9 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
‘தன் யோசனை ஏன் அப்படிச் சென்றது?’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டவனின் மனம் வேதனையில் ததும்பி நின்றது.
ஏதோ செய்யக் கூடாத தவறைச் செய்துவிட்டது போல், தன் யோசனை சென்ற பாதை தவறு என்று உணர்ந்தவன் மீண்டும் மீண்டும் தன்னையே திட்டியும் கொண்டான். அடித்தும் கொண்டான் நித்திலன்.
அவனின் மனம் நிலையில்லாமல் தவித்தது. தன் மனதை இயல்பு நிலைக்குத் திருப்ப அவனுக்கு வெகுநேரம் பிடித்தது.
துர்காவிற்கு ஆறுதல் சொல்ல தன்னால் தான் முடியும் என்று இல்லையே? ஒரு தோழியால் கூட அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும் என்ற நினைத்தவன் நினைவில் வந்தாள் ஷாலினி.
இதுவரை ஷாலினியிடம் அலைபேசியில் அவன் பேசியதில்லை. என்ன விஷயம் என்றாலும் முரளி மூலமாகவே அவனின் பேச்சு இருக்கும்.
அதனால் ஷாலினியிடம் எப்படி உதவி கேட்க என்று சில நொடிகள் தயங்கினான்.
இன்னும் பக்கத்து வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த துர்காவின் அழுகை குரல் அவனின் தயக்கத்தை உதறி தள்ள வைத்தது.
முரளிக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றதும் “முரளி, சிஸ்டர்கிட்ட சீக்கிரம் போனை கொடு…” என்றான் பதட்டமாக.
அந்தப் பக்கம் முரளியிடம் ஒருவித வியப்பும், ஆச்சரியமும் வந்து போனது.
நித்திலனிடம் எப்போதும் ஓர் ஒதுக்கம் இருக்கும். ஷாலினியே அவனிடம் பேச முயற்சி செய்தாலும் சகஜமாகப் பேசிவிட மாட்டான்.
அப்படிப்பட்டவன் இன்று அவனாக ஷாலினியிடம் பேச வேண்டும் என்றது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“என்ன நித்திலா அதிசயமா இருக்கு? ஷாலினிகிட்ட பேசுற அளவுக்கு முக்கியமான விஷயமா?” அதே ஆச்சரியம் மாறாமல் கேட்டான்.
“உன்கிட்ட விளக்கமா பேச இப்ப நேரமில்லை முரளி. சிஸ்டர்கிட்ட கொடு…” அவசரப்பட்டான் நித்திலன்.
அவனின் அவசரம் ஏதோ அவசியத்தை உணர்த்த அதற்கு மேல் தாமதிக்காமல் கைபேசியை மனைவியிடம் கொடுத்தான் முரளி.
“ஹலோ அண்ணா, என்னாச்சுண்ணா? எதுவும் பிரச்சனையா?” அழைப்பில் யார் என்று தெரிந்ததும் நேராக விஷயத்திற்கு வந்தாள் ஷாலினி.
எப்போதும் தன்னிடம் சரியாகப் பேசாதவன் இப்போது தன்னிடம் பேச வேண்டும் என்றதும் காரணம் இல்லாமல் பேச மாட்டான் என்று புரிந்து கொண்டவள் சுற்றி வளைக்காமல் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதும் நித்திலனிடம் மெல்லிய தயக்கம் வந்து போனது.
“அண்ணா, உங்க தங்கைகிட்ட சொல்ல என்ன தயக்கம்? சொல்லுங்க…” ஷாலினியிடம் தங்கை என்ற உரிமையான பேச்சு வெளிப்படத் தன் தயக்கத்தை உதறினான்.
“பிரச்சனை எனக்கு இல்லைமா. ஆனா…” என்றவன் துர்காவைப் பற்றி, அவள் இப்போது அழுது கொண்டிருப்பதைப் பற்றி மெல்ல அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
அதை அவன் சொல்லும் போது அவனின் குரல் கம்மி கலக்கத்தை வெளிப்படுத்தியது.
