AO 12

அன்பு 12

கௌசல்யாவின் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்திருந்தது. அன்று ராகமயாவிற்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லாததால் கல்லூரிக்கு வரவில்லை, பொதுவாக மூவரில் ஒருவர் விடுப்பு எடுக்கும் சூழ்நிலை வந்தாலும் மூவரும் சேர்த்தே விடுப்பு எடுத்துக் கொள்வர். ஆனால் செம்ஸ்டர் தேர்வு நெருங்கிவிட்டதால், கல்லூரிக்கு வர வேண்டிய கட்டாயம், அதுவுமில்லாமல் ராகமயா இல்லாத நேரமாக பார்த்து புனர்வியிடம் பேச வேண்டுமென்று தவமலர் நினைத்திருந்தாள். அதற்கு இதுதான் தக்க சமயம் என்பதால், மற்ற இருவருமே கல்லூரிக்கு வந்தனர்.

வழக்கமாக அமரும் மரத்தடிக்கு இருவரும் சென்றுக் கொண்டிருக்க, “ஹே புவி, கௌசல்யா மேம் இன்னைக்கு காலேஜூக்கு வந்தாங்களான்னு தெரியலையே, அவங்களுக்கு போன் போட்டு பேசலாம்னு பார்த்தாலும், அவங்க ஹஸ்பண்ட் என்ன சொல்வாரோ, மேம் எப்படி இருக்காங்க? அவங்க வீட்டில் என்ன சொன்னாங்க? நாம செஞ்ச காரியத்தால ஏதாவது பிரச்சனை ஆச்சா? இப்படி எதுவுமே தெரிஞ்சிக்க முடியலையே? மேம் எப்போ காலேஜ் வருவாங்கன்னு தெரியலையே, காலேஜில் யாரைக் கேட்டா தெரியும்?” என்று தவமலர் கேட்க,

“நேத்து தான் யோகன்க்கு போன் போட்டு கேட்டேன். மேம்க்கு ஒன்னும் பிரச்சனையில்லை, நல்லா தான் இருக்காங்களாம், அவங்க ஹனிமூன் போயிருக்காங்க, அதனால அவங்க காலேஜூக்கு வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.” என்று புனர்வி பதில் கூறினாள்.

“ஆமாம் யோகன் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?

” அன்னைக்கு இல்லத்துக்கு போனோமே? அப்போ தான் வாங்கினேன்.”

“மேம் அப்பா, அம்மா என்ன சொன்னாங்களாம்?”

“ம்ம் என்ன சொல்லியிருப்பாங்க, சாபத்தை அள்ளி வழங்கினாங்களாம், மேம் அழுதுக்கிட்டே போயிட்டாங்களாம்,”

“மேம் பாவமில்ல புவி, நாம வேற நம்ம பங்குக்கு மேமை வருத்தப்பட வச்சு அனுப்பினோம், அவங்க அம்மா, அப்பாவும் அழ வச்சு அனுப்பியிருக்காங்க, கல்யாணம் நடந்த அன்னைக்கே இவ்வளவு மனக்கஷ்டம், இதில் அவங்க ஹஸ்பண்ட் என்ன செஞ்சாரோ தெரியலையே?”

“சாம்பவி அத்தை சொன்னது போலத்தான், அவர் எதிர்பார்த்தது போல அழகான மனைவி கிடைச்சிருக்காங்க, அதனால இந்த விஷயங்களை பெருசு படுத்தாம மேமை அன்பா தான் கவனிச்சிக்கிறார். ஒன்னும் பிரச்சனையில்லைன்னு தான் யோகன் சொன்னாங்க, அதேபோல மேமோட அப்பா, அம்மாவும் இப்பவே இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டா எங்க ஏதாவது செலவு வந்துடுமோன்னு கொஞ்ச நாளுக்கு சீன் போடுவாங்க, அப்புறம் சரியாகிடுவாங்கன்னு யோகன் சொன்னாங்க, இப்போதைக்கு மேம்க்கு பெருசா எந்த பிரச்சனையும் கிடையாது.”

“அது எப்போதுமே தொடர்ந்தா நல்லா இருக்கும்.”

“ம்ம் உண்மை தான், சரி அதைவிடு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அதனால நீ கண்டிப்பா காலேஜூக்கு வந்தாகணும்னு நேத்து நைட் சொன்ன, என்னடீ?”

“ம்ம் அதை சொல்லாம எப்படி? முதலில் உட்காரு சொல்றேன்.” என்று அவர்கள் அமரும் மரத்தடி வரவும், அங்கே புனர்வியை அமரச் சொல்லியவள், தானும் அருகில் அமர்ந்து,

“நவிரன் விஷயமா பேசணும், அதுக்கு தான் கண்டிப்பா காலேஜூக்கு வான்னு சொன்னேன்.” என்று தவமலர் சொல்லவும்,

“அடிப்பாவி, இன்னும் இந்த விஷயத்தை விடலையா? நீ அந்த மின்மினிக்கிட்ட உதை வாங்கினா தான் இந்த விஷயத்தை விடப் போறேன்னு நினைக்கிறேன்.” என்று புனர்வி கூறினாள்.

