IIN 21

சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக ஒன்றிணைவதால் மட்டுமே மனப்பிறழ்வுக்குறைபாடுகள் தோன்றுகின்றன. யாருமே பிறக்கும்போது சைக்கோபதி உள்ளவர்களாகப் பிறப்பதில்லை. ஆனால் இம்மாதிரியான மரபணுக்கூறுகளின் ஒன்றிணைவை பரம்பரையாகப் பெற்று பிறக்கும் குழந்தைகளில் சைக்கோபதி வருவதற்கான ஆபத்து அதிகம்”

                                       -From psychopathy.org website

இனியா முபீனாவின் வீட்டிலிருந்து அவளோடு சாந்திவனத்துக்கு வந்து கொண்டிருந்தாள்.

“நான் ரெக்கார்ட் நோட் முடிக்கிற வரைக்கும் நீ என் கூட இரு முபீ… வீட்டுல மிச்செல், ஜென்னி, நித்தி மூனு பேரும் இல்லாம செமய்யா போரடிக்குதுடி… அப்பாவும் சித்தியும் அவங்களை மட்டும் வெகேசன் கூட்டிட்டுப் போயிட்டாங்க… பப்ளிக் எக்சாமை சாக்கா வச்சு என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க”

“ப்ச்… போனா மட்டும் நீ எஞ்சாய் பண்ணவா போற? உன் உடல் பொருள் ஆவி எல்லாம் பொன்மலைல தான் இருக்கும்”

சலிப்போடு முபீனா கூறவும் இனியா அவளைக் கெஞ்சும் பார்வை பார்த்தாள்.

“முபீ…”

முபீனா கடுப்போடு தலையை உலுக்கிக்கொண்டவள் நழுவிய ஷாலை எடுத்து ஒழுங்காக தலையை மூடிக்கொண்டாள்.

“என்னமோ பண்ணு…. எனக்கு இதுலாம் சரினு தோணல… நீ அன்னைக்கு எங்க வீட்டுல போனைப் பாத்துச் சிரிச்சப்பவே வாப்பா உன்னைக் குறுகுறுனு பாத்தாங்க… நிஷாந்த் அண்ணாவும் நீயும் கொஞ்சம் யோசிங்க”

தன் பங்குக்குத் தோழிக்கு அவள் அறிவுரை கூறியபோதே அவர்களின் பாதையின் நடுவே யாரோ வந்தார்கள்.

இரு பெண்களும் பேச்சை நிறுத்திவிட்டு வந்த நபரை உறுத்து விழித்தார்கள்.

அவன் ரோஷண். அவனது பார்வையில் இருந்த கோபம் இனியாவை அசைக்கவில்லை. ஆனால் முபீனாவுக்கு அடிவயிற்றில் பயம் பந்தாய் உருண்டது.

“இனியா இந்தச் சைத்தான் முன்னாடி நிக்க வேண்டாம்டி” என தோழியின் காதில் கிசுகிசுத்தவள் அவளை இழுக்க முற்பட ரோஷணோ இன்னும் நெருங்கினான்.

இனியா தன்னைக் கண்டு அஞ்சவில்லை என்றதும் கோணல் சிரிப்பை உதிர்த்தவன்

“என்னை அத்தனை வேலைக்காரங்க முன்னாடியும் அசிங்கப்படுத்துனது போதாதுனு இன்னொரு தப்பையும் பண்ணிட்ட இனியா… இதுக்குலாம் நீ அனுபவிப்ப” என்று விரல் நீட்டி மிரட்ட

“அப்பிடியா? பாக்கலாம்… ஆஃப்டர் ஆல் சாத்தானை நம்புற உனக்கே இவ்ளோ தைரியம்னா நான் அந்த முருகனை நம்புறேன்… அவர் என்னை எப்பவும் கைவிடமாட்டார்… உன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்க… போடா” என அலட்சியமாக அவனைக் கடந்து போக முற்பட்டாள் இனியா.

“என்னால எதுவும் செய்ய முடியாதுனு நினைக்குறியா? நான் நினைச்சா உன்னை என் சாத்தானுக்குப் பலி குடுக்க முடியும்… அணு அணுவா சித்திரவதை செஞ்சு உன்னைக் கொல்ல முடியும்… உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களைச் சாத்தானுக்குப் பலி குடுத்தா என் சக்தி இன்னும் அதிகமாகும்” என்றான் அவன் குரூரமாக.

முபீனாவுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நரம்புகளில் குளிராய் ஊடுருவியது பயம்.

