9 – மின்னல் பூவே

அத்தியாயம் – 9

“இவளா? இவள் எதுக்கு இங்கே வந்தாள்?” உத்ராவை மின்தூக்கியின் அருகில் பார்த்ததும் முகில்வண்ணனிற்கு முதலில் தோன்றியது இக்கேள்வி தான்.

ஆனால் சில நொடிகளிலேயே அவள் எதற்கு இங்கே வந்திருப்பாள் என்பதை அதிகச் சிரமம் இல்லாமலே புரிந்து கொண்டான்.

கேம்பஸ் இன்டர்வ்யூவில் தேர்வானவர்களுக்கு இன்று பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகின்றன என்று கேள்விப்பட்டிருந்தான்.

உத்ராவும் கேம்பஸ் இன்டர்வ்யூவில் தேர்வாகி இந்தக் கம்பெனிக்கு வந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

‘போயும் போயும் அவளுக்கு இங்கே தான் வேலை கிடைக்க வேண்டுமா?’ என்று நினைத்து மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

ஆனால் அடுத்த நொடியே, ‘இங்கே வேலை பார்க்கும் எத்தனையோ பேர்களில் அவளும் ஒருத்தி. அவளை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்று நினைத்தவன் அசட்டையாக அவளின் நினைவை ஒதுக்கித் தள்ளி விட்டான்.

அடுத்த நொடி அவனின் நினைவுகளை ஆக்கிரமித்தாள் அவனுக்கு நிச்சயம் செய்திருந்த கமலினி.

அவளை நினைத்ததும் அவனின் முகம் கனிந்தது.

அவனின் அன்னையும், தந்தையும் அவனுக்காக அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பெண் தான் கமலினி.

அவனின் அமைதியான குணத்திற்கு ஏற்றவள் வேறு. அவனே அமைதி என்றால் கமலினி அவனை விட அமைதியானவளாக இருந்தாள்.

கடந்த வாரம் தான் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தார்கள்.

நிச்சயம் முடிந்த பின்னும் கூட இன்னும் தன்னிடம் சகஜமாகப் பேச தயங்கி நாணும் அவளின் மென்மையான குணம் அவனை அவள் புறம் கவர்ந்திழுத்தது.

நிச்சயம் முடிந்த பின் இரண்டு முறை அவளிடம் போனில் பேசியிருக்கிறான். அப்போது அவன் தான் அதிகம் பேசினானே தவிர அவள் வெட்கத்துடன் ஆமா, இல்லை. என்பது போல் மென்மையாகத் தான் பேசினாள்.

கமலினியைப் பற்றி நினைத்ததுமே அவள் முகத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்ற, தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் கைபேசியில் இருந்த அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான்.

அவன் அருகில் அலங்காரப் பதுமையாக அதீத அழகுடன் நின்றிருந்த கமலினி கண்களை மட்டுமில்லாமல் மனதையும் கவர்ந்தாள்.

“நீ ரொம்ப ஷாப்ட் கமலி. மோதிரம் போட உன் விரலை பிடிச்ச போது உன்னோட மென்மை என்னை மயக்கிருச்சு. உன் தேகம் தான் மென்மைன்னு பார்த்தால் உன் மனசும் அவ்வளவு மென்மை.

என் கூடப் பேச எப்படியெல்லாம் வெட்கப்படுற? இன்னைக்கு நைட் உன் கூடப் பேசுவேன். இன்னைக்காவது எப்படிப் பேசுறன்னு பார்ப்போம்…” என்று செல்லமாக அவளிடம் மானசீகமாகப் பேசியவன், கண்கள் கனவில் மின்ன, உதட்டில் புன்சிரிப்பு தவழ சொக்கிப் போனான் முகில்வண்ணன்.

அவனுக்குப் பிடித்த மாதிரியே மென்மையான குணமுள்ள கமலினி அவன் வாழ்க்கை துணையாக வரப்போவது அவனின் மனதில் உற்சாகத்தை வர வைக்க, அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

இங்கே இவன் தன் வருங்கால மனைவியை நினைத்துக் கனவில் மிதக்க, இவனை மனதில் சுமந்து கொண்டிருப்பவளோ உள்ளுக்குள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு பத்து மணிக்குப் படுக்கையில் விழுந்து விட்டாள் உத்ரா.

