9 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
“என்ன காரியம் செய்து வச்சுருக்க? உன் பெயர் வெளியே தெரிய வேண்டாம்னு உன் அப்பாவும், நீயும் கேட்டுக்கிட்டீங்கன்னு நாங்க உன் பெயர் சொல்லாமல் கேஸை மூவ் பண்ணிட்டு இருக்கோம்.
மைனர் பொண்ணு பெயர் வெளியே தெரியக் கூடாதுன்னு கேட்டுகிட்டால் நாங்க பெயரை வெளியிடாமல் இருக்கச் சட்டத்தில் இடமும் இருக்கு. அப்படி இருக்கும் போது இங்கே வந்து உன்னை யார் வெளிப்படுத்திக்கச் சொன்னது?” என்று பைரவியைக் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று கடிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.
“நான் ஸ்கூல் போனப்ப, எல்லாரும் இங்கே போராட வந்திருக்காங்கன்னு தெரிந்து கொண்டேன் மேடம். எங்கே அவங்க போராட்டம் செய்ததும் அவரை வெளியே விட்டுடுவீங்களோன்னு பயந்து போய் வந்தேன்.
எங்க ஸ்கூல் ஸ்டூடெண்ட்ஸ் யாருமே நான் கொடுத்த கம்பளைண்ட் உண்மைன்னு நம்பலைன்னு தெரிந்ததும் அவசரப்பட்டு உண்மையைச் சொல்லிட்டேன் மேடம். ஸாரி…” என்ற பைரவியின் பார்வை, அங்கே இருந்த பிரபஞ்சன் பக்கம் பாய்ந்தது.
‘நீயா என் மீது புகார் கொடுத்தது?’ என்பது போல் அவளை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
காதல் என்ற பெயரில் அந்தப் பெண் வாழ்க்கை போய் விடக் கூடாது என்று நினைத்ததற்குத் தான் தனக்கு இந்தத் தண்டனையா? என்ற விரக்தியான எண்ணம் தான் பிரபஞ்சனுக்கு வந்து போனது.
பைரவியின் விரோத பார்வையின் அர்த்தம் அவனுக்கு இப்போது புரிய, விரக்தியாகப் புன்னகைத்துக் கொண்டான்.
அவனின் பார்வை அவளுக்குக் குற்றவுணர்வை தர, சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டாள் பைரவி.
“நீ இங்கே வந்தது உன் அப்பாவுக்குத் தெரியுமா?” என்று விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.
“இல்லை மேடம், நான் ஸ்கூலில் இருந்து அப்படியே வந்துட்டேன்…” என்றாள்.
“சரி, நீ தனியாக இங்கிருந்து போக வேண்டாம். நான் உங்க அப்பாவை வர வைக்கிறேன். அவர் கூடப் போ…” என்றார்.
“சரிங்க மேடம்…” என்றாள்.
வெளியே இன்னும் மாணவர்கள் இருந்தனர்.
பைரவியைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொள்வதும், சிலர் அவள் சொன்னது உண்மையா பொய்யா என்று ஆராய்வதாகவும் இருந்தாலும், பிரபஞ்சனை வெளியே விடச் சொல்லி அவர்கள் நடத்திய போராட்டம் மட்டும் நிற்கவே இல்லை.
“அந்தப் பொண்ணு தான் அத்தான் மேல கம்பளைண்ட் கொடுத்த பொண்ணுன்னு தெரிந்து விட்டதே சார். நாம அந்தப் பொண்ணுகிட்ட பேசிப் பார்ப்போமா?” என்று வழக்கறிஞரிடம் கேட்டாள் ராகவர்தினி.
“அவசரப்பட வேண்டாம்மா. முதலில் அந்தப் பொண்ணு பிரண்ட்ஸ் யார்க்கிட்டயாவது அந்தப் பொண்ணு எப்படி, என்னன்னு விசாரிப்போம். அந்தப் பொண்ணு பிரபஞ்சன் மேல புகார் கொடுக்க என்ன காரணமாக இருக்கும்னு விசாரிப்போம். ஏதாவது காரணம் இருந்தால் அதை வைத்து அந்தப் பொண்ணுகிட்ட மூவ் பண்ணுவோம்…” என்றார்.
பைரவியின் நண்பர்கள் யாராக இருக்கும்? எப்படி விசாரிக்கலாம்? என்று யோசித்த ராகவர்தினி ஒரு மாணவியை அழைத்தாள்.
