IIN 55

Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள்.
-By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Research


கோபாலின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறதென மார்த்தாண்டனிடம் இதன்யா தெரிவித்துவிட்டாள். கூடவே விசாரணை என்ற பெயரில் அவரை உடனே நெருங்கினால் ஏகலைவனும் நிஷாந்தும் உஷாராகக் கூடுமென்பதால் அவனரை விட்டுப் பிடிப்போமென்றாள் அவள்.
“சரி மேடம்… ஆனா அந்தாளை எப்பவுமே கண்காணிச்சிட்டே இருக்கணும்” என்ற மார்த்தாண்டனின் யோசனையையும் அவள் மறுக்கவில்லை.
அவரிடம் பேசிவிட்டு வந்தவளை இரவுணவுக்கு அழைத்தார் அஸ்மத்.
சூடான இட்லிகள் தேங்காய் சட்னியின் சுவை அவளைக் கட்டிப்போட்டதால் அன்று கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட்டாள்.


“இன்னும் ரெண்டு இட்லி சாப்பிடுங்க” என்று உபசரித்த அஸ்மத்தின் அன்பும், அவளுக்குப் புரையேறியபோது தண்ணீர் தம்ளரை நகர்த்தி வைத்த ரசூல் பாயின் அனுசரணையும் இதன்யாவின் உள்ளத்தைத் தொட்டது.
அங்கே வந்ததும் இரண்டு மாதங்கள் தங்குவதற்கான தொகையைக் கொடுத்தபோது ரசூல் பாயும் அஸ்மத்தும் வாங்க மறுத்துவிட்டார்கள்.
“உங்களை நான் என் சகோதரியா நினைக்குறேன் மேடம்… காசு குடுத்து எங்களை அன்னியப்படுத்தாதிங்க” என்று சொன்னவரிடம்
“என் சகோதரனோட குடும்பச்சுமைய நான் பகிர்ந்துக்கிட்டதா நினைச்சுக்கோங்க பாய்” என்று புன்னகை மாறாமல் சொல்லி அவரது வாயை அடைத்துவிட்டாள் இதன்யா.
ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தின் மாதாந்திர செலவுகள் என்னவென அவளுக்கும் தெரியும். சும்மா ஒரு வீட்டில் உட்கார்ந்து தின்று அவர்களுக்குச் சுமையாக இருப்பதில் இதன்யாவுக்கு உடன்பாடு இல்லை. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளது படிப்புச்செலவு வேறு. எனவே தான் மொத்தமாக ஒரு தொகையை வற்புறுத்தி அஸ்மத்தின் கையில் திணித்துவிட்டாள்.
முபீனாவின் அறையில் தான் இதன்யாவுக்குப் படுக்கை போடப்பட்டிருந்தது. பொதுத்தேர்வு முடிந்து கல்லூரி கனவுகளுடன் இருந்தவள் இப்போது தான் இனியாவின் மரணம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்திருக்கிறாள். அவளிடம் இனியாவைப் பற்றி பேசி சோகத்தில் ஆழ்த்த விரும்பாதவளாகப் பொதுவான விசயங்களைப் பேசினாள் இதன்யா.
அப்படியே இருவரும் உறங்கியும் போனார்கள்.
மறுநாள் விடியலில் இதன்யா கண் விழித்தபோது முபீனா தொழுது கொண்டிருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் காலையில் நடைபயிற்சி செய்யலாமென ஜாக்கர்சுடன் கிளம்பினாள்.
பொடிநடையாக நடந்தவள் முழு ஊரையும் சுற்றி வந்தாள். அதிகாலை என்பதால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்களைத் தவிர வேறு யாரும் விழிக்கவில்லை போல.
மக்கள் நடமாட்டமற்ற மலைக்கிராம சாலை நிச்சலனமாக இருந்தது. ஆங்காங்கே பனிப்புகை!

மலைச்சிகரங்களின் பின்னணியில் பொன்மலை தனக்குள் வைத்திருந்த இரகசியங்களை மறைத்துக்கொண்டு அழகாகத் தெரிந்தது. அதிகாலை கொடுத்த உற்சாகத்தில் நடைபயிற்சி ஜாகிங்காக மாறியது.
அந்த ஜாகிங் ஏகலைவனின் வீட்டின் அருகே வந்ததும் சில நொடிகள் தடைபட்டது. அங்கே நின்றதுமே இரவில் மலர்ந்து மணம் பரப்பி முடித்த ராமபாணப்பூவின் மிச்ச சொச்ச நறுமணம் காற்றில் மிதந்து அவள் நாசியைத் தீண்டியது.
