IIN 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம்.

                                       -From psychopathy.org website

நிஷாந்தைத் தேடி வந்திருந்தான் ராக்கி. சாவித்திரி அவனுக்கும் சேர்த்து காபி போட்டுத் தரவும் அருந்தியவன் நிஷாந்த் உடை மாற்றிவிட்டு வந்ததும் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மச்சி” என்றான்.

“என்னடா?” என்றபடி குழல்விளக்கின் ஒளியில் சிவந்திருந்த அவனது கன்னத்தைப் பார்த்தபடி வினவினான் நிஷாந்த்.

ராக்கியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

“உங்கண்ணன் அடிச்சானா? நான் மாமா கிட்ட சொல்லி அவனை வேலைய விட்டுத் தூக்கச் சொல்லுறேன்டா… சாத்தான் அது இதுனு ஊர்க்காரங்க புத்திய கலைச்சு கேவலமான காரியத்தைச் செஞ்சவன் இப்ப கைநீட்டவும் ஆரம்பிச்சிட்டானா?” என குமுறினான் நிஷாந்த்.

“என்னை அண்ணா அடிக்கல மச்சி… என்னை அடிச்சது ஒரு பொண்ணு”

“எது? பொண்ணா? எவடா அது? யாருனு சொல்லு… கையை உடைச்சு விடுறேன்”

நண்பனுக்காகக் கொதித்தெழுந்தான் நிஷாந்த்.

“காலின் ஸ்கின்கேர் கம்பெனி ஓனர் மக இனியா”

உடனே புருவங்களைச் சுருக்கியவன் “அதுவா? ரெட்டை ஜடை போட்டுக்கிட்டு ஈனு இளிச்ச முகமா ஸ்கூல் வேன்ல ஏறுமே அந்தப் பொண்ணா? என்னடா சொல்லுற? சின்னப்பொண்ணுடா அது… இப்பிடி கைத்தடம் பதியுற அளவுக்கு அறையுற பலம் அதுக்கு கிடையாது” என்றான் கிண்டலாக.

ராக்கி கண்ணீரைத் துடைத்தான்.

“நீ என்னை நம்பலல்ல… அவ தான் என்னை அடிச்சா மச்சி… சர்ச் பக்கத்துல வச்சு பளார்னு அடிச்சா”

“அப்பிடியா? நீ சொல்லுறதால நம்புறேன்… எதுக்காக அடிச்சா?”

நிஷாந்த் கிடுக்குப்பிடியாய் கேள்வி கேட்கவும் ராக்கி கொஞ்சம் திணறினான். போதைமருந்தின் ஆதிக்கத்தில் அவள் தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றேன் என்றா கூற முடியும்?

எனவே இன்ஸ்டெண்டாக ஒரு பொய்யைத் தயார் செய்தான்.

“அவ தங்கச்சிய கூட்டிட்டு சர்ச்சுக்கு வந்திருந்தா… அந்த மிச்செல் பொண்ணு கடைசி ரோ பெஞ்சுல இடிச்சு விழப்போனா… விழாம பிடிச்சதுக்கு ஓனு கத்தி கூப்பாடு போட்டு என்னைத் தப்பா தொட்டுட்டான்னு அவ அக்கா கிட்ட மாட்டிவிட்டுட்டா.. இனியாவும் எதையும் விசாரிக்காம என்னை பளார்னு அறைஞ்சிட்டா மச்சி”

இனியாவைச் சிறுபெண் என்று நினைத்த நிஷாந்த் இப்போது நண்பன் சொன்னதை நம்பினான். தனது தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக எண்ணி அறைந்திருப்பாள் போல என எண்ணிக்கொண்டான்.

அப்படி நினைத்திருந்தாலும் அது தவறு தானே. தீர விசாரிக்காது இப்படி கையை நீட்டலாமா? எனவே இனியாவிடம் பேசி அவளை ராக்கியிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டுமென தீர்மானித்தான்.

