8 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 8

மனைவியைக் காயப்படுத்தியதற்காக லேசாக வருந்தினாலும் திரும்ப அதைப் பற்றி யோசிக்கக் கூட நேரமில்லாமல் போனது சூர்யாவிற்கு.

பிராஜெக்ட்டில் நடந்த குளறுபடி அவனை உள்ளே இழுத்திருக்க, அதில் மூழ்கிப் போனான்.

காலையில் விரைவில் வேலைக்கு ஓடுவதும், இரவு நேரம் சென்று வீட்டிற்கு வருவதும் அவனது வழக்கமாகிப் போனது.

அவன் பரபரப்பாக ஓட அவனின் வயிற்றை வாட விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

அவளுக்கும் வேலை இருந்தாலும் அவனளவிற்கு இல்லை. அவளது டீம் பிராஜெக்ட் முடிந்திருந்தது. அதன் பின் அவளுக்குச் சில வேலைகள் மட்டும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அதிலும் வேலை பளு இல்லை என்பதால் அவனைக் கவனித்துக் கொண்டாள்.

கணவன் விட்டேத்தியாக இருக்கிறான் என்ற வருத்தம் உண்டுதான். தனக்காக நேரம் செலவு செய்வதில்லை என்ற உறுத்தலும் இருந்தது தான். தன் மேல் அவனுக்குச் சிறிதாவது பாசம் உள்ளதா இல்லையா என்று கேள்வியும் மனதில் நமநமத்தது தான்.

அவனுக்கு அவன் மீது அன்போ, பாசமோ, காதலோ இல்லையென்றாலும், கட்டிய கணவன் மீது பாசம் வைக்கும் சராசரி மனைவி தான் அவள்.

பெண்களுக்கே இருக்கும் மெல்லிய அவளின் மனம் கணவன் எப்படியோ போகட்டும் என்று நினைக்க விடவில்லை.

அவனின் சோர்வை உணர்ந்து பதமாகவே நடந்து கொண்டாள்.

இரவு நேரம் சென்று வந்ததுடன், வேலையைச் சரியாக முடிக்க வேண்டுமே என்ற அழுத்தமும் சேர்ந்து கொள்ள, சூர்யாவின் உறக்கம் அரைகுறையாகத்தான் இருந்தது.

அன்றும் சூர்யா வீட்டிற்கு வந்த போது நள்ளிரவு ஆகியிருந்தது.

வீட்டிற்குள் வரும் போதே தலையைப் பிடித்துக் கொண்டு தான் வந்தான்.

அவனுக்கு உணவை கொடுத்து உண்ண வைத்தாள்.

உண்டு முடித்ததும், “ஒரு காஃபி கொடு பொண்டாட்டி. தலை ரொம்ப வலிக்குது…” என்றான்.

“இந்த நேரம் காஃபியா? வேண்டாம்ங்க…” என்றாள் யுவஸ்ரீ.

“ம்ப்ச்… இப்ப உன்கிட்ட ஆர்க்யூ பண்ண எனக்குத் தெம்பில்லை. காலையிலிருந்து ஆபிசில் என் தலையைப் போட்டு உருட்டி எடுத்துட்டாங்க. பதில் சொல்லியே ஓய்ந்து போய் வந்திருக்கேன். ஏதாவது பேசாம காஃபி கொடு…” என்று சிடுசிடுத்தான்.

“ஏற்கெனவே நீங்க இரண்டு நாளா சரியா தூங்கலை. இந்த நேரம் காஃபி குடிச்சா இன்னைக்கும் உங்களால் தூங்க முடியாது. அதான் வேண்டாம்னு சொல்றேன்…” என்றாள் இதமாகவே.

“இவ்வளவு தலைவலியோடையும் என்னால தூங்க முடியாது. இப்ப என்ன செய்ய?”

“படுங்க, தூக்கம் வரும்…” என்றாள்.

“யுவா, விளையாடாதே! இந்தத் தலைவலியோட என்னால் படுக்க முடியும்னு தோனல. ஒரு காஃபி தானே கேட்டேன். அதுக்கு ஏன் இத்தனை பேச்சு?” என்று கோபப்பட்டான்.

