9 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 9

காதல் என்றாலே பெற்றவர்கள் சற்று தயங்குவது உண்டு.

சர்வேஸ்வரனின் பெற்றோர் காதலுக்கு எதிரி இல்லை என்றாலும் ஆரம்பத்தில் சற்றுத் தயக்கம் இருக்கலாம் என்று நினைத்தான். ஊர் தலைமை பதவியில் இருப்பதால் சற்று யோசித்து முடிவு எடுக்கலாம்.

அதை அவளிடமும் அவன் வெளிப்படையாகச் சொல்ல, சக்தியின் முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது.

“மேடம் மூஞ்சி தொங்கிப் போயிருச்சு. காதலில் இதெல்லாம் சகஜம் சக்தியாரே. ரொம்ப டென்சன் ஆகுற அளவுக்கு அப்பா அம்மா கடுமை எல்லாம் இல்லை. காதல்னு சொன்னதும் கண்மூடித்தனமா கத்துறவங்களும் இல்லை. கொஞ்சம் தீர விசாரிச்சுட்டு செய்வாங்க, அவ்வளவு தான்…” என்றவன் அருகில் அமர்ந்திருந்தவளின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டான்.

அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் சக்தி.

அவன் தைரியமாகப் பேசினாலும் சக்திக்கு ஏனோ மனவுளச்சல் உள்ளிருந்து குடைந்தது.

தங்கள் திருமணம் அவ்வளவு சுலபமாக நடக்காதோ என்ற ஒரு எண்ணம் அவளை வட்டமிட, அதிலிருந்து அவளால் வெளியே வரமுடியவில்லை.

அவ்வுளச்சல் அவனின் அருகாமை இன்னும் தனக்கு வேண்டும் என்ற தூண்டுதலை தர, சட்டென்று எழுந்து அவனின் மடியில் அமர்ந்து கழுத்தை சுற்றிக் கைகளைப் போட்டு அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்து அணைத்துக் கொண்டாள்.

அவளின் செயலில் திக்குமுக்காடி போனான் சர்வேஸ்வரன்.

காலையிலிருந்து லேசான சீண்டலுக்குக் கூட அவனைத் தொட அனுமதிக்காதவள் இப்போது தன் மடியில் அமர்ந்து அணைத்துக் கொண்டிருப்பது எதற்கு என்று அவனுக்கும் புரிந்து போயிற்று.

அவளின் கலக்கம் தான் தன் அருகாமையைத் தேட வைக்கிறது என்பதை உணர்ந்தவன் அவளைச் சீண்டாமல் தானும் அவள் இடையைச் சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டான்.

அவன் ஆறுதலாக அணைத்துக் கொள்ள நினைத்தாலும் அவள் மடியில் அமர்ந்திருந்த விதத்தில் இடையில் சேலை லேசாக விலகி இருக்க, அவனின் கைகள் இடை சருமத்தை உணர, அது அவனின் உணர்வுகளுடன் உரசி செல்ல, மெல்ல அவளின் இடையை வருட ஆரம்பித்தான்.

அவனின் தொடுகையில் கூசி சிலிர்த்தவள், “ம்ம்… ஈஸ்வர்…” என்று மெல்ல சிணுங்கி அவனின் கையை நகர விடாமல் பிடித்துக் கொண்டாள்.

“ரொம்ப நாள் தாங்காது போலச் சக்தியாரே…” என்று அவளின் காதில் கிசுகிசுப்பாகச் சொன்னவன் இறுக்கமாகத் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“அப்போ சீக்கிரம் வீட்டில் பேசுவோம்…” என்று அவனின் காதில் தானும் ரகசியமாகச் சொன்னாள் சக்தி.

“அதுதான் செய்யணும்…” என்றவன் மீண்டும் அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

சக்தியும் மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொள்ள, இருவரின் இதழ்களும் நலம் விசாரித்து விட்டு பிரிந்தன.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினர்.

