AO 9

அன்பு 9

யோகமித்ரன் தன்னை பார்க்க கல்லூரிக்கு வந்தது தெரிந்து கௌசல்யா அவனை காண வந்தாள்.

“என்ன ண்ணா, திரும்ப தவமலரை பார்க்கணுமா? அன்னைக்கு அவக்கிட்ட மன்னிப்பு கேட்டீங்களா இல்லையா? அவக் கூட வரேன்னு சொல்லி, முக்கியமான வேலை வந்ததால் கடைசி நேரத்தில் என்னால வர முடியாம போச்சு, அந்த வேலையில் பிஸியா இருப்பதால், உங்க ரெண்டுப்பேர்க்கிட்டேயும் இந்த விஷயமா பேசவும் முடியல, என்ன அன்னைக்கு தவமலர் வந்தா தானே, அவக்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டீங்கல்ல?” என்று அவள் கேட்டதற்கு,

“மன்னிப்பெல்லாம் கேட்டாச்சு கௌசி, மலரும் மன்னிப்பெல்லாம் அவசியமில்லன்னு சொல்லிட்டா,” என்ற அவனது பதிலில், 

அவன் தவமலரை சுருக்கி மலர் என்றதையும், பன்மையிலிருந்து ஒருமைக்கு தாவியதையும் கௌசல்யா மனதில் குறித்துக் கொண்டாள்.

“நான் இப்போ உன்னை பார்க்க வந்தது, உன்னோட விஷயமா கௌசி. ஒரு அண்ணனா உன்னோட வாழ்க்கையைப் பத்திய அக்கறை இருப்பதால் பேச வந்தேன்.” என்று அவன் சொன்னதும், கௌசல்யா அவனை யோசனையாக பார்த்தாள்.

“தனசேகர் என்கூட போனில் பேசினார்.” என்றதும், அவள் முகத்தில் கேள்வி ரேகை நீங்கி, வருத்த ரேகை பிரதிபலித்தது. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அவள் அமைதியாக இருந்தாள்.

“இப்படி மௌனமா இருந்தா என்ன அர்த்தம் கௌசி? நீ தனசேகர்க்கிட்ட பேசி 4 நாள் ஆகுதாம், போன் போட்டா எடுக்கவே மாட்டேங்குறியாம், ஏன் கௌசி?”

“என்னை ஏன் கேக்கறீங்க? இவ்வளவும் சொன்ன தனா இதுக்கு பதில் சொல்லலையா?”

“சொன்னாரு, கல்யாண விஷயமா பேசினா, அதுக்கு நீ எந்த பதிலும் சொல்லலையாம், கோபமா இருக்கீயாம், ஆனா அவர் சொல்றதும் நியாயமா தானே இருக்கு.”

“என்ன ண்ணா சொல்றீங்க? அவர் சொல்றது உங்களுக்கு நியாயமா படுதா? உன்னோட அப்பா, அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துவாங்களான்னு தெரியல, அதுவரைக்கும் காத்திருக்க முடியாது, அதான் என்னோட அப்பா, அம்மா ஒத்துகிட்டாங்களே, அதனால நாம் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றாரு, இது உங்களுக்கு நியாயமா தெரியுதா? இதுக்கு என்னை ஒத்துக்க சொல்றீங்களா?”

“ஒத்துக்கறதில் என்ன தப்பு இருக்கு கௌசி,”

“என்ன ண்ணா நீங்களே இப்படி பேசறீங்க?”

“சித்தப்பா, சித்தி சம்மத்தத்தோட நீ தனசேகரை கல்யாணம் செஞ்சுக்கணும்னு விருப்பப்பட்ற, அது எனக்கு புரியாம இல்ல, அப்பா, அம்மா மனசை கஷ்டப்படுத்தி ஒரு வாழ்க்கை அமையறதில் உனக்கு உடன்பாடில்லாம இருக்கலாம், 

ஆனா முதலில் சித்தப்பா, சித்திக்கு மனசுன்னு ஒன்னு இருக்கா, அப்படி இருந்தா இப்படி நமக்கு தங்கமான பெண் பிறந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டுப்பாங்க, ஆனா அது நடக்காத ஒன்னு,

