9 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 9

“இந்தச் சந்தேகத்தைக் கேட்கத்தான் இங்கே வந்தியா?” என்று கடுமையாகக் கேட்டான் கதிர்நிலவன்.

“இல்ல சார், அது சும்மா…” என்று தடுமாறியவள் சட்டென்று வாயை மூடிக்கொண்டாள்.

“இந்தா, கட்லட் செய்தேன் எடுத்துக்கோ…” என்று சிற்றுண்டியைக் கொடுத்தவன், அப்படியே காஃபியையும் கொடுத்தான்.

அவன் முகம் இப்போது கடுமையாக இல்லாததைப் பார்த்துக் கொண்டே தயங்காமல் அவன் கொடுத்ததை எடுத்துக் கொண்டாள்.

கட்லட்டை எடுத்து உண்டவள் அதன் சுவையில் முகம் மலர்ந்தாள்.

‘சார் ரொம்பச் சூப்பரா சமைப்பார் போலயே. கட்லட் டேஸ்ட் அள்ளுது. சாருக்கு வரப்போற மனைவி ரொம்பக் கொடுத்து வச்சவங்க…’ என்று நினைத்துக் கொண்டே உண்டாள்.

அதை அவனிடம் நேரடியாகச் சொல்லவும் அவளின் நாக்குத் துறுதுறுத்தது. ஆனால் அதற்கும் எதுவும் சொல்வானோ என்று பயந்தவள் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

“நல்லாருக்கு சார்…” என்று மட்டும் சொன்னாள்.

“ம்ம், என்ன டவுட்?” என்று கேட்டான்.

அவள் புத்தகத்தை விரித்து அவனிடம் நீட்டி தன் சந்தேகத்தைக் கேட்க, அதைத் தெளிவுபடுத்த ஆரம்பித்தான்.

அரைமணி நேரம் அவளின் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டவள் அவனிடம் விடைபெற்று சென்றாள்.

இளங்கலை படிப்பின் இறுதி தேர்வும் நடைபெற்று மாணவர்கள் கல்லூரியின் கடைசி நாள் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டனர்.

கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்தாள் நயனிகா.

அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் தன் தம்பியுடன் கோவிலுக்குச் சென்றாள்.

சந்நதியில் நின்று இறைவனைத் தொழுதுவிட்டு நிமிர்ந்த போது எதிரே கதிர்நிலவன் நின்றிருந்தான்.

கண்களை மூடி மனமுருக வேண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

அர்ச்சனை தட்டு வாங்க அய்யர் வர, சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொன்னான்.

“அக்கா, போகலாமா?” என்று தயா அழைக்க,

“இன்னும் கொஞ்ச நேரம் இருடா…” என்ற அவள் குரல் கேட்டு அவளின் பக்கம் திரும்பிப் பார்த்தான் கதிர்நிலவன்.

அவனைக் கண்டதும் அவள் புன்னகைக்க, அவனும் லேசான புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.

“நான் விளையாட போகணும் நீ மட்டும் கோவிலுக்குப் போன்னு சொன்னேன். அம்மாவை ஐஸ் பண்ணி என்னையும் கூட்டிட்டு வந்துட்ட. அதான் சாமி கும்பிட்டாச்சுல? வா…” என்று நச்சரிக்க ஆரம்பித்தான் தயா.

“உன்னோட பெரிய ரோதனைடா. நிம்மதியா சாமி கூடக் கும்பிட விடுறீயா?” என்று அலுத்துக் கொண்டே தம்பியுடன் கிளம்ப ஆரம்பித்தாள்.

அப்போது அர்ச்சனை முடிந்து தானும் அவர்கள் பின்னால் வந்த கதிர்நிலவன் கோவில் வாசலில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அருகில் சென்றான்.

“அம்மா, இன்னைக்கு யாராவது ஒரு வயசான அம்மாவுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பேன். நீங்க புடவையை வாங்கிப்பீங்களா?” என்று ஒரு புடவை இருந்த கவரை நீட்டினான்.

“கொடு ராசா…” என்று அந்த மூதாட்டி ஆசையாக வாங்கிக் கொண்டார்.

“இன்னைக்கு என்ன விஷேசம் ராசா?” என்று புடவையைக் கவரில் இருந்து எடுத்து ஆர்வமாகத் தடவி பார்த்துக் கொண்டே கேட்டார்.

“இன்னைக்கு என்னோட பிறந்தநாள் மா…” என்றான்.

“பொறந்தநாளாயா? மகராசனா இருய்யா. நீ நல்லா இருக்கணும்யா…” என்ற அந்த மூதாட்டியின் ஆசிர்வாதத்தில் கனிந்த கண்களுடன் நன்றி சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றான்.

