IIN 54

Secondary psychopath எனப்படும் சோசியோபாத்கள் வெகு சுலபத்தில் வன்முறைக்கான தூண்டுதல்களால் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை, உங்களின் ஏதோ ஒரு செயல் அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டால் யோசிக்காமல் உங்களைத் தாக்கத் துணிவார்கள். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்தத் தூண்டுதல் அவர்கள் பட்ட காயம், கசப்பான அனுபவம், வன்கொடுமை, உதாசீனம், குடும்ப உறுப்பினர்களின் இறப்போடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருக்கும். சாதாரண மனிதர்கள் அச்சமயத்தில் பெரிதாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால் சோசியோபாத்களோ ஆக்ரோசத்தோடு வன்முறையில் இறங்கி சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள்.
-By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Researcher


இதன்யா பொன்மலைக்கு வந்து சேர்ந்துவிட்டாள். இங்கே வருவதற்கான முடிவுக்கு மயூரியும் வாசுதேவனும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.


“ஐ நீட் ரெஸ்ட்… இந்த ரெண்டு மாசத்துல என் மனசு கொஞ்சம் அமைதியாகணும்னா ஹில் ஸ்டேசன் மாதிரி ப்ளேஸுக்குப் போங்கனு டாக்டர் சொன்னதை மறந்துட்டிங்களாப்பா?” என்று மருத்துவர் சொன்னதைக் காரணம் காட்டி எப்படியோ அவர்களைச் சமாளித்தவள் பைக்கை பேருந்தில் ஏற்றி, அதே பேருந்தில் திருநெல்வேலிக்கு வந்துவிட்டாள்.
அங்கிருந்து அவளைப் பொன்மலைக்கு அழைத்து வந்தவர் ரசூல் பாய். ஆம்! அவரது வீட்டில்தான் வரப்போகிற அறுபது நாட்களையும் கழிக்கவிருக்கிறாள் இதன்யா.
அஸ்மத்தும் முபீனாவும் அவளை அன்போடு வரவேற்றார்கள். இதன்யா வந்த தினத்தன்று மாலையில் மகேந்திரனோடு ரசூல் பாயின் வீட்டுக்கு விஜயம் செய்தார் மார்த்தாண்டன்.


தேநீர் மற்றும் சிற்றுண்டியோடு ஏகலைவனின் பெயரும் அவர்களின் வாயில் அரைபட்டது.
“அந்தாளு ரொம்ப தெளிவா உங்களைச் சிக்கவச்சிருக்கான் மேடம்… பணக்காரத்திமிரு… அதை அடக்கி அவன் மறைச்ச உண்மை என்னனு கூடிய சீக்கிரமே கண்டுபிடிக்கணும்” என்றார் மார்த்தாண்டன்.
“சார் எனக்கு ஒரு ஐடியா”
மகேந்திரன் இடையில் புகுந்து சொல்லவும் “என்ன ஐடியா?” என வினவினார்.
“மேடமோட ஆக்சிடெண்ட் கேசை நம்ம தான் விசாரிக்குறோம்… லாரி டிரைவர்சை அடையாளம் காட்ட மேடமை எஸ்டேட் ஆபிசுக்கு அழைச்சுட்டுப்போவோம்… இவங்களைப் பாத்ததும் அந்தாளோட ரியாக்சன் எப்பிடி இருக்குனு கவனிப்போம்… தப்பு செய்யாதவன்னா சாதாரணமா இருப்பான்… தப்பு செஞ்சிருந்தா கட்டாயம் அவன் மேடமை பாத்து பயப்படுவான்… டென்சன் ஆவான்”
“எனக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல அந்தாளோட சதி இருக்கும்னு நினைக்குறிங்களா மகேந்திரன்?” என யோசனையோடு வினவினாள் இதன்யா.
“அது ஆக்சிடெண்ட் இல்ல, மர்டர் அட்டெம்ப்ட்னு நான் நினைக்குறேன் மேடம்… நீங்க இனியா கேஸை விசாரிச்ச ஆபிசர்… உங்களைக் கொல்லணும்னு நினைக்குறவன் கட்டாயம் இனியா கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கணும்… அது ஏகலைவனோ நிஷாந்தோ, நம்ம கட்டாயம் கண்டுபிடிச்சே ஆகணும்”
மகேந்திரன் சொன்ன பாயிண்ட் சரியென்பதால் மறுநாளே சக்கரவர்த்தி தேயிலை தோட்ட அலுவலகத்துக்கு இதன்யாவை அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு மார்த்தாண்டன் கிளம்பினார்.
