AO 5

அன்பு 5

வனது மின்மினி இங்கு இருப்பது போல் அவன் உள்மனது சொன்ன நேரம் முகத்தை மறைத்தப்படி ஒரு பெண் வந்து தன்னை அழைக்கவும், அவள் தான் மின்மினியோ என்று நவிரனுக்கு ஒரு எண்ணம் உதிக்கவே, புனர்வியை அவன் ஆராய்ச்சியாக பார்த்தான்.

பின், அவன் தான் மின்மினியை பார்த்ததே இல்லையே, அப்படியிருக்க அவள் ஏன் அவன் முன் முகத்தை மறைத்துக் கொண்டு வரவேண்டும், அப்படியே வந்து பேசினாலே அவளை அவனால் அடையாளம் காண முடியாதே, குரலை வைத்து அடையாளம் காணவும், அவள் பேசி அவன் கேட்டதில்லையே, 

அதனால் தன் அருகில் நிற்பவள் மின்மினியாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தவன், “நீங்க,” என்று கேள்வித் தோரணையில் அவளைப் பார்த்து கேட்க,

“நான் புனர்வி, மயூரனோட ரிலேட்டிவ், உங்களை அழைச்சிட்டு போக வந்திருக்கேன்,” என்று அவள் சொல்லவும்,

“ஓ, ஹாய்,” என்றப்படி அவன் கை குலுக்கவதற்காக தன் கையை நீட்டினான்.

சில நொடிகள் யோசித்தவள், பின் அவளும் தன் கையை நீட்டி, “வெல்கம் டூ சென்னை,” என்று கை குலுக்க, ஏனோ அந்நேரம் மின்மினியின் குறுஞ்செய்தி அவனுக்கு ஞாபகம் வந்தது.

கை குலுக்கியவள் தன் கையை எடுத்துக் கொள்ளவும், அப்போது தான் அவள் கைகளில் வித்தியாசத்தை கண்டான். 

அவள் கைகளில் க்ளவுஸ் அணிந்திருக்கிறாள், விமான நிலையத்தின் உள்ளே வந்தும் முகத்தை துணியால் மறைத்திருக்கிறாள். அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்பதை போல் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த நேரம், ” ஹே புவி, ஃப்ளைட் லேண்ட் ஆச்சா? நவிரன் வந்தாச்சா?” என்றுக் கேட்டப்படி அவர்கள் அருகில் வந்த ராகமயா, 

புனர்வியின் அருகில் நின்றிருந்தவனை பார்த்து, “ஹே இவர் தான் நவிரனா?” என்று அவனுக்கு கேட்காதப்படி புனர்வியிடம் கேட்டாள்.

“ஆமாம்,” என்று அவளுக்கு பதில் கூறியவள்,

“மிஸ்டர் நவிரன், இது ராகமயா, என்னோட ஃப்ரண்ட், மயூரனுக்கும் தான்,” என்று அறிமுகப்படுத்தினாள்.

அதற்கு உடனே அவன், “ஹாய்,” என்று அவளைப் பார்த்து கை நீட்ட,

அவனை நேருக்கு நேராக பார்க்க தயங்கியப்படியே, இருந்தாலும் புனர்வி அறிமுகப்படுத்தியதால், “ஹலோ,” என்று கை குலுக்கினாள்.

“ஏன் ரெண்டுப்பேரும் இப்படி கை கொடுக்க யோசிக்கிறாங்க,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,

“சாரி மயூர் வீணா உங்களுக்கு கஷ்டம் கொடுத்துட்டான், அவன் அட்ரஸ் செண்ட் செஞ்சிருந்தா, நானே ஒரு டாக்ஸி புடிச்சு வந்திருப்பேன், என்னால உங்களுக்கு தான் சிரமம்,” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூற,

“இதில் என்ன இருக்கு நவிரன், எங்களுக்கு இதனால எந்த சிரமமும் இல்ல, உங்களை கூட்டிட்டு போக வருவதா மயூ அத்தான் சொல்லியிருந்தாங்க, ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால் அவங்களால வர முடியாம போச்சு, உங்கக்கிட்ட வரேன்னு சொல்லிட்டு இப்போ வர முடியலையேன்னு ஃபீல் செஞ்சுட்டுருப்பாங்க, அதான் நாங்க வந்தோம், 

உங்களை என்ன தூக்கிட்டா போகப் போறோம், ஜஸ்ட் கார்ல தனே  கூட்டிட்டு போகப் போறோம், நீங்க வரும் வரை நேம் போர்ட் வச்சிட்டு மொபைலை பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தேன், ப்ளைட் லேண்ட் ஆன அறிவிப்பு கேட்டதும் போர்ட் எடுத்துக்கிட்டு நின்னுட்டு இருந்தேன், ஆனா நீங்க என்னை கவனிக்கவே இல்லை, நீங்க வரும்போதே யாரையோ தேடினது போல இருந்துச்சா, ஒருவேளை மயூ அத்தானோட மெசேஜை நீங்க பார்க்காம அவங்களை தேடுறீங்களோன்னு நினைச்சு தான் உங்கக்கிட்ட வந்தேன், உங்களை டிஸ்டர்ப் செஞ்சுருந்தா சாரி,” என்று புனர்வி கூறினாள்.

” அய்யோ அப்படில்லாம் இல்ல, மயூர் மெசேஜ் இப்போ தான் பார்த்தேன், ஏதோ யோசனையோடு வந்தேனா அதான் உங்களையோ, இல்ல உங்க நேம் போர்டையோ கவனிக்கல,” என்று அவன் பதில் கூறினான்.