“அல்லாஹூ லாஇலாஹ

இல்லா ஹூவல் ஹய்யுல்

கய்யூம் லா தஃஹுதுஹு

ஸினத்துவ்வலா நவ்ம் லஹு

மாஃபிஸ் ஸமாவாதி வமாபில்

அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ

இன்தஹு இல்லா பி

இத்னிஹி யஃலமு மாபயின

அய்தீஹிம் வமா கல்பஹும்

வலா யுஹீதூன பிஷய்இம்மின்

இல்மிஹி இல்லா பிமா ஷாஅ

வஸிஅ குர்ஸிய்யுஹுஸ்

ஸமாவாதி வல்அர்ல வலா

யஊதுஹு ஹிப்லுஹுமா

வஹுவல் அலிய்யுல் அழீம்” என முணுமுணுத்தாள் அவள்.

இனியாவோ அவனது வார்த்தைகளை மருந்துக்குக் கூட மதியாதவளாக அங்கிருந்து தோழியை இழுத்துக்கொண்டு விறுவிறுவென சாந்திவனத்துக்குப் போய்விட்டாள்.

தமையன் இனியாவை மிரட்டுவதைத் தூரத்திலிருந்து பார்த்த ராக்கிக்குப் பயம் வந்துவிட்டது.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக “ஏன் இனியாவ மிரட்டுன அண்ணா?” என கேட்டான் அவன்.

ரோஷண் அலட்சியமாகச் சிரித்தான்.

“உன்னை அறைஞ்சால்ல, அதுக்குத் தான் மிரட்டுனேன்… இந்த ஊர்ல யாரும் நம்மளை அண்டர்-எஸ்டிமேட் பண்ணி அடிமையா நடத்திடக்கூடாது ராக்கி… அப்பா இல்லனு நம்மளை கேவலமா பாத்தவங்க, அம்மா போனதும் அனாதைனு அலட்சியமா நடத்துனவங்களை எல்லாம் இன்னும் கொஞ்சநாள்ல என் கால்ல விழவச்சிடுவேன்… சரி! நீ என் கூட குரூப் கூட்டத்துக்கு வர்றல்ல?”

“ஆமாண்ணா”

மெதுவாக இருள் பரவியதும் அண்ணனும் தம்பியும் யாருமறியாவண்ணம் தேவாலயத்தின் பக்கமாகப் போகும் பாதைக்குக் கிளம்பினார்கள்.

கைவிளக்கின் ஒளியால் இருளை விலக்கி நடந்த ரோஷணுக்கு எதை நினைத்தும் பயமில்லை. ஒரு முறை ராக்கி கேட்டதற்கு கூட “மனுசங்களை விட எந்த மிருகமும் ஆபத்தானது இல்ல ராக்கி” என்று சொன்னவன் அவன்.

இருவரும் நடந்து காட்டிலிருக்கும் குகையை அடைந்தார்கள்.

அங்கே பேட்டரியால் ஒளிரும் மஞ்சள் விளக்குகளை ஆன் செய்தான் ரோஷண். எங்கிருந்தோ உறுமல் சத்தமொன்று கேட்க ராக்கியும் அவனும் திரும்பினார்கள்.

சாத்தானுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிலையின் பின்னே இருந்து பாய்ந்து வந்தது அவர்கள் வளர்க்கும் ஓநாய்.

ரோஷணின் காலடியில் அமர்ந்துகொண்டது அது.

“பத்ரா” மெதுவாக அழைத்தான் அவன். அதுவோ நாய்க்குட்டி போல கொஞ்சியது அவனிடம்.

ராக்கி பத்ரா என்ற அந்த ஓநாயை விடுத்து எப்போதும் போல சாத்தானின் சிலையை மிரட்சியுடன் பார்த்தான்.

“அண்ணா! நம்ம இதெல்லாம் விட்டுடலாமா?” என திக்கித் திணறிக் கேட்டான்.

ஏன் என்பது போல பார்த்தவனிடம் “இந்தச் சாத்தான் குரூப்பால நீ என்ன சாதிக்க நினைக்குறண்ணா? பணத்தேவை நமக்கு இல்ல… நீ வேலை பாத்து வர்ற சம்பளமே நமக்குப் போதும்… அப்புறம் ஏன்ணா இப்பிடி ஒரு கல்ட் குரூப்பை ஆரம்பிச்ச?”

ரோஷண் ஓநாயின் தலையைத் தடவிக்கொடுத்தபடி சத்தமாகச் சிரித்தான்.

பின் எழுந்து சாத்தானின் சிலைக்கு நேரே நின்றான்.

