IIN 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை.

                                       -From psychopathy.org website

இதன்யா நிஷாந்திடம் விசாரணையை முடித்துக்கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்துகொள்ள அவளைத் தொடர்ந்து வந்தார் மார்த்தாண்டன்.

“அந்த நிஷாந்துக்குக் கருணை காட்டவே கூடாது மேடம்… எத்தனை பொய் சொல்லிருக்கான் அவன்… பதினேழு வயசு பொண்ணைக் காதல்ங்கிற பேருல யூஸ் பண்ணிருக்கான்… நம்ம கிட்ட மட்டும் டி.என்.ஏ சேம்பிள்ஸ் சிக்கலனா இவன் இப்பவும் உண்மைய சொல்லிருக்கமாட்டான்… இனியா பேர் கெட்டுப்போகக்கூடாதுனு உண்மைய மறைச்சதா இப்பவும் பொய் சொல்லுறான் பாருங்க… ஏன் மேடம் அவனுக்குலாம் லாயர்?”

மார்த்தாண்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். அவரை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த இதன்யா அவரது உணர்ச்சிமேலீட்டால் இதற்கு முன்னர் நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்ட முயன்றாள்.

“வேற என்ன செய்யலாம் அவனை? நம்மளே அடிச்சுக் கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லிடலாமா? ஃபர்ஸ்ட் ஆப் ஆல், உங்க எமோசன்ஸை ஒதுக்கி வச்சிட்டு இந்தக் கேஸை பாருங்க மார்த்தாண்டன் சார்… உங்களை மாதிரி திறமையான போலீஸ்காரங்க எமோசன்ஸுக்கு இம்பார்டன்ஸ் குடுக்குறப்ப தான் தடுமாறிப்போறிங்க… நீங்க போலீஸ்காரரா யோசிச்சிருந்தா நான் இப்ப கண்டுபிடிச்ச எவிடென்சை எப்பவோ கண்டுபிடிச்சிருப்பிங்க… பட் நீங்க ஒரு பொண்குழந்தையோட அப்பாவா இந்தக் கேஸை ஹேண்டில் பண்ணி தப்பான கோணத்துல நகர்ந்து தேவையான எவிடென்சை கவனிக்க தவறிட்டிங்க… இனியா நம்ம சர்வீஸ்ல இதுவரைக்கும் பாத்த, இனிமே பாக்கப்போற எத்தனையோ விக்டிம்கள்ல ஒருத்தி மட்டும் தான்… இதை உங்க மனசுல பதிய வச்சுக்கோங்க… இல்லனா இதுக்கு மேலயும் உங்களால இந்தக் கேஸ்ல சரியான கோணத்துல நகரமுடியாது… நிஷாந்த் மேல சந்தேகம் வலுவாகிருக்கு… ஆனா இன்னும் அவன் தான் குற்றவாளினு நிரூபிக்கப்படல… அதை முடிவு பண்ண வேண்டியது கோர்ட்… போலீஸ் ஆபிசர்ஸா நம்ம விக்டிமுக்கு நியாயம் கிடைக்கணும்னு யோசிக்கணுமே தவிர சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்குறவங்க தன்னோட இன்னசன்ஸை நிரூபிக்கிறதுக்கான வழிய அடைக்கக்கூடாது”

இதன்யா இத்தனை நாட்கள் இலைமறைக்காயாகச் சொல்லிக்கொண்டிருந்த அறிவுரையை இப்போது வெளிப்படையாகவே சொல்லிவிட்டாள். மார்த்தாண்டனும் முதலில் தலை குனிந்தாலும் பின்னர் தனது தவறைப் புரிந்துகொண்டார்.

இதன்யா அவரிடம் கலிங்கராஜன் கேரளா செல்லும் முன்னர் காவல்நிலையத்தில் அனுமதி வாங்கினாரா என விசாரித்தாள்.

“பிசினஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்னு பெர்மிசன் வாங்கிட்டுத் தான் போனார் மேடம்”

“வெல்… உங்களை ஜி.ஹெச்ல பாத்ததா சொன்னேன்ல, அன்னைக்கு உங்க கூட ஒரு முஸ்லீம் நபரைப் பாத்தேன்… அவர் தான் விக்டிமோட ஃப்ரெண்ட் முபீனாவோட அப்பாவா?”

