AO 14

அன்பு 14

மூவரும் மருத்துவமனைக்குள் நுழைந்து தீவிர சிகிச்சை பிரிவு எங்கு இருக்கிறது என்பதை விசாரித்து அங்கே சென்றால், தனாவிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே ஒருபுறம் கௌசல்யாவும் யோகமித்ரனும் அமர்ந்திருக்க, இன்னொருபுறம் தனசேகரின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்.

மூவரும் கௌசல்யாவின் அருகே சென்றதும் புனர்வி அவளின் தோளைப் பற்றி “மேம்” என்று ஆதரவாக கூப்பிடவும்,

“புவி” என்று அவளை இடுப்போடு அணைத்தப்படி கௌசல்யா கதறினாள்.

ராகமயாவும் தவமலரும் கூட கௌசல்யாவை அணைத்தது போல, “அழாதீங்க மேம், சார்க்கு ஒன்னும் ஆகாது, நல்லப்படியா வருவார்.” என்று தேற்றினார்கள்.

“டாக்டர் என்ன சொல்றாங்க,” என்று யோகமித்ரனுக்கு அருகில் நின்றிருந்ததால் தவமலர் அவனிடம் கேட்க,

“இன்னும் எதுவும் சொல்லல, டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்காங்க, வந்து சொன்னா தான் தெரியும்,” என்று பதில் கூறினான்.

“எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சு யோகன், உங்களுக்கெல்லாம் எப்படி தெரியும்? யார் தகவல் சொன்னது?” என்று இப்போது புனர்வி கேட்டாள்.

“லாரில மோதி தூக்கி அடிச்சிருக்கு போல, தனாவோட ஐடி கார்ட்ல இருந்த டீடெயில்ஸ் வச்சு ஆஃபிஸ்ல சொல்லி, அப்புறம் அவங்க மூலமா வீட்டு அட்ரஸ் கண்டுப்பிடுச்சு வீட்டில் வந்து தான் தகவல் சொல்லியிருக்காங்க, மொபைல் போனெல்லாம் விழுந்த இடத்திலேயே சிதறிப் போயிடுச்சு, இன்னைக்கு கௌசி காலேஜ் லீவ்னு வீட்டில் இருந்ததால, அவங்க தகவல் சொல்லவும் எனக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிட்டு தனா அப்பா, அம்மாவை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல் வந்தா, நானும் உடனே கிளம்பி வந்துட்டேன். எப்படி ஆக்ஸிடெண்ட் நடந்தது, யார் மேல தப்பு? இதெல்லாம் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க, நாங்க வந்ததிலிருந்து தனாக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டுருக்கு, இன்னும் யாரையும் தனாவை பார்க்க விடல,” என்று தனக்கு தெரிந்த தகவல்களை கூறியவன், அவர்கள் மூவரும் கௌசல்யாவோடு அமரட்டும் என்று நினைத்தவனாக தள்ளிச் சென்று அமர்ந்தான்.

மூவருமே கௌசல்யாவிற்கு ஆறுதல் கூறியப்படி அமர்ந்திருக்க, அரைமணி நேரம் கடந்து மருத்துவர் வெளியே வந்தார்.

“என்னோட மகன் எப்படி இருக்கான் டாக்டர்,” என்று தனசேகரின் பெற்றோர் கேட்டுக் கொண்டு அவர் அருகில் வர, கௌசல்யாவோடு இவர்களுமே மருத்துவர் என்ன சொல்ல போகிறார்? என்று தெரிந்துக் கொள்வதற்காக தவிப்போடு நின்றிருந்தனர்.

“ஹெல்மெட் போட்ருந்ததால தலையில் பெருசா எந்த பாதிப்பும் இல்ல, மத்தப்படி உடம்பு முழுக்க பயங்கரமா அடிப்பட்டிருக்கு, உயிருக்கு எந்த பிரச்சனையுமில்ல, சின்னதா ரெண்டு மூனு ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கு, ஏற்கனவே ஆக்ஸ்டெண்ட்ல நிறைய ரத்தம் போயிடுச்சு, அதனால ஆபரேஷன் அப்போ அவருக்கு ரத்தம் ஏத்த வேண்டியிருக்கும் ஏற்பாடு செய்துடுங்க,” என்று சொல்லி தனாவின் ரத்தப்பிரிவை சொல்லவும்,

யோகமித்ரன் ரத்ததிற்கான ஏற்பாடு குறித்து யோசிக்க, “டாக்டர் என்னோட ப்ள்ட் க்ரூப்பும் அதான், நான் அவருக்கு ரத்தம் கொடுக்கிறேன்.” என்று புனர்வி முன் வந்தாள்.

“அப்போ நீங்க என்னோட வாங்க,” என்று மருத்துவர் அவளை அழைத்து செல்ல, அவளுக்கு உதவியாக ராகமயா சென்றாள்.

தவமலர் கௌசல்யாவுடன் இருக்க, தனசேகரின் பெற்றோரை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு யோகமித்ரன் அவன் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்து இரு கைகளாலும் தலையை தாங்கியப்படி இருந்தான்.

மூவரும் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் கௌசல்யாவை தனசேகரின் அன்னை மோசமாக பேசியிருந்தார். “என் பையன் உன்னை காதலிச்சான், கல்யாணம் செய்ய ஆசைப்பட்டான்னு ஒரே காரணத்துக்காக ஜாதகம் பார்க்காம கல்யாணம் செய்து வைத்தோமே, இப்போ இவனுக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலையே, எல்லாம் உன்னோட ராசியால தான், கல்யாணம் ஆகி முழுசா ஒரு மாசம் கூட முடியல, அதுக்குள்ள இப்படி என் பையனை படுக்க வச்சிட்ட, அவன் நல்லப்படியா திரும்பி வரணுமே? ஒரு நிமிஷம் கூட இங்க நிக்காத, ஒழுங்கு மரியாதையா வெளிய போயிடு.” என்று அவர் பேச,

இதுவே வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால், அவர்கள் பேசிய அந்த நொடியே தங்கையை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் அதை செய்ய முடியாமல்,

“இங்கப்பாருங்க இது ஹாஸ்பிட்டல், கொஞ்சம் அமைதியா இருங்க,” என்று சொல்லிவிட்டு கௌசல்யாவை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்துவிட்டு அவனும் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

இப்படித்தானே அன்று இல்லத்தின் வாசலில் வைத்து புனர்வியையும் பேசினார். இன்று அவசர தேவை என்று அவள் தானே ரத்தம் கொடுக்க முன் வந்தாள். இப்போதும் அவளை பேச வேண்டியது தானே? முடியுமா? அன்று அப்படி நடந்துக் கொண்டும், இன்று அவள் தானாக வந்து ரத்தம் கொடுக்க விரும்பும் அவளின் நல்ல மனதை இவர்கள் புரிந்துக் கொள்பவர்களா?  என்ற விரக்தியில் அவன் அமர்ந்திருக்க, கௌசல்யாவை ஆதரவாக பிடித்தப்படி அமர்ந்திருந்தாலும் தவமலர் யோகமித்ரனை பார்த்தப்படி இருந்தாள்.

