AO 6

அன்பு 6

ல்லூரியில் வழக்கம் போல் தோழிகள் மூவரும் மரத்தடியில் அமருவதற்காக வர, அந்த நேரம் தவமலரை யாரோ அழைத்தனர், 

குரல் கேட்டு திரும்பியவள், “அகிலா கூப்பிட்றா, நீங்க பேசிக்கிட்டு இருங்க பத்து நிமிடத்தில் வரேன்,” என்று சொல்லிவிட்டு செல்லவும், மற்ற இருவரும் அங்கே அமர்ந்தனர்.

ராகமயா ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்டப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புனர்வி திடீரென,

“ஹே ராகா, அங்கப் பாரு டீ, செமயா ஒருத்தன் வந்து நிற்கிறான், ஒருவேளை நம்ம காலேஜூக்கு புதுசா ஒரு ஜென் லெக்சரரை சேர்த்திருக்காங்களோ,” என்று அவர்களை விட்டு கொஞ்சம் தூரமாக நின்றிருந்த ஆடவனை பார்த்தப்படி கேட்க,

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் திசையில் பார்த்த ராகமயாவும், “நம்ம காலேஜூக்கு ஜென் லெக்சரரா, அதுவும் நம்ம பிரின்சி வச்சுட்டாலும், ஆமா விமென்ஸ் காலேஜில் வந்து பே பேன்னு முழிச்சிக்கிட்டு இருக்கானே யாரா இருக்கும் டீ,” என்று திருப்பிக் கேட்டாள்.

“பேசாம ரெண்டுப்பேரும் போய் அவன்கிட்டயே கேட்ருவோமா?” என்று புனர்வி கேட்க,

“ஹே என்னை வம்புல மாட்டி வைக்காத, இதுக்கெல்லாம் தவா தான் கரெக்ட், அவ வந்ததும் கேளு,” என்று ராகமயா சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் சரியாக அங்கு வந்த தவமலர், எதுக்குடீ நான் கரெக்ட், என்ன செய்யணும்?” என்று கேட்டப்படி அமர,

“அங்கப்பாரு தவா, அந்த பையன் செமயா இருக்கான் இல்ல,” என்று அந்த ஆடவன் நின்றிருந்த திசையை நோக்கி புனர்வி காட்ட, 

ஆர்வமாக பார்த்த தவமலர், அது யாரென தெரிந்ததும், “இவனா?” என்று மற்ற இருவருக்கும் கேட்கும்படி சத்தமாகவே கூறினாள்.

“யாரு தவா அது, உனக்கு தெரிஞ்ச ஆளா?” என்று ராகா கேட்க,

“இவன் தான் டீ நேத்து என்னை பெண் பார்க்க வந்த ஆளு,” என்று அவள் சொல்லவும்,

“இவன் தானா அது,” என்று மற்ற இருவரும் ஒன்று போல் கூறினர். நேற்று நடந்த சம்பவங்களுக்கு பிறகு தவமலர் வீட்டில் நடந்ததையும், நவிரன் நடந்துக் கொண்ட விஷயத்தையும் தோழிகள் அலைபேசி மூலம் பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.

“ஆமாம் உன்னை தான் பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிட்டானே, எதுக்கு உன்னைப் பார்க்க காலேஜுக்கு வந்திருக்கான்,” என்று புனர்வி சந்தேகத்தோடு கேட்க,

“ஒருவேளை டும் டும் டும் கதை போல் போகுமோ இது,” என்று ராகமயா சொல்ல,

“ஹே என்னைப் பார்க்கவா, அப்படியெல்லாம் இருக்காது டீ, நான் தான் கருப்பா இருப்பதால் வேண்டாம்னு சொல்லிட்டானே, அதோட முடிஞ்சுப் போச்சு, இதில் டும் டும் டும்மாம், ஓவரா தான் போறீங்க டீ, 

நான் தான் நேத்து சொன்னேனே, கௌசல்யா மேம் இவனுக்கு கசின் சிஸ்டர்னு, ஒருவேளை அவங்களை பார்க்க வந்திருக்கலாமில்ல,” என்று பதில் கூறினாள்.

“கௌசல்யா மேம் எந்த டிபார்ட்மெண்ட்ல வேலைப் பார்க்கிறாங்கன்னு இவனுக்கு தெரியாதா? டிபார்ட்மெண்ட் விசாரிச்சு அங்க போய் கேட்டா சொல்லப் போறாங்க, ஆனா இவன் யாரையோ தேட்றது போல இருக்கு, அனேகமா உன்னையா தான் இருக்கும், என்ன இருந்தாலும் நேத்து உண்மையான ரீஸன் சொல்லி உன்னை வேணாம்னு சொன்னதால நீ ஹர்ட் ஆகியிருப்பன்னு சாரி கேட்க வந்திருப்பானோ,” என்று புனர்வி கேட்க,