“அதெல்லாம் படுக்க முடியும், வாங்க…” என்று அவனைப் படுக்கையறைக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள்.

அவன் படுத்ததும் அலமாரியிலிருந்து தலைவலி தைலத்தை எடுத்து வந்தவள், “கண்ணை மூடிக்கோங்க. தைலம் தேச்சு விடுறேன்… என்றாள்.

சூர்யாவும் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் இதமாகத் தேய்த்துவிட்டவள் நெற்றியின் ஓரம் இரண்டு பக்கமும் மெல்ல அழுத்திக் கொடுக்க ஆரம்பித்தாள்.

‘இதில் எப்படி உடனே சரியாகும்?’ என்று முணுமுணுத்தவன் சிறிது நேரத்தில் அமைதியாகிப் போனான்.

அவள் தேய்க்க தேய்க்க அவ்வளவு இதமாக இருந்தது.

“ம்ம், இப்ப பரவாயில்லை. நீயும் படு…” என்றான்.

அவளும் படுத்து மீண்டும் அவனின் தலையை இதமாகக் கோதி விட்டாள்.

“சரியாகிடும். தூங்குங்க…” என்றாள்.

“ம்ம்ம்…” என்றவன் அவளின் புறம் திரும்பிப் படுத்து அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டவன், அவளை அணைத்துக் கொண்டு நித்திரையைத் தழுவினான்.

அவனின் அந்தச் செய்கையில் அவளின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

முரட்டுத்தனம் இல்லாத அவனின் இதமான அணைப்பு அவளை இலகுவாக்கி இன்னும் அழுத்தமாக அவனுடன் அடங்கி விடத் தூண்டியது.

அவனின் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

அரை உறக்கத்தில் இருந்தவனிடம் மெல்லிய அதிர்வு.

திருமணம் ஆன புதிதில் தான் அவளாக அவனிடம் அடைக்கலம் ஆகியிருக்கிறாள்.

அதன் பிறகு கணவனைப் பற்றிய குழப்பத்தில் அவளால் அவனிடம் ஒன்றவே முடிந்தது இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பின் அவனின் அணைப்புக்குள் அவள் அடங்கியதை உணர்ந்தாலும் உறக்கம் அவனை இழுக்க நித்திரையைத் தழுவியிருந்தான்.

மறுநாள் விரைவிலேயே சூர்யா அலுவலகம் கிளம்பி விட, தன் வேலைகளை முடித்துக் கொண்டு நிதானமாக அலுவலகம் சென்று சேர்ந்தாள் யுவஸ்ரீ.

அவள் தன் இருக்கையில் அமர்ந்த போது, நந்தினி அவளுக்குள் ஏதோ தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

என்னவென்று கவனித்தவளின் காதுகளில், “இவங்க பிராஜெக்ட் ரன்னாகாம போனதுக்கு என்னையும் போட்டு பிச்சு எடுக்குறானே ஆண்டவா!” என்ற தோழியின் புலம்பல் விழ, கேள்வியுடன் பார்த்தாள் யுவஸ்ரீ.

“நீ சூர்யாவை எப்படிச் சமாளிக்கிற யுவா?” என்று கேட்டாள் நந்தினி.

“எதுக்கு இந்தக் கேள்வி? அதுக்கு முன்னாடி எதுக்குத் தனியா புலம்பிட்டு இருக்கன்னு சொல்லு…” என்றாள்.

“எல்லாம் தினுவால் தான். பாரு என் டென்ஷனை ஏத்தி விட்டுட்டு அவன் லேப்டாப்பை டொக்கு டொக்குன்னு தட்டிட்டு இருக்கான்…” என்றாள் கடுப்பாக.

“தினேஷ் என்ன செய்தார்?”

“சாப்பிட்டியான்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் யுவா. அதுக்குப் போய் வள்ளுன்னு விழறான்…”

“சாப்பிட்டியான்னு கேட்டதுக்கா? ஏன் நீ கேட்டதில் ஒரு தப்பும் இல்லையே?”