முதல் நாள் வேலைக்குச் சென்று வந்த மகிழ்ச்சி, முகிலை பார்த்ததால் வந்த பரபரப்பு என்ற எந்த உணர்வுகளுமே அவளிடம் பிரதிபலிக்கவில்லை.

மனம் முழுவதும் வெறுமை அப்பிக்கிடந்தது.

படுத்து விட்டாலும் உறக்கம் என்பது அவளைச் சிறிதும் அண்டவில்லை.

என்றைக்கு முகில்வண்ணனிற்கு நிச்சயதார்த்தம் என்று கேள்விப்பட்டாளோ அன்றிலிருந்து அவளின் உறக்கம் அவளை விட்டு வெகுதூரம் போயிருந்தது.

தன் காதலுக்கு எதிர்காலம் இல்லை என்று முகில் பேசிய அன்றே தெரிந்து விட்டது தான். ஆனாலும் விரும்பிய மனம் அப்படியே தானே இருந்தது.

தன் ஒருதலை காதலைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளப் பழகியிருந்தாள்.

ஆனால் கமலினிக்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை முகில்வண்ணன் என்று தெரிந்த நாளிலிருந்து அவள் கஷ்டப்பட்டுப் புதைத்து வைத்துக் கொண்டிருந்த அவளின் காதல் உணர்வுகள் குமிழிகளாக மேலெழும்பி அவளை உயிரோடு வதைத்துக் கொண்டிருந்தது.

ஆம்! கமலினி வழியில் தான் முகில்வண்ணனின் திருமணம் முடிவானது பற்றி அவளுக்குத் தெரிய வந்தது.

உத்ராவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள் தான் கமலினி.

உத்ராவின் அப்பா வழி தாத்தாவும், கமலினியின் அப்பா வழி தாத்தாவும் உடன்பிறந்தவர்கள்.

ஒன்றுவிட்ட சொந்தமாக இருந்தாலும் உத்ராவின் குடும்பமும், கமலினியின் குடும்பமும் அதிக ஒட்டுதலுடன் தான் பழகி வந்தார்கள்.

கமலினி உத்ராவை விட ஆறுமாதங்கள் இளையவள்.

இப்போது கமலினிக்குத் திருமணம் முடிவாகியிருப்பதைப் பற்றி அன்னை அன்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள் உத்ரா.

“உத்ரா நம்ம கமலினிக்குக் கல்யாணம் முடிவாகியிருக்காம். அவ அம்மா இப்போ போன் பண்ணி சொன்னாள்…” என்ற அன்னையைப் பார்த்து முகம் மலர்ந்தாள் உத்ரா.

“கமலிக்கா? மாப்பிள்ளை யார்மா? எந்த ஊரு? என்ன வேலை பார்க்கிறார்?” என்று சந்தோஷமாக விசாரித்தாள்.

“மாப்பிள்ளை இந்த ஊர் தான். மாப்பிள்ளை சுத்தி முத்தி நம்ம சொந்தம் தான் வரும். சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கார். இதை எல்லாம் விட இன்னொரு விஷயம் கேட்டா ஆச்சரியப்படுவ. நீ கேம்பஸ்ல செலக்ட் ஆனாயே அந்தக் கம்பெனில வேலை பார்க்கிறார். வீடும் இந்த ஏரியாவில் தான் இருக்கு…” என்று அஜந்தா சொல்ல,

“அட! சூப்பர்மா. அப்போ கமலி கல்யாணத்துக்குப் பிறகு நம்ம ஏரியாவுக்கே வந்துடுவாள்னு சொல்லுங்க…” என்றாள் உத்ரா.

கமலினியின் வீடு அதே சென்னையில் இருந்தாலும் வெகுதூரத்தில் இருந்தது. அவளின் வீட்டிற்குச் செல்ல இரண்டு மணி நேர பயணம் ஆகும் என்பதால் இப்போது தன் ஒன்றுவிட்ட சகோதரி அருகிலேயே வரப் போவதில் உத்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“ஆமா, அதைத்தான் கமலி அம்மா விமலா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். எதுவும் ஆத்திர அவசரம்னா நாம பக்கத்தில் தான் இருக்கோம் என்பது ஒரு ஆறுதல்னு சொன்னாள்…” என்றார் அஜந்தா.

“மாப்பிள்ளை எப்படி இருப்பாராம் அம்மா? அதைப் பத்தி சித்தி எதுவும் சொன்னாங்களா?”

