IIN 18

கலாச்சார இனக்குழு வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் மனப்பிறழ்வுக்குறைபாடு கொண்டோர் வாழ்கின்றனர். தோராயமாக 1 சதவிகித ஆண்களும், 0.3 முதல் 0.7 சதவிகித பெண்களும் இக்குறைபாட்டால் பாதிக்கப்படலாமென ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. ஹேரின் செக்லிஸ்டின் படி மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவரும் சைக்கோபாத்கள் அல்ல. சிலருக்கு வெறும் அறிகுறிகள் மட்டும் இருக்கலாம். மனப்பிறழ்வுக்குறைபாட்டோடு தொடர்புடைய ஆரம்பகால அறிகுறியான ‘அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத குணாதிசயத்தைக் குழந்தை பருவத்தில் ஒருவர் கொண்டிருக்கலாம். அதற்காக அவர் வளர்ந்ததும் சைக்கோபாத் ஆகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அப்படி ஆகிவிடுவார் என்ற பயமும் தேவையற்றது. இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால் அவர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுத்தால் போதுமானது.

                                            -From psychology today

ஓநாய்களும் நாய்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் நாய்களைப் போல ஓநாய்கள் அவ்வளவு எளிதில் மனிதர்களுடன் பழகுவதில்லை. அதற்கு காரணம் இந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பிறந்ததும் இரண்டுவிதமான பருவங்களைக் கடக்கின்றன.

முதல் பருவம் ‘பழகும் பருவம்’. இப்பருவத்தில் புதிய நறுமணங்கள், புதிய சூழல்கள், புதிய பொருட்கள் மற்றும் அனுபவங்களுக்கு இவ்வினம் தயாராகும். தன்னை அச்சூழலுக்குப் பழக்கப்படுத்திக்கொள்ளும்.

இரண்டாம் பருவம் ‘எச்சரிக்கை பருவம்’. இப்பருவத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு இவ்வினங்கள் தயாராகும். அதற்காக கடிப்பது, தாக்குவது போன்ற பயிற்சிகளை எடுத்துக்கொள்ளும்.

ஓநாய் குட்டிகள் ‘பழகும் பருவத்தில்’ கண்களைத் திறப்பதில்லை. வெறும் நுகரும் திறன் மட்டுமே அவற்றுக்கு இருக்கும். அந்தப் பருவம் சீக்கிரம் முடிந்துவிடும். அவற்றிற்கு கேட்கும் திறன், பார்வை திறன் வரும்போது ஓநாய்கள் ‘எச்சரிக்கை பருவத்திற்குள்’ நுழைந்துவிடும். இதுவே அவற்றை நாய்களைப் போல பழக்கப்படுத்திக்கொள்ள தடையாக இருக்கிறது.

அதையும் தாண்டி ஓநாய்கள் மனிதர்களோடு என்ன தான் நெருங்கிப் பழகினாலும் அவை ‘ப்ரிடேட்டர்கள்’ என்பதை மறந்துவிடக்கூடாது.

இதெல்லாம் ஓரளவுக்கு அறிந்தவள் என்பதால் இதன்யாவுக்குக் குகையில் பார்த்த ஓநாய் ராக்கியின் காலடியில் நாய் போல வந்து நின்றதை இப்போது வரை நம்ப முடியவில்லை.

தங்களைப் பார்த்ததும் பற்களைக் காட்டிக்கொண்டு பாய்ந்த காட்சியும் தெளிவாக நினைவிருந்தது அவளுக்கு. மறுநாள் குகைக்குப் போகவிருக்கும் தடயவியல் அதிகாரிகளுக்குத் தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியமென உணர்ந்து காவல்துறை ஆணையரிடம் பேசிவிட்டாள் அவள்.

டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைகளுடன் முரளிதரன் வரவேண்டியது மட்டுமே பாக்கி. அவருக்காக காத்திருந்தவள் சாந்திவனத்தில் தான் கண்ட காட்சியை மீண்டுமொரு நினைவுப்படுத்திப் பார்த்தாள்.

