9 – இதயத்திரை விலகிடாதோ?

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 9

அன்று வெள்ளிக்கிழமை.

காலையில் சீக்கிரமே அலுவலகம் கிளம்பியிருந்தான் சூர்யா.

யுவஸ்ரீ சற்றுமுன் தான் தலைக்குக் குளித்து விட்டு வந்து முடியை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் அலைபேசி அழைக்க, எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்கார்?” அழைத்த மாமியாரிடம் விசாரித்தாள்.

“நாங்க நல்லாருக்கோம். நீயும், கண்ணாவும் எப்படி இருக்கீங்க?” சித்ரா கேட்க,

“நல்லா இருக்கோம் அத்தை. அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆபிஸ் கிளம்பினார். நான் இப்ப கிளம்பிட்டு இருக்கேன்…” என்றாள்.

“கண்ணா சாப்பிட்டு கிளம்பினானா? இல்லை ஆபிஸில் போய்த் தானா?”

“சீக்கிரம் செய்து கொடுத்துட்டேன் அத்தை. சாப்பிட்டுத்தான் கிளம்பினார்…”

“இன்னைக்கு நைட் ஊருக்குக் கிளம்பி வர்றீங்க தானே?”

“ஆமா அத்தை. ஆபிஸில் இருந்து வந்ததும் கிளம்பிடுவோம்…”

“சரிமா, பார்த்து வாங்க. அப்புறம் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் யுவா…”

“சொல்லுங்க அத்தை…”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“கண்ணாவுக்கு இப்ப சொல்லாதே! ஊருக்கு வந்து தெரிஞ்சிக்கட்டும்…” சித்ரா பீடிகை போட, யோசனையில் சுருங்கியது யுவஸ்ரீயின் நெற்றி.

“என்ன விஷயம் அத்தை?”

“ஞாயிற்றுக்கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போறதாக இருக்கோம் யுவா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க மாமாவுக்கு உடம்பு சரியில்லாத போது வேண்டிக்கிட்டேன். பொங்கல் வைக்கப் போறோம்…” என்றார்.

“பொங்கல் வைக்கிறது எல்லாம் சரிதான் அத்தை. ஆனால் இவர் நமக்குப் பொங்கல் வைத்து விடுவாரே…” என்று யுவஸ்ரீ சொல்ல,

“அவனைச் சமாளிக்க நீயும், நானும் இருக்கும்போது என்ன கவலை?” என்றார்.

“இந்த விளையாட்டுக்கு நான் வரலை அத்தை. உங்க பிள்ளையை நான் டெய்லி சமாளிக்கிறேன். ஊரில் நீங்க தான் பார்த்துக் கொள்ளணும்…” என்று பின் வாங்கினாள்.

“சமத்து மருமகளே! அவன்கிட்ட என்னை மட்டும் மாட்டி விடுற பார்த்தியா?”

“உங்க பிள்ளையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா அத்தை? அவருக்குப் பிடிக்காத விஷயம் செய்ய வைத்தால் என்ன ஆட்டம் ஆடுவார்னு…”

“அவன் பாட்டுக்கு ஆடட்டும். நாம கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அவனைச் சாமி ஆட வைத்து விடுவோம்…” என்றார்.

“உங்க பிள்ளை கோயிலுக்குப் போகாமலேயே நல்லாவே சாமியாடுவார் அத்தை…”

“ஆடட்டும்… ஆடட்டும்… நாம அவன் குடும்பியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விடுவோம்…” என்று சொல்லி சித்ரா சிரிக்க, அவரின் சிரிப்பில் தானும் இணைந்து கொண்டாள் யுவஸ்ரீ.

“சரிம்மா, அவன் ஊருக்கு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம். இப்ப நீ ஆபிஸ் கிளம்பு…” என்றார்.

“ஓகே அத்தை… பை…” என்று அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகத்திற்குச் செல்ல கிளம்ப ஆரம்பித்தாள்.

அலுவலகத்தில் அன்று பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தான் சூர்யா.

அன்று தான் பிராஜெக்ட் முடிக்கக் கடைசி நாள். இன்றாவது எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் அவனின் குழுவினர் கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

“இன்னைக்கு இருக்குற டென்ஷனுக்கு நம்ம தலையை உருட்டுவாங்க பார் யுவா…” என்று நந்தினி சொல்ல,

“அவங்க ஆகாத டென்ஷனா? எனக்கு இப்ப அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு இருக்குற கவலை எல்லாம் இன்னைக்குச் சூர்யா சீக்கிரம் வேலையை முடிக்கணுமேன்னு தான்…” என்றாள் யுவஸ்ரீ.

