IIN 2

‘சைக்கோபதி’ எனும் இந்தச் சொல் 1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1941ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மனநல மருத்துவர் ஹெர்வி எம் கிளெக்லியின் (The Mask of Sanity) என்ற புத்தகத்திற்குப் பிறகு இந்தச் சொல் மிகவும் பிரபலமானது.

         -An article from BBC

சாந்திவனம்…

பொன்மலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் குவித்தால் எப்படி இருக்குமோ அதைக் கற்பனை செய்து கலிங்கராஜன் கட்டிய வீடு. வீட்டின் பெயருக்கேற்ப குட்டி வனம் போல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் பட்சிகளுக்கும் வீடாய் மாறிப்போயிருந்தது சாந்திவனம்.

தோட்டத்தையும் விருட்சங்களையும் பராமரிப்பதற்காக கலிங்கராஜன் நான்கு நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார், அதில் ஒருவர் தோட்டக்கலை பட்டதாரி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அழகான வீடு அன்று கலையிழந்து போயிருந்தது. வீட்டின் அழகு அது கட்டிய பாணியில் வருவதில்லை. அங்கே உயிர்ப்புடன் நடமாடும் மனிதர்களின் மகிழ்ச்சியால் வருவதே!

அந்த வீட்டின் உயிர்ப்பாகவும் அழகாகவும் இருந்த தேவதை மறைந்ததால் அது இப்போது வெறும் கட்டிடம் மட்டுமே!

இனியாவின் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அன்றோடு முழுதாக ஒரு நாள் முடிந்திருந்தது. காவல்துறையினர் சந்தேகப்படுவோர் பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருப்பதாக மட்டுமே தகவல் வந்தது.

இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை.

கிளாராவால் மகள் இறந்த துக்கத்தைத் தாங்க முடியவில்லை. கலிங்கராஜனோ சுவரை வெறிப்பதும் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் சத்தமிடும் பட்சிகளை பார்ப்பதுமாகப் பொழுதைக் கடத்தினார்.

இதனால் பாதிக்கப்பட்டதென்னவோ அவர்களின் வாரிசுகளே! ஆம்! இனியாவோடு சேர்த்து அவர்களுக்கு நான்கு குழந்தைகள்.

இனியாவுக்கு அடுத்து பிறந்த மிச்செல்லுக்கு பதினைந்து வயது. ஜென்னிக்கு வயது பதினொன்று. கடைக்குட்டி ஆண்வாரிசாகப் பிறந்த நித்திலராஜனுக்கு ஆறு வயதாகிறது.

மூவரும் இனியா இனி வீட்டுக்கு வரமாட்டாள் என தந்தை சொன்ன கணத்திலிருந்து அழுதுகொண்டே இருக்கிறார்கள். அதிலும் மிச்செல் இனியாவுக்கு மிகவும் நெருங்கிய சகோதரி. இருவரும் சேர்ந்து பகிர்ந்துகொண்ட அறையில் தனியொருத்தியாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் அவள்.

ஜென்னிக்கு அழுதழுது காய்ச்சலே வந்துவிட்டது. பணிப்பெண்ணின் பராமரிப்பில் இருந்தாள் இப்போது. நித்திலன் என்ற நித்திலராஜனோ சோகமே உருவாய் இருக்கும் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான்.

தோட்டத்தில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த கலிங்கராஜனிடம் ஓடிவந்தார் டிரைவர் ஜான்.

“நம்ம இனியா பாப்பாவோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சாம் சார்… கான்ஸ்டபிள் கிட்ட விசாரிச்சப்ப சொன்னாரு”

கலிங்கராஜனிடமிருந்து வெறும் தலையசைப்பு மட்டும் பதிலாகக் கிடைக்கவும் ஜானுக்கு ஆச்சரியம்.

மெதுவாக நகர்ந்து வீட்டுக்குள் வந்தவர் முதலாளியம்மாவிடம் விவரத்தைக் கூற கிளாரா பரபரப்பானாள்.

“எந்திரி நித்தி” என மகனை எழுப்பிவிட்டவள் அவசரமாகக் கிளம்பினாள்.

“அம்மா…” ஜான் தயங்கவும் “போய் காரை ஸ்டார்ட் பண்ணுங்க… நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போகணும்” என்றாள் கிளாரா.

