AO 8

அன்பு 8

“உன்கிட்ட என்னோட காதல் பத்தி சொன்னேனா? எப்போ டா? எனக்கு ஞாபகம் இல்லையே,” என்று மயூரன் சொன்னதும்,

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மயூர், நீ என்கிட்ட சொல்லியிருக்க,” என்று நவிரன் உறுதியாக கூறினான்.

“அப்போ புவியைப் பத்தி தான் சொல்லியிருப்பேன் டா,” என்று மயூரன் சொல்ல,

“ஹே புவி உன்னோட அண்ணியோட தங்கைன்னு தானே சொன்ன, உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னமே நீ இதைப்பத்தி என்கிட்ட சொல்லியிருக்க, அதுவுமில்லாம அந்த பெண்ணோட போட்டோ காண்பிச்சிருக்க, பேர் கூட சொல்லியிருக்க, ஆனா எனக்கு தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல,” என்று நவிரன் சொல்லிக் கொண்டிருக்க, 

அதில் பதட்டமான ராகமயா, “மயூர், அத்தை கேரட் அல்வா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க,” என்று அவர்கள் அருகில் வந்தவள், நவிரனுக்கு கொடுக்க வேண்டியதையும் மயூரனிடமே கொடுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.

“இந்த பெண் ஏன் ஒன்னு படப்படப்பா இருக்கு, இல்ல என்னை முறைச்சிக்கிட்டு இருக்கு,” என்று மனதில் நினைத்த நவிரன், அவள் சென்றதும்,

“சொல்லு மயூர், நீ முன்ன சொன்னது வேற பெண், அந்த காதல் என்ன ஆச்சு? புவியை நீ கல்யாணம் செய்ய காரணம் என்ன?” என்று கேட்டான்.

“அது ப்ரேக் அப் ஆயிடுச்சுடா, நானும் அதை கடந்து வந்துட்டேன், அப்புறம் வீட்டில் சொன்னாங்கன்னு புவியை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்.”

“என்னடா ப்ரேக் அப் ஆயிடுச்சுன்னு சாதாரணமா சொல்ற, காதல் உனக்கு விளையாட்டா போச்சா?”

“ஹே செட்டாகலன்னா என்னடா செய்ய முடியும்? ரெண்டுப்பேரும் வேணாம்னு முடிவு செய்தோம், விலகிட்டோம், அதுக்காக தாடி வச்சிக்கிட்டு சுத்த சொல்றீயா?”

“இல்லடா, நான் அப்படி சொல்ல வரல, சரி விடு, உன்னோட முதல் காதல் பத்தி புவிக்கிட்ட சொன்னீயா? புவியை உனக்கு பிடிச்சு தானே இருக்கு, இல்ல வீட்டில் கட்டாயப்படுத்தினாங்கன்னு ஒத்துக்கிட்டீயா? ஹே அப்படின்னா அது தப்பு டா, அதுவும் புவின்னு வரும்போது அது ரொம்ப தப்பு,” என்று நவிரன் அவனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.

புனர்விக்கும் மயூரனுக்கும் திருமணம் என்ற செய்தியை  நவிரனால் சாதாரணமாக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமும் அவனுக்கு விளங்கவில்லை. அவளிடம் துப்பாட்டவை எடுக்க சொல்லி சொன்னாலும், இன்னும் கூட அவளது முகம் பார்க்க அவனுக்கு ஒருமாதிரி தான் இருந்தது. அவளும் அவனிடம் ஒரு விலகலோடு தான் பழகுகிறாள். 

ஆனாலும் அவள் மீது அவனுக்கு அக்கறை இருந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருந்த மயூரனோடு புனர்விக்கு திருமணம் என்றால், அது அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையுமா? என்ற சந்தேகமெல்லாம் தோன்றியது. நெருங்கிய நண்பனான மயூரனை சந்தேகிக்கிறோம் என்பதை கூட உணர முடியாத அளவிற்கு அவன் மனம் புனர்விக்காக யோசித்தது.