கௌசல்யாவிற்கு தன் மாமியார் பேசியதெல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, முதலில் தனசேகர் நல்லப்படியாக பிழைத்து வர வேண்டும் என்பது தான் அவளின் கவலையாக இருந்தது.

கல்லூரியிலிருந்தே அவனை காதலிக்கிறாள். அவன் குணம் ஒன்றும் அவள் அறியாதவள் இல்லை, அவள் அழகுக்கு தான் அவன் முக்கியத்துவம் அளிப்பான் என்பதை இத்தனை வருடமாக பழகியதில் அவள் புரிந்துக் கொண்டாள். ஆனால் அழகு தான் முக்கியம் என்பதால் பார்க்கும் அழகான பெண்களிடமெல்லாம் அவன் மனம் அலைபாய்ந்ததில்லையே? அழகான பெண் தனக்கு மனைவியாக வர வேண்டுமென்று நினைத்தான். இவள் அவன் எதிர்பார்த்தது போல் இருக்கவும், அவளை துரத்தி துரத்தி காதலித்தான். ஒரே பிடியாக இருந்து அவளையே தானே மணந்தான்.

இதற்கும் இவளின் பெற்றோர்கள் பற்றி அறிந்தும் அவளை புரிந்துக் கொண்டு காத்திருந்து தானே இவளை மணம் புரிந்தான். திருமணத்திற்கு பிறகு தன் சம்பள பணத்தை தன் பெற்றோரிடம் கொடுக்க போவதாக சொன்ன போது கூட சரியென்று தானே சம்மதித்தான். திருமணம் முடிந்து இவள் வீட்டிற்கு போகும்போது அவளை பெற்றவர்கள் சாபம் அளித்த போது வேதனையில் இருந்தவளை, “ஏற்கனவே அவங்க குணம் தான் தெரியுமே, இதை எதிர்பார்த்து தானே அங்க போனோம், அப்புறம் எதுக்கு வருத்தப்பட்ற?” என்று ஆறுதல் வார்த்தைகள் பேசினானே,

அப்படிப்பட்டவன் அன்று இல்லத்தில் அனைவரின் மனதும் புண்படும்படி பேசினது இவளுக்கே அதிர்ச்சி தான், ஆனால் ஒருவேளை முன்பே புனர்வி எங்கு போகிறோம் என்று சொல்லியிருந்தால் அவனும் வேறு ஏதாவது காரணம் சொல்லி மறுத்திருப்பானோ என்னவோ? ஆனால் எதுவும் சொல்லாமல் அழைத்து சென்றதால், தனக்கு பிடிக்காததை செய்ததால் அவர்களிடமும் தன்னிடமும் கோபத்தை காட்டிவிட்டான் என்று நினைத்து அப்போது அவள் மனதை தேற்றிக் கொண்டாள்.

அவளுக்கு கருத்து தெரிந்ததிலிருந்தே அவளின் பெற்றோர்களும் சரி, யோகனின் பெற்றோர்களும் சரி பணத்தை எப்படி பெருக்குவது என்ற ஒன்றை மட்டும் தான் சிந்திப்பர். பிள்ளைகளெல்லாம் இரண்டாம்பட்சம் தான், அப்போது கூட்டுக் குடும்பமாக இருந்ததால், இருவரின் பெற்றோரும் ஒன்றுபோல் என்பதால், அண்ணன் தங்கையாக இவளும் யோகமித்ரனும் ஒருவருக்கொருவர் பாசத்தோடு அடுத்தவருக்கு ஆறுதலாக இருந்தனர். அடுத்து இரு குடும்பமும் பிரிந்த வேளையில் யோகமித்ரனுமே படிப்பு வேலை என்று அதில் அவன் கவனத்தை வைக்க, தனிமையை உணர்ந்த அவளுக்கு அப்போது தன் பின்னால் சுற்றி திரிந்த தனசேகரின் மேல் காதல் உண்டானதில் என்ன தவறு?

குறையில்லாத மனிதன் இருக்கவே முடியாது, தனசேகரும் தன்னைப் பற்றியே நினைத்து வாழும் குறுகிய மனம் கொண்டவனாக இருக்கிறான். அப்படி வளர்க்கப்பட்டான். அதை தெரிந்து காதலித்த இவள் அதை ஏற்றுக் கொள்ளவும் பழகிக் கொண்டாள். அவனுக்கு அவள் மீது உண்மையான அன்பு இருக்கிறதா? தெரியாது. ஆனால் தனசேகரின் மீது அவள் உண்மையான அன்பு வைத்திருக்கிறாள். அதனால் அவன் நல்லப்படியாக தனக்கு திரும்ப கிடைக்க வேண்டுமென்பது மட்டுமே அவளது பெரிய வேண்டுதலாக இருந்தது.

ஏற்கனவே அவள் வேதனையில் இருக்க, இந்தநேரம் அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பெற்றோர்களோ கடமையே என்று மருத்துவமனைக்கு வந்தனர். அப்படியே நின்றுவிட்டு சென்றால் கூட அங்கு யாருக்கும் அது பெரியதாக தெரியாது. ஆனால் அதைவிடுத்து,

“பெத்தவங்க வயிறையும் மனசையும் எரிய வச்சிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டியே? நடந்ததைப் பார்த்தியா? எங்க பேச்சை கேட்டிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்று அடிப்பட்ட மனதில் இன்னும் காயத்தை கௌசல்யாவின் அன்னை ஏற்படுத்த,

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தனசேகரின் அன்னையோ, “உங்க மக உங்கப் பேச்சை கேட்டிருந்தா, இன்னைக்கு என் மகன் இப்படி படுத்திருப்பானா? உங்க மகளோட ராசி தான் இப்படி அவனை ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்திருக்கு, இது தெரிஞ்சு தான் அவளுக்கு கல்யாணம் செய்யாம கூட வச்சிருந்திங்களா?” என்று பேசினார்.