“அப்படியாவது மின்மினி நேரில் வந்தா சந்தோஷம் தான், அப்படியே நேரில் மின்மினியை பார்த்தாலும், அவ என்னை அடிக்க மாட்டா, ஏன்னா எனக்கு மின்மினி யாருன்னு தெரியும், மின்மினிக்கு நான் ரொம்ப நெருக்கம்.” என்று சுடிதாரில் இல்லாத காலரை அவள் தூக்கிவிட்டு சொல்ல,

“ஹே ஏதாவது கனவு கினவு கண்டியா? உளர்ற,” என்று புனர்வி கேலியாக கேட்டாள்.

“உளரல்லாம் இல்லை, உண்மையை தான் சொல்றேன். நான் மின்மினி யாருன்னு கண்டுப்பிடிச்சிட்டேன். அது யாருன்னா? மின்மினி நம்ம ராகா தான்,”

” என்னடீ புதுசா இப்படி ஒரு ட்விஸ்ட்,”

“புதுசு இல்ல, பழசு தான். ராகமயா தான் மின்மினி. இப்படி தான் நிறைய பேர் சொல்லிக்கிறாங்க,”

“விளையாடாத தவா, சீரியஸா கேட்கிறேன். எதை வச்சு இப்படி சொல்ற?”

“எனக்கு கிடைச்ச தகவல்களை வச்சு தான் சொல்றேன். நீதானே ராகா அடிக்கடி போனை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கான்னு சொன்ன, அவ ஏன் நவிரன்க்கு மெசேஜ் செஞ்சிருக்க கூடாது, அதுவுமில்லாம ராகா கவிதை எழுதுவாளே, மின்மினியோட கவிதையை படிச்சு தானே நவிரன் அவளோட ஃப்ரண்ட் ஆனாங்க? 

அப்புறம் கவிதை போட்டில முதல் பரிசு வாங்கினவங்க பேர் மின்மினின்னு நம்ம கௌசல்யா மேம் தான் விசாரிச்சு சொன்னாங்க, அதுவும் அவங்க நம்ம டிபார்ட்மெண்ட், அவங்க பரிசா கிடைச்ச பணத்தை நம்ம சாம்பவி அத்தைக்கிட்ட கொடுத்து நம்ம இல்லத்தில் இருக்க பிள்ளைங்களோட ட்ரீட்மெண்ட்க்கு கொடுக்க சொல்லியிருக்காங்க,

நீயே யோசி, நம்ம டிபார்ட்மெண்ட்ல இந்த அளவுக்கு உதவும் மனப்பான்மையோடு யாராவது இருக்காங்களா? அப்படியே இருந்தாலும் கௌசல்யா மேம் ஹஸ்பண்ட் தனா சார் சொன்னது போல, ஏதாவது அனாதை இல்லம், முதியோர் இல்லம், இல்ல கேன்சர் பேஷண்ட்ஸ்னு உதவாம நம்ம இல்லத்து பிள்ளைங்களுக்கு ஏன் உதவணும்? இதெல்லாம் தான் எனக்கு மின்மினி ராகாவா இருக்குமோன்னு சந்தேகம் வருது.”

“நீ மின்மினியைப் பத்தி இந்த அளவுக்கு கண்டுப்பிடிச்சிருக்கியா? ஆனா நான் கேட்டப்போ இதுவரை எந்த தகவலும் தெரியலன்னு ஏன் சொன்ன? சரி இதெல்லாம் வச்சு நீ நம்ம ராகா தான் மின்மினின்னு முடிவே செஞ்சுட்டியா?”

“அதுமட்டுமில்ல, நவிரன் இந்தியா வருவதா சொன்ன அந்த நாள் ராகா ஏதோ யோசனையாகவே இருந்தா பார்த்தியா? அவ ஏர்போர்ட்க்கு வரவே போறதில்லன்னு சொன்னா? அது ஏன்?

நவிரன் ஃபேஸ்புக்ல போட்ட போஸ்டுக்கு மின்மினியோட ரிப்ளை வந்தது கூட அவ போஸ்ட் பார்த்து ரிப்ளை செஞ்சுருக்கான்னு சொல்லலாம், ஆனா நவிரன் ஏர்போர்ட்க்கு வந்ததும் வந்த மெசேஜூக்கு என்ன அர்த்தம்? கரெக்டா அந்த நேரத்துக்கு மெசேஜ் அனுப்பினது கொஞ்சம் இடிக்கல, நான் ராகாக்கிட்ட ஏர்ப்போர்ட்ல நடந்ததை கேஷுவலா விசாரிக்கறது போல விசாரிச்சேன். நவிரன் வந்த ஃப்ளைட் லேண்ட் ஆனப்போ, ரெஸ்ட் ரூம் போறதா உன்கிட்ட ராகா சொல்லிட்டு போயிருக்கா, அந்த கேப்ல அவ மெசேஜ் செஞ்சிருக்கலாமில்ல?