அந்த நறுமணத்தின் பின்னே வெளியே சொல்லப்படாத பயங்கரமான இரகசியம் இருப்பதாகத் தோன்றியது இதன்யாவுக்கு. அவள் அங்கிருந்து நகர முற்பட்ட நொடியில் ஏகலைவனின் வீட்டிலிருந்து யாரோ வெளியே வருவது போல தெரிந்தது.
இதன்யா ஓடி ஒளியவெல்லாம் இல்லை. அங்கேயே நின்று வருவது யாரென பார்க்கத் தயாரானாள்.
காட்டன் புடவை நுனியைத் திருகியபடி பரபரப்பும் பதற்றமுமாகத் தரையில் பார்வையைப் பதித்தபடி வந்தவள் நவநீதம். அவளைப் பார்த்ததும் இனியாவின் புருவங்கள் நெறிந்தன.
நவநீதமோ மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன்னை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த இதன்யாவைக் கண்டதும் பேயைக் கண்டவள் போல அஞ்சி நடுங்கினாள்.
கண்ணின் கருவிழிகள் வெளியே தெறித்துவிடாத குறை! அதிகாலை குளிரிலும் அத்துணை வியர்வை முத்துகள் அவள் வதனத்தில்!
இவளுக்கு என்னைக் கண்டு என்ன பயம்? சந்தேகப்பார்வையோடு அவளை நெருங்கினாள் இதன்யா.
“குட்மானிங் நவநீதம்! எப்பவுமே ஏர்லி மானிங் முழிச்சிடுவியா?” என்று சினேகமாக வினவினாள். பொய்யான சினேகம் தான். ஆனால் அந்தக் குரல் நவநீதத்தின் பயத்தைக் கொஞ்சம் குறைத்தது போல. உடல்மொழியில் தெரிந்த பதற்றம் கொஞ்சம் அடங்க சீராகப் பேசத் துவங்கினாள்.
“ஆமா மேடம்! முதலாளி ஐயா ஏகலைவன் சார் கிட்ட ஒரு ஃபைலை குடுக்கச் சொன்னாங்க… முதலாளி கம்பெனில ஏகலைவன் சார் பணம் போட்டாங்கல்ல… அது சம்பந்தமான வேலை நடக்குது மேடம்… முதலாளி ஐயாவே குடுக்கலாம்னு இருந்தாரு… ஆனா ஏகலைவன் சாருக்கு மெட்ராசுல ஏதோ வேலை இருக்குனு இன்னைக்குக் காலைல கிளம்பப்போறதால அவசரமா ஃபைலைக் கேட்டாங்க”
கூட்டிக் குறைத்து காதில் விழுந்த தகவல்களைச் சேர்த்து கோர்வையாகச் சொல்லி முடித்தாள் நவநீதம். வெறுமெனே கேட்டால் இதன்யா சமாதானமாகிவிடுவாள் போல. ஆனால் சந்தேகக்கண்ணோடு அல்லவா அவள் நவநீதத்தைக் கவனித்தாள். எனவே அவள் நம்பவில்லை. நவநீதத்திடம் அதைக் காட்டிக்கொள்ளவும் இல்லை.
“சரி… நீ கிளம்பு… உனக்கு நிறைய வேலை இருக்கும்… நான் ஜாகிங்கைக் கண்டினியூ பண்ணுறேன்” என்றபடி நவநீதத்தின் பதிலைக் கேட்க அக்கறை இல்லாதவளாகக் காட்டிக்கொண்டு இடத்தைக் காலி செய்தாள் இதன்யா.
விட்டால் போதுமென அங்கிருந்து சாந்திவனத்துக்குள் ஓடிவிட்டாள் நவநீதம். பின்னே திரும்பிய இதன்யா ஓடியவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு ஜாகிங்கைத் தொடர்ந்தாள்.
ஜாகிங் முடித்துவிட்டு அவள் வீட்டுக்குத் திரும்பிய நேரம் போரடிக்கிரதென அஸ்மத்திடம் கூறிக்கொண்டிருந்தாள் முபீனா.
“இப்ப அதுக்கு என்ன பண்ண?”
“நான் திருநெல்வேலில கம்ப்யூட்டர் க்ளாஸ் போகட்டுமாம்மா? வாப்பாட்ட பெர்மிசன் வாங்கிக் குடும்மா” என்று சிணுங்கினாள் அவள்.