“உங்க பையன் செத்து போனா தாலி அறுத்துட்டு நிக்க போறது எங்க மக தான், இவளோட ராசி நல்ல ராசி தான், உங்க மகனோட ராசி தான் இவ தாலியை பறிக்க பார்க்குதோ என்னவோ?” என்று கௌசல்யாவின் அன்னையும் பதிலுக்கு பேச,

இவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே புனர்வியும் ராகமயாவும் அங்கு வந்திருக்க, என்ன இப்படி பேசுகிறார்கள்? என்று தான் மூவருக்கும் நினைக்க தோன்றியது.

கொஞ்சம் கொஞ்சமாக அழுகை குறைந்திருந்த கௌசல்யாவிற்கு மாமியாரின் பேச்சுக் கூட அத்தனை பாதிக்கவில்லை, ஆனால் தன் அன்னை பேசியது மனதிற்கு கஷ்டமாக இருக்க, சத்தமாக அழுதாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யோகமித்ரனுக்கு கோபம் அதிகமாக, “நீங்க இப்போ வந்து பார்க்கலன்னு யார் கேட்டா? எதுக்கு இப்போ வந்தீங்க? உங்களுக்கு முதலில் மனசுன்னு ஒன்னு இருக்கா? அதை எரிய வச்சுட்டாங்களாம், மனசாட்சி இருந்தா கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகாத நேரம் பெத்த பெண்ணோட தாலி அறுக்கறதை பத்தி பேசுவாங்களா? அவ வாழணும்னு நினைச்சா இந்தப்பேச்சு வருமா? அவ நல்லா இருக்கமாட்டான்னு சாபம் விட்டு அனுப்பிச்சவங்க தானே நீங்க,  இதுக்கு மேல நின்னீங்க, நான் என்ன செய்வேன்னே தெரியாது.” என்று தன் சித்தப்பா, சித்தியிடம் கத்தினான்.

“எல்லாத்துக்கும் காரணம் நீதான் டா, அதான் உங்க உறவு வேண்டாம்னு ஒதுங்கிட்டோமே, எதுக்கு டா ஒட்டிக்க வர, அமைதியா எங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்துட்டு பேசாம இருந்த பெண்ணை தூண்டிவிட்டு அவளுக்கு கல்யாணம் செய்து வச்சியே? இப்போ அவ எந்த நிலைமையில் இருக்கா பாரு. வேணும்னே எங்களை சீரழிக்க தான் அண்ணன்னு உறவுக் கொண்டாடிக்கிட்டு வந்தியா?” என்று கௌசல்யாவின் அன்னை அவனையும் மோசமாக பேச, அதை ஆமோதிப்பது போல் கௌசல்யாவின் தந்தை நின்றிருந்தார்.

“உங்கக்கிட்டல்லாம் மனுஷன் பேசுவானா?” என்று சொல்லிவிட்டு யோகமித்ரன் வெளியே சென்றுவிட, அவர்களுமே அடுத்து அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இதெல்லாம் கேட்டு கௌசல்யாவின் அழுகை இன்னும் அதிகமாகி கொண்டே போக, “அழாதீங்க மேம், அவங்க பேசறதை பெருசா எடுத்துக்காதீங்க,” என்று புனர்வியும் ராகமயாவும் அவளை தேற்றிக் கொண்டிருக்க, தவமலரோ யோகமித்ரனை தேடிச் சென்றாள்.

அப்போது தான் இருட்ட ஆரம்பித்திருக்க அந்த மருத்தவமனையின் முகப்பில் சிறு பூங்கா போல் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் யோகமித்ரன் நின்றிருந்தான். அவள் வருகையை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தவன், “கௌசி இன்னும் அழறாளா?” என்றுக் கேட்டான்.

“ம்ம் ஆமாம்.” என்று அவள் பதில் கூற,

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மலர். தனாக்கு ஒன்னும் ஆகாதில்ல?” என்று அவளிடம் கேட்க,

“அதான் டாக்டர் உயிருக்கு ஆபத்தில்லன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் என்ன பயம்? எல்லாம் சரியாகிடும்.” என்றாள்.

“எனக்கென்னவோ தப்பு செஞ்சுட்டேனோன்னு தோனுது மலர், நீயே பார்த்தல்ல தனாவோட அம்மா கௌசியோட ராசி பத்தில்லாம் பேசறாங்க, தனாக்கு சரியாகி வந்தாலும், அந்த வீட்டில் இனி கௌசியால சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரியல, அவளுக்கு நல்லது செய்றதா நினைச்சு அவளுக்கு அநியாயம் செய்துட்டேனோன்னு மனசுக்கு தோனுது. தனாவை பத்தியும் அவனோட அப்பா, அம்மா பத்தியும் இன்னும் கொஞ்சம் நல்லா தெரிஞ்சிக்கிட்டு இந்த கல்யாணத்தை நடத்தியிருக்கலாமோன்னு தோனுது. நான் அவசரப்பட்டுட்டேனோன்னு தோனுது மலர்.”