அவனின் கலக்கத்தைத் தனக்குள் குறித்துக் கொண்ட ஷாலினி, “ஏன் அண்ணா, இதை எல்லாம் என்கிட்ட சொல்லும் நேரத்தில் அந்த வித்யா புருஷனை தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சுருக்கலாம்ல?” என்று கேட்டாள்.
“எனக்கு இப்ப தப்பு செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதை விட, துர்காவின் அழுகையை நிறுத்தணும் என்ற எண்ணம் தான்மா என்னைப் போட்டு உலுக்குது. எந்தத் தப்பும் செய்யாம அவங்க ஏன்மா இப்படி அழுகையில் கரையணும்?” என்று கேட்டான்.
வாயடைத்துப் போனாள் ஷாலினி.
துர்காவின் அழுகையைத் தவிர அவன் வேறு யோசிக்கவே இல்லை என்று புரிய, அவனின் மனதை பற்றி என்ன நினைப்பது என்பதை அவளால் வரையறுக்க முடியவில்லை.
“ப்ளீஸ்மா, சீக்கிரம் துர்காகிட்ட பேசேன். இன்னும் அழுதுட்டு இருக்காங்க…” என்றான் தவிப்புடன்.
‘இந்தத் தவிப்பிற்கு என்ன அர்த்தம்?’ என்று உள்ளுக்குள் யோசனை ஓடினாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், “சரிண்ணா, நான் பேசுறேன். நீங்க கவலைப்படாதீங்க!” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
உடனே துர்காவிற்கு அழைத்துப் பேசவும் செய்தாள்.
அங்கே துர்கா, ஷாலினியிடம் பேசுவதையும், துர்கா ஷாலினியிடம் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டு அழுவதையும், நேரம் செல்ல செல்ல துர்காவின் அழுகை குறைவதையும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மெல்ல மெல்ல அவனின் தவிப்பு அடங்கியது.
ஆசுவாசம்! நிம்மதி! மெல்லிய சந்தோஷம்! என்ற உணர்வு அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.
சில மணி துளிகள் கடந்த பிறகு தான் துர்காவின் அழுகை தன்னை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையே உணர்ந்தான் நித்திலன்.
ஏன்? ஏன்? துர்காவின் அழுகை தன்னை இவ்வளவு பாதிக்கின்றது? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
சில நொடிகளின் யோசனையில் அவனுக்குக் கிடைத்த பதில் ஏனோ மனதிற்கு உவப்பானதாக இல்லை.
குழந்தை வர்ணா தானே அவனின் மனதை ஆக்கிரமித்திருந்தாள். குழந்தையின் அருகாமைக்குத் தானே அவன் ஏங்கினான். அப்படியிருக்க, துர்கா எப்படி, எப்போது தன் மனதிற்குள் நுழைந்தாள்?
விடையறியா கேள்வி!
கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும் தன் எண்ணம் தவறு என்று மனது எடுத்துரைக்க, தன் மனதை கட்டுப்படுத்த நினைத்தான்.
வேண்டும் என்பதின் எதிர்பார்ப்பு மனதின் ஓர் ஓரத்தில் குடையும் போது, வேண்டாம் என்று ஒதுக்கி வைக்க நினைப்பது ஒதுங்கி போவதே இல்லை.
அவன் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்க நினைத்தது தான் வீரியத்துடன் வேண்டும் என்று அடம்பிடித்தது.
தன் ஆசை நிராசையாகப் போகும் ஒன்று என்று நன்கு தெரிந்தும் தன் மனதை அலைபாய விட்டிருக்கக் கூடாது என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான் நித்திலன்.
தவறு! தவறு! நான் செய்து கொண்டிருப்பது பெரும் தவறு! இதை நான் செய்திருக்கவே கூடாது என்று தனக்குள் புலம்பித் தகித்துப் போனான்.
இங்கே நித்திலன் தனக்குள் தவித்துக் கொண்டிருக்க, அங்கே முரளியின் வீட்டில் நித்திலன் பற்றித்தான் தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஷாலினி.