“ஹே புவி விஷயத்தில் நான் கவனமில்லாம இருப்பேனா நவிர், அவளை சாதாரணமா மாத்த நாங்க எவ்வளவு மெனக்கிட்டோம்னு உனக்கு தெரியாது, அப்படியிருக்க இந்த விஷயத்தில் நான் கட்டாயத்தின் பேரில் அவளை கல்யாணம் செய்ய முடியுமா?”

“சாரி டா, உன்னைப் பத்தி தெரியும், இருந்தாலும் ஏற்கனவே வேற ஒருத்தரை காதலிக்கிறன்னு நீ சொல்லவும் தான், அப்படி கேட்டுட்டேன்,”

“நீ புவி மேல இருக்க அக்கறையில் பேசறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது நவிர், அதனால எனக்கு உன் மேல கோபமெல்லாம் இல்லை.” என்று மயூரன் சொல்லவும், நவிரன் புன்னகைத்தான்.

“ஹே என்னடி சொல்ற, உன்னோட அட்வைஸ் கேட்டு யோகமித்ரன், இல்லையில்லை யோகன், நீ அப்படி தானே கூப்பிட்ட மல..ர்,” என்று புனர்வி இழுத்து சொல்ல,

“ஹே எருமை உதை வாங்க போற பாரு,” என்று தவமலர் அவளை கை நீட்டி எச்சரித்தாள்.

“சரி விடு, உன்னோட அட்வைஸ்க்கு யோகன் தலை தெறிக்க ஓடி இருக்கணும், ஆனா நின்னு கேட்டுட்டு இருக்கார்னா, அப்போ ராகா சொன்னது போல டும் டும் டும் கதை தானா?” என்று புனர்வி கேட்டு கண்ணடிக்க,

“ஹே உன்னை மிரட்டல்லாம் கூடாது டீ, நல்லா உதைச்சா தான் சரிபடுவ எருமை,” என்று தவமலர் அவள் முதுகில் அடிக்க,

“ஹே குரங்கு வலிக்குது டீ,” என்று புனர்வி கத்தினாள். இருவரும் உணவு மேசைக்கு அருகில் அமர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, அல்வாவை கொடுத்துவிட்டு வந்து ராகமயா அமர்ந்தாள்.

வழக்கமாக, “லூசுங்களா, ஏன் டீ இப்படி செய்றீங்க?” என்று சொல்பவள், அமைதியாக யோசித்தப்படி அமர்ந்திருப்பதை புரியாமல் பார்த்த புனர்வியோ,

“ராகா, என்னடீ யோசனை, இவளை என்னன்னு கேட்டியா? யோகமித்ரனை யோகன்னு கூப்பிட்டாலாம், அவங்க இவளை மலர்னு கூப்பிட்டாங்களாம், அட்வைஸ் பண்றதை சிரிச்சப்படியே கேட்டுட்டு நின்னாங்களாம், நீ சொன்னப்படி தான் இந்த கதை போகப் போகுது போல,” என்று தவமலர் அடிப்பதை பொருட்படுத்தாமல் சொல்லிக் கொண்டிருக்க,

“ஓ அப்படியா?” என்று சாதாரணமாக ராகமயா கேட்க,

“ஹே இந்த உலகத்தில் தான் இருக்கியா?” என்று புனர்வி அவளை உலுக்கி கேட்டாள்.

அப்போதும், “என்ன டீ?” என்று அவள் விழித்தப்படி கேட்க,

“இவளுக்கு என்னாச்சுன்னு தெரியல தவா, இப்படித்தான் அடிக்கடி ஏதாவது யோசனைக்கு போயிட்றா, பேசாம ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சு விடணும், அப்போ தான் சரியாவா,” என்று புனர்வி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஹே அப்படில்லாம் இல்லடி, நீங்க பேசினதை நான் கேட்கல, என்ன சொன்ன திரும்ப சொல்லு,” என்று ராகமயா கேட்க,

“அதான் என்ன யோசனை, முதலில் அதை சொல்லு,” என்று புனர்வி பிடிவாதமாக கேட்டாள்.