சக்தியை மீண்டும் அலுவலகத்தில் விட்டவன், அவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியதும் தன் வீட்டிற்குச் சென்று சேர்ந்தான்.

இன்றைய அவனின் அருகாமையில் மனம் நெகிழ்ந்திருந்தாலும் சக்தியின் சஞ்சலப்பட்டிருந்த மனது ஏனோ சமாதானம் அடைய மறுத்து ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருக்க, அதனுடனே வீடு சென்று சேர்ந்தாள்.

சக்தியின் தந்தை தாமோதரன் கார் உதிரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடந்தி கொண்டிருந்தார். அமைதியான குணம் கொண்டவர்.

மகளுக்குப் பத்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் அவரின் மனைவி இறந்து விட, மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்தது பிரேமின் அன்னை தேவியும், தந்தை மோகனும் தான்.

இரண்டு குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர்.

சக்தியின் அன்னை ஜானகி இறந்த பிறகு தேவியே அவளுக்கு இன்னொரு அன்னை போல் ஆகிப் போனார்.

பெண் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அவளுக்குத் தேவையான நேரத்தில் அன்னை இல்லாமல் தான் என்ன செய்யப் போகிறோமோ என்று தாமோதரனை தவிக்க விடாமல் அவருக்குச் சகோதரியாகத் துணை நின்று சக்திக்கு தேவையான அனைத்தும் தானே பார்த்துக் கொண்டார் தேவி.

அவள் வீட்டிற்குச் சென்ற போது தேவியும், மோகனும் அங்கே தான் இருந்தனர். அவர்களின் வீடு அடுத்தத் தெருவில் தான் இருந்ததால் இவர்கள் அங்கே செல்வதும், அவர்கள் இங்கே வருவதும் அவர்களுக்குள் வழக்கமாகியிருந்தது.

“ஹாய் அத்தை…” என்று தேவியைப் பார்த்து கூவிய படியே வீட்டிற்குள் நுழைந்தாள் சக்தி.

“அடேய் தங்கம்! என்னடா இது சேலை எல்லாம் கட்டியிருக்க?” என்று அவளை ஆச்சரியமாகப் பார்த்தார் தேவி.

“சும்மா கட்டணும் போல இருந்தது அத்தை. அதான் கட்டிப் பார்த்தேன்…” என்றாள்.

“சேலையில் ரொம்ப அழகா இருக்கத் தங்கம்…” என்றவர் அவளுக்கு நெட்டி முறித்தார்.

“தேங்க்ஸ் அத்தை…” என்றவள் அவரின் தோளை சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்டு அவரைக் கொஞ்சினாள்.

“நம்ம தங்கம் நல்லா வளர்ந்துட்டாள் தாமுண்ணா. அவளைச் சேலையில் பார்த்ததும் தான் அவளுக்குக் கல்யாண வயசு வந்துருச்சுனே ஞாபகம் வருது. சீக்கிரம் நல்ல இடமா பார்க்கணும்ணா…” என்றார் தேவி.

“ஆமாமா தேவி. காலையில் என் பொண்ணைச் சேலையில் பார்த்ததும் நானும் அப்படித்தான் நினைச்சேன். இப்ப நீயும் சொல்லிட்ட. நாளைக்கே மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட வேண்டியது தான்…” என்று தாமோதரன் சொல்ல சக்திக்கு திக்கென்று இருந்தது.

‘அட ஆண்டவா! சேலை கட்டியது ஒரு குத்தமா? இப்படி மாப்பிள்ளை பார்க்கிற அளவுக்குக் கிளம்பிட்டாங்க. இனியும் சும்மா இருக்கக் கூடாது. அப்பாகிட்ட ஈஸ்வர் பற்றிச் சொல்லிவிட வேண்டியது தான்…’ என்று நினைத்தவள்,

“அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…” என்று ஆரம்பித்தாள்.