இந்த கல்யாணத்தை அவங்களா எடுத்து நடத்தினா, அவங்களுக்கு செலவு. அதான் நீ காதலிச்சது பிடிக்காத மாதிரி நடந்துக்கிறாங்க, அது உனக்கு புரியலையா? நீ எத்தனை வருஷம் காத்திருந்தாலும் அவங்க உன்னோட காதலுக்கு ஓகே சொல்லப் போறதே இல்ல, நல்லா இருந்தப்பவே பணம் செலவு செய்ய யோசிச்சு உனக்கு கல்யாணம் செய்யாம இருக்காங்க, இதில் இப்போ அவங்க இருக்க நிலைமைக்கு நீ கல்யாணம் செஞ்சுக்காம வேலைக்கு போய் சம்பாதிச்சு கொடுத்தா சந்தோஷமா சாப்பிட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க,

அவங்களுக்காக பார்த்து உன்னோட காதலை நீ தியாகம் செய்யப் போறீயா? அப்படி நீ செஞ்சா, உன்னோட தியாகத்தை அவங்க புரிஞ்சிப்பாங்கன்னா நினைக்கிற, நம்மை  பெத்தவங்களை பொறுத்த வரை பணம் அதுமட்டும் தான் முக்கியம். அண்ணன், தம்பி தான் அப்படி இருக்காங்கன்னா, அவங்களுக்கு ஜாடிக்கேத்த மூடியா நம்ம அம்மாக்களும் சேர்ந்திருக்காங்க, இவங்களை மாத்தறது கஷ்டம், அவங்களுக்காக யோசிச்சு உன்னோட தனாவை நீ இழந்துடாத, 

எப்படியோ கல்யாணத்துக்கு பிறகு சித்தப்பா, சித்திக்கு நீ ஹெல்ப் செய்யணும்னு தானே நினைக்கிற, அதை நீ செஞ்சா, ஆட்டோமேட்டிக்கா அவங்க மனசு மாறும், நீ சம்பள பணத்தை கொடுத்தா, என் மகளேன்னு கொஞ்சுவாங்க, 

அதனால நீ கல்யாணத்துக்கு சம்மதிக்க பாரு. அம்மா, அப்பா இல்லையே நமக்கு யாரு இதெல்லாம் எடுத்து செய்வான்னு யோசிக்காத, அண்ணன் நான் இருக்கேன். சித்தப்பா,சித்தி இடத்தில் இருந்து உனக்கு எல்லாம் நான் செய்றேன். தனா வீட்டுக்கு நீ கௌரவமாக போகணும், அது என்னோட பொறுப்பு. அதனால இன்னமும் இந்த விஷயத்தை போட்டு குழப்பிக்காத, நீ பாட்டுக்கு சித்தப்பா, சித்தி சம்மதிக்கட்டும்னு நாளை கடத்திக்கிட்டே இருந்தா, தனசேகர் அப்பா, அம்மாக்கு அப்புறம் அது ஒரு வெறுப்பா மாறப் போகுது. புரிஞ்சுதா? முதலில் தனசேகர்க்கிட்ட பேசு.” என்று அவன் சொன்னதும், கௌசல்யா சரி என்று தலையாட்டிக் கொண்டாள்.

“நீங்க பேசினது ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குதுன்னா, அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மான்னு எல்லோரும் சேர்ந்து இருந்து என்னோட கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டேன். அது தான் நடக்கல, சரி அப்பா, அம்மாவோட ஆசிர்வாதம் கிடைக்கும்னு நினைச்சா அதுவும் நடக்கல, யாருமே இல்லாம அனாதை போல என்னோட கல்யாணம் நடந்திடுமோன்னு பயமா இருந்தது ண்ணா, இப்போ நீங்க இருக்கீங்கன்னு சொன்னது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா? நான் கொஞ்ச நேரத்தில் தனாக்கிட்ட பேசறேன்..”