“சரி உங்க லக்கேஜை எடுத்துக்கிட்டு வாங்க நவிரன், கிளம்பலாம்,” என்று அவள் சொல்லவும்,

“ம்ம் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க வந்துட்றேன்,” என்றவன் பார்வை அப்போதும் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தப்படியே இருக்க, தான் கொண்டு வந்த பெட்டி மற்றும் பையை எடுக்க சென்றான்.

அவன் அப்படி சென்றதும், “ஆமாம் புவி, இவர் தான் நவிரன்னு எப்படி கரெக்டா கண்டுபிடிச்ச,” என்று  ராகமயா அவளிடம் மெதுவாக கேட்க,

“மயூ அத்தான் போட்டோ அனுப்பிச்சிருந்தாங்க ராகா,” என்று அவள் பதில் கூறினாள்.

“அப்புறம் எதுக்கு டீ நேம் போர்டெல்லாம் ரெடி பண்ண, அப்படியே கூப்பிட வந்திருக்கலாமே,” 

“அவங்களுக்கு நம்மள கண்டுப்பிடிக்க ஈஸியா இருக்குமில்ல அதான்,” என்றதும் இருவரும் அவனுக்காக காத்திருந்தனர். பின் தனது பைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் அருகே வந்தவன்,

“மிஸ் புனர்வி போகலாமா?” என்றுக் கேட்க,

“ம்ம் போகலாமே,” என்றபடி அவள் முன்னே போகவும்,

அவனைப் பார்த்து ஒரு தயக்கத்தை காட்டியப்படியே ராகமயா புனர்வியின் பின்னால் செல்ல, அவளோடு இணைந்து நடந்தப்படி,

“உங்க பேர் என்ன சொன்னீங்க? மறந்துட்டேன்,” என்று நவிரன் அவளிடம் கேட்கவும், அவள் திருதிருவென விழித்தாள்.

“என்னங்க பேர் தானே கேட்டேன், சொல்லமாட்டீங்களா?” என்று அவன் கேட்கவும்,

“ரா, க, மயா,” என்று அவள் திக்கி திக்கி கூறினாள்.

“பேர் சொல்ல எதுக்கு இப்படி தயங்குறீங்க,  உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு, ராகமயான்னா,” என்று யோசித்தவன்,

“நீங்க ராகா தானே, உங்களைப்பத்தி மயூர் சொல்லியிருக்கான்,” என்று சொல்ல

அதில் பதட்டமானவள், “புவி கொஞ்சம் நில்லுடி,” என்று அழைத்தப்படியே, புனர்வியோடு சென்று இணைந்துக் கொண்டாள்.

“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பயப்பட்றாங்க?” என்று வாய்விட்டு கேட்டப்படியே, அவனும் அவர்களோடு இணைந்தவன்,

ராகமயா புனர்விக்கு வலப்பக்கமாக வர, அவன் அவளுக்கு இடப்பக்கமாக நடந்தப்படி, “நீங்க தான் புவியா? புனர்வி ஷார்ட்டா புவி ரைட், உங்கப்பேர் கூட நல்லா இருக்கு, ஆமாம் உங்க இன்னொரு ப்ரண்ட் தவா தானே, மயூர் உங்க 3 பேர் பத்தியும் சொல்லியிருக்கான், அவங்க உங்கக் கூட வரலையா?” என்று புனர்வியிடம் கேட்டான். அவனது பேச்சில் ராகமயா கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.

இந்த மூன்று பெண்கள் மூலமாக தான் மின்மினியை தேட வேண்டும், அதனால் இப்போதே அவர்களோடு நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.

“ம்ம் அவளுக்கு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு, இல்லன்னா அவ தான் என்கூட வந்திருப்பா,” என்று அவன் கேள்விக்கு புனர்வி பதில் கூற,

“ஓ அப்படியா? அது பரவாயில்ல, இன்னொரு நாள் அவங்களை பார்த்துக்கிறேன், அப்புறம் ஒரு டவுட் கேட்கலாமா?” என்று கேட்டான்.

அதற்கு அவன் கேள்வியை எதிர்பார்த்து, அவள் அவன் முகம் பார்க்க, “இல்ல அதான் ஏர்போர்ட் உள்ள இருக்கீங்களே, எதுக்கு முகத்தை துப்படாவால் மூடியிருக்கீங்க?” என்றுக் கேட்க,

அதற்குள் அவர்கள் வெளியே வரவும், “நாம வெளிய வந்துட்டோம்னு நினைக்கிறேன், அதனால் இப்போ இந்த துப்பட்டா முகத்தில் இருக்கலாமில்ல,” என்று கேட்டவள், அவர்கள் வந்த கார் நிற்கவும்,

“போலாமா?” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

அவள் ஏதாவது காரணம் சொல்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, அவள் இப்படி எதுவும் சொல்லாததது ஒரு மாதிரி ஆகிவிட, 

“ம்ம் போலாம்,” என்று சொன்னவன், ஓட்டுனரின் உதவியோடு தன் பெட்டியையும் பையையும் கார் டிக்கியில் வைத்தவன், முன்னே ஓட்டுனருக்கு அருகில் ஏறிக் கொள்ள, பெண்கள் இருவரும் பின்னால் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.