மறுநாள் ராக்கியுடன் அவளது பள்ளிக்கு வெளியே காத்திருந்தான். பள்ளி வேனில் ஏறப்போனவளை நோக்கி ஓடினான் நிஷாந்த்.

வேனில் ஏறப்போனவளைத் தடுக்கும் விதமாகக் குறுக்கே கை நீட்டினான்.

எரிச்சலோடு நிமிர்ந்தவளிடம் “உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்… நம்ம ஊர் முருகன் கோவில்ல உனக்காக வெயிட் பண்ணுவேன்… வந்துடு” என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு அவன் போய்விட இனியாவுடன் வேனில்ப பயணிக்கும் வகுப்புப்பெண்கள் அவளைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.

உடனே முபீனா சிடுசிடுக்க ஆரம்பித்தாள்.

“வாயை மூடுங்கடி… நிஷாந்த் அண்ணா எங்க ஊர்க்காரர்… அதான் இனியா கிட்ட பேசிட்டுப் போறார்”

பதின்பருவத்தின் இறுதி கட்டத்தில் எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு உண்டாவது இயற்கை. அதன் விளைவாக சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளும், என்ணங்களும் ஆண் பெண் இருபாலரையும் ஆக்கிரமிக்கும்.

இனியாவிற்கு தன் முன்னே திடுமென வந்து நின்ற நிஷாந்த் திரைப்படக் கதாநாயகனின் அதிரடியை நினைவூட்டினான். போதாக்குறைக்கு வேனிலிருந்த பெண்களின் கேலியும் சேர்ந்துகொள்ள அச்சிறுபெண் தன்னைப் பெரியவளாக எண்ணத் தொடங்கி கற்பனை எனும் சிறகைக் கட்டி பறக்க ஆரம்பித்தாள்.

வீட்டிற்கு வந்ததும் சாப்பிடக் கூட மறந்தவளாக தனது அறைக்குள் வந்தவள் அங்கே தனக்கு முன்னே வந்து வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்த மிச்செல்லிடம் தீவிரமாக ஒரு சந்தேகத்தைக் கேட்டாள்.

“நம்ம கிட்ட ஒரு பையன் அவனா வந்து பேசுறான்னா என்ன அர்த்தம்டி?”

இதுவரை புத்தகம், முருகன் கோவில், காலின் ஸ்கின்கேர் தாண்டி எதைப் பற்றியும் பேசாத தமக்கை இப்படி திடுதிடுப்பென யாரோ ஒரு ஆணைப் பற்றிக் கேட்கவும் மிச்செல்லால் மலங்க மலங்க விழிக்க மட்டுமே முடிந்தது.

“சரி விடு… நீ சின்ன குழந்தை… உனக்கு இதுல்லாம் புரியாது” என்றவள் மடமடவென குளித்து அழகான டாப் மற்றும் லெகின்ஸை அணிந்து முருகன் கோவிலுக்குக் கிளம்பினாள்.

அங்கே நிஷாந்தைக் கண்டதும் என்னென்னவோ எண்ணங்கள்! அவனிடம் போய் நின்றவள் “என்னை எதுக்கு வரச் சொன்னிங்க?” என மெல்லிய சிரிப்போடு கேட்க

“நீ எதுக்கு என் ஃப்ரெண்டை அடிச்ச?” என சிடுசிடுவென எரிந்து விழுந்தான் நிஷாந்த்.

இனியா அவ்வளவு நேரம் இருந்த இனிய மனநிலையைத் தொலைத்தாள். போயும் போயும் ஒரு பொறுக்கிக்கு ஆதரவாகப் பேசுகிறானே இவன்!

அருவருப்போடு அவனை உறுத்து விழித்தவள் “அவன் பண்ணுன பொறுக்கித்தனத்துக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா? என் கையில ஆயுதம் எதுவும் இல்ல… இருந்திருந்தா அவனைக் கொன்னுருப்பேன்” என்றாள்.