ஜானின் பார்வை அந்தப் பக்கம் வந்த பணிப்பெண்ணான நவநீதத்தைத் தாக்கியது. ஏதாவது செய் என சைகையில் சொன்னார் அவர்.

இனி என்னால் முடியாதென நவநீதமும் சைகை செய்தபோது கலிங்கராஜன் வீட்டுக்குள் வந்தார்.

“எல்லா புரசிஜரும் முடிஞ்சா போலீஸ் ஸ்டேசன்ல இருந்து கூப்பிட்டு விடுவாங்க… அப்ப போனா போதும் ஜான்… நீ கான்ஸ்டபிள் கிட்ட அடிக்கடி பேச்சு குடு” என்று சொல்லி ஜானை அனுப்பி வைத்தார்.

கிளாரா அவரை வெறுப்பு பொங்க பார்த்தாள்.

“வா நித்தி”

மகனை அழைத்துக்கொண்டு அவர்களின் அறைக்குள் போனவளைப் பின்தொடர்ந்து கலிங்கராஜனும் போனார்.

 முதலாளியும் அவரது மனைவியும் எலியும் பூனையுமாக இருப்பது பணியாட்களுக்குப் பழகிப்போன விசயம்.

நவநீதம் அவர்களது அறையையே வெறிக்கவும் “என்ன பார்வை? உனக்குக் கிச்சன்ல வேலை இல்லையா?” என்றபடி வந்தார் குமாரி. சாந்திநிலையத்தின் ஹவுஸ்கீப்பர் மற்றும் பொறுப்பாளினி.

அவரைப் பார்த்ததும் “வந்துட்டா… என்னமோ வீட்டோட முதலாளியம்மா மாதிரி இனிமே அதிகாரம் பண்ணுவாளே” என்று மனதுக்குள் பொருமிய நவநீதம் வெளிப்பார்வைக்கு அசடு வழிந்துவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டாள்.

குமாரி அவள் போன திசையைப் பார்த்தவர் நேற்றிலிருந்து கிளாரா அடைந்த மனவேதனையைப் போக்கும் வழியறியாது திகைத்தார்.

மகனோடு அறைக்குள் வந்த கிளாரா கலிங்கராஜனைப் பார்த்ததும் வெடிக்க ஆரம்பித்தாள்.

“கரிச்சு கொட்டி என் பொண்ணை இல்லாம ஆக்குனது போதாதா? அவ சாவுக்கு யார் காரணம்னு தெரிஞ்சிக்கிறதை கூட தடுப்பிங்களா?”

“போலீஸ் புரசிஜர் பத்தி தெரியாம உணர்ச்சிவசப்பட்டுப் பேசாத கிளாரா.. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதுக்கு அப்புறம் அந்த ரிப்போர்ட்டை வச்சு விசாரணையை ஆரம்பிப்பாங்க… அப்ப நம்ம கிட்ட விவரம் சொல்லுவாங்க… நீ முந்திரிக்கொட்டைத்தனமா முன்ன போய் நின்னா அவங்க சந்தேகம் உன் மேல திரும்பும்”

அவ்வளவு தான்! கிளாராவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“போலீஸ் என் மேல சந்தேகப்படுறதை பத்தி எனக்குக் கவலை இல்ல… கொடூரமா இறந்து போனவ என் மக… உங்களுக்கு அவளைப் பத்தி எப்பவும் கவலை கிடையாது.. ஆனா நான் அவ அம்மா… எனக்குக் கவலை இருக்கு… நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போவேன்… பி.எம் ரிப்போர்ட் பத்தி கேப்பேன்… போலீஸ் விசாரணைல என் மகளைக் கொன்னவன் யாருனு தெரிய வந்துச்சுனா அவனை என் கையால சித்திரவதை பண்ணி கொல்லுவேன்”

கண்களில் கொலைவெறி மின்ன கிளாரா சொல்ல கலிங்கராஜனுக்கே ஒரு நொடியில் பீதி கிளம்பியது.

வெறிகொண்டு கத்திய கிளாராவைப் பார்த்து மிரண்டான் நித்திலராஜன். அதை கவனித்தவர் “குமாரி” என்று உரத்தக்குரலில் அழைக்க குமாரியும் வந்தார்.