“புவி சொன்னது போலத் தான் இருக்கும் தவா, இவன் யாரையோ தேட்றது போலத்தான் இருக்கு, அந்தப்பக்கமே தேடிட்டு இருந்தா எப்படி? இந்தப்பக்கம் திரும்பி பார்த்தா நீ இருக்கிறது தெரியப்போகுது,” என்ற ராகமயா,

“மிஸ்டர் யோகமித்ரன் கொஞ்சம் இந்தப்பக்கமும் திரும்பி பாருங்க,” என்று அருகில் இருக்கும் தோழிகளுக்கு மட்டும் கேட்கும்படி அவனை கூப்பிட,

“நான் எம்.ஏ. சோஷியாலஜின்னு நேத்து ஏலம் போட்டு சொன்னேனே, அவன் காதில் விழுந்தா இருக்காது, அப்போ நம்ம டிபார்ட்மெண்ட் தேடி வந்திருக்க வேண்டியது தானே, முதலில் இவன் சாரி கேட்கலன்னு யார் அழுதா, இவன் எதுக்கு இங்க வரணும்? நீங்க சொல்றது போல இருக்காது, கௌசல்யா மேமை தான் தேடி வந்திருக்கணும், எதுக்கு நாம இங்க குழப்பிக்கணும், அவன்கிட்டேயே கேட்டிடுவோம் வாங்க,” என்று தவமலர் வேகமாக எழுந்து போக, மற்ற இருவரும் அவள் பின்னாலேயே சென்றனர்.

இன்னுமே யோகமித்ரன் இவர்கள் இருந்த திசையை விட்டு மற்ற இடங்களை சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்க,

“ஹே புவி, காலேஜை இப்படி சுத்தி சுத்தி பார்க்கிறானே,  ஒருவேளை இவன் இந்த காலேஜை வாங்க வந்திருக்கானோ,” என்று ராகமயா கேட்கவும், 

“நீ வேற, பேசாம வா டீ,” என்று புனர்வி அவளை அடக்கினாள். அதே நேரம் அவன் அருகில் சென்ற தவமலர், அவனை அழைப்பதற்காக அவன் பெயரை அழைக்க நினைத்தவள், பின் வேண்டாமென விட்டுவிட்டு, “க்கூக்கூம்,” என்று கணைத்தாள்.

அந்த சத்தத்திற்கு திரும்பியவன் அங்கு தவமலர் நிற்பதை கண்டு வியந்தான். அதற்குள் புனர்வியும் ராகமயாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“ஹாய், என்ன எங்க காலேஜூக்கு வந்திருக்கீங்க? கௌசல்யா மேமை பார்க்க வந்திருக்கீங்களோ,” என்று அவனை பார்த்து கேட்க, அவன் ஆமாமென்று தலையசைத்தான்.

“அவங்க டிபார்ட்மெண்ட் தெரியாதா, சுத்தி சுத்தி பார்க்கிறீங்க, இருங்க நான் அவங்களை வரச் சொல்றேன்,” என்று அவள் கூறவும்,

“அய்யோ எதுக்கு, நானே பார்த்துக்கிறேன்,” என்று அவன் மறுப்பதையும் பொருட்படுத்தாமல், அங்கு சென்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து,

“ஹே விஜி,” என்று அழைத்தாள். அவள் திரும்பி பார்க்கவும்,

“கௌசல்யா மேமை பார்த்தா கொஞ்சம் கூப்பிடு டீ,” என்று கத்த,

அதற்குள் இவர்களை காணவென கௌசல்யாவே வந்துக் கொண்டிருக்க,

“மேம் அதோ வராங்க பாரு டீ,” என்று அந்த பெண் இவர்களுக்கு பின் பக்கம் காட்டவும், நான்கு பேரும் ஒன்று சேர திரும்பி பார்த்தனர்.

யோகமித்ரனை கவனிக்காத கௌசல்யா, மூன்று பேரையும் பார்த்து புன்னகைத்தப்படியே வந்தவள், 

“உங்களை மரத்தடியில் தேடினேன், நீங்க இங்க இருக்கீங்களா?” என்று கூறியப்படியே அவர்கள் அருகில் வர, அப்போது தான் யோகமித்ரனை கண்டவள்,

“மித்ரன் அண்ணா, நீங்களா?” என்று வியப்போடு கேட்டாள்.

“ஆமாம் மேம் உங்களை பார்க்கணும்னு சொன்னாரு, உங்க டிபார்ட்மெண்ட் தெரியாம தேடிட்டு இருந்தாரு போல, அதான் உங்களை கூப்பிட சொல்லலாம்னு விஜிக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க,” என்று தவமலர் கூறினாள்.