“ம்ம் பேசு கௌசி, நானும் அப்புறமா தனாக்கிட்ட கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் பத்தி  பேசறேன். சரி அப்போ வரட்டுமா?” என்று அவளிடம் விடைப்பெற்று கல்லூரியிலிருந்து வெளியேற சென்றுக் கொண்டிருந்தவனின் கண்கள் தவமலர் எங்காவது தட்டுப்படுகிறாளா? என்று தேடியது.

அதற்கேற்றார் போல் தவமலர் தன் தோழிகளோடு கௌசல்யாவை பார்க்க தான் வந்துக் கொண்டிருந்தாள்.

ன் எதிரிலேயே அவள் வருவதை இமைக்காமல் பார்த்தப்படி அவன் வர, அவன் வருகையை சற்றும் எதிர்பாராமல் வந்துக் கொண்டிருந்தவள், அவனை பார்த்ததும் அப்படியே நின்றுவிட, அவளோடு பேசியப்படியே வந்த ராகமயாவும் புனர்வியும் கூட அவள் எதற்கு நிற்கிறாள் என தெரியாமல் முதலில் குழம்பி, பின் யோகமித்ரனை கண்டதும் வியப்போடு அவனை பார்த்தப்படி நின்றனர்.

அவர்கள் அருகில் வந்தவன், முதலில் தவமலரை பார்த்து, “ஹாய் மலர்.” என்று கையசைத்தவன், பின் மற்ற இருவருக்கும் தனித்தனியே “ஹாய்” என்றான்.

அவர்கள் இருவரும் பதிலுக்கு அவனைப் பார்த்து “ஹாய்” சொல்ல, தவமலரோ எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“ஹாய் சொன்னா, திருப்பி ஹாய் சொல்ல மாட்டீயா மலர்.” என்று அவன் கேட்க,

“என்னோட பேர் மலர் இல்ல, அப்போ ஹாய் மலர்னு சொல்றதுக்கு நான் எதுக்கு ஹாய் சொல்லணும்?” என்றுக் கேட்க,

“எக்ஸ்க்யூஸ் மீ, உங்க ஃப்ரண்ட்டோட பேர்ல மலர் இருக்குத்தானே? அது என் பேர் இல்லன்னு சொல்றாளே, கேட்க மாட்டீங்களா?” என்று மற்ற இருவரையும் பார்த்து அவன் கேட்டான்.

“சரி அது என்னோட பேராகவே இருக்கட்டும், ஆனா நீங்க ஏன் எனக்கு ஹாய் சொன்னீங்க?” என்று தவமலர் கேட்க,

“தெரிஞ்ச பெண்ணை  எதிரில் பார்த்தா  ஹாய் சொல்ல மாட்டாங்களா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

“தெரிஞ்ச பெண்ணா? என்னை பெண் பார்க்க வந்தீங்க, பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிட்டீங்க, அதோட முடிஞ்சுது, திரும்ப நீங்க மன்னிப்பு கேட்கணும்னு சொன்னப்போ, நான் வந்தது தப்பு.”

“ஏன் அப்படி சொல்ற மலர். உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சு தானே கூப்பிட்டேன். மத்தப்படி உன்னை கூப்பிட்டு உன்கிட்ட தப்பா எதுவும் பேசவோ செய்யவோ இல்லையே, நீ சொன்ன விஷயங்கள் நியாயமா இருந்ததால அதை நான் ஏத்துக்க தானே செய்தேன்.”

“அதோட அது முடிஞ்சுது,” அப்படி நினைச்சுக்கிட்டு போங்களேன்.”

“ஏன் உன்னோட பேச்சு பிடிச்சதால உன்னோட ஃப்ரண்டா இருக்கக் கூடாதா? அது தப்பா?” என்று அவளிடம் கேட்டவன்,

“என்ன நீங்க சும்மா வேடிக்கைப் பார்க்கறீங்க, என்னை உங்க ஃப்ரண்டா ஏத்துக்க மாட்டீங்களா? பெண் பார்க்க வந்து பெண்ணை பிடிக்கலன்னு சொல்றது அவ்வளவு பெரிய தப்பா? ஆனா நான் அதை சொன்னவிதம் தப்பு தான், அதை உணர்ந்து மன்னிப்பு கேட்டதுக்கு பிறகு, சாதாரணமா நட்பா இருப்பது தப்பா?” என்று மற்ற இருவரிடமும் கேட்டான்.

