IIN 53

Secondary psychopaths பொதுவாக Sociopaths என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனிமை, வன்கொடுமை, உதாசீனம் மற்றும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் காரணமாக சைக்கோபாத் ஆகிறார்கள். இந்த வகை சைக்கோபாத்களுக்கு ஆக்ரோசம், முரட்டுத்தனம் அதிகமாக இருக்கும். தற்கொலை எண்ணம் கொண்ட இவர்களது செயல்கள் எப்போது எப்படி இருக்குமென யாராலும் கணிக்க முடியாது
-From psychology today


பாம்பு சீறுவது போல சீறிக்கொண்டிருந்தாள் அந்த இளம்பெண். அவளது கண்களில் தான் அவ்வளவு கோபம்.
“இன்னும் எத்தனை நாள் நான் உனக்காக வெயிட் பண்ணணும் நிஷாந்த்? வீ போத் ஆர் மேஜர்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, கேசை காரணம் காட்டி நீ விலகுற… உண்மைய சொல்லு, உனக்கு நிஜமாவே என் மேல லவ் இருக்கா இல்லையா?”
நிஷாந்த் அவளது கையைப் பற்றி முத்தமிட்டான்.
“ஜஸ்ட் ஃபைவ் இயர்ஸ் பொறுத்துக்க பேபி… நான் ஸ்டடீஸ் முடிச்சிடுறேன்… மாமாவோட ப்ராப்பர்டி, கம்பெனி எல்லாமே எனக்குச் சொந்தமானதும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்… இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டா சைல்ட் மேரேஜ் போல ஃபீல் ஆகும்… பை த வே, என் காதலுக்குச் சொந்தக்காரி நீ மட்டும் தான் பிரகதி… ஏன் உனக்கு என் காதல் மேல நம்பிக்கை வரமாட்டேங்குது?” என ஆதங்கத்தோடு கேட்டான்.
இதன்யா அப்பெண் கூறப்போகும் காரணத்தைக் கேட்பதற்காக காதைக் கூர்த்தீட்டிக்கொண்டாள்.


“எனக்கு உன் மேல எக்கச்சக்கமா காதல் இருக்கு… காதல்னா என்னனு தெரியாத வயசுலயே முளைச்ச உணர்வு அது… கிட்டத்தட்ட மூனு வருசம் நம்ம காதலிக்குறோம்… ஆனா இந்த மூனு வருசத்துல உன்னால என் நம்பிக்கைய ஜெயிக்க முடியல… ஏன் தெரியுமா?”
நிஷாந்த் விழிக்க அவளோ காபியோ ஆற அமர அருந்தியபடி அசராமல் பதிலளித்தாள்.
“ஏன்னா என் காதலிக்க எடுத்த முயற்சில நூறுல ஒரு பங்கு கூட என் நம்பிக்கைய ஜெயிக்க நீ எடுக்கல நிஷாந்த்… என்னைக் காதலிச்சப்பவே அந்த இனியா பின்னாடி நீ சுத்துன… நான் கேட்டதுக்கு அவ அவமானப்படுத்துனதுக்காக பழிவாங்க லவ் பண்ணுற மாதிரி நடிக்குறேன்னு சொன்ன… அப்பாக்குத் தெரியாம இந்த விவகாரத்தை மறைக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்.. ஆனா நீ என்ன பண்ணுன? பழிவாங்குறேன்ங்கிற பேருல அவ கூட ஒன்னா இருந்திருக்க… நீ இப்ப மாட்டிருக்கிறது ரேப் கேஸ்… இதுக்கு அப்புறமும் நான் உன்னை ப்ரேக்கப் பண்ணல… ஏன்னா எனக்கு உன் லவ் வேணும்… எங்கப்பாக்கு நீ ஏகலைவனோட வாரிசா அவரோட சொத்துக்கு அதிபதியா நீ மாறணும்… அந்த நாளுக்காக தான் நானும் அப்பாவும் காத்திருக்கோம்… இப்ப சொல்லு… நான் உன்னை நம்பணுமா? காதலிக்கணுமா?”
அப்படி என்றால் இந்தப் பெண்ணுக்கு நிஷாந்த் இனியாவின் காதல் பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஒரு பெண்ணாக இவள் காதலனின் எண்ணம் தவறென அறிவுறுத்தியிருக்க வேண்டுமா இல்லையா? ஆனால் இவளோ ஏகலைவனின் வாரிசாக அவன் ஆகும் நாளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறாள்.