“ஆமாம் உங்களை பார்க்கலாம்னு தான் வந்தேன், இவங்க என்னோட அண்ணன் தவா,” என்று அவனை அறிமுகம் செய்தவள்,

“அண்ணா, இது தவா, இது புனர்வி, இது ராகா, இவங்க ஸ்டூடன்ஸா இருந்தாலும், என்னோட ஃப்ரண்ட்ஸ்,” என்று மூவரையும் அறிமுகம் செய்து வைக்க, ராகாவும் புனர்வியும் அவனைப் பார்த்து “ஹலோ,” என்று சொல்ல,

தவமலரும் அவனை தெரியாதது போல் “ஹலோ,” என்றாள்.

“சரி மேம், நீங்க உங்க அண்ணா கூட பேசுங்க, எங்களுக்கு க்ளாஸ்க்கு டைம் ஆச்சு,” என்று தவமலர் சொல்லவும், மற்ற இருவரும் அதை ஆமோதிக்க,

“சரி போயிட்டு வாங்க, நானும் உங்கக்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும், அப்புறமா பேசிக்கிறேன்,” என்று விடைக் கொடுத்தாள்.

தனசேகரின் பெற்றோரை சந்தித்ததை பற்றி பகிர்ந்துக் கொள்ள தான் கௌசல்யா வந்திருப்பாள் என்பதை புரிந்துக் கொண்டவர்கள், அதைப்பற்றி உடனே தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருந்தாலும், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சென்றுவிட்டார்கள்.

“மித்ரன் அண்ணா, இப்போ தான் இந்த தங்கை உங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தேனா, நம்ம அப்பா, அம்மா தான் பேசிக்கிறது இல்லன்னா, நீங்களும் என்னை மறந்துட்டீங்களா?”

“அய்யோ அப்படில்லாம் இல்ல கௌசி, உண்மையிலேயே நிறைய வேலை, அதான், மத்தப்படி நம்ம அப்பா, அம்மா தான் அறிவில்லாம நடந்துக்கிறாங்கன்னா, நானும் அப்படி இருப்பேனா,”

“கேட்க சந்தோஷமா இருக்கு ண்ணா, இப்போயாச்சும் இந்த தங்கை உங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தேனே,”

“இப்போதும் உன்னை பார்க்க வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு கௌசி,”

“என்ன ண்ணா அது,”

“சொல்றேன், சரி அதுக்கு முன்ன சொல்லு, சித்தப்பா சித்தி எப்படி இருக்காங்க? உன்னோட தனசேகர் எப்படி இருக்கார்? வீட்டில் விஷயத்தை சொன்னீயா? சித்தப்பா, சித்தி உன்னோட காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்களா? எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற?” என்று கேட்டதும்,

“ம்ப்ச்,” என்று அவள் சலித்துக் கொண்டாள்.

“என்னாச்சு கௌசி?”

“என்னன்னு சொல்றது ண்ணா, ரெண்டு நாளைக்கு முன்ன தான் தனா அவரோட அம்மா, அப்பாவுக்கு என்னை அறிமுகப்படுத்தினாரு, அவங்க சைட் உடனே கல்யாணம் வச்சுக்க ரெடியா இருக்காங்க, அதனால அப்பா, அம்மாக்கிட்ட உடனே விஷயத்தை சொல்லிட்டேன்,

ஆனா அவங்க பேசினது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு, படிச்சு முடிச்சு இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்க, அதுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டு போகப் போறீயா? சுயநலவாதி அப்படின்னு திட்றாங்க, 

அப்பாவோட தொழில் நஷ்டமானதுல இப்போ கல்யாணம் நடத்துறதுல அவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கு புரியுது, தனாவும் சரி அவங்க வீட்டிலேயும்யும் சரி இங்க நம்ம வீட்டில் இருந்து பெருசா எதிர்பார்க்கல, அவங்க பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சா போதும்னு நினைக்கிறாங்க, எனக்குமே கல்யாணத்துக்கு பிறகு அம்மா, அப்பாவை அப்படியே விட்டுடும் எண்ணமில்ல, கல்யாணத்துக்கு பிறகும் என்னோட சம்பளத்தில் கொஞ்சம் வீட்டுக்கு கொடுக்கணும்னு சொல்லியிருக்கேன், அவருக்கும் அதுல சம்மதம் தான்,

ஆனா இதெல்லாம் சொன்னா அம்மாவும் அப்பாவும் ஏத்துக்கவே மாட்டேங்குறாங்க, அவங்க பேசறத பார்த்தா எனக்கு கல்யாணம் செய்யும் எண்ணமே இல்லாத போல தெரியுது, தனா வீட்டில் அவசரப்பட்றாங்க, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல”

“சித்தப்பா சித்தி ஏன் இப்படி செய்றாங்க, என்னத்தான் கஷ்டம் இருந்தாலும் பெண்ணுக்கு கல்யாணம் செய்யாம வச்சிருக்கவா போறாங்க, நம்மள பெத்தவங்க ஏன் தான் இப்படி இருக்காங்களோ தெரியல,” என்று இப்போது யோகமித்ரன் சலித்துக் கொண்டான்.