“ஏய் என்னடி ஓவரா பேசுற? பெஞ்ச் தடுக்கி விழப்போன பொண்ணை விழாம தடுத்ததுக்கு பேர் பொறுக்கித்தனமா? சின்னப்பொண்ணாச்சேனு சாஃப்டா பேசுனா நீ லிமிட் தாண்டுற.. பளார்னு ஒன்னு வச்சேன்னா கன்னம் பன்னு மாதிரி வீங்கிடும் பாத்துக்க”

“நீ என்னை அடிப்பியா? எங்க என்னை அடி அடிடா” என இனியா அவனை நெருங்கவும் நிஷாந்த் தடுமாறினான்.

அவனது தடுமாற்றத்தை வேறு விதமாகப் புரிந்துகொண்ட இனியா “கீழ விழாம காப்பாத்தணும்னா இங்க இங்க இங்கலாம் தொடணுமா? பதில் சொல்லுடா” என தன் தங்கையை ராக்கி தவறாகத் தொட்ட இடங்களைச் சுட்டிக் காட்டி கேட்கவும் அதிர்ச்சியில் உறைந்தான் நிஷாந்த்.

“சீ! பொறுக்கிக்குச் சப்போர்ட் பண்ணுற நீயும் பொறுக்கியா தான் இருப்ப”

திட்டித் தீர்த்துவிட்டு இனியா போய்விட்டாள். நிஷாந்தால் அவன் காதையே நம்ப முடியவில்லை.

ராக்கியா இப்படி கேவலமாக நடந்துகொண்டான்? அவன் அமைதியானவன் ஆயிற்றே! இருப்பினும் ஒரு பெண் இந்த விசயத்தில் பொய் சொல்லமாட்டாள் என அழுத்தமாக நம்பியவன் ராக்கியிடம் உண்மையைக் கூறும்படி அழுத்திக் கேட்டதும் அவன் அழுதபடி உண்மையைக் கூறிவிட்டான்.

“அது… அண்ணாவோட கல்ட் க்ரூப்ல… அங்க உள்ளவங்க எல்லாம் போதை மருந்து சாப்பிட்டு… இப்பிடி இருந்ததை… நானும் போதை மருந்து சாப்பிட்டேன்டா… அங்க பாத்ததை மறக்க முடியாம மிச்செல் கிட்ட”

ராக்கி முடிக்கும் முன்னர் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான் நிஷாந்த்.

“இனியாவே சின்னப்பொண்ணு… அவ தங்கச்சி சின்னக் குழந்தைடா… நம்ம வீட்டுல ஒரு தங்கச்சி அந்த வயசுல இருந்தா அவ கிட்ட தப்பா நடந்துக்க மனசு வருமா? உன்னை என் ஃப்ரெண்டுனு சொல்லவே வெக்கமா இருக்கு… என் மூஞ்சிலயே முழிக்காத… உன்னால இனியா என்னையும் தப்பா நினைக்குறா இப்ப”

அன்றிலிருந்து பத்து நாட்கள் இனியாவிடம் மன்னிப்பு கேட்க அவள் பள்ளி வாசலில் தவம் இருந்தான் நிஷாந்த். முருகன் கோவிலை அவள் சுத்தம் செய்ய வந்தபோது பேச முயன்றான். பார்வையால் அவனை எட்டி நிற்கும்படி எச்சரித்துவிட்டாள் அச்சிறுபெண்.

கடைசியாக ஒரு நாள் எப்படியோ காலில் விழாத குறையாக அவளிடம் மன்னிப்பு கேட்டான் நிஷாந்த். முதலில் மனம் ஒப்பவில்லை என்றாலும் ராக்கியின் நிலமையைப் புரிந்துகொண்டு நிஷாந்தை மன்னித்துவிட்டாள் இனியா.

