IIN 3

“உலகின் முன்னணி கல்வியாளர்கள் உளப்பிறழ்வுக்கான வரையறையை விவாதித்துள்ளனர். நீங்கள் ஒரு தடயவியல் உளவியலாளரிடம் பேசுகிறீர்களா அல்லது ஒரு குற்றவியல் நிபுணரிடம் பேசுகிறீர்களா என்பதைப் பொறுத்து மனநோய் குறித்த பல்வேறு விளக்கங்களைப் பெறுவீர்கள்” என்கிறார் வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக உளவியலாளரும் நரம்பியல் விஞ்ஞானியுமான அபிகயில் மார்ஷ். வன்முறை மற்றும் தீவிரமான நடத்தையை வெளிப்படுத்தும்போது மட்டுமே ஒருவரை மனநலக் குறைபாடுடையவராக குற்றவியல் உளவியலாளர்கள் கருதுவதாக அபிகயில் மார்ஷ் கூறுகிறார். எனினும், தன்னைப் பொறுத்தவரை, இந்த நிலை நபருக்கு நபர் மாறும் என்கிறார் அவர்.

         -An article from BBC

பொன்மலை காவல் நிலையம்…

உதவி ஆய்வாளர் மகேந்திரன் நீட்டிய சந்தேகப்படுவோர் பட்டியலை மீண்டும் ஒரு முறை வாசித்த மார்த்தாண்டன் அதில் சிலரை மட்டும் வட்டமிட்டுக் காட்டினார்.

“இன்னைக்கு கலிங்கராஜனோட வீட்டுக்குப் போய் விசாரிக்கப்போறேன்… ஈவ்னிங் இந்த சஸ்பெக்ட் லிஸ்டுல நான் பாயிண்ட் பண்ணுன ஆளுங்க ஸ்டேசனுக்கு வரணும்னு சொல்லி அனுப்பிடு”

காவல் நிலையத்திலிருந்து கிளம்பியவர் நேரே சாந்திவனத்தில் வந்து இறங்கினார்.

கான்ஸ்டபிளிடம் “இனியாவ கடைசியா பாத்ததா ஒரு பெரியவர் அழுதார்ல, அவரை அழைச்சிட்டு வாய்யா” என்று சொல்லிவிட்டு அழைப்புமணியை அழுத்தினார்.

கதவைத் திறந்தது கிளாரா தான். மார்த்தாண்டனை உள்ளே அழைத்தவர்

“என் மகளைக் கொலை பண்ணுனவன் யாருனு தெரிஞ்சுதா சார்?” என்று கேட்க

“அதுக்குத் தான விசாரிக்க வந்திருக்கேன்” என்றபடி அமர்ந்தார் அவர்.

கலிங்கராஜன் வந்ததும் “உங்க பொண்ணுக்குச் சமீப காலமா எதுவும் லவ் இருந்துச்சா?” என்று கேட்டார் அவர்.

“இல்ல இன்ஸ்பெக்டர்”

“அவளை யாராவது காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துனதா சொல்லிருக்காளா?”

“அப்பிடிலாம் எதுவும் நடந்ததில்ல சார்… அவளுக்குச் சோஷியல் மீடியால இன்ட்ரெஸ்ட் அதிகம்… ஏதாச்சும் ரீல்ஸ் பண்ணுவா… எங்க காலின் ஸ்கின் அண்ட் ஹேர் கேர் புராடக்டுக்கான சோசியல் மீடியா அக்கவுண்ட் எல்லாமே அவ கண்ட்ரோல்ல தான் இருந்துச்சு… யூத் கிட்ட எங்க புராடக்ட்ஸை கொண்டு போனதுல இனியாவோட பங்கு அதிகம்”

“சோசியல் மீடியா மூலமா உங்க மகளுக்கு ஏதாவது தொந்தரவு வந்துச்சா?”

கலிங்கராஜன் இல்லையென மறுக்க கிளாராவுக்குக் குழப்பம்.

“ஏன் சார் இப்பிடிலாம் கேக்குறிங்க?” என்றார் அவர்.

மார்த்தாண்டன் நிதானித்தார். பின்னர் “இனியாவோட பி.எம் ரிப்போர்ட்படி அவ உயிரோட இருந்தப்பவும் இறந்ததுக்கு அப்புறமும் கொலைகாரன் ரேப் பண்ணிருக்கான்” என்றார்.