“என்ன ண்ணா, பெரியப்பா, பெரியம்மாக்கு என்ன? ஏன் இப்படி சலிப்பா சொல்றீங்க?”

“பின்ன என்ன கௌசி, தொழிலில்  நஷ்டம் ஆன தம்பிக்கு கூட உதவாம பணம் சேர்த்து தான் வச்சிருக்காருல்ல, இதில் என்னை கல்யாணம் செய்துக்க போற பெண் வீட்டில் இருந்து எதிர்பார்த்தா எப்படி? 

நான் எனக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கிறேன், அவங்க பெண் வீட்டில் இருந்து வர பணம் நகைக்கு ஆசைப்பட்றாங்க, இதில் நேத்து அவங்க செஞ்சு வச்ச காரியத்துல ஒரு பெண்ணை வேற கஷ்டப்படுத்தறது போல ஆயிடுச்சு,”

“அய்யோ என்ன ண்ணா சொல்றீங்க? என்ன நடந்தது?”

“இப்போ உன்கிட்ட பேசிட்டு போனாங்கள்ள, அதான் தவமலர், அவங்களை தான் நான் நேத்து பெண்பார்த்துட்டு வந்தேன், நான் கல்யாணம் செய்துக்க போற பெண் இப்படி இருக்கணும்னு சில கண்டிஷன்ஸ் வச்சிருந்தேன்,

தவமலர் வீட்டில் இருந்து அனுப்பின போட்டோவை காண்பிக்காம, பெண்ணை நேர்ல தான் பார்க்கணும், உன்னோட கண்டிஷனுக்கெல்லாம் ஒத்து வர பெண் தான்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க, அப்போக் கூட ஒருமுறை பெண்ணோட போட்டோவை பார்த்தா நல்லதுன்னு நான் சொல்லியிருந்தேன்,

பெண் வீட்டில் போட்டோ தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க, பெண்ணை உனக்கு பிடிக்கும் பாருன்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க, ஆனா அங்க போனதும் தான் என்னோட கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி தவமலர் இல்லன்னு தோனியது, சரி ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்த பேச்சை முடிச்சிக்கலாம்னு பார்த்தா, அம்மாவும் அப்பாவும் அவங்களுக்கு நம்பிக்கை தருவது போல பேச ஆரம்பிச்சிட்டாங்க, நிச்சயத்துக்கு தேதி குறிக்கிற அளவுக்கு போயிட்டாங்க, அதான் நேரடியா விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு,

ஆனாலும் இப்படி வீடு தேடி போய் அவங்கக்கிட்ட அப்படி சொல்லிட்டு வந்தது மனசுக்கு கஷ்டமா இருக்கு கௌசி, அவங்க அம்மா வேற அழுதுட்டாங்க, தவமலர் என்னை முறைச்சிட்டு போனாங்க, வீட்டுக்கு வந்ததும் அப்பா, அம்மாவையும் கோபத்தில் திட்டிட்டேன், ஒரே பெண். அவங்களோட சொத்து எல்லாம் பிற்காலத்தில் அவங்க பெண்ணுக்கு தான், அழகா, படிச்சிருந்தா மட்டும் போதுமா? பெண்ணோட பிண்ணனி நல்லா இருக்க வேண்டாமான்னு கேட்கிறாங்க, இவங்ககிட்டல்லாம் மனுஷன் பேசுவானா? 

எனக்கு இப்போ தவமலர்க்கிட்ட சாரி கேட்கணும், நேத்து பேச்சு வாக்குல உன்னை தனக்கு தெரியும்னு தவமலர் சொன்னாங்க, அதான் உன்மூலமா அவங்கக்கிட்ட பேசலாம்னு வந்தேன், ஆனா இங்க வந்து ஒரு சின்ன தடுமாற்றம், அதான் உன்னை நேரா பார்க்க வராம தயங்கி நின்னுக்கிட்டு இருந்தேன்,”

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ண்ணா, தவமலர் கருப்பா இருந்தாலும் குணத்துல ரொம்ப தங்கமானவ, ஆனா உங்களுக்கு வேற விருப்பம் இருக்கறப்போ என்ன செய்ய முடியும்? ஆனாலும் நேரடியா அவக்கிட்ட அந்த காரணத்தை சொல்லியிருக்க வேண்டாம் தான்,

ஆனா இதுக்காக தவமலர்க்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கணும்னு எந்த அவசியமுமில்ல ண்ணா, அவ ரொம்ப மெச்சூர் ஆன பெண், அவ மட்டுமில்ல அவக்கூட இருந்தாங்களே அவளோட ஃப்ரண்ட்ஸ் அவங்களும் அப்படித்தான், ஒருத்தி  துப்பட்டாவால் முகத்தை மூடியிருந்தாலே, அவ ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவ, ராகாவோட அப்பா அம்மாவும் ஹெச்.ஐ.வி நோயால் இறந்தவங்க, இதையெல்லாம் காரணமா சொல்லி எத்தனையோ பேர் அவங்களை கஷ்டப்படுத்தியிருக்காங்க, ஆனா அதையெல்லாம் கேர் செஞ்சுக்காம 3 பேரும் ரொம்ப தைரியமா எல்லாத்தையும் சந்திப்பாங்க,

