண்டன்.
இதன்யா பொய்யான புன்னகையோடு “இன்னைக்கு மானிங் நீங்க சென்னைக்குப் போறதா நவநீதம் சொன்னாளே மிஸ்டர் ஏகலைவன்… நீங்க இங்க என்ன பண்ணுறிங்க? சொந்தமா ஹெலிகாப்டர், ஹெலிபேட்னு உங்க பங்களால எதுவும் வசதி பண்ணிட்டிங்களா? ஏன் கேக்குறேன்னா இதுக்கு மேல சென்னைக்கு ஃப்ளைட் நைட் தான்” என்று நக்கலாகக் கேட்டதும் ஏகலைவனின் முகத்தில் கடுப்பு.
அதை மறைத்துக்கொண்டவன் “எமர்ஜென்சியான சிச்சுவேசன்… சோ கேன்சல் பண்ணிட்டேன்” என்று சுருக்கமாகப் பதிலளிக்கவும் மார்த்தாண்டனும் இதன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
திடீரென எஸ்டேட்டின் கடைகோடியைத் தாண்டிய சரிவில் காக்கைகள் கோரஸ் பாடும் சத்தம் செவியை நிறைத்தது.
இதன்யாவின் பார்வை அந்தப் பக்கம் போகவும் மார்த்தாண்டனும் அங்கே நோக்கினார்.
தூரத்தில் புள்ளியாய் காக்கைகள் கூட்டம் கூட்டமாகக் கரைந்தபடி பறப்பது தெரிந்தது.
“ஏன் திடீர்னு இவ்ளோ காக்கா கத்துது?” என மார்த்தாண்டன் திகைக்க
“ஒரு காக்கா இறந்துச்சுனா கூட்டத்துல இருக்குற மத்த காக்கா கத்தும்னு சொல்லுவாங்க” என்றாள் இதன்யா.
“காட்டுல உள்ள முயல் மாதிரி எதுவும் சாது பிராணி செத்து போயிருக்கும்மா… அதை சாப்பிட காக்கா கூட்டமா போகும்” என குறுக்கே புகுந்து விளக்கம் கொடுத்தார் எஸ்டேட்டின் மேற்பார்வையாளர்களில் ஒருவர்.
அவரது விளக்கம் நம்பும்படியாக இல்லை. இறந்த விலங்குகளின் உடல்களைத் தின்பதற்கு வல்லூறுகளும் பருந்துகளும் தான் வட்டமிடும். தன் இனத்தில் ஏதேனும் ஒரு உயிருக்குத் துன்பம் என்றால் அதைக் காக்க இப்படி கோரசாகக் கரைவது காக்கைகளின் குணமே!
இதன்யா மேற்பார்வையாளர் சொன்னதை ஏற்றுக்கொள்வதைப் போல நடித்தாள். ஆனால் மார்த்தாண்டனிடம் கண்களால் ஏதோ சைகை காட்டினாள் அவள்.
“எதுக்கும் நீங்க ஒரு தடவை உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆன நாள்ல எஸ்டேட்டுக்கு வந்த லாரியோட சி.சி.டி.வி ஃபூட்டேஜை பாக்குறிங்களா மேடம்? அதுக்கு அப்புறம் எந்த லாரினு உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு” என மார்த்தாண்டன் கேட்க
“ஷ்யூர்” என்ற இதன்யா சி.சி.டி.வி கண்ட்ரோல் அறைக்கு அவரோடு சென்றாள்.
அந்நேரத்தில் ஏகலைவனின் வதனத்தில் கலவரம் சூழ்ந்ததை இருவரும் கவனிக்கவில்லை.
சி.சி.டி.வி கண்ட்ரோல் அறையிலிருந்த ராக்கி இருவரையும் கண்டதும் கொஞ்சம் திகைத்துப்போனான். அவனது விழிகள் மிரட்சியில் தாழ்ந்தன.
“தப்பு பண்ணுனவங்க தான் போலீஸைப் பாத்ததும் பயப்படுவாங்க ராக்கி” என இதன்யா சொல்லவும் கண்களை உயர்த்தி “குட்மானிங் மேடம்” என்றான் அவன்.
“குட்மானிங்” என்ற இதன்யா அவனிடம் தேயிலைத்தோட்டத்தின் கடைக்கோடியில் சரிவின் அருகே கேமரா உண்டா என விசாரிக்க ஆமென்றான்.
