IIN 1

மனநலக் குறைபாடு என்ற வார்த்தை மருத்துவ உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பில் சொல்லப்பட்ட வரைவிலக்கணப்படி மனநலக் குறைபாடு என்பது சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Antisocial Personality Disorder) என்று பொருள்படுமாம். இதுவொரு நரம்பியல் சம்பந்தப்பட்ட மனநலக்கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவு குற்ற உணர்ச்சியுடன் காணப்படுவார்கள். இது, பெரும்பாலும் சமூக விரோதச் செயல்களுக்கும் மற்றும் குற்றவியல் நடத்தைக்கும் வழிவகுக்கும்.

         -An article from BBC

பொன்மலை…

தமிழ்நாடு – கேரள எல்லையில் நீண்டு நெடுந்தூரம் தொடரும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மலைவாசஸ்தலம். சுற்றுலா பயணிகளின் கண்களுக்குத் தப்பி இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சிகரங்களோடும் கானகமும் கொண்ட சிறிய நகரம்.

எப்போதும் ஐந்தரை மணிக்குப் பள்ளிவாசலில் பாங்கு ஓதும் சத்தத்தில் துயில் கலையும் உள்ளூர்வாசிகளுக்கு அன்று இளைஞன் ஒருவனின் காட்டுத்தனமான அலறலில் மோசமான காலையாகப் பொழுது விடிந்தது.

“பேய் பேய்… நம்ம முருகன் கோயிலுக்குப் பின்னாடி இருக்குற காட்டுப்பாதைக்குப் பக்கத்துல பேய்”

கத்தியபடியே ஓடியவன் அந்த ஊரின் தேவாலயத்தின் முன்னே வந்து ஆசுவாசமடைய அதற்குள் பாதி மக்கள் விழித்துக்கொண்டார்கள்.

ஊரிலே பெரியவரான முருகையா வியர்க்க விறுவிறுக்க பாதிரியாரைக் காண ஓடிவந்த அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டார்.

“ஐயா ராக்கி, என்னாச்சு?”

“தாத்தா… தாத்தா” மூச்சுவாங்கியது அவனுக்கு. பயத்தில் விழிகள் பிதுங்கியிருந்தன.

“என்னனு சொல்லுயா”

“பேயி தாத்தா”

அவன் சொன்னதும் பெரியவர் அவநம்பிக்கையோடு பார்க்க, அரக்க பறக்க ஓடிவந்த சில ஊர்க்கார ஆண்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.

தேவாலயத்திற்கு அருகே இருக்கும் வீட்டில் தங்கியிருந்த பாதிரியார் பவுலும் வந்தார்.

“வாங்க ஃபாதர்”

ஊர்க்காரர்கள் மரியாதையுடன் நிற்க பவுல் அந்த ராக்கியிடம் நிதானமாக என்ன நடந்ததென விசாரித்தார்.

“ஃபாதர் காட்டுக்குப் போற வழில பேய் கிடக்குது… முகமெல்லாம் பொசுங்கி சதையும் எலும்பும் துருத்திக்கிட்டு இருக்கு ஃபாதர்” என பயத்தில் உளறினான் அவன். விட்டால் அழுதுவிடுவான் போல.

“இதெல்லாம் உன் அண்ணன் வேலையா தான் இருக்கும் ரக்சன்… அவன் தான் சாத்தானைக் கும்புடுங்க, காசு மழையா கொட்டும்னு ஊர்க்காரங்களை மூளைச்சலவை பண்ணிக்கிட்டு இருக்கான்… அவனும் அவன் கூட்டமும் கண்ட நேரத்துல காட்டுப்பாதைக்குப் பக்கத்துல ஆடு கோழினு பலி குடுப்பாங்க… காத்துக்கருப்பை எழுப்பிவிட்டுட்டு இப்ப வந்து நடிக்கிறியா?”

