IIN 17

சைக்கோபதி ஒரு ஸ்பெக்ட்ரம் வகை குறைபாடு ஆகும். இதை ஹேர் சைக்கோபதி செக்லிஸ்டின் மூலம் கண்டறிய முடியும். இரக்கமின்மை, பொய் கூறுதல் மற்றும் மனக்கிளர்ச்சி அடிப்படையில் மூன்று அளவைகள் அடிப்படையில் இந்த செக்லிஸ்டை பயன்படுத்தி மதிப்பெண்கள் போடப்படும்.

அளவை 1 – சற்றும் பொருந்தாத குணம் (0)

அளவை 2 – ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பொருந்தும் (1)

அளவை 3 – முற்றிலும் பொருந்தும் குணம் (2)

இந்தச் செக்லிஸ்டில் முப்பது மதிப்பெண்கள் ஒருவர் எடுத்தார் என்றால் அவர் சைகோதிபதி என்ற மனப்பிறழ்வுக்குறைபாட்டின் ஆரம்ப நிலையில் இருக்கிறார் என அர்த்தம். சீரியல் கில்லரான டெட் பண்டி இந்த செக்லிஸ்டில் எடுத்த மதிப்பெண் முப்பத்தி ஒன்பது.

                                            -From psychology today

ராக்கியைத் தங்களது கட்டுப்பாட்டில் அழைத்து வந்திருந்தனர் மார்த்தாண்டனும் மகேந்திரனும். இதன்யாவிற்கு உதவுவதாகச் சொன்ன ஃபாரஸ்ட் ரேஞ்சர்கள் வந்துவிட்டார்கள்.

“ஓ.கே முரளி சார்… எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்ல… நாங்க உங்களுக்காக ஸ்டேஷன்ல வெயிட் பண்ணுவோம்… யாஹ்! ராக்கி தான் எங்களுக்கு வழி காட்ட போறான்… நோ ப்ராப்ளம்… ரேஞ்சர்ஸ் ட்ராங்க்யூலைசர்சோட தயாரா இருக்காங்க… எதிர்ல ஓநாய் நரினு எது வந்தாலும் மயங்க வச்சிட்டுக் குகைக்குப் போகப்போறோம்”

முரளிதரனிடம் தங்களது திட்டத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பலாமா என குழுவினரிடம் சைகையால் கேட்டாள் இதன்யா.

“போகலாம் மேடம்… டேய் எப்பிடி போகணும்னு வழி காட்டு”

ராக்கியை எந்த இரகசியப்பாதை அருகே மார்த்தாண்டன் கண்டுபிடித்தாரோ அதே பாதை வழியே அவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றான் அவன்.

செல்லும் வழியெங்கும் பசுமை தான். மலைவாசஸ்தலத்தில் பசுமைக்கு என்ன குறை! ஆனால் ராட்சசத்தனமாக வளர்ந்து நிற்கும் மரங்களும் ஒரு ஆள் உயரத்திற்கு சுவரைப் போல நெருக்கமாக வளர்ந்திருந்த புதர்களும் ஒருவிதத்தில் பார்ப்பவர்களுக்குப் பயமூட்டும் விதத்திலும் இருந்தன.

நடந்து போகையிலேயே சக்கரவர்த்தி தேயிலை தோட்டம் வந்தது. அதன் ஓரங்களில் வேலி அமைக்கப்பட்டிருந்தது. வனவிலங்குகளால் தேயிலைப்பயிறுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை.

வளைவாய் நகர்ந்த பாதை ஓரிடத்தில் ஒற்றையடிபாதையாய் குறுகத் துவங்கியது.

போக போக மரங்களின் ராட்சசத்தனமான உயரம் வானை எட்டிவிடுமோ என்று எண்ணவைத்தன அவர்களை. நண்பகல் வெயிலின் வெளிச்சம் தப்பித்தவறிக் கூட உள்ளே நுழையக்கூடாதென சங்கல்பம் எடுத்திருந்தன போல அந்த மரங்கள்.

பகல் நேரம் என்றாலும் ஒருவித மெல்லிய இருளை இழையோடச் செய்தன அவை.

இதன்யாவும் அவளது குழுவினரும் அக்கம்பக்கம் பார்த்தபடி வெகு கவனமாக நடந்தார்கள். மார்த்தாண்டனுக்கும் மகேந்திரனுக்கும் ராக்கி மீது தான் கண். தப்பியோட முயல்வான் என்ற சந்தேகத்தோடு அவனைக் கிடுக்குப்பிடி போட்டு அழைத்துச் சென்றார்கள்.

அவனது கண்களும் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. ரேஞ்சர்களின் கவனமோ ஏதேனும் விலங்குகள் எதிர்படுகிறதா என்பதிலேயே இருந்தது.