“அவரே போகச் சொன்னாலும் நான் உன்னை அனுப்பமாட்டேன் முபீ… பொட்டப்புள்ளைய அனுப்பிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்க என்னால ஏலாதும்மா” என்று சொல்லிவிட்டு அஸ்மத் காலையுணவு தயாரிப்பில் மும்முரமாகிவிட முபீனாவின் முகம் வாடிப்போனது.
“குட்மானிங் முபீ” என்றபடி அங்கே வந்த இதன்யாவிடம் முகம் மலர காலைவணக்கம் சொன்னாலும் முகவாட்டம் மாறவில்லை அவளுக்கு.
“ஜாகிங் போயிருந்திங்களா? இவ வாப்பா தொழுகைய முடிச்சிட்டு வந்தப்ப உங்களைத் தேடுனாங்க” என்றபடி தேநீர் நிரம்பிய தம்ளரை அவளிடம் நீட்டினார் அஸ்மத்.
“நான் பாய் கிட்ட பேசிக்கிறேன்… இப்ப உங்க கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு பேசணும்” என இதன்யா பீடிகை போடவும் அஸ்மத் தோசை சுட்டபடி அவளது பேச்சில் செவியைப் பதித்தார்.
“ஏன் முபீய கம்ப்யூட்டர் க்ளாஸ் போகவேண்டாம்னு சொல்லுறிங்க?”
தோசை மாவை பரபரவென கல்லில் தேய்த்த அஸ்மத்தின் கரத்தில் ஒரு தடுமாற்றம். முழுவதுமாகத் தேய்த்து எண்ணெய் ஊற்றிவிட்டு இதன்யாவின் பக்கம் திரும்பியவரின் கண்ணெங்கும் சோகம் மட்டுமே!
முபீனாவைக் கண்களால் அவர் காட்டவும் புரிந்துகொண்டாள் இதன்யா.
“முபீ என் பைக் பேக்ல ஒரு பெண்ட்ரைவ் இருக்கும்… எடுத்துட்டு வர்றீயா? என அவளை அனுப்பிவைத்தாள்.
அவள் போனதும் பெருமூச்சு விட்ட அஸ்மத் “இனியா பொண்ணு இறந்து போனதுல இருந்து இவளைத் தனியா எங்கயும் அனுப்ப பயமா இருக்கு மேடம்… இனியா பொண்ணு தைரியமானவ… அவளையே இப்பிடி கொன்னிருக்காங்க… முபீக்கு அவ அளவுக்குத் தைரியம் கிடையாது… இன்னும் இந்த ஊர்ல இருக்குற சில கிறுக்குகூட்டம் சாத்தான் வழிபாட்டை நிறுத்தல… ரோஷண் தான் செத்துட்டானேனு நிம்மதியா இருக்கவும் முடியல… அவனுக்குப் பதிலா வேற ஒருத்தன் அந்தக் குரூப்புக்குத் தலைவன் ஆகிருக்கலாம் தானே? நான் மட்டுமில்ல, ஊருக்குள்ள பொம்பளைப்புள்ளைய பெத்த ஒவ்வொரு அம்மாவும் தன் பொண்ணுக்கு எதுவும் ஆகிடாம பத்திரமா ஸ்கூல் காலேஜ்ல இருந்து வீட்டு க்கு வரணும்னு தினமும் துடிக்குறோம்” என்றார்.
இதன்யா அவரது கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.
“இனியா கேஸ் முடிஞ்சதும் போலீஸ் அந்த குரூப்ல இருந்த ஆளுங்க எல்லாரையும் ஸ்டேசனுக்கு வர வச்சு மிரட்டி அனுப்பி வச்சிருக்காங்க அஸ்மத்… அவங்களுக்கு இனிமே சாத்தான் வழிபாடுங்கிற எண்ணமே வராது… அவங்க ஒவ்வொருத்தரையும் போலீஸ் கண்காணிச்சிட்டிருக்காங்க… உங்களுக்குத் தெரியாதா? சர்ச் பக்கத்துல இருந்து காட்டுக்குப் போற ரகசியப்பாதை பக்கத்துல சி.சி.டி.வி வச்சாச்சு… இனியாவோட டெட் பாடி கிடைச்ச இடத்துலயும் பகல்ல போலீஸ் ரோந்து வருவாங்க.. இதைத் தாண்டி அவங்களால சாத்தான் வழிபாடுல்லாம் பண்ண முடியாது… அதுக்குப் போலீஸ் தடை போட்டிருக்காங்க… நீங்க பயப்படாம முபீயை கம்ப்யூட்டர் க்ளாஸ் அனுப்பிவைங்க… உங்களுக்கு இன்னும் பயம் தீரலனா நானே என் பைக்ல முபீய திருநெல்வேலில கொண்டு போய்விட்டுட்டு கூட்டிட்டு வர்றேன்… எப்பிடியும் நான் இங்க சும்மா தான் இருக்கப்போறேன்”
“உங்களுக்கு எதுக்கு மேடம் சிரமம்? ஆக்சிடெண்ட் ஆன உடம்பை வச்சுக்கிட்டு நீங்க அவ்ளோ தூரம் டெய்லியும் அப் அண்ட் டவுன் போயிட்டு வந்தா நல்லாவா இருக்கும்?”