“கண்டிப்பா இதில் தப்பே இல்ல, இனி நாம ஃப்ரண்ட்ஸ்.” என்று புனர்வி அவனுக்கு கைகுலுக்க,

“ம்ம் நானும் தான்,” என்று ராகமயாவும் அவளுக்கு கைகுலுக்கினாள்.

“ஹலோ உன் ஃப்ரண்ட்ஸோட ஃப்ரண்ட, உன்னோட ஃப்ரண்டா ஏத்துக்க மாட்டீயா?” என்று தவமலரை பார்த்து அவன் கேட்கவும்,

“ம்ம் யோசிக்கணும்.” என்றாள்.

கல்லூரியின் உள்ளே இருந்து இவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்தவனாக, இதற்கு மேலும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பது மற்றவரின் பார்வைகளுக்கு பெரிதாகப்படும் என்பதை புரிந்துக் கொண்டு,

“ம்ம் சீக்கிரமா யோசிச்சு அடுத்தமுறை நாம பார்க்கும் போது, நாம ஃப்ரண்டா ஆகணும், ஓகே.” என்றவன்,

“பை ஃப்ரண்ட்ஸ், கூடிய சீக்கிரமே பார்க்கலாம்,” என்று மூவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு விடைப் பெற்றான்.

“என்னாச்சு தவா, சாதாரணமா தானே வந்து பேசினாங்க, நீ ஏன் இப்படி நடந்துக்கிட்ட?” ராகா கேட்க,

“அதானே, நீ கருப்புன்னு வேண்டாம்னு சொல்லிட்டு போன போதே, இப்படி ரியாக்ட் செய்யலையே தவா, இப்போ ஏன் இப்படி நடந்துக்கிற?” என்று புனர்வி கேட்டாள்.

“என்னடீ நடந்துக்கிட்டேன். என்னை பார்த்ததுமே பிடிக்கலன்னு சொன்னவங்க, இப்போ ஃப்ரண்டா இருக்கலாம்னு சொல்றது எனக்கு பிடிக்கல, என்னை அவங்க வேண்டாம்னு சொன்னதில் எனக்கு வருத்தமில்ல தான், ஆனா அப்படி சொன்னவங்கக் கூட திரும்ப பேசி பழக எனக்கு விருப்பமில்லை.”

“என்ன சொல்ற தவா, உனக்கு யோகமித்ரனை பிடிச்சு இருந்துச்சா, அவங்க பிடிக்கலன்னு சொன்னது உன்னோட மனசுக்கு கஷ்டமா இருந்ததா?” என்று ராகா கேட்க,

“அப்படி சொல்ல வரல, நான்தான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கலன்னு சொன்னேனே, அப்புறம் ஏன் எனக்கு மனக்கஷ்டம் வரப் போகுது, எனக்கு என்னன்னா ஃப்ரண்டா பழகும் போது நான் எப்படி இருந்தாலும் ஓகே, ஆனா கல்யாணம்னு வரும்போது அழகான பெண் வேணும்னு நினைக்கும் மைண்ட் செட் எனக்கு பிடிக்கல,” என்று அவள் பதில் கூறவும்,

“அதில்ல தவா,” என்று ராகமயா ஏதோ சொல்ல வரவும்,

“விடு ராகா, அவளுக்கு பிடிக்கலன்னு சொன்னதுக்கு பிறகு எதுக்கு காரணம் கேட்டுக்கிட்டு, சில சமயம் நம்ம மனசுக்கு தோனுவதை வார்த்தையில் சொல்ல முடியாது. அவளுக்கும் அப்படித்தான், இதுக்கும் மேல நாம யோகமித்ரனை வச்சு இவளை கேலி செய்வதை நிறுத்திக்குவோம்.” என்று புனர்வி சொன்னதும், ராகமயா தலையாட்டி ஒத்துக் கொள்ள, தோழிகள் புரிந்துக் கொண்டதில்  தவமலர் புன்னகைத்தாள்.