“அப்ப அந்த வியூவை நான் பாக்கணும்” என்றவள் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
அதை ராக்கி எதிர்பார்க்கவில்லை. மார்த்தாண்டனோ விபத்து செய்த லாரியின் வீடியோ பதிவைப் பார்க்க வந்தவர் இதன்யாவின் பேச்சில் குழம்பிப்போனார்.
இதன்யா சொன்னதைக் கேட்ட ராக்கி தேயிலைத்தோட்டத்தின் எல்லையில் மலைச்சரிவைப் பார்த்தபடியும், அதன் கீழே ஓடும் ரகசிய காட்டுப்பாதையை கண்காணிக்கும்படியும் இருந்த சி.சி.டி.வி காட்சியை அவளுக்குக் காட்டினான்.
அங்கே கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்த காக்கைகள் கரையும் சத்தம் எதுவும் தவறாக நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை இதன்யாவுக்கு வரவழைத்தது.
“இதையா பாக்கணும்னு சொன்னிங்க மேடம்? இந்த மாதிரி அடிக்கடி நடக்கும்” தன் தயக்கத்தை விடுத்துப் பேசினான் ராக்கி.


“அடிக்கடி மீன்ஸ்? இதுவரைக்கும் நீ எத்தனை தடவை பாத்திருக்க?” என அவனிடம் வினவினாள் இதன்யா. இதுவரை விடைபெற்றிருந்த காவல்துறை அதிகாரிக்குரிய மிடுக்கு மீண்டும் வந்துவிடவும் ராக்கியின் தயக்கமும் அவனிடம் வந்து ஒட்டிக்கொண்டது.
“குத்துமதிப்பா அஞ்சாறு தடவை மேடம்” என்றவனை விபத்து நடந்த நாளுக்குரிய சி.சி.டி.வி வீடியோ பதிவுகளைக் காட்டச் சொன்னாள் அவள்.
பெயருக்கு அதைப் பார்த்தாளே தவிர மூன்று லாரிகளை உன்னிப்பாக கவனிக்கும் எண்ணமே அவளுக்கு இல்லை. அவள் கவனம் முழுவதும் காக்கை கூட்டம் ஏன் கரைகிறது என்பதில் நிலைபெற்றுவிட்டது.
“எனக்கு லாரிய அடையாளங்காட்ட தெரியல மார்த்தாண்டன் சார்… நம்ம இங்க இருந்து டைமை வேஸ்ட் பண்ணவேண்டாம்.” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் அவள்.
“தேங்க்ஸ் ராக்கி” என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறியதும் நிம்மதி பெருமூச்சு ராக்கியிடம்.
ஏனோ காவல்துறையினரைப் பார்த்துவிட்டாலே அவனால் இப்போதெல்லாம் இயல்பாக இருக்கவே முடிவதில்லை. எங்கே மீண்டும் விசாரணை என்று தன்னை அழைத்துக்கொண்டு போய் சிறையில் தள்ளிவிடுவார்களோ என்ற பயம்.
அவள் போனதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து கிட்டத்தட்ட அரை பாட்டில் தண்ணீரை அருந்தியவனின் விழிகள் சி.சி.டி.வி மானிட்டரில் தெரிந்த காட்சியில் இமைக்க மறந்து நிலைகுத்திப் போயின.
அதே நேரம் சாந்திவனத்தில் குழந்தைகள் மூவரும் சோகமே உருவாக கலிங்கராஜனோடு சேர்ந்து காரில் ஏறினார்கள்.
அவர்களுடன் இறுகிய முகத்தோடு அமர்ந்துகொண்ட குமாரியை ஏளனமாகப் பார்த்தாள் நவநீதம். சாந்திவனத்தின் சாவிக்கொத்தைத் தூக்கிப்போட்டு அலட்சியமாக அவரை நோக்கி புருவத்தை உயர்த்தியவளின் உதட்டு வளைவு அவளது ஏளனத்தின் தீவிரத்தைக் காட்டியது.


குமாரி அவளது செய்கையில் மனம் குமைந்தார்.
கலிங்கராஜன் தன்னைப் பார்க்கிறார் என்றதும் முகபாவத்தை மாற்றிக்கொண்டாள் நவநீதம்.