“ஆமா மேடம்… அவர் தான் கோர்ட்ல…” என ஆரம்பித்த மார்த்தாண்டன் பின்னர் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டார்.

“என்ன கோர்ட்ல ஆரம்பிச்சு நிறுத்திட்டிங்க?”

இதன்யா சந்தேகமாக நோக்கவும் “ரசூல் பாய்கு கோர்ட்ல நிறைய ஆளுங்களைத் தெரியும்னு சொல்ல வந்தேன்” என்று சொல்லி சமாளித்தார்.

“அப்பிடியா? சரி அதை விடுங்க… அவரோட பொண்ணை என்கொயரி பண்ண அவர் சம்மதிப்பாரா?”

“சம்மதிப்பார் மேடம்… அந்தப் பொண்ணு தான் ரோஷண் பத்தி எனக்கு டீடெய்ல்ஸ் சொன்னா… இனியாவும் அவளும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்”

“அப்ப நாளைக்கு ஈவ்னிங் அவளை அவங்க வீட்டுல வச்சு நான் விசாரிக்கப்போறதா அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க… அந்த ஓநாய் பத்தி எதுவும் டீடெய்ல்ஸ் கிடைச்சுதா மகேந்திரன்?”

மும்முரமாக வனத்துறை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்த மகேந்திரனோ “ஓநாயோட ஃபூட் பிரிண்ட்ஸ் எடுத்தாச்சாம் மேடம்… ஃபார்ன்சிக் ரிப்போர்ட்ல இருக்குற அனிமல் ப்ரிண்டோட மேட்ச் ஆகுதானு நாளைக்குத் தெரிஞ்சிடும்” என்றார்.

“குட்… நாளைக்கு மானிங் பாக்கலாம்”

இதன்யா போலீஸ் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினாள்.

போய் சேர்ந்தவளின் மனம் காட்டுக்குகையில் தான் இனியா மரணித்திருக்க வேண்டுமென அழுத்தமாக நம்பியது,

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கொலைகாரர்களில் ஒருவனுக்குக் காட்டு மிருகங்களை பணியவைக்கத் தெரிந்திருக்கிறது. தடவியல் பற்றிய அறிவும் கொஞ்சம் இருந்திருக்கவேண்டும். ஸ்பெர்ம் மற்றும் செமன் ஆதாரங்கள் கிடைத்துவிடக்கூடாதென உடலின் கீழ்ப்பாகத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவியது அதை உறுதிபடுத்தியது. கூடவே அவர்கள் வேண்டுமென்றே கைரேகைப் பதிவுகளைக் குழப்பியிருக்கிறார்கள் தோன்றியது. அதோடு அவர்களில் ஒருவன் கட்டாயம் இந்த சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கவேண்டும். ஏனெனில் வெறும் உடலுக்காக நடந்த கொலை என்றால் முகத்தை இவ்வளவு சிதைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அடையாளம் தெரியக்கூடாதென நினைத்திருக்கலாமோ?

இப்போது விசாரணை வளையத்தில் இருக்கும் ராக்கியும் நிஷாந்தும் இதில் எந்தெந்த பாயிண்ட்களில் பொருந்துகிறார்கள் என அவளது போலீஸ் மூளை ஆராய கையோ இரவுணவைச் சமைக்க ஆரம்பித்தது.

யோசனையின் பிடியில் இருந்தபடியே சாப்பிட்டும் முடித்தவள் மறுநாள் விடியலில் புத்துணர்ச்சியோடு தயாராகி  காவல்நிலையத்துக்கு வந்தவள் ராக்கியை விசாரிக்கத் தயாரானாள்.

ராக்கி சோர்ந்து போயிருந்தான். இனி தன்னால் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பமுடியாதென தெளிவாகத் தெரிந்துவிட்டது அவனுக்கு. அவனது கண்களில் இருந்த நிராசை இதன்யாவுக்கு அவனது மனநிலையைத் தெளிவாகக் கூறிவிட்டது. எனவே அதற்கேற்றாற்போல கேள்விகளைக் கேட்க தயாரானாள்.