கிளாரா செய்த காரியத்தின் அருவருப்பு இன்னும் அகலவில்லை. ஏற்கெனவே ஏகலைவன் மேல் இருக்கும் சந்தேகத்தைக் கிளாராவின் செயல்பாடு இன்னும் அதிகரித்துவிட்டது எனலாம்.

அப்போது அறைக்கதவைத் திறந்துகொண்டு யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பியவள் வந்தவர் முரளிதரன் என்றதும் ஆவலோடு டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையின் முடிவு என்ன என விசாரித்தாள்.

“இனியா கிட்ட கலெக்ட் பண்ணுன சாம்பிள் முடியோட டி.என்.ஏ அண்ட் அவ வாய்ல எடுக்கப்பட்ட சலைவா சேம்பிள்ல இருந்த ஏலியன் டி.ஏன்.ஏ கூட நிஷாந்தோட டி.என்.ஏ நூறு சதவிகிதம் பொருந்தியிருக்கு இதன்யா மேடம்”

இதன்யா கண்கள் பளபளக்க அறிக்கையை வாங்கி வாசித்தாள். முரளிதரன் சொன்னதை தான் அந்த அறிக்கையும் சொன்னது.

நிஷாந்த் இனியாவைச் சந்திக்க மட்டும் காட்டுக்கு அழைக்கவில்லை என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

விறுவிறுவென விசாரணை அறைக்குப் போனாள் அவள். அங்கே இருந்த நிஷாந்த் இதன்யாவைக் கண்டதும் எழுந்திருக்க கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் “மார்த்தாண்டன் வீடியோ ரெக்கார்டிங்கை ஆன் பண்ணுங்க” என்றூ குரல் கொடுக்க ஓடோடி வந்த மார்த்தாண்டன் வீடியோ பதிவுக்கான ஆயத்தங்களை செய்தார்.

நிஷாந்தின் முகத்தில் பதற்றத்தின் ரேகைகள் பரவத் தொடங்கின.

இதன்யா ஒரு தீர்மானத்தோடு அமர்ந்தவள் “நேத்து சொன்ன மாதிரி பொய் சொல்லித் தப்பிச்சிடலாம்னு கனவு கூட காணாத… என் கையில டி.என்.ஏ டெஸ்டோட ரிப்போர்ட் இருக்கு… ஒழுங்கா நான் கேக்குறதுக்கு உண்மைய சொல்லு.. இல்லனா விசாரணை வேற விதமா மாறிடும்” என எச்சரித்தாள் அவனை.

டி.என்.ஏ பரிசோதனை முடிவு என்றதும் நிஷாந்தின் கண்களில் பீதி பரவியது.

“நான்… பொய்… எதுவும்…” என்றவன் இதன்யா உறுத்து விழிக்கவும் எச்சில் விழுங்கினான்.

“நீயும் இனியாவும் செவ்வாய்கிழமை காட்டுக்குள்ள போனிங்க… பேசுனிங்க… அப்ப உனக்குக் கால் வந்துச்சு… அதை அட்டெண்ட் பண்ணி பேசிட்டு இனியா ராமபாணம் கொடிய பறிக்கப்போறேன்னு சொன்னதால நீ அங்க இருந்து கிளம்பிட்ட… அப்புறம் சென்னைக்குப் போயிட்ட… இதான நீ நேத்து குடுத்த ஸ்டேட்மெண்ட்…. ஆனா டி.என்.ஏ ரிப்போர்ட் நீங்க ரெண்டு பேரும் வெறுமெனே பேச மட்டும் செய்யலனு சொல்லுதே… இதுக்கு என்ன பதில் சொல்லப்போற நிஷாந்த்?”

“மே…ட…ம்”

“ஏன் இனியாவ வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை பண்ணுனனு சொல்லு”

“நான் ஒன்னுமே செய்யல மேடம்… ரேப்… நானா? ஏன் அபாண்டமா என் மேல பழி போடுறிங்க?”

கண் விழி பிதுங்க கூறினான் நிஷாந்த்.

