9 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
பதட்டமாக ஓடி வந்தவளுடன் பட்டையைப் போட்டவனும் சேர்ந்து தடுமாறி வயலில் விழுந்து கிடந்தனர்.
தான் விழுந்து விடாமல் இருக்க, அவளைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் அவளின் இடையை அழுத்தமாகப் பற்றியிருந்தான் வைரவேல்.
உடல்கள் இரண்டும் ஒட்டி உரசி கொண்டிருக்க, சட்டென்று சுதாரித்தாள் தேன்மலர்.
“யோவ், குடிகாரப் பயலே… எம்மை விடும்…” என்றவள் தன் இடையிலிருந்த அவனின் கையை விடுவிக்க முயல,
அவனோ, “ஏய், கைய எடுக்காத, விழுந்துடுவ…” தாங்கள் விழுந்ததைக் கூட உணராமல் பிதற்றிக் கொண்டிருந்தான்.
“ஏற்கனவே விழுந்தாச்சு. இனி எங்கன விழ? விடும்யா…” என்றாள் சுள்ளென்று.
“அச்சோ! விழுந்து போட்டியா? அடிப்பட்டுருச்சா? எங்கன அடிப்பட்டுச்சு? என்னைய பிடிச்சுக்கிட்டு நிலையா நின்னுருக்கலாம்ல…” அவன் தான் அவளையும் விழ வைத்தவன் என்று புரியாத நிலையில் அக்கறை பட்டுக்கொண்டான்.
“உம்ம அக்கறைல தீய வைக்க. மூச்சு முட்ட குடிச்சுப் போட்டு வந்து அலும்பு பண்ணாதேயா. அந்தப் பன்னாடை வேற தொரத்திக்கிட்டு வந்தான். விட்டு தொலையும். நா வூருக்குள்ளார போய்த்தேன் தப்பிக்க முடியும்…” என்று பதட்டத்துடன் புலம்பிக் கொண்டே தன் இடையிலிருந்த அவனின் கையை விலக்க முயன்றாள்.
அவனோ இன்னும் அழுத்தமாக அவளின் இடையைப் பற்றிக் கொண்டவன், “என்னது? தொரத்திட்டு வந்தானா? எவன் அவன்? அவனை நா ஒரு கை பார்த்து போடுறேன். நீ இங்கனயே இரு…” என்று அவளை விட்டு எழுந்து கொள்ள முயன்றான்.
ஆனால் எழுந்து கொள்ள முடியாமல் கால்கள் தள்ளாடின.
அதோடு அவளின் சேலையில் அவனின் கால்கள் சிக்கியிருந்தன.
“யோவ், இருய்யா சேலையை அவுத்துப் போடாத!” என்று அதட்டி அலறினாள்.
“ச்சே, ச்சே தப்பு. சேலையை எல்லாம் அவுக்க மாட்டேன். நா நல்லவன். நா அவனை அடிக்கப் போறேன் இரு…” என்று அவளின் சேலையில் சிக்கிய தன் கால்களை விலக்க முயன்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆனால் இருட்டிலும், அவனின் போதையிலும் கால் எங்கே சிக்கியிருக்கிறது என்பதையே கண்டறிய முடியவில்லை. குனிந்து கால் எங்கே மாட்டியிருக்கிறது என்று பார்க்க முயன்றவன் போதையில் தடுமாறி மீண்டும் அவளின் மீதே விழுந்து வைத்தான்.
“அடப்பாவி! ஏ இடுப்பை உடைச்சுப் போடாதே!” என்று தேன்மலர் வலியில் கத்த, அந்த நேரம் சரியாக அவர்களின் மீது விளக்கு ஒளி பாய்ந்து அவர்கள் படுத்திருக்கும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
“ஹான், இப்ப வெளிச்சம் வந்துருச்சு. இரு, ஒ சேலையில தேன் ஏ காலு மாட்டிருக்கு…” என்று வைரவேல் மும்முரமாகத் தன் காலை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க, தேன்மலரோ தங்களைச் சுற்றிலும் விழுந்த விளக்கு வெளிச்சத்திலும், சுற்றி நின்றுகொண்டிருந்த ஆட்களைக் கண்டும் அதிர்ந்து போனாள்.