 சரி அது கூட கோ இன்ஸிடெண்ட்னு வச்சிக்கலாம், ஆனா தேடி வந்தது கிடைச்சும், அதை தொலைச்சீட்டீங்கன்னு சம்திங் ஏதோ போஸ்ட் போட்டது கன்ஃபார்மா நவிரனோட விஷயத்தை மின்மினி கவனிக்கிறான்னு புரிஞ்சிக்க முடியலையா? மயூ அத்தான் உன்கிட்ட தான் நவிரன் வர ஃப்ளைட்டோட டீடெயிஸ் சொன்னாங்க, நீ எங்க ரெண்டுப்பேர்க்கிட்ட தான் அதுப்பத்தி சொன்ன, அப்படியிருக்க மின்மினி யாரோன்னா? அவளுக்கு நவிரன் வந்து இறங்கின டீடெயில்ஸ் எப்படி தெரியும்?”

“இது இன்ட்டர்நெட் உலகம் தவா, எல்லாமே இந்த ஸ்மார்ட் போன்க்குள்ள அடங்கியிருக்கு, எதையும் தெரிஞ்சிக்க இது உதவியா இருக்கு, அப்புறம் மின்மினியால நவிரன் வந்ததை தெரிஞ்சிக்க முடியாதா?”

“நீ சொல்றது சரி தான், ஆனா நவிரன் இந்தியாக்கு போறேன்னு தான் ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்ருந்தாங்களே தவிர, சென்னைன்னு அதுல குறிப்பிடல, அப்படியிருக்க சென்னைன்னு எப்படி கரெக்டா தெரிஞ்சிக்க முடியும்?”

“அந்த டைம்ல எந்த ஃப்ளைட் எங்க வருதுன்னு தெரிஞ்சிக்க முடியாதா? நவிரன் அங்க இருந்து போஸ்ட் போட்டதும், மின்மினி உடனே பதிவு போட்டுட்டா, ஆனா அதுக்குப்பிறகு தான் அத்தான் எனக்கு சொன்னாங்க, நான் உங்களுக்கு சொன்னேன்.”

“நீ என்ன சொல்ல வர, நம்ம ராகா மின்மினி இல்லன்னு சொல்ல வரீயா?”

“ஆமாம், நம்ம ராகா மின்மினியா இருக்க முடியாது, ராகா கவிதை எழுதுவா தான், ஆனா அவளோட சொந்த பெயரில் தானே அவ கவிதை எழுதுறா, அப்படியிருக்க ராகா எப்படி மின்மினியா இருக்க முடியும்? அதுவுமில்லாம ராகா அவளோட பெயரிலேயே அந்த கவிதை போட்டியில் கலந்துக்கிட்டா, இதில் திரும்ப மின்மினியா வேற அவ அதில் கலந்துக்கிட்டு, அதிலும் முதல் பரிசு வாங்கியிருப்பாளா? அதனால ராகா மின்மினியா இருக்க முடியாது. 

அப்புறம் ராகா தான் மின்மினின்னா அவ ஏன் நவிரன்க்கிட்ட தன்னை தெரியப்படுத்திக்காம இருக்கணும், அவ தன்னை தெரியப்படுத்திக்காம இருக்க ராகாக்கு என்ன பிரச்சனை இருக்கு? அவ என்ன அழகா இல்லையா? படிப்பு இல்லையா? இல்லை அவ காதலுக்கு தான் தடையா யாராவது இருக்கப் போறாங்களா? சொல்லு.” என்று புனர்வி கூறவும்,

“ஆமாம் நீ சொல்றதும் சரி தான் புவி, ராகாக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது தன்னை தெரியப்படுத்திக்காம இருக்க? ஒருவேளை உன்னை போல் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தா கூட அவ தன்னை அடையாளம் காட்டிக்க விரும்பாம இருக்கான்னு சொல்லலாம், ஆனா அப்படித்தான் இல்லையே, அப்போ மின்மினி ராகாவா இருக்காது. அப்படித்தானே?” என்ற தவமலரின் கேள்வியில் புனர்வி அவளை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“ம்ம் நீ சொல்றது உண்மை தானே? ராகாக்கு என்ன குறை? அவ தான் மின்மினின்னா அப்போ நவிரன்க்கிட்ட அவ தன்னை வெளிப்படுத்திக்க வேற என்ன தடை இருக்கப் போகுது?”

“அப்போ உன்னோட முகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தான், நீ உன்னை நவிரன்க்கிட்ட வெளிப்படுத்திக்க விரும்பலையா புவி?”

“என்ன உளர்ற தவா?”