“முக்கியமா ஒன்னுமில்ல புவி, நீ என்ன சொல்லவந்த சொல்லு ப்ளீஸ்,” என்று ராகமயா கெஞ்சலாக கேட்கவும், தவமலர் யோகமித்ரனோடு பேசியதை பற்றி புனர்வி கூறினாள்.

“கன்பார்ம் டும் டும் டும் தான் டீ, கொஞ்ச நாளில் யோகன் உன் பின்னாடி சுத்த போறாரு பாரு,” என்று இப்போது ராகமயாவும் புனர்வியோடு சேர்ந்துக் கொள்ள,

“உங்களை அடிக்கிறதோட விடக் கூடாது, என்ன செய்றே பாரு,” என்று தண்ணீர் இருந்த பாத்திரத்தை கையில் எடுத்து இருவர் மீதும் தவமலர் தண்ணீரை ஊற்ற போக, 

“ஹேய் வேண்டாம் தவா,” என்று மற்ற இருவரும் கத்தினர்.

வேலை விஷயமாக பேசிக் கொண்டிருந்த நவிரனும் மயூரனும் மூவரும் கத்திக் கொண்டிருப்பதை கேட்டனர், “என்னடா, ஏதாவது பிரச்சனையா?” என்று நவிரன் கேட்க,

“இல்லடா, இப்படி தான் 3 பேரும் ஒன்னு சேர்ந்தா, சிரிப்பும் ரகளையுமா இருக்கும், திடீர்னு கத்துவாங்க, அடிச்சிப்பாங்க, அப்புறம் முஸ்தபா முஸ்தபா மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பான்னு பாட்டு பாடுவாங்க,” என்று சொல்லி சிரிக்க,

“ம்ம் இவங்க ப்ரண்ட்ஷிப் பார்க்க சந்தோஷமா இருக்கு,” என்று நவிரனும் கூறினான்.

அவர்களுக்காக சூடாக தோசையும் பூரியும் கொண்டு வந்த சாம்பவி, “என்ன உங்களை சாப்பிட சொன்னா, விளையாடிட்டு இருக்கீங்க, மதியம் சமையல் செய்யணுமில்ல, அதுக்கு எவ்வளவு வேலையிருக்கு, ஒழுங்கா சீக்கிரம் சாப்பிட்டு வந்து எனக்கு உதவி செய்ங்க,” என்று சொல்லிவிட்டு செல்ல, பின் மூவரும் சிரிப்பும் பேச்சுமாக சாப்பிட்டு முடித்தனர்.

டுத்து மயூரனும் நவிரனும் வெளியில் சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றனர். மூவரின் உதவியோடு சாம்பவி சமையலை செய்து முடிக்கவும், “அப்பா நான் தனியா செய்தாலே, சீக்கிரம் செய்துடுவேன் போல, 3 பேரும் சேர்ந்தா ஒரே ரகளை,” என்று போலியாக அவர்களை கோபித்துக் கொண்டார்.

செய்த உணவுகளை மேசையில் கொண்டு வந்து வைக்கவும், நவிரன், மயூரன் வரவும் சரியாக இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், இரவு உணவிற்கு இருப்பதை வைத்தே, அதனுடன் இட்லியோ இல்லை தோசையோ சுட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். அதனால் சாம்பவி கொஞ்சம் வேலையிருப்பதாக சொல்லி வெளியில் கிளம்ப, 

“எங்கக்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்கன்னு புனர்வி சொன்னாளே அத்தான், என்ன விஷயம்?” என்று தவமலர் பேச்சை ஆரம்பித்தாள்.

“ம்ம் ஆமாம் முக்கியமான விஷயம் தான், நவிரனுக்கு உங்க உதவி தேவைப்படுது, அதைப்பற்றி பேச தான் வர சொன்னேன். அவனுக்கு ஒருத்தரை தேடி கண்டுபிடிக்கணும், அது உங்களால தான் முடியும்,” என்று மயூரன் பீடிகை போட,

“நாங்க கண்டுப்பிடிக்கணுமா? யாரை கண்டுப்பிடிக்கணும்? எதுக்கு கண்டுப்பிடிக்கணும்?” என்று ராகமயா கேட்டாள்.