“என்ன யோகன், நீங்களே மேம்க்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சது போல பேசறீங்க, அவங்க காதலிச்சவரை தானே அவங்களுக்கு கல்யாணம் செய்து வச்சீங்க, தனா சாரை பத்தி மேம்க்கு தெரியாமலா இருந்திருக்கும், இத்தனை வருஷமா காதலிக்கிறாங்க, அவரைப்பத்தி தெரிஞ்சு வச்சிக்காமலா இருப்பாங்க, தெரிஞ்சு தான் இருக்கும், இருந்தும் அவரை அப்படியே ஏத்துக்க அவங்க தயாரா ஆயிட்டாங்க, அவரை விட்டு அவங்க இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்கவே மாட்டாங்க, அதனால நீங்க அவசரப்பட்டுட்டதா நினைக்காதீங்க,

பெத்தவங்களை மீறி மேம் கல்யாணம் செய்துக்கிட்டது எனக்கு கூட பிடிக்காம தான் இருந்தது. ஆனா இப்போ அவங்க பேசினதை பார்த்தப்போ, அவங்க மேம்க்கு நல்லதா செஞ்சுருக்க போறாங்க, நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து பெண்ணை சீராட்டியிருப்பாங்களா? அவங்க பேசினதுக்கு நீங்க ஏன் வருத்தப்பட்றீங்க யோகன். கூடப் பிறந்த தங்கைக்கு ஒரு அண்ணன் இப்படியெல்லாம் செய்திருப்பாங்களான்னு சந்தேகம் தான், நீங்க அவங்களுக்காக கூட இருப்பதை பார்த்து நான் ரொம்பவே உங்களை உயர்வா நினைக்கிறேன். இதை மேம்க்கிட்ட கூட சொல்லியிருக்கேன்.

கடவுள் நமக்கு என்ன கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அது தான் நமக்கு கிடைக்கும், மேம்க்கும் தனா சாருக்கும் தான் முடிச்சு போட்ருக்கார். அதுக்கு உங்களை ஒரு கருவியா பயன்படுத்தியிருக்கார். அதனால நீங்க இதுக்காக ஃபீல் செய்யாதீங்க, நீங்க நல்ல மனசோட தான் மேம்க்கு கல்யாணம் செய்து வச்சீங்க, உங்க மனசுக்கும் மேம் மனசுக்கும் எல்லாம் நல்லதா தான் நடக்கும், நீங்க தான் இப்போ மேம்க்கு தைரியம் சொல்லணும், நீங்களே இப்படி இருந்தா அப்புறம் அவங்களுக்கு யார் ஆறுதல் சொல்றது? வீணா கவலைப்படாம உள்ள வாங்க,” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

னசேகருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகளெல்லாம் முடிந்தது. காலில் தான் நல்ல அடி, மூன்று இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமாகி நடக்க எப்படியோ ஆறு மாதத்திற்கு மேலே ஆகும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லவே கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகலாம் என்று மருத்துவர் கூறினார்.

அன்று இரவிலிருந்து மறுநாள் மாலை வரை தனசேகர் மயக்கத்திலேயே இருந்தான். இரவு வீட்டிற்குச் சென்ற  தோழிகள் மூவரும் மறுநாள் காலையே மருத்துவமனைக்கு வந்து கௌசல்யாவோடு அவளுக்கு ஆறுதலாக இருந்தனர். யோகமித்ரனும் அரைநாள் அலுவலகம் சென்று முக்கிய வேலைகளை முடித்துக் கொண்டு சில  நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தான்.

இந்நிலையில் தனசேகர் கண் விழிக்கவும் அங்கு அவனைப் பார்த்துக் கொண்ட நர்ஸ் வெளியே இருந்தவர்களுக்கு தகவல் கூறினாள். கௌசல்யா அவனை காணும் ஆவலில் எழுந்திருக்க, “எங்க வர? ஏற்கனவே அவனை படுக்க வச்சது போதாதா? உன்னோட திருமுகத்தை அவனுக்கு காட்டி இன்னும் அவனை என்ன செய்றதா உத்தேசம்? உள்ள வராத,” என்று அவளின் மாமியார் சொல்லிவிட்டு செல்லவும், அவள் முகம் வாட,

“முதலில் அவங்களே பார்த்துட்டு வரட்டும் மேம், என்ன இருந்தாலும் அம்மா இல்லையா? அடுத்து போய் பார்க்கலாம் வருத்தப்படாதீங்க,” என்று புனர்வி அவளை தேற்றினாள்.

உள்ளே வந்த பெற்றோரை அவன் பார்க்க, “தனா எப்படி டா இருக்க? கொஞ்சம் ஜாக்கிரதையா வண்டி ஓட்ட மாட்டீயா ராஜா, இப்போ இப்படி வந்து படுத்துருக்கியே,” என்று அன்னை அழுதது அவனுக்கு ஆறுதலை அளித்தாலும், இருவரையும் தாண்டி அவன் கண்கள் கௌசல்யாவை தேடியது.

லாரியில் மோதும் போதே அவ்வளவு தான், இனி இந்த உலகில் தனக்கு இடமில்லை என்று நினைத்தப்படியே அவன் மயக்கத்திற்கு சென்றான். இப்போது உடலில் உயிர் இருந்தாலும், மருந்துகளின் விளைவால் வலிகள் தெரியவில்லையென்றாலும் கை கால்களை அசைக்க முடியாததே தனக்கு பெரிய பிரச்சனையோ? கை போனதா? கால் போனதா? இல்லை மொத்தமாய் வாழ்நாள் முழுதும் படுத்த படுக்கையாக இருக்கும் நிலைமையா? இப்படி பல விபரீத எண்ணங்கள் மனதில் தோன்றி அவனை அலைக்கழித்தது.

உன் அழகுக்காக தான் திருமணம் செய்துக் கொண்டேன் என்று மனைவியிடம் கூறியவன் ஆயிற்றே, அதேபோல் இப்படி ஒரு நிலையில் இருக்கும் தன்னை விட்டு அவள் விலகிடுவாளோ? என்ற எண்ணமெல்லாம் கௌசல்யாவை காணாத  இந்த சில நிமிடங்களில் அவனுக்கு தோன்றியது. அவன் எண்ணங்களும் அப்படித்தானே இருந்தது. அதேபோல் அவளையும் நினைத்து பயந்தான்.

பேசவே கஷ்டமாக இருந்தும் மெதுவாக, “அம்மா கௌசல்யா எங்கம்மா?” என்று தட்டுத் தடுமாறி அவன் கேட்க,

“அவளுக்கென்ன, குத்துக்கல்லு போல வெளிய தான் உட்கார்ந்திருக்கா, நீ கண் விழிச்சதை நர்ஸ் வந்து சொன்னதும் உள்ள வர இருந்தா, நான்தான் அவளை உள்ளே வர வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்ற அவரின் பதிலில் கொஞ்சம் நிம்மதியை உணர்ந்தாலும், அவளை அன்னை வர வேண்டாம் என்று சொன்னது எதற்கு என்று புரியாமல்,

“ஏன் ம்மா?” என்று கேட்டான்.