“நல்லா பாருங்கயா. என்னமோ நா சொன்னதை நீங்க யாருமே நம்ப மாட்டோம்னு சொன்னீக? பரம்பரை புத்தி போவாம வெட்ட வெளியில இவன் கூடப் படுத்து உருண்டுக்கிட்டு கிடக்கா…” என்று அந்த ஆட்களுக்கு நடுவில் நின்று சொல்லிக் கொண்டிருந்தான் ராமர்.
அவனின் கண்களில் வன்மம் பளபளத்தது.
அவளைத் துரத்திக் கொண்டு வந்தவன் வைரவேலுவின் மீது மோதி விழுந்ததைப் பார்த்ததும், அவனுக்கு வேறு எண்ணம் வலுத்தது.
அவளின் ஒழுக்கம் ஊருக்குள் நல்லபடியாகப் பேசும் வரை தானே தான் அவளை வன்புணர்வு செய்தால் தன்னை ஊரார் தூற்றுவர்.
இதுவே அவளை ஒழுக்கம் கெட்டவள் தான் என்று ஊரார் முன் உறுதிபடுத்தி விட்டால் இன்று இல்லை என்றாலும் பின்னால் எப்போதாவது அவளைத் தான் வலுக்கட்டாயமாக அடைந்தாலும் ஊரார் அவளைத் தான் குறை சொல்வார்கள்.
தான் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் சடுதியில் தோன்ற, அதனை உடனே செயல்படுத்திவிடும் முடிவுடன் ஊருக்குள் ஓடியவன், ஊராரை அழைத்து வந்து விட்டான்.
“ஆத்தாளும், மகளும் பரம்பரை தொழிலை விட்டுப்போட்டாகனு இல்ல இம்புட்டு நாளும் நினைச்சுப் போட்டுக் கிடந்தேன். இன்னும் அவ பாட்டி பார்த்த தொழிலில் தேன் கிடக்கான்னு இப்பத்தானே புரியுது…” என்று ஒரு கிழவி நாடியில் கை வைத்து நொடித்துக் கொண்டார்.
அக்கிழவியின் கூற்றில் பதறிப் போனவள், தன் காலருகில் குனிந்திருந்த வைரவேலுவை தள்ளி விட்டுவிட்டு வேகமாக எழுந்து நின்றாள் தேன்மலர்.
“ஆத்தா கூட ஒழுக்கமா தேன் வாழ்ந்தா. ஆனா ஆத்தா எப்ப சாவான்னு காத்து கிடந்தவப் போல, அவ போய்ச் சேர்ந்ததும் மவக்காரி இப்படி இறங்கிப் போயிட்டாளே…” என்று இன்னும் ஒருவர் அவளைச் சாட,
“அய்யோ! இல்ல…” என்று பதட்டமாக மறுத்தாள் தேன்மலர்.
“அதானே, இவனும் பொஞ்சாதியை இழந்து போட்டு ராவு ஆனா வயலு பக்கமே சுத்திக்கிட்டுக் கிடந்தான். பொஞ்சாதி நினைப்பு தேன் போலன்னு நினைச்சா, இவன் இவளை பார்க்கத்தேன் வந்தான் போல…” என்று தேன்மலரின் பதட்டத்தை எல்லாம் மதிக்காமல் கூட்டத்தோட நின்றிருந்த கனகா நொடித்துக் கொண்டாள்.
“அதுவும் நிசந்தேன் போல, அதான் இவ ஆத்தா ஜன்னி வந்து கிடந்த போது நம்ம யாருக்குமே தெரியாதது இவனுக்குத் தெரிஞ்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்கான்னா சும்மாவா?
அவுகளுக்குள்ள ஏதோ இருக்குய்யா. அப்படி இல்லாமயா, இவ ஆத்தாளுக்குக் காரியம் செய்ய முதல் ஆளா நின்னுருப்பான்?” என்று இன்னும் ஒருவர் சாதாரணமாக நடந்ததற்கு எல்லாம் கண், காது, மூக்கு வைத்து பூச்சூடி ஜோடித்துப் பார்த்தார்.
போதையில் இருந்த வைரவேல் அப்போது தான் எழுந்து நிற்க முயன்று முடியாமல் அருகில் நின்றிருந்த தேன்மலரின் கையைப் பிடித்து நின்று, சுற்றி நின்றவர்களைப் புரியாமல் பார்த்தான்.