பணக்காரனின் மருமகன், அவனது வருங்கால வாரிசு என்பதால் நிஷாந்த் செய்த கேவலமான காரியம் இவளுக்கும் இவள் தந்தைக்கும் ஒன்றுமே இல்லை போல! சீ! என்ன மனிதர்கள் இவர்கள்! அருவருத்துப் போனாள் இதன்யா,
நிஷாந்த் பழிவாங்குவதற்காக இனியாவிடம் காதல் நாடகம் போட்டதாகச் சொன்னாளே! எதற்கு அந்தப் பழிவெறி? இனியா அப்படி நிஷாந்தை என்ன செய்திருப்பாள்?
இதன்யா யோசிக்கும்போதே நிஷாந்தின் குரல் ஒலித்தது.
“இனியாவ பத்தி பேசாத பிரகதி… உயிரோட இருந்தப்ப என்னை அசிங்கப்படுத்துனா… இப்ப செத்தும் என்னை வாழவிடாம அலைக்கழிக்குறா பாவி… அவளைக் கொன்ன சனியன் அவ உடம்பை உருத்தெரியாம அழிச்சிருக்கலாம்… அப்பிடியே விட்டிருந்தா நாயோ நரியோ தின்னுட்டுப் போயிருக்கும்… ஊருக்குள்ள கொண்டு வந்து போட்டதால தான் நான் இந்தக் கேஸ்ல மாட்டிக்கிட்டு முழிக்குறேன்” என்றான் அவன்.
“நீ உன் மாமா கிட்ட பேசு நிஷாந்த்… இப்பவே ட்ரை பண்ணுனா தான் நீ இந்தக் கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆகமுடியும்… நம்ம கல்யாணம் பண்ணிக்க இன்னும் நாலு இல்ல அஞ்சு வருசம் ஆகும்ல… அதுக்குள்ள இனியாவ எல்லாரும் மறந்துடுவாங்க… அந்த டைம்ல ஏதோ ஒரு மர்டர் கேஸோ ரேப் கேஸோ தமிழ்நாட்டை உலுக்கும்… அதைப் பத்தி பேசுறதுல பிசியாகிடுவாங்க… அதனால உன் மாமா எதை செஞ்சாலும் சீக்கிரமா செய்ய சொல்லு”
“கண்டிப்பா பேபி” என்றவன் காபியை அருந்தினான் நிதானமாக.
இதன்யாவால் அதற்கு மேல் அங்கே தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த ஜோடிகள் அவளை அத்துணை அருவருப்பில் ஆழ்த்திவிட்டார்கள்.
கேவலம் பணத்துக்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் போல.
வேகமாகத் தரிப்பிடத்திற்கு வந்து பைக்கைக் கிளப்பியவளின் மனமெங்கும் இனியா வழக்கில் ஏதோ ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வராமல் இருட்டிலேயே முடங்கிவிட்டதாக உறுத்த ஆரம்பித்தது.
வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் ஓய்வாக அமர்ந்திருந்த தந்தையிடம் புன்னகையைச் செலுத்திவிட்டுத் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.
அதே நேரம் பொன்மலையில் சக்கரவர்த்தி தேயிலை தோட்டத்தில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அலுவலக மேலாளரின் அறையில் அமர்ந்திருந்தார்கள்.


“இது தேயிலை அறுவடை நேரம்… நாள் ஒன்னுக்கு மூனு லாரி மலை மேல வந்து போகுது… நீங்க சொல்லுற லாரி எதுனு எனக்குத் தெரியல… ஏன்னா இந்த நேரம் இந்த லாரி தான் வரும்னு எதுவும் ரூல் இல்ல… யார் ஃப்ரீயோ அவங்க வந்து சரக்கை எடுத்துட்டுப் போவாங்க… நீங்க டிரைவர்களை வேணும்னா விசாரிச்சுக்கோங்க”
அப்போது அந்த அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.
“உள்ள வாங்க”
கதவைத் திறந்து உள்ளே வந்தவன் ராக்கி. காவல்துறையினரைக் கண்டதும் அவனது முகத்தில் மெல்லிய திகில்.
“நான் கேட்ட தேதில உள்ள சிசிடிவி ஃபூட்டேஜ் கிடைச்சுதா?” என மேலாளர் விசாரித்தார்.
“கிடைச்சுது சார்… ஆனா அன்னைக்கு வந்த டிரைவரும் க்ளீனரும் இதுக்கு முன்னாடி வராத ஆளுங்க” என்றான் ராக்கி.