“அது ஒரு பெண்ணை தேடி கண்டுப்பிடிக்கணும், நவிர் கலிஃபோர்னியால இருந்து இங்க வேலை மாத்திக்கிட்டு வந்ததே அவளுக்காக தான், அவளை கண்டுப்பிடிக்க உங்களோட உதவி வேண்டும்,” என்று மயூரன் சொல்ல,

“ஏன் அந்த பெண்ணை இவங்களுக்கு தெரியாதா? நாங்க கண்டுப்பிடிக்கணும்னு சொல்றீங்க? யாருன்னு தெரியாத பெண்ணையா தேடிட்டு வந்திருக்காங்க?” என்று புனர்வி கேட்கவும், நவிரன் அவளை யோசனையோடு பார்த்தான்.

“என்ன மயூ அத்தான், புவி சொல்றது போல தானா? நவிரனுக்கு அந்த பெண்ணை தெரியாதா? ஆனா தெரியாத பெண்ணை எதுக்கு தேடிட்டு வரணும்? அவளை நாங்க எப்படி கண்டுப்பிடிப்பது? எங்களுக்கு புரியல அத்தான்,” என்று இப்போது தவமலர் கேட்க,

“நவிரன் அந்த பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அவளோட முகம் பார்த்ததில்ல, அவளோட குரல் கேட்டதில்ல, அவ பேர் மட்டும் தான் தெரியும், ஆனா அது கூட உண்மையான பேரான்னு தெரியல, அவளைத் தேடி தான் இங்க வந்திருக்கான்.  அவள் நவிரனின் முகநூல் தோழி, இருவரும் அதன்மூலமா சேட் செஞ்சு  பேசிக்கிட்டாங்க,” என்று சுருக்கமாக நவிரன் விஷயத்தை மயூரன் கூற,

“நவிரன், கேட்கறேனுன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, தன்னோட எந்த விபரமும் சொல்லாம உங்கக் கூட பேசின பெண்ணை எப்படி காதலிச்சீங்க? ஃபேஸ்புக்னா நிறைய ஃபேக் ஐடி தான் உலா வருது, ஆபாசமா பேசி தங்களோட வக்கிரங்களை வெளிப்படுத்துக்கிறதுக்கும், ஏமாத்தறதுக்கும் அங்க நிறைய பேர் இருக்காங்க,

தன்னை யாருன்னு காட்டிக்காம உங்கக்கிட்ட பேசியிருக்கான்னா, முதலில் உங்கக் கூட பேசினது ஒரு பெண் தானா? அப்படியே பெண் என்றாலும் அவளுக்கு என்ன வயசு? ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்திருக்கலாம் இல்லையா? ஏன் பாட்டியா கூட இருக்கலாம், இப்படி எதுவும் தெரியாம உங்கக் கூட பேசின ஆளை காதலிக்கிறது சரியா வருமா?” என்று தவமலர் கேட்டாள்.

“ஒருத்தர் ஏமாத்த தான் நம்மக் கூட பேசுறாங்கன்னா அவங்களால தொடர்ந்து நடிக்க முடியாது, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா தினமும் அவக்கூட பேசியிருக்கேன். அவளோட நோக்கம் என்னை ஏமாத்தறதா இருந்தா, அது ஏதாவது ஒரு சமயத்தில் வெளிப்பட்டுருக்கணுமே, 

அதேபோல அவளைப்பத்தி எந்த தகவலும் தெரியாம இருந்திருக்கலாம், ஆனா அதுக்காக அவ பெண்ணா இல்லையான்னு சந்தேகமெல்லாம் பட வேண்டாம், அவ பெண் தான், அதுவும் 25 வயசுக்குள்ளன்னு அவ சொல்லியிருக்கா?” என்று நவிரன் கூற,

“ஆனா நான் ஃபேக் ஐ டியா கூட இருக்கலாம்னு அந்த பெண் கேட்டதா சொன்னீங்க?” என்று ராகமயா கேட்டாள்.