“என்னங்க நடக்குது? நித்திலன் அண்ணா வீட்டில் பிரச்சனை. அதனால் அந்த அண்ணா ஒதுங்கி இருக்காங்க. அவங்க அண்ணி குழந்தையைக் கூட அண்ணாகிட்ட பழக விடமாட்டாங்கன்னு தானே சொன்னீங்க? அதனால் தான் வருணா கூட அண்ணா பழகுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
குழந்தைகள் என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் போல, அதான் வருணா கூட ஒட்டிக்கிட்டார்னு நினைச்சு அன்னைக்கு நம்ம குட்டி பிறந்தநாள் அன்னைக்குக் கூட அவங்க சேர்ந்தே இருக்கட்டும்னு நினைச்சேன். ஆனா இப்ப அவர் பார்வை துர்கா பக்கம் போகிற மாதிரி இருக்கே? இதெல்லாம் சரி வருமா? அண்ணா இன்னும் கல்யாணம் ஆகாதவர் வேற…” என்று கேட்டாள் ஷாலினி.
“என்ன சொல்ற ஷாலு? நித்திலன் துர்காவை பார்க்கிறானா?” வியப்புடன் கேட்டான் முரளி.
“அப்படித்தான் நினைக்கிறேன். இல்லனா, துர்கா அழுதது தாங்க முடியாம அவர் ஏன் அப்படித் துடிக்கணும்?” என்று கேட்டாள்.
“அது இரக்கமா கூட இருக்கலாமே?” முரளி கேட்க,
“அவர் குரலில் இருந்த தவிப்பு, துடிப்பு எல்லாம் பார்த்தால் இரக்கம் போலத் தெரியலைங்க. அவர் மனதில் ஏதோ இருக்கு…” என்றாள்.
“அப்படியா சொல்ற? அப்படி எதுவும் இருந்தால் சந்தோஷம் தானே? துர்காவிற்கு நித்திலன் நல்ல வாழ்க்கை துணையா இருப்பான்…” என்றான் முரளி.
“நீங்க புரிந்துதான் பேசுறீங்களா? துர்காவிற்குக் கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்காள். நித்திலன் அண்ணா இன்னும் கல்யாணம் ஆகாதவர். அப்படி இருக்கும் போது அவங்க வீட்டில் எப்படி இவங்களை ஏத்துப்பாங்க?” என்று படபடவென்று கேட்டாள்.
“அவங்க தான் அவனை ஒதுக்கி தள்ளிட்டாங்களே! அவங்க என்ன சொல்றது? அவன் வாழ்க்கை இப்ப அவன் கையில் மட்டும் தான்…” என்றான்.
“அதை நீங்க எப்படிங்க சொல்ல முடியும்? அவரோட அண்ணா, அண்ணி தானே ஒதுங்கி இருக்காங்க. அம்மா அவருக்கு ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கலாம். ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெரிந்தால் மறுக்கலாம் இல்லையா?” என்று கேட்டாள்.
“இல்லை ஷாலு. நித்திலனுக்கு எப்படியாவது கல்யாணம் ஆனால் போதும் என்றுதான் அவனோட அம்மா நினைப்பாங்களே தவிரத் துர்காவை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க…” என்று உறுதியாகச் சொன்ன கணவனைப் புரியாமல் பார்த்தாள் ஷாலினி.
தன் மனைவியிடம் நித்திலன் பற்றிய சில விஷயங்களை மறைத்திருந்தான் முரளி.
நித்திலனின் குடும்பச் சூழ்நிலையும், அதனால் அவன் அடைந்த வேதனையை மட்டுமே மனைவியிடம் பகிர்ந்திருந்தான்.
அதனால்தான் ஷாலினி துர்காவின் மகளிடம் நித்திலன் ஒட்டுதலாக இருப்பதைக் கணவன் மூலம் கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தாள்.
அப்படி நித்திலன் பழகும் துர்காவின் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் அவளையும் மகள் பிறந்தநாளுக்கு அழைத்தாள்.
அதுவே அப்படியே நட்பாகவும் வளர ஆரம்பித்திருந்தது.