அவர்கள் கிளம்பியதும் இதன்யா அஸ்மத்திடம் சொல்லிக்கொண்டு கலிங்கராஜனின் வீட்டுக்குச் சென்றாள். புது வாயில் காவலாளிக்கு அவள் யாரென தெரியவில்லை.
நல்லவேளையாகக் குமாரி எதற்காகவோ அங்கே வந்தார். வந்தவர் இதன்யாவை உள்ளே அழைத்துக்கொண்டார்.
“நல்லா இருக்கிங்களா மேடம்? உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுனு பசங்க சொன்னாங்க… என்னால ஹாஸ்பிட்டலுக்கு வர முடியல” என்றபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் அவர்.
“இன்னும் உடம்பு சரியாகல… டாக்டர் தான் ஹில் ஸ்டேசன்ல ரெஸ்ட் எடுங்க, மலை காத்து உங்க உடம்புக்கு நல்லதுனு சொன்னார்… அதனால இங்க வந்தேன்… தெரியாத இடத்துல போய் தனியா ஓய்வெடுக்குறதுக்குப் பதிலா இந்த ஊர்ல தெரிஞ்ச ஆளுங்களைப் பாத்து பேசுனா ரிலாக்சா இருக்கும்னு தோணுச்சு… யோசிக்காம வந்துட்டேன்”
“இப்ப எங்க தங்கியிருக்கிங்க மேடம்?”
“ரசூல் பாய் வீட்டுல”
ஹாலுக்குள் அவர்கள் பிரவேசித்ததும் குமாரி பிள்ளைகளை அழைத்தார்.
இயந்திரம் போல வந்தவர்கள் இதன்யாவைக் கண்டதும் குதூகலத்துடன் அவளது இடையைக் கட்டிக்கொண்டார்கள்.
பின்னர் மிச்செல் அவளுக்கு வலிக்குமென சொன்னதும் பதறி விலகினார்கள்.
“உங்களுக்கு இன்ஜூரி இருந்துச்சுல்ல?”
ஜென்னி கண்களை விரித்துக் கேட்க “அது எல்லாமே ஆறிடுச்சு… அதை விடுங்க… ஹவ் ஆர் யூ கய்ஸ்? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறிங்களா? படிப்புலாம் எப்பிடி போகுது?” என்று விசாரித்தாள்.
“நல்லா படிக்குறோம் மேம்… ஆன்வல் எக்சாம் நடக்குது… நாங்க இன்னும் ஒன் வீக் ஸ்கூலுக்குப் போவோம்… அப்புறம் லீவ்” என்றாள் மிச்செல்.
“குட்… இன்னும் ரெண்டு மாசத்துக்கு நான் இங்க தான் இருப்பேன்.. உங்களுக்குப் போரடிச்சுதுனா சொல்லுங்க… ஏதாச்சும் அட்வென்சர் பண்ணலாம்” என்று இதன்யா குழந்தைகளிடம் பேசும்போதே குமாரி நவநீதத்தை அழைத்தார்.


வந்தவளோ இதன்யாவைக் கண்டதும் பேயறைந்தாற்போல நின்றாள்.
கைகளை புடவைத்தலைப்பில் துடைத்தபடி கண்களை உருட்டியவளிடம் “என்ன கண்ணுமுழி தெறிச்சு விழுற மாதிரி மேடமை முறைக்குற? மேடமுக்குக் காபி கொண்டு வா” என்று அதட்டல் போட்டார் குமாரி.
“இதோ… போறேன்” எனத் தடுமாறியபடியே ஓடினாள் சமையலறையை நோக்கி.
“இவளுக்கு என்னாச்சு? ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிக்குறா?” என்று தனக்குள் கேட்டுக்கொண்ட குமாரி குழந்தைகள் இதன்யாவோடு பேசிக்கொண்டிருக்கட்டுமென பாதியில் விட்ட வேலையை முடிக்கக் கிளம்பினார்.