“அடிக்கடி வீட்டை வந்து பாத்துக்க நவநீதம்… வாரம் ஒருதடவை க்ளீன் பண்ண மறந்துடாத… அதுக்கான பேமெண்டை நான் உன் அக்கவுண்டுக்கு அனுப்பிடுவேன்” என்று கலிங்கராஜன் சொல்லவும் தலையை ஆட்டினாள் அவள்.
ஜென்னி, மிச்செல் மற்றும் நித்திலன் மூவரும் அழுகாத குறையாக டாட்டா காட்ட மனமெங்கும் பூரிப்போடு அவர்களுக்குக் கையசைத்தவள் சாவிக்கொத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு ஏகலைவனின் வீட்டை நோக்கி நடந்தாள்.
சாந்திவனத்தைப் போல காடு போன்ற தோற்றமில்லாத பங்களா அது. எப்போதுமே நவநீதத்துக்கு அந்தப் பங்களாவைப் பிடிக்கும்.
ஏனென்றால் அங்கே சாந்திவனம் என்ற காட்டில் வாழும் மனிதர்களும் அவர்கள் கட்டிக்கொண்டு அழும் செடிகளும் நிறைந்திருக்காது. அழகுக்காக வளர்க்கப்படும் பணக்காரத்தனமான [புதர்கள், ஒரு விருட்சம், அடர்ந்து படர்ந்த ராமபாணக்கொடியோடு பச்சை கம்பளம் போல மின்னும் புல்தரை – பங்களா என்றால் இப்படித் தான் இருக்கவேண்டுமென பெருமூச்சு விட்ட நாட்கள் அனேகம்.
“சும்மா தானே இருக்க… தோட்டத்துல இருக்குற சக்குலெண்ட்சை இடம் மாத்தி வைக்கலாம்ல?” என்ற குமாரியின் அதட்டல்கள்.
“ராமபாணக்கொடிய பதியன் போட்டிருந்தேன்… அதுக்கு ஏன் நீங்க தண்ணி ஊத்தாம இருந்திங்க? இப்ப பாருங்க தளிர் எல்லாம் கருகிடுச்சு” என்ற இனியாவின் குறைகூறல்கள்.
“மரத்தைக் கவாத்து பண்ணிருக்கேன்… லான்ல கிடக்குற குப்பைய சுத்தம் பண்ணிடு” என்ற தோட்டப்பராமரிப்பாளர்களின் கட்டளைகள்.
இவை அனைத்திலிருந்தும் இனி விடுதலை! கூடவே கை நிறைய சம்பளத்தோடு வேலை! இதுவல்லவா வாழ்க்கை!
சந்தோசமான மனநிலையோடு வந்தவள் தோட்டத்தில் செழித்து வளர்ந்து தரையில் படரத் துவங்கியிருந்த ராமபாணக்கொடியைப் பார்க்காமல் மிதித்தது அவளது துரதிர்ஷ்டமே! அதைக் கவனிக்காமல் பூரித்து நின்ற நவநீதம் சற்று தொலைவிலிருந்த தரிப்பிடத்தில் காரிலிருந்து இறங்கி இடையில் கையூன்றி கடோத்கஜனைப் போல நின்ற ஏகலைவனைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள்.
இவன் எப்போது வந்தான்? இந்நேரத்தில் எஸ்டேட்டில் தானே இருப்பான்?
நவநீதம் சிந்திக்கும்போதே “ஏய் இங்க வா” என அதிகாரமாக ஆட்காட்டிவிரலை நீட்டி அவளைத் தன்னிடம் வருமாறு அழைத்தான் அவன்.
அவன் நின்ற தோரணை நவநீதத்தில் அடிவயிற்றில் கிலியைப் பரப்பிவிட நடுங்கியபடி அவனருகே வந்து நின்று “சொல்லுங்க சார்” என்றாள்.
அடுத்த நொடி அவளது கண்கள் இருட்டின. கன்னமோ பாறையில் மோதியது போல வலித்தது. வேதனையில் உயிர் போக கண்ணீருடன் “சார்?” என்று அழுகுரலோடு கன்னத்தைப் பிடித்தபடி நின்றவளைக் கொல்லும் வெறியோடு ஏறிட்டான் ஏகலைவன்.