முரளி, நித்திலனின் சில அந்தரங்க விஷயங்களைத் தன் மனைவியிடம் கூடச் சொல்லாமல் விட்டதால் ஷாலினி குழம்பிப் போனாள்.
கல்யாணம் ஆகாத மகனுக்குக் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ள பெண்ணை மணம் முடித்து வைக்க எந்தத் தாயாவது முன்வருவாரா? என்ற கேள்வி தோன்ற கணவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் ஷாலினி.
தன் குழப்பத்தைக் கேள்வியாகவும் கணவனிடம் வெளியிட்டாள்.
ஆனால் மனைவியின் குழப்பத்தைத் தெளிவுபடுத்த முன்வரவில்லை முரளி.
நண்பன் தன்னை நம்பி சொன்ன அவனின் அந்தரங்க விஷயங்களை மனைவியே என்றாலும் அவளிடம் சொல்ல அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை.
“ரொம்ப யோசிச்சுக் கேள்வி கேட்டு குழப்பிக்காதே ஷாலு. நித்திலன் கல்யாணமே வேண்டாம் என்ற முடிவில் இருந்தவன். இப்போ அந்த முடிவையும் தாண்டி அவன் துர்காவை விரும்புகிறான்னா அது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம் தான்.
துர்காவிற்கும் நித்திலன் போல நல்ல கணவன் கிடைத்தால் சந்தோஷம் தானே? அதை மட்டும் நினை. முடிந்தால் நாம நித்திலன் ஆசையை நிறைவேற வைக்க என்ன செய்யலாம்? அதில் நம்ம பங்கு என்னன்னு யோசி…” என்றான் முரளி.
தான் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கணவன் சுற்றி வளைத்துப் பேசியதிலேயே ஏதோ முக்கியமான விஷயத்தை மறைக்கிறான் என்று ஷாலினிக்குப் புரிந்து போனது.
ஆனாலும் கணவனிடம் தூண்டி துருவாமல் விட்டுவிட்டாள்.
அவளிடம் சொல்லும் விஷயமாக இருந்தால் தான் கேட்காமல் அவனே சொல்லியிருப்பான் என்று அவளுக்குத் தெரியும்.
அதனால் கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டாள் ஷாலினி.
அங்கே துர்கா அழுது ஓய்ந்து ஷாலினியின் தேறுதல் வார்த்தைகளில் தெளிந்து எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
சபரிநாதன் உள்ளுக்குள் குமைந்து, தூங்கி எழுந்த பேத்தியை மடியில் அமர வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார்.
அவரின் கண்கள் மகளைத்தான் சுற்றி வந்தன.
‘என் பொண்ணு எத்தனை வலியைத்தான் தாங்குவாள்? ஆண்டவா! அவளுக்கு நீ இன்னும் என்னென்ன சோதனை எல்லாம் வச்சுருக்க? அவள் வாழ்க்கையில் வாங்கிய அடி போதாதா? இன்னும் மேலும் மேலும் அவளுக்கு ஏன் இந்த வலியைக் கொடுக்குற?’ என்று மனதிற்குள் கடவுளிடம் முறையிட்டார்.
அவரின் முகம் வேதனையில் கசங்கி இருந்தது.
அதை விடப் பலமடங்கு வேதனையில் துவண்டிருந்தாள் துர்கா.
‘ஊர் பேச்சுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்காதே! நீ எந்தத் தப்பும் செய்யாத போது அவங்க பேசிய பேச்சுக்கெல்லாம் எதுக்கு மதிப்பு கொடுத்து அழுதுட்டு இருக்க? தப்பு செய்த அவங்களே தைரியமா தலை நிமிர்ந்து சுத்தும் போது, மனதால் கூடத் தப்பு செய்யாத நீ ஏன் கலங்கணும்? விட்டுத்தள்ளு! மனுஷங்க நாக்கு நாலு விதமா பேசத்தான் செய்யும். அதை எல்லாம் மனதில் ஏத்திக்காதே!’ என்று விதவிதமாகப் பேசி துர்காவை தேற்றியிருந்தாள் ஷாலினி.