கிளாராவின் கண்களில் வேதனை! வெடித்த அழுகையை வாயைப் பொத்தி அடக்கிக்கொண்டார். கலிங்கராஜன் இவ்வளவு நேரம் திடமாக இருந்தவர் மார்த்தாண்டன் சொன்னதைக் கேட்டும் கலங்கிவிட்டார்.

முகத்தில் கோபச்சிவப்பேறியது.

“என் மகளை இந்தக் கதிக்கு ஆளாக்குனவன் யாரா இருந்தாலும் சும்மா விடாதிங்க சார்… அவளை இப்பிடி சிதைச்சு துன்புறுத்தி கொன்னவனுக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கணும்”

வெறி பிடித்தவரைப் போல கத்த ஆரம்பித்தார் அவர். மனம் ஆறவில்லை அவருக்கு. பிடிக்காத மகளே என்றாலும் அவளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிக் கொன்றவன் மீது கொலைவெறி வந்தது அவருக்கு.

மகள் எப்படியெல்லாம் வேதனை அனுபவித்தாளோ என்று முதல் முறையாக அவரது மனம் துடித்தது.

“பொறுமை மிஸ்டர் கலிங்கராஜன்… அவனைப் பிடிக்கிறதுக்கான முயற்சில நாங்க இறங்கியிருக்கோம்… இனியா கோவிலுக்குப் போறதுக்கு முன்னாடி கடைசியா பாத்த நபரை விசாரிச்சா ஓரளவுக்கு நிலவரம் தெரிஞ்சிடும்” என்றார் மார்த்தாண்டன்.

அப்போது கான்ஸ்டபிளோடு உள்ளே வந்தார் முருகையா.

“கூப்பிட்டு அனுப்பிச்சங்கனு சொன்னாரு சார்” என கான்ஸ்டபிளைக் காட்டினார்.

“ஆமா பெரியவரே! இனியா காணாம போன நாள்ல உங்க கிட்ட தான் கடைசியா பேசிருக்காங்க… என்ன சொன்னாங்கனு ஞாபகம் இருக்குதா?”

“வாரவாரம் செவ்வாகிழமை சின்னம்மா முருகன் கோவிலுக்குப் போய் சுத்தம் பண்ணுங்கய்யா.. காலையில போச்சுனா ஸ்கூல் பஸ் வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடும்… இந்த வாரமும் அப்பிடி சொல்லிட்டுத் தான் கிளம்புச்சு.. போறதுக்கு முன்னாடி கூட இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தாத்தானு சொல்லிட்டுப் போச்சுங்கய்யா”

“வேற ஏதாச்சும் சொன்னாங்களா?”

முருகையா அன்றைய நாள் இனியாவின் பேச்சை யோசித்தார். பின்னர் நினைவு வந்தவராக

“அப்பாவோட தொழில் பழையபடி லாபகரமா நடக்கணும், என் கிட்ட அப்பா பாசமா நடந்துக்கணும்னு வேண்டிக்கப்போறேன்னு சொல்லிச்சு சார்… ஐயாவைத் தேடி அடிக்கடி இந்த வீட்டுக்கு ரோஷண் பய வர்றது சின்னம்மாக்குப் பிடிக்கல… முருகன் மனசு வச்சா எல்லாம் மாறும், ரோஷண் சொல்லுறதை அப்பா கேக்க வேண்டிய அவசியம் வராதுனு சொல்லிச்சுய்யா” என்றார்.

மார்த்தாண்டனின் பார்வை இப்போது கலிங்கராஜன் பக்கம் திரும்பியது.

“நீங்க போகலாம் பெரியவரே… விசாரணை சம்பந்தமா ஸ்டேசனுக்கு எப்ப கூப்பிட்டாலும் வரணும்”

“சரிங்கய்யா”

முருகையா சென்றதும் “சோ உங்க மக இனியா உங்களோட பாசத்துக்காக ஏங்கிருக்காங்க” என்றபடி கலிங்கராஜனைப் பார்த்தார்.

“அது… இனியாவ…” எனத் தடுமாறினார் அவர். இவ்வளவு நேரம் மகளுக்காக வெறிகொண்டு கத்தியது உண்மையா? அல்லது இந்த தடுமாற்றம் உண்மையா? மார்த்தாண்டனின் காவல் மூளை முந்தைய கோபத்தை நடிப்பாக இருக்குமோ எனச் சந்தேகிக்க ஆரம்பித்தது.