“எவ்ளோ தைரியமிருந்தா அந்தக் கொடிய மிதிச்சிருப்ப… தரைய பாத்து நடக்கமாட்டியா நீ? இன்னொரு தடவை உன் கால் அந்தக் கொடி மேல பட்டுச்சுனா நடக்க கால் இல்லாம துண்டா வெட்டி எறிஞ்சிடுவேன்… பி கேர்ஃபுல்” என கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து பங்களாவுக்குள் போய்விட்டான் ஏகலைவன்.
கன்னமெங்கும் விண் விண்னென்ற வலி தெறிக்க அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு அங்கேயே நின்றாள் நவநீதம்.
கலிங்கராஜனின் குடும்பத்தார் என்ன தான் கறாராக நடந்துகொண்டாலும் மரியாதைக்குறைவாக ஒருபோதும் அவளை நடத்தியதில்லை. பணம் திருடுபோன சமயத்தில் குமாரியின் குள்ளநரித்தனத்தால் மாட்டிக்கொண்டு விழித்தபோது கூட “நவனிக்கா” என்றே அழைத்த இனியாவின் ஞாபகம் வந்தது நவநீதத்துக்கு.
இந்த இராட்சசனிடம் வேலை பார்த்தால் இது தான் நிலமை என்பதற்கு உதாரணமாக இச்சம்பவத்தை எடுத்துக்கொண்டாள் அவள்.
நவநீதம் சிலை போல நின்று கொண்டிருக்கையில் கலிங்கராஜனின் குடும்பம் பொன்மலை எல்லையைத் தாண்டியிருந்தார்கள்.
காரின் பின்னிருக்கையில் ஜென்னி மற்றும் நித்திலனுடன் அமர்ந்திருந்த குமாரியின் முகம் இன்னும் தெளியவில்லை. கார் ஓட்டிக் கொண்டிருந்த கலிங்கராஜனிடம் தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினார் அவர்.
“யாரோ என்னமோ சொன்னாங்கனு இப்பிடி சொந்த ஊரை விட்டுக் கிளம்பிருக்க வேண்டாம் சார்… பசங்க முகமே சரியில்ல”
“உங்களுக்கு என் நிலமை புரியாது குமாரி… இருக்குறதை காப்பாத்த ஓடுறவன் நான்… கிளாரா இல்லாத நிலமைல நீங்க தான் பசங்க மனசை மாத்தி புது சூழ்நிலைய ஏத்துக்க வைக்கணும்… இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்லாதிங்க… என் மனசு ரணமா போயிருக்கு” என்றபடி வேதனை சூழ்ந்த வதனத்தோடு காரை ஓட்டிக்கொண்டிருந்தார் கலிங்கராஜன்.
குமாரி அமைதியானார். பின்னர் ஏதோ நினைவில் முகம் பிரகாசிக்க “நம்ம வேணும்னா இதன்யா மேடம் கிட்ட பேசிப் பாக்கலாமா சார்?” என்று கேட்க பிள்ளைகளின் வதனமும் தெளிந்தது. குறிப்பாக முன்னிருக்கையில் தந்தைக்கு அருகே அமர்ந்திருந்த மிச்செல்லின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி!
ஆனால் கலிங்கராஜன் குமாரியின் யோசனையை மறுத்தார். இருக்கிற பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம்.
“வேண்டாம் குமாரி… அவங்க இப்ப தான் ஆக்சிடெண்ட்ல இருந்து மீண்டு வந்துருக்காங்க… அவங்க கிட்ட போனா என் தலையும் உருளும்… உங்களுக்குச் சில விசயம் புரியாது… இனிமே என் குடும்பத்துக்கும் பொன்மலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… நான் செய்யவேண்டிய வேலை ஒன்னே ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு… அதைச் செஞ்சு முடிச்சிட்டேன்னா என் மனசுல இருக்குற குற்றவுணர்ச்சி போகும்” என்றார் கனத்தக் குரலில்.
அது என்ன வேலையென குமாரிக்குப் புரியவில்லை. ஜென்னி அவரது மடியில் படுத்துக்கொள்ள இதற்கு மேல் வேறு எதையும் யோசிக்காதவராக காரோடு சேர்ந்து ஓடிவரும் மரங்களையும் மலைச்சிகரங்களையும் பார்க்க ஆரம்பித்தார்