“உளரல, நீ தான் மின்மினின்னு சொல்றேன். நீ ராகா மின்மினி இல்லன்னு சொன்ன விஷயங்களை நானும் யோசிச்சேன். எனக்கும் அவ மின்மினியா இருக்க முடியாதுன்னு புரிஞ்சுது. ஆனா அதே விஷயங்கள் உனக்கு பொருந்தி போகுதே? ராகா ரெஸ்ட் ரூம் போயிருக்க சமயத்தில் நீ கூட நவிரனுக்கு மெசேஜ் செஞ்சிருக்கலாமில்ல?”

“நேத்து வழக்கம் போல ஏதாச்சும் துப்பறியும் நாவல் படிச்சிட்டு  தூங்கினியா தவா? உன்னோட இன்வஸ்டிகேஷனை என்கிட்ட ஆரம்பிச்சிருக்க?”

“இது வழக்கமா நம்ம கேலியா, கிண்டலா பேசிக்கிற விஷயமில்ல புவி. நான் சீரியஸா கேட்கிறேன். நீதானே  மின்மினி. இல்லன்னு மட்டும் சொல்லாத, அது உண்மை கிடையாது.

ராகாவை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும், உன்னை 4 வருஷமா தான் தெரியும், உன்னோட பழைய விஷயங்களை நானோ ராகாவோ தெரிஞ்சிக்க நினைச்சது கிடையாது. ஆரம்பத்தில் அதை உனக்கு ஞாபகப்படுத்த விரும்பல, அதுக்குப்பிறகும் நீ சகஜமா ஆகிட்டாலும், உன்னோட பழைய கதையை கேட்டா எங்க அது உனக்கு சங்கடத்தை கொடுக்குமோன்னு கேட்க நாங்க நினைச்சதே இல்ல,

இப்போ பூர்வி அக்காக்கு போன் போட்டு பேசினேன். நீ முன்ன எப்படின்னு தெரிஞ்சிக்க நினைச்சு கேட்டேன். அதில் அக்கா சொன்ன ஒரு விஷயம் நீ கவிதை நிறைய எழுதியிருப்பது தான், அதிலும் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டு நீ அறைக்குள்ள அடைஞ்சு கிடைக்கும் போது, உன் கையில் எப்போதும் மொபைல் தான் வச்சிருப்பன்னு சொன்னாங்க, அதாவது உன்னோட தனிமையை போக்கிக்க நீ மின்மினியா மாறியிருக்க, அப்படித்தான் நவிரனோடும் பேசியிருக்க, எந்த பாதிப்பு உன்னை நவிரனோடு பேச வச்சுதோ, அதுவே இப்போ நீ நவிரனை விட்டு விலகவும் காரணமா இருக்கு, அப்படித்தானே புவி. சொல்லு நீதானே நவிரனோட மின்மினி?” என்று தவமலர் கேட்டதும், மௌனமாக இருந்த புனர்வி,

ஒருமுறை கண்களை மூடி தன்னை சமன்படுத்தியவள், பின் கண்களை திறந்து, “ஆமாம் நீ சொன்னது உண்மை தான், நான் தான் மின்மினி. ஆனா நவிரனோட மின்மினியான்னு எனக்கு தெரியல? அது தெரியாம தான் நான் என்னை அடையாளம் காட்டிக்காம இருக்கேன்.” என்று உண்மையை கூறினாள்.

“புவி.”

“ஆமாம் தவா, நீ சொன்னது போலத்தான், எனக்கு இப்படி பிரச்சனை வந்ததும், யாரையும் எனக்கு பார்க்க பிடிக்கல, வீட்டில் இருக்கவங்க கூட என்னை பரிதாபமா பார்த்தாங்க, எனக்கு காலேஜ் போய் படிக்க பிடிக்கல, ஃப்ரண்ட்ஸோட முகத்தை பார்க்க பிடிக்கல, எனக்கு அப்போ நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க, அவங்கல்லாம் அடிக்கடி சொல்ற ஒரு வார்த்தை, நீ எப்படி புனர்வி இவ்வளவு அழகா இருக்க? முகத்தில் ஒரு மாசு மறு கூட இல்லாம க்ளியரா இருக்கு, உன்னை பார்த்து எங்களுக்கு பொறாமையா இருக்குன்னு சொல்வாங்க, அது எனக்கு ஒருவித கர்வத்தை கொடுத்தது. அவங்க என்னோட அழகைப் பத்தி பேசறது எனக்கு ஒருவித போதையை கொடுத்ததுன்னு கூட சொல்லலாம், அப்படி அவங்க முன்ன இருந்தவ, இப்போ இந்த முகத்தோட அவங்களுக்கு எப்படி காட்டுவேன். அதான் ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன்.