“டேய் தயா, இன்னைக்குச் சாருக்கு பிறந்தநாளாம்டா…” என்று அவர்கள் பேசுவதைக் கவனித்த நயனிகா தம்பியிடம் சொல்ல,

“போய் விஷ் பண்ணுவோமா?” என்று கேட்டான்.

“இல்லடா, நாம இப்ப கிப்ட் எதுவும் வாங்காம திடீர்ன்னு எப்படி விஷ் பண்றது?”

“அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற? இப்ப கிப்ட் வாங்க போறீயா?”

“ம்ம்…” என்று சில நொடிகள் யோசித்தவள், “இப்படிச் செய்தால் என்னடா?” என்று கேட்டு தன் யோசனையைச் சொன்னாள்.

“சாருக்கு பிடிக்குமோ என்னவோ?” என்ற தயாவின் குரலில் தயக்கம் இருந்தது.

“ம்ம், அந்தச் சந்தேகமும் எனக்கு இருக்கு. ஆனா அதுக்காக இந்த நாளை சாதாரணமா விடவும் மனசு இல்லைடா…” என்றாள்.

“சரி, இப்ப என்ன பண்ணலாம்?”

“அம்மாவுக்குப் போன் போட்டு சொல்லிட்டு கடைக்குப் போகலாம்…” என்றாள்.

இருவரும் உடனே கடைக்குக் கிளம்பினர்.

மாலை ஏழு மணியளவில் இரவு உணவு தயார் செய்யச் சமையலறைக்குச் சென்று கொண்டிருந்த கதிர்நிலவன், அழைப்புமணி ஓசை கேட்டு கதவைத் திறந்தான்.

வெளியே தயா நின்றிருந்தான்.

“வா தயா, என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“அக்கா உங்ககிட்ட பேசணுமாம் சார். மாடியில் இருக்கா. வர முடியுமா?” என்று கேட்டான்.

“ஏன் என்னாச்சு தயா? எதுவும் பிரச்சனையா?” யோசனையுடன் கேட்டான் கதிர்நிலவன்.

“நீங்களே வந்து கேளுங்களேன் சார்…” என்று தயா எதுவும் சொல்லாமல் அழைக்க, ‘முன் போல எதுவும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளா என்ன?’ என்று நினைத்த கதிர்நிலவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

“நீ போ. நான் கதவை மூடிட்டு வர்றேன்…” என்றான்.

கதிர்நிலவன் மாடிக்கு சென்று கால் வைத்த அடுத்த நொடி,

“ஹேப்பி ப்ரத்டே டூ யூ…”
“ஹேப்பி ப்ரத்டே டூ யூ…”

என்ற பாடலுடன் தயாவும், அபிராமியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்திய வண்ணம் வர, அவர்களுக்கு நடுவில் சிறிய கேக்கை தூக்கி கொண்டு வந்தாள் நயனிகா.

மாடியில் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பாராத கதிர்நிலவன் இன்பமாக அதிர்ந்தான்.

அங்கே இருந்த ஸ்டூலில் கேக்கை வைத்த நயனிகா, “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார். வாங்க கேக் வெட்டுங்க…” என்று அழைத்தாள்.

“எதுக்கு இதெல்லாம்?” என்று கேட்டபடி அவர்களின் அருகில் வந்தான்.

“உங்க பிறந்தநாள்னு தெரிஞ்சிருந்தால் காலையிலேயே கேசரி கிண்டி கொடுத்திருப்பேன் தம்பி. இப்ப தான் கோவிலுக்குப் போனப்ப விஷயம் தெரிஞ்சி வந்து பிள்ளைங்க சொன்னாங்க. சங்கடப்படாமல் கேக் வெட்டுங்க தம்பி…” என்றார் அபிராமி.

“கேக் வெட்டி எல்லாம் நான் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லைமா…” என்று தயங்கினான் கதிர்நிலவன்.

“இதுவரைக்கு இல்லைனா என்ன சார். இப்ப தான் நாங்க இருக்கோமே. வெட்டுங்க சார்…” என்றாள் நயனிகா.

“ம்ம்…” என்று தயங்கினாலும் தன் வழக்கம் போல் இடது கையால் கேக்கை வெட்டினான்.

முதல் துண்டை அவன் தயாவிற்கு நீட்ட, “இது அக்கா ஐடியா தான் சார். முதலில் அவளுக்குக் கொடுங்க…” என்றான்.

“ஓ, தேங்க்யூ நயனிகா…” என்றவன் அவளின் கையில் கேக் துண்டை கொடுத்தான்.