“ஏன் யுவா? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”

“மதுரை போறோம் நந்தினி. என்னோட மாமியார் வர சொல்லிட்டே இருந்தாங்க. போய் இரண்டு மாசம் ஆகிடுச்சு. அதான் போயிட்டு வரலாம்னு இருக்கோம்…”

“சூப்பர்! போயிட்டு வாங்க…”

“ம்ம்ம், சூர்யா வேலை தான் எப்ப முடியும்னு தெரியலை. ஒரு வாரமா மிட்நைட் தான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தார். இன்னைக்கு எப்படியோ?”

“கவலைப்படாதே! சீக்கிரம் முடிந்து விடும். ஆறு மணிக்கு ரிலீஸ் பண்றதாகத் தினேஷ் சொல்லி இருந்தார். இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்று நந்தினி சொல்ல,

“இனியும் வராமல் இருந்தால் சரிதான்…” என்றாள் யுவஸ்ரீ.

“யுவா உன்கிட்ட ஒன்னு கேட்க நினைச்சேன்…” என்று நந்தினி திடீரென்று சொல்ல,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்ன நந்தினி?”

“உன்னை வேற பிராஜெக்ட்டுக்கு மாற்றப் போவதாகச் சொன்னாங்களே, அது என்னாச்சு?” என்று கேட்டாள்.

“போன வாரம் ஒரு இண்டர்வ்யூ வச்சாங்க நந்தினி. ஆனா அதில் செலக்ட் ஆகலை. அடுத்த இண்டர்வ்யூ சொல்றேன்னு சொல்லிருக்காங்க. எப்பன்னு தெரியலை…”

“நாம இரண்டு பேரும் இத்தனை நாளும் ஒரே டீம்ல இருந்தோம். இப்ப நீ வேற டீமுக்கு போயிடுவ…” என்று வருத்தப்பட்டாள் நந்தினி.

“ஒரே ஆபிஸில் தானே இருப்போம் நந்தினி. பிரேக்கில் பேசிக்கலாம்…” என்று தோழியைச் சமாதானம் செய்தாள்.

ஒரு பிராஜெக்ட் முடிந்ததும் இன்னொன்றில் மாற்றுவது வழமை.

யுவஸ்ரீ, நந்தினி இருந்த குழுவில் அவர்கள் பிராஜெக்டை செய்து ஏற்கெனவே ரிலீஸ் செய்திருந்தார்கள்.

அது முடிந்த பின் அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு வேறு பிராஜெக்ட் கொடுக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. ஒரு பிராஜெக்டில் இருந்து இன்னொன்றுக்கு மாறும் போது இன்டர்வ்யூ வைப்பது உண்டு.

யுவஸ்ரீக்கு வைத்த இன்டர்வ்யூவில் அவளின் எக்ஸ்பீரியன்ஸ் ஒரு வருடம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

இப்போது இன்னொரு இன்டர்வ்யூக்காகக் காத்திருந்தாள் அவள்.

அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் அவளுக்கு வேலை அவ்வளவாக இருக்காது என்பதால் தான் மெதுவாகவே கிளம்பி அலுவலகம் வந்து போய்க் கொண்டிருந்தாள்.

அன்று மாலை ஆறுமணிக்கு சூர்யாவின் குழுவில் பிராஜெக்ட் ரிலீஸ் செய்தனர்.

அன்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் செய்து விட்டாலும், அது தொடர்பான சில வேலைகள் நீண்டு கொண்டே சென்றன.

இப்போது வீட்டிற்குக் கிளம்பினால் தான் அடுத்த ஒருமணி நேரத்தில் ரயிலை பிடிக்க முடியும். அப்படியிருக்க, இன்னும் கிளம்பாமல் இருக்கும் கணவனை நினைத்து யுவஸ்ரீக்குப் பதட்டம் வந்தது.

சூர்யா தனது குழுவினருடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க, அவளால் அருகில் சென்று அவனை அழைக்க முடியவில்லை.

கைபேசியில் அழைக்க, அவளின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்தான்.

யுவஸ்ரீயின் பதட்டம் அதிகரித்தது. ரயிலை விட்டுவிட்டால் ஊருக்கே போக வேண்டாம் என்று சொல்லி விடுவான்.