“அப்பாகிட்ட அப்புறம் பேசலாம் தங்கம். இப்பத்தான் ஆபிஸில் இருந்து வந்திருக்க. போய் முதலில் ஃப்ரெஸ் ஆகிட்டு வா. அத்தை சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். சாப்பிடலாம்…” என்றார் தேவி.

“ஆமாம்மா முதலில் சாப்பிட்டு விடலாம். பிரேம் ட்ரைனிங் போனதும் உன் அத்தை மகனுக்குச் சமைச்சு கொடுக்க முடியலைன்னு புலம்பிட்டு இருந்தாள். நான் தான் அதான் நம்ம சக்தி இருக்காளே அவளுக்குச் சமைச்சுக் கொடுன்னு சொல்லவும், உனக்குச் சமைச்சு எடுத்துட்டு வந்தாள்…” என்றார் மோகன்.

“அப்போ மகன் ஊரில் இல்லனாத்தான் என் ஞாபகம் வருமா அத்தை?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் சக்தி.

“என்ன தங்கம் என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்ட? உன் மாமாவுக்குத் தான் மகன் ஊரில் இல்லைன்னு போர் அடிக்கிது. அதான் உன்னையும் என்னையும் சேர்த்து சிண்டு முடிஞ்சி வச்சு பொழுது போக்குறார்…” என்று கணவனைப் போலியாக முறைத்துக் கொண்டே சக்தியை கொஞ்சினார்.

“அதானே என்னோட அத்தை அந்தத் தடியன் ஊரில் இருந்தாலும் எனக்காகப் பாசமா சமைச்சு எடுத்துட்டு வருவாங்களே. என் செல்ல அத்தை…” என்று தேவியின் கன்னத்துடன் தன் கன்னத்தை உரசி கொஞ்சினாள்.

அவர்கள் கொஞ்சிக் கொள்வதை இரு ஆண்களும் உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் பேசிவிட்டு சக்தி தன் அறைக்குச் சென்று உடையை மாற்றி விட்டு வர, தேவி தான் கொண்டு வந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினார்.

நேரம் கலகலப்பாகச் சென்றது.

சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பினர்.

இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததில் சக்தி தன் காதல் விஷயத்தைச் சொல்வதைத் தள்ளிப் போட்டுருந்தாள். பெரியவர்கள் அதற்குப் பிறகு அவளின் திருமணத்தைப் பற்றிப் பேசாததும் அவளைத் தள்ளிப்போட வைத்தது.

ஆனால் அவள் படுக்கச் செல்ல முயலும் போது, “சக்திமா, கொஞ்சம் நில்லு…” என்று மகளை நிறுத்தினார் தாமோதரன்.

“என்னப்பா?”

“அப்பா சும்மா பேச்சுக்கு சொல்லலைடா. உனக்கும் கல்யாணம் வயசு வந்திடுச்சு. இப்ப இருந்தே மாப்பிள்ளை பார்த்தால் தான் ஏதாவது நல்ல இடமா அமையும். அதனால் நாளைக்கே உன் ஜாதகத்தைக் கையில் எடுக்கலாம்னு இருக்கேன்…” என்றார்.

தந்தையின் பேச்சில் ஒரு நொடி திகைத்து விழித்த சக்தி இதற்கு மேலும் விஷயத்தைத் தள்ளிப் போடுவது நல்லதிற்கில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

“அப்பா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்பா…” என்று லேசாகத் தயங்கியபடியே பேச்சை ஆரம்பித்தாள்.

“என்னமா அப்பவும் பேசணும்னு சொன்ன, இப்பவும் அதே சொல்ற. என்ன விஷயம் சொல்லு…” என்று கேட்டார்.

“அப்பா அது நீங்க மாப்பிள்ளை எல்லாம் தேட வேண்டாம்…”

“ஏன்?” மகளைக் கூர்மையுடன் பார்த்து கேட்டார்.

“அது… அது… எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்குப்பா…” என்றாள்.