“உங்க வாய்ல இருந்து வர்ற வார்த்தை உண்மையா பொய்யானு கண்ணை வச்சே கண்டுபிடிச்சிடுவேன் கலிங்கராஜன்”

கலிங்கராஜன் வாயை மூடி நிற்கவும் கிளாரா அழுகையோடு பேச ஆரம்பித்தாள்.

“இவருக்கு இனியாவ சுத்தமா பிடிக்காது சார்… இனியா இவரோட முதல் மனைவி குமுதாவோட மக… அக்கா பிரசவத்துல இறந்ததுக்கு அவ தான் காரணம்னு அவளை வெறுத்து ஒதுக்குனவர் இந்த மனுசன்… நான் கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் இனியா எவ்ளோ தூரம் பாசத்துக்கு ஏங்கிப்போயிருக்கானு புரிஞ்சிக்கிட்டேன்… அப்ப இருந்து அவளை என் மகளா தான் வளர்த்தேன் சார்… ஆனா ஒன்னு, இவருக்கு அவளைப் பிடிக்காதே தவிர மத்த பசங்களுக்குச் செய்யுற மாதிரி ஒரு அப்பாவா எல்லா கடமையையும் செய்வார்”

கிளாரா சொன்னாலும் மார்த்தாண்டனின் சந்தேகப்பார்வை கலிங்கராஜனை விட்டு விலகவில்லை.

“உங்க பொண்ணுக்கு நீங்க ரோஷண்னு யாரையோ வீட்டுக்குக் கூப்பிடுறது பிடிக்கலனு பெரியவர் சொன்னாரே… யார் அந்த ரோஷண்?” தெரியாதவரைப் போல விசாரித்தார்.

இனியாவின் சடலத்தைக் கைப்பற்றிய போதும், கான்ஸ்டபிள் விசாரித்தவரையிலும் ரோஷண் என்பவனின் நடத்தை சந்தேகத்துக்கு இடமானதாக இருந்ததால் அவனது பெயரும் சந்தேகப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.

அவனைப் பற்றி மார்த்தாண்டன் கேட்டது தான் தாமதம், கிளாரா கலிங்கராஜன் இருவரும் வாயை மூடிக்கொண்டார்கள்.

“பதில் சொல்லுங்க… இல்லனா என் சந்தேகம் சரி தான்னு நீங்க ஒத்துக்கிறதா அர்த்தம்”

கலிங்கராஜன் தட்டுத்தடுமாறி “ரோஷண் இந்த ஊர் பையன் சார்… அவன்… ஒரு கல்ட் குரூப் நடத்துறான்… அதுல சேரச் சொல்லி கேன்வாஷ் பண்ண வீட்டுக்கு வருவான்” என்றார்.

“கல்ட் குரூப்னா? இந்தப் பில்லி சூனியம் அந்த மாதிரியா|?”

கலிங்கராஜன் இல்லையென மறுத்தவர் கிளாராவைத் தவிப்புடன் பார்த்தார்.

“அது… அவனும் அவனோட குரூப் ஆளுங்களும் சாத்தானை வழிபடுறவங்க… கடவுள் குடுக்காத எல்லாத்தையும் சாத்தான் குடுப்பான்னு நம்புறவங்க” என்றார்.

“கோவில், சர்ச், மசூதி இந்த மூனு இடத்துலயும் இருக்குற கடவுள் குடுக்காததையா சாத்தான் குடுக்கப்போவுது? எம்மதமும் சம்மதம்னு ஒற்றுமையா வாழுற உங்க ஊர்ல சாத்தான் வழிபாடு நடக்குறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு… இதுலஅந்தக் குரூப்போட தலைவன் வேற உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கான்… எதுவோ நெருடுதுல்ல?”

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மார்த்தாண்டன் எழுந்து கொண்டார்.