மாமியாருக்குப் பதில் சொல்ல அவள் தான் மெனக்கெட வேண்டும். கணவன் பேசாமல் தப்பித்துக் கொள்வான்.

இத்தனை குழறுபடி தேவையா என்று தான் அவளுக்குப் பதட்டம்.

அவன் அலைபேசியை எடுக்கவில்லை என்றதும், அவனின் இருக்கைக்கே நேராகச் சென்றாள்.

அப்போது தான் அவனின் குழுவினரிடம் பேசி முடித்துத் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“சூர்யா…” யுவஸ்ரீ அழைக்க,

“சொல்லு…” அவனின் கணினியிலிருந்து தலையை நிமிர்த்தாமல் கேட்டான்.

“ஊருக்கு கிளம்ப நேரமாகிடுச்சு. உங்க வேலை எப்ப முடியும்?” என்று கேட்டாள்.

“எனக்கு இன்னும் வேலை முடியலை. அரைமணி நேரம் ஆகும்…”

“ட்ரெயின்னுக்கு நேரமாகிடும் சூர்யா. இப்ப கிளம்பினால் தான் சரியா இருக்கும்…”

“என்னால் இப்ப கிளம்ப முடியாது யுவா. நீ முன்னாடி போய் ரெடியா இரு. நான் இந்த வேலையை முடிச்சுட்டு வர்றேன்…” என்றவனைத் தயக்கத்துடன் பார்த்தாள்.

தான் கிளம்பி விட்டால் அவன் கிளம்பி வருவானா என்பது கேள்விக்குறியே!

அதனால் தன்னுடனே அழைத்துச் சென்று விடுவோம் என்று நினைத்தாள்.

எங்கே அவன் அசைந்தால் தானே?

“டென்ஷன் பண்ணாதீங்க சூர்யா. நேரமாகிருச்சுனா ட்ரெயினை மிஸ் பண்ணிடுவோம்…” என்றாள்.

“எனக்குத்தான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல? நான் என்னமோ சும்மா உட்கார்ந்திருப்பது போலச் சொல்ற? நீ தான் சும்மா உட்கார்ந்து இருக்க. உன்னை மாதிரியே என்னாலும் இருக்க முடியுமா? ட்ரெயின் போனால் போகட்டும்…” என்றான் கோபமாக.

“ஊருக்குப் போகலைனா அத்தைக்குப் பதில் சொல்ல முடியாது சூர்யா…”

“ம்ப்ச்… மாமியாரும், மருமகளும் என்னை ஏன் இப்படிப் பிடுங்கி திங்கிறீங்க? இந்தத் தொல்லைக்குத் தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். என் அம்மா எங்க கேட்டாங்க? இப்ப நீ ஒரு பக்கம் பிச்சி எடுக்குற. எங்க அம்மா ஒரு பக்கம் பிச்சி எடுக்குறாங்க. ஊருக்குப் போவது அப்படி அவசியமா?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்துடன் சொன்னான்.

அதற்கு மேல் அவளால் பேசவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் தன்னைத் திருமணம் செய்ததை அவன் குத்திக் காட்ட, அவளால் தாளவே முடியவில்லை.

அவள் என்ன அவளின் ஊருக்குச் செல்லவா கேட்டாள்? அவனின் வீட்டிற்குத் தானே?

அவனிடம் ஒன்றும் பேசாமல் வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் கண்கள் கலங்கி இருக்க, தலையை நிமிர்த்தாமல் நடந்து சென்றாள்.

அதை எல்லாம் சூர்யா கவனிக்கவே இல்லை.  மீண்டும் தன் வேலையில் மூழ்கிப் போனான்.

யுவஸ்ரீ வீடு போய்ச் சேர்ந்த சிறிது நேரத்தில் சூர்யா வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் நுழையும் போதே, “கிளம்பு… கிளம்பு… வரும் போதே ஆட்டோ கூட்டிட்டு வந்துட்டேன்…” என்று அவசரப்படுத்தினான்.

ஏற்கெனவே அவள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்திருக்க, கிளம்பி விட்டாள்.

இருவரும் கிளம்பி ரயில்நிலையம் சென்று சேர்ந்த போது ரயில் கிளம்பத் தயாராக இருந்தது.

அவசரமாக இருவரும் ஏறினர். அவர்கள் ஏறிய அடுத்த நொடி, ரயில் கிளம்பியது.