அவர்களின் பேச்சில் உறைந்து நின்று போயிருந்த தேன்மலர், அவனின் கை தன் மேல் பட்டதும் பட்டென்று விலகி நின்றாள். அதில் அவன் தடுமாறிக் கொண்டே நின்று கொண்டிருந்தான்.
“அய்யா, இங்கன என்ன நடந்ததுன்னு தெரியாம நீங்களா ஒன்னை முடிவு கட்டாதீக. இந்த ராமருதேன்…” என்று தேன்மலர் உண்மையைச் சொல்ல வர,
“ஆமா நாந்தேன் நீயும், இவனும் இப்படி வெட்ட வெளில உருண்டுக்கிட்டு கிடந்ததைப் பார்த்து வூருக்காரங்களைக் கூட்டி வந்தேன். ஒ லட்சணம் இப்பத்தானே எமக்குத் தெரியுது. அது வூருக்காரகளுக்கும் தெரியட்டும்…” என்றான் எகத்தாளமாக.
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாத மனநிலையில் நின்றிருந்தான் வைரவேல்.
அவனின் போதை அவன் புத்தியை மழுங்கடித்திருந்தது.
“இவுக என்ன பேசிக்கிறாகப் புள்ள?” என்று அருகில் நின்றிருந்த தேன்மலரிடம் அப்பாவி போல் கேட்டு வைத்தான்.
‘இந்தாளு வேற?’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டவள், “இந்த ராமரு பொய் சொல்றான். அவன் தேன் எங்கிட்ட தப்பா நடந்துக்க வந்தான். நா அவன்கிட்ட இருந்து தப்பிக்கும் போது, இந்தாளு மேல தெரியாம மோதிட்டேன். என்னைய நம்புங்க…” என்றாள் ஊராரை பார்த்து.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அடிப்பாவி! இப்படி எம் மேல அபாண்டமா பழி போடுறாளே! இந்த அநியாயத்தைக் கேட்க ஆளு இல்லையா? ஏ கனகா, நீ வேலு வயலுக்கு வேலைக்குப் போறவ தானே? நீயே சொல்லு. இவகளுக்குள்ள பழக்கம் இருக்குல?” என்று நல்லவன் போல் நடித்தவன், கனகாவையும் தன் துணைக்குச் சாட்சியாக அழைத்தான் ராமர்.
“நிசந்தேன். நானே இவகளை நிறையா தடவை சோடியா பார்த்துருக்கேன். இவன் அவளுக்குச் சோறு கொண்டு போறதும், அவ வூட்டுல ராவுல எம்புட்டு நேரமானாலும் இருக்குறதும் நடக்குறது தேன். இதோ இந்தச் சாந்தி கூடப் பார்த்துருக்கா…” அவள் சாந்தியை சாட்சிக்கு அழைக்க, அவளும் அரையும் குறையுமாகத் தலையாட்டி வைத்தாள்.
“இந்த வேலு பய குடிச்சுப் போட்டு விழுந்து கிடந்தப்ப எல்லாம் இந்தப் புள்ள அவனைக் கட்டிப்பிடிச்சு தூக்கிட்டுப் போயி அவன் வூட்டுல கொண்டாந்து விட்டுப் போட்டுப் போயிருக்கு. அதெல்லாம் எந்தக் கணக்குல சேர்த்தி?” என்று யாரோ ஒருவர் சொல்ல என, ஊரே இருவரையும் இணைத்து மாறி மாறி பேச ஆரம்பித்தது.
வைரவேலும், தேன்மலரும் மாறி மாறி மனிதாபிமான முறையில் உதவி செய்து கொண்டது அவர்களுக்கே வினையாய் வந்து முடிந்ததை எண்ணி உள்ளுக்குள் குமைந்து போனாள் தேன்மலர்.
“யோவ், யாரையா குறை சொல்றீங்க? என்னையவா? நா பத்திரை மாத்து தங்கம்யா…” என்று போதையில் உளறினான் வைரவேல்.
அவன் குடித்திருப்பதே அவனின் பேச்சை எடுபடவிடாமல் தடுத்து விட்டிருந்தது. தெளிவாக இருந்த தேன்மலரின் பேச்சே அங்கே எடுபடாமல் போன போது குடிகாரனின் உளறலை கவனித்துக் கேட்பார் அங்கே யாருமில்லை.