“சரி தனா, நான் வீட்டுக்கு கிளம்பும் போது பேசறேன். இப்போ எனக்கு க்ளாஸ் இருக்கு.” என்று அலைபேசியில் தனசேகரிடம் சொல்லிவிட்டு கௌசல்யா அழைப்பை அணைக்கவும், மூன்று பேரும் அவளுக்கு அருகில் வரவும் சரியாக இருந்தது.

“மேம் டிஸ்டர்ப் செஞ்சுட்டோமா?” என்று ராகமயா கேட்க,

“இல்ல தனாக்கிட்ட தான் பேசிட்டிருந்தேன். இன்னும் பத்து நிமிஷத்தில் க்ளாஸ் எடுக்க போகணும், அதான் அப்புறம் பேசறதா சொல்லி வச்சிட்டேன்.” என்று கௌசல்யா பதில் கூறினாள்.

“என்ன மேம் சொல்றாரு உங்க ஆளு,” புனர்வி விளையாட்டாக கேட்க,

“ம்ம் எப்போ கல்யாணத்தை வச்சுகலாம்னு கேட்கிறார். அனேகமா வர முகூர்த்தத்தில் கோவிலில் வச்சு எங்க கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்கு,” என்று கௌசல்யா தீவிரமாக கூறினாள்.

“என்ன மேம் இது, உங்க அப்பா, அம்மா இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்னீங்கல்ல, திடீர்னு கல்யாணம்னு சொல்றீங்க, அப்போ உங்க வீட்டில் ஒத்துக்கிட்டாங்களா?” என்று தவமலர் கேட்க, 

“ம்ச்” உதட்டை சுழித்து கௌசல்யா இல்லை என்றாள்.

“அப்போ அப்பா, அம்மா விருப்பமில்லாமலேயே நீங்க கல்யாணம் செஞ்சுக்க போறீங்களா?” என்று திரும்ப தவமலரே கேட்க,

“எனக்கும் அதில் உடன்பாடு இல்லை தான், ஆனால் வேற வழியில்லை. அப்பா, அம்மா ஆசிர்வாதம் இல்லாம தான் என்னோட கல்யாணம் நடக்கப் போகுது.” என்று தவமலர் வருத்தத்தோடு கூறினாள்.

“உங்க அப்பா, அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு முன்னமே தெரிஞ்சு தானே காதலிச்சீங்க, அப்பவே அவங்க சம்மதத்தை வாங்க என்ன வழின்னு நீங்க யோசிக்கலையா?” இப்போது புனர்வி கேட்டாள்.

“என்னோட அப்பா, அம்மாக்கு காதல் பிடிக்காதுன்னு சொன்னதெல்லாம் சும்மா, சொல்லப் போனா என்னோட கல்யாணத்துக்கு செலவாகுமே, அதுதான் அவங்களுக்கு பிடிக்காது.” என்று கௌசல்யா கூறவும், மூவரும் புரியாத பார்வை பார்க்க, கௌசல்யா தனது பெற்றோரை பற்றி விவரமாக கூறினாள்.

“இப்படி கூட அப்பா, அம்மா இருப்பாங்களா? எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மேம்,” தவமலர் வருத்தப்பட,

“எதுக்கும் தனா சாரோட அம்மா, அப்பாவை உங்க வீட்டில் பேச சொல்லலாமே மேம்” என்று ராகமயா கேட்டாள்.

“இல்ல அவங்க வீட்டுக்கு வந்தா, அவங்களை அப்பா, அம்மா வேணும்னே அவமானப்படுத்துவாங்க, தனா என்னோட சிட்டுவேஷனை புரிஞ்சுப்பாரு, ஆனா அவங்க அப்பா, அம்மா பேச்சை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே, அப்புறம் ரெண்டு வீட்டிலும் எங்க காதலுக்கு எதிர்ப்பு வந்துடும், அதான் நான் என்ன செய்யன்னு புரியாம அமைதியா இருந்தேன்.