ஆனால் ராக்கியை எப்போதும் மன்னிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

அதன் பின்னர் எங்கே நிஷாந்தைப் பார்த்தாலும் நட்பாகச் சிரிப்பாள். முருகன் கோவிலில் சந்தித்தால் பேசிவிட்டுப்போவாள். தைப்பூசத் திருவிழாவில் அவன் ஓடியாடி வேலை செய்ததை ரசித்தாள்.

ஒருநாள் மாலையில் இருட்டியதும் முருகன் கோவிலில் நின்றபடி மூச்சுக்காற்றை இழுத்துப்பிடித்து எதையோ வாசம் பிடித்துக்கொண்டிருந்தவளிடம் என்னவென விசாரித்தான் நிஷாந்த்.

“உனக்கு வாசம் வரலையா நிஷாந்த்?”

அவன் மூக்கைச் சுருக்கி வாசம் பிடித்தான். ஏதோ மலரின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது.

“ஏதோ பூவாசம்”

“ஏதோ பூவாசம் இல்ல… ராமபாணப்பூ” என்றாள் அவள்.

“ஆங்? அப்பிடி ஒரு பூவா?”

“நித்தியமல்லிய தான் அப்பிடி சொல்லுவாங்க நிஷாந்த்… நீ பாத்தது இல்லையா? நம்ம ஏகலைவன் சார் வீட்டுல கூட இருக்கு” என ஆசையோடு அவள் கூறவும்

“உனக்கு அந்த பூ ரொம்ப பிடிக்குமா? நான் காட்டுக்குள்ள போய் பறிச்சுட்டு வரவா?” என விளையாட்டாக கேட்டான் நிஷாந்த்.

உடனே “ஐயோ வேண்டாம்…. அங்க ஓநாய் இருக்குதாம்… ஜான் அண்ணா சொன்னார்” என்றாள் அவள் கண்களில் மிரட்சியுடன்.

“அதுல்லாம் சும்மா… நான் போய் பறிச்சிட்டு வர்றேன்.. நீ இங்கயே எனக்காக வெயிட் பண்ணு”

அவள் போகாதே என அலறுவதைக் கேட்காமல் காட்டை நோக்கி ஓடினான் நிஷாந்த்.

இனியா அவ்வபோது ஓநாயின் ஊளை சத்தத்தைக் கேட்டு இரவில் உறங்காமல் பயந்ததுண்டு. அந்த நினைவில் கோவில் படியில் மடிந்து அமர்ந்து மௌனமாக அழத் துவங்கினாள்.

இப்படியே பதினைந்து நிமிடங்கள் கடக்க அவள் நாசிக்கு மிக அருகே ராமபாண மலரின் நறுமணம் கமழவும் தலையை உயர்த்தினாள்.

ஒரு பாலிதீன் கவரில் ராமபாண மலர்களைப் பறித்து எடுத்து வந்திருந்தான் நிஷாந்த்.

“வாங்கிக்க” என்றான்.

இனியா மாட்டேன் என்றவள் “இதுக்காக காட்டுக்குப் போனியா? அங்க இருக்குற ஓநாய் கிட்ட நீ மாட்டிருந்தா என்னாகியிருக்கும்?” என விசும்பினாள் அவள்.

“நான் எங்க காட்டுக்குப் போனேன்? மாமா வீட்டுல இருந்து பறிச்சிட்டு வந்தேன் மக்கு” அவள் தலையில் குட்டி பாலிதீன் கவரை கையில் திணித்தான் நிஷாந்த்.

“அப்ப என் கிட்ட ஏன் பொய் சொன்ன?” இன்னும் அழுகை முடியவில்லை.