வந்திருந்த கூட்டத்தில் இருந்து ஒருவர் அதட்டவும் பாதிரியார் அவரை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். அந்த ரக்சன் என்ற ராக்கியின் நெற்றியில் சிலுவைக்குறி போட்டவர் “கர்த்தர் எல்லாத்தையும் பாத்துப்பார் ராக்கி… நீ கொஞ்சம் அமைதியா இரு” என்றார்.

“ரசூல் பாய் தொழுகை முடிஞ்சு வந்தார்னா என்னைப் பாக்க சொல்லுங்க” என்றார் ஊர் இளைஞர்கள் சிலரிடம்.

அதற்குள் கூட்டத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டார்கள்.

“ஊருக்குக் கெட்டநேரம் போல… ரெண்டு நாளுக்கு முன்னாடி நம்ம கலிங்கராஜன் ஐயாவோட மூத்தமக காணாம போனா… இப்ப இந்தப் பய பேய் பிசாசுனு அலறியடிச்சிட்டு ஓடி வர்றான்… முருகன் கோயிலுக்கு தைப்பூசம் நடத்துறது தடைபட்டா இப்பிடிதான் ஆகும்”

ஒருவன் பேய் என்க, மற்றொருவரோ சாத்தான் வழிபாட்டின் விளைவு என்று கூற, இன்னும் சிலரோ கடவுளுக்குத் திருவிழா நடத்தவில்லை எனபதால் நேர்ந்த தீமை என்றார்கள்.

ஊகம் பல நேரங்களில் உண்மையைக் கண்ணுக்குப் புலப்படவிடுவதில்லை. இப்படி அப்படி என ஊகத்தில் நேரம் கழிப்பதை விட தர்க்கரீதியாக ஆராய்ந்து ஆதாரம் திரட்டினால் ஒளிந்திருக்கும் உண்மை வெட்டவெளிச்சமாகும்.

இத்தனை முதிர்ச்சி அங்குள்ளவர்களிடம் இல்லையே என அங்கலாய்த்த பவுல் “இன்னும் இருட்டு விலகல… விடிஞ்சதும் போய் பாத்துக்கலாம்.. அதுவரைக்கும் யாரும் காட்டுப்பாதை பக்கம் போகாதிங்க” என்றார்.,

பாதிரியாரின் கட்டளையைச் செவிமடுத்து விடியும் முன்னர் காட்டுப்பக்கம் போகவேண்டாமென அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள் ஊர் மக்கள்.

பவுலுடன் இருந்த ராக்கியோ இன்னும் பயம் குறையாமல் அரற்றிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் “கூப்பிட்டிங்களா ஃபாதர்? இவன் ஏதோ பேயைப் பாத்தான்னு அஸ்மத் சொல்லிட்டிருக்கா” என்றபடி வந்தார் ரசூல் பாய்.

“சமீபகாலமா ஊர்ல நடக்குற எதுவும் சரியில்ல ரசூல் பாய்… இப்போதைக்கு ஊர்க்காரங்க யாரையும் காட்டுக்குப் போற பாதைக்குப் போகாதிங்கனு சொல்லி வச்சிருக்கேன்… விடிஞ்சு வெளிச்சம் வரட்டும்… நம்ம கூட சிலரை அழைச்சிட்டுப் போய் அப்பிடி என்ன தான் இருக்குனு பாத்துட்டு வந்துடுவோம்” என்றார் பாதிரியார் பவுல்.

அவர் சொன்னதற்கு தலையாட்டிய ரசூல் பாய் ராக்கியை அவநம்பிக்கையாய் ஏறிட்டார்.

“உன் அண்ணன் ரோசண் எங்க போனான்? அவனை செவ்வாய்கிழமைல இருந்து நான் பாக்கலையே?”

“அண்ணா… அவர்…”

தடுமாறினான் ராக்கி. பேய் என எதையோ பார்த்து பயந்ததால் இப்படி தடுமாறுகிறான் என பாதிரியார் நினைத்துக்கொண்டார்.

சூரியன் வந்ததும் பாதிரியாரும் ரசூல் பாயும் ஊரார் சிலரையும் ராக்கியையும் அழைத்துக்கொண்டு கானகத்திற்கு செல்லும் வழியை நோக்கி கிளம்பினார்கள்.