ஆனா அந்த தனிமையும் எனக்கு பிடிக்கல, என்னை அப்படியே ஏத்துக்கிற சில ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க, என்னை பார்க்க வந்தாங்க, ஆனா அவங்களை நான் பார்க்க விரும்பல, ரூம்க்குள்ள அடைஞ்சு கிடப்பது பைத்தியம் பிடிக்கிறது போல இருந்தது, அப்போ தான் எனக்கு அந்த ஐடியா தோனியது. அப்பப்போ கவிதை எழுதுவேன். அதனால மின்மினி என்ற பெயரில் ஃபேஸ்புக்ல ஒரு அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கவிதையெல்லாம் பதிவிட்டேன். அப்படியே அதில் கமெண்ட் செய்றவங்க கூட இன்பாக்ஸில் பேசுவேன். 

ஆனா சில பேர் நான் என்னைப்பத்தி தகவல் சொல்லாததால ஒருகட்டத்துக்கு மேல பேச மாட்டாங்க, சில ஆண்கள் நான் ஒரு பெண்னுன்னு தெரிஞ்சு ஓவரா வழிஞ்சு பேசுவாங்க, சிலர் ஃபேக் ஐடின்னு பேச தயங்குவாங்க, இப்படி அதுவுமே எனக்கு சலிச்சு போச்சுன்னு கூட சொல்லலாம், அதனால நானும் அதிகமா யாரோடவும் பேசறதில்ல,

இங்க வந்தப்பிறகும் கூட ஆரம்பத்தில் உன்னோடவும் ராகாவோடவும் கூட ரொம்ப பேசமாட்டேன். இது நான் சொல்லி உனக்கு தெரியணும்னு இல்ல, அதேபோல் அத்தையும் அத்தானும் என்னை மாத்த முயற்சி செய்வாங்க, பேருக்கு அவங்களோட கொஞ்சம் பேசிட்டு அடுத்து ரூம்க்குள்ள போய் அடைஞ்சுப்பேன்.

இப்படி காலம் போயிட்டு இருந்தப்ப தான் நவிரனோட அறிமுகம் கிடைச்சது. ஃப்ரண்டா சேர்த்துக்கோங்கன்னு ஃபேஸ்புக்ல நவிரனோட போட்டோ வந்தது, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ஆர்வத்தில் தான் நான் நவிரனுக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தேன். கொஞ்ச நாள் பேருக்கு தான் நாங்க ஃபேஸ்புக்ல ஃப்ரண்டா இருந்தோம், அப்புறம் தான் ஒருநாள் நவிரனோட பிறந்தநாளுக்கு அத்தான் வாழ்த்து பதிவு போட்டு பார்த்தேன். அப்போ தான் நவிரன் அத்தானோட ஃப்ரண்ட்னு எனக்கு தெரியும், அக்கா கல்யாணத்தில் அவங்களை பார்த்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது,

அதுக்குப்பிறகு நவிரன் என்னோட கவிதை பதிவுக்கு கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க, நானும் அத்தானோட ஃப்ரண்ட் தப்பா இருக்க மாட்டாங்கன்னு அவங்களோட இன்பாக்ஸ்ல பேச ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் சாதாரணமா பேச ஆரம்பிச்ச ரெண்டுப்பேரும் அப்புறம் எப்படி நெருக்கமானோம்னு எனக்கு இப்போ வரை தெரியல?

அப்போ உங்கக் கூடவும் இப்போ இருக்க அளவுக்கு க்ளோஸ் இல்ல, காலேஜ்ல பார்த்து பேசிக்கிறதோட சரி, வீட்டுக்கு வந்தா அத்தை கூட கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்குப்பிறகு நவிரனோட தான் பேசுவேன்.

ஆரம்பத்தில் நவிரனும் என்னைப்பத்தி தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டினாங்க, ஆனா நான் இப்போதைக்கு என்னைப்பத்தி சொல்ல முடியாதுன்னு சொன்னதும், அவங்களும் பெருசா எடுத்துக்காம என்கூட பேசுனாங்க, இன்பாக்ஸ்ல நிறைய பேசிக்கிட்டோம், நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ள ஒத்து போச்சு, மின்மினியா நான் நவிரனோட பேசினதால அதை உங்கக்கிட்ட சொல்லவும் எனக்கு ஒருமாதிரி இருந்தது. சும்மா ஃபேஸ்புக் நட்பு தானேன்னு தான் முதலில் நினைச்சேன்.

ஆனா நவிரனோட ஒருநாள் பேசலன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கும், இது என்ன மாதிரி உணர்வுன்னு எனக்கு புரியல, ஆனா அதையும் நவிரன் ஒருநாள் எனக்கு புரிய வச்சாங்க,

என்னை காதலிக்கிறதா அவங்க மெசேஜ் செஞ்சப்ப, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனா நான் என்ன பதில் சொல்வேன்? என்னோட பிரச்சனையிலிருந்து வெளிவர்றதுக்காக நவிரனின் மனசோட விளையாடிட்டேனோன்னு இருந்தது. என்னைப்பத்தி எந்த விவரமும் தெரியாமலேயே நவிரன் என்னை காதலிக்கிறாங்க, ஆனா தெரிஞ்சா என்ன செய்வாங்க? நவிரனோட பேசி பழகினாலும் அத்தான் நவிரன் பத்தி சொல்லியும் கேட்ருக்கேன். நவிரனோட எனக்கு கல்யாணம் ஆனா கண்டிப்பா நான் சந்தோஷமா இருப்பேன். ஆனா என்னோட கல்யாணம் நடந்தா நவிரன் வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா? எனக்கு அந்த கேள்விக்கு விடை தெரியல?