அவனிடம் பாதியை வாங்கிக் கொண்டவள், “இதை நீங்க சாப்பிடுங்க சார்…” என்று மீதி துண்டை அவனிடமே கொடுக்க, அதைத் தான் உண்டான்.

அடுத்து தயாவிற்கும், அபிராமிக்கும் வெட்டிக் கொடுக்க அவர்களும் உண்டார்கள்.

“என் பிறந்தநாளை நான் இப்படிக் கொண்டாடுவேன்னு எதிர்பார்க்கவே இல்லைமா. முதல் முறையா இப்படிக் கொண்டாடுறேன்…” என்றான் அபிராமியிடம்.

அவனின் மனம் நெகிழ்ந்திருந்தது.

“ஏன் தம்பி, சின்ன வயதில் கொண்டாடலையா?” என்று கேட்டார்.

“இல்லமா. அப்போ அம்மாவும், நானும் மட்டும் தான். அம்மா எனக்காகக் கோவிலில் அர்ச்சனை செய்வாங்க. வீட்டில் ஏதாவது ஸ்வீட் செய்து கொடுப்பாங்க. அதோட ஒரு புது ட்ரெஸ். அவ்வளவு தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.

அதுவே எனக்கு ரொம்பச் சந்தோசம் தரும் நாளா இருக்கும்…” என்றவன் கண்கள் அம்மாவுடன் இருந்த நிகழ்வுகளை நினைத்துக் கனவில் மிதந்தன.

“தம்பி… இப்போ அம்மா?” என்று அபிராமி கேட்க,

கனவில் இருந்து வெளியே வந்தவன் ஒரு பெருமூச்சு விட்டு, “காத்தோடு கலந்துட்டாங்க…” என்றவன் வானத்தை நோக்கி வெறுமையாகப் பார்த்தான்.

அவனின் வருத்தம் புரிந்து மற்றவர்களும் அமைதியாக இருந்தனர்.

அவனின் வருத்தத்தைக் கண்டு கொண்டிருந்த நயனிகாவும் அவனுக்காக வருத்தப்பட்டாள்.

“கவலைப்படாதீங்க தம்பி. அம்மா எங்க இருந்தாலும் உங்களைப் பார்த்துட்டே இருப்பாங்க. அவங்க ஆசீர்வாதம் என்னைக்கும் உங்களுக்கு இருக்கும். இன்னைக்கு நைட் டின்னர் நம்ம வீட்டில் தான் தம்பி. வீட்டுக்கு வந்திடுங்க…” என்று அழைத்தார் அபிராமி.

“இல்லமா, வேண்டாம். நானே ரெடி பண்ணிடுவேன்…” என்று மறுத்தான்.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க தம்பி. நீங்க என்ன தினமுமா எங்க வீட்டில் வந்து சாப்பிட போறீங்க? இன்னைக்கு உங்க பிறந்தநாள் ஸ்பெஷல் தம்பி. உங்க அம்மா கையால் சாப்பிடுவது போல நினைச்சுட்டு இன்னைக்கு இந்த அம்மா கையில் சாப்பிடுங்க…” என்றார் அவன் மறுக்க முடியாதவாறு.

அவன் அப்போதும் தயங்கி நிற்க, “சும்மா வாங்க சார். அம்மா சமையல் நல்லா இருக்கும். இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டலாம்…” என்றான் தயா.

அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தவன், “சரிமா, வர்றேன்…” என்றவன், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாமா? என் அம்மா பேரும் அபிராமி தான். அதனால் தான் நான் உங்களை ஆன்ட்டின்னு கூப்பிடாம அம்மான்னு கூப்பிடுறேன். நீங்க அம்மா கையால் சாப்பிட வான்னு சொல்லும் போது என் அம்மாவே நேரில் வந்து கூப்பிட்ட போல இருக்கு…” என்றவன் குரல் கனிந்து ஒலித்தது.

“நீங்க என்னை அம்மான்னு கூப்பிடுவதில் சந்தோஷம் தம்பி. சரி தம்பி, நான் போய்ச் சாப்பாடு தயார் பண்றேன். நீங்க வந்திடுங்க…” என்றவர், “நயனி, தயா கீழே வாங்க…” என்று பிள்ளைகளையும் அழைத்தார்.

“நீங்க வரலையா சார்?” என்று நயனிகா கேட்க,

“நீ போ… நான் அப்புறம் வர்றேன்…” என்றான்.

அவளும் சென்றதும் அவ்விடம் அமைதியாகி விட, அந்த அமைதியில் தன் அன்னையின் நினைவுகளை மீட்டெடுக்க ஆரம்பித்தான்.