“சும்மா விளையாடுனேன்… இந்தப் பூவை வாங்க மாட்டேன்னு சொல்லிடாத… காட்டை விட டேஞ்சரான ப்ளேஸ் எங்க மாமாவோட தோட்டம்… அவருக்கு இந்தப் பூ ரொம்ப பிடிக்கும்… இந்தக் கொடில யார் கை வச்சாலும் கொலை விழும்… அவர் ஊர்ல இல்லங்கிறதால தைரியமா பறிச்சிட்டு வந்திருக்கேன்”

கதை சொல்வது போல அவன் பேசவும் இனியா சமாதானமானாள். ராமபாண மலர்கள் அடங்கிய பாலிதீன் கவரை வாங்கிக்கொண்டாள்.

“அன்னைக்கு ராக்கி பய பேச்சை நம்பி உன்னை கன்னாபின்னானு பேசிட்டேன்… நீ என்னை மன்னிச்சிட்ட… ஆனாலும் ஒரு உறுத்தல்… இந்தப் பூவை பாத்ததும் உன் கண்ணு ஜொலிச்சுதுல்ல, அதுல அந்த உறுத்தல் மறைஞ்சிடுச்சு”

நிஷாந்தின் மனம் உறுத்தலை விட்ட தருணம் இனியாவின் மனதில் காதல் அரும்ப துவங்கியது. அவளது பதின்வயதின் கோளாறால் நிஷாந்தைக் காதலிக்கவும் தொடங்கிவிட்டாள்.

முதலில் நிஷாந்த் மறுத்தான். அவள் இன்னும் மைனர். காதல் எல்லாம் சரிவராது என்றவன் இனியாவின் நற்குணத்தால் கவரப்பட்டுத் தானும் காதலில் விழுந்தான். அதற்கு இன்னொரு காரணம் இனியா முகப்புத்தகத்தில் நட்பாய் பழகிய மர்ம மனிதன் ‘ஈ.டி.எஸ்’.

இனியாவின் நட்பில் நிஷாந்தும் இருந்தானே. அந்த ஈ.டி.எஸ் கமெண்டில் அவளிடம் வழிவது அவனுக்குப் பொறாமையை உண்டாக்கியது. பொறாமையின் அடிப்படை காதல் தான் என அழுத்தமாக நம்பினான். அவனது இரண்டுங்கெட்டான் வயது அப்படிப்பட்டதாயிற்றே!

எனவே தனது காதலை இனியாவிடம் உரைத்தான்.

இருவரும் முகப்புத்தகத்திலும், பொன்மலையிலும் தங்களது காதலை வளர்த்தார்கள். நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாமென பேசினார்கள்.

அந்தக் காதலுக்குத் தடையாக வந்தவர் கலிங்கராஜன். என்ன தான் ஏகலைவனின் மருமகனாக இருந்தாலும் அவனை அண்டி பிழைக்கும் இளைஞனிடம் மகள் மனம் விழுந்திருப்பதை அவர் விரும்பவில்லை.

இனியாவின் மொபைலை வாங்கி ஒளித்து வைத்தார். அதை இனியா எப்படியோ எடுத்து தங்கள் காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிந்துவிட்டதென கூற நிஷாந்த் முதல் முறையாக அவளை இழந்துவிடுவோமோ என பயந்தான்.

கூடவே ஈ.டி.எஸ் என்ற நபர் இனியாவைத் தன்வசப்படுத்திக்காட்டுகிறேன் என நிஷாந்தின் இன்பாக்சில் சவால் விட்டான்.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை இனியாவிடம் காட்டியபோது சிரித்தாளே தவிர சீரியசாக நினைக்கவில்லை. ஆனால் அப்போதிருந்து அந்த ஈ.டி.எஸ்சை அவள்  முகப்புத்தகத்தில் நட்புநீக்கம் செய்துவிட்டாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவளை முருகன் கோவிலில் சந்தித்து டிரைவர் ஜான் கண்ணில் சிக்கிக்கொண்டான் நிஷாந்த்.

அது கலிங்கராஜனின் காதுக்குப் போய் மிரட்டாத குறையாக அவனை எச்சரித்து அனுப்பினார் அவர்.