“ஓ!” என்றவர் மீண்டும் பேச சில நொடிகள் பிடித்தன.

“பையன் யார்?” என்று விசாரித்தார்.

“என் கூட வேலை செய்கிறவர் பா. பேரு சர்வேஸ்வரன். ரொம்ப நல்லவர் பா. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. வீட்டுக்கு ஒரே பையன். வில்லேஜ்ல இருந்து இங்கே வந்து வேலை பார்க்கிறார். அவங்க ஊரில் அவங்க குடும்பம் தான் பெரிய குடும்பம்…” என்றாள்.

“ம்ம், பரவாயில்லை. வெறும் பையனை மட்டும் நினைக்காம, அவன் குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சி வச்சுருக்க. அந்தப் பையனை என்னை வந்து பார்க்க சொல்லு…” என்றார்.

“அப்பா… அப்போ உங்களுக்குச் சம்மதமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் சக்தி.

“இப்பத்தானே மா சொல்லியிருக்க. நான் முதலில் பையனை பார்க்கிறேன். நானும் விசாரிச்சுக்கிறேன். அப்புறமா என் முடிவு சொன்னா போதும் தானே?” என்று மகளிடம் சிறு புன்னகையுடன் கேட்டார்.

“கண்டிப்பா ஈஸ்வரை உங்களுக்குப் பிடிக்கும் பா…” என்றாள் முகம் விகசிக்க.

“முதலில் நேரில் பார்ப்போம் மா…”

“நாளைக்கே வர சொல்லட்டுமா பா?” என்று துள்ளலுடன் கேட்டாள்.

“சரி, வரச் சொல்லு…” என்றவர் தூங்க செல்ல, சக்தியோ சந்தோஷமாகச் சர்வேஸ்வரனுக்கு அழைக்க ஓடினாள்.

“ஹலோ ஈஸ்வர்…”

“என்ன சக்தியாரே, ஹலோவிலேயே ஒரு குதூகலம்?” என்று கேட்டான்.

“அப்பாக்கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லிட்டேன்…” என்றாள்.

“என்ன அதுக்குள்ளயுமா? ஈவினிங் கூடச் சொல்லப் போறதாக நீ சொல்லவே இல்லையே சக்தி?” என்று வியப்பாகக் கேட்டான்.

“நானே இன்னைக்குச் சொல்வேன்னு எதிர்ப்பார்க்கலை ஈஸ்வர். சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு…” என்றவள் என்ன சூழ்நிலை என்று அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

“அப்போ நாளைக்கு எனக்கு டெஸ்டா? அம்மாடியோ! என் மாமனார்கிட்ட பாஸ் மார்க் வாங்குவேனா தெரியலையே?” என்று நடுங்குவது போல் சொன்னான்.

“ச்சு, விளையாடாதீங்க ஈஸ்வர். உங்க மாமனார் அவ்வளவு ஒன்னும் மோசமில்லை. என் அப்பா ரொம்ப நல்லவராக்கும். இப்ப கூடப் பாருங்க. மகள் காதலிச்சுட்டாள்னு குதிக்காம உங்களைக் கூப்பிட்டு பேசணும்னு சொன்னார்…” என்றாள் பெருமையாக.

“யாருக்கு தெரியும். ஒருவேளை நேரில் கூப்பிட்டு கட்டி வச்சு உதைப்பாரோ என்னமோ?” என்றான் கேலியாக.

“இப்ப நான் தான் உங்களை உதைக்கப் போறேன். அப்பாவை கேலி பண்ணாதீங்க ஈஸ்வர். எனக்குக் கெட்ட கோபம் வரும்…” என்றாள் சிலிர்த்துக் கொண்டு.

“கெட்ட கோபம் வருமா? ஆத்தாடி! அது எதுக்கு எனக்கு? நான் வேணும்னா உனக்கு நல்ல கோபம் வர வைக்கட்டுமா?” என்று காதலுடன் கேட்டான்.