“வாட்ஸ்அப்ல மாப்பிள்ளையோட பயோடேட்டாவும் போட்டோவும் அனுப்புறதா சொன்னாள். இரு, இப்ப அனுப்பியிருக்காளான்னு பார்க்கிறேன்…” என்ற அஜந்தா தன் போனை எடுத்துப் பார்த்தார்.

“இதோ அனுப்பிட்டாள். மாப்பிள்ளை நல்லா லட்சணமா இருக்கார்டி…” என்று அஜந்தா பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே அவரின் போனை பறித்துப் பார்த்தாள் உத்ரா.

பெண் வீட்டில் காட்டவென்றே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் டிப்டாப்பாக உடையணிந்து, வசீகரமாகச் சிரித்துக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

அவனை மாப்பிள்ளையாகப் பார்த்த அடுத்த நொடி தன் கண்களையே நம்ப முடியாமல் அதிர்ச்சியில் தொப்பென்று கைபேசியைக் கீழே போட்டாள் உத்ரா.

“ஏய், பார்த்து உத்ரா. கேட்டா தர மாட்டேனா? இப்ப பார் வேகமாகப் பிடுங்கியதில் கீழே விழுந்திருச்சு…” மகளின் அவசரத்தில் தான் போனை தவற விட்டதாக அஜந்தா நினைக்க,

மகளோ தாள முடியா அதிர்வில் தான் கைபேசியைக் கீழே போட்டாள் என்பதை அறியாமல் போனார்.

முகில்வண்ணனின் வீடும் தன் வீடு இருக்கும் ஏரியா தான் என்று உத்ராவிற்கு நன்றாகவே தெரியும். அவனின் வீடு வேறு ஒரு தெருவில் இருக்கிறது என்றும் அவளுக்குத் தெரியும்.

ஒரே ஏரியா என்பதால் அவனை இந்த இரண்டு வருடங்களில் சில இடங்களில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்திருக்கிறது.

அப்படித் தூரத்திலிருந்து பார்த்தாலும் அவனின் பார்வையில் பட்டுவிட மாட்டாள். தள்ளியே நின்று பார்த்துவிட்டு விலகிச் சென்று விடுவாள்.

அவனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்ததுண்டு. ஆனால் தெரிந்து என்ன ஆகப் போகின்றது என்ற விரக்தியில் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஆனால் இப்பொழுது அவள் விசாரிக்காமலேயே அவனைப் பற்றித் தகவல் தெரிய வந்த போது உடைந்து தான் போனாள்.

இன்னும் கைபேசியில் பார்த்த முகிலின் உருவம் அவளின் கண்ணை உறுத்த வெறுமனே தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது மாப்பிள்ளையின் பயோடேட்டாவை படித்து விட்டு நிமிர்ந்த அஜந்தாவின் முகத்திலும் அதிர்வு வந்திருந்தது.

மகளின் முகத்தைப் பதட்டத்துடன் பார்த்தார் அஜந்தா.

மகளின் முகத்திலிருந்த அதிர்ச்சியே தான் நினைத்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்த அஜந்தா மகளை உலுக்கினார்.

அவருக்கு முகில்வண்ணனின் பெயரும், விவரங்களும் தெரியும். உத்ரா தன் காதலைப் பற்றிப் பெற்றோரிடம் சொல்லும் போதே அவனைப் பற்றித் தான் அறிந்திருந்த தகவலை எல்லாம் தெரிவித்திருந்தாள்.

ஆனால் அவனின் முகத்தை அஜந்தா பார்த்ததில்லை.

விவரத்தைப் படித்தவருக்கு முகில்வண்ணன் என்ற பெயரே ஷாக் அடிக்க வைத்தது என்றால் மற்ற விவரங்களும் மகள் சொன்னதுடன் ஒத்துப்போக ‘இவன் மகள் காதலித்தவன் அல்லவா?’ என்று நினைத்தவர் மகளைப் பார்க்க, அவள் உறைந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து “உத்ரா…” என்று உலுக்கினார்.

“ஹான்… அம்மா, மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்மா. நம்ம கமலிக்குப் பொருத்தமா இருப்பார். அதை விட மாப்பிள்ளைக்கு நம்ம கமலி பொருத்தமா இருப்பாள்.