“பணம், பதவி, அந்தஸ்து இதை விட போதை தரக்கூடியது எது தெரியுமா? நம்ம பேரைக் கேட்டதும் நாலு பேருக்கு வர்ற பயம்… இப்ப கொஞ்சநேரம் முன்னாடி முபீனாவோட கண்ணுல பாத்த பயம், என்னைப் பாக்குறப்ப ஊர்க்காரங்க சிலருக்கு வர்ற பயம் இதுல்லாம் எனக்குப் போதை மாதிரி ராக்கி… அதுக்குலாம் காரணம் யாரு? இதோ நிக்குறாரே இருளின் இளவரசன் – இந்த சாத்தான் தான்… இவரோட போதனைய இந்த ஊர்ல இருக்குற எல்லார் கிட்டவும் கொண்டு போய் சேக்குறது தான் என்னோட கடமை… அதுக்காக தான் இந்த கல்ட் குரூப்… அதுக்காக தான் இந்தக் கூட்டம், பலி எல்லாமே… ரோஷண்னு சொன்னதும் ஒரு பயம் வருதே அதை தக்க வைக்க நான் எவ்ளோ போராடுறேன்னு உனக்குத் தெரியுமாடா? இந்தக் காட்டுப்பக்கம் ஊர்க்காரங்க வரக்கூடாதுனு பத்ராவை வளக்குறதுல ஆரம்பிச்சு அந்தப் போராட்டத்தோட நீளம் அதிகம் ராக்கி… என் உயிர் உள்ள வரைக்கும் இந்தச் சாத்தானுக்கு நான் அடிமையா இருப்பேன்… எப்ப இவர் என் உயிரை எடுக்க நினைக்குறாரோ அப்ப சந்தோசமா செத்துப்போவேன்”

பைத்தியக்காரன் போல தமையன் பேசுவதைப் பார்த்த ராக்கிக்கு மஞ்சள் விளக்கின் ஒளியில் சாத்தான் சிலையின் தலையிலிருந்த கொம்புகள் பளபளப்பது பயத்தை உருவாக்கியது.

இப்படிப்பட்ட பயத்தோடு ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொண்டான் ராக்கி. சாத்தான் சாத்தான் என்று உளறிக்கொட்டிய ரோஷணுக்கு ஒரு கட்டத்தில் மன அழுத்தம் வந்துவிட்டது. அதற்காக ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தான். மருந்து மாத்திரைகளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டன.

இப்படியாக நாட்கள் ஓட கிளாராவும் கலிங்கராஜனும் தனது கூட்டத்தில் சேரப்போகிறார்கள் என்ற குதூகலத்தில் உலாவியவன் கலிங்கராஜன் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிந்ததும் கடுங்கோபத்திற்கு ஆளானான்.

“அந்தாளும் அவன் ஒய்பும் என்னை ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டாங்க… அவங்களை நான் சும்மாவிடமாட்டேன்” என அவன் அடிக்கடி சபதம் போல சொன்னதை இதன்யாவிடம் குறிப்பிட்டான் ராக்கி.

“சோ ஊர்க்காரங்களோட அலட்சியம் சின்ன வயசுல உண்டாக்குன வலி உன் அண்ணனை கல்ட் குரூப்பை உருவாக்க வச்சுதுனு சொல்லுற… அடுத்தவங்க பயத்தைப் பாத்து யாருக்குப் போதையா இருக்கும் தெரியுமா? சைக்கோக்கு…  உன் அண்ணன் ஒரு சைக்கோ”

“என் அண்ணனுக்கு டிப்ரசன் தான் இருந்துச்சு மேடம்… அவன் நீங்க சொல்லுற மாதிரி சைக்கோ கிடையாது”

“அப்ப நீ சைக்கோவா? ஏன்னா இனியாவ கொலை பண்ணுனவன்ல ஒருத்தனுக்குச் சிவியரான சைக்கோபதி இருக்கலாம்னு சைக்கலாஜிஸ்ட் ஒருத்தர் சொன்னார்”

“நானும் என் அண்ணனும் இந்தச் சமுதாயத்தால அலட்சியப்படுத்தப்பட்ட அப்பாவிங்க மேடம்… அவனுக்குப் பயம் போதைய குடுத்துச்சுனா எனக்கு அதே போதைய போதைமருந்து குடுத்துச்சு… நானோ என் அண்ணனோ இனியாவை கொல்லலை மேடம்”

“இசிட்? அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?”

“இனியா காணாம போனதை பத்தி ஊருக்குள்ள பேச்சு வந்தப்ப என் அண்ணா சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம்ல இருந்தான்… அவனை சென்னைல இருந்து பிசினஸ்மேன் ஒருத்தர் அவர் வீட்டுக்கு அழைச்சதும் திரும்பி ஊருக்கு வர்ற வரைக்கும் என்னை சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூமை பாத்துக்கச் சொல்லிட்டுப் போனான்… செவ்வாய்கிழமை நைட் முழுக்க நான் அங்க தான் இருந்தேன்… எங்கயும் வெளிய போகல… மேனேஜர் சாரும் என் கூட தான் இருந்தார்”

ராக்கி இவ்வாறு சொன்னதும் புருவம் சுருக்கினாள் இதன்யா.