சக்தி பதில் சொல்லாமல் விறைத்துக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்குச் சாயங்காலம் நீ என் மடியில் உட்கார்ந்து இருந்தியே, அப்போ…” என்றவன் குறும்புடன் காதலனாகப் பேச ஆரம்பிக்க,

“அச்சோ! போதும் ஈஸ்வர்…” சிணுங்கி செல்ல(நல்ல) கோபம் காட்ட ஆரம்பித்தாள்.

மறுநாள் மாலை வேலை முடிந்து சக்தியுடனே அவளின் வீட்டிற்கு வந்தான் சர்வேஸ்வரன்.

அவன் வரும் போது வீட்டில் இருந்த தாமோதரன் அவனைப் பார்த்ததும் எடை போடுவது போல் பார்த்தார்.

படித்த கலை முகத்தில் பளபளக்க, உயரத்திற்கு ஏற்ப தேவையான அளவு உடல் எடையுடன், பார்க்கவே ஒரு மிடுக்குடன் இருந்தவனைக் கண்டு தலையை அசைத்து, “வாங்க…” என்று வரவேற்றார்.

“சக்தி நீ போய்க் கொஞ்ச நேரம் அத்தை வீட்டில் இருடா. வரும் போது அத்தையையும் கூட்டிட்டு வா…” என்றார் தாமோதரன்.

அவருக்கு அவனிடம் தனியாகப் பேச வேண்டியது இருந்தது.

“ஏன்பா?” என்று கேட்டாள்.

“உன் அப்பா என்கிட்ட தனியா பேச விரும்புறார் சக்தி. நீ போய்ட்டு வா. எனக்கு ஒன்னும் என் மாமனார்கிட்ட பயம் இல்லை…” என்று சிரித்த படி சொன்னான் சர்வேஸ்வரன்.

சக்தியின் முகத்தில் சிறு புன்னகை வந்து செல்ல, தாமோதரன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

சொல்லப் போனால் ஒருவித இறுக்கம் அவரிடம் தெரிய, புருவங்கள் நெறிய அவரைப் பார்த்தான்.

அவனின் பார்வையைச் சந்திக்காமல் மகளை முதலில் தேவி வீட்டுக்கு அனுப்பி வைத்தவர், நிதானமாக அவனின் புறம் திரும்பினார்.

“சக்தி உங்களைப் பத்தி சொன்னாள். நானும் விசாரிச்சேன். நீங்க நல்லவரா இருக்கலாம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவராகவும் இருக்கலாம். ஆனா…” என்று நிறுத்தினார்.

அவரின் ஆரம்பப் பேச்சிலேயே ஒரு ஒதுக்கம் இருப்பதைக் கண்டு கொண்டவன் கூர்மையுடன் பார்த்தான்.

“ஆனா… என்ன? சொல்லுங்க…” என்றான்.

“நான் சுத்தி வளைக்காம நேராவே சொல்லிடுறேன் தம்பி. இந்தக் கல்யாணம் நடக்காது…” என்றார் தாமோதரன்.

“ஏன்?” என்று உள்ளுக்குள் லேசான அதிர்வு இருந்தாலும் வெளியே நிதானமாகவே கேட்டான் சர்வேஸ்வரன்.

“கல்யாணத்துக்குப் பிறகு நீங்க உங்க கிராமத்தில் தான் செட்டில் ஆகப் போறீங்களாமே? சக்தி அங்கே எல்லாம் இருக்க மாட்டாள். அவள் சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவள். அவளுக்குக் கிராமம் எல்லாம் செட் ஆகாது…” என்றார்.

“இதைப் பத்தி நான் ஏற்கனவே சக்திக்கிட்ட பேசிட்டேன். அவள் எங்க ஊரில் இருக்கச் சம்மதம் சொன்னாளே?” என்று கேட்டான்.