“அதுதான் என் கோபமும். பயபுள்ள ராத்திரியும், பகலுமா கம்ப்யூட்டருக்குள்ள தலையை விட்டுட்டு கிடக்குதே. சாப்பிட்டுச்சோ, இல்லையோன்னு அக்கறையாதான் கேட்டேன் யுவா. அதுக்குப் போய் நீ என்ன ஜாலியா இருக்க. நேர நேரத்துக்குக் கொட்டிக்குவ. நானும் அப்படிக் கொட்டிக்கிட முடியுமா? உன் வயிறை நிரப்பிக்கிட்டனா வாயை மூடிக்கிட்டு இருன்னு திட்டிட்டான்…” என்றவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது.

அவளின் கையை லேசாக அழுத்தி விட்டவள், “விடு நந்தினி. ஆம்பிளைங்க அப்படித்தான். வேலையில் வரும் டென்ஷனை அங்கே காட்ட முடியாம நம்ம மேலே வந்து கொட்டுவாங்க…” என்றாள் யுவஸ்ரீ.

“இது நல்ல கதையா இருக்கே? அவங்க வேலையிடத்தில் பிரச்சினைனா நாம என்ன செய்ய முடியும்?”

“அதையெல்லாம் அவங்க யோசிக்க மாட்டாங்க நந்தினி. அவங்களுக்குத் தேவை ஒரு வடிகால். அதுக்கு நம்மை யூஸ் பண்ணிக்கிறாங்க…”

“நமக்கு மட்டும் பிரச்சினை இல்லையா என்ன? அவங்களுக்கு மட்டும் தான் எல்லா டென்ஷனும் இருப்பது போலவும், நாம எல்லாம் ப்ரிட்ஜ்ல வச்சது போலக் குளுகுளுன்னு இருப்பது போலவும் இவங்களுக்கு ஒரு நினைப்பு. எனக்கு வர்ற கடுப்புக்கு…” என்று பல்லை கடித்தாள் நந்தினி.

“விடு… விடு… இதுக்கெல்லாம் பல்லை கடிச்சா, நம்ம வாயில் பல்லே இருக்காது…” என்று தோழியைச் சமாதானம் செய்தாள் யுவஸ்ரீ.

“அதுவும் சரி தான். ஆமா, சூர்யா எப்படி? அவரும் டென்ஷன் பார்ட்டி தானே? அவரை எப்படிச் சமாளிக்கிற நீ?” என்று கேட்டாள் நந்தினி.

‘சூர்யா என்ன இதில் மட்டுமா என்னைப் படுத்தி எடுக்கிறார்? புரியாத புதிரா இருந்து அத்தனை விஷயத்திலும் எனக்குத் தலைவலியைக் கொடுக்கிறார். இதென்ன பிரமாதம்னு இப்ப எல்லாம் மரத்துப் போச்சு’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் யுவஸ்ரீ.

சூர்யாவை பற்றித் தோழியே ஆனாலும் யுவஸ்ரீ அவளிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

ஒரே இடத்தில் வேலை பார்க்கும் நிலையில் தோழி தன் கணவனைப் பற்றித் தவறாக நினைப்பதை விரும்பவில்லை.

“என்ன யுவா ஒன்னும் சொல்ல மாட்டிங்கிற?” என்று நந்தினி கேட்க,

“டென்ஷன் ஆகும் போது சாப்பாட்டைக் கொடுத்து ஆப் செய்துடுவேன் நந்தினி. பசிக்கும் வரை தான் கத்த தோனும். பசி அடங்கிருச்சுன்னா அமைதியாகிடுவாங்க…” என்று சொல்லி கண் சிமிட்டினாள் யுவஸ்ரீ.

“செம டெக்னிக் போ… நானும் பாலோ பண்றேன்…” என்ற நந்தினி தினேஷை வில்லி பார்வை பார்த்து வைத்தாள்.

‘ஹாஹா… இனி தினேஷ் நிலைமை கவலைக்கிடம் தான்’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

மதிய உணவின் போது நந்தினியுடன் கேண்டின் கிளம்பினாள் யுவஸ்ரீ.