“இன்னைக்கு ஈவ்னிங் ஸ்டேசன்ல இருந்து கால் வரும்… என்கொயரிக்கு நீங்க ஒத்துழைக்கணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

வாசல் வரை போனவர் “உங்க மகளோட பிரேத பரிசோதனையில எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு மிஸ்டர் கலிங்கராஜன்… எங்க விசாரணைக்கு அடிப்படையே இனியாவோட சடலம் தான்… கொலைகாரன் யாருனு ஊர்ஜிதம் ஆகுற வரை உங்க கிட்ட இனியாவோட சடலத்தை ஒப்படைக்கப்போறதில்ல” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

அவர் கிளம்பி சில நிமிடங்களில் கலிங்கராஜன் அவசரமாக ரோஷணின் எண்ணுக்கு அழைத்தார்.

அவன் தற்போது பொன்மலையில் இல்லை என்ற செய்தி அரசல் புரசலாக ஊராரின் பேச்சின் மூலம் கலிங்கராஜனின் காதுக்கு வந்திருந்தது.

அழைப்பை ஏற்றவனிடம் “இனிமே நீ என் வீட்டுப்பக்கம் வரக்கூடாது… என் பொண்ணை யாரோ கொடூரமா கொலை பண்ணிட்டாங்க… இப்ப போலீசோட சந்தேகம் என் பக்கம் திரும்பிருக்கு…. காரணம் நீயும் உன் கல்ட் குரூப்பும்” என கடுப்பில் கத்தினார்.

“நானா? நான் உங்களைப் பாக்க வர்றதை யார் போலீஸ் கிட்ட சொன்னாங்க?” என தெனாவட்டாக கேட்டான் அவன். குரலில் சிறு குழறல்.

“நீ அடிக்கடி வீட்டுக்கு வர்றதை வாட்ஸ்மேன் முருகையா பாத்திருக்கார்… அதை போலீஸ் விசாரணைல சொல்லிட்டார்… இனிமே என் வீட்டுக்கு வர்ற வேலை வச்சுக்காத” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

கத்தி பேசியதில் மூச்சு வாங்கியது கலிங்கராஜனுக்கு. பேச்சு மூச்சற்று நின்ற கிளாராவை முறைத்தவர் “எல்லாம் உன்னால தான்… நீ ஆரம்பிச்சு வச்சது எங்க வந்து நிக்குது பாத்தியா?” என்று கோபத்தோடு உரைத்துவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.

அங்கே நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு ஊமையாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் மிச்செல்.

அவளுக்கு யாரை நம்புவதென்றே தெரியவில்லை. இப்போது தந்தை ரோஷணிடம் கோபம் காட்டிப் பேசியது கூட போலியாக இருக்குமோ என ஐயம் கொண்டு தவித்தாள் அந்தப் பதினைந்து வயது குழந்தை.  இனியாவின் அகால மரணம் அவளை அந்தளவுக்குக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

“ஐ மிஸ் யூ இனியாக்கா… என்னால தான உனக்கு இந்த நிலமை?” என மானசீகமாகக் கதறியழத் துவங்கினாள் மிச்செல்.

அதே நேரம் ரசூல் பாயின் வீட்டில் இருந்த முருகையா தன்னிடம் கான்ஸ்டபிள் இனியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை பற்றி சொன்ன தகவல்களை பாயிடம் கூறிக்கொண்டிருந்தார்.

“சின்னம்மா பாவம் பாய்… எந்தப் பாவி இப்பிடி பண்ணுனான்னு தெரியலையே” என கண்ணீர் வடித்தார் மனிதர்.,

அவர் போனதும் ரசூல் பாயின் மகள் முபீனா கண்ணீருடன் வந்து அவர் முன்னே நின்றாள்.

“இனியாவ ரோஷண் தான் கொன்னிருப்பான் வாப்பா” என்றாள் அவள் அழுகுரலில்.

ரசூல் பாய் திடுக்கிட்டுப் பார்க்க அஸ்மத்தோ அவசரமாக மகளின் வாயைப் பொத்தினார்.

“அந்த சைத்தானைப் பத்தி பேசாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” என கண்டித்தார்.

அவரது கையை விலக்கியவள் “அவன் அடிக்கடி வீட்டுக்கு வர்றான்னு இனியா சொன்னா வாப்பா… அவனோட பார்வையே சரியில்லனு சொல்லுவா… ஒருநாள் அவ முருகன் கோவிலுக்குப் போறப்ப வழிமறிச்சு மோசமா பேசுனதை நானே பாத்தேன்… அவளை மாதிரி அழகான பொண்ணை சாத்தானுக்குப் பலி குடுத்தா தன்னோட சக்தி பெருகும்னு சொன்னான்… அவன் தான் இதை செஞ்சிருக்கணும் வாப்பா” என்று அழுதாள்.