மாப்பிள்ளை எதிர்பார்ப்புக்கு ஏத்தமாதிரி அமைதியான பொண்ணா கமலி இருக்காள். ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கும்…” என்று சொன்னவளின் உதடுகளில் விரக்தி புன்னகை நெளிந்தது.

“உத்ரா, இந்தப் பையன்…” என்று அஜந்தா ஆரம்பிக்க,

“கமலிக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை மா…” அதை மட்டும் நினைங்க என்பது போல் சொல்லிவிட்டு எழுந்து அவள் தன் அறைக்குச் செல்ல, மகளை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார் அஜந்தா.

உள்ளே சென்றவளுக்குக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளுக்கு அழுகை கூட வருவேனா என்றது.

‘இந்தச் சண்டைக்காரிக்கு அழுகை கூட வராது போல’ என்று நினைத்துக் கொண்டவளின் மனதில் அண்டிக்கிடந்த வேதனை அவளின் முகத்தில் பிரதிபலித்தது.

மகளின் அருகில் வந்த அஜந்தா அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டார்.

அன்னையின் ஆறுதல் இன்னும் வேண்டும் போல் தோன்ற அவரின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள் உத்ரா.

மகளை மடிதாங்கி தலை கோதி விட்டு அவளுக்கு ஆறுதல் அளிக்க முயன்றவர், “அம்மா வேணும்னா ஏதாவது செய்யட்டுமாடா உத்ரா?” என்று மெல்லக் கேட்டார்.

அவரின் மடியில் மல்லாந்து படுத்து அன்னையின் முகத்தைப் பார்த்தவள், “என்னம்மா செய்யப் போறீங்க?” என்று யோசனையுடன் கேட்டாள்.

“அந்தப் பையன் வீட்டில் பேசிப் பார்க்கட்டுமா? விமலாகிட்ட கூடச் சொல்லிப் பேசலாம். விமலாவுக்கு உன் மனசு தெரிஞ்சா அவளும் கூட உனக்காக யோசிப்பா…” என்றார்.

“அம்மா, என்ன நீங்க? என்ன பேசுறீங்க?” என்று வேகமாக அவரின் மடியிலிருந்து எழுந்தாள்.

“நீ அந்தப் பையனை நினைச்சு இவ்வளவு உருகும் போது என்னால் உன்னை இப்படிப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியலை. அந்தப் பையனுக்குக் கல்யாணம் தானே பேசியிருக்காங்க. ஆனா இன்னும் கல்யாணம் முடியலையே? இப்பயே பேசுவோம்…” என்றார்.

“அவங்க வீட்டில் பேசலாம் மா. ஆனா முகில்? வாழ போறது முகில் தானே மா? என் முகத்துக்கு நேராக நீ எனக்குப் பொருத்தமான பொண்ணே இல்லைன்னு சம்பந்தப்பட்டவரே சொன்ன பிறகு யார்கிட்டயும் பேசுவது வீண் வேலைமா. அது எனக்கு அசிங்கமும் கூட…”

“நீ இவ்வளவு கஷ்டப்படுறீயே டி?”

“என்னை வேண்டாம்னு முகில் சொன்னப்பயே இனி அவருக்குன்னு ஒரு வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போய்டுவார்னு எனக்கு நல்லாவே தெரியும். அதை நினைச்சு என் மனசை தேத்தியும் வச்சுருந்தேன்.

ஆனால் இப்போ என் கண்ணு முன்னாடி முகில் கல்யாணம்னு கேள்விப்பட்டதும் கொஞ்சம் கஷ்டமாகிருச்சு. ஆரம்ப ஷாக் தான்மா. இன்னும் கொஞ்ச நாளில் இதையும் ஜீரணிக்கப் பழகிக்குவேன்…” என்று சொல்லி விட்டு அன்னையைப் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தாள் உத்ரா.

மகளின் உதடு தான் போலிப் புன்னகையைச் சிந்துகிறதே தவிர உள்ளம் அழுது கொண்டிருப்பது அந்தத் தாய்க்கு நன்றாவே தெரிந்தது.

மகளின் நிலை அவரின் கண்களைக் கலங்க வைக்கத் தயாரானது.

ஆனால் தான் அழுதால் அவள் இன்னும் உடைந்து போவாள் என்று நினைத்தவர், தன்னை அடக்கிக் கொண்டு மீண்டும் அவளை மடியில் படுக்க வைத்து இதமாகத் தடவிக் கொடுத்தார்.