ஆங்காங்கே மக்கள் ‘சக்கரவர்த்தி தேயிலை தோட்டத்திற்கு’ வேலைக்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் அப்படி என்ன தான் காட்டுப்பாதையில் கிடக்கிறது என்ற ஆர்வம் தாளவில்லை. ஆனால் வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே!

பாதிரியாருடன் அங்கே போய் நின்றவர்களோ அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ராக்கி பார்த்ததாகச் சொன்ன பேய் போன்ற உருவம் இன்னும் அங்கே தான் கிடந்தது. ஆனால் அது பேய் இல்லை. உடலில் இருந்த லாங் ஸ்கர்ட்டை வைத்து அது இளம்பெண் ஒருத்தியின் சடலமென என உறுதியாகத் தெரிந்தது.

அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம் அந்தப் பெண்ணின் முகம் கோரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்தது தான்.

ராக்கி சொன்னது போல முகத்தில் தோல் கிழிந்து ஆங்காகே எலும்பும் சதையும் துருத்தி நின்றது. கழுத்தில் அழுத்தமாக கைத்தடம் பதிந்திருந்தது. போராடி இறந்திருப்பாள் போல!

உடலெங்கும் எதை வைத்தோ ஆழமாகக் குத்திக் கிழித்த காயங்கள். அந்தக் காயங்களில் இரத்தம் காய்ந்து சதை எட்டிப் பார்த்தது. கூடவே துர்நாற்றமும் வீசத் தொடங்க அனைவரும் மூக்கைப் பொத்திக்கொண்டார்கள்.

அப்போது கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்த முருகையா “ஐயோ சின்னம்மா” என அலற அனைவரும் திகைத்தார்கள்.

சின்னம்மாவா? அப்படி என்றால் இந்த இளம்பெண்….

“இது எங்க சின்னம்மா… செவ்வாகிழமை முருகன் கோயிலுக்குப் போறப்ப இந்த பாவாடை சட்டை தான் போட்டிருந்துச்சு… ராசாத்தி ரெண்டு நாளா உன்னைக் காணும்னு முதலாளி ஐயாவும் அம்மாவும் பதறிப்போய் கிடக்காங்க… அவங்க கிட்ட உன் நிலமைய நான் எப்பிடி சொல்லுவேன்?”

தலையிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் முருகையா.

அந்த ஊரின் பெரிய தலைகட்டு தொழிலதிபர் கலிங்கராஜனின் மூத்தமகள் இனியா பதினேழே வயதான இளம்பெண். அவள் செவ்வாய்கிழமை காலையிலிருந்து காணாமல் போய்விட்டதாக ஊர் முழுக்க பேச்சு. முருகையா சடலத்தைச் சின்னமா என விளித்து அழவும் ஊரார் அதிர்ந்து போனார்கள்.

அதிலும் ரசூல் பாயால் சீரணிக்கவே முடியவில்லை.

“இது.. நம்ம இனியாவா?”

கேட்க முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டது ரசூல் பாய்க்கு. அவரது மகள் முபீனாவுக்கு நெருங்கிய தோழி இனியா. அவர் பார்த்து வளர்ந்த பெண். இப்போது கோரமாக மரணித்திருக்கிறாள் என்ற உண்மையை ஏற்பதற்கே கொடூரமாக இருந்தது.

“ஆமாங்க பாய்… இளவரசியாட்டம் திரிஞ்ச பொண்ணை எந்தப் பாவி இந்தக் கதிக்கு ஆளாக்குனானோ?”

முருகையா கதறியழும்போதே அங்கே ஓடி வந்தார்கள் கலிங்கராஜனும் அவரது மனைவி கிளாராவும். இருவரது முகத்திலும் அதிர்ச்சியும் சோகமும் அழுகையும் கலந்த பாவனை.