“நித்திய உங்க கூட வச்சுக்கோங்க” என மகனை அவரோடு அனுப்பி வைத்தவர் ஒரு முடிவோடு மனைவியிடம் வந்தார்.

“இங்க பாரு கிளாரா, இப்ப வரைக்கும் இனியாவோட கொலைக்குக் காரணம் என்னனு தெரியல… அவ மரணம் குடுத்த வேதனைய நான் சுமக்க முடியாம தவிச்சிட்டிருக்கேன்… நீ வேற உன் பங்குக்கு எதுவும் பிரச்சனைல சிக்கிக்காத”

கிளாரா அவர் என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை.

“பெத்த பிள்ளைய பதினேழு வருசம் ஒதுக்கி வச்சவன் பேச்செல்லாம் என்னால கேக்க முடியாது” என அவள் சொன்னதுதான் தாமதம் கலிங்கராஜனுக்கும் கோபம் வந்துவிட்டது.

“வாயை மூடுடி… என்னமோ நீ அவளைப் பெத்தவ மாதிரி துடிக்குற? நீ அவளோட வளர்ப்புத்தாய் மட்டும் தான்… அவளைப் பெத்தவ என்னோட குமுதா… நான் ஏன் இனியாவ ஒதுக்கிவச்சேன்னு அரூபமா இருக்குற அவளுக்கும், என்னைப் படைச்ச ஆண்டவனுக்கும் தெரியும்… ரெண்டாவதா வந்து ஒட்டிக்கிட்ட உனக்கு அதைப் புரியவைக்கணும்னு எனக்கு அவசியமில்லடி”

கலிங்கராஜன் சொல்லி முடித்ததும் கிளாராவின் கண்கள் உடைப்பெடுத்தன. மனதில் சொல்லவொண்ணா பாரமொன்று ஏறியமர்ந்து கொண்டது.

ஆனால் குரலும் தடுமாறியது.

“நான்… இனியாவ…”

வார்த்தையை முடிக்க முடியாமல் போராடினாள் அப்பெண்மணி.

அவள் இனியாவைப் பெற்றவள் இல்லை தான். இனியாவின் அன்னை குமுதா அவளைப் பிரசவித்தபோதே இறந்துவிட்டார். கிளாரா கலிங்கராஜனின் காலின் ஸ்கின் அண்ட் ஹேர்கேர் ப்ராடக்ட் லிமிட்டட் கம்பெனியின் விளம்பர மாடலாக வந்தவள் கலிங்கராஜன் மீது காதல்வயப்பட்டு அவரை மணந்து கொண்டாள்.

அன்றிலிருந்து இனியாவையும் தான் பெற்ற மகளாகத் தான் கருதி வந்தாள் அவள். தனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தபோதும் இனியாவுக்கான அன்பு என்றுமே கிளாராவிடத்தில் குறைந்தது இல்லை.

காரணம் கலிங்கராஜனுக்கு இனியாவைச் சுத்தமாகப் பிடிக்காது. தாயற்ற, தந்தையின் அன்பு கிட்டாத குழந்தையிடம் சித்தி மனப்பான்மையைக் காட்டும் அளவுக்குக் கிளாராவுக்குக் கொடூர மனமில்லை.

கலிங்கராஜன் கிளாரா திணறுவதைப் பார்த்தார்.

“முன்னாடி உனக்கு அவ மேல அன்பு பாசம் இருந்துச்சு… ஆனா சமீபநாட்களா உன்னை எதையோ செய்யவிடாம அவ தடுக்குறானு எனக்குத் தெரியும்… என்னோட பெர்ஷ்னல்ல தலையிடாதனு ஒரு நாள் நீ இனியாவை அறைஞ்சதை நான் பாக்கலனு நினைக்குறியா?”

இப்போது கிளாரா இடியோசை கண்ட நாகம் போல அரண்டு போனாள்.

“அது.. உங்களுக்கு எப்பிடி… ராஜன்” என ஏதோ சொல்லவந்தவளைக் கையமர்த்தினார் கலிங்கராஜன்.