இப்போ தான் மித்ரன் அண்ணா என்னைப் பார்க்க வந்தாங்க, சித்தப்பா, சித்தி கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது, சீக்கிரமா ஒரு முடிவெடு, சித்தப்பா, சித்தி இடத்திலிருந்து எல்லாம் நான் செய்றேன், கல்யாணத்தை நான் எடுத்து நடத்துறேன்னு சொன்னாங்க, ஒருபக்கம் யோசனையா இருந்தாலும், இன்னொரு பக்கம் தனாவை இன்னும் எத்தனை நாள் தான் காக்க வைக்கிறதுன்னு இருக்கு, அதான் நான் சம்மதம் சொல்லிட்டேன். கல்யாணத்தில் எதுவும் செலவு செய்ய வேண்டியிருக்காதுன்னு தெரிஞ்சா, கொஞ்ச நாளில் அப்பா, அம்மா மனசு மாறும்னு நம்பிக்கை இருக்கு, பார்ப்போம்.”

“ம்ம் நீங்க சொல்றது போல அவங்க மனசு மாறினா நல்லது தான், உங்க கல்யாணத்துக்கு எங்களோட வாழ்த்துகள் மேம்.” என்று புனர்வி கூறவும்,

“ம்ம் கல்யாண தேதி குறிச்சதும் சொல்றேன். நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும், தனா பக்கமிருந்து அவங்க சொந்தக்காரங்கல்லாம் கல்யாணத்துக்கு வருவாங்க, ஆனா என் பக்கமிருந்து மித்ரன் அண்ணா மட்டும் தான் இருப்பாங்க, என்னத்தான் ஃஃப்ரண்ட்ஸ் வந்தாலும் சொந்தக்காரங்க மாதிரி அவ்வளவு நெருக்கமா ஒவ்வொன்னுக்கும் கூட இருப்பாங்களான்னு தெரியல, ஏன்னா எல்லாம் கல்யாணம் ஆனவங்க, அவங்களுக்கும் ஏதாச்சும் வேலை இருக்குமில்ல, உங்க 3 பேர் கூட பழகறப்போ எனக்கு தங்கை இருந்தா எப்படி ஃபீல் செய்வேனோ, அப்படித்தான் உங்களையும் நினைக்கிறேன். நீங்க என்கூடவே இருந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.” என்று கௌசல்யா நெகிழ்ச்சியோடு பேசினாள்.

“எங்களை உங்க தங்கச்சிங்கன்னு சொல்லிட்டீங்கல்ல மேம், அக்காவோட கல்யாணத்தை எப்படி சிறப்பா செய்றோம்னு பாருங்க, உங்க சார்பா கல்யாணத்தில் யாருமில்லன்னு நீங்க ஃபீல் செய்ய கூடாது, எங்க 3 பேரோட சேர்ந்து, எங்க சாம்பவி அத்தை, மயூ அத்தான், தவாவோட அப்பா, அம்மா, இன்னும் எங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோரையும் கூட்டிட்டு வந்து கல்யாணத்தை அமர்க்களப்படுத்திடறோம்.” என்று புனர்வி சொல்லவும்,

“ஆமாம் மேம் அசத்திடலாம், கவலைப்படாதீங்க,” என்று மற்ற இருவரும் கூறினர்.

“ரொம்ப சந்தோஷம், உங்க 3 பேர் அறிமுகம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்,” என்றவள், 

“ஆமாம் எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க?” என்றுக் கேட்க,

“தவா தான் உங்களை பார்க்கணும்னு சொன்னா, என்ன விஷயம்னு எங்களுக்கு தெரியல?” என்று புனர்வி கூறினாள்.

“என்ன விஷயம் தவா?” என்று கௌசல்யா அவளிடம் கேட்க,

“நம்ம காலேஜ் சார்பா, ஆன்லைன்ல ஒரு கவிதைப் போட்டி நடந்ததே மேம், அதில் பரிசு வாங்கினவங்க விவரம் தெரியணும், அதுக்கு உங்க உதவி வேணும்.” என்று தவமலர் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க, புனர்வியோ அதை அதிர்ச்சியுடன் பார்த்தப்படி நின்றிருந்தாள்.

ஊஞ்சலாடும்..