வெளி அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா நவிரன் என்ன நினைப்பாங்கன்னு எனக்கு தெரியாதே? பேசாம என்னைப்பத்தி நவிரன்க்கிட்ட சொல்லிடலாமான்னு கூட தோனியது, ஆனா அப்புறம் நவிரன் என்ன அவாய்ட் செஞ்சா என்னால ஏத்துக்க முடியாது. அதான் அவங்க கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாம அப்படியே அவங்களோட பேசிட்டு இருந்தேன். இதுக்கு என்னத்தான் முடிவு எனக்கு தெரியல, அவங்க காதலை சொன்னப்பிறகும் அவங்களோட பேசி அவங்களுக்கு நான் பாஸுட்டிவான பதில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிறேன்னு எனக்கு தெரியுது? ஆனா என்னால அவங்களோட பேசாம இருக்கவும் முடியல, இதை உங்கக்கிட்ட பகிர்ந்துக்க மனசு துடிச்சுது, ஆனா இருட்டில் மின்மினியா உலா வருவதை யாருக்குமே சொல்லிக்க வேணாம்னு மௌனமாகவே இருந்துட்டேன்.

இது எவ்வளவு தூரம் போகும்? அப்படி ஒரு கேள்வி எனக்குள்ள அடிக்கடி தோன ஆரம்பிச்சது. அதுக்கு நவிரன் மூலமா எனக்கு சீக்கிரம் விடையும் கிடைத்தது.” என்று சொல்லி புனர்வி தவமலரின் முகத்தைப் பார்க்க,

“அது என்ன புவி?” என்று தவமலர் ஆர்வத்தோடு கேட்டாள்.

அவளிடம் புனர்வி அதை சொல்லும் வேளையில், நவிரனும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

ன்று இல்லத்தில் இருந்தும் திரும்பும் போது யாருக்கோ நடந்த விபத்தில் இவனைப் பற்றி புனர்வி தெள்ளத் தெளிவாக சொன்னதிலிருந்தே மனதில்  அது ஒரு உறுத்தலாகவே இருந்தது. மின்மினி அவனை எப்போது புறக்கணிக்க ஆரம்பித்தாள். 

அது ஒரே நிகழ்வாய் நடக்கவில்லை, அவள் கொஞ்சம் கொஞ்சமாக தான் அவனை புறக்கணிக்க ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு ஏதோ பெரிய காரணம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு, அது என்ன என்று தான் தெரியாமல் இருந்தது. இந்த ஒருவார காலமாக அதைப்பற்றி தான் அவன் யோசித்துக் கொண்டிருந்தான். என்ன? என்ன? என்று அவன் மனது கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கான விடையை மனம் ஆராய்ந்துக் கொண்டே இருந்தது.

அவன் அவளிடம் நிறைய பேசியிருக்கிறான். குறிப்பிட்டு இது என்று ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம், அந்த அளவுக்கு இருவரும் பேசியிருக்கிறார்கள். அதில் அவனுக்கு எப்போதும் நினைவு வருவதென்றால், அது அவளிடம் காதலை கூறியது மட்டும் தான், மற்றவற்றை மீண்டும் நினைத்து பார்த்தது கிடையாது. அப்படி அதையெல்லாம் நினைத்து பார்த்து தான் அவளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லாமல் அவள் அவன் நினைவில் நீங்கா இடம் பெற்றிருந்தாள்.

ஆனால் இப்போது அவளை ஒதுங்க போக வைத்த நிகழ்வுகளை அவன் நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, அதை நினைவில் கொண்டு வர அவன் அதிகம் போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக அது அவன் நினைவுக்கு வர ஒரு வார காலம் பிடித்தது.

அன்று அலுவலகத்தில் அவனுக்கு அதிக வேலை, அவனுக்கு அங்கு பகல் பொழுது அவளுக்கு இங்கு இரவு பொழுதல்லவா? அதனால் இருவருமே நேரம் பார்த்து தான் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக் கொள்ள முடியும், அந்த ஒரு காரணத்திற்காக தானோ என்னவோ அவள் இந்தியாவில் இருப்பதை மட்டும் அவனிடம் சொல்லியிருந்தாள்.