“அவ ராசி தான் உனக்கு இப்படி ஒரு நிலை தனா, அப்பவே உங்களுக்கு ஜாதகம் பார்த்திருந்தா இப்படி ஆகியிருக்காதுல்ல, நீதான் வேண்டாம்னு சொல்லிட்ட,” என்று அவர் குறைபட,

ஜாதகம் அது இது என்று பார்த்து அதில் ஏதாவது பிரச்சனை என்று அதனால் தங்களின் திருமணம் நடக்காமல் போய்விடுமோ?  என்று தான் அதெல்லாம் வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மறுத்திருந்தான். அப்படியிருக்க இப்படி ஒரு நிலையில் அவனுக்கு கௌசல்யாவின் அருகாமை அதிகமாக தேவையிருக்க, இந்த நேரத்தில் ஜாதகமெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டா?

“அம்மா கௌசல்யாவை பார்க்கணும் வரச் சொல்லுங்க,” என்று அவன் கேட்க, அவர் ஏதோ சொல்ல வரவும்,

“இருப்பா வரச் சொல்றேன்.” என்று கூறிய அவனது தந்தை மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

வெளியே வந்ததும் கௌசல்யாவை பார்த்து, “அவனுக்கு உன்னை தான் பார்க்கணுமாம், போ.” என்று கோபமாக கூறிவிட்டு கணவரோடு சென்று அமர்ந்துக் கொண்டார்.

“போங்க மேம், போய் சாரை பாருங்க,” என்று மூன்று பேரும் கூறி அவளை அனுப்பி வைத்தனர்.

உள்ளே சென்று மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் படுத்திருந்தவனை பார்த்து கண்ணீர் சிந்தியவள், “தனா,” என்று கூறியப்படியே அவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “எனக்கு உடம்பை அசைக்க கூட முடியல, ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்று அவனால் பேச முடியாமல் பொறுமையாக கேட்க,

“உடம்புல நிறைய அடிப்பட்டிருக்கு தனா, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு, மத்தப்படி பயப்பட ஒன்னுமில்ல, ஏதோ சின்ன சின்ன ஆபரேஷன் செஞ்சாங்க, அதான் வலி தெரியாம இருக்க ஏதாவது ஊசி போட்ருப்பாங்க, அதில் கை கால் மறுத்து போயிருக்கும், போக போக சரியாகிடும், கடவுள் புண்ணியத்தில் பெருசா எதுவுமில்ல பயப்படாதீங்க,” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

ஆனாலும் அவள் கண்கள் கலங்கியப்படியே இருக்க, “ரொம்ப பயந்துட்டீயா?” என்று அவன் கேட்க,

அவளது அழுகை இன்னும் அதிகமாகி, “திரும்ப உங்களை இப்படி பார்ப்பேனான்னு ரொம்பவே பயந்துட்டேன். டாக்டர் சொன்னப்பிறகு தான் பயம் போச்சு,” என்றாள்.

“அம்மா வேற ஏதோ ஜாதகம் அது இதுன்னு பேசறாங்க, அதெல்லாம் நினைச்சு கவலைப்படாத,” என்று அவன் அவளுக்கு ஆறுதல் கூற,

“அவங்க பேசினது பெருசாவே நான் எடுத்துக்கல தனா, நீங்க பிழைச்சு வரணும்னு தான் என்னோட வேண்டுதலா இருந்தது, இதைப்பத்தியெல்லாம் யோசிக்காதீங்க, ஒன்னும் பிரச்சனையில்லை.” என்று அவள் சொல்லும்போதே அவன் சோர்வாக கண்களை மூட,

“தூங்குங்க தனா, நான் வெளியில் இருக்கேன்.” என்று அவள் எழுந்து வெளியில் சென்றாள்.

ரண்டு நாளில் தனசேகர் தெளிந்திருந்தான். கொஞ்சம் நன்றாக பேசவும் முடிந்தது. அதே சமயம் காயம்பட்ட இடங்களில் வலிகள் அதிகமாகவும் தெரிந்தது. இன்னும் உடலில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க தண்ணீர் ஆகாரம் கொடுக்க சொல்லி மருத்துவர் சொல்ல, கௌசல்யா கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். யோகமித்ரனும் பகல் முழுதும் அங்கேயே கௌசல்யாவிற்கு துணையாக இருந்தான். மூன்று தோழிகளுக்கும் இப்போது கல்லூரியில் விடுமுறை என்பதால் அவர்களும் காலையில் வந்து மருத்துவமனையிலேயே இருந்து மாலையில் வீடு திரும்புவர். மூன்று பெண்களும் மருத்துவமனையிலேயே இருப்பது தனசேகரின் அன்னைக்கு பிடிப்பதில்லை, அதனால் வீட்டிலேயே இருந்துக் கொண்டு மாலையில் வந்து பார்த்துவிட்டு அப்படியே இரவில் கௌசல்யாவிற்கு துணையாக அங்கு இருப்பார். தனசேகரின் தந்தையோ காலை மதியம் மனைவி செய்யும் சமையலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்வார். அதில் மகனுக்கும் மருமகளுக்கும் வேண்டிய சாப்பாடு மட்டுமே இருக்க, யோகனுக்கும் தங்களுக்கும் தவமலர் சௌந்தரியிடம் செய்ய சொல்லி கொண்டு வருவாள். 

இரண்டு முறை மயக்கத்திலிருந்து விழித்த போது மனைவியிடமும் பெற்றோரிடமும் மட்டுமே பேசிய தனசேகரை மூன்றாவது முறை தான் யோகமித்ரனும் இவர்களும் சென்று பார்த்தனர். அதற்கு முன்பே புனர்வி அவனுக்கு ரத்தக் கொடுத்ததையும், தினமும் வந்து மூவரும் தனக்கு துணையாக இருக்கிறார்கள் என்று கௌசல்யா தனசேகரிடம் சொல்லியிருந்தாள். அதனால் அவர்கள் வந்ததும் அவன் மூவருக்கும் நன்றி தெரிவிக்க, 

“விடுங்க சார், இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்வாங்களா?” என்று புனர்வி சொல்ல மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனசேகரை சாதாரண அறைக்கு மாற்றியிருக்க, சாம்பவியை அழைத்துக் கொண்டு மயூரனும் நவிரனும் அவனை பார்க்க வந்தனர். சிறிது நேரத்தில் தவமலர் செல்லதுரையையும் சௌந்தரியையும் அழைத்து வந்தாள்.