நேத்து நடந்த விஷயத்தை தவமலர் நேத்தே கடந்து வந்திருப்பா, அதான் உங்கக்கிட்ட இப்போ வந்து அவளால சாதாரணமா பேச முடியுது, அதனால நீங்க மன்னிப்பு கேட்கணும்னு அவசியமில்ல ண்ணா,”

“நீ சொல்றது புரியுது, ஆனா ஒருமுறை சாரி கேட்டா தான் என்னோட மனசு ஆறும், ப்ளீஸ் அவங்கக்கிட்ட பேச கொஞ்சம் ஏற்பாடு செய்றீயா?”

“சரி ண்ணா, நான் தவமலர்க்கிட்ட இதுப்பத்தி பேசறேன், ஆனா இது விமன்ஸ் காலேஜ், இங்க இப்படி சாதாரணமா ஒருத்தரை பார்த்து பேச முடியாது, அதுக்கு மேனேஜ்மெண்ட்க்கு பதில் சொல்லணும், இப்போ நீங்க உள்ள வரை வந்ததுக்கே என்ன ஏதுன்னு கேள்வி வரும்? நீங்க என்னைப் பார்க்க தானே வந்தீங்க, நான் அதைப் பார்த்துக்கிறேன்.

தவமலர்க்கிட்ட வெளிய எங்கேயாச்சும் வச்சு தான் பேச முடியும்,  நான் அவக்கிட்ட பேசிட்டு சொல்றேன். அவளுக்கு விருப்பம்னா ஞாயிற்றுக் கிழமை வெளியே வச்சு சந்திக்கலாம்,”

“சரி கௌசி, ரொம்ப தேங்க்ஸ், அப்புறம் உன்னோட விஷயத்தில் ரொம்ப குழப்பிக்காத, பார்ப்போம் என்ன நடக்குதுன்னு,”

“சரி ண்ணா, அம்மா, அப்பா ஒத்துக்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு பார்ப்போம்,”

“சரி அப்போ நான் வரேன் கௌசி,” என்று அவன் விடைப்பெற்று சென்றான்.

திக நேர பயணம், இரு நாடுகளின் நேர மாற்றம் இதன் விளைவுகளால் அடித்து போட்டது போல் தூங்கி எழுந்த நவிரனுக்கு பசியெடுக்க ஆரம்பித்தது. நேற்று புனர்வி வரவழைத்த உணவை சாப்பிட்டவன், இரவு ரொட்டித் துண்டுகளோடு தன் உணவை முடித்துக் கொண்டு படுத்தவன் தான், காலை உணவு நேரத்தை கடந்து மதிய நேரத்துக்கு எழுந்திருக்கவே ஏதாவது சமையல் செய்து சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

மயூரன் வீட்டில் மளிகை பொருட்கள் வாங்கி வைத்திருப்பதை தேடி பார்த்து அறிந்துக் கொண்டவன், நேற்று இவன் வந்த நேரம் அறிந்து குறுஞ்செய்தி மூலம் விசாரித்து தெரிந்துக் கொண்ட மயூரன் மதியம் வந்துவிடுவதாக தகவல் சொல்லியிருந்ததால் அவனுக்கும் சேர்த்து சமைக்கலாம் என்று முடிவுக்கு வந்து, வேகமாக ஒருபக்கம் அரிசி களைந்து அடுப்பில் வைத்தவன், இன்னொருபக்கம் பருப்பை வைத்தப்படியே காய்கறிகள் அறிந்து சாம்பாரை வைத்து முடித்தான். 

குளிர்சாதன பெட்டியில் முட்டை வாங்கி வைத்திருப்பதை பார்த்தவன், ஆம்லெட் போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவோடு குளித்து முடித்து வந்தவன் உடை மாற்றும் போது அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு வந்து கதவை திறக்க,

“டேய் நவிர்,” என்று சொல்லியப்படியே மயூரன் அவனை அணைத்துக் கொண்டான்.

இருவரும் உள்ளே நுழைந்ததும், “சாரி டா, நீ வர நேரத்துக்கு என்னால இங்க இருக்க முடியல,” என்று சோஃபாவில் அமர்ந்தப்படி  மயூரன் சொல்ல,

“ஹே எதுக்கு இதுக்கெல்லாம் சாரி, உன்னோட சிட்டுவேஷன் அப்படி இருந்தா என்ன செய்றது? பரவாயில்லை விடுடா,” என்று அவனுக்கு எதிரில் அமர்ந்த நவிரனும் பதில் கூறினான்.