“நீ ப்ளஸ் டூ படிக்கிறயாமா?” அந்த மாணவியிடம் கேட்க,
“ஆமாக்கா. ஏன் கேட்குறீங்க?” என்ற மாணவியிடம் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டாள் ராகவர்தினி.
“நீங்களும் பிரபஞ்சன் சாரை வெளியே கூட்டிட்டுப் போகத்தான் நிற்கிறீங்களா அக்கா?” என்று கேட்டாள்.
“ஆமாமா. ஆனால் அதுக்கு உன் உதவியும் வேணும்…”
“என்ன உதவி அக்கா? சொல்லுங்க, எங்க சாருக்காகச் செய்வேன்…”
“உங்க சார் மேல கம்பளைண்ட் கொடுத்த பொண்ணு உன் கிளாஸா?”
“பைரவி எங்க கிளாஸ் தான் கா…”
“அந்தப் பொண்ணு பேரு பைரவியா?”
“ஆமாக்கா. அவள் ஏன் இப்படி ஒரு கம்பளைண்ட் கொடுத்தாள்னு தெரியலைகா. சார் ஒன்னும் கெட்டவர் இல்லக்கா. நாங்க தவறு செய்தால் சொல்லி தான் திருத்துவாரே தவிர, எங்களை அடிக்கக் கூடத் தொட மாட்டார்கா…” என்றாள்.
“எனக்கும் அது தெரியும் மா. இப்ப எனக்குப் பைரவியோட நெருக்கமான பிரண்ட் யாருன்னு சொல்ல முடியுமா?”
“பைரவியோட குளோஸ் பிரண்ட் ஸ்வேதா தான் கா…”
“அந்தப் பொண்ணும் இங்கே இருக்காளா?”
“ஆமாக்கா, அதோ அங்கே இருக்காள் பாருங்க…” என்று சற்று தள்ளி நின்றிருந்த ஒரு மாணவியைக் கை காட்டினாள்.
“சரிம்மா, தேங்க்யூ. இனி நான் பார்த்துக்கிறேன்…” என்ற ராகவர்தினி ஸ்வேதாவிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளைத் தனியாக அழைத்து வந்தாள்.
“என்கிட்ட என்னக்கா பேசணும்?” என்று ஸ்வேதா கேட்க,
“பைரவி உன் பிரெண்ட் தானே?”
“ஆமாக்கா…”
“நீ சொல்லு, உண்மையிலேயே உங்க பிரபஞ்சன் சார் பைரவிக்கிட்ட தவறாக நடந்திருப்பார்னு நீ நினைக்கிறயா?” என்று கேட்டவளை தயக்கமாகப் பார்த்தாள் ஸ்வேதா.
அவளின் பார்வை சற்றுத் தள்ளியிருந்த வழக்கறிஞர் மீதும், மாதவன் மீதும் படிந்து மீண்டது.
“அவங்களைப் பார்த்து தயங்காதே. அவர் உங்க சாரோட மாமா. அவர் வக்கீல். நாங்க எல்லாம் உங்க சாரை வெளியே கொண்டு வரத்தான் முயற்சி பண்றோம்…” என்றாள் ராகவர்தினி.
“சார் அப்படி அவள்கிட்ட நடந்திருப்பார்னு நம்பிக்கை இல்லைக்கா. ஆனா…” என்று ஸ்வேதா தயங்க,
“சொல்லுமா. ஆனா என்ன?”
“கடந்த பத்து நாளா சார் மேல பைரவி ரொம்பக் கோபமா இருந்தாள் அக்கா. அவரைப் பார்க்கும் போதெல்லாம் முறைச்சுட்டே இருந்தாள்…”
“முறைச்சிட்டே இருந்தாளா? ஏன்?” ராகவர்தினி யோசனையுடன் கேட்க,
“அது…” என்ற ஸ்வேதா மீண்டும் தயங்கினாள்.
“எதுவா இருந்தாலும் சொல்லுமா. நீ சொல்வதை வைத்து தான் உங்க சாரை வெளியே கொண்டு வர ஏதாவது ஐடியா கிடைக்கும்…” என்றாள் ராகவர்தினி.
“நான் சொன்னேன்னு யாருகிட்டயும் சொல்லிடாதீங்க அக்கா. அப்புறம் பைரவி என் மேல் கோபப்பட்டுத் திட்டுவாள். இப்ப சார்க்காகத்தான் உங்ககிட்ட சொல்றேன்…” என்றாள்.
“யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் மா. நீ சொல்லு…”
“பைரவி எங்க கிளாஸ் பையனை லவ் செய்தாள்கா…” என்று குரலை தாழ்த்தி சொன்னாள்.
“லவ்வா?”
“ம்ம் ஆமாக்கா. காலையில் சீக்கிரம் கிளாஸ் வர சொல்வது சார் வழக்கம் அக்கா. பைரவியும் அவள் லவ் செய்ற தீபக்கும் சார் வருவதற்கு முன்பே ஸ்கூலுக்குச் சீக்கிரம் வந்திடுவாங்க. அவங்க இரண்டு பேரும் எங்க ஸ்கூலுக்குப் பின்னாடி இருக்குற ஒரு மரத்து பின்னாடி மீட் செய்து பேசுவது அவங்க வழக்கம்.
இது எங்க கிளாஸ் பசங்க சிலருக்கும் தெரியும் கா. ஆனாலும் நாங்க எல்லாம் அவங்க லவ் பண்றது தெரிந்தும் கண்டுக்காம இருந்துக்குவோம். அப்படி ஒரு நாள் அவங்க மரத்துப் பின்னாடி மீட் செய்வதை சார் பார்த்து, அந்த மரத்துப் பின்னாடியே போய் அவங்களைக் கையும் களவுமா பிடிச்சுட்டார்…”
“ஓ, உனக்கு எப்படித் தெரியும்?”
“அன்னைக்கு அவங்க இரண்டு பேரையும் மரத்துக்குப் பின்னாடி இருந்து கூட்டிட்டு போய் ஸ்டாப் ரூம்மில் வைத்து சார் பேசிட்டு இருந்தார்கா. அதை நான் பார்த்தேன்…”
“ஓ, சரி. என்ன பேசிக்கிட்டாங்க?” என்று ராகவர்தினி கேட்டாலும் அவளுக்கே அவன் என்ன சொல்லியிருப்பான் என்று புரிந்து தான் இருந்தது.
கல்லூரி படிக்கும் தானே காதலில் விழுந்து மனம் குழம்பி விடக் கூடாது என்று நினைப்பவன், பள்ளி படிப்பவர்களிடம் என்ன பேசியிருப்பான் என்று அவளுக்குப் தெரியாதா என்ன?
“சார் என்ன பேசினார்னு தெரியலைகா. ஆனா வெளியே வரும் போது பைரவி தீபக்கிட்ட ஏதோ கெஞ்சிக்கிட்டே வந்தாள். ஆனால் தீபக், சார் சொல்வது தான் சரி. நாம இனி பேசிக்க வேண்டாம்னு சொல்லிட்டு விலகிப் போய்ட்டான்.
அதிலிருந்தே சார் மேல பைரவி ரொம்பக் கோபமாக இருந்தாள் கா. இன்னைக்குப் பார்த்தால் இப்படிச் செய்து வைத்திருக்காள். அவளுக்கு ஏன் தான் புத்தி இப்படிப் போயிருச்சுன்னு தெரியலைகா. அவளுக்குப் பிடிச்ச ஒரு பொருள் கிடைக்கலைனா பயங்கரமா கோபப்படுவாள்கா. தீபக் அவளை விட்டுப் பிரிந்தது அவளை இப்படிச் செய்ய வச்சுருச்சு போல…” என்றாள் ஸ்வேதா.
அவள் சொன்னதைக் கேட்டதும் ராகவர்தினியின் முகம் இறுகிப் போனது.
“அந்தத் தீபக் யார்?” என்று விசாரித்தாள்.
“அதோ அந்தச் சுவர் ஓரத்தில் இருப்பவன் தான் கா தீபக்…” என்று போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நின்று தவிப்புடன் ஸ்டேஷன் உள்ளே எட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்தவனைக் காட்டினாள்.
“தேங்க்ஸ் மா…” என்று ஸ்வேதாவிடம் நன்றி சொல்லி விட்டு தீபக் அருகில் ராகவர்தினி செல்ல போன போது, அங்கே இன்னொரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய பைரவியின் தந்தை சுற்றி இருந்த மாணவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக உள்ளே சென்றார்.
“என்னமா பைரவி நீ ஏன் இங்கே வந்த?” என்று உள்ளே நுழைந்ததும் மகளிடம் கடுமையாகக் கேட்டார் அவர்.
“அது வந்துப்பா…” என்று தயங்கிக் கொண்டே தான் வந்த காரணத்தைத் தந்தையிடம் தெரிவித்தாள் பைரவி.