“வாட்? புது ஆளுங்களை எப்பிடி செக்யூரிட்டி உள்ள விட்டாரு?” அதிர்ச்சியாகக் கேட்டபடி எழுந்தார் மேலாளர்.
மார்த்தாண்டனும் மகேந்திரனும் அந்த தேதிக்குரிய வீடியோ பதிவுகள், லாரியின் எண் என அனைத்து விவரங்களையும் திரட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பும் தருவாயில் திடீரென புயலைப்போல அலுவலகத்துக்குள் பிரவேசித்தான் ஏகலைவன்.
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க பகீரத பிரயத்தனப்பட்டதைக் காவல்துறை மூளைகள் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டன.
“என்ன விசயம் இன்ஸ்பெக்டர் சார்? எஸ்டேட் ஆபிஸ் வரைக்கும் வந்திருக்கிங்க?” என விசாரித்தான்.
“இதன்யா மேடமோட ஆக்சிடெண்ட் கேஸ்ல உங்க எஸ்டேட்டுக்கு வந்த லாரி மேல டவுட்… அதுக்காக விசாரிக்க வந்திருக்கோம்” என மார்த்தாண்டன் பதிலளிக்க
“விசாரிச்சாச்சா?” என கேட்டவனின் குரலில் எகத்தாளம் ஒளிந்திருந்ததை அவர் கண்டுகொண்டார்.
விசாரித்துக் கண்டுபிடித்தாலும் உங்களால் எதையும் செய்ய முடியாதென்ற தெனாவட்டு அவனது உடல்மொழியில் வெளிப்பட்டது.
“இப்ப தான் ஆரம்பிச்சிருக்கோம்… இன்னும் கொஞ்சநாள்ல ஆக்சிடெண்டுக்கு யார் காரணமோ அவனையும் கண்டுபிடிச்சிடுவோம்” என அவனுக்குப் பதிலளித்தார் மகேந்திரன்.
முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன் என்ற சவால் பார்வையோடு நின்றவனிடம் எந்தப் பேச்சுவார்த்தையையும் வைத்துக்கொள்ளாமல் மகேந்திரனை அழைத்துக்கொண்டு வெளியேறினார் மார்த்தாண்டன்.
அலுவலகத்திலிருந்து வெளியே வந்த இருவரும் சக்கரவர்த்தி தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேறினார்கள்.
செல்லும்போது இதன்யாவிடமிருந்து அழைப்பு வந்தது மார்த்தாண்டனுக்கு.


அழைப்பைத் தாமதிக்காமல் ஏற்றவர் “நல்லா இருக்கிங்களா மேடம்? பேங்க்ல போய் பேசிட்டிங்களா? மேனேஜர் என்ன சொன்னார்?” என விசாரித்தார்.
அவரது கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதிலளித்தவள் எதற்காக அவரை அழைத்தாளோ அந்த விவரத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். ஆரம்பித்தவள் முடித்தபோது மார்த்தாண்டன் பொன்மலையில் பற்களைக் கடித்தது செல்போன் கோபுரங்களின் தயவால் அவளது செவிகளில் திவ்வியமாக விழுந்து அவரது கடுப்பின் அளவை இதன்யாவுக்குப் புரியவைத்தது.
“அவன் மட்டும் என் கையில் சிக்குனான்னா…” என்று பொங்கியவரை அமைதியாக்கினாள் இதன்யா.
“கேஸ் முடிஞ்சு போச்சு மார்த்தாண்டன் சார்… கேசை ரீ-ஓப்பன் பண்ணுனா தான் நம்மளால என்கொயரிய ஆரம்பிக்க முடியும்… அதுக்கான பாசிபிளிட்டி ரொம்ப கம்மி… ஆனா நீங்க நினைச்சா முடியும்” என்றாள் அவள்.
மார்த்தாண்டன் அமைதியாக சில நொடிகள் யோசித்தார்.
“இனியா கேஸ்ல சந்தேக பட்டியல்ல இருந்தவங்களை சீக்ரேட்டா விசாரிக்கச் சொல்லுறிங்களா மேடம்?”
“நம்ம விசாரிக்குறோம்ங்கிறதை அவங்க கண்டுபிடிக்கவே கூடாது” என்றாள் அவள்.
அது எப்படி சாத்தியம் என திகைத்தார் மார்த்தாண்டன்.