அவனுக்கு விடியற்காலை நேரம், அவளுக்கு அது மாலை நேரம் அப்போது தான் அதிகம் பேசிக் கொள்வார்கள். அது அப்படியே மாறி அவனுக்கு மாலை நேரம் அவளுக்கு விடியற்காலை பொழுது அப்போதும் அவர்கள் பேசிக் கொள்ள ஏற்ற நேரம், பொதுவாக அலுவலகம் முடிந்து வரும் பயணத்தின் போதே, அவளுக்கு ஒரு ஹாய் என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு, அவள் பதிலுக்கு காத்திருப்பான். அவள் தூங்கிக் கொண்டிருந்தாலும், குறுஞ்செய்தி வந்தால் கேட்கும்படியாக வைத்திருக்கும் சத்தத்தால் அவனது ஹாய்க்கு அவள் பதில் அனுப்புவாள். இப்படியே அவர்கள் பேச்சு தொடர ஆரம்பிக்கும், 

அன்று அப்படி கூட குறுஞ்செய்தி அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட, அவன் வீடு வந்து சேர்வதற்கு இரவாகிவிட்டது. அவனிடமிருந்து செய்தி வராமல் போகவே தானாகவே தூக்கம் கலைந்தவள், அவளாக ஒரு ஹாய் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் வருகிறதா? என்று பார்த்தப்படி இருந்தாள்.

எப்போதும் போல வெறும் துண்டை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள், அவனது செய்திக்காக குளிக்காமல் தவமிருக்க, 

அப்போது தான் வீட்டுக்குள் வந்தவனோ, உயிரற்றுக் கிடந்த அலைபேசிக்கு மின்சாரம் மூலம் உயிர்க் கொடுத்தவன், அவளது செய்தியை பார்த்துவிட்டு, “சாரி மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு,” என்ற பதிலை அனுப்பிவிட்டு குடிப்பதற்கு காபி தயாரிக்க சென்றான்.

அவன் பதில் கிடைத்ததும், “ஓ இப்போ தான் வீட்டுக்கு வந்தீங்களா? ஏன் லேட்? என்று அவன் சொல்லாத விஷயத்தையும் தானாக புரிந்துக் கொண்டவள், கேள்வியைக் கேட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.

காபியோடு வந்தவன், சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த அலைபேசியின் அருகே அமர்ந்து அதில் அவளது செய்தியை படித்தான்.

“ஆமாம் எப்போதும் போல ஆஃபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன். ஆனா வழியில் செம ட்ராஃபிக். சரி உன்னோட பேசலாம்னு பார்த்தா மொபைலில் சுத்தமா சார்ஜ் இல்ல, ட்ராஃபிக் கிளியர் ஆகி வீட்டுக்கு வர இவ்வளவு நேரம்,” என்று காபியை பருகியபடியே குறுஞ்செய்தியை அனுப்பிவிட,

அதற்குள் அவளும் குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் சுற்றிக் கொண்டு வந்திருந்தவள், அவனது செய்தியை படித்தாள்.

பின், “ட்ராஃபிக் கிளியராக இவ்வளவு நேரமா? ஏன் ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் கேட்க,

“ஆமாம் ஒரு ஆக்ஸிடெண்ட், அதனால பின்னாடி வந்த எல்லா வண்டியும் அப்படியே நின்னுடுச்சு, அதை சரி செஞ்சு ட்ராஃபிக்க்கை கிளியர் செய்ய இவ்வளவு நேரமாகிட்டது.” என்று பதில் அனுப்பினான்.

“அய்யோ பாவம், அவங்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லையே?”

“இல்ல ஸ்பாட்லயே உயிர் போயிடுச்சு. ரொம்ப ரத்தம் போயிடுச்சுன்னு எல்லாம் பேசிக்கிட்டாங்க, முதலில் ட்ராஃபிக்ல மாட்டினப்போ விஷயம் தெரியல, ஆளாளுக்கு ஒன்னு சொன்னாங்க, கிட்ட போகவும் தான் விஷயமே தெரிஞ்சுது, ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்தில் ஒரே ரத்தமா இருந்ததுன்னு சொன்னாங்க காரும் ரொம்ப டேமேஜா இருந்ததாம்,”

“ஏன் நீங்க பார்க்கலையா?”

“இல்ல ஆக்ஸிடெண்ட், ரத்தம் இதெல்லாம் பார்த்தா எனக்கு அலர்ஜி, ஒரு வாரத்துக்கு தூக்கம் வராது, அதான் அதெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். முன்னல்லாம் சாவு ஊர்வலம்னு போனாலே அந்தப்பக்கம் பார்க்காம திரும்பிப்பேன். இப்போ அப்பா, அம்மா இறந்ததுக்கு பிறகு தான், அது அந்த அளவுக்கு பாதிப்பில்ல,