“ஷ்ஷ், ஷப்பா! ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு…” என்று சூர்யா சொல்ல, அவன் அருகில் அமர்ந்த யுவஸ்ரீ அமைதியாக வந்தாள்.

“மதியம் இன்னைக்கு சரியா சாப்பிடலை. சாப்பிட எதுவும் எடுத்துட்டு வந்துருக்கியா? வாங்கணுமா?” சிறிது நேரத்திற்குப் பிறகு கேட்டான்.

கொண்டு வந்திருந்த பையிலிருந்து, ஒரு பார்சலை பிரித்தாள்.

அதில் உணவகத்தின் பெயர் இருக்க, “ஹோட்டலிலேயே வாங்கிட்டு வந்துட்டியா? நல்லதா போயிருச்சு…” கையைக் கழுவி விட்டு வந்து உண்ண ஆரம்பித்தான்.

அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொடுத்தவள், தானும் உண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவள் பேசாததை அவனும் உணர்வே இல்லை.

மனைவி கோபமாக இருப்பதைக் கணவன் உணர்ந்து கொண்டுவிட்டால் அது அதிசயமன்றோ!

உணவை முடித்து விட்டு கையைக் கழுவி விட்டு அமர்ந்தனர்.

அப்போது சித்ரா அவளுக்கு அழைக்க, “ட்ரெயின் ஏறிட்டோம் அத்தை. சாப்பிட்டோம், தூங்க வேண்டியது தான்…” என்று அவருக்குத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சூர்யா எதையும் கவனிக்காமல் கைபேசியைப் பார்த்துக் கொண்டு வந்தான்.

“என்ன உன் மாமியார் இப்ப சந்தோஷமா?” அவள் பேசி முடித்ததும் கிண்டலாகக் கேட்டான்.

அவனைக் கூர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் பதில் சொல்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

மனம் எல்லாம் தீயாக எரிந்தது. ஏதோ சொல்லத் தெரியாத வலி உள்ளே இருந்து குடைந்தது.

சூர்யா சுருக்கென்று பேசுவது புதிதில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் அவள் மனம் காயப்பட்டுப் போனது.

மனதை வலிக்க வைக்க, பெரிய பெரிய வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு சொல் போதும்! உயிர் குடிக்க!

“இன்னைக்கு ஊருக்குப் போகாமல் இருந்தால், பிராஜெக்ட் சக்ஸஸ்புல்லா ரிலீஸ் செய்ததுக்குச் செம்மயா கொண்டாடி இருப்பேன். இப்ப ஒன்னுமில்லாம எரிச்சலா இருக்கு. மாமியாரும், மருமகளும் சதி பண்ணிட்டீங்க…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டே வந்தான்.

என்னவோ பேசிக் கொள் என்பது போல் அவன் பக்கமே திரும்பவில்லை அவள்.

“அடியே, பொண்டாட்டி! நான் இங்கே புலம்பிட்டே வர்றேன். கவனிக்கிறயா இல்லையா?” அதற்கும் எரிச்சல் பட்டான்.

ம்கூம், அவள் திரும்பவே இல்லை.

தங்களைச் சுற்றி இருந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவளின் கன்னத்தில் கை வைத்து தன் பக்கம் திருப்பினான்.

கசங்கி இருந்த அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், “என் மேல கோபமா இருக்கியா என்ன? நான் திட்டியதற்கா? அதான் அப்ப இருந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் வந்தியா?” என்று கேட்டான்.

அதிசயம் நடந்து தான் விட்டது.

“உன் கோபத்தில் நியாயமே இல்லை. எனக்கு வேலை இருக்குன்னு தெரிந்தும் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தது நீ தான். நீயே யோசித்துப் பார்!” என்றான்.

உண்மை தான்! வேலை கழுத்தை நெரிக்கும் போது தன்னை அழைத்திருந்தால் கூடத் தானும் எரிச்சல் பட்டிருப்போம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் மனதை தைக்கிறதே?

என்னைத் திருமணம் செய் என்று அவளா மல்லுக்கட்டினாள்?

ஒவ்வொரு முறையும் உன்னை என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் என்ன?

அப்படியா தான் அவனைக் கொடுமை செய்கிறோம்?

சொல்ல போனால் அவன் தான் அவளை ஒரு வழியாக்குகிறான். அதை எல்லாம் அவள் பொறுத்துப் போய்க் கொண்டு தானே இருக்கிறாள்.