“ம்ம் அப்படி சொன்னா தான், ஆனா அது அவ விளையாட்டுக்கு சொன்னதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியும்,” என்று அவன் பதில் கூறவும்,

“ஆனா கிட்டத்தட்ட ஒரு வருஷமா அவ உங்கக்கூட பேசறதில்லன்னு நீங்க தானே சொன்னீங்க, நீங்க அவளை காதலிச்சிருக்கலாம், ஆனா அவ உங்களை காதலிக்கல போலயே, அப்படியிருக்க இப்போ அவளை தேடி நீங்க வருவது அவளை தொந்தரவு செய்றது போல் இல்லையா? என்று புனர்வி கேட்டாள்.

“அப்படி அவ என்னை காதலிக்கலன்னா, அதை அவ வெளிப்படையாவே என்கிட்ட சொல்லியிருப்பா, ஆனா அப்படி அவ எதுவும் என்கிட்ட சொல்லல, நான் காதல் சொன்ன பிறகும் தொடர்ந்து பேசிட்டு இருந்தவ, கொஞ்சம் கொஞ்சமா தான் என்னை புறக்கணிக்க ஆரம்பிச்சா, அதுக்கு நான் தான் காரணம், ஏதோ அவளை கஷ்டப்படுத்தறது போல பேசியிருக்கேன். அதான் அவ என்னை விட்டு விலகி போயிட்டா, அப்படித்தான் நினைக்கிறேன்.

என்னோட பேசறதை நிறுத்தியிருந்தாலும், அவ என்னை கண்காணிச்சிக்கிட்டே தான் இருக்கா, அதான் நான் அவளை தேடி தான் இந்தியா வரேன்னு சரியா கண்டுப்பிடிச்சு, அதை பிரதிபலிப்பது போல் கவிதை எழுதியிருக்கா, இங்கேயும் அவ என்னை ஃபாலோவ் செய்றது போல தான் எனக்கு தோனுது, இன்னும் சொல்லப் போனா அவ எனக்கு பக்கத்தில் இருப்பது போலத் தான் இருக்கு,” என்று புனர்வியை பார்த்தப்படியே அவன் பதில் கூறினான்.

“உங்களுக்கு பக்கத்தில் நாங்க 3 பேர் தான் இருக்கோம், அப்போ எங்க 3 பேர்ல யாரோ ஒருத்தரோ?” என்று தவமலர் கேட்க,

“அப்படியும் இருக்கலாம்,” என்று நவிரன் கூறினான்.

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நவிரன், எங்க 3 பேருக்கும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான், இப்படி முகம் பார்க்காம பேசறோம்னு சொல்லி வழவழா கொழகொழான்னு வெண்டைக்காய் குழம்பு வைக்க மாட்டோம், அதிலும் புனர்விக்கு மயூ அத்தானோட நிச்சயம் ஆயிடுச்சு, நான் இல்ல எனக்கே தெரியும், இதில் ராகா தான் கவிதை எழுதுவா, ஆனா அவளுக்கு இந்த திறமையெல்லாம் பத்தாது,” என்று ராகாவிடம் ஒரு முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டு,

“அதனால இப்படி ஒரு டவுட் உங்களுக்கு வேண்டாம்,” என்ற தவமலர்,

‘அப்புறம் உங்க ஃபேஸ்புக் காதலியை கண்டுப்பிடிக்க நாங்க எப்படி உதவணும், உங்களுக்கே தெரியாத ஆளை, எங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“அந்த பெண் உங்க காலேஜ்ல தான் படிக்கிறான்னு நாங்க நினைக்கிறோம் தவா,” என்று மயூரன் பதில் கூற,

“எங்க காலேஜா, இவ்வளவு அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்க, அப்போ ஈஸியா கண்டுப்பிடிச்சிடலாமே?” என்று அவள் திருப்பிக் கேட்க,

“அது அவ்வளவு சுலபமான்னு எனக்கு தெரியல, உங்க காலேஜில் தான் படிக்கிறாளான்னும் ஒரு யூகம் தான், அதை நீங்க தான் விசாரித்து சொல்லணும்,” என்ற நவிரன், 

அவர்கள் கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டி பற்றியும் அதில் வெற்றி பெற்றவரின் கவிதையை ஒரு பெண் முகநூலில் பகிர்ந்ததை பற்றியும், அதில் மின்மினியின் கவிதைக்கும் பரிசு கிடைத்ததை பற்றியும் கூறியவன், தன் அலைபேசியில் பாதுகாத்து வைத்திருந்த அந்த கவிதையையும் தவமலரிடம் காட்டினான்.