“நீ இங்க இருந்ததுக்கு ஸ்ட்ராங்கான அலிபி இருக்குங்கிற?”

“ஆமா மேடம்”

அவனைக் கூர்மையாகப் பார்த்தாள் அவள்.

“அப்ப என்ன காரணத்துக்காக செவ்வாய்கிழமை புதன்கிழமை ஃபூட்டேஜை டெலீட் பண்ணுன? உன் ஃப்ரெண்ட் நிஷாந்தைக் காப்பாத்தவா?”

“நிஷாந்த்? மேடம் அவன் என்ன செஞ்சான்?”

“இனியாவ ஆசை வார்த்தை சொல்லி காட்டுக்குக் கூட்டிட்டுப் போய் வன்புணர்வுக்கு ஆளாக்கிருக்கான்… அவன் காட்டுக்குள்ள இனியாவோட போனதை நீ சி.சி.டி.வில பாத்திருக்க… நண்பனைக் காப்பாத்த அந்த ஃபூட்டேஜை டெலீட் பண்ணிருக்க”

“இல்ல மேடம்… நிஷாந்த் அப்பிடிப்பட்டவன் இல்ல.. அவன் இனியாவ லவ் பண்ணுனான்… கலிங்கராஜன் சார் ஒரு தடவை அவனை மிரட்டுனப்ப கூட அவன் காதலுக்காகத் தைரியமா நின்னான் மேடம்… அவனோட காதல் உண்மையானது… அதை கொச்சைப்படுத்திப் பேசாதிங்க”

ராக்கிக்காக நிஷாந்த் பரிந்து பேசியது நினைவில் வந்தது இதன்யாவுக்கு. இவர்களின் நட்பில் பொய்யில்லை. நிஷாந்தின் காதலிலும் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.

“ஃபைனல் கொஸ்டீன்… மார்த்தாண்டன் சார் ரகசியப்பாதைக்குப் போனப்ப நீ அங்க என்ன செஞ்சிட்டிருந்த? அதுவும் இந்தப் புக்கோட?”

ராக்கி தடுமாறினான். தலை குனிந்தான்.

“ஐ வாண்ட் ஆன்சர் ராக்கி”

தலையை உயர்த்தியவனின் கண்களில் கண்ணீர் மல்கியிருந்தது.

அது கன்னங்களைத் தொடவும் துடைத்தவன் “அந்தப் புக்கை குகையில வச்சு எரிச்சு சாத்தான் சிலைய உடைச்சு எறியணும்ங்கிற முடிவோட போனேன் மேடம்… என் அண்ணா இந்தப் பாதையில தவறிப்போகாம இருந்திருந்தா உயிரோட இருந்திருப்பானேங்கிற ஆதங்கமும் கோவமும் என்னை அங்க போக வச்சுது… என்னையும் அண்ணனையும் நம்பி வாழுறவன் பத்ரா… பத்ராவை பாத்து அவனுக்குச் சாப்பாடு போடணும்னு நினைச்சேன்… என் கையில இருந்த கோழி இறைச்சி பையை சார் கவனிக்கல” என்றான்.

அவனிடம் கேட்க வேண்டிய அனைத்து கேள்விகளையும் கேட்டு முடித்தாயிற்று என்றதும் வீடியோ பதிவை நிறுத்தச் சொன்னாள் இதன்யா.

“சக்கரவர்த்தி டீ எஸ்டேட் மேனேஜரோட அலிபியை வச்சு தான் உன்னை என் சந்தேக லிஸ்டுல இருந்து எடுக்கலாமா வேண்டாமானு சட்டம் முடிவு பண்ணும் ராக்கி… உன் தரப்புல கோர்ட்ல வாதாட லாயரை ஏற்பாடு பண்ண ஃபாதர் பவுலுக்குத் தகவல் சொல்லிடுறேன்.. இது என் வேலை இல்ல… இருந்தாலும் உண்மையான குற்றவாளியா நீ இல்லாம போய் உன் அண்ணனை மாதிரி அநியாயமா இறந்துடவேண்டாமேங்கிற பச்சாதாபத்தால செய்யுறேன்”

அவனிடம் விசாரணையை முடித்துக்கொண்டு அலுவலக அறைக்கு வந்த இதன்யா, இனியாவைப் படுகொலை செய்த கொலைகாரர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கலாமென நன்கு பழக்கமான மனோதத்துவ நிபுணர் ஒருவர் சொன்ன காரணிகளை மனதிற்குள் அடுக்கிப்  பார்க்க தொடங்கினாள்.