“நீ எதுவும் சொல்லவேண்டாம்… இனியா மேல நான் காட்டுன வெறுப்பு வெளிப்படையானது… நீயும் அவளை சமீபமா வெறுக்க ஆரம்பிச்சிட்ட… இது வீட்டுல இருக்குற வேலைக்காரங்களுக்குக் கூட தெரியும்… அதனால சும்மா கத்தி என் மூளைய சூடாக்காத… ஏற்கெனவே பிசினஸ்ல பெருசா லாபம் இல்லனு ஆறு மாசமா நான் பைத்தியக்காரன் மாதிரி சுத்துறேன்… ஏகலைவன் இன்வெஸ்ட் பண்ணுறதா சொன்னதும் கொஞ்சம் நல்லது நடக்குதேனு நினைச்சேன்… இப்ப அதுக்குள்ள இன்னொரு கெட்டது நடந்திருக்கு… ப்ச்… நீ வேற உன் பங்குக்கு ஓவர் ரியாக்ட் பண்ணி பிரச்சனைல சிக்கிடாத… உன்னை நம்பி மூனு பிள்ளைங்க இருக்காங்க… அதை ஞாபகத்துல வச்சு நடந்துக்க”

அவர் எச்சரிக்கும்போதே “அப்பா…” என்று மிச்செலின் குரல் கேட்டது.

உடனே கிளாராவின் கண்களில் கலவரம் மூண்டது. கலிங்கராஜன் பேசியதை இளையமகள் கேட்டிருப்பாளோ என்று பரிதவிப்புடன் அவளைப் பார்த்தாள்.

“என்னடா?” பரிவாய் கலிங்கராஜன் கேட்டார்.

“நிஷாந்த் வந்திருக்கான்பா” என்றவள் எந்திரம் போல அங்கிருந்து போய்விட

“நீங்க பேசுனதை மிச்செல் கேட்டிருப்பாளோ?” என பயத்துடன் கேட்டாள் கிளாரா.

கலிங்கராஜன் அவளைக் கண்டனமாகப் பார்த்தார்.

“இதெல்லாம் இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்?” என்று கடிந்துவிட்டு வெளியேறினார் அவர்.

கிளாராவின் மனதில் இனியாவின் அகால மரணத்தால் உண்டான வருத்தம் குறைந்து கலிங்கராஜன் சொன்ன வார்த்தைகளால் பயம் நிரம்ப ஆரம்பித்தது.

அறையை விட்டு வெளியேறிய கலிங்கராஜன் தனக்காக காத்திருந்த நிஷாந்தைப் பார்த்ததும் “வாப்பா” என்றார் உலர்ந்து போன குரலில்.

நிஷாந்துக்குப் பத்தொன்பது வயது. இப்போதுதான் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டில் படித்துக்கொண்டிருக்கிறான்.

“இனியாவை கொலை பண்ணிட்டாங்கனு அம்மா சொன்னாங்க அங்கிள்… உண்மையா?”

கேட்டு முடிப்பதற்குள் ஏகப்பட்ட திக்கல் திணறல் அவனது குரலில்.

“எல்லாம் முடிஞ்சுதுப்பா.. இனி பேச என்ன இருக்கு?” என்றவரின் கண்களில் மகளுக்காக ஒரு துளி கண்ணீர் இல்லை.

“அங்கிள்… இனியாவ..” என்று தடுமாறியவன் “ஆழ்ந்த இரங்கல் கலிங்கராஜன் சார்” என்று கேட்ட குரலில் அதிர்ந்து போனான்.

திரும்பிப் பார்த்தவன் அங்கே ஏகலைவன் நிற்கவும் எச்சிலை விழுங்கினான். உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான். அடிக்கடி கழுத்தைத் தடவிப் பெருமூச்சுவிட்டான்.

“நீ இங்க என்ன பண்ணுற?”

கேள்வியோடு அவனை நெருங்கினான் ஏகலைவன்.

“இனியா இறந்துட்டானு…”

“சாவித்திரி அக்கா நாலு நாளா உன்னைக் காணும்னு தேடுறாங்க… எங்கடா போன?”

“முருகன் கோயிலுக்கு மாசி திருவிழா நடத்த டொனேசன் வசூலிக்க வெளியூர் போயிருந்தேன் மாமா” என்றான் அவன்.

“நீ படிச்சு முன்னேறுவனு சாவித்திரி அக்கா கனவு காணுறாங்க… ஆனா நீ இந்த ஊர்ப்பசங்க கூட சேர்ந்து வீணாப்போயிட்டிருக்க நிஷாந்த்… ராக்கி, அவன் அண்ணன் ரோஷண் கூடல்லாம் உனக்கு என்ன பழக்கம்?”