எனவே இருவரும் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டார்கள். அந்த ஆண்டு முருகனுக்குத் தைப்பூச திருவிழா தடைபட்டது. ஊரார் எப்படியாவது மாசி திருவிழாவை நடத்த நன்கொடைதாரர்களிடம் தொடர்பு கொண்டார்கள்.

அதற்காக சென்னைக்குச் செல்லும் முன்னர் இனியாவிடம் பேசுவோம் என காட்டுக்குள் அழைத்தான் நிஷாந்த். ஓநாய் பற்றிய பயத்தைத் தாண்டி இனியாவும் வந்தாள்.

காதலியை முதல் முறையாகப் பிரியப்போகிறோமென்ற ஏக்கத்தில் அவளது அனுமதியுடன் இதழில் முத்தமிட்டான் நிஷாந்த்.

வயதுக்கோளாறால் முத்தம் நீண்டு அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க இனியா பயந்தாள்.

“பயப்படாத இனியா… நம்ம ஒன்னு சேர்ந்துட்டோம்னா உங்கப்பாவால நம்மளை பிரிக்க முடியாது” தமிழ் சினிமாக்களின் தாக்கத்தால் உளறினான் அவன்.

இனியாவுக்கும் தந்தையின் மிரட்டல் நினைவுக்கு வந்தது. அதை விட நிஷாந்தின் மீது பைத்தியக்காரத்தனமான காதல் மிகுந்திருந்தது அவளுக்கு.

அவனது முத்தம் அவளைச் சலனப்படுத்தியிருந்தது. அவளது பதின்வயது அந்தச் சலனத்தால் தைரியம் கொண்டது.

விளைவு, இருவரும் உடலால் இணைந்தார்கள். எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி தங்களது காதலைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

காதலித்தவனிடம் தன்னை ஒப்படைத்த மகிழ்ச்சியில் இருந்தாள் இனியா. அப்போது தான் நிஷாந்தின் மொபைல் அடித்தது.

அழைப்பை ஏற்றவன் சென்னக்குக் கிளம்பவிருப்பதைக் கூறினான்.

“இதுக்கு மேல நீ காட்டுக்குள்ள இருக்கவேண்டாம்… என் கூட வா”

“நீ போ நிஷாந்த்…. அந்தப் பக்கம் பாரு, ராமபாணம் கொடி இருக்கு… அதை வேரோட பிடுங்கி எங்க வீட்டுக்குக் கொண்டு போகப்போறேன்”

கொடி இருந்த திசை நோக்கி கை நீட்டி இனியா வர மறுத்தாள்.

“ஏய் ஓநாய் வரும்டி”

நிஷாந்த் அவளைப் பயமுறுத்தியும் பார்த்தான்.

“பகல்ல எந்த ஓநாயும் வராதுடா… நீ கிளம்பு”

அது தான் இனியாவைத் தான் கடைசியாகப் பார்த்த தருணம் என்று கண்ணீருடன் சொல்லி முடித்தான் நிஷாந்த்.

“பகல்ல ஓநாய் வராதுனு நம்பிக்கையா சொன்னா என் இனியா… நாலு கால் ஓநாய் தான் ராத்திரி வேட்டையாடும், ரெண்டு கால் இருக்குற மனுச ஓநாய்களுக்கு ராத்திரி பகல் வித்தியாசமே கிடையாதுனு அவளுக்குத் தெரியல… அவளை அங்க விட்டுட்டுப் போன பாவி எனக்கும் தெரியல மேடம்”

தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்டு அவன் மீண்டும் கதறியழவும் இதன்யா பெருமூச்சு விட்டாள்.

“நீ இந்த தடவை சொன்னது உண்மையா இல்ல பொய்யா?”

“உண்மை தான் மேடம்… நான் இனியாவ கொலை பண்ணிட்டேன்னு நீங்க பழி போட்டா கூட நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்… ரேப் பண்ணிட்டேன்னு… என் இனியா மேடம் அவ… அவளை நான் எப்படி?” என்றவன் தண்ணீரைக் குடித்தான்.