“இனியாவோட உடம்புல கிடைச்ச இரண்டு முடி உன்னோடது தான்… அவ வாய்ல கிடைச்ச சலைவா சேம்பிள் உன் டி.என்.ஏவோட ஒத்துப்போகுது… தட் மீன்ஸ் யூ கிஸ்ட் ஹெர் அண்ட் ரேப்ட் ஹெர்”

“நோ மேடம்… நீங்க அபாண்டமா பேசுறிங்க… நான் இனியாவ ரேப் பண்ணல… என்னை நம்புங்க மேடம்… எங்க அம்மா மேல சத்தியமா நான் ரேப் பண்ணல”

கதறியழுதான் நிஷாந்த். ஏனோ இதன்யாவுக்கு இரக்கமே வரவில்லை. இவன் வந்ததிலிருந்து எத்தனை பொய்களைச் சொல்லிவிட்டான். அதில் இதுவும் ஒன்று என அலட்சியமாக அவனது உடல்மொழியைக் கவனித்தாள்.

“இது… எங்கம்மாக்குத் தெரிஞ்சா அவங்க உயிரோடவே… இருக்க… மாட்டாங்க”

அழுதபடி சொன்னான் அவன். பத்தொன்பது வயது ஒன்றும் பெரியவர் ஆகும் வயதில்லை. குழந்தையா குமரனா என்ற குழப்பம் அடிக்கடி உதிக்கும் வயதுதான். ஆனால் ஆண்பிள்ளைகள் அப்போது மீசை வளர்ந்துவிடுவதாலும் புதராய் தாடி வந்துவிடுவதாலும் தங்களைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்வார்கள் போல.

நிஷாந்தும் அப்படி தான் என்பது அவன் குழந்தை போல தேம்பியழுதிலேயே தெரிந்து போனது இதன்யாவுக்கு

“அழுறதை நிறுத்திட்டு நடந்ததை சொல்லு… இப்பவாச்சும் உண்மைய சொன்னா உனக்குக் கிடைக்கப்போற தண்டனை குறையும் நிஷாந்த்”

தலையை உயர்த்தியவன் “எல்லாத்தையும் சொல்லிடுறேன் மேடம்… நான் இனியாவ கொல்லலை மேடம்… எங்கம்மா மேல சத்தியமா நான் கொல்லலை” என்றான்.

“சரி… நீ கொலை பண்ணல… ஆனா அவளை ரேப் பண்ணுனவன் நீ தான?”

“இல்ல மேடம்… நான் ரேப் பண்ணல” என கத்தியவன் அழுதபடி தலையைக் குனிந்துகொண்டான்.

“யெஸ்… வீ ஹேட் செக்ஸ்… பட் அது இனியாவோட சம்மதத்தோட நடந்துச்சு மேடம்… நான் அவளை வற்புறுத்தல… அந்தத் தனிமை, எனக்கு இனியா மேல இருந்த பொசசிவ்னெஸ் இதுல்லாம் சேர்ந்து என்னை அப்பிடி செய்ய வச்சிடுச்சு… அவளை எனக்குச் சொந்தமாக்கணும்னு வெறி என் காதலை விட்டுக் குடுத்துடக்கூடாதுங்கிற கோவம், இது எல்லாத்துக்கும் மேல ஒரு தடவை நாங்க உடலால ஒன்னு சேர்ந்துட்டா அவங்கப்பாவால எங்க காதலைப் பிரிக்க முடியாதுங்கிற பைத்தியக்காரத்தனமான எண்ணம்… இது எல்லாம் சேர்ந்து என்னை அவ கிட்ட உரிமை எடுத்துக்க வச்சுது… உங்களுக்கு எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்லுறேன் மேடம்” என்றவனின் வார்த்தையில் தடுமாற்றம் இல்லை.

அழுகையை நிறுத்தி இனியாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான் நிஷாந்த். அவனது வார்த்தைகள் இதன்யாவை அச்சம்பவங்கள் நடந்த காலத்திற்கே அழைத்துச் சென்றன.

சாவித்திரியோடு நிஷாந்த் பொன்மலைக்கு வந்தபோது அவன் குழந்தை. தாயைத் தவிர வேறு யாரும் அவனது உலகத்தில் கிடையாது. பத்தொன்பது வயது வரை அப்படி தான்.