“தவா, சீக்கிரம் இந்த புடவையை கட்டு, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துடப் போறாங்க,” என்று சௌந்தரி அவசரப்படுத்த,

“அம்மா பெண் பார்க்க வந்தாலே, இந்த புடவை தான் கட்டணும்னு ஏதாவது அவசியமா? என்ன? நான் எப்படியோ அடிக்கடி புடவை கட்டப் போறதில்ல, அப்புறம் எதுக்கும்மா புடவைக்கட்டி அவங்க முன்ன நிக்கணும், பேசாம ஒரு சுடிதார் எடுத்து போட்டுக்கவா?” என்று தவமலர் கேட்டாள்.

“அது அப்படி இல்ல தவா, என்னத்தான் எத்தனை ட்ரஸ் போட்டாலும், புடவை தான் ஒரு பெண்ணோட அழகை எடுத்துக் காட்டும், அதான் புடவைக் கட்ட சொல்றது,” என்று சௌந்தரி சொல்லவும்,

“அது அழகா இருப்பவங்களுக்கு ம்மா,” என்று அவள் சொன்னதும், 

அவள் வாயில் ஒரு அடி அடித்தவர், “உனக்கென்னடி குறைச்சல், அழகில்லையாம் அழகு, பெண்களுக்கு புடவைக் கட்டினாலே அழகு தான், அதனால் ஒழுங்கா இந்த புடவையை கட்டு,” என்று சொல்லிவிட்டு அவள் அறையிலிருந்து வெளியே வந்தவர்,

வரவேற்பறையில் நின்றப்படி, செல்லதுரை யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர், “என்னங்க, மாப்பிள்ளை வீட்டில் இருந்தா பேசினாங்க, கிளம்பிட்டாங்களா?” என்றுக் கேட்டார்.

“ஆமாம் சௌந்தரி, இப்போ தான் கிளம்பனாங்களாம், அரைமணி நேரத்தில் வந்துடுவாங்க, அதான் சரியான அட்ரஸ் கேட்டாங்க, நம்ம தவா ரெடியாகிட்டாளா?”

“அவங்க வருவதுக்குள்ள ரெடியாகிடுவாங்க,”

“சரி காபி, பலகாரமெல்லாம் ரெடி செஞ்சு வச்சிருக்க தானே,”

“அவங்க வர நேரத்துக்கு பத்து நிமிஷம் முன்ன பாலை அடுப்பில் வச்சா காபி கலந்துடலாம்ங்க,” என்றவர்,

“ஒரு முக்கியமான விஷயம்ங்க,” என்று பீடிகை போட, செல்லதுரை என்னவென்று அவரை பார்த்தார்.

“இல்லங்க, இதுவரை நம்ம தவா போட்டோவை பார்த்தே எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க, இவங்க பிடிச்சிருக்கவே தானே நேரா வராங்க, அதனால  நகை, பணம்னு கொஞ்சம் கூட கேட்டா ஒத்துக்கோங்க, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்,” எனவும்,

“சௌந்தரி, நாம சேர்த்து வச்சதெல்லாம் நம்ம பெண்ணுக்கு தான், அவங்க இவ்வளவு போடுங்க அவ்வளவு போடுங்கன்னு கேட்கவே தேவையில்லை, அவங்க கேட்காமலயே நாம நம்ம பெண்ணுக்கு செய்யத் தான் போறோம், 

ஆனா அவங்க நம்ம பெண்ணை பிடிச்சு தான் வந்து கல்யாணம் செஞ்சுக்கணுமே தவிர, அவ மூலமா கிடைக்கப் போற வரதட்சணைக்கும் சொத்துக்காகவும் இல்ல,

பெண் கருப்பா இருக்கா, அதனால அவ கல்யாணம் நடக்க கொஞ்சம் அதிகமா செஞ்சா அவ சந்தோஷமா வாழுவான்னு நினைச்சா அது தப்பு, அப்புறம் உங்க பெண்ணுக்காகன்னு சொல்லி கடைசிவரைக்கும் நம்மக்கிட்ட கேட்டுட்டே இருப்பாங்க,

சரி அப்படி கொடுத்தாலும் நம்ம மக எப்படி சந்தோஷமா இருப்பா, பணத்துக்காகவும் நகைக்காகவும் அவளை கல்யாணம் செய்துக்கிறவன், அவளை எப்படி சந்தோஷமா வச்சுப்பான், என் பெண்ணுக்கு வர மாப்பிள்ளை அவளை பிடிச்சு கல்யாணம் செய்துக்கிறவனா இருக்கணுமே தவிர, அவ கொண்டு வர சொத்துக்காக இல்ல, அதனால இப்படி அவங்க வரப்போ நாங்க எல்லாம் செய்றோம் பார்த்துக்கிறோம்னு சொல்லாம அமைதியா இரு, எனக்கு எல்லாம் தெரியும்,” என்று தீர்மானமாக கூறினார்.

“சரிங்க உங்களுக்கு எல்லாம் தெரியும், இருந்தாலும் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கணுமேன்னு தான் அப்படி பேசிட்டேன்,”

“எனக்கு புரியுது சௌந்தரி, நம்ம தவா  கருப்பா இருப்பதை தவிர அவளுக்கு என்ன குறைச்சல், அவ சொக்க தங்கம், அவளை கல்யாணம் கட்டிக்க கொடுத்து வச்சிருக்கணும், அதை புரிஞ்சவன் கண்டிப்பா நம்ம பெண்ணுக்கு கிடைப்பான், அதனால் வீணா கவலைப்படாம போய் தவா ரெடியாகிட்டாளா பாரு,” என்று சொல்லவும்,

“சரிங்க,” என்று அவரும் மகளைத் தேடிச் சென்றார்.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கார் நேராக மயூரன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தது. ஆளுக்கொரு பையை கையில் எடுத்தப்படி மின் தூக்கியில் சென்றவர்கள், மயூரனின் வீட்டை அடைந்ததும், தன்னிடம் இருந்த சாவியை வைத்து புனர்வி வீட்டை திறந்தாள்.