ஊராருக்கு பேச புது விஷயம் கிடைத்த ஜோரில், நடக்காததையும் ஆளாளுக்கு இட்டுக்கட்டி பேச ஆரம்பித்தனர்.
அதில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது தேன்மலரின் ஒழுக்கம் மட்டுமே! இத்தனை வருடங்களாக அன்னையும், மகளுமாகச் சம்பாதித்து வைத்த அவர்களின் ஒழுக்கம் இன்று ஒரே நாளில் அத்தனை பேராலும் விமர்சிக்கப்பட்டது.
வேசி பரம்பரை, கண்ணியம் இல்லாதவள், மனக்கட்டுபாடு இல்லாதவள், ஆண்களை எல்லாம் ஆசை காட்டி தூண்டுபவள், அன்னை இல்லாததால் தறிக்கெட்டு ஓட ஆரம்பித்தவள் என்பதையும் தாண்டி, வைரவேலுக்கும், தேன்மலருக்கும் பல மாதங்களாகத் தொடர்பு… என்றும் கதையைச் சிலர் அளந்து விட, அதைப் பலர் பற்றிக் கொள்ள, அந்தத் தீயை கொளுத்தி போட்ட ராமர் நெஞ்சில் வக்கிரத்தை நிறைத்துக் கொண்டு தேன்மலரை வெற்றி பார்வை பார்த்தான்.
தேன்மலரோ கண்ணீர் நிறைந்த கண்களால் ஊராரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இதோ பாருமா, ஓ பாட்டி பக்கத்து வூருல வேசி தொழில் பார்த்தாள்னு அவளை அந்த வூரே ஒதுக்கி வச்சுருந்துச்சு. அப்படிப்பட்ட குடும்பத்தில பொறந்த ஒ அம்மாவை இந்த வூரை சேர்ந்த ஒ அப்பன் கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்தான்.
அப்போவே வூரே அவங்க கல்யாணத்தை எதுத்துச்சு. ஆனா ஒ அப்பன் ஏ பொஞ்சாதி ஒழுக்கமானவ, அவ என்னைய மட்டும் தேன் மனசுல நினைச்சா, அவ ஏ கூட மட்டும் தேன் வாழ்வாள்னு சொல்லவும் சரி போனா போவட்டும்னு விட்டுப் போட்டோம்.
அப்பவும் கூட வூருக்குள்ளார தேவையில்லாம வர கூடாதுன்னு வூர் கட்டுப்பாடு போட்டுச்சு. அதுதேன், ஒ அப்பன் அவனோட வயலுலயே ஒரு வீட்டை கட்டி குடிவந்தான்.
ஒ அப்பனோட ஒ அம்மாவும் ஒழுக்கமா வாழவும் தேன் அவுக வூருக்குள்ளார நடமாட அனுமதி கிடைச்சுது. ஒ ஆத்தாளை போலத்தேன் நீயும் இருப்பன்னு நினைச்சோம். ஆனா நீ அப்படி இல்லன்னு புரிஞ்சி போச்சு. வெட்டவெளின்னு கூடப் பார்க்காம இப்படி ஒரு ஆம்பள கூட உருண்டுக்கிட்டு கிடக்க, இதெல்லாம் இந்த வூருக்கு ஆவாது. நீயும் ஒ பாட்டியை போலத்தேன் வாழ்வேனா இனிமே இந்த வூருக்குள்ளார இருக்காதே…” என்று அந்த ஊரின் தலையாரி கடுமையாகச் சொல்ல, தேன்மலர் பதறி போனாள்.
“அய்யா, நானும் ஏ அம்மாவை போலத்தேன். வாழ்ந்தா ஒருத்தன் கூடத்தேன் வாழ்வேன். இப்ப நடந்தது தெரியாம கீழே விழுந்ததாலத்தேன். அதுவும் இந்த ராமரு தேன் என்னைய படுக்க வான்னு கூப்பிட்டான். என்னைய காப்பாத்திக்கத்தேன் வூருக்குள்ளார ஓடி வந்த போது எதிர்பாராம இந்த ஆளு எதுக்க வந்துருச்சு. எங்களுக்குள்ள எந்தப் பழக்கமும் இல்லைங்க அய்யா…” என்று கண்ணீர் மல்க இறைஞ்சினாள் தேன்மலர்.