சடலத்தைப் பார்த்ததும் “இனியா என் செல்லமே” என நெஞ்சு வெடிக்க அழ ஆரம்பித்தாள் கிளாரா. இரண்டு நாட்கள் பரிதவிப்பின் முடிவு இப்படியொரு மோசமான சம்பவமாக இருக்குமெனக் கற்பனை கூட செய்யவில்லை அவள்.

அவரது கணவரும் இனியாவும் தந்தையுமான கலிங்கராஜனோ உடைந்து போய் கால்கள் தொய்ய தரையில் தொப்பென அமர்ந்தார்.

“இப்பிடி போயிட்டியே தங்கம்? கடைசி வரைக்கும் நீ நினைச்சது நடக்கலையே… உனக்கு நம்பிக்கை குடுத்து மோசம் பண்ணிட்டேனே இந்தப் பாவி… என் தங்கம் உன்னை இப்பிடி சிதைக்க எந்த ராட்சசனுக்கு மனசு வந்துச்சு?”

தலையில் மடேர் மடேரென அடித்துக்கொண்டாள் கிளாரா.

தொழிலதிபர் கலிங்கராஜனின் மனைவி, முன்னாள் மாடல் அழகி என்ற ஸ்தானத்திலேயே பார்த்துப் பழகிய ஊராருக்கு அழுது அரற்றிய கிளாராவின் தாயன்பு மலைப்பைக் கொடுத்தது.

கிளாரா அழுதபடியே கலிங்கராஜனை நோக்கினாள். அவர் சிலையாய் சமைந்திருக்கவும் வெறியோடு அவரது கன்னத்தில் மாறி மாறி அறைய ஆரம்பித்தாள்.

ஊரார் தடுக்க வர அவளோ “இப்ப உனக்கு நிம்மதியா? உன்னால தான் என் மகளுக்கு இந்தக் கதி… நீ நல்லா இருப்பியா?” என்று பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தாள்.

“இனியாம்மா அமைதியா இருங்க” ரசூல் பாயின் மனைவி அஸ்மத் அவளைத் தடுக்க முயல

“இனிமே அமைதியா இருந்து என்ன புண்ணியம் அஸ்மத்? நேத்து சாயங்காலம் கூட பாய் கிட்ட என் தங்கம் கிடைச்சிடுவானு நம்பிக்கையா சொன்னேனே… அவ நிலைமைய பாருங்க” என்று அவரது கையைப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.

ரசூல் பாயும் அஸ்மத்தும் போராடி கணவன் மனைவி இருவரையும் அமைதிபடுத்தினார்கள்.

பாதிரியார் பவுல் மனவேதனையோடு நெற்றியில் சிலுவைக்குறி போட்டு இனியாவின் ஆன்மா நற்கதி அடையட்டும் என வேண்டிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் அங்கே வந்துவிட்டார்கள்.

“ஃபாரன்சிக் டீமுக்குத் தகவல் சொல்லியாச்சா? டாக்டர் எப்ப வருவார்?”

“அவங்க வந்துட்டே இருக்காங்க சார்”

அந்த இடத்தைச் சுற்றி யாரும் வரக்கூடாதென காவல்துறையினர் ஊர் மக்களை அப்புறப்படுத்தினார்கள்.

காவல் ஆய்வாளர் மார்த்தாண்டன் கலிங்கராஜன் – கிளாராவிடம் இனியா காணாமல் போன விசயத்தை வினவினார்.

“செவ்வாகிழமைல இருந்து என் பொண்ணைக் காணும் சார்… ஒவ்வொரு வாரமும் செவ்வாகிழமை முருகன் கோவிலைச் சுத்தி இருக்குற மண்டபம், மத்த இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணி கழுவி விடுவா… எப்பவும் மதியம் வீட்டுக்கு வந்துடுவா… அன்னைக்குப் போனவ வரவேல்ல… மறுபடி அவளை இந்த ரூபத்துல பாப்பேன்னு நினைச்சுக் கூட பாக்கல சார்”

தலையிலடித்து அழுதாள் கிளாரா. கலிங்கராஜனோ எதுவும் பேசாமல் நின்றார்.

சிறிது நேரத்தில் தடவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர் குழு வந்தது.