அப்போது நேராகத் தினேஷ் இருக்கையின் அருகில் சென்றாள் நந்தினி.

அவனோ தலையைக் கூட நிமிர்த்தாமல், கணினியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

“ம்க்கும்…” என்று செருமி அவனின் கவனத்தைத் திருப்ப முயல, தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

“எழுந்து வா!” என்றாள் அதிகாரமாக.

காலையில் தான் கோபமாகக் கத்தியதில் பேசமாட்டாள். அவளைச் சமாதானம் செய்ய மெனக்கெட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தினேஷிற்கு வியப்பாக இருந்தது.

சண்டைக்குப் பிறகு முதல் முதலாக அவளாக வந்து பேசியிருக்கிறாளே என்று ‘ஆஆ’ என்று வாயைப் பிளந்து பார்த்தான்.

“எழுந்து வான்னு கூப்பிட்டேன்…” என்றாள் கடுகடுவென.

அவளாக வந்து அழைத்தவுடன் உடனே எழுந்து ஓடத்தான் கால்கள் பரபரத்தன.

ஆனால் வேலை இருந்ததே! அது அவனின் கால்களைக் கட்டிப் போட்டது.

“இப்ப நீ வரலைனா அப்புறம் பிரேக்அப் தான்…” என்றாள் உறுதியாக.

அதற்கு மேலும் தயங்குவானா என்ன?

“இன்னொரு பொண்ணை உஷார் பண்ணவெல்லாம் எனக்குச் சமர்த்து இல்லை தாயே!” என்று அலறி எழுந்து வந்தான்.

“அதைச் சொல்லு! நானே போனா போகுதுன்னு தான் உனக்கு வாழ்க்கை கொடுக்க முன் வர்றேன். என்னைத் தவிர எவளும் உன்னைச் சீண்ட மாட்டாள்…” அலட்டிக் கொண்டாள் நந்தினி.

அவர்களின் உரையாடலை கேட்டு யுவஸ்ரீயின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

அதே புன்னகையுடன் கணவன் புறம் திரும்பினாள்.

அவனும் கணினியுடன் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“நீங்களும் சாப்பிட வர்றீங்களா சூர்யா?” என்றழைத்தாள்.

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன், “ம்ம், வர்றேன்…” என்றான்.

கணினியை லாக் செய்து விட்டு எழுந்தவன், தலையைச் சிலுப்பிக் கொண்டான். முகத்தில் விழுந்த முடியை ஸ்டைலாகக் கோதி விட்டுக் கொண்டான்.

‘இனி இந்த முடிக்குச் சடை தான் போடணும்’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு, அவனுக்குச் சடை போட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை ஓடியது.

உச்சியில் குடும்பி போட்டு, பூவை சுற்றி வைத்து, முகத்தில் பவுடர் அடித்து, நெற்றியிலும், கன்னத்திலும், நாடியிலும் கருப்பு பொட்டு வைத்துக் கற்பனை செய்து பார்த்தவளுக்குப் புன்னகை அதிகரித்தது.

“எதுக்கு என்னைப் பார்த்து சிரிக்கிற?” என்று கேட்ட கணவனுக்குத் தன் கற்பனையைச் சொன்னால் என்னாகும்? என்று யோசனை ஓடியது.

சும்மாவே கடுகடு ஆசாமி. என் கற்பனை தெரிந்தால் சாமியாடி விடுவான் என்று தோன்ற சிரித்துக் கொண்டே மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

அவளை விநோதமாகப் பார்த்தாலும், தலையை மீண்டும் சிலுப்பி விட்டுக் கொண்டு தோளை குலுக்கி கொண்டான்.

“எனக்குப் பேச நேரமில்லை. சாப்பிட்டு வந்து வேலையைப் பார்க்கணும்…” என்றவன் வேகமாகக் கேண்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘நேரம் இருந்தாலும் அப்படியே என்கிட்ட பாசமா பேசிட போறது போலத்தான்’ என்று நொடித்துக் கொண்டு அவனின் பின் சென்றாள்.