“நான் சும்மா இருந்தேன்னா என் மூளை ஏடாகூடமா யோசிக்கும் அஸ்மத்… அதுக்காகத் தான் சொல்லுறேன்… நான் முபீயை அழைச்சிட்டுப் போயிட்டுப் பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன்…. பிலீவ் மீ”
இதன்யா மனப்பூர்வமாகச் சொன்னதும் அஸ்மத்தின் உள்ளத்தில் முபீனாவின் பாதுகாப்பு குறித்து எழுந்த பயம் மறைந்துவிட்டது.
ரசூல் பாயிடம் பேசி முபீனாவை திருநெல்வேலி சந்திப்பிலிருந்த பிரபல கணினி பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை கணினி பயிற்சிக்குச் சேர்த்துவிட்டாள் இதன்யா.
அதுவும் அன்றே செய்தாள். முபீனாவுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
“தேங்க்யூ அக்கா”
மகிழ்ச்சியோடு சொல்லி இதன்யாவின் கன்னங்களைப் பிடித்துக் கொஞ்சிவிட்டு ஓடிவிட்டாள் அச்சிறுபெண்.
அச்செய்கை ஒரு நொடியேனும் இதன்யாவைத் தடுமாறச் வைத்துவிட்டது. காரணம் அவள் மட்டுமே அறிவாள்! மனதைத் தடுமாறச் செய்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு ஏகலைவனின் வீட்டிலிருந்து நவநீதம் ஓடோடி வந்ததை மார்த்தாண்டனிடம் தெரிவிக்க காவல்நிலையத்துக்கு விரைந்தாள்.
அதை மொபைலில் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் காவல்நிலையத்தில் காலடி படாமல் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது. எனவே இதைச் சொல்லும் சாக்கில் அங்கே போய் நின்றாள்.
சஸ்பெண்ட் ஆன உயரதிகாரி என்ற அலட்சியமில்லாமல் முன்பு போலவே மரியாதை கிடைத்தது அவளுக்கு.
மார்த்தாண்டனிடம் இத்தகவலைச் சொன்னதும் அவர் கூறிய இன்னொரு செய்தி இதன்யாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.


“கோபால், நவநீதம் ரெண்டு பேரும் ஏகலைவன் வீட்டுக்குப் போனதுக்குக் காரணம் இனிமே அவங்க ரெண்டு பேரும் அவரோட வீட்டுல தான் வேலை பாக்கப் போறாங்க” என்றார் அவர்.
“வாட்? அவங்க கலிங்கராஜனோட ஸ்டாஃப்ஸ்”
“உங்க கிட்ட குமாரி எந்த விவரத்தையும் சொல்லலையா? கலிங்கராஜன் அவரோட பசங்களோட சேர்ந்து திருநெல்வேலில இருக்குற அவரோட பங்களாக்கு ஷிப்ட் ஆகப்போறார்… அங்க இவ்ளோ ஆட்கள் தேவைப்படமாட்டாங்கனு தன் வீட்டு வேலையாளுங்க எல்லாரையும் ஏகலைவன் கிட்ட பேசி அவரோட வீட்டுல வேலை செய்ய அனுப்பிவச்சிட்டாராம்… குமாரியும் புதுசா சேர்ந்திருக்குற வாட்ச்மேனும் அவரோட ஃபேமிலி கூட திருநெல்வேலிக்குப் போகப்போறாங்க… தோட்டத்தைப் பராமரிக்க ஒரே ஒரு ஆள் மட்டும் போதும்னு சொல்லிட்டாராம் கலிங்கராஜன்”
இதன்யாவின் திகைப்பு இப்போது குழப்பமாகிப் போனது.
“நேத்து அவரோட பசங்களைப் பாத்தப்ப கூட அவங்க என் கிட்ட இதை சொல்லலையே சார்?”