அவர்கள் மும்முரமாக நிலமையை ஆராய்ந்து தடயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு பக்கம் போட்டோகிராபர் சடலத்தையும் அதிலுள்ள காயங்களையும் புகைப்படமாக எடுத்தார்.

“ப்ரூட்டலான மர்டர் மார்த்தாண்டன்… அந்த பொண்ணோட கழுத்தை நெறிச்ச அடையாளம் இருக்கு… உடம்பு முழுக்க கூர்மையான ஆயுதத்தை வச்சு குத்தியிருக்காங்க… ஹெவி ப்ளட் லாஸ் ஆகியிருக்கணும்… பட் இந்த இடத்தைச் சுத்தி அவ்ளோ ரத்தம் போனதுக்கான அறிகுறி இல்ல… அதை வச்சு பாத்தா மர்டர் நடந்த இடம் இது இல்லனு தெரியுது… எங்களுக்குத் தேவையான பயாலஜிக்கல் எவிடென்ஸ் எடுக்கணும்… இதுக்கு மேல பி.எம் ரிப்போர்ட் (Post mortem report) வந்ததுக்கு அப்புறம் தான் மத்த விவரங்கள் தெரிய வரும்… சில டி.என்.ஏ சேம்பிள்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணிருக்கோம்… நீங்க ஒரு தடவை சந்தேகப்படுறவங்க லிஸ்ட் தயார் பண்ணிட்டிங்கனா அவங்க டி.என்.ஏவும் நாங்க கலெக்ட் பண்ணுன டி.என்.ஏவும் ஒத்துப்போகுதானு பாத்துடலாம்”

தடவியல் நிபுணர் சொல்ல சொல்ல மார்த்தாண்டனுக்கே வயிறு பிசைந்தது. அவருக்கும் ஒரு பெண்பிள்ளை உள்ளதே!

அழுது அழுது மூர்ச்சையான கிளாராவை அவரது வீட்டுப்பணிப்பெண் ஒருவர் மயக்கம் தெளிய வைத்து எழுப்பினார்.

சரியாக அந்நேரத்தில் இனியாவின் சடலம் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு வண்டியில் ஏற்றப்பட அழுகை வெடித்தது கிளாராவிடம்.

அதிர்ந்து பேசத் தெரியாத பூ போன்ற பெண் அவள். பதினேழு வயதுக்கு முதிர்ச்சி அதிகம். அவளது கொள்ளை அழகுக்கு எந்த ராஜகுமாரன் வந்து கொத்திப்போவானோ என்று கிளாரா கிண்டலாய் சொல்வதுண்டு.

அந்த சின்னஞ்சிறு அழகியைத் தான் எவனோ இரக்கமின்றி கொடூரமாகக் கொன்றுவிட்டான். அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இனியா.. என் தங்கம்…. என்னை விட்டுப் போயிட்டியேடி”

சத்தம் போட்டு அவர் அழ இனியாவின் சடலத்தை ஏற்றிய மருத்துவ வாகனம் கிளம்பியது.

கண்ணீரும் கம்பலையுமாக அழுது தீர்த்த கிளாராவைப் பணிப்பெண்ணும் ரசூல் பாயின் மனைவி அஸ்மத்தும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

ரசூல் பாயும் பாதிரியார் பவுலும் கலிங்கராஜனோடு கிளம்ப எத்தனிக்கையில் மார்த்தாண்டனின் குரல் தடுத்தது.

“கொஞ்சம் நில்லுங்க” மூவரும் திரும்பினார்கள்.

மார்த்தாண்டன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெறித்த பார்வையோடு நிற்கும் கலிங்கராஜனைச் சந்தேகமாக நோக்கியபடி

“அந்தப் பொண்ணு நீங்க பெத்த பொண்ணு தானே?” என்று கேட்டதும் திடுக்கிட்டுப் பின்னர் சுதாரித்து ஆமென்றார் கலிங்கராஜன்.