காலையும், இரவும் மட்டுமே வீட்டில் சமையல் செய்வாள் யுவஸ்ரீ.

மதியத்திற்கு இருவருமே அலுவலக உணவகத்திலேயே உண்டு கொள்வர்.

அதனால் தங்களுக்குத் தேவையான உணவை வாங்கி வந்து கணவன், மனைவி இருவரும் அருகருகே அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு எதிரே தினேஷும், நந்தினியும் அமர்ந்தனர்.

தினேஷ் தன் உணவில் கை வைக்கப் போக, “தினு, ஒரு நிமிஷம்!” என்று அவனை நிறுத்தினாள் நந்தினி.

அவன் என்ன என்று கேட்க வாயை திறந்த நொடி கை நிறைய உணவை அள்ளி அப்படியே அவன் வாயில் திணித்தாள்.

“ஹக்.. ஹா…” என்று தினேஷ் திணறிப் போனான்.

“தின்னுடா தினு…” என்று அவள் பாசமாகச் சொல்லி வைக்க,

திறந்திருந்த வாய் நிறைய உணவை வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்த தினேஷை பார்த்து சூர்யா வாய் விட்டு சிரிக்க, சிரிப்பதா வேண்டாமா என்பது போல் அவனைப் பார்த்து வைத்தாள் யுவஸ்ரீ.

“உன் ஐடியா ஒர்க்கவுட் ஆகிடுச்சு யுவா. உள்ளே சோறு போனதும், தினு அமைதியாகிட்டார் பார்…” என்று நந்தினி கொண்டாட்டமாகச் சொல்ல,

“நீ தான் இந்த ஐடியா கொடுத்ததா?” என்று மனைவியிடம் கேட்டான் சூர்யா.

“ஆமா… ஆமா சூர்யா. யுவா தான் இந்த ஐடியா சொன்னது. நீங்க கோபமா இருக்கும் போது சாப்பாடு கொடுத்து தான் உங்களை ஆப் செய்வாளாமே? அதான் நானும் ட்ரை செய்தேன். பாருங்க, உங்க ஃபிரண்ட் கூட ஆப் ஆகிட்டார்…” என்றாள் நந்தினி.

“நீ என்னைக்கு எனக்கு ஊட்டி விட்ட?” மனைவியின் அருகே குனிந்து மெல்லிய குரலில் கேட்டான் சூர்யா.

‘ம்க்கும், அது ஒன்னு தான் குறைச்சல்’ என்று வெட்டும் பார்வை பார்த்தாள் யுவஸ்ரீ.

“அடப்பாவிகளா! புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து என்னைக் கொல்வதற்கு ஐடியா கொடுத்தீங்களா?” காதலி திணித்து விட்ட உணவை கஷ்டப்பட்டு விழுங்கி விட்டுக் கத்தினான் தினேஷ்.

“அவங்களை ஏன் தினு திட்டுற? நான் தான் யுவாகிட்ட ஐடியா கேட்டேன். அவள் சாப்பிட வைத்தால் போதும்னு தான் சொன்னாள். நீங்க என்னைக் காலையில் சாப்பிட்டீங்களான்னு கேட்டதுக்குத் திட்டினீங்கன்னு அந்தக் கோபத்தைக் காட்டத்தான் இப்படிச் செய்தேன். இனி நான் சாப்பிட்டீங்களான்னு கேட்டால் திட்டுவீங்க?” என்று மிரட்டலாகக் கேட்டாள்.

“மாட்டேன், தாயே! மாட்டவே மாட்டேன்! இனி உன்கிட்ட கோபப்பட்டுத் தின்னே சாக விரும்பலை இந்தத் தினேஷு…” என்றான் அலறலாக.

“அது!” என்று காதலனை கெத்தாகப் பார்த்து வைத்தாள் நந்தினி.

அவர்கள் விளையாட்டில் கணவன், மனைவி இருவருமே வாய்விட்டு சிரித்தனர்.

“இன்னைக்கு நைட் வீட்டில் எனக்கு நீ ஊட்டி விடணும்…” என்று ரகசியமாகச் சொன்னான் சூர்யா.