எங்கே என இதன்யா கேட்கவும் “கோபாலுக்கு ஃபைனல் செட்டில்மெண்ட் பண்ணுன செக்கை கலிங்கராஜன் ஐயா குடுக்கச் சொன்னார்… அதைக் குடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்துக்குப் போய்விட்டார் குமாரி.
கலிங்கராஜன் கோபாலை வேலையை விட்டு அனுப்புகிறாரா? எதற்காக? கிளாராவைக் காவல்துறையிடம் மாட்டிவிட்டதற்காகவா?
சந்தேகத்தோடு யோசிக்க ஆரம்பித்தாள் அவள். சஸ்பென்சன் என்பது இதன்யா அணிந்திருந்த காவல்துறை சீருடைக்குத் தானே தவிர, அவளது மூளைக்கு இல்லையே!
“அடுத்த வாரம் அம்மாவ பாக்கப் போறோம்” என்றார்கள் குழந்தைகள்.
கிளாராவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்திருந்தார்கள். கைதிகளின் குடும்பத்தார் அவர்களைப் போய் பார்ப்பதற்கென சில வழிமுறைகள் உண்டு. குழந்தைகளின் ஏக்கத்தைத் தீர்க்க கலிங்கராஜன் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பார் போல.
நவநீதம் நடுங்கும் கரத்தோடு நீட்டிய காபி கோப்பையைப் பதவிசாக வாங்கிக்கொண்டாள் இதன்யா. அவளது விழிகள் நவநீதத்தின் செயல்பாடுகளைச் சந்தேகத்தோடு நோட்டமிட்டன.
காபியை அருந்தியபடியே சமையலறையை நோக்கி ஓடவிருந்தவளை ஒரு கேள்வி கேட்டு அசையாமல் நிற்க வைத்தாள் இதன்யா.
“உனக்கு ஜானைப் பாக்கணும்னு தோணலையா நவநீதம்?”
சிலையாய் நின்றவள் பதற்றத்தோடு “எங்க போறது மேடம்? எனக்கு இந்த வீட்டு வேலையே சரியா இருக்கு” என்றாள்.
“ஓஹ்! ப்ச்… பாவம் தான்… அது சரி… அவர் பொண்ணையாச்சும் போய் பாப்பியா? அந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்குறா?”
இதன்யா சாதாரணமாகக் கேட்கிறாளா விசாரிக்கிறாளா என்று குழம்பினாள் நவநீதம். அதைக் கண்டு கொண்ட இதன்யா முறுவலித்தாள்.
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன்… என்னைப் பாத்து நீ பயப்படவேண்டாம்… பிகாஸ் இனியாவோட மர்டர் கேஸ் முடிஞ்சாச்சு… நானும் சஸ்பென்சன்ல தான் இருக்கேன்”
“அதில்லங்க மேடம்… நான் எப்பிடி அந்தப் பொண்ணை போய் பாக்குறது? அவ அப்பனைக் கட்டுனவளா இருந்தா உரிமையோட ஹாஸ்டல்ல போய் பார்ப்பேன்… அவ பாளையங்கோட்டைல சிஸ்டர்ஸ் கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்குறா… என்னை எல்லாம் அங்க உள்ள விடமாட்டாங்க” என்றாள் நவநீதம்.
“அவ படிப்பு செலவு யார் பாத்துக்குறாங்க? கலிங்கராஜன் சாரா?”
“இ…” என்றவள் சட்டென நிறுத்தி “ஆமா மேடம்” என்று திருத்தினாள் அவசரமாக.
அவளது அவசர திருத்தத்தைக் கண்டுகொள்ளாதவளைப்போல “கலிங்கராஜனுக்கு எவ்ளோ நல்ல மனசு” எனப் பாராட்டினாள் இதன்யா.
நவநீதம் கடனே என இளித்து “ஆமா மேடம்” என்கவும் “சரி நீ ஏன் நிக்குற? போய் உன் வேலைய பாரு… நான் காபி குடிச்சிட்டு அப்புறமா கப்பை கொண்டு வர்றேன்” என்றாள் இதன்யா.
“இல்ல மேடம்…” என அவள் தயங்கியபோதே குமாரி வந்துவிட்டார்.
“அதான் மேடம் சொல்றாங்கல்ல, பசங்களுக்கு சாண்ட்விச் ரெடி பண்ணு போ” என அவளைச் சமையலறைக்கு விரட்டினார் அவர்.