அன்னையின் மடி தந்த சுகத்தில் தன் வேதனையை முழுங்க முயன்றாள் உத்ரா.

“விமலா பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு நம்மளை வரச் சொல்லியிருக்கா உத்ரா. நான் என்ன சொல்லட்டும்?” என்று மூன்று நாட்கள் கடந்த நிலையில் மகளிடம் தயக்கத்துடன் கேட்டார் அஜந்தா.

“நீங்க போய்ட்டு வாங்கமா…” அன்னையின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“நீ?”

“நான் வரலைமா. முகில் இன்னொரு பொண்ணு கூட நிற்கிறதைப் பார்க்கிற அளவுக்கு எனக்கு இன்னும் மன தைரியம் வரலை…” என்றவள் குரல் கரகரத்தது.

என்றைக்காவது பார்த்து தானே ஆக வேண்டும். ஏன் திருமணத்திற்கே போய்த் தான் ஆகவேண்டும். நிச்சயத்திற்கு உத்ரா வரவில்லை என்றாலே உறவுகளின் கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது. திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்க்கவே முடியாதே… என்று நினைத்து மகளை வேதனையுடன் பார்த்தார் அஜந்தா.

“கமலி கல்யாணத்துக்குள்ள என்னைத் தேத்திக்குவேன்” அன்னையின் எண்ணம் புரிந்தது போல் பதில் சொன்னாள் உத்ரா.

மகளின் மனநிலை புரிந்ததால் சொந்தங்களிடம் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்த அஜந்தா அவர் மட்டுமே கமலினி, முகில்வண்ணன் நிச்சயதார்த்தத்திற்குச் சென்று வந்தார்.

அதனால் உத்ரா, கமலினிக்குச் சொந்தம் என்று முகில்வண்ணனிற்குத் தெரியாமல் போனது.

இன்று வேலைக்குச் சென்ற இடத்தில் முகிலைப் பார்த்து விட்டு, புவனாவிடமும் விவரம் சொல்லிவிட்டு, வீட்டில் வந்து இரவு படுத்திருந்த உத்ராவின் மனம் இன்னும் நடந்ததை நினைத்து உழன்றதில் அன்றைய உறக்கத்தையும் தொலைத்திருந்தாள்.

அடுத்து வந்த பத்து நாட்கள் உத்ராவிற்கும், புவனாவிற்கும் பயிற்சி வகுப்புகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிந்தது.

அதன் பிறகு முகிலை அவ்வப்போது அலுவலகத்தில் எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் விலகிப் போகப் பழகிக் கொண்டாள் உத்ரா.

முகில் ஏற்கனவே அவளை வேண்டாதவள் போல் தான் பார்ப்பான். இப்போதோ இன்னும் ஒதுங்கிப் போனான்.

இருவரும் அவரவர் வழியில் ஒதுங்கிப் போக நினைக்க, சூழ்நிலையோ அவர்களை அப்படிப் போகவிடாமல் ஒரே இடத்தில் இழுத்துப் பிடித்தது.

பயற்சி வகுப்புகள் முடிந்து பதினோராவது நாள் வேலைக்கு வந்ததும் யார் யார் எந்த டீமில் வேலை செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

உத்ராவும், தானும் ஒரு டீம் என்று சொல்ல வேண்டுமே என்ற ஆர்வத்துடன் காத்திருந்தாள் புவனா.

அவள் எதிர்பார்ப்பு வீணாகாமல் அவளும், உத்ராவும் ஒரே டீம் என்று சொல்லப்பட்டது.

அதோடு யார் அவர்களின் டீம் லீடர் என்று சொல்ல, உத்ரா என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை.

‘இது நல்லதுக்கா? கெட்டதுக்கா?’ என்று தான் அவளுக்கு முதலில் தோன்றியது.

‘தான் விலக வேண்டும் என்று நினைத்தாலும் விதி என்னிடம் இப்படி விளையாட்டு காட்டுகிறதே…’ என்று நினைத்துக் கொண்டாள் உத்ரா.

அதே நேரம் தன் தலைமையில் செய்யப் போகும் பிராஜெக்ட்டிற்கு மேலிடம் கொடுத்த டீம் ஆட்களின் லிஸ்டில் உத்ராவின் பெயரைப் பார்த்து எரிச்சல் தான் அடைந்தான் முகில்வண்ணன்.