“நீயும் நிஷாந்தும் எதுக்காக இனியாவை கொலை பண்ணுனிங்கனு நான் கேக்கப்போறதில்ல… உனக்கும் இனியா கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு ப்ரூவ் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்குறதா நினைச்சுக்க… ஏ டூ இசட் என்ன நடந்துச்சோ அதை என் கிட்ட மறைக்காம சொல்லு… நீ சொல்லலைனாலும் என்னால கண்டுபிடிக்க முடியும்… நீயும் உன் அண்ணனும் என்னென்ன செஞ்சிங்கனு கண்டுபிடிக்க ஃபாரன்சிக் டீம் அந்தக் குகைக்கு போயிருக்காங்க… பொய் சொல்லி எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம உண்மைய சொல்லி அப்ரூவரா மாறிடு”

ராக்கியின் கண்களில் ஒரு நொடி தப்பிவிடுவோம் என்ற நம்பிக்கை மின்னியது. அப்ரூவர் என்று சொன்னதும் அது அணைந்தது. இருப்பினும் அவன் எதையோ தீர்மானித்தவனைப் போல பேச ஆரம்பித்தான்.

“நானும் என் அண்ணாவும் எங்கம்மாவோட பொன்மலைல சந்தோசமா இருந்தோம் மேடம்… எங்களுக்கு அப்பா கிடையாது… அண்ணா சின்னவயசுல இருந்தே அம்மா மேல உயிரா இருப்பான்… நாங்க கஷ்டப்பட்ட குடும்பம்… அதனால எங்க கூட யாரும் பெருசா பழகமாட்டாங்க… அண்ணனுக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் கிடையாது… ஆனா எனக்குக் ஒரு நல்ல நண்பன் கிடைச்சான்… அவன் நிஷாந்த்… எப்பவுமே எனக்குச் சப்போர்ட்டா இருந்தான்… அவனுக்கும் அப்பா கிடையாது… எங்க பெயினை ஏமாற்றத்தை அவனால புரிஞ்சிக்க முடிஞ்சுது… ஒருநாள் அம்மாவும் எங்களை விட்டுட்டு ஒரேயடியா போயிட்டாங்க… அதுக்கு அப்புறம் ஃபாதர் எங்களுக்குக் கார்டியன் ஆனார்… எங்க ஊர்ல யாரும் பெருசா மதவேறுபாடு பாக்க மாட்டாங்க… அதுக்கு உதாரணம் ஃபாதர்… எங்களை அவரோட சொந்த மகன் மாதிரி வளர்த்தார்… அண்ணாவும் நானும் நல்லா படிச்சோம்… ஆனா எங்களுக்குக் கடவுள் மேல இருந்த நம்பிக்கை தான் போயிருச்சு… அப்ப தான் அண்ணா கூட படிச்ச ஒருத்தர் அமெரிக்காவுக்கு ஹையர் ஸ்டடீஸ் படிக்கப் போய் பாதில திரும்பி வந்தார்… அவர் கிட்ட தான் அண்ணா சாத்தான் வழிபாடு பத்தி தெரிஞ்சுக்கிட்டான்”

அவன் தொடர்ந்து சொன்ன யாவும் சம்பவங்களாக இதன்யாவின் கண் முன்னே விரியத் தொடங்கின.

நண்பனிடம் சாத்தான் வழிபாடு பற்றி தெரிந்துகொண்ட ரோஷண் அதை பற்றி புத்தகம் மூலமாகவும் இணையம் மூலமாகவும் முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்தான்.

இதற்கிடையே ஏகலைவனின் தேயிலைத்தோட்டத்தில் நிஷாந்தின் பரிந்துரையால் அவனுக்கு வேலையும் கிடைத்தது. தனது சாத்தான் வழிபாடு பற்றிய தேடல் வேலையைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொண்டான் ரோஷண்.