“ஓ! விடலாமே!” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள் யுவஸ்ரீ.

“ஓய்! தினேஷுக்கு நந்தினி ஊட்டி விட்ட மாதிரி இல்லை. பாசமா ஊட்டி விடணும்…” என்றான் முன்னெச்சரிக்கையாக.

‘அதுக்கு நீ முதலில் எனக்குப் பாசம்னா எப்படி இருக்கும்னு காட்டணும்’ என்று நினைத்துக் கொண்டாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை அவள்.

“என்ன பதிலை காணோம்? ஊட்டுவியா? இல்லையா?” என்று விடாமல் கேட்டான்.

“உங்களுக்கு வேலைக்கு நேரமாச்சு…” என்று பேச்சை மாற்றியவள், தன் உணவை முடித்து விட்டு எழுந்தாள்.

“வீட்டில் வச்சு பார்த்துக்கிறேன்டி பொண்டாட்டி…” என்று முனகி கொண்டே அவனும் எழுந்தான்.

சொன்ன படி இரவு உணவை போட்டு கொடுத்த மனைவியிடம் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

“தூங்கணும், நேரமாச்சு. இப்ப சாப்பிடுறீங்களா இல்லையா?” என்று அவனை முறைத்தபடி கேட்டாள் யுவஸ்ரீ.

“நான் சொன்னதைச் செய்! அப்புறம் தூங்க போகலாம்…” என்றான் பிடிவாதமாக.

“நேரமானால் எனக்கு ஒன்னுமில்லை. உங்களுக்குத் தான் நாளைக்கு வேலை பார்க்க கஷ்டமா இருக்கும்…” என்றாள்.

“ஏய் பொண்டாட்டி, அப்படி என்னடி உனக்குக் கஷ்டமான வேலை சொன்னேன்? ஊட்டி விடத்தானே சொன்னேன்? செய்தா குறைந்தா போவ?” என்று கேட்டவனை என்ன செய்யலாம் என்பது போல் பார்த்தாள்.

“இன்னைக்கு என்ன ரொமான்ஸ் அள்ளுது?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“ரொமான்ஸா? நான் என்ன உன்னைக் கட்டிப் பிடிச்சேனா? முத்தம் கொடுத்தேனா? இல்ல பலானது பலானது செய்தேனா? சோறு ஊட்டி விடுவதைப் போய் ரொமான்ஸூன்னு சொல்லிட்டு இருக்க?”

“கட்டிப் பிடிக்கிறதும், முத்தம் கொடுக்குறதும், பலானது மட்டும் தான் ரொமான்ஸ்னு உங்களுக்கு எவன் சொன்னான்?” அதே நக்கல் அவளிடம்.

உதட்டை சுளித்து அலட்சியமாகத்தான் கேட்டாள்.

“அதைத் தான்டி ரொமான்ஸ்னு ஊரு உலகமே ஒரு பக்கம் நம்பிட்டு இருக்கு… என்றான்.

“அறியாமல் பேசுறவங்களை நம்பியது உங்க தப்பு!” என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.

“அப்போ ரொமான்ஸுனா உங்க அகராதியில் என்னங்க மேடம்?” எகத்தாளமாகக் கேட்டான் அவன்.

“அது உங்களுக்கே தான் தெரியணும்…” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.

“ஏய் பொண்டாட்டி, பதில் சொல்லிட்டு போடி!” கத்தினான் சூர்யா.

“கண்டுபிடிங்க!”

“சரி, அதை அப்புறம் கண்டுபிடிக்கலாம். இப்ப ஊட்டி விடு!” இறங்கி வந்தான்.

“முதலில் ரொமான்ஸ்னா என்னன்னு கண்டுபிடிங்க. அப்புறம் பார்க்கலாம்…” என்றாள்.

“அட! ச்சை! ரொமான்ஸ்னா எப்படியாவது இருந்துட்டு போகட்டும். இப்ப வயிறு தான் முக்கியம்…” என்று சலித்துக் கொண்டே தலையைச் சிலுப்பி விட்டு உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தான் சூர்யா.