அவளது தலை மறைந்ததும் “வர வர இவ நடவடிக்கை ரொம்ப புதிரா இருக்கு” என்று முணுமுணுத்தபடி எதிர் சோபாவில் அமர்ந்துகொண்டார்.
இதன்யா குழந்தைகளைத் தேர்வுக்குப் படிக்கச் சொல்லி அனுப்பியவள் கிளாரா இல்லாமல் இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என குமாரியிடம் வினவினாள்.
“பழகிக்கத் தானே மேடம் செய்யணும்… இதுல்லாம் நடக்கும்னு கற்பனைல கூட நினைச்சதில்ல… ஆனா நடந்துடுச்சு… நான் ஒன்னு சொன்னா நீங்க கோவப்படமாட்டிங்களே?”
பீடிகையோடு கேட்டார் அவர்.
“சொல்லுங்க” என்றாள் இதன்யா மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு.
“கிளாரா கொலை செய்யுற அளவுக்குப் போகமாட்டா மேடம்.. அவ புத்தி தடுமாறி தப்பான பாதைல போனது உண்மை…. பட் இனியாவ கொல்லணும்ங்கிற எண்ணம் அவளுக்கு எப்பவுமே வந்திருக்காது… அவ மிச்செல்லையும் இனியாவையும் வேற வேறனு நினைச்சதில்ல” என்றார் குமாரி.
“அதனால தான் அவங்க மேல எனக்குச் சந்தேகம்… அவங்களை அரெஸ்ட் பண்ண இந்தவீட்டுக்குள்ள நான் வந்தப்பட் அவங்க மிச்செல்லைத் தரக்குறைவான வார்த்தைகளால திட்டிட்டிருந்தாங்க… அவங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் இனியாவையும் அவங்க எவ்ளோ மோசமா நினைச்சிருக்காங்கங்கிறதுக்கு ஆதாரம்… இங்க பாருங்க குமாரி, உங்களுக்கு அவங்க ஆதரவு குடுத்ததால நல்லவங்க ஆகிடமாட்டாங்க” என்று முத்தாய்ப்பாகச் சொல்லிவிட்டு எழுந்தாள் இதன்யா.
குமாரியின் முகம் சோகமானது.
“லாஸ்ட் டைம் நான் வந்தப்ப பசங்க ரொம்ப வருத்தத்துல இருந்தாங்க… இந்தத் தடவை அவங்க முகத்துல தெளிவு தெரியுது… அவங்களைப் பத்திரமா பாத்துக்கோங்க… நான் கிளம்புறேன்” என்றவள் வாயிலை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டு நின்றாள்.
குமாரியை நிதானமாகத் திரும்பிப் பார்த்தவள் “கிளாரா இனியாவை கொல்லலைங்கிறதுக்கு எதாச்சும் ஸ்ட்ராங்கான ஆதாரம் கிடைச்சா என் கிட்ட சொல்லுங்க… என்னால ஆன முயற்சிய நான் கண்டிப்பா செய்வேன்” என்றாள்.
இப்போது குமாரியின் முகத்தில் சந்தோசம். கூடவே குழப்பமும்.
“நீங்க தானே அவளை அரெஸ்ட் பண்ணுனிங்க?” என்று கேட்டார் அவர்.
“நான் தான் அரெஸ்ட் பண்ணுனேன்… பிகாஸ் எனக்குக் கிடைச்ச ஆதாரமும், சாட்சிகளும் கிளாராவுக்கு எதிரா இருந்துச்சு… ஒரு போலீஸ் ஆபிசரா நான் என் கடமைய செஞ்சேன்… சட்டத்தைப் பொறுத்தவரை ஆதாரம் சாட்சி இருந்துச்சுனா குற்றவாளிக்குத் தண்டனை குடுத்தே ஆகணும்… ஆனா அதே சட்டம் நிரபராதி ஒருத்தவங்க தண்டிக்கப் படுறதை தடுக்கத் தான் கேஸ் ரீ-ஓப்பன்ங்கிற ஆப்சனையும் குடுத்திருக்கு… உங்களுக்குப் புரிஞ்சிக்கும்னு நினைக்குறேன்” என்று பூடகமாக உரைத்துவிட்டுச் சாந்திவனத்தை விட்டு வெளியேறினாள் இதன்யா.