“உன் ஸ்கூல் பிள்ளைங்க போராட வந்தாங்களா? போராடும் அளவுக்கு உன் வாத்தியார் உத்தமரா என்ன? எங்கே அந்த வாத்தியார்? என் பொண்ணு மேலேயே கை வச்சது?” என்று சுற்றி முற்றி தேடினார்.
பைரவியின் பார்வை தன் போக்கில் பிரபஞ்சன் இருந்த பக்கம் செல்ல, தந்தையும் பார்வையை அந்தப் பக்கம் திருப்பினார்.
அங்கிருந்த ஒரு அறையில் இருந்த பெஞ்சில் அமர்ந்து அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
அவன் அருகில் சென்ற பைரவியின் தந்தை, “ஓ, இளம் வயசு வாத்தியாரா? அதான் உடம்பு முறுக்கேறி போய்த் தன்னிடம் படிக்கும் பிள்ளைங்க மேலேயே கை வைக்கத் தோனுச்சோ? அப்படிப் பொம்பளை சுகம் கேட்டால் ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு, பொண்டாட்டிகிட்ட போக வேண்டியது தானே? என் பொண்ணு மேலே கை வைப்பியா? இனி நீ காலம் முழுவதும் ஜெயிலில் கிடப்பது மாதிரி செய்றேனா இல்லையா பார்…” என்று பிரபஞ்சனை பார்த்துக் கோபமாகக் கத்தினார்.
தான் பற்றியிருந்த பெஞ்சின் ஓரத்தை இறுக்கமாக பற்றிய பிரபஞ்சனின் பார்வை பைரவியைத் தீர்க்கமாகப் பார்த்தது.
“நான் இருக்கும் போதே என் பொண்ணைப் பார்க்கிற…” என்று அவர் கோபமாகச் சொல்ல, அவனின் பார்வை இப்போது அவரின் புறம் திரும்பியது.
“உங்க பொண்ணுக்கு என்னைக்காவது நல்லது சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?” என்று அழுத்தமாக அவரிடம் கேட்டான் பிரபஞ்சன்.
தான் என்ன கேட்டுக் கொண்டிருக்க, இவன் என்ன கேட்கிறான் என்பது போல் புரியாமல் பார்த்தார் பைரவியின் தந்தை.
“இதுவரைக்கும் நீங்க எந்த நல்லதுமே சொல்லிக் கொடுக்கலை போல. இனியாவது சொல்லிக் கொடுங்க. அப்பத்தான் உங்க பொண்ணு மனதில் வன்மம் எல்லாம் வளராது…” என்று தீர்க்கமாகச் சொன்ன பிரபஞ்சன் அடுத்து அவரிடம் பேசப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவன் சொன்னது அவருக்குப் புரியவில்லை என்றாலும் பைரவிக்கு நன்றாகவே புரிந்தது.
“சார், இங்கே வாங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று இன்ஸ்பெக்டர் அழைக்க, பைரவியின் தந்தை அங்கே சென்றார்.
“உங்க பொண்ணு பேர் வெளியே வர வேண்டாம்னு சொன்னீங்க. இப்ப உங்க பொண்ணே வெளியே சொல்லிருச்சு…” என்று சொன்னதும் மகளை முறைத்தார்.
“உன் பேர் வெளியே தெரிந்தால் எவ்வளவு பெரிய அவமானம்? அப்புறமும் ஏன் இங்கே வந்து உளறி வச்ச?” என்று மகளைத் திட்டினார்.
“சாரிப்பா… தெரியாம…” என்றாள் தயக்கத்துடன்.
“இனி என் பொண்ணு பேர் பேப்பர்லயாவது வர விடாம தடுக்க முடியுமா மேடம்?” என்று இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தார்.
“இனி அதை நாங்களே நினைச்சால் கூடப் பேப்பர்ல எல்லாம் உங்க பொண்ணு பேர் வருவதைத் தடுக்க முடியாது சார். அப்புறம் எங்களைக் குறை சொல்லாதீங்க. இப்ப உங்க பொண்ணைக் கூட்டிட்டு கிளம்புங்க. அடுத்த விசாரணைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வருவோம்…” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் வேறு வழி இல்லாமல் தன் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் பைரவியின் தந்தை.
அவர்கள் காரில் ஏறி சென்றதை பார்த்துக் கொண்டிருந்த தீபக் தன் சைக்கிளில் அங்கிருந்து கிளம்பினான்.