இப்படியே நேரம் கடக்க ஒருவழியாக அந்தக் குகையும் வந்துவிட்டது.

ராக்கி சொன்னது போல அது இயற்கையாய் உருவான குகையாக இருக்கலாம். ஆனால் அதில் சில பல வேலைகள் செய்து கல்லால் செய்த சிறிய கட்டிடம் போல உருவேற்றியிருந்தார்கள்.

“நீ முதல்ல உள்ள போ”

ராக்கியைக் குகைக்குள் தள்ளினார் மார்த்தாண்டன்.

அவனும் உள்ளே சென்றான். போதிய வெளிச்சம் இருக்காதென முன்னரே ஊகித்திருந்ததால் கைவிளக்கோடு வந்திருந்தார்கள்.

குகையின் உள்ளே கிட்டத்தட்ட பதினைந்து நபர்கள் இருக்குமளவுக்கு இடம் இருந்தது.

அங்கே வட்டமாக கல்லை வைத்து திண்டு ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி மரங்களால் ஆன தூண்கள் நின்றன. அதன் நடுநாயகமாக ஆட்டுத்தலையும் மனித உடலுமாக ஒரு கையை மட்டும் உயர்த்தி ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் இணைத்து காட்டும் சாத்தானின் உருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. அதன் தலையின் பின்னே நட்சத்திரக்குறியீடு வேறு!

இதே போன்ற சாத்தானின் சிலைகள் சாத்தானுக்குரிய ஆலயங்களில் இருக்குமென இணையத்தில் எப்போதோ பார்த்த ஞாபகம் இதன்யாவுக்கு. நேரில் கண்ட போது ஒருவித அமானுஷ்ய உணர்வு.

ஆங்காங்கே எலும்புகள் சிதறிக் கிடந்தன.

“இதெல்லாம் என்ன?”

“சாத்தானுக்கு உயிர்பலி குடுப்போம் மேடம்”

மார்த்தாண்டனும் இனியாவும் குகையெங்கும் இனியாவைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கிறதா என தேட ஆரம்பித்தார்கள். மகேந்திரன் ராக்கியுடன் நின்று அங்கே கிடந்த எலும்புத்துண்டுகளில் சிலவற்றை மட்டும் ஆய்வகச்சோதனைக்கு மாதிரிகளாகச் சேகரித்துகொண்டார்.

அந்நேரத்தில் குகை வாயிலில் எதுவோ உறுமும் சத்தம் கேட்டது. அனைவரின் கவனமும் குகை வாயிலில் குவிய கைவிளக்குகளின் வெளிச்சம் அங்கே திரும்பியதும் நான்கு கால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டு குகைக்குள் பிரவேசித்தது சாம்பல் வண்ண ஓநாய் ஒன்று!

அதன் கண்கள் கைவிளக்குகளின் வெளிச்சத்தில் மின்ன உறுமியபடி கோரைப்பற்கள் கொண்ட வாயைத் திறந்து குகையின் மேல்தளத்தைப் பார்த்து ஊளையிட்டது.

“கம் ஆன் க்விக்”

ஓநாயைக் கண்டதும் ரேஞ்சர்கள் சுதாரித்து கைவிளக்கு வெளிச்சத்தில் அதன் கழுத்துப்பகுதியில் மயக்க ஊசியைக் குத்த குறிவைத்தார்கள்.

ட்ராங்க்யுலைசர் அடங்கிய துப்பாக்கியின் விசையை அழுத்த ஆயத்தமானார்கள் அவர்கள். ஓநாயும் பாய தயாரானது.

“ஒன் டூ த்ரீ”

காற்றைக் கிழித்துக்கொண்டு போன மயக்க ஊசி ஓநாயின் கழுத்தில் குறி தவறாது குத்திவிட அதன் மூர்க்கம் அதிகமானது. ராக்கியை நோக்கி வேகமாக ஓடியது அது.

“ஆபிசர்ஸ் என்ன நடக்குது?” என இதன்யா பதறும்போதே அடுத்த மயக்க ஊசி அதன் முதுகில் தைத்தது.

ஓநாயும் ராக்கியை நெருங்கிவிட்டது. அரைமயக்கத்தோடு உறுமலோடு அவன் காலடியில் நாய்க்குட்டியைப் போல படுத்துக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அது மயக்கத்திற்கு போனது.

அங்கே இருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஓநாய் போன்ற ப்ரிடேட்டர் ஒன்று ராக்கியிடம் இவ்வளவு அமைதியாக அடங்கிப்போனது தான்.

ஓநாயும் நாயும் ஒரே இனம் தான். ஆனால் நாயைப் போல அவ்வளவு எளிதில் ஓநாய் மனிதர்களோடு அண்டி வாழ பழகிக்கொள்ளாது. இந்த ஓநாய் எப்படி இவனிடம் பம்மியது?