அன்று இவர்கள் அனைவரையும் அவமதிப்பது போல் நடந்துக் கொண்டது தனசேகருக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அதையெல்லாம் மனதில் வைக்கமால் இப்போது அத்தனைபேரும் தன்னை பார்க்க வந்ததை பார்த்து அவனால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. அந்த நாளின் வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் அனைவருமே அவனிடம் இன்முகத்தோடு பேசினர்.

நவிரனும் மயூரனும் அப்படியே அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்று சொல்லித்தான் சாம்பவியை அழைத்து வந்ததால், அவர் இல்லத்தில் கொஞ்சம் வேலையிருப்பதாக சொல்லி உடனே கிளம்பினார். அவருடனே செல்லதுரையும் சௌந்தரியும் கிளம்பினர். மயூரனும் நவிரனும் இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு செல்வதாக கூறியதால் அனைவரும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தனசேகருக்கு அந்த சூழ்நிலை மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை எப்படி இருக்கிறது? எவ்வளவு செலவானது? காவல்துறையின் விசாரணை எந்த அளவில் இருக்கிறது? தவறு லாரி ஓட்டுனரின் மீது என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம், தனக்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவர் இருக்கிறார். வேண்டுமென்றால் சொல்கிறேன். என்று மயூரன் யோகமித்ரனிடம் கேட்டுக் கொண்டிருக்க, அவனும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, “மித்ரன் அண்ணா, இதுவரைக்கும் ஆன ஹாஸ்பிட்டல் செலவெல்லாம் நீங்க தான் பார்த்தீங்க, நேத்து தான் இவங்க ஆஃபிஸ்ல இருந்து வந்து பார்த்துட்டு போனாங்க, இவர் போட்டிருக்கும் மெடிக்கல் இன்ஷூயுரன்ஸ் மூலமா சீக்கிரம் பணம் கிடைக்கிறது போல செய்றோம்னு சொல்லியிருக்காங்க ண்ணா,

தனாவும் இதுவரை செலவைப்பத்தி கேட்டப்போ நீங்க தான் பார்த்துக்கிட்டீங்கன்னு சொன்னேன். இன்னைக்கு சாயந்தரமே பேங்க்க்கு போய் பணம் எடுத்துட்டு வந்து உங்கக்கிட்ட கொடுக்க சொன்னார்.” என்று கௌசல்யா யோகமித்ரனிடம் விஷயத்தை சொல்ல,

“இப்போ அவசரம் என்ன கௌசி. இன்ஷூயுரன்ஸ் பணம் கிடைக்கும் போது பார்த்துக்கலாம், இப்போ நீங்க பணத்தை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல,” என்று அவன் மறுத்தான்.

“இல்ல ண்ணா, பெரியப்பா பெரியம்மாக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க,” என்று அவள் தயக்கத்தோடு சொல்ல,

“அவங்க ஏன் கோபப்படணும்? இது அவங்க பணம் இல்ல, அதைதான் செலவே செய்யாம சேர்த்து பத்திரமா வச்சிருக்காங்களே, இது நான் சம்பாதிச்ச பணம், என்னோட செலவு போக மீதி பேங்க்ல தானே இருக்கு, இப்போ அது உங்களுக்கு உதவியா இருக்குன்னா எனக்கு சந்தோஷம் தான், 

இங்கப்பாரு கௌசி, இப்போ இருக்க சூழ்நிலையில் உங்க சேவிங்ஸ் தான் உங்களுக்கு உதவியா இருக்கும், அதனால அதை நீங்களே வச்சிக்கோங்க,” என்று அவன் சொன்னதற்கு,

“இல்ல ண்ணா, உங்களுக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, ஏற்கனவே என்னோட கல்யாணத்துக்கு கொஞ்சம் செலவு செஞ்சுட்டீங்க, இப்போது இதுக்கும் செலவு செஞ்சா உங்களுக்கு கல்யாணம் ஆகி, உங்க மனைவி வந்து இத்தனை நாள் வேலைக்கு போய் இவ்வளவு தான் உங்க சேவிங்ஸான்னு கேட்டா என்ன சொல்வீங்க?” என்றுக் கேட்டாள்.

“என்னமோ நாளைக்கே கல்யாணம் ஆகறது போல பேசுற, அப்படியே கேட்டாலும் என்னோட தங்கைக்காக தான் செலவு செய்தேன்னு சொல்வேன். அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்ல, அதேபோல உனக்காக செய்தேன்னு சொன்னா என்னோட மனைவி சந்தோஷம் தான் படுவா,” என்று சொல்லியவன், தவமலரை அர்த்தத்தோடு  பார்க்க கௌசல்யா, புனர்வி, ராகமயா மூவரும் கூட அப்போது அவளை தான் பார்த்தனர்.

மூவரின் பார்வையும் தன்னிடம் இருப்பதை உணர்ந்தாலும் அதை கண்டுக் கொள்ளாதபடி நின்றிருக்க அவள் படாதபாடு பட வேண்டியிருந்தது.

அனைவரின் அக்கறையான பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தனசேகர், “நான் நடந்துக் கொண்ட முறைக்கு நீங்கல்லாம் என் முகத்தில் முழிச்சிருக்கவே கூடாது, அப்படி உங்களையெல்லாம் அவமானப்படுத்தியிருக்கேன். ஆனா யாருமே அதை பெருசா எடுத்துக்காம என்கிட்ட பழகறது தான் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு,” என்று மனதில் சிறிது நேரத்திற்கு முன் தோன்றியதை இப்போது வெளிப்படையாக சொல்ல,

“விடுங்க சார், நான் முன்னமே உங்கக்கிட்ட சொல்லிட்டு அந்த ஏற்பாடு செய்திருந்திருக்கணும், இதில் என்னோட தப்பும் இருக்கு,” என்று புனர்வி கூற,

“முடிஞ்சு போனதை எதுக்கு பேசிக்கிட்டு தனா, அதையெல்லாம் நாங்க மறந்திட்டோம், ஒருத்தரோட இன்பத்தில் கலந்துக்கறது ஒன்னும் பெரிய விஷயமில்ல, அவங்களோட துன்பத்தில் அவங்க கூட இருக்கணும், அது தான் பெரிய விஷயம்,” என்று மயூரன் கூறினான்.