பின் மூவரும் உள்ளே நுழைந்ததும், “இது தான் நீங்க தங்கப் போற வீடு, மயூரன் அத்தான் நாளைக்கு வந்துடுவாங்க, அதுவரைக்கும் அட்ஜஸ்ட் செஞ்சு இருந்துக்கோங்க, இப்போ வர வழியிலேயே மதிய சாப்பாடை ஆன்லைன் மூலமா ஆர்டர் கொடுத்திட்டேன், கொஞ்ச நேரத்தில் வந்துடும்,

இதோ இதான் அத்தானோட பெட்ரூம், நீங்க ஃப்ரஷ் ஆகிட்டு வரவும் லன்ச் வரவும் சரியா இருக்கும், சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க, நைட்டுக்கும் நாளை காலைக்கும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க, அத்தான் மதியம் வந்துடுவாங்க, அவங்க சூப்பரா சமைப்பாங்க, அதுக்கு பிறகு சாப்பாடுக்கு பிரச்சனை இல்லை,” என்று சொல்லிக் கொண்டே சென்ற புனர்வி,

“உங்க ப்ரண்ட் பத்தி உங்களுக்கே தெரியுமில்ல, நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்,” என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள்.

“ஆமாம் மயூர் தானே சமைச்சு சாப்பிட்டுப்பான்னு எனக்கு தெரியும், அதேபோல கலிஃபோர்னியால  நானும் தனியா சமைச்சு சாப்பிட்டு இருந்தவன் தான், அதனால எனக்கு நைட் டின்னர்க்கும் காலை ப்ரேக்பாஸ்ட்க்கும் எந்த பிரச்சனையும் இல்ல,” என்று அவன் சொல்ல,

“வாவ் உங்களுக்கும் சமைக்க தெரியுமா? பரவாயில்ல ஆண்களெல்லாம் சூப்பரா சமைக்க தெரிஞ்சிக்கிறீங்க, உங்களை கல்யாணம் செய்துக்க போற பெண்ணுக்கு பிரச்சனையே இல்ல, ஆனா எனக்கு ராகாக்கு தவாக்கெல்லாம் தலையால தண்ணி குடிச்சாக் கூட சமையல் ரொம்பவே கஷ்டம், எங்களை கட்டிக்க போறவங்க தான் பாவம்,” என்று உதட்டை பிதுக்கி உச் கொட்டினாள்.

ஆனால் அதை தான் அவனால் பார்க்க முடியவில்லையே, “புவி, இப்போ தான் வீட்டுக்குள்ள வந்துட்டோமே, நீங்க இன்னும் ஏன் துப்பட்டாவை போட்டு முகத்தை மறைச்சிக்கிட்டு இருக்கீங்க, மயூரனோட ஃப்ரண்ட்ஸ் எனக்கும் ஃப்ரண்ட்ஸ் தான், அதனால உங்க முகத்தை காட்டலாமே,” என்றுக் கேட்டான்.

புனர்வியோ ராகமயாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவனை பார்த்தவள், “இனி இங்க தானே இருக்கப் போறீங்க, மெதுவா என்னோட முகத்தை பார்க்கலாமே,” என்று கூறினாள்.

“எங்களை பத்தி மயூர் சொன்னதா சொன்னீங்க, புவி பத்தி உங்களுக்கு தெரியாதா?” என்று ராகா கேட்டாள்.

“இல்ல நாங்க அடிக்கடி பேசிக்க டைம் கிடைப்பதில்லை, எப்பயாச்சும் தான் பேசுவோம், அடிக்கடி அவனோட பேச்சுல உங்க 3 பேரோட பேர் அடிக்கடி வரும், ஆனா உங்களைப்பத்தி டீடெயில்ஸ் சொன்னதில்லை,” என்றவன்,

“ஏன் புவிக்கு ஏதாச்சும் பிரச்சனையா?” என்று ராகாவிடம் கேட்டப்படியே புனர்வியை பார்த்தான்.

“அது அவளுக்கு, அவளோட முகம், அவளோட முகத்தில் ஆசிட் வீச்சோட பாதிப்பு இருக்கும், அதனால் தான் அவ முகத்தை மூடியிருக்கா,” என்று ராகமயா தான் கூறினாள்.

அதில் அதிர்ச்சியாக புனர்வியை அவன் பார்க்க, அவளோ முகத்திலிருந்த துப்பட்டாவை கழட்டி அவனுக்கு தன் முகத்தை காட்டவும், 

ஏனோ அவளது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாதவனாக, “நான் போய் குளிக்கப் போறேன், நீங்க அப்போ கிளம்பறீங்களா?” என்று அவர்கள் இருவரின் முகம் பார்க்காமல் அவன் கேட்டான்.

அவனது அந்த செயலில் ராகமயாவிற்கு கோபம் வரவும், “வா புவி,” என்று புனர்வியின் கையைப் பிடித்து அவளை விறுவிறுவென்று அழைத்துச் சென்றாள்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், “சௌந்தரி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க போல,” என்று செல்லதுரை வாசலுக்கு செல்ல, சௌந்தரியும் பின்னாலேயே சென்றார்.