பின்னர் மூச்சு வாங்க “நான் கோழையா ஓடி ஒளிஞ்சதுக்குக் காரணம் எங்களுக்குள்ள நடந்த பிசிக்கல் ரிலேசன்ஷிப்பை வச்சு இனியாவை இந்த  உலகம் தப்பா பேசிடக்கூடாதுங்கிறதுக்காக தான்… அவளை ரெண்டு பேர் வன்புணர்வுக்கு ஆளாக்கிக் கொன்னாங்கனு சொன்னதை கேட்டு வருத்தப்பட்ட உலகம், அவ என் கூட விருப்பத்தோட பிசிக்கல் ரிலேசன்ஷிப் வச்சுக்கிட்டாங்கிற உண்மை தெரிஞ்சா அவளை அசிங்கமா பேசும்.. அவ கேரக்டரை தப்பா பேசும்… அவளை ‘ஸ்லட் ஷேம்’ செஞ்சு கொலைகாரங்களுக்கு ஆதரவா பேசுறதுக்குக் கூட ஒரு கூட்டம் தயாராகும் மேடம்… ஒரு பொண்ணோட கேரக்டரை ரொம்ப சுலபமா அசிங்கப்படுத்திடுவாங்க…  நான் பயந்துட்டேன்… இனியாவ நினைச்சு என் அம்மாவ நினைச்சு நான் கோழையா நின்னேன்… பொய் சொன்னேன்… எல்லாம் என் தப்பு தான் மேடம்” என கரம் கூப்பினான் அவன்.

இதன்யா அவனுக்கு ஆறுதல் எதுவும் சொல்லவில்லை.

“நீ மேல சொன்ன மனசை உருக்குற காதல் கதை பொய்… இனியாவ காதலிச்ச மாதிரி நடிச்சிருக்க.. அவ உன்னை நம்பிருக்கா… அதை பயன்படுத்தி நீ இனியாவ காட்டுக்குள்ள விட்டுட்டு வந்த மாதிரி நடிச்சு சர்ச் பக்கத்து பாதை வழியா மறுபடி காட்டுக்குள்ள போய் அந்தக் குகைல வச்சு அவளை வன்புணர்வு செஞ்சிருக்க… இது என்னோட அனுமானம்… இதுல உனக்குத் துணையா இருந்தவன் ராக்கி… காரணம் அவனை அவ அறைஞ்சிருக்கா… சோ அவளை வன்புணர்வு செஞ்ச ரெண்டாவது ஆள் ராக்கி”

“இல்ல மேடம்… ஏன் மனசாட்சியே இல்லாம பேசுறிங்க? ராக்கி அப்பிடிப்பட்டவன் இல்ல… என் இனியாவ நான் கொல்லல மேடம்”

“இசிட்? நாளைக்கு உன் அம்மாவ லாயரோட வரச் சொல்லிருக்கேன்… கோர்ட்ல உன்னை ப்ரொடியூஸ் பண்ணுறப்ப உன் பக்கத்துக்கு வாதாட உனக்காக அலிபி ரெடி பண்ண லாயர் வேணும்ல… சப்போஸ் உனக்கு ஆதரவா ஏதாச்சும் அலிபி இருந்துச்சுனா நீ இந்த கேஸ்ல இருந்து தப்பிச்சிடலாம்… ஆனா இனியா மைனரா இருந்தப்ப அவ கூட நீ பிசிக்கல் ரிலேசன்ஷிப் வச்சிருக்க… கன்சண்டோட நடந்தாலும் சட்டம் அதை ஏத்துக்காது… அந்தப் பிரச்சனைய நீ தான் சமாளிக்கணும்”

மார்த்தாண்டனிடம் வீடியோ பதிவை முடித்துக்கொள்ளலாமென சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் இதன்யா.