“அதுமட்டுமில்லாம கௌசல்யா மேம்க்காக நாங்க அவங்க கூட எப்போதும் இருப்போம், என்ன சொல்றது எல்லோருமே இப்படின்னு சொல்ல வரல, ஆனா நண்பர்களா இருக்கக் கூட வெளிப்புறத் தோற்றத்தை வச்சு நண்பர்களை தேர்ந்தெடுக்கறவங்களை நாங்க அதிகமாகவே பார்த்திருக்கோம், என்கிட்ட பேச விரும்புற அளவுக்கு கூட புவி, தவாக்கிட்ட பேச மாட்டாங்க, ஆனா மேம் அப்படியெல்லாம் இல்லாம, எந்த பாரபட்சமும் இல்லாம எங்க 3 பேரோட சரிசமமா பேசுவாங்க, பழகுவாங்க,” அதுக்காகவே நாங்க நீங்க சொன்னதை பெருசா எடுத்துக்க மாட்டோம்.” என்று ராகமயா கூறினாள்.

“இந்த நேரத்தில் இதை பேசலாமான்னு எனக்கு தெரியல, ஆனா சொல்லணும்னு தோனியது, எங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை இருக்கு, அதான் நாங்க ஒன்னா இருக்கோம்னு சொன்னீங்க, அது ஒருவிதத்தில் உண்மை தான், பாதிக்கப்பட்டவங்களுக்கு அந்த வலி தெரியும், அதனால அவங்க ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்பாங்க தான் ஒத்துக்கிறேன். ஆனா அப்படி பாதிக்கப்பட்டா தான் மத்தவங்க வலியை புரிஞ்சிக்கணும்னு இல்ல, அடிப்படையிலேயே இரக்கம், அன்பு, பாசம் எல்லாம் இருந்தா ஒருத்தரோட வேதனையை நாம புரிஞ்சிக்க முடியும், சாம்பவி அத்தைக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா, அவங்க பாட்டுக்கு தன்னோட குடும்பத்தை மட்டும் பார்த்துட்டு போயிருந்தா இத்தனை குழந்தைகளும் என்ன கதி ஆகியிருப்பாங்க? அப்படி அவங்க நினைக்கலையே, அதுதான் இத்தனை குழந்தைகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தை கொடுத்திருக்கு, அதுக்காக எல்லாம் பொது சேவையில் ஈடுபடணும்னு சொல்லல, தன்னை சுத்தி இருக்கவங்க கிட்ட அன்பா இருந்தாலே போதும்,

ஒருவேளை இப்படி ஒரு ஆக்ஸிடெண்ட் மேம்க்கு ஆகி அவங்களுக்கு ஏதாவது பெருசா ஆகியிருந்தா கண்டிப்பா நீங்க அவளை விட்ருப்பீங்க, ஏன்னா அவங்க அழகுக்கு தான் நீங்க முக்கியத்துவம் கொடுத்தீங்க, ஆனா அவங்க அப்படி நினைக்கமாட்டாங்க, ஏன்னா அவங்க உங்க மேல அன்பு வச்சிருக்காங்க, கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் கஷ்டத்தில் கை கொடுப்பது  கடமையா இருக்கலாம், ஆனால் அதை வெறும் கடமையா மட்டுமே நினைச்சு செய்தால் அந்த கஷ்டம் இன்னும் கடினமா தான் மாறும், ஆனா அங்கேயே அன்பும் காதலும் இருந்தால் அந்த கஷ்டம் பெருசாவே தெரியாது. அதை புரிஞ்சிக்கிட்டாலே போதும், ஆனா இப்போ பெரும்பாலும் நடக்கும் கல்யாணம் அழகு, படிப்பு, வேலை இதுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தான் நடக்குது. அங்க அன்பும் காதலும் இருக்கா என்பதே சந்தேகம் தான்,” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்த தவமலரை யோகமித்ரன் ஆழ்ந்து பார்த்தான். அவளும் அதை கவனித்தாள்.

அதே நேரம் அனைவரின் பேச்சையும் கேட்டப்படி அமைதியாக இருந்த நவிரனும் புனர்வியை பார்த்தான்.

அதை காணாதது போல் இருந்த புனர்வி, “அப்படி சொல்லிட முடியாது தவா, இந்த காலம் அப்படியிருக்கு, எல்லாம் பணத்து பின்னால ஓட வேண்டியிருக்கு, அதனால அன்பையும் பாசத்தையும் யாரும் வெளிப்படையா காட்டிக்கிறதில்ல, இப்போ இந்த 25, 30 வயதில் தம்பதியரிடம் பார்க்கும் அன்புக்கும்  காதலுக்கும் இருக்க மதிப்பை விட, அவங்க 60, 70 வயதிலும் அதே காதலும் அன்பும் இருப்பது தான் பெரிய விஷயம், ஆரம்பத்தில் சண்டை போட்டாலும் ஒரு புரிதலோட அந்த வயதில் அவங்க காதல் வெளிப்படும் பாரு அது தான் சிறப்பு. இப்போ புரிஞ்சிக்காதவங்க கூட அப்போ தன்னோட கணவன் இல்ல மனைவி மேல அவங்க வச்சிருக்கும் அன்பை புரிஞ்சுக்குவாங்க,” என்று  கூறினாள்.

“இந்த சின்ன வயதிலும் எவ்வளவு பக்குவமா பேசறீங்க, அதுதான் உங்க ஸ்பெஷல்.” என்று கௌசல்யா மூவரையும் பாராட்டினாள்.