“அடிப்பாவி! ஏ மேல அபாண்டமாகப் பழிப் போடுறாளே. அய்யா என்னைய பத்தி இங்கன இருக்குற எல்லாருக்கும் தெரியும். நானே ஏ பொஞ்சாதி உண்டு, ஏ புள்ள உண்டுன்னு அமைதியா வாழ்ந்துட்டு இருக்கேன். என்னைய போய் எப்படிச் சொல்றா பாருங்க. நா இவுகளைப் பார்த்து போட்டு உங்களை எல்லாம் கூட்டிட்டு வந்ததில் வயிறு எரிஞ்சி போய் ஏ மேல பழியைப் போட்டுட்டு இருக்கா…” என்று நல்லவன் போல் பதறினான் ராமர்.
வெளியே உத்தமன் வேசமும், உள்ளே வஞ்சகமும் நிறைந்த அவனின் புத்தி பற்றி அங்கே இருந்த நிறையப் பேருக்குத் தெரியாமல் இத்தனை வருடங்களாக நடித்தவனுக்கு, இப்போதும் நடிப்புக் கனகச்சிதமாக வந்தது.
“இந்தா புள்ள, வீணா பேச்சை திசை திருப்பாதே. ராமரு எப்படின்னு இந்த வூருக்கே தெரியும். அவன் குடும்பத்துல குழப்பம் பண்ண நினைக்காதே. அதே மாதிரி ஒ பரம்பரையைப் பத்தியும் இந்த வூருக்கே தெரியும்.
நீ போடும் வீண் பழியை எல்லாம் இங்கன யாரும் நம்ப மாட்டாக. ஒன்னு நீ இந்த வூரை விட்டு போவணும். இல்ல, ஒ வூட்டை தாண்டி இனி நீ இந்த வூருக்குள்ளார வர கூடாது. இந்தக் கண்ணியமான வூருக்கு உன்னால களங்கம் வருவதை இந்த வூரு மக்கள் ஏத்துக்க முடியாது…” என்று தலையாரி முடிவாக அறிவித்தார்.
“இவளுக்குச் சரியான தீர்ப்பு தானுங்க அய்யா…” என்று கனகா ஒத்து ஊத, ராமர் பிறர் அறியாமல் வஞ்சனையுடன் புன்னகைத்துக் கொண்டான்.
“அய்யா, என்னைய நம்புங்கயா. அப்பன் ஆத்தா இல்லாத எமக்கு இனி யாரு இருக்கா? நா எந்தத் தப்பும் செய்யலைங்கயா. என்னைய நம்புங்க…” என்று தேன்மலர் கதறி அழ ஆரம்பித்தாள்.
“ஏ புள்ள, என்னாத்துக்கு அழுவுறவ? இவுக எல்லாம் உன்னைய வஞ்சாகளா? இரு, நா என்னன்னு கேட்குறேன்…” என்று அங்கே நடந்து கொண்டிருப்பது ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த வைரவேல் அவள் அழ ஆரம்பிக்கவும் சிலிர்த்துக் கொண்டு வந்தான்.
“யோவ், யாருய்யா இந்தப் புள்ளய வஞ்சது? பாவம்யா அந்தப் புள்ள…” என்று அவளைத் தாண்டி முன் வந்து நின்று கேள்வி கேட்டான்.
“இதுக்கு மேல இவுகளுக்குள்ளார பழக்கம் இல்லைனு சொன்னா நம்ப முடியுமா? இதோ இம்புட்டு போதையிலும் அவளுக்காக முன்ன வந்து கேள்வி கேட்குறான். இவுகளுக்குள்ளார என்னமோ இருக்குன்னு இப்ப உறுதியா தெரிஞ்சி போச்சு…” என்று ராமர் சொல்ல, “நிசந்தேன்…” என்று அதுவரை அமைதியாக இருந்தவர்கள் கூட உறுதியாகக் குரல் கொடுத்தனர்.
அதில் தேன்மலருக்கு ஆத்திரம் வர, தன் முன்னால் நின்று கொண்டிருந்தவனின் சட்டையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவள், “நா கேட்டேனா? நா ஒ கிட்ட கேட்டேனாயா? எமக்காக நியாயம் கேளுன்னு நா கேட்டேனா? அம்புட்டும் உம்மால தான்யா. நீர் ஏன் ஏ வாழ்க்கையில் குறுக்க வந்தீர்? நீர் ஏன் குடிச்சுப் போட்டு ஏ வயலுல விழுந்து கிடந்தீர். அதுல இருந்து தேன் இம்புட்டு பிரச்சனையும்.