அன்னையுடன் வாழ்ந்த தருணங்கள் அவனின் மனதில் உலா போக, நேரம் கடந்து சென்றதை மறந்து வான்வெளியை பார்த்தபடி அப்படியே நின்று விட்டிருந்தான்.

“சார், சாப்பாடு ரெடி ஆகிடுச்சு சாப்பிட வர்றீங்களா?” என்று அழைத்த நயனிகாவின் குரலில் தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தான்.

ஆனாலும் அன்னையின் நினைவில் மனம் நெகிழ்ந்திருந்தவன் வானத்தைப் பார்த்த வண்ணமே, “என்னோட அம்மா ஞாபகம் என்னைக்கும் என் மனதை விட்டு நீங்கியது இல்லை நயனிகா. ஆனா இன்னைக்கு அவங்க ஞாபகம் என்னை உருக்குது. இப்பவே அம்மாவின் மடி வேண்டும் போல, அவங்க மடியில் தலை வைத்து சுருண்டு படுத்துக்கணும் போல இருக்கு.

அம்மா அப்படியே என் தலையைக் கோதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜான்னு சொல்லி நெற்றியில் முத்தமிட மாட்டாங்களான்னு ஒரு தவிப்பு எழுந்து அப்படியே என் நெஞ்சை அடைக்குது. ஆனா இது எதுவுமே இனி எனக்குக் கிடைக்காது என்ற உண்மை என் முகத்தில் அறையும் போது… அப்படியே… அப்படியே… நானும் என் அம்மாகிட்ட போயிட்டா என்னன்னு தோணுது…” என்று ஏதோ மோனநிலையில் இருந்த வண்ணம் தொண்டையடைக்கப் பேசிக் கொண்டே போனவனின் பேச்சைக் கேட்டுச் சிலையாகச் சமைந்து போனாள் நயனிகா.

அவன் இவ்வளவு மனம் உடைந்து போய் அவள் பார்த்ததே இல்லை. முடிந்தவரை அவனின் இயல்பை அவன் வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.

அவன் பேச பேச அப்படியே அவனை மடி தாங்கி, தலை கோதி, நெற்றியில் முத்தமிடும் ஆர்வம் கிளர்ந்து எழ, தன்னை அடக்கி கொள்ளவே பெரும்பாடு பட்டுப் போனாள் நயனிகா.

அதிலும் அவன் அம்மாவிடம் சென்று விட வேண்டும் போல் உள்ளது என்று சொல்லவும் அவளின் நெஞ்சம் பதறிப் போனது.

அவனின் தோளில் தன் நடுங்கும் கரத்தை வைத்தவள், “சார்…” என்று குரலடைக்க அழைத்தாள்.

அவளின் தொடுவுணர்வில் சட்டென்று தன் நினைவிற்கு வந்தவன், “ஹான்… ஒன்னுமில்லை நயனிகா. இதோ வர்றேன்…” என்று அவளின் புறம் திரும்பாமல் தன் கண்களை நாசுக்காகத் துடைத்துக் கொண்டான்.

அதிலேயே அவன் அழுதிருக்கிறான் என்று புரிய தவித்துத் துடித்துப் போனாள் நயனிகா.

அவளின் புறம் திரும்பிய போது அவனின் கண்களில் கண்ணீர் இல்லையென்றாலும் அவன் கண்ணிமைகள் நனைந்து போயிருந்ததைக் கண்டாள்.

அவனை அப்படிப் பார்க்க அவளின் மனது பிசைந்தது.

அவனை அப்படியே இழுத்து அணைத்து தனக்குள் அடக்கி கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற உணர்வு சட்டென்று எழுந்து அவளைத் தத்தளிக்க வைத்தது.

தனக்குத் தோன்றிய புதுவிதமான உணர்வில் அவஸ்தைப்பட்டுப் போனாள் நயனிகா.

“வா… கீழே போகலாம்…” என்றவன் தன் தோளிலிருந்த அவள் கையை எடுத்து விட்டான்.

அப்போது தான் இவ்வளவு நேரம் அவன் தோளில் தான் கை வைத்திருந்ததை உணர்ந்தாள்.

ஆனால் அவன் தோளில் தான் கை வைத்திருந்தது அவளுக்கு வித்தியாசமாகவே தோன்றவில்லை.

‘உரிமையானவனை உரிமையுடன் தொடும் உணர்வு தானே தனக்குள் எழுந்தது’ என்று நினைத்தவளுக்கு மனது படபடவென்று அடிக்க ஆரம்பித்தது.

முன்னால் நடக்க ஆரம்பித்தவன் பின்னால் மந்திரித்து விட்டது போல் நடக்க ஆரம்பித்தாள் நயனிகா.