ஊர்க்கார இளைஞர்களோடு நல்லுறவு பேணினாலும் தேவையற்ற வம்புகளில் சிக்கிக்கொள்ள மாட்டான். பொன்மலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வான்.

ஒரே ஊர்க்காரன் என்ற முறையில் சிறுவயதிலிருந்தே ராக்கியும் ரோஷணும் அவனுக்குப் பழக்கம். ராக்கிக்கு அவன் வயது தான் என்பதால் நட்பு பாராட்ட முடிந்தது நிஷாந்தால்.

ஏகலைவனின் உதவியால் நகரத்திலிருக்கும் பணக்காரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் கல்வி கிடைத்தது. பாதிரியார் பவுலின் உதவியால் ரோஷணும் ராக்கியும் கூட அங்கே சேர்ந்து படித்தார்கள்.

பள்ளி முடிக்கும் போது இருவரின் அன்னையும் இறந்துவிட அதன் பின்னர் பவுல் அவர்களுக்குப் பாதுகாவலர் ஆகிவிட்டார். அவர்களும் அவரைச் சிரமப்படுத்தக்கூடாதென நன்றாகப் படிப்பார்கள்.

நிஷாந்துமே தனது பொறுப்புணர்ந்து நன்றாகவே படித்தான். அன்னையைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து கல்லூரியிலும் அடியெடுத்து வைத்தான். அவனது வகுப்பில் ராக்கியும் சேர்ந்தான். இருவரும்  நெருங்கிய நண்பர்களானார்கள்.

அச்சமயத்தில் தான் ரோஷணின் நடவடிக்கை மாறத் தொடங்கியது. திடீரென இரவு நேரங்களில் அவன் காணாமல் போவான். பகலில் நேரங்கழித்து வருவான். இதெல்லாம் பாதிரியார் கேள்வி கேட்டபோது கோபம் கொண்டு பொன்மலையில் தனியாய் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டான் ரோஷண்.

நண்பனுக்காக ஏகலைவனிடம் பேசி ரோஷணுக்கு சி.சி.டி.வி கண்ட்ரோல் அறை ஊழியன் வேலை கிடைக்க உதவினான் நிஷாந்த்.

நல்ல வேலையில் இருந்தாலும் அவனது நடவடிக்கை புதிராய் மாறிவிட, ராக்கி நண்பனிடம் புலம்பத் துவங்கினான். அச்சமயத்தில் அவன் சாத்தான் சபையைத் தொடங்கியது ராக்கிக்கும் தெரியவந்துவிட பயந்தே போனான்.

பாதிரியாரிடம் பகிர பயந்து நிஷாந்திடம் கூறினான். நிஷாந்தும் “உன் அண்ணனை நீ தான் திருத்தணும்” என்று சொல்லிவிட அப்போதிருந்து ரோஷணைத் திருத்தும் முயற்சியில் இறங்கினான் ராக்கி.

ஓராண்டு அவன் முயன்றும் ரோஷணின் நடவடிக்கைகள் மாறவில்லை. மாறாக ஊரில் சிலர் சாத்தான் வழிபாட்டுக்கு மாறத் தொடங்கியதை அரசல் புரசலாகக் கேள்விப்பட்டான் நிஷாந்த்.

“என்ன மனுசங்களோ? நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க… அவன் கூப்பிட்டானாம், இவங்க போறாங்களாம்” என சாவித்திரி கூட நொடித்துக்கொண்டதுண்டு.

கூடவே ராக்கியின் நட்பைத் துண்டித்துவிடுமாறு அறிவுறுத்தவும் தவறவில்லை அவர்.

அவரிடம் சரியென்றாலும் ராக்கியின் நட்பை நிஷாந்த் கைவிடவில்லை. இப்படி நாட்கள் போகையில், ஒரு நாள் கலிங்கராஜனின் மூத்தமகள் தன்னை அறைந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு கைத்தடம் பதிந்த கன்னத்தோடு நிஷாந்திடம் வந்து நின்றான் ராக்கி.

ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர வேறெந்த அறிமுகமுமற்ற இனியாவும் நிஷாந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதனாலேயே உண்டானது.