“என் சஸ்பென்சன் பீரியட் முடிய இன்னும் நாள் இருக்கு… சோ அந்த நாட்களை நான் பொன்மலைல தங்கி கழிக்கலாம்னு இருக்கேன்”
“மேடம் இங்கயா?” என்று மார்த்தாண்டன் அதிரும்போதே
“இந்தத் தடவை என்னை யாராலயும் எதுவும் பண்ண முடியாது மார்த்தாண்டன் சார்… என் பாதுகாப்புக்கான முன்னேற்பாடு எல்லாத்தையும் நான் முன்கூட்டியே தயார் பண்ணிட்டுத் தான் வருவேன்… ஏகலைவன் – நிஷாந்த் இவங்க ரெண்டு பேரும் ஏதோ பெருசா தப்பு பண்ணிருக்காங்க… ரெண்டு பேருக்கும் இனியா கொலைல ஸ்ட்ராங்கா கனெக்சன் இருக்கு… பழிவாங்க காதலிச்ச மாதிரி நடிச்சவன் அதை விட கேவலமான காரியத்தைப் பண்ணவும் துணிஞ்சிருப்பான் தானே? இவங்க ரெண்டு பேரையும் க்ளோசா வாட்ச் பண்ணணும்… சந்தேகத்துக்கு இடமா அவங்க நடவடிக்கை இருந்துச்சுனா அடுத்த கட்ட நடவடிக்கை பத்தி யோசிக்கலாம்” என்றாள் அவள்.
மார்த்தாண்டனும் அதற்கு சம்மதித்தார். உடனே அவருக்கு நன்றி கூறினாள் இதன்யா.
“எதுக்கு மேடம் தேங்க்ஸ் சொல்லுறிங்க? இந்தக் கேஸ்ல இனியாவுக்கு உண்மையான நியாயம் கிடைக்கணும்னு யோசிச்சவங்கல்ல நானும் ஒருத்தன்… அதுக்காக நீங்க என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்… நீங்க பொன்மலைக்கு வாங்க… நம்ம மேற்கொண்டு பேசலாம்”
இத்தகைய நேர்மைமாறாத காவல்துறை அதிகாரிகளும் உள்ளார்கள் என்ற கர்வத்தோடு அழைப்பைத் துண்டித்தவள் எப்படி பெற்றோரிடம் பொன்மலைக்குச் செல்லவிருக்கும் செய்தியை எப்படி சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைப்பதென யோசிக்க ஆரம்பித்தாள்.
இப்போது தான் விபத்தாகி கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைத்து வந்திருக்கிறாள் என ஒரு கோவில் பாக்கியில்லாமல் மயூரி வேண்டுதல்களை நிறைவேற்றி முடித்திருந்தார். மீண்டும் பொன்மலை பயணமென்றால் ‘வேண்டுதல் 2.0’வுக்குத் தயாராகிறாரோ இல்லையோ ஒரு மாபெரும் அழுகை யுத்தத்துக்குத் தயாராவார்/.
முன்பெல்லாம் வாசுதேவன் இதன்யாவுக்குத் துணையாக நிற்பார். ஆனால் மகளுக்கு விபத்து நடந்த கொண்டை ஊசி வளைவை எப்போது பார்த்தாரோ அப்போதிலிருந்து அவரும் மயூரியின் பக்கம் சாய்ந்துவிட்டார். ஆனால் வேறு வழியில்லை. மனதில் உறுத்தல் வந்த பிறகும் அதைத் தீர்த்துக்கொள்ளவில்லை என்றால் நிச்சயம் இனியாவின் வழக்கு இதன்யாவின் வாழ்நாளின் இறுதி வரை உறுத்திக்கொண்டே இருக்கும். பின்னாட்களில் குற்றவாளியைத் தப்பவிட்டது தெரியவந்தால் போன காலத்தைத் திரும்ப கட்டி இழுக்கவா முடியும்! இப்போதும் வழக்கு முடிந்திருக்கலாம். ஆனால் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் அப்பீலுக்கான மனு கொடுத்து மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கலாம்.
அதற்கு முன்னர் மறுவிசாரணைக்கான முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என கண்டறியவேண்டும் அல்லவா! அதற்காக தான் இதன்யா பொன்மலைக்குப் போகும் முடிவை எடுத்தாள். கூடவே ஏகலைவன் – நிஷாந்தின் முகத்திரையைக் கிழிக்கும் வெறியும் அவளுக்குள் நிரம்பிவிட்டது.
எனவே தீர்மானத்தோடு கதவைத் திறந்தவள் “மா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் இதன்யா.
மயூரியும் வாசுதேவனும் என்னவென விழிக்கையிலேயே பொன்மலை செல்லப்போவதை இதன்யா கூற அவர்களின் முகம் கலவரத்திற்குள்ளானது.