கட்டுப்பாடும் துன்பங்களும் மலிந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கொடுக்கும் ரட்சகனாகச் சாத்தானைக் கருதியவன் சாத்தானின் கொள்கையைப் பரப்பும் நபராக மாறத் துவங்கினான்.

வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலுள்ள சாத்தான் வழிபாட்டுக்குழுவின் கூட்டங்களில் கலந்துகொண்டவன் அங்கே வழிபாடு நடத்தும் முறைகள், நம்பிக்கைகள், பலி கொடுக்கும் முறைகளை நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டான்.

சாத்தான் வழிபாட்டு முறையில் மேலைநாட்டினர் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுவந்துவிட்டாலும் அனேக இடங்களில் சாத்தானை வழிபடுபவர்கள் பழங்கால பலி கொடுக்கும் முறைகளையும், வழிபாட்டு முறைகளையுமே பின்பற்றுகிறார்கள். அவற்றில் நிறைய அருவருப்பான சொல்லவே கூசக்கூடிய சம்பவங்கள் எல்லாம் கண் முன்னே அரங்கேறியதைப் பார்த்தவன் அங்கே வினியோகிக்கப்பட்ட போதைபொருட்களுக்கு அடிமையாகிப்போனான். அங்கிருந்து வந்தவன் காட்டிலுள்ள குகையைச் சாத்தான் வழிபாட்டுக்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தான். அப்போது தான் அந்த ஓநாய்க்குட்டியை அவன் பார்க்க நேர்ந்தது.

அதன் தாய் இறந்துவிட தனியே கிடந்த குட்டியைக் குகையில் வைத்து ராக்கியுடன் சேர்ந்து வளர்க்க ஆரம்பித்தான் ரோஷண். அதுவும் அவர்களுடன் இயல்பாகப் பழக ஆரம்பித்தது.

அந்நேரத்தில் ரோஷண் சாத்தான் வழிபாட்டு முறையைப் பொன்மலையில் ஆரம்பிக்கவும் எண்ணியவன், தான் பணியாற்றும் இடத்திலிருந்தே அதற்கு ஆள்  பிடிக்க ஆரம்பித்தான்.

நம் மக்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை நிதர்சனம் என்ற உண்மையை ஏற்பதற்கு கசக்கும். சிலர் அதை ஏற்றுக்கொள்வார்கள். சிலரோ அதை மாற்றியமைக்கத் துடிப்பார்கள். குறுக்குவழியில் செல்ல தயாராவார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடித் தனது சாத்தான் வழிபாடு கல்ட் குழுவில் உறுப்பினராக்கிக் கொண்டான் ரோஷண்.

அவனது பேச்சு சாமர்த்தியத்தாலும், போதை மருந்தின் வீரியத்தாலும் என்ன நன்மை நடந்தாலும் சாத்தானின் அருள் என்றே அவனது குழுவினர் நம்ப ஆரம்பித்தனர்.

ராக்கி தமையனுடன் போராடிச் சலித்துப்போனான். ஒரு கட்டத்தில் “நீ என் குரூப்ல சேர்ந்து பாரு… அப்புறம் சாத்தானோட மகிமை உனக்குப் புரியும்” என்று அவனையும் உள்ளே இழுத்துக்கொண்டான்.

போதைமருந்தின் மயக்கத்தில் ராக்கியும் தமையனின் காரியத்திற்கு துணையாக இருக்க ஆரம்பித்தான். ஆனால் பாதிரியாருக்கு இதெல்லாம் தெரியாமல் பார்த்துக்கொண்டான். அவர்கள் தனியே வசித்தது வேறு இதற்கு வசதியாய் போய்விட்டது.

எனவே காட்டு குகையில் மாதமொரு முறை நடைபெறும் சாத்தான் குழுவினரின் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பித்தான் ராக்கி. அப்போது தான் ஊர்மக்களில் சிலருக்கு இதில் பிடித்தமின்மை எழுந்தது. அதில் முக்கியமானவர்கள் பாதிரியார் பவுல், ரசூல் பாய் மற்றும் பொன்மலை முருகன் கோவிலின் தர்மகர்த்தா பொன்னுரங்கம்.