“சார் இல்லையாமா?” இரவு உணவை நயனிகாவின் வீட்டில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த போது கேட்டான் கதிர்நிலவன்.

“இல்லை தம்பி. ஆபிஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். வர இரண்டு நாள் ஆகும்…” என்றார் அபிராமி.

இரவு உணவாகச் சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும், சிக்கன் மஞ்சூரியனும் தயார் செய்திருந்தார்.

“டின்னர் ரொம்ப நல்லா இருக்குமா. என் பிறந்தநாளை இன்னைக்குச் சிறப்பான நாளா மாற்றிய உங்களுக்கு எல்லாம் என்ன கைம்மாறு செய்றதுனே தெரியலை…” என்றான்.

“இருக்கட்டும் தம்பி. நீங்களும் இந்தக் குடும்பம்னு நினைச்சுக்கோங்க. வித்தியாசமா தெரியாது…” என்றார் அபிராமி.

‘இவரும் எங்க குடும்பத்தில் ஒருவரானால் எப்படி இருக்கும்?’ என்று நினைத்துப் பார்த்த நயனிகாவிற்கு மனம் சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது.

அவனின் எதிராக அமர்ந்து உண்டு கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து கீழ் பார்வையாக அவனைப் பார்த்தாள்.

இவ்வளவு நாள் அவனைத் தன் ஆசிரியராகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இன்று வேறு மாதிரியாகப் பார்க்க தோன்றியது.

ஒரு அழகான, இளமையான, கம்பீரமான இளைஞனாக அவளின் கண்களைக் கவர்ந்தான் கதிர்நிலவன்.

அவன் உணவு உண்டு முடித்து அவர்களிடம் விடைபெற்று கிளம்பும் போது, ‘அவன் இங்கேயே இருந்தால் தான் என்ன? இப்போது ஏன் செல்கிறான்?’ என்று மனது சிணுங்கியது.

அவன் சென்றதும் தன் வீடே தனக்கு அந்நியமாகி விட்டதைப் போல் உணர்ந்தாள்.

நயனிகாவின் நினைவுகள் முழுவதும் கதிர்நிலவனைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது.

“அக்கா, எந்தக் கனவு உலகத்தில் இருக்க? இன்னைக்கு நைட் டீவியில் படம் பார்க்கலாமான்னு கேட்டேன்?” என்று தயா அவளைப் போட்டு உலுக்க,

“இல்லடா, நீ பாரு. எனக்குத் தூக்கம் வருது…” என்று வேகமாகத் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அவளை விநோதமாகப் பார்த்தான் தயாகர்.

எப்போதும் அவள் தான் இரவு படம் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பாள். இன்று மறுத்து விட்டு செல்பவளை கண்டு அவனுக்குப் புதிதாகத்தான் தெரிந்தது.

தன் படுக்கையில் வந்து படுத்த நயனிகாவிற்கு மொட்டைமாடியில் தன் அம்மாவை நினைத்து நெகிழ்வுடன் பேசிய கதிர்நிலவன் தான் கண்ணுக்குள் வந்து நின்றான்.

‘தனக்கு ஏன் அப்படித் தோன்றியது? அவனின் அன்னை தானே அவனை மடி சாய்த்துக் கொள்ள வேண்டும், தலை கோத வேண்டும். நெற்றியில் முத்தமிட வேண்டும் என்று சொன்னான். ஆனால் அதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றிய ஆர்வத்திற்கும் துடிப்பிற்கும் என்ன அர்த்தம்?

அவனைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றிய தனது புதுவிதமான உணர்வுக்கு என்ன அர்த்தம். அவன் ஏன் இங்கேயே இருக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்த்தது? அவன் சென்றது ஏன் தன்னை விட்டே சென்றது போல் மனது வலித்தது?’ என்று தன்னையே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டவளுக்குத் திடீர் ஞானோதயம் வந்தது போல் சற்று நேரத்தில் பதில் கிடைத்தது.

தாய்க்குப் பின் தாரம் தான் ஓர் ஆண் மகனை மடி சாய்த்துக் கொள்ள முடியும் என்று கிடைத்த பதிலில் இன்பமாக அதிர்ந்து விதிர்த்து படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தாள்.

அதன் தொடர்ச்சியாகக் கிடைத்த மற்ற கேள்விகளுக்கான பதிலும் அவளின் மனதை அவளுக்கே வெளிச்சம் போட்டு காட்ட, மனம் மயங்கி போய் இனிய கனவுகளுடன் மீண்டும் படுக்கையில் விழுந்தாள் நயனிகா.