“இருந்தாலும் நீ சென்னைக்கு புதுசு, நீ வர நேரம் நான் இங்க இருந்திருக்கணும், முடியாம போச்சு,” என்று மயூரன் தன் வருத்தத்தை தெரிவிக்க,

“நீ இல்லன்னாலும் உன்னோட ரிலேடிவ் நல்லப்படியா என்னை கொண்டு வந்து உன்னோட வீட்டில் விட்டுட்டு போயிட்டாங்களே, நீதான் அவங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்திருக்கீயே அப்புறம் என்னடா?” என்று கேட்ட நவிரனுக்கோ, கடைசியாக அவர்களை கஷ்டப்படுத்தி அனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது.

“என்னடா இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்தேன், உன்னோட பேர், டீடெயில்ஸ் மட்டும் தான் புவிக்கு மெசேஜ் செஞ்சேன், உன் போட்டோ கூட கேலரில தேடி அனுப்ப டைமே கிடைக்கல, அப்புறம் வேற என்ன இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்க டைம் இருந்திருக்கும், உன்னை அவங்க கூப்பிட வந்த நேரம் வேற மீட்டிங்ல இருந்தேன், கரெக்டா உன்னை கூட்டிட்டு வந்திருப்பாங்களா? இல்ல உன்னை மிஸ் பண்ணிட்டு நீ தனியா வர மாதிரி இருக்குமான்னுல்லாம் யோசிச்சேன்,” என்று மயூரன் விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க,

அதை கேட்டவனுக்கோ, அப்போது சரியாக புனர்வி தன்னை கண்டுபிடித்து வந்தது. தனக்கு பிடித்த உணவை வரவழைத்தது இதெல்லாம் எப்படி செய்தாள்? என்ற சந்தேகம் எழுந்தது. அதை மயூரனிடம் கேட்கலாமா? என்று யோசித்தவனுக்கோ, குத்துமதிப்பாக கண்டுபிடித்திருப்பாள். சாதாரணமாக அவள் வரவழைத்தது தனக்கு பிடித்த உணவாக இருந்திருக்கலாம் என்று யோசித்து தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், அது ஒருபக்கம் கேள்விகளை வரவழைத்துக் கொண்டு தான் இருந்தது.

இதில் நண்பன் அவர்களிடம் விசாரித்து அறிந்துக் கொண்டதை சொன்ன போது, அவர்களிடம் கடைசியாக நடந்துக் கொண்டதை பற்றி இவனிடம் சொல்லியிருப்பார்களா? என்று நினைத்தவனுக்கு அதை மயூரனிடம் வெளிப்படையாக கேட்க தயக்கமாக இருந்தது. இருந்தாலும் அதை தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கவே,

“மயூர், உன்னோட ரிலேடிவ், அதான் புவி, என்னைப் பத்தி என்ன சொன்னாங்க,” என்று தயங்கி தயங்கி கேட்டான்.

அவன் எதைக் கேட்கிறான் என்பது மயூரனுக்கு புரிந்து இருக்கவே, “விடுடா, உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? புவி பத்தி உன்கிட்ட முன்னமே சொல்லாதது என் தப்பு தான், திடீர்னு அவளுக்கு அப்படின்னு தெரிஞ்சதும் நீ எப்படி ரியாக்ட் செய்றதுன்னு தெரியாம அப்படி நடந்துக்கிட்டு இருப்ப,” என்று நண்பனை புரிந்தவனாக கூற,

“இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தானே டா, புவி ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்களாடா?” என்றுக் கேட்க,

“புவி சொல்லலடா, அவ சொல்லவும் மாட்டா, ராகா தான் சொன்னா,” என்று சொன்னவனோ,

“சாதாரணமாகவா சொன்னா, அடிக்காத குறையா நல்லா திட்டி தானே மெசேஜ் அனுப்பினா, போன்ல பேசும்போதே நல்லா திட்டினாளே,” என்று நினைத்தவனுக்கு தானாகவே புன்னகை அரும்பியது.

வருத்தமான விஷயம் பேசும் போது நண்பன் சிரிப்பதை பார்த்து குழம்பிய நவிரன், “ஆமாம் புவியை விட ராகா தான் அதிகமா இதுக்கு ரியாக்ட் செஞ்சாங்க,” என்று சொல்ல,

“ஆமாம்  ராகாக்கு புவியை அவ்வளவு பிடிக்கும், இதுக்கும் என்னையும் தவாவையும் அவளுக்கு சின்ன வயசிலிருந்து தெரியும், ஆனா புவியை கொஞ்ச வருஷமா தான் தெரியும், இருந்தாலும் அவங்க ரொம்ப நெருக்கமாயிட்டாங்க, அதான் அவளுக்கு கோபம் வந்திருக்கும்,” என்றான்.