சந்தேகங்கள் முளைத்தவண்ணம் இருக்க அங்கே கிடந்த பொருட்களை ஒன்றுவிடாமல் கொண்டு வந்த பெட்டியொன்றில் சேகரித்தார்கள் மார்த்தாண்டனும் இதன்யாவும்.

இனியாவைக் கொலை செய்ய உபயோகித்த ஆயுதம், அவளது உடலைக் கழுவ தண்ணீர் கொண்டு வர பயன்படுத்திய கொள்கலன், அவளது காலணி, முன்நெற்றியில் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்ட தலைமுடி என ஏதாவது சிக்குமென தேடியவர்களுக்கு கிடைத்தவை சில துணி கிழிச்சல்களும், மரத்தினாலான சிறிய கிண்ணம் ஒன்றும் தான்.

யாருக்குத் தெரியும்? தாங்கள் சேகரித்ததில் ஏதேனும் கொலைக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும்.

இப்போதைக்குச் சேகரித்த பொருட்களோடு மயங்கிக் கிடந்த ஓநாயையும் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள் வந்தவர்கள்.

பொன்மலைக்கு வந்து சேர்ந்ததும் ஓநாய்க்காக தயாராக இருந்த கூண்டிற்குள் அதை படுக்க வைத்துப் பூட்டிய ஃபாரஸ்ட் ரேஞ்சர்கள் இதன்யாவிடம் எதையோ சொல்ல அவளும் தலையசைத்தாள்.

வனத்துறை வாகனம் அங்கிருந்து கிளம்பியதும் ராக்கியைக் காவல் வாகனத்தில் ஏற்றினார்கள் மார்த்தாண்டனும் மகேந்திரனும்.

“ஃபாரன்சிக் டீமை நாளைக்கே குகைக்கு அனுப்பிடலாம் முரளி சார்… துணைக்கு ஃபாரஸ்ட் ரேஞ்சர்சை அழைச்சிட்டுப் போங்க… இன்னைக்கு ஒரு ஓநாயை மயக்க ஊசி போட்டுப் பிடிச்சாச்சு… வேற வழியில்ல கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்”

முரளிதரனிடம் பேசியபடி ராக்கியின் எதிர்புறம் அமர்ந்தாள் இதன்யா. அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டு அவனைப் பார்த்தவள் புன்னகைக்கவும் அவன் குழம்பினான்.

“எத்தனை வருசமா அந்த ஓநாயை வளக்குற?”

இதன்யாவின் கேள்வியில் அவன் தடுமாறினான். ஜீப் போன வேகத்தில் வீசிய காற்றுக்குக் கூட அடங்காமல் வியர்த்தது.

“இந்த ஓநாய் இனியா இறந்த இடத்துல இருந்திருக்கு”

இப்போது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மகேந்திரனும் மார்த்தாண்டனும் அதிர்ந்தார்கள்.

“அண்ணனும் தம்பியும் அந்தப் பொண்ணை சாத்தானுக்குப் பலி குடுத்துட்டாங்கங்கிற என்னோட ஊகம் சரி தானா மேடம்?” என மார்த்தாண்டன் கேட்க

“கொலைகாரன்ல ஒருத்தன் காட்டுவிலங்குகளை ‘டேம்’ பண்ண தெரிஞ்சவன்… அது மட்டும் உறுதி… இனியாவோட மரணம் காட்டுவிலங்கால நடக்கல… அப்பிடி இருந்தும் அதோட ஃபூட் ப்ரிண்ட் அவ ஃபேஸ்ல வந்திருக்குனா பழக்கப்பட்ட மிருகம் ஒன்னு தான் கொலை நடந்த இடத்துல இருந்திருக்கணும்னு தானே அர்த்தம்?” என்றாள் இதன்யா ராக்கியைப் பார்த்தபடியே.

இனி தப்பிக்க வாய்ப்பேயில்லை என ராக்கிக்குப் புரிந்துபோனது. காவல்நிலையம் வந்ததும் அவனை லாக்கப்பில் அடைத்த இதன்யா “இன்னைக்கு நைட் முழுக்க யோசி.. நாளைக்கு உன் வாயில இருந்து உண்மை வரணும்… இல்லனா எங்க ட்ரீட்மெண்ட்ல வர வைப்பேன்” என்று சொல்லிவிட்டு விசாரணைக்குழுவுக்கான அலுவலக அறைக்குள் சென்றுவிட்டாள். இனியாவை வன்புணர்வுக்கு ஆளாக்கியவன் யாரென டி.என்.ஏ சோதனையில் உறுதியாகிவிடும். நாளை எப்படியும் இந்த வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்துவிடுமென நம்பி இனியாவின் இரண்டாவது பிரேத பரிசோதானை அறிக்கையை மீண்டுமொரு முறை வாசிக்க ஆரம்பித்தாள் இதன்யா.