ஆனாலும் மனதின் வலி அவளை விட்டு முழுவதுமாக அகல மறுத்து அடம் பிடித்து, அவளைப் போட்டு உலுக்கிக் கொண்டிருந்தது.
இயந்திரகதியில் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தவளுக்கு ஷாலினி எப்படிச் சரியாகத் தான் அழும் நேரத்தில் அலைபேசியில் அழைத்தாள் என்ற கேள்வி தோன்றவே இல்லை.
தற்செயலாக அழைத்திருப்பாள் என்ற எண்ணத்தில் அதைப் பற்றி நினைக்கத் தோன்றவும் இல்லை.
ஆனால் நடந்தது தற்செயலான செயல் இல்லை என்று துர்கா அறியவில்லை.
அவளைத் தேற்ற ஷாலினியைப் பேச சொன்ன நித்திலனோ அவளுக்குக் குறையாத வேதனையை அவளுக்காக அனுபவித்தான் என்பதையும் துர்கா அறியாமல் போனாள்.
இங்கே இவர்கள் ஆளாளுக்கு ஒரு ஒரு மனநிலையில் இருக்க, எதிரே இருந்த வீட்டிலோ வித்யா கடுகடுத்த முகத்துடன் வீட்டிற்குள் வலம் வந்து கொண்டிருந்தாள்.
“ஏய் வித்யா, குடிக்கத் தண்ணி கொண்டு வா…” என்று படுக்கையறையில் இருந்து அழைத்த கணவனின் குரல் கேட்டதும் கையில் சமைக்க எடுத்த பாத்திரத்தை பட்டென்று தரையில் போட்டாள்.
“உனக்கு வேணும்னா எழுந்து வந்து தண்ணியைக் குடி. இனி உட்கார்ந்த இடத்துல இருந்து அதிகாரம் செய்தால், நீ கட்டிய தாலியை அத்து எறிந்து விட்டு போயிட்டே இருப்பேன்…” என்று ஆத்திரத்துடன் கத்திக் கொண்டே படுக்கையறைக்குள் சென்றாள்.
“ஏய், ஏன்டி இப்படிக் கத்திக்கிட்டு இருக்க?” அவளின் கணவன் கேட்க,
“கத்தவா? உன்னையெல்லாம் அப்படியே கழுத்தை பிடித்துத் திருகணும். ஆனா இன்னும் உன்னை உட்கார வச்சு சோறு போடுறேன்ல. நீ இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ…” என்று ஆங்காரமாகக் கத்தினாள்.
“நான் இப்ப என்ன செய்தேன்னு இப்படிப் பேசுற?”
“இன்னும் நீ என்ன செய்யணும்? உன் கையால தாலி வாங்கி, உனக்கு மட்டுமே முந்தானை விரிச்ச நான் போதாதுன்னு இப்ப அடுத்தப் பொம்பளை சுகத்தைத் தேடிப் போன உன்னையெல்லாம் இன்னும் கொன்னு போடாம உயிரோட விட்டு வச்சுருக்கேன்ல. அந்தத் தெனாவட்டு உனக்கு. அதான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தண்ணி கேட்குற நீ!” என்று ஆத்திரமாகச் சொன்ன மனைவியைத் திடுக்கிட்டுப் பார்த்தான் அவளின் கணவன்.
“என்ன உன் மூஞ்சி அப்படிப் போகுது? என்னடா நம்ம லட்சணம் இவளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறயோ? நேத்து மண்டை உடைஞ்சி வந்து அந்தத் துர்கா உன்னைத் தப்பா கூப்பிட்டா, அதை வேண்டாம்னு சொன்னதால் உன்னைச் செங்கல் வச்சு அடிச்சுட்டாள்னு சொன்னதும் நான் அப்படியே நம்பிட்டேன்னு நினைச்சியாக்கும்? எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும். அந்தத் துர்காவை பத்தியும் தெரியும். அவ அப்படிப்பட்டவ இல்லை. நீ தான் என்னவோ செய்திருக்கன்னு தெரிஞ்சி போச்சு…” என்ற மனைவியைத் திகிலுடன் பார்த்தான்.