ரசூல் பாயின் மனம் கனத்துப் போனது. மகளைப் போல எண்ணி தான் இனியாவிடமும் பேசுவார் அவர். துறுதுறுவென வலம் வந்த பெண்ணைச் சடலமாகப் பார்த்தபோதே இதயம் வெடித்துப்போனது அவருக்கு. இப்போது மகளும் ரோஷணைக் குற்றவாளி என்றதும் இதைச் சும்மா விடக்கூடாதென தீர்மானித்தார்.

அன்று மாலை காவல்நிலையத்திற்குப் போனவர் மகள் சொன்ன தகவலை மார்த்தாண்டனிடம் தெரிவித்தார்.

“அந்த ரோஷண் கடந்த நாலு வருசமா ஊருக்குள்ள இருக்கிற சிலரை சாத்தான் வழிபாட்டுக்கு மாத்திக்கிட்டு இருக்கான்… அடிக்கடி அவனோட குரூப் ஆளுங்க நடுராத்திரில கோழி, ஆடு எல்லாம் பலி குடுப்பாங்க… இதுவரைக்கும் நரபலி குடுத்ததில்ல… எனக்கு என்னமோ அவன் இனியாவை நரபலி குடுத்திருப்பானோனு சந்தேகமா இருக்கு சார்… அவன் அப்பிடி செய்யக்கூடிய ஆளு தான்னு என் மக அடிச்சுச் சொல்லுறா”

மார்த்தாண்டனுக்கு ரோஷண் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றது. திடீரென ஏதோ நினைத்தவராக “மிஸ்டர் கலிங்கராஜனோட பிசினஸ் எப்பிடி போகுதுனு ஏதாச்சும் ஐடியா இருக்குதா உங்களுக்கு?” என்று கேட்டார்.

“அவரோட லாயர் ஞானகுரு எனக்கு குளோஸ் ஃப்ரெண்ட்… ஆறு மாசமா சொல்லிக்கிற அளவுக்குத் தொழில்ல லாபமில்லனு அவர் சொன்னார்…  இப்ப கொரியன் பியூட்டி ப்ராடக்ட்ஸ் வர ஆரம்பிச்சதால நம்ம ஊர் ஸ்கின்கேர் ப்ராடக்ட்களோட மார்க்கெட் டல்லடிக்குதாம்… இனியா பொண்ணு புத்திசாலித்தனமா சோசியல் மீடியா மூலமா விளம்பரம் பண்ணுனதால பெருசா கையைக் கடிக்குற அளவுக்கு நஷ்டமில்லனு சொன்னார் ஞானகுரு”

“நஷ்டமில்ல… அதே சமயம் லாபமும் இல்ல… அப்பிடி தானே?”

“ஆமா சார்”

ரசூல் பாய் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க மார்த்தாண்டனின் மூளையில் ஏதோ பொறி தட்டியது.

“பாய் ஒரு நிமிசம்”

ரசூல் பாய் நின்றார்.

“உங்க டாட்டர் இனியாவோட ஃப்ரெண்டுங்கிறதால அவங்களை பத்தி சில விசயங்களை ஷேர் பண்ணிருப்பாங்க தானே… இனியாவுக்குச் சோசியல் மீடியால ரொம்ப ஆர்வமோ?”

ரசூல் பாய் புருவம் சுருக்கி யோசித்தார்.

“அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது சார்… ஆனா இனியா எங்க வீட்டுக்கு வந்துச்சுனா போனை பாத்து சிரிச்சுக்கிட்டே இருக்கும்… போன் இல்லாம அந்தப் பொண்ணை பாக்கவே முடியாதுனு என் ஒய்ப் சொல்லுவா”

மார்த்தாண்டன் ரசூல் பாய் சொன்னதைக் குறித்துக்கொண்டவர் “சரி பாய்… நீங்க கிளம்பலாம்” என்றார்.

அவர் போனதும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவருக்கு சந்தேகத்துக்குரிய ஆட்களாகத் தெரிந்தார்கள் கலிங்கராஜனும் ரோஷணும்.