காரிலிருந்து யோகமித்ரன் தன் தாய் தந்தையோடு இறங்கவும், “வாங்க, வாங்க” என்று இருவரும் ஒன்று சேர்ந்து வரவேற்றனர்.

பெண்ணைப் பார்க்க ஆவலோடு வந்து அமர்ந்த யோகமித்ரன் புகைப்படத்தில் பார்த்ததை விடவே நல்ல நிறமாக இருந்தான். பார்த்ததுமே செல்லதுரைக்கும் சௌந்தரிக்கும் திருப்தியாக இருந்தது.

சௌந்தரி மூவருக்கும் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, பார்க்க வேண்டிய பெண் வராததால் மூவரும் அந்த வரவேற்பறையை சுற்றி சுற்றி பார்த்தப்படி தண்ணீரை பருகினர்.

“அப்போ பெண்ணை கூட்டிட்டு வர சொல்லட்டுமா?” என்று செல்லதுரை மூவரிடமும் கேட்க, யோகமித்ரனின் பெற்றோர்கள் சரியென்றனர்.

மூவருக்கும் பலகாரத்தை எடுத்து வைத்து அந்த தட்டை தயாராக வைத்துவிட்டு, சௌந்தரி தவமலரை அழைக்கச் சென்றார்.

புடவையில் தயாராக இருந்தவளை பார்த்து திருஷ்டி கழித்தவர், அவளை வெளியே அழைத்து வந்து, அவள் கையில் பலகாரத் தட்டை கொடுக்கவும்,

“அம்மா இதெல்லாம் நீயே கொடுக்கக் கூடாதா? நான் சும்மா போய் நிற்கிறேன்,” என்று அவள் சிணுங்க,

“எடுத்துட்டு போய் கொடும்மா, நான் காபி கொடுத்துக்கிறேன்,” என்று அவர் கெஞ்சவும், வேறு வழியில்லாமல் எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள்.

அவளின் வரவை ஆர்வமாக எதிர்நோக்கிய யோகமித்ரனுக்கு அவளது முகத்தை பார்த்ததும் ஒருவித ஏமாற்றம் பரவியது.

மூன்று பேருக்கும் பலகாரத்தை கொடுத்துவிட்டு தவமலர் மூவருக்கும் ஒன்றுபோல் வணக்கம் வைத்தாள்.

“நீ படிக்கிறேன்னு சொன்னாங்க, என்னம்மா படிக்கிற,” என்று யோகமித்ரன் அன்னை கேட்கவும்,

“ஜாதகத்தோடு என்னோட டீடெயில்ஸும் இருந்துச்சே, பார்க்கலையா நீங்க,” என்று மனதில் கேட்டுக் கொண்டவள்,

“எம்.ஏ சோஷியாலஜி,” என்றாள்.

“எந்த காலேஜில் படிக்கிறம்மா,” என்று அவரே திருப்பிக் கேட்க,

“சிவசக்தி பெண்கள் கல்லூரி,” என்று அவள் பதில் கூறினாள்.

“ஏங்க கௌசல்யா அங்க தான் வேலை பார்க்கிறா இல்ல,” என்று அவர் தன் கணவரிடம் கேட்டார்.

“ஆமா அங்க தான் வேலை செய்றா,” என்று அவரும் பதில் கூறினார்.

அவர்கள் சொன்ன கௌசல்யா யாரென்பது போல் செல்லதுரையும் சௌந்தரியும் யோகமித்ரனின் பெற்றோரை கேள்வியாக பார்க்க,

“என்னோட தம்பி பெண் தான் அவ, இப்போ எங்க குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையில்லை, ஆனா அவ அங்க தான் வேலைப் பார்க்கிறான்னு கேள்விப்பட்ருக்கோம்,” என்ற யோகமித்ரனின் தந்தை,

“ஏன் ம்மா, உனக்கு கௌசல்யாவை தெரியுமா? பார்த்திருக்கியா?” என்று தவமலரிடம் கேட்டார்.

“வாழ்க்கை ஒரு வட்டம்னு இதை தான் சொல்வாங்களோ, கடைசியில் கௌசல்யா மேம் இவனுக்கு கசினா,” என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,

“ஓ கௌசல்யா மேமை எனக்கு நல்லா தெரியும்,” என்று பதில் கூறினாள்.

“ஆமாம் நீ படிக்கிறது நல்ல படிப்பா ம்மா,  நல்ல வேலை கிடைக்குமா? எங்க மித்ரன் வேலைக்கு போற பெண் தான் வேணும்னு கேட்டான், அதுக்குள்ள உன்னோட ஜாதகம் அவனுக்கு பொருந்தவும் சரி பார்க்கலாம்னு வந்தோம்,” என்று அவனது தந்தை கூறினார்.

அந்த பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லையென்றாலும் எதுவும் பேசி பெற்றோரை சங்கடத்துக்கு ஆளாக்க கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு,

“இந்த படிப்புக்கும் வேலை வாய்ப்பெல்லாம் நிறைய இருக்கு,” என்று அவர்களிடம் கூறினாள்.

“பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தை வச்சு தான் குடும்பத்தை பார்க்கணும்னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்ல தான், ஆனாலும் வேலைக்கு போற பெண் வேணும்ங்கிறது அவனோட விருப்பம், உனக்கு கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போகும் எண்ணம் இருக்குதா ம்மா, முதலிலேயே தெரிஞ்சிக்கிறது நல்லது, அதுக்கு தான் கேட்கிறேன்,” இந்த முறை அவன் அன்னை கேட்க,

“அவ படிச்சு வேலைக்கு போனப் பிறகு தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருந்தா, நான் தான் இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா தான் நல்ல வரன் கூடிவரும்னு அவங்க அப்பாக்கிட்ட சொல்லி பார்க்க ஆரம்பிச்சேன், அதனால கல்யாணத்துக்கு பிறகும் என் மக வேலைக்குப் போவா,” என்று சௌந்தரி பதில் கூறினார்.

“என்னோட மகளுக்கு வேலைக்கு போகும் எண்ணம் இருக்கு, இருந்தாலும் இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு கணவன், மனைவியா அவங்க சேர்ந்து எடுக்கும் முடிவு, முதலில் உங்களுக்கு என்னோட பெண்ணை பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க, அதுக்குப்பிறகு பேச வேண்டியதை பேசிக்கலாம்,” என்று செல்லதுரை சொல்லவும்,

“எங்களுக்கு பெண்ணை பிடிச்சதால தானே பார்க்க வந்தோம், என் பையன் விருப்பப்பட்டது போல ரெண்டு டிகிரி முடிக்கப் போறா, வேலைக்கு போகறதுக்கும் இஷ்டம், அதுவுமில்லாம இது போடுங்க, அது போடுங்கன்னு நாங்க கேட்கிறதுக்கு அவசியமே இல்ல, உங்க மக கட்டின புடவையோடு வந்தா கூட நல்லா பார்த்துக்குவோம், 

அதுக்காக நீங்க அப்படியா அனுப்பிடுவீங்க, ஒரே பெண், எல்லாம் அவளுக்கு நிறைவா செய்ய மாட்டீங்களா என்ன? அதனால எங்களுக்கு இந்த சம்பந்தத்துல பரிபூரண சம்மதம்ங்க, உங்களுக்கும் சம்மதம்னா இப்பவே நிச்சயத்துக்கு ஒரு நல்ல நாள் குறிச்சுக்குவோம்,” என்று யோகமித்ரனின் அன்னை கூறினார்.

“ரொம்ப சந்தோஷம், ஆனாலும் உங்க மகனும் அவரோட வாயால பெண்ணை பிடிக்குதுன்னு சொல்லிட்டா எங்களுக்கும் திருப்தி” என்று செல்லதுரை மீண்டும் சொல்ல,

“அவன் எங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறவன், எங்களுக்கு பிடிச்சா அவனுக்கும் பிடிச்ச மாதிரி தான், அதனால நாம மேற்கொண்டு பேசுவோம்,” என்று யோகமித்ரனின் தந்தை கூறினார்.

“இப்போ தான் ரெண்டு டிகிரி முடிச்சிருக்கணும், வேலைக்கு போகணும்னு பையனுக்கு கண்டிஷன்ஸெல்லாம் இருக்குன்னு சொன்னாங்க, இப்போ எங்க விருப்பம் தான் எங்க மகனோட விருப்பம்னு சொல்றாங்க, எங்கேயோ இடிக்குதே,” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

“நான் கொஞ்சம் பேசலாமா?” என்று கணீர் குரலில் பேச ஆரம்பித்த யோகமித்ரன்,

“எனக்கு இந்த கல்யாண பேச்சில் விருப்பம் இல்லை,” என்று கூறினான்.

“மித்ரா,” என்று அவன் அன்னை அவனை கண்டிக்கும் விதமாக கூப்பிட,” அவன் அதுதான் முடிவு என்பது போல் அமைதியாக இருந்தான்.

“ஏன் என்ன காரணம், நீங்க விருப்பப்பட்டது போல என் பெண்ணுக்கு வேலை கிடைச்சிடும், நல்ல படிப்பும் படிச்சிருக்கா, போட்டோ பார்த்து பிடிச்சு தானே வந்தீங்க, அப்புறம் என்ன?” என்று சௌந்தரி கேட்கும் போதே அவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“அதுவந்து, நான் கல்யாண செஞ்சுக்க போற பெண் நல்ல கலரா இருக்கணும், இதுவும் என்னோட கண்டிஷனில் ஒன்னு,” என்று யோகமித்ரன் சொல்ல,

“கலராவா, என்ன கலர்ல வேணும், ஆரஞ்சா, பச்சையா, வைலட்டா, எந்த கலர்னு சொல்லவே இல்லையே,” என்று தவமலர் மனதில் நினைத்துக் கொண்டாள்.

“நாங்க போட்டோ அனுப்பினோமே, அதுல உங்களுக்கு என் மக கருப்புன்னு தெரியலையா?” என்று சௌந்தரி கேட்க,

“சௌந்தரி,” என்று செல்லதுரை அவரை அடக்கினார்.

“அது வந்துங்க, என் பையன் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கான்,” என்று யோகமித்ரனின் தந்தை இழுக்க,

“இங்கப்பாருங்க உங்க  மகனுக்கு விருப்பம் இல்லன்னா மேற்கொண்டு இதைப்பத்தி பேச வேண்டாம், நீங்க கிளம்பலாம்,” என்று செல்லதுரை சொல்லவும், மூவரும் எழுந்து நிற்க,

சௌந்தரி அழுதுக் கொண்டே அறைக்குள் செல்ல, தவமலர் யோகமித்ரனை முறைத்துவிட்டு அன்னையை சாமாதானப்படுத்த உள்ளே சென்றாள்.

யோகமித்ரனும் அவள் முறைத்ததை பார்த்துவிட்டு தன் பெற்றோரோடு கிளம்பிவிட்டான்.