ரோஷணின் பெயர் வந்ததும் கலிங்கராஜனிடம் தடுமாற்றம். அதை வெளிக்காட்டிக்கொள்ளாது சமாளித்தார் மனிதர்.

“மாமா…”

“எதுவும் பேசாத… வீட்டுக்குப் போ” என அவனை விரட்டினான் ஏகலைவன்.

அவன் போனதும் “என் பெரியம்மா மகளோட பையனாச்சே, நமக்கு வாரிசு இல்ல இவனை நம்ம தொழில்வாரிசா ஆக்கலாம்னு நான் நினைக்குறேன்… ஆனா இவன் சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேர்ந்து நாசமா போறான் கலிங்கராஜன்” என்றான் வருத்தத்தோடு.

“இந்தக் காலத்து பிள்ளைங்களை ஒரு வார்த்தை அதட்ட முடியாது ஏகலைவன்… உடனே தப்பான முடிவு எடுத்துடுவாங்க”

கடினக்குரலில் கலிங்கராஜன் சொல்லவும் ஏகலைவனின் முகம் மாறியது.

அவரது கையைப் பிடித்தான்.

“வருத்தப்படாதிங்க கலிங்கராஜன்… இனியாவைக் கொன்னது யாருனு சீக்கிரமா தெரியவரும்” என்றான் நம்பிக்கையோடு.

கூடவே அவரது நிறுவனத்தில் முதலீடு செய்வதாகத் தான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ஏகலைவன் உரைக்கவும் கலிங்கராஜனின் மனதில் இருந்த பாரம் அகன்றது.

“போலீஸ் தரப்புல என்ன சொல்லுறாங்க?”

“இன்னைக்கு பி.எம் ரிப்போர்ட் வந்தாச்சுனு கான்ஸ்டபிள் சொல்லி அனுப்பிருக்கார் ஏகலைவன்”

“அடுத்து முழுவீச்சுல விசாரணைய ஆரம்பிச்சிடுவாங்க”

ஏகலைவன் சொல்லவும் கலிங்கராஜனின் உடல்மொழியில் எக்கச்சக்க மாறுதல்.

அதே நேரம் இனியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் சில பகுதிகளை மார்த்தாண்டனிடம் காட்டிக் கொண்டிருந்தார் மருத்துவர்.

“பி.எம் ரிசல்ட்படி இந்தப் பொண்ணு புதன்கிழமை அதிகாலையில கொலை பண்ணப்பட்டிருக்கா இன்ஸ்பெக்டர்… இறப்புக்குக் காரணம் அவளோட உடம்புல இருக்குற காயங்களும் கழுத்தை நெறிச்சதால மூச்சுக்குழாய் நெறிஞ்சதும் தான்… அவ முகத்துல ஆசிட் ஊத்தி தோலைக் கூர்மையான ஆயுதத்தை வச்சு கிழிச்சிருக்காங்கனு சொன்னேன்ல… இதை செய்யுறப்ப அந்தப் பொண்ணு உயிரோட தான் இருந்திருக்கணும்… அதுக்கு அப்புறம் தான் உடம்பு முழுக்க முப்பது தடவை குத்தப்பட்டிருக்கா… அப்பிடியும் சாகலனதும் கழுத்தை நெறிச்சு கொன்னுருக்காங்க… இதுல எதிர்பாக்காத இன்னொரு விசயமும் நடந்திருக்கு”

“என்ன டாக்டர்?”

“அந்தப் பொண்ணு இறக்குறதுக்கு முன்னாடியும் இறந்ததுக்கு அப்புறமும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கா… அவளோட ஜெனிட்டல்ல ஸ்பெர்ம் சாம்பிள்ஸ் கிடைச்சிருக்கு”

மருத்துவர் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்த்தால் இது பழிவாங்க நடந்த கொலையாகத் தெரியவில்லை. கொலைகாரனின் நோக்கம் அவளது உடலாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு இனியா மறுத்ததால் கொலை நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் மார்த்தாண்டன்.

இந்தக் கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்கலாமென தீர்மானித்தார் அவர்.