அதை தவமலர் பார்க்க, ராகமயாவும் அதை வாங்கி பார்த்தவள், பின் புனர்வியிடம் காட்ட, அவளும் அதை பார்த்துவிட்டு நவிரனிடமே கொடுத்தாள்.

“நீங்க சொன்ன கவிதைப் போட்டி ஆன்லைனில் நடந்தது நவிரன், எங்க காலேஜில் அதுக்குன்னே ஒரு சைட் ஓபன் செஞ்சு கவிதைப் போட்டி வச்சாங்க, இதில் எங்க காலேஜை சேர்ந்தவங்க மட்டுமில்ல, மத்த காலேஜை சேர்ந்தவங்களும் கலந்துக்கலாம்னு சொல்லி, நிறைய பேர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்னு இந்த போட்டி பத்தி ஷேர் செஞ்சாங்க, ராகாவும் கலந்துக்கிட்டா, 

இதில் முதல் பரிசும் மூன்றாவது பரிசும் வாங்கினவங்க எங்க காலேஜை சேர்ந்த ஆள் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டாங்க, அதுவரைக்கும் தான் எங்களுக்கு விவரம் தெரியும்,” என்று தவமலர் கூற, நவிரன் முகமோ வாடியது.

“அப்போ மின்மினி உங்க காலேஜ்ல படிக்கலன்னு சொல்ல வர்றீயா தவா,” என்று மயூரன் கேட்க,

“இதில் இந்த கவிதைக்கு என்ன பரிசு கிடைச்சதுன்னு தெரியலையே, ராகா இந்த கவிதை போட்டியில் ஜெயிக்கலன்னதும், அதிலும் ஜெயிச்சவங்க எங்க காலேஜ் ஆளுங்க இல்லன்னு தெரிஞ்சதும், நாங்க அவங்களைப்பத்தி தெரிஞ்சிக்க இன்ட்ரஸ்ட் காட்டல, 

ஆனா வேற யாருக்காவது ஜெயிச்சவங்க பத்தி தெரிஞ்சிருக்கலாம், இல்ல எப்படியோ எங்க காலேஜில் இருந்து பரிசு கொடுத்திருப்பாங்கல்ல, அப்போ அவங்களுக்கு விவரம் தெரிஞ்சிருக்கலாம், யார் மூலமாவது இந்த தகவல் சேகரிச்சு சொல்றேன். அதுவரைக்கும் உங்க ஃப்ரண்ட நம்பிக்கையை விட்டுட வேணாம்னு சொல்லுங்க,” என்று மயூரனிடம் கூறிய தவமலர்,

“அதுக்குள்ள உங்க ஆள் ஃபேஸ்புக்ல இல்ல மெசெஞ்சர்ல ஏதாவது உங்களுக்கு குறிப்பு கொடுக்கறாங்களான்னு பாருங்க நவிரன், சீக்கிரமா உங்க மின்மினியை கண்டுபிடிச்சிடலாம்.” என்று நம்பிக்கை கொடுத்தாள்.

“இவங்க 3 பேர்க்கிட்ட சொல்லியாச்சுல்ல, உன்னோட மின்மினி கிடைச்சது போல தான்,” என்று மயூரன் சொல்ல,

தவமலர் போல் மற்ற இருவரும், ஏன் ராகமயா கூட இவர்கள் பேசியதை ஆர்வமாக கேட்டுக் கொண்டாவது இருந்தாள். ஆனால் புனர்வி இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாததை நவிரன் மனதில் குறித்துக் கொண்டான்.

ஊஞ்சலாடும்..