பெண் கருப்பு நிறம் தான், அதுக்காக அதை வைத்து திருமணம் வேண்டாமென்று சொல்கிறார்களே, அதுவும் இதுவரை புகைப்படத்தை மட்டும் பார்த்து தவமலரை மறுத்தது சௌந்தரியை பாதிக்கவில்லை, ஆனால் இப்படி நேரில் வந்து ஒருவர் அவளை நிராகரித்ததை நினைத்து அவருக்கு கவலையில் கண்ணீர் பெருக்கடிக்க,

“அய்யோ அம்மா எதுக்கு இப்போ அழற, ஆரம்பத்தில் இருந்து அவங்க பேச்சே சரியில்ல, நல்ல படிப்பா? வேலைக்கு போவீயா? இதெல்லாம் கேட்கிறாங்க, நாம டீடெயில்ஸ் எழுதிக் கொடுத்ததை பார்க்கமலா வந்திருப்பாங்க, இருந்தாலும் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்றாங்கன்னா ஒரே பெண் நிறைய சீர் செய்வோம்னு நினைச்சு தான் வந்திருக்காங்கம்மா, அதுவும் அவங்க பேச்சில் நல்லா தெரிஞ்சுது,” என்று தவமலர் சொல்லவும்,

அதைக் கேட்டப்படியே அறைக்குள் வந்த செல்லதுரையும், “தவா சொல்றது உண்மை தான் சௌந்தரி, அவங்க மகனை கூட கட்டாயப்படுத்தி தான் கூப்பிட்டு வந்திருப்பாங்கன்னு தோனுது, ஆனா அவனாவது வெளிப்படையா பேசினானே, இல்ல அவங்க அப்பா, அம்மாக்கு பயந்து நம்ம தவாவை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா, அப்புறம் நம்ம தவா வாழ்க்கையை நினைச்சு பார்த்தீயா? 

எல்லாம் கடவுளோட அருள் தான், இந்த ஒரு மாப்பிள்ளை நம்ம பெண்ணை வேண்டாம்னு சொன்னதால நம்ம பெண்ணுக்கு கல்யாணம் ஆகாதுங்கிறது போல அழுதுக்கிட்டு இருக்க, முதலில் அழறதை நிறுத்து,” என்றார்.

“எனக்கும் புரியுதுங்க, இருந்தாலும் இந்த சம்பந்தம் வீடு வரைக்கும் வரவும், எல்லாம் நல்லப்படியா நடக்கும்னு நினைச்சேன், அதான் அந்த பையன் வேண்டாம்னு சொன்னதும் என்னை மீறி அழ ஆரம்பிச்சிட்டேன்,” என்று சொன்னவருக்கு அப்போதும் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டே இருக்க,

“தவாம்மா, அம்மா கொஞ்ச நேரத்தில் அவளே சரியாகிடுவா, அவளை தனியா விடு,” என்று செல்லதுரை சொல்லவும், அவள் சரியென்று வெளியே செல்ல,

“நம்ம தவா இப்படிப்பட்ட விஷயத்தை தைரியமா எடுத்துக்கிறா, இப்படி அழுது அவளை பலவீனப்படுத்தாத சௌந்தரி, அதான் நான் சொல்லுவேன்,” என்று சொல்லி அவர் வெளியே செல்லவும், சௌந்தரியும் அதை புரிந்துக் கொண்டு, சிந்திய கண்ணீரை அழுத்தமாக புடவை முந்தானையால் துடைத்தார்.

கார் தங்கள் குடியிருப்பில் வந்து நிற்கவும், நவிரனை அழைத்து வருவதற்காக வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்த கார் என்பதால், இதுவரை பயணம் செய்ததற்கான பணத்தை புனர்வி கணக்கு பார்த்து ஓட்டுனருக்கு கொடுத்துக் கொண்டிருக்க, ராகமயாவோ நேராக வீட்டிற்குச் சென்றாள்.

சாம்பவி எங்கோ வெளியில் சென்றிருக்க, கதவு பூட்டியிருந்ததால், கைப்பையில் வைத்திருந்த சாவி வைத்து கதவை திறந்தவள் உள்ளே சென்று கோபமாக அமர,

சில நிமிடங்களிலேயே புனர்வி வரவும், “நவிரன் என்ன மாதிரி ஆள் புவி, உன்னைப் பத்தி சொன்னப்பிறகும் அவர் எப்படி நடந்துக்கிட்டாரு பாரு, அவரை போய் கூப்பிட போனோம் பாரு, எல்லாம் உன்னோட அத்தானால, நவிரன் என்ன சின்ன குழந்தையா, அவரை கூப்பிட்டு வர ஒரு ஆள் போகணுமா, உன்னோட அத்தானுக்கு அறிவே இல்லடீ,” என்று ராகமயா மயூரனை திட்ட,

“அடிப்பாவி, எதுக்கு டீ அத்தானை திட்ற, நவிரன் சென்னைக்கு புதுசு, அவர் தனியா இங்க திண்டாட கூடாதேன்னு என்னை போக சொன்னாரு, அதுக்கு ஏன் அத்தானை குத்தம் சொல்ற, 

நவிரன் மேல மட்டும் என்னடீ தப்பு இருக்கு, என்னைப்பத்தி தெரிஞ்சதும் பரிதாபமா பார்த்திருந்தா தான் எனக்கு சங்கடமா ஆகியிருக்கும், எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாரு, தெரிஞ்சதும் கண்டிப்பா அதிர்ச்சியாகியிருக்கும், அதை எப்படி வெளிக்காட்றதுன்னு கண்டிப்பா அவருக்கு அப்போ தெரிஞ்சிருக்காது, 