அப்போது அவள் ஒரு காட்சியைக் காண நேரிட்டது.
கலிங்கராஜனின் சாந்திவனத்தில் தோட்டமேலாண்மையாளராக வேலை செய்த கோபால் பதுங்கி பதுங்கி ஏகலைவனின் வீட்டிலிருந்து வெளியேறினார்.
கலிங்கராஜனின் வீட்டு ஊழியருக்கு ஏகலைவனின் வீட்டில் என்ன வேலை? இதன்யாவின் மூளை சந்தேகத்தோடு அவரை நோட்டமிட்டது.
அவரைத் தொடர்ந்து வெளியே வந்தார் ஏகலைவனின் ஒன்றுவிட்ட தமக்கையும் நிஷாந்தின் அன்னையுமான சாவித்ரி. இவருக்குத் தெரியாமல் தானே நிஷாந்த் சென்னையில் பிரகதி என்பவளோடு காதலில் கசிந்துருகிக்கொண்டிருந்தான்.
இந்தப் பெண்மணி அவனை வழக்கிலிருந்து காப்பாற்ற ஏகலைவனிடம் பேச வந்திருப்பார் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் கோபாலுக்கு இந்நேரத்தில் ஏகலைவனின் வீட்டில் என்ன வேலை?
யோசித்தபடியே சாவித்ரியிடம் வேகமாக நடந்து போனவள் அவரது தோளைத் தொடவும் திடுக்கிட்டுத் திரும்பினார்.
“வணக்கம் மேடம்”
தடுமாறியபடியே வணக்கம் சொன்னவரிடம் பதில் வணக்கம் சொன்னவள் “நிஷாந்த் கேஸ் என்ன லெவல்ல இருக்கும்மா?” என்று விசாரித்தாள்.
அவள் நிஷாந்திடம் கடைசி நேரத்தில் கனிவு காட்டியதாக சாவித்ரியின் எண்ணம். வழக்கறிஞரை அழைத்து வந்து பேசியபோது கடுமை காட்டாத இதன்யாவின் இயல்பை அவர் கனிவென நினைத்துக்கொண்டார்.
எனவே பணிவாகப் பேசினார் அப்பெண்மணி.
“ஏகலைவன் கிட்ட பேசிருக்கேன்… இதுக்கு முன்னாடி கேரளால இப்பிடி ஒரு கேஸ்ல சம்பந்தப்பட்ட பையனை ரிலீஸ் பண்ணிட்டாங்களாம்… அதை சுட்டிக்காட்டி கேசை நடத்தலாம்னு அவன் சொன்னான் மேடம்”
“ஓஹ்! குட்… பாவம் படிக்குற பையனோட எதிர்காலம் ஸ்பாயில் ஆகிடக்கூடாது” என்று போலி அக்கறை காட்டினாள் இதன்யா.
அதிலேயே சாவித்ரி உருகிப்போனார். அவளது உடல்நிலை தேறிவிட்டதா என நலம் விசாரித்தார்.
அவரிடம் பதிலளித்தவள் கோபாலைப் பற்றி வினவினாள்.
“கலிங்கராஜனோட ஸ்டாஃபை ஏகலைவன் சார் அவரோட கார்டனுக்கு அப்பாயிண்ட் பண்ணிருக்காரா?”
“அச்சச்சோ அதுல்லாம் இல்ல… அந்தாளுக்கு என்ன கஷ்டமோ? என் தம்பி பணம் குடுத்து அனுப்புனான்”
அதற்கு மேலும் சாவித்ரி என்னென்னவோ சொன்னார். அதெல்லாம் இதன்யாவின் கருத்தில் பதியவில்லை.
கோபால் பதுங்கி வெளியேறியதும், ஏகலைவன் அவருக்குப் பணம் கொடுத்ததாக சாவித்ரி சொன்னதுமே அவள் தலைக்குள் ஓடியது.
கலிங்கராஜன் செட்டில்மெண்ட் முடித்து செக் கொடுத்த பிறகு ஏகலைவனிடம் எதற்காக கோபால் பணம் வாங்கவேண்டும்? சிறியதாக முளைத்த சந்தேகம் பெரிய கிளைகளைப் பரப்பியது இதன்யாவின் மனதில்.