“அவர் நேத்து ஆபிஸ்ல இந்த முடிவை எடுத்தாராம்… கோபாலுக்கும் இன்னும் ரெண்டு கார்டன் ஸ்டாஃப்சுக்கும் செக் குடுத்து செட்டில்மெண்டை முடிச்சிட்டாராம்… நவநீதத்துக்கு நேத்து நைட் செட்டில் பண்ணுனதா சொன்னார்”
“சொன்னார் மீன்ஸ்,…?”
“இதெல்லாம் கோபால் பத்தி கால் பண்ணி விசாரிச்சப்ப கலிங்கராஜன் சொன்ன தகவல்”
அப்படி என்றால் கோபாலும் நவநீதமும் ஏகலைவனைச் சந்திக்கப்போனது வேலை விசயமாகத் தானா? நான் தான் அனைத்தையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறேனோ?
இதை வெளிப்படையாகச் சொன்னதும் இல்லையென்றார் மார்த்தாண்டன்.
“நிஷாந்த் விவகாரத்துல உங்க சந்தேகம் நூறு சதவிகிதம் சரி… ஏகலைவன் கிட்டவும் ஏதோ தகிடுதத்தம் இருக்கு… ரொம்ப திறமையா அதை மடைமாத்தி அடுத்தவங்க மேல நம்ம கவனத்தை அந்தாளு திருப்பிடுறார்… ஒரு போலீஸ் ஆபிசரோட சந்தேகம் எப்பவும் வீணாகாது மேடம்… எந்த பாயிண்டையும் நம்ம அலட்சியப்படுத்தவேண்டாம்… இப்போதைக்கு நம்ம கணிப்பு கொஞ்சம் தடுமாறியிருக்கு… அவ்ளோ தான்… மத்தபடி இனியா கேஸ்ல நிஷாந்த் – ஏகலைவனோட பங்கு பத்தின ரகசியம் இன்னும் மூடுமந்திரமா தான் இருக்கு”
“ஏகலைவனோட டீ எஸ்டேட் ஆபிசுக்கு நாளைக்குப் போயிடலாமா சார்?”
“ஷ்யூர் மேடம்… இன்னைக்கு நீங்க அவசரவேலைனு திருநெல்வேலிக்குப் போனிங்களே, அந்த வேலை நல்லபடியா முடிஞ்சுதா?” என விசாரித்தார் மார்த்தாண்டன்.
“நல்லபடியா முடிஞ்சுது… ரசூல் பாய் மக முபீனா திருநெல்வேலில கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டா… அவளை அழைச்சிட்டுப் போய் க்ளாஸ்ல சேர்த்துவிட்டாச்சு” என்றாள் இதன்யா.
கூடவே “நாளைக்கு ஈவ்னிங் பூங்குன்றத்துக்குப் போகலாம்னு இருக்கேன்” என்றாள் அவள்.
ஏன் என்பது போல மார்த்தாண்டன் பார்க்கவும் “ஜஸ்ட் அங்க உள்ள கோவிலுக்குப் போற மாதிரி ஜானைப் பத்தியும் அவரோட பொண்ணைப் பத்தியும் விசாரிக்கப்போறேன்” என்றாள்.
“திடீர்னு ஜானைப் பத்தி ஏன் விசாரிக்க நினைக்குறிங்க மேடம்?”
“ஜானோட பொண்ணு சோபியா இப்ப பாளையங்கோட்டைல சிஸ்டர்ஸ் கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்குறதா நேத்து நவநீதம் சொன்னா… அவ படிப்புச்செலவைக் கலிங்கராஜன் பாத்துக்குறாரானு கேட்டதுக்கு இல்லனு சொல்ல வந்துட்டு டக்குனு ஆமா சொன்னா… அதுல இருந்தே படிப்புச்செலவைப் பாக்குறது கலிங்கராஜன் இல்லனு புரிஞ்சுது… அப்ப சோபியாவை கவனிச்சிக்குறது யாருனு தெரிஞ்சிக்கணும்ல… ஹூ நோஸ், இந்த சின்ன பாயிண்ட் கூட இனியாவோட கேஸ்ல பெரிய திருப்புமுனைய ஏற்படுத்தலாம்”
மார்த்தாண்டன் சரியென்றவர் இதன்யாவுடன் மகேந்திரனை அனுப்பவா என கேட்டார்.
“இல்ல சார்… நான் தனியா போனா தான் சரியா இருக்கும்… மகேந்திரன் சாரோட போனேன்னா போலீஸை பாத்ததும் உண்மைய சொல்ல மக்கள் தயங்கலாம்” என்றாள் இதன்யா.
மார்த்தாண்டனிடம் பேசிவிட்டு ரசூல் பாயின் வீட்டுக்குக் கிளம்பினாள் இதன்யா.