“ஆமாம் மயூர்,  புவி உனக்கு எந்த வகையில் ரிலேடிவ், ராகா, தவா சின்ன வயசிலிருந்தே உனக்கு ஃப்ரண்டா, அம்மாவோட சென்னையில் செட்டிலாக போறேன்னு சொன்ன, ஆனா தனியா தங்கியிருக்க, நான் கலிஃபோர்னியா போனதிலிருந்தே நாம ரொம்ப பேசிக்கவே இல்லடா, டைம் கிடைக்கும் போது ஹாய் ஹலோ எப்படி இருக்க இதோட முடிச்சிக்குவோம்,” என்று சொல்ல,

“புவி என் அண்ணியோட தங்கச்சி டா, நீ கூட டெல்லியில் அண்ணா மேரேஜ்க்கு வந்தப்போ பார்த்திருப்ப,” என்று கூறினான்.

மதன் திருமணத்திற்கு சென்ற போது, பாவாடை தாவணியில் அழகாய் வலம் வந்த  இரண்டு, மூன்று பெண்களை ரசித்து பார்த்திருக்கிறான். புனர்வியின் இன்றைய தோற்றத்தில் அவளை முன்பு பார்த்ததாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவள் தன்னை பார்த்திருப்பாள் என்றால், அதைவைத்து தான் விமான நிலையத்தில் தன்னை அடையாளம் கண்டுக் கொண்டாளா? என்று இப்போது அவனது கேள்விக்கான விடையை அவனே தேடிக் கொண்டான்.

நவிரனின் சிந்தனை எதை சுற்றி இருக்கிறது என்பது தெரியாமல்,  மாமா நேர்மையான ஆளு, அது தான் புவிக்கு இப்படி ஒரு ஆபத்தை வரவழைச்சது,” என்று புனர்விக்கு நடந்ததை கூறிய மயூரன்,

“அப்போ நீ கலிஃபோர்னியாக்கு போன புதுசு, இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு  நாங்க யாருமே எதிர்பார்க்கல, அந்த அதிர்ச்சியில் இதை உன்கிட்ட ஷேர் செய்யவே இல்ல, அப்புறம் புவி அதில் இருந்து மீண்டு வரணும்னு அதைப்பத்தி யார்கிட்டேயும் பேசறேதில்ல,

அம்மா தான் அவளை சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, ராகாவோட அம்மாவும் தவாவோட பேரண்ட்ஸும் அம்மாக்கு நல்ல ஃப்ரண்ட்ஸ், அப்படித்தான் ராகா, தவாவை சின்ன வயசிலேயே தெரியும், அவங்க தான் புவியை இந்த அளவுக்கு மாத்தினவங்க,” என்று அவர்களை பற்றியும் கூறினான்.

“ஃபர்ஸ்ட் புவி மட்டும் எங்கக் கூட இருந்தப்போ நானும் அங்க தான் இருந்தேன், ராகா அம்மா இறந்தபிறகு ராகா தனியா இருக்கக் கூடாதுன்னு அம்மா வீட்டுக்கு கூடிட்டு வந்துட்டாங்க, அது டபுள் பெட்ரூம் ஃப்ளாட், எல்லோருக்கும் அங்க தங்க வசதிபடாது, 

புவின்னா ரிலேடிவ், ஆனா ராகாவும் இப்போ வரவே, அங்க நான் இருக்கறது நல்லா இருக்காதுன்னு அம்மாவும் நானும் ஃபீல் செஞ்சோம், எனக்கு அங்க இருந்து வேலைக்கு வரவும் ரொம்ப நேரம் ஆகும், அதான் இங்க வந்துட்டேன், அதுவும் நல்லதுக்கு தான், நான் தனியா இருக்கவே தானே உனக்கும் இங்க தங்கிக்க வசதியாச்சு, ஆமாம் ரெண்டு மாசத்துக்கு முன்ன வரை கலிஃபோர்னியாவிலேயே வேலையை நீட்டிக்கலாம்னு ஐடியான்னு சொல்லிக்கிட்டு இருந்த, இப்போ திடீர்னு சென்னையில் வந்து நிக்குற, என்னடா விஷயம்? என்றுக் கேட்க,

” ரொம்ப பசிக்குதுடா, போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா, நாம சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்,” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு நவிரன் ஆம்லெட் போட ஆயத்தமானான்.

யூரன் குளித்து முடித்து வந்ததும் இருவரும் சாப்பிட ஆரம்பிக்க, “சொல்லுடா, சாப்பிட்டு வந்து பேசலாம்னு சொன்னீயே, திடீர்னு சென்னையில் வந்து செட்டிலாக என்ன காரணம்டா?” என்று விட்டதிலிருந்து மயூரன் பேச்சை ஆரம்பிக்க,

“என்னை இங்க சென்னைக்கு வரவச்சது மின்மினி டா,” என்ற நவிரன், மின்மினியை பற்றி அனைத்தையும் கூறினான்.