அதான் நாம அங்க இருந்தா நம்மளை கஷ்டப்படுத்திடுவோமோன்னு நினைச்சு சட்டுன்னு கிளம்புங்கன்னு சொல்லிட்டாரு, அப்படி அவர் சொல்லலைன்னாலும் நாம உடனே கிளம்பியிருப்போம் தானே, அதனால அதை பெருசுப் படுத்தாத, அதேபோல நம்ம மூலமா மயூ அத்தானுக்கும் இது தெரியக் கூடாது, நீ சூடா இருக்க உன்னை கூலாக்க ஏதாச்சும் சாப்பிட கொண்டு வரேன், வெயிட்,” என்றவள், முகத்தில் இருந்த துப்பட்டாவை கழட்டியப்படியே, தன் கை பையை வைக்க படுக்கயறைக்குள் நுழைந்தாள்.

புனர்வி அவ்வளவு எடுத்து சொல்லியும் ராகமயாவிற்கு மனசு கேட்கவில்லை, உடனே தனது அலைபேசியை எடுத்து ஏதோ வேகமாக எழுதினாள்.

தே நேரம் புனர்வி வரவழைத்திருந்த உணவை நவிரன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு பிடித்த உணவை புனர்வி வரவழைத்திருந்தாள். எப்படி? கண்டிப்பாக மயூரன் தான் சொல்லியிருக்க வேண்டும், கரண்டியில் சாப்பிட்டதால் கை கழுவ அவசியம் இல்லாததால், அப்படியே சோஃபாவில் சாய்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

கண்டிப்பாக அவன் நடந்துக் கொண்டது புனர்விக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும், ஆனால் அந்த நேரம் அவனுக்கு உண்மையிலேயே எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை,

கண்டிப்பாக புனர்விக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அது தெரிந்ததும் அந்த அதிர்ச்சியை மறைக்கவும் தெரியவில்லை,

சிறிய வயதிலிருந்தே நிறைய விஷயங்கள் அவனுக்கு அலர்ஜி, பல்லி, கரப்பான், பாம்பு என்று எதைப் பார்த்தாலும் பயம் என்பதை விட அவனுக்கு ஒரு மாதிரி அருவருப்பு தான் உண்டாகும்,

ரத்தத்தை பார்த்தாலும், இறந்தவர்களை ஊர்வலமாக கொண்டு செல்வதை பார்த்தாலும், முகம் கோரமாக இருப்பவர்களை பார்த்தாலும் அடுத்து அவர்களை திரும்ப பார்க்கக் கூடாது என்பது போல் எண்ணம் தான் அவனுக்கு எழும், அது தவறான விஷயம் என்று அவன் புத்திக்கு தெரிந்தாலும், ஏனோ அந்த நேரம் தன்னை மீறி அந்த உணர்வுக்கு ஆளாகிவிடுவான்.

சின்ன வயதில் பூச்சி, புழுவை பார்த்து அருவருத்ததெல்லாம் இப்போது இல்லை, அதேபோல் அன்னை, தந்தையின் இறப்பை பார்த்து ஏதாவது இறுதி ஊர்வலத்தை பார்த்தால், அவனுக்கு இப்போது ஏதும் தோன்றுவதில்லை, மனமார அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென நினைத்துக் கொள்வான்.

ஆனால் விபத்தையோ, ரத்தத்தையோ பார்த்தாலோ, இல்லை புனர்வி போல் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தாலோ ஏற்படும் ஒருவித உணர்வு இன்னும் கூட அவனுக்கு மாறாமல் இருக்கிறது. இதுவரை அப்படிப்பட்ட மனிதர்களோடு அதிகம் பழகும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை, ஆனால் மயூரனின் உறவான புனர்வியிடம் அப்படி இருக்க முடியுமா? அவனுக்கு புரியவில்லை, அந்த சிந்தனையை மாற்றவென தன் அலைபேசியை எடுத்தான்.

விமான நிலையத்தில் மின்மினி அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்கு அப்போதே தன் பைகளை எடுக்க போகும்போது, “நீ இங்க தான் இருக்கீயா?” என்று பதில் செய்தி அனுப்பியிருந்தான்.

அதற்கு ஏதாவது பதில் வந்ததா? என்று அவ்வப்போது அவன் பார்வையிட்டு கொண்டு தான் இருந்தான். ஆனால் பதிலேதும் அவள் அனுப்பவில்லை, இப்போதும் அவள் பதில் செய்தி அனுப்பியிருக்கிறாளா? என்று அவன் பார்வையிட, அவள் அதை பார்த்து மட்டும் இருக்கிறாள். ஆனால் பதில் அனுப்பவில்லை. ஆனால் அதற்கு பதில் அவளது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தாள். அவனும் அங்கு சென்று பார்க்க, 

நீ தேடிவந்த பொருள் உன் கைக்கு அருகில் வந்தும் அதை தவற விட்டதேனோ?? என்று அவள் பதிவிட்டிருக்க, அதற்கான அர்த்தம் என்ன? அப்போது மின்மினி அங்கு தான் இருந்திருக்கிறாள். ஆனால் அவன் தான் அவளை அறிந்துக் கொள்ளவில்லை. அதுதானே அர்த்தம்.

ஊஞ்சலாடும்..