மோவாயைத் தடவிய மார்த்தாண்டனோ அவரை ஸ்கேன் செய்யும் பார்வை பார்த்தவராக

“உங்க சம்சாரம் அழுததுல ஒரு சதவிகிதம் கூட நீங்க அழல… அதை விடுங்க… ஆம்பளைங்க நமக்கு அழுகை அவ்ளோ சுலபத்துல வராதுனு வச்சுப்போம்… உங்க முகத்துல மகளை இழந்த துக்கம் இல்லையே” என்றார்.

தொடர்ந்து “எங்க விசாரணைல எல்லாம் தன்னால தெரிஞ்சிடும்” என்றவர் சடலத்தை முதலில் பார்த்தவரில் ஆரம்பித்து இனியா இறுதியாகச் சந்தித்த நபர் வரை அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டுமென உதவி ஆய்வாளருக்குக் கட்டளையிட்டார்.

சந்தேகப்படுவோர் அனைவரையும் விசாரிக்கும் முன்னர் இனியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வரவேண்டும். கொலைக்கான காரணம் என்னவென தெரியவேண்டும். இனியாவின் மரணத்தால் யாருக்கு இலாபம் என்பது தெரியவருமாயின் கொலைகாரனை சுலபத்தில் கண்டறிந்துவிடலாமென மார்த்தாண்டன் கணக்கு போட்டார்.

அப்போது அங்கே ஜாகுவார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவன்(ர்) ஏகலைவன் சக்கரவர்த்தி, சக்கவர்த்தி தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் அதிபதி ப்ளஸ் ரதி டீ என்ற பிரபல தேயிலை ப்ராண்டை சிறப்புற நடத்தும் தொழிலதிபன். வயது நாற்பத்தைந்து. ஏனோ திருமணம் செய்துகொள்ளவில்லை இந்நாள்வரை.

கலிங்கராஜனின் சருமபாதுகாப்பு நிறுவனத்தில் முதலீடு செய்யவிருப்பவன் என்ற ரீதியில் அவனுக்கும் கலிங்கராஜனுக்கும் தொழில்ரீதியான உறவு இருந்தது. இருவரது பங்களாக்களும் அருகருகே என்பதால் பார்த்தபோது இன்முகத்தோடு பேசுமளவுக்கு நட்பு பாராட்டி வந்தார்கள்.

கலிங்கராஜனின் பங்களாவைக் கடந்து ஏகலைவனின் கார் செல்லும்போது முருகையாவின் அழுகுரல் கேட்டது. அதன் மூலம் இனியா படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து இங்கே வந்ததாக மார்த்தாண்டனிடம் கூறினான் அவன்.

சிறுபெண்ணின் மரணத்தைத் தாங்கவியலாதவனாக மார்த்தாண்டனிடம் தனது அதிர்ச்சியைக் கொட்டினான்.

“இனியா ரொம்ப சூட்டிகையான பொண்ணு… தேனீ மாதிரி சுறுசுறுப்பு… அவ சோர்ந்து போய் நான் பாத்ததே இல்ல… அவளை இவ்ளோ ப்ரூட்டலா மர்டர் பண்ணுனவன் கண்டிப்பா சைக்கோபாத்தா தான் இருக்கணும் இன்ஸ்பெக்டர் சார்… எப்பிடியாச்சும் அவளைக் கொலை பண்ணுனவனைக் கண்டுபிடிங்க… அதுக்கு என் சார்பா எல்லா உதவியையும் செய்ய நான் தயாரா இருக்கேன்”

“தேவைப்பட்டா கட்டாயம் உங்க கிட்ட உதவி கேப்பேன் சார்” என்று பேச்சைக் கத்தரித்துக்கொண்டார் மார்த்தாண்டன்.

அவர் மனமெங்கும் எண்ணற்ற கேள்விகள்! அனைத்துக்கும் பதில் இனியாவின் பிரேத பரிசோத அறிக்கையின் மூலம் தெரிந்துவிடப்போகிறது என்ற எண்ணத்தில் இருப்பவருக்குப் பெரிய தலைவலியை இனியாவின் வழக்கு கொடுக்கப்போகிறதென தெரியாது.