“என்னடா சொல்ற யாருன்னே தெரியாத ஆளை, அதுவும் முகத்தையே பார்க்காம காதலிக்கிறீயா? இது சாத்தியமாடா? அதுவும் அவளை தேடி இத்தனை தூரம் வந்திருக்க, அதுவும் மின்மினி சென்னையில் இருப்பான்னு எப்படி கண்டுபிடிச்ச? அவளைப்பத்தி உனக்கு எப்படி தகவல் தெரிஞ்சுது,”

“அவளைப்பத்தி எனக்கு எந்த தகவலும் தெரியலடா, ஆனா அவளுக்கும் சிவசக்தி காலேஜூக்கும் சம்பந்தம் இருக்குடா,”

“என்னடா சொல்ற, சிவசக்தி காலேஜா? அதான் அந்த காலேஜ்பத்தி அன்னைக்கு என்கிட்ட போன்ல கேட்டீயா? அவ அந்த காலேஜில் தான் படிக்கிறாளா?”

“தெரியலடா, ஆனா அவளோட கவிதைக்கு அந்த காலேஜில்  ப்ரைஸ் கிடைச்சிருக்கு, அந்த காலேஜை சேர்ந்த ஒரு பெண் அந்த டீடெயில்ஸை எஃப்பில ஷேர் செஞ்சிருந்தா, ஆனா யாரோட கவிதைன்னு போடல, ஆனா அது மின்மினியோட கவிதை தான், எனக்கு நல்லா தெரியும்,”

“இதுவரைக்கும் மின்மினியை பத்தி தெரியாம இருந்ததுக்கு இது நல்ல க்ளூ டா, இதைவச்சு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்னு நினைக்கிறேன், புவி, ராகா, தவாக்கிட்ட சொன்னா கண்டிப்பா அந்த போட்டியில் கலந்துக்கிட்டவங்க லிஸ்ட் வாங்கிடலாம், கவலைப்படாத மின்மினியை சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்,”

“இங்க வர வரைக்கும் எனக்கும் அவளை கண்டுபிடிக்க முடியுமான்னு கவலை இருந்தது மயூர், ஆனா சென்னை வந்து இறங்கினதுமே மின்மினி என் பக்கத்திலேயே இருக்க மாதிரி ஒரு ஃபீல், அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எனக்கு தான் அவளைப்பத்தி ஒன்னுமே தெரியல, ஆனா அவளுக்கு நான் அவளை தான் தேடி வந்திருக்கேன் அளவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு,” என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தி, பதிவிட்ட கவிதையைப் பற்றியெல்லாம் சொன்னவன்,

“அவ என்னைப் பார்க்க ஏர்போர்ட்க்கே வந்திருப்பாளோன்னு எனக்கு தோனுதுடா, அவ என்னோட பக்கத்தில் இருந்தும் அவளை எனக்கு தெரியல, ஒருவேளை அவ சொன்னது போல அவளை கண்டிபிடிக்கவே முடியாதோ என்று வருத்தப்பட,

” நவிர், அப்படியெல்லாம் இல்லடா, அவளைப்பத்தி ஒன்னுமே தெரியாத அளவுக்கு இருந்தது, இப்போ அவ சென்னையில் இருக்கான்னு உனக்கு தெரியலையா? அதுவும் இத்தனை நாளா உன்னை தவிர்த்து வந்த மின்மினி, இப்போ தன்னை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியிருக்கான்னா என்னடா அர்த்தம்? சீக்கிரமா அவளை நீ கண்டிபிடிச்சிடுவ,

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம அம்மாவை பார்க்க போறோம், 3 பேர்க்கிட்டேயும் இது விஷயமா பேசறோம், சீக்கிரம் மின்மினி பத்தி தெரிஞ்சுக்கிறோம், சரியா?”

“என்னடா சொல்ற?”

“ஊருக்கு போறதுக்கு முன்ன அம்மாவை பார்க்கலடா, நீ இருக்கவே இப்போ நேரா இங்க வந்துட்டேன், ஞாயிற்றுக்கிழமையில் காலையில் ப்ரேக்பாஸ்ட்ல இருந்து நைட் டின்னர் வரை எப்போதும் அம்மா கையால தான், இந்த வாரம் நீயும் என்கூட வா, ஏற்கனவே புவி, ராகா அங்க தான் இருப்பாங்க, தவாவையும் வர சொல்லலாம், மின்மினி பத்தி சொல்லி விசாரிக்க சொல்வோம், என்ன சொல்ற?” என்று அவன் கேட்கவும்,

நவிரனுக்கும் அது சரியாக தோன்றினாலும், புனர்வியை நேருக்கு நேராக பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மின்மினியை நினைத்துப் பார்த்தவன், சரியென்று தலையாட்டினான்.

ஊஞ்சலாடும்..