“இம்புட்டு வருஷமா இந்த வூருக்குள்ளார ஒழுக்கமா வாழ்ந்துட்டு இருந்தேன்யா. அம்புட்டும் இப்ப உம்மால போச்சு. நீர் ஏன்யா ஏ வாழ்க்கையில் குறுக்க வந்தீர்? அதுனால தானே உம்மையும், எம்மையும் சேர்த்து வச்சு இந்த வூரே பேசுது…” என்று ஆத்திரமும், கோபமும், இயலாமையுமாக வைரவேலுவின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
அவள் உலுக்கிய உலுக்கலில் நிலையாக நிற்க முடியாமல் ஆடினான் வைரவேல். அவனின் கண்கள் எல்லாம் பொறி கலங்கி போனது போலச் சுழன்று வந்தன.
“என்ன சொல்ற புள்ள? உம்மையும், எம்மையும் சேர்த்து வச்சு பேசுறாகளா? என்னாலத்தேன் உம்மை ஒழுக்கங்கெட்டவள்னு சொல்றாகளா? என்னால தானா? எல்லாமே என்னால தானா? நா ஒ பேரை கெடுத்துப் போட்டேனா? ஐயோ!” என்று உளறலாகப் புலம்பி தவித்தான்.
அந்தப் போதையிலும் தன்னால் ஒரு பெண்ணிற்குக் கெட்டப்பெயர் வந்து விட்ட பரிதவிப்பு அவனின் குரலில் தெரிந்தது.
“ஆமாயா. எல்லாம் உம்மால தேன். இப்ப என்னைய வூரை விட்டே ஒதுக்கி வச்சுப்போட்டாக. இனி எனக்கு அப்பன், ஆத்தாளும் இல்லை. நல்ல கெட்டதுன்னு ஒத்தாசை கேட்க, இந்த வூரும் இல்லை…” என்று கதறி அழுத தேன்மலர் அவனின் சட்டையை விட்டுவிட்டு மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
ராமரின் வெளி வேஷத்தை நம்பும் ஊரார். அவனைத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரம், இந்த நிலையில் தனக்காகப் பரிந்து பேசுவதாக நினைத்து பேசி இவனும் நிலைமையை இன்னும் சிக்கல் ஆக்குகிறானே என்ற கோபம் மட்டுமே அவளை அவனைப் போட்டு உலுக்கத் தூண்டியது.
என்ன சொல்லி தன் ஒழுக்கத்தை நிரூபிக்க என்று புரியாத இயலாமையில் கதறி அழுதாள் தேன்மலர்.
‘இனி நீ ஏ வழிக்கு வந்து தாண்டி மவளே ஆவணும். உன்னைய எப்படிக் கட்டிப்போட்டுட்டேன் பார். இனி நீ காலம் முழுவதும் ஏ வப்பாட்டி தேன்…’ என்று அவளைப் பார்த்து மனதிற்குள் கெக்கொலி கொட்டி சிரித்துக் கொண்டான் ராமர்.
ஊரே வேடிக்கை பார்க்க, ஆற்றுவார் தேற்றுவார் இன்றி மண் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்த தேன்மலர், தன் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருப்பதை உணர்ந்து பட்டென்று நிமிர்ந்து பார்த்து நடப்பதை நம்ப முடியாமல் கண்ணீர் தேங்கிய விழிகளை அகலமாக விரித்தாள்.
தன் சட்டைப் பையில் இருந்த தன் மனைவியின் தாலியை தேன்மலரின் கழுத்தில் போட்டுவிட்டு, “இனி யாரும் உன்னைய களங்கமானவன்னு சொல்ல மாட்டாகப் புள்ள. அழுவாதே…” என்று தான் செய்வது இன்னதென்று கூட முழுதாகப் புரியாமல் அவளுக்குத் தாலி கட்டிவிட்டு தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் வைரவேல்.
“எய்யா, என்ன காரியம் செய்து போட்ட?” என்று அப்போது தான் அங்கே நடந்து கொண்டிருந்த பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டு வந்து, தேன்மலருக்கு பேரன் தாலி கட்டியதை பார்த்து அதிர்ந்து கத்தினார் அப்பத்தா.