அவர்களின் எதிர்ப்பால் வெளிப்படையாக சாத்தான் வழிபாடு கூட்டத்தை நடத்தாமல் இரகசியமாக நடத்த ஆரம்பித்தான் ரோஷண். ஊரார் யாரும் காட்டுக்குள் வந்து தங்களைத் தொந்தரவு செய்யக்கூடாதென ஓநாயை ஆயுதமாகப் பயன்படுத்தினான்.

அந்த ஓநாயும் அவ்வபோது ஊருக்குள் புகுந்து ஆடு, கோழிகளைப் பிடித்துக்கொண்டு போகும். காட்டைப் பற்றிய பயம் மக்கள் மனதில் உருவெடுத்த சமயம் ரோஷணும் சாத்தான் வழிபாட்டால் வளர ஆரம்பித்தான்.

பெரிய பிரமுகர்கள் எல்லாம் சாத்தான் வழிபாடு நடத்த அவனை அழைத்தார்கள். ரோஷணின் புகழ் மேல்தட்டினரிடம் பரவத் தொடங்கியது. அடிக்கடி வெளியூர் செல்லும் சூழல் உருவானது. அப்போதெல்லாம் தனக்குப் பதிலாகத் தம்பியிடம் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறையின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போவான் ரோஷண்.

இந்நிலையில் தான் கிளாரா அந்தக் குழுவில் இணைந்தாள்.

அவளது ஆசையை நிறைவேற்ற சாத்தானால் தான் முடியுமென தமையனிடம் கூறியதை ராக்கி கேட்டதும் உண்டு. அச்சமயத்தில் தான் அவன் போதைமருந்தின் தாக்கத்தால் மிச்செல்லிடம் தவறாக நடந்து இனியாவிடம் அறை வாங்கினான்.

நண்பன் தனக்குத் துணயாய் நிற்பான் என நம்பிய ராக்கி உண்மை அறிந்த நிஷாந்த் அவனைக் கடிந்துகொண்டதில் மனமுடைந்து போனான்.

அச்சமயத்தில் கலிங்கராஜனின் தொழில் சரிவு ஆரம்பித்தது. இது தான் வாய்ப்பு என அவரைத் தனது சாத்தான் குழுவில் இணைக்க சாந்தி வனத்துக்கு நடையாய் நடந்தான் ரோஷண்.

முருகன் மீது பக்தி கொண்ட இனியாவுக்கு ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக் குழு மீது அவ்வளவு பிடித்தம் கிடையாது. அவன் வீட்டுக்கு வருவதே அவளுக்குப் பிடிக்கவில்லை. கிளாராவிடமும் தந்தையிடமும் தனது அதிருப்தியைக் கூறி எதுவும் நடக்காததால் நேரே ரோஷணிடமே இனி எங்கள் வீட்டுக்கு வராதே என்று கூறினாள் அவள்.

“இன்னொரு தடவை எங்க வீட்டுக்கு சாத்தான் அது இதுனு சொல்லிட்டு வந்தனா உனக்கு மரியாதை கெட்டுப் போயிடும்… சாத்தான் வழிபாடுங்கிற பேருல நீயும் உன் கூட்டாளிங்களும் அங்கங்க ஆடு, கோழிய திருடுறிங்கனு ஊர் முழுக்க சொல்லிடுவேன்… இனிமே என் சித்தி, அப்பா யாரையாவது பாக்க எங்க வீட்டுக்கு வந்தனா, வீட்டுல நகை பணத்தைத் திருட பாக்குறனு போலீஸ்ல சொல்லி உன்னை அரெஸ்ட் பண்ண வச்சிடுவேன் ஜாக்கிரதை… வெளிய போடா ராஸ்கல்”

இனியா வேலையாட்கள் முன்னிலையில் தன்னை மிரட்டியதும் ரோஷணால் அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

போதாக்குறைக்கு தம்பியை ஒரு தடவை அறைந்திருக்கிறாள் என்ற செய்தியும் அவனுக்குத் தெரியவரவும் இனியா மீது கடுங்கோபம் கொண்டான் ரோஷண்.