அவன் அடிப்பட்டு வந்து வீட்டில் முதலில் குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாகத்தான் மனைவியிடம் தெரிவித்தான்.
ஆனால் வழுக்கி கீழே விழும் போது பின்னந்தலையில் வெட்டும் அளவிற்கு அந்தக் குளியலறையில் எந்தப் பொருளும் இல்லை என்று வித்யாவிற்குத் தெரியும். அதனால் நம்பாமல் துருவித் துருவிக் கேட்க, அவனோ தான் செய்ததை எல்லாம் துர்கா செய்ததாக மனைவியிடம் சொல்ல, அவளும் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் துர்காவின் பெயரை நாரடித்தாள்.
அவள் வெளி ஆட்களிடம் சொன்னதை வைத்து மனைவி தன் பேச்சை அப்படியே நம்பிவிட்டாள் என்று கொண்டாட்டமாக இருந்தான். ஆனால் இப்போதோ அவள் இப்படிச் சொல்ல பயத்துடன் அவளைப் பார்த்தான்.
“என்னடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை அந்தத் துர்கா பேரை ஊரெல்லாம் நாரடிச்சுட்டு வந்துட்டு, இப்ப நம்மகிட்ட இப்படிச் சொல்றாளேன்னு யோசிக்கிற போல?” கணவனின் எண்ணத்தை அப்படியே பிட்டு பிட்டு வைத்தாள்.
“என்ன செய்றது? நீ என் கழுத்தில் தாலி கட்டியிருக்கியே. உன்னால் உனக்கு அவமானம் வருதோ இல்லையோ… எனக்கும் சேர்த்துல அவமானம் வருது. என் மானம் காத்துல பறக்க கூடாதுன்னு தான் துர்கா மேல பழியைப் போட்டுருக்கேன். அவ எப்படியும் போனா எனக்கு என்ன? உன் புருஷன் இப்படிச் செய்தானாக்கும்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு என்னை யாரும் கேள்விக் கேட்டுட கூடாது…” என்றாள்.
தனக்காக இல்லை. அவளுக்காகத்தான் மனைவி துர்காவைக் குறை சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனின் முகம் இஞ்சி தின்ற குரங்காக மாறியது.
“நீ கெட்ட கேட்டுக்கு நான் ஒருத்தி போதாதுன்னு அந்தத் துர்காவும் வேணுமோ? உன் தாலி என் கழுத்துல இருக்குன்னு தான் இன்னும் உன் கழுத்தை பிடிக்காம இருக்கேன். உன்னை விட்டுப் பிரிந்து என்னால வாழாவெட்டின்னு எல்லாம் பேர் வாங்க முடியாது.
நான் இந்த வீட்டில் தான் இருப்பேன். அதே நேரம் முன்னாடி மாதிரி என்னை நீ அதிகாரம் பண்றது, உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதை எடுத்துட்டு வா, இதை எடுத்துட்டு வான்னு சொல்றதை வச்சுக்கிட்டன்னு வச்சுக்கோ… நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்று கண்களை உருட்டிக் கொண்டு சொன்ன மனைவியைப் பார்த்துப் பயப்படத்தான் செய்தான் அவளின் கணவன்.
“இனி எவளையாவது தொட்டு பார்க்க நினைச்சன்னு வச்சுக்கோ, என்னோட அப்பா, அண்ணனை வர சொல்லி அவங்க முன்னாடி பஞ்சாயத்து வைப்பேன். என் அண்ணனைப் பத்தி உனக்கே தெரியும். அவன் பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டான். உன்னையே நடமாட விடாம முடக்கிப் போட்டுருவான். கை, கால் நல்லா இருக்கணும்னு நினைச்சா அடங்கி இரு!” என்று கணவனை மிரட்டினாள் வித்யா.
வித்யா தான், தனது, தன் பெயர் கெட்டு விடக்கூடாது என்று யோசித்தாளே தவிர, துர்காவின் மானத்தைப் பற்றியோ, அவளின் பெயரை தான் கெடுத்ததைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளவில்லை.
சுயநல பிண்டமாய் மாறி நின்றாள் வித்யா.