அந்த நேரம் யோகமித்ரனின் அலைபேசி ஒலியெழுப்ப, “இதோ வரேன்.” என்று அவன் எழுந்து வெளியே செல்ல,

“அப்போ நாங்களும் கிளம்பறோம்,” என்று மயூரனும் நவிரனும் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும் சில நிமிடங்கள் கழித்து, “நீங்க பேசிக்கிட்டு இருங்க வரேன்.” என்று சொல்லி தவமலர் வெளியே போக, 

“ம்ம் நடத்து நடத்து.” என்று புனர்வி கேலி செய்தாள். பின்னே முதல்நாள் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து வருத்தமாக இருந்த யோகமித்ரனுக்கு ஆறுதல் சொல்வதும், அவன் சாப்பிடவில்லையென்றால் சாப்பாடு கொண்டு சென்று கொடுப்பதும், அவன் மனைவி என்று சொல்லி தவமலரை பார்த்ததும், அனைத்தையும் மற்ற மூவரும் கவனித்துக் கொண்டு தானே இருந்தனர். இப்போதும் அவள் யோகமித்ரனிடம் பேச தான் செல்கிறாள் என்பதை அறிந்து புனர்வி அப்படி சொல்ல,

“கொன்னுருவேன்.” என்று அவளை மிரட்டிவிட்டு தவமலர் செல்லவும், கௌசல்யாவும் ராகமயாவும் சிரித்தனர். தனசேகரிடம் கௌசல்யா இதைப்பற்றி முன்பே சொல்லியிருந்ததால் அவனும் புனர்வி சொன்னதை புரிந்து சிரித்தான்.

அவர்கள் இருந்தது முதல் மாடி என்பதால் அந்த தளத்தின் முடிவில் சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டு வெளிப்புறம் பார்ப்பது போல் அமைந்திருக்க, யோகமித்ரன் அங்கு நின்று தான் அலைபேசியில் பேசினான். அவன் அலைபேசி அழைப்பை அணைத்த நேரம், அவன் அருகில் வந்த தவமலர், “தனா சார்க்கிட்ட பேசும்போது அழகான மனைவி எதிர்பார்க்கிறாங்கன்னு நான் சொன்னது உங்களை மனசுல வச்சு இல்ல, பொதுவா தான் சொன்னேன். தப்பா நினைச்சுக்காதீங்க,” என்று சொல்ல,

“அது என்னை நினைச்சு சொல்லியிருந்தாலும் தப்பில்லை மலர், நான் அப்படி நினைச்சவன் தானே, அதனால கோபப்பட மாட்டேன். நான் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை தான், ஆனால் கல்யாணம்னு வரும்போது என்னை அறியாமலேயே அந்த எதிர்பார்ப்பு வந்துடுச்சு, அழகான மனைவி கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். 

ஆனா நீ அன்னைக்கு பார்க்ல வச்சு சொல்லும்போதே நான் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். அதுமட்டுமில்லாம அப்போதிலிருந்து நீ எனக்கு ஸ்பெஷலா தெரிஞ்ச, அழகை பார்க்காதீங்க மனசை பாருங்கன்னு சொன்னல்ல, அதிலிருந்து உன்னோட மனசை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இப்போ அந்த மனசுல எனக்கு ஒரு இடம் கிடைக்குமான்னு காத்திருக்கேன். நாம் கல்யாணம் செய்துக்கலாமா? மலர்.” என்று வெளிப்படையாக தன் மனதை அவளிடம் திறக்க,

முதலில் அதிர்ச்சியில் உறைந்தவள், பின்னர், “சாரி, நீங்க வந்து பார்த்துட்டு என்னை வேண்டாம்னு சொன்னதுமே, என்னைப் போல கருப்பா இருக்க ஒருத்தரை தான் நான் கல்யாணம் செய்துக்கணும்னு முடிவு செய்துட்டேன்.” என்று பதில் கூறினாள்.

“எனக்காக உன்னோட முடிவை மாத்திக்க கூடாதா மலர், வெள்ளையா பிறந்தது என்னோட குத்தமா? வெள்ளை ஒன்னும் நோய் கிடையாதே,” என்று அவன் பதில் கூற,

“என்னோட டயலாக் எனக்கேவா?” என்று அவனை முறைத்தவள்,

“இங்கபாருங்க, உங்க அப்பா, அம்மாவோட எண்ணம் எனக்கு சரிப்பட்டு வராது. கௌசல்யா மேம் இப்படி ஒரு அப்பா, அம்மாக்கிட்ட இருந்து வெளியில் வந்துட்டாங்க, ஆனா நான் அந்த வீட்டுக்கு மருமகளா வரணும், அது சரிப்படாது.” என்று பதில் கூறினாள்.

“கல்யாணத்துக்கு பிறகு அவங்கக் கூட இருக்க வேண்டாம், தனியா இருக்கலாம்.” என்று அவன் சொல்ல,

“ஹலோ என்னை என்ன நினைச்சீங்க? அப்பா, அம்மாக்கிட்ட இருந்து பிள்ளையை பிரிச்சு கூட்டிட்டு போற பெண் போல தெரியுதா?” என்று கோபப்பட்டாள்.

“நான் சொல்றது அந்த அர்த்தமில்ல, அப்படி தனியா போனாலாவது புரிஞ்சுப்பாங்களான்னு தான் அப்படி சொன்னேன். சரி அவங்க நினைக்கிறது போல இல்லாம உன்கிட்ட இருந்து ஒரு பைசா வரதட்சணை வாங்கிக்காம உன்னை கல்யாணம் செய்ய நான் தயாரா இருக்கேன். அவங்களை கன்வின்ஸ் செய்து கூட்டிட்டு வந்து உன்னோட  அப்பா, அம்மாக்கிட்ட பெண் கேட்க சொல்றேன். உனக்கு சம்மதமா?” என்று கேட்க,

“எனக்கு இதுக்கு உடனே பதில் சொல்ல தெரியல, நான் கொஞ்சம் யோசிக்கணும்,” என்றவள், அங்கிருந்து செல்ல,

“யோசிச்சு என்னை கல்யாணம் செய்ய சம்மதம்னு பதில் சொல்வேன்னு எதிர்பார்க்கிறேன்.” என்று அவன் அவள் முதுகை பார்த்து சொல்ல, அவள் புன்னகையோடு சென்றதை அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவள் தனக்கு சாதகமான பதில் கூறுவாள். என்று நம்பிக்கை கொண்டான்.

ஊஞ்சலாடும்..