அவள் மனது ஏதேதோ நினைத்துத் தவித்துக் கொண்டிருந்தது.

அதில் தன் அமைதியை ஆயுதமாக எடுத்துக் கொண்டாள்.

“பேசாட்டி போ…” என்று தலையைச் சிலுப்பி அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டு மீண்டும் கைபேசியில் மூழ்கிப் போனான்.

‘அதானே பார்த்தேன்! நீ என்னைச் சமாதானம் செய்துவிட்டால் இல்லாத மழை எல்லாம் உன் மேல் பெய்து விடாது?’ என்று நினைத்துக் கொண்டாள்.

காலையில் வீடு வந்து சேரும் வரை அவர்களுக்குள் விழுந்த மௌனத்திரை விலகவே இல்லை.

மகனையும், மருமகளையும் ஆர்வமாக வரவேற்றார் சித்ரா.

“போய்க் குளிச்சுட்டு வாங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்…” என்று வரவேற்பு முடிந்ததும் அறைக்கு அனுப்பி வைத்தார்.

தனது அறைக்குள் நுழைந்ததும், “ஏய், பொண்டாட்டி…” என்று அவளை வேகமாக அணைத்துக் கொண்டான்.

“ஒரு வாரமா செம டென்ஷன்…” என்று அவளையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் சென்று விழுந்தான்.

சுர்ரென்று கோபம் ஏறியது யுவஸ்ரீக்கு.

“உங்களுக்குப் பிடிக்காத கல்யாணம், பிடிக்காத பொண்டாட்டி. ஆனா இது மட்டும் வேணுமோ?” சுருக்கென்று தான் கேட்டாள்.

ஆனால் அவனுக்கு எங்கே குத்தியது?

“என்ன செய்ய இது மட்டும் பிடிச்சிருக்கு…” என்றான் இலகுவாக.

அதில் அவள் கோபம் இன்னும் தான் ஏறியது.

“எனக்குப் பிடிக்கலை…” அவனை விட்டு விலகினாள்.

“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இப்ப நீ வேணும்…” என்று அவளை மீண்டும் தன் கைகளுக்குள் இழுக்க முயன்றான்.

துள்ளிக் குதித்துப் படுக்கையை விட்டு இறங்கி நின்றாள்.

“ஏய், ஏற்கெனவே நைட் பப்புக்கு போக முடியலைன்னு செம டென்ஷனில் இருக்கேன். நீயும் மூட் ஆப் செய்யாதே! இப்ப விட்டால் அப்புறம் நீ ரூமுக்கே வராம, உன் மாமியார் முந்தானையைப் பிடிச்சு சுத்திட்டு இருப்ப…” என்றான்.

அவனின் பேச்சையே காதில் வாங்காமல் குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

குளித்துக் கிளம்பி வெளியேயும் சென்று விட்டாள்.

சூர்யாவின் கத்தலுக்கோ, முறைப்பிற்கோ எந்தப் பிரதிபலிப்பும் அவளிடமில்லை.

அவன் சொன்னதைச் செய்பவள் போல மாமியார் பின்னால் சுற்றியே அவனைக் கடுப்பேற்றினாள்.

அன்று இரவு சூர்யா உறங்க போய் விட, மறுநாள் கோவிலுக்குச் செல்ல வேண்டியதை சித்ராவும், யுவஸ்ரீயும் எடுத்து வைத்தனர்.

“காலையில் ஐந்து மணிக்கு எல்லாம் கிளம்பணும் யுவா. கண்ணாவை எழுப்பி விட்டுடு. அப்ப அவன்கிட்ட சொன்னால் போதும்…” என்றார் சித்ரா.

“அவர் வர மாட்டேன்னு சொன்னால் என்ன செய்வீங்க அத்தை?”

“வர மாட்டேன்னு சொல்லத்தான் செய்வான். அதுக்காக அப்படியே விட முடியுமா? எப்படியாவது சமாளிச்சு கூட்டிட்டு போகணும்…” என்றார்.

ஆனால் காலையில் அவரின் மகனை அவரால் சமாளிக்கவே முடியவில்லை.

கோவிலுக்கு வர மாட்டேன் என்று தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தான் சூர்யா.

மாமியாரும், மருமகளும் அவனைச் சமாளிக்க முடியாமல் விழிப்பிதுங்கி போயினர்.