“அப்பா அந்தப் பையன் போறான் பா. வாங்க, எங்கே போறான்னு பார்ப்போம்…” என்று தந்தையைப் பைக்கை எடுக்கச் சொல்லி அவருடன் சென்றாள் ராகவர்தினி.
தீபக் ஒரு பெரிய வீட்டின் அருகில் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரின் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தான். பைரவி பள்ளி வர பயன்படுத்தும் காரும், அவளின் தந்தையின் காரும் நின்று கொண்டிருந்தது.
அவன் பைரவியிடம் உடனே பேச நினைத்தான். ஆனால் அவளை எப்படிச் சந்தித்துப் பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.
ராகவர்தினியும், மாதவனும் மறைவாக நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன் கைபேசியை எடுத்த தீபக் பைரவிக்கு அழைத்தான்.
“பையூ நான் உன் வீட்டுக்கு வெளியே தான் நிற்கிறேன். நான் உடனே உன்னைப் பார்த்தாகணும். வெளியே வா…” என்றான்.
……..
“இனி நாம பேச வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனால் இப்ப பேசியே ஆகணும். நீ வெளியே வர்றீயா? இல்ல நானே நேரா உங்க அப்பாவை பார்த்து நடந்ததை எல்லாம் சொல்லவா?” என்று கேட்டான்.
அந்தப் பக்கம் பைரவி என்ன சொன்னாளோ? உடனே தன் கைபேசியை அணைத்து விட்டுக் காம்பவுண்ட் வழியாகவே அவள் வருகிறாளா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அந்தப் பொண்ணு வெளியே வர்றாள் போலப்பா. அவங்க பேச போவதை நான் ரெக்கார்ட் பண்ணப் போறேன். நடுவில் நீங்க எதுவும் பேசிடாதீங்கபா. உங்க போனையும் சைலண்ட்ல போட்டுடுங்க…” என்ற ராகவர்தினி தயாராக நின்றாள்.
“இங்கே எதுக்கு வந்த தீபக்?” என்று வெளியே வந்த பைரவி கேட்க,
“நீ என்ன காரியம் செய்து வச்சுருக்கப் பைரவி? எதுக்கு நம்ம கெமிஸ்ட்ரி சார் மேல தவறான புகார் கொடுத்திருக்க?” என்று கேட்டான் தீபக்.
“தவறான புகார்னு நீ எப்படிச் சொல்ற? நான் உண்மையாகத்தான் கொடுத்துருக்கேன். அவர் என்கிட்ட தவறாகத் தான் நடக்க முயன்றார்…” என்று அவள் சொன்னதும் இங்கே ராகவர்தினியின் முகம் கோபத்தில் சிவந்தது.
‘அமைதியா இருமா!’ என்பது போல் மகளின் தோளை அழுத்திக் கொடுத்தார் மாதவன்.
“பொய் சொல்லாதே பையூ. நீ சொல்ற பொய்யை உங்க அப்பாவும், போலீஸும் வேணும்னா நம்பும். உன் குணம் பற்றி நல்லா தெரிந்த நான் நம்ப மாட்டேன்…” என்றான் தீபக்.
“நம்பலைனா போ. நீ என்னை வேணாம்னு சொல்லிட்டு போனவன் தானே? அப்படித்தான் அந்தச் சாருக்குச் சப்போர்ட் பண்ணுவ. நீ நம்பலைனா எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. உன் வேலையைப் பார்த்துட்டு போ…” என்ற பைரவி, வீட்டிற்குள் செல்ல போனாள்.
அவள் கையைப் பிடித்துத் தடுத்த தீபக், “இப்ப நீயே போலீஸில் வந்து சார் மேலே கொடுத்தது பொய் புகார்னு சொல்லலைனா நானே உன் அப்பாகிட்ட போய் நாம லவ் செய்ததைச் சொல்லிடுவேன். அதுக்கு சார் நமக்கு அட்வைஸ் செய்ததும், அது பிடிக்காமல் அவர் மேலே நீ கம்பளைண்ட் கொடுத்தன்னும் சொல்லிடுவேன் பையூ…” என்று மிரட்டினான்.
தன் கையை அவனிடமிருந்து உதறிய பைரவி, “சொல்லுடா… போய்ச் சொல்லு. நாம ஆறு மாசமா லவ் பண்றோம். ஆனா அந்த வாத்தி ஆறு நிமிஷம் அட்வைஸ் செய்ததும் என்னை உதறிட்டு போயிட்ட இல்ல? அந்த வாத்தியை மட்டும் இல்லை. உன்னையும் பழி வாங்காம நான் விட மாட்டேன்…” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.
“உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. சார் நம்ம நல்லதுக்குத் தானே சொன்னார்? நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சொன்னால் நீ அவரையே பழி வாங்குவியா? நீ ரொம்பச் சீரியல் பார்ப்பியோ? சீரியல் வில்லி மாதிரியே பிகேவ் பண்ற? இதோ பார், இப்ப நீ போலீஸில் வந்து உண்மையைச் சொல்லலைனா நானே போலீஸ்கிட்ட போய் நாங்க பிரிஞ்சதுகாகத் தான் சார் மேல் பொய் புகார் கொடுத்தன்னு சொல்லுவேன்…” என்றான்.
“உன் மிரட்டல் எல்லாம் போலீஸ் கிட்ட செல்லாது தீபக். ஏன்னா நான் போலீஸ் கிட்ட வலுவான ஆதாரம் கொடுத்திருக்கேன்…” என்று அலட்சியமாகச் சொன்னாள்.
“என்ன ஆதாரம்?” தீபக் கேட்க,
“அது என்னவா இருந்தால் உனக்கு என்ன?” என்றாள்.
“அப்போ என்கிட்ட பொய் சொல்ற. நீ ஆதாரம் எல்லாம் ஒன்னும் கொடுக்கலை. என்ன உன்னை டச் பண்ண சார் முயன்றார்னு போலீஸில் சொல்லியிருப்ப. அது உண்மை இல்லைனு நானே போலீஸ்கிட்ட சொல்றேன்…” என்றான்.
“ஹாஹா… அது மட்டும் ஆதாரம் இல்லை. சார் போனில் இருந்து என் போனுக்கு அசிங்கமான படம் வந்த மாதிரியும், அவர் எனக்குப் போன் செய்த மாதிரியும் செட்டப் செய்திருக்கேன். அது எல்லாம் போலீஸ் பார்த்துட்டாங்க. இனி நீ என்ன சொன்னாலும் போலீஸ் நம்பவே மாட்டாங்க…” என்றாள்.
“அடிப்பாவி! என்ன சொல்ற? சார் போனில் இருந்து உனக்கு எப்படி மெசேஜ், கால் வந்தது?” திகைத்துக் கேட்டான் தீபக்.
“ஏன், நான் தான் செய்தேன். அன்னைக்கு நம்ம கிளாஸுக்கு வருவதற்கு முன் சார் அவர் போனை மேஜை டிராயரில் வைத்துவிட்டுப் போயிருந்தார். அன்னைக்கு நான் லேட்டா ஸ்கூல் வர்ற போல ஒளிந்திருந்து பார்த்துட்டு இருந்தேன். அவர் கிளாஸ் போனதும், உள்ளே போய்ப் பார்த்தேன்.
என் நல்ல நேரம், டிராயரை சரியா மூடாமல் போயிருந்தார். உடனே அவர் போனில் வாட்ச்அப் போய்ச் சில ஆபாச படம் எல்லாம் அவர் அனுப்பின மாதிரி என் போனுக்கு அனுப்பி வச்சிட்டு, அப்படியே வாட்ஸ்அப் காலும் செய்தேன். அவர் திரும்பி வந்து கண்டுபிடிச்சிட கூடாதுன்னு உடனே அவர் போனில் இருந்து டெலிட்டும் பண்ணிட்டேன்.
ஆனால் அவர் போனிலிருந்து அனுப்பியது எல்லாம் என் போனில் இருந்தது. அதைத்தான் போலீஸ்கிட்ட காட்டினேன். அழுதுக்கிட்டே அவர் என் மேல் கை வச்சார். மெசேஜ், கால் செய்தார்னு சொல்லவும் உடனே அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
அதுவும் என்னைக்கு? சரியாக அவர் நிச்சயத்தன்னைக்கு. மறுநாள் ஒருவேளை போலீஸ் லேட்டாகப் போனால் அவர் கல்யாணம் நடந்துடுமோன்னு பயந்து முதல் நாளே அரெஸ்ட் பண்ண வச்சேன். என் காதலை பிரிச்சுட்டு அவர் மட்டும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பாரோ? விடமாட்டேன். அடுத்து நீ தான். உன்னையும் கூடச் சும்மா விட மாட்டேன்…” என்று ஆத்திரமாகச் சொன்ன பைரவியைப் பயப்பார்வை பார்த்தான் தீபக்.