சின்ன வயசில் ரொம்ப மோசம், ரிலேடிவ் ஒருத்தருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது, அவரை பார்க்க அப்பா என்னை கூட்டிட்டு போனப்போ, நான் அவரை முகத்தை பார்த்துட்டு ஒரே அழுகை, வெளிய கூட்டிட்டு போகச் சொல்லி, அப்பா அவர் முகம் என்ன கோரமா இருந்தது, இப்போ நினைச்சாக் கூட ஒருமாதிரி இருக்கும், அடுத்து இப்போ வரைக்கும் கூட அவரை நான் நேரில் பார்க்கவே இல்லை. என்னவோ அவரை பார்க்க மனசுக்கு ஒருமாதிரி இருந்தது, இது அருவருப்பா? இல்ல ஒருமாதிரி பயமா? என்னன்னு தெரியல, அப்படிப்பட்டவங்களை நேருக்கு நேரா பார்த்து பேசவே யோசனையா இருக்கும், இன்னும் சொல்லப் போனா, சினிமா, டிவில இப்படி கோரமான சீன்ஸ் வந்தா, அதுவும் கிராஃபிக்ஸ்னு தெரியும், தெரிஞ்சும் பார்க்க பிடிக்காது.” என்று சாதாரணமாக அவனது மனநிலையை அவளுக்கு சொல்லிக் கொண்டே போக,

மின்மினிக்கு அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? அவளுக்குமே அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவன் அறிந்தா வைத்திருக்கிறான்? ஆனால் சிறிது காலமாகவே மின்மினியின் மனதில் தோன்றிய கேள்விக்கு அவன் பதில் உரைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் அறியவில்லை.

“சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்,” என்று சொல்லிவிட்டு அப்போது அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்மினி அதன்பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு குறுஞ்செய்தி அனுப்பி பேசுவதை நிறுத்திக் கொண்டாள் என்பது நவிரனுக்கு இப்போது புரிந்தது.

அப்போது நடந்ததை கூறி முடித்த புனர்வியும், “இப்போ சொல்லு தவா, நவிரன் இப்படி ஒரு மனநிலையில் இருக்கும்போது அவங்களோட தொடர்ந்து பேசி அவங்களோட காதலை நான் ஏத்துப்பேன்னு நம்பிக்கை கொடுக்கணுமா? அதான் பிஸியா இருப்பதா காண்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா நவிரனோட பேசறதை குறைச்சிக்கிட்டு, சுத்தமா நிறுத்திட்டேன். அதுக்கேத்த போல ராகாவும் ஆன்ட்டி இறந்ததும் என்னோட வந்து தங்கினா, அவளோட பேசி, சிரிச்சுன்னு இருக்கவே நவிரனை விட்டு விலகறது எனக்கும் ஈஸியா இருந்தது, அதாவது அப்படி நினைச்சுக்கணும்னு இப்போ வரை மனசை தேத்திக்கிட்டு இருக்கேன். அதுபோல நவிரனும் என்னை மறந்துடணும்னு நான் வேண்டிட்டு இருந்தேன்.

அப்போ தான் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் அந்த கவிதையை ஷேர் செய்றதை நானும் பார்த்தேன். மின்மனியா இல்ல, புனர்வியா நம்ம காலேஜ் என்பதால் அவளோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருந்தேன். அவளோட பதிவை பார்த்து நவிரன் கண்டிப்பா அது என்னோட கவிதைன்னு கண்டுப்பிடிச்சிருப்பாங்கன்னு தெரியும், அதுக்குப்பிறகு அவங்க என்ன செய்வாங்கன்னு என் மனம் எதிர்பார்த்துட்டு தான் இருந்தது. ஆனா அவங்க என்னைத்தேடி இங்க வருவாங்கன்னு எதிர்பார்க்கல, என்னன்னு தெரியல, நவிரன் என்னைத் தேடி வராங்கன்னு தெரிஞ்சதுமே நான் அவங்களுக்கு எத்தனை முக்கியம்னு உணர்ந்த சந்தோஷத்தில் இருந்தேன். அதில் தான் லூசு மாதிரி பதிவு போட்டுட்டேன். மெசேஜ் அனுப்பினேன்.

நவிரனோ என்னைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க, திரும்பவும் ஏதாவது தப்பு செஞ்சுடக் கூடாதுன்னு மின்மினி அக்கவுண்ட் பக்கமே நான் போறதில்ல, நவிரன் என்னை கண்டுப்பிடிக்கவே கூடாது, நான் தான் மின்மினின்னு தெரிஞ்சு நவிரன் என்ன முடிவெடுப்பதுன்னு தவிக்க கூடாது. 

அதனால ப்ளீஸ் தவா, நான் தான் மின்மினின்னு நீ தெரிஞ்சிக்கிட்டத நவிரனுக்கு சொல்லாத,” என்று புனர்வி கெஞ்ச,

“ஹே லூசு, நீ தான் மின்மினின்னு சந்தேகம் வந்ததே நவிரனுக்கு தான்,” என்று கூற, புனர்வி அவளை வியப்பாக பார்த்தாள்.

ஊஞ்சலாடும்..