“அவளுக்கு என்ன தெரியும் தம்பி? சின்னப் பொண்ணு. அதான் யோசிக்காம சொல்லியிருப்பாள்…” என்றார்.

“சின்னப் பொண்ணா?” என்றவனின் முகம் மாறியது.

“சக்தி ஒன்னும் பத்து வயசு சின்னப் பாப்பா இல்லை. படிச்சு முடிச்சு வேலைக்குப் போகிறாள். இருபத்தி மூன்று வயசு ஆகுது. சொந்தமா யோசித்து முடிவு எடுக்க அவளுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அவளைப் போய்ச் சின்னப் பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்கீங்க…” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.

“எத்தனை வயசு ஆனாலும் அவள் எனக்குச் சின்னப் பொண்ணு தான் தம்பி. வயது மட்டும் எல்லாத்தையும் முடிவு எடுக்கிற உரிமையைக் கொடுப்பதும் இல்லை. பக்குவமும், அனுபவமும் வேண்டும். இப்ப வேணும்னா காதல் மயக்கத்தில் உங்க கிராமத்தில் வந்து தங்குறேன்னு சொல்லியிருக்கலாம்.

ஆனால் கிராமத்து சூழ்நிலை தெரியாமல் வளர்ந்தவளுக்கு அங்கே வந்து தங்குவது எவ்வளவு கஷ்டம்னு புரியலை. எடுத்து சொன்னாலும் அவளின் காதல் மயக்கம் இப்ப எதையும் யோசிக்க விடாது. அதனால்…” என்று நிறுத்தினார்.

“அதனால்?” என்று கூர்மையுடன் கேட்டான்.

“நீங்களே அவளை வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுங்க…” என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சொல்ல, பட்டென்று சோஃபாவிலிருந்து எழுந்தான் சர்வேஸ்வரன்.

அவனின் தாடைகள் கோபத்தில் இறுகியிருந்தன.

அவனின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவரிடம் எந்த வார்த்தையும் விடவில்லை அவன்.

சர்வேஸ்வரன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் நின்று கொண்டிருந்த போது மோகன், தேவியுடன் அங்கே வந்தாள் சக்தி.

அவளின் கண்கள் ஆவலுடன் தந்தையையும், காதலனையும் நோக்கின.

ஆனால் தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கமும், காதலனின் முகத்தில் தெரிந்த கோபமும் அவளின் ஆவலை அடக்கின.

சக்தியின் வரவை கண்டு அவளின் புறம் திரும்பிய சர்வேஸ்வரன், “என்னை உனக்குப் பிடிக்குமா பிடிக்காதா சக்தி?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

சக்தி அவனிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. இப்போது இந்தக் கேள்விக்கு என்ன அவசியம் வந்தது என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“பதில் சொல் சக்தி!” என்றான் முன்பை விட அழுத்தமாக.

“இது என்ன கேள்வி ஈஸ்வர்? உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் தானே அப்பாகிட்ட பேச சொன்னேன்…” என்றாள்.

“எந்தச் சூழ்நிலையிலும் என் கூடவே இருப்பியா?” என்று சர்வேஸ்வரனின் அடுத்தக் கேள்வி அதிவேகமாக வந்து விழுந்தது.

இப்போதும் அவனைப் புரியாமல் பார்த்தாலும் “ஆமாம்” என்று சக்தி சொல்ல, சர்வேஸ்வரனின் உதடுகள் வெற்றி புன்னகையில் துடிக்க, தாமோதரனின் முகமோ மேலும் இறுகியது.

“என்னாச்சு ஈஸ்வர் எதுக்கு இந்தக் கேள்வி எல்லாம்?” என்று கேட்டாள் சக்தி.

“உன் அப்பா உன்னை விட்டுவிடச் சொல்றார். என்ன விட்டு விடட்டுமா?” என்று கேட்டான் சர்வேஸ்வரன்.

“வாட்!” என்று அதிர்ந்த சக்தி, தந்தையை நம்ப முடியாமல் பார்த்தாள்.