8 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
“ஹேய் உத்ரா, வந்துட்டியா? வா, வா. இப்பத்தான் உன்னைத் தேடிட்டு இருந்தேன்…” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்ற புவனாவைப் புன்னகையுடன் கட்டிக்கொண்டாள் உத்ரா.
“எதுக்குப் புவிக்குட்டி இத்தனை ஆர்ப்பாட்டம்?”
“பின்ன, நம்ம இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க போறோம்னா சும்மாவா? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா? ஏன் உனக்குச் சந்தோஷம் இல்லையா?”
“எனக்கும் ரொம்ப ரொம்பச் சந்தோசம் தான். வா, உள்ளே போகலாம்…” என்றாள் உத்ரா.
தோழிகள் இருவரும் வெளி சுவரே கண்ணாடியாகப் பளபளத்த அந்தப் பெரிய கணினி தொழில்நுட்ப அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இரண்டு வருடங்கள் வேகமாகக் கடந்திருந்தன.
கணினி முதுகலை கல்லூரி படிப்பை முடித்திருந்தாள் உத்ரா.
கல்லூரி இறுதி வருடத்தில் நடந்த கேம்பஸ் நேர்முகத்தேர்வில் உத்ரா, புவனா இருவருமே ஒரே கம்பெனியில் தேர்வாகி வேலை பெற்றிருந்தனர்.
இன்று அவர்கள் வேலையில் சேரவேண்டிய முதல் நாள்.
கல்லூரியில் கடைசித் தேர்வு அன்று பார்த்துக் கொண்ட தோழிகள் அதன் பிறகு இன்று தான் சந்தித்துக் கொள்கின்றனர்.
அதனால் இருவரும் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்றனர்.
“உனக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா புவனா?” என்று கேட்டாள் உத்ரா.
“என்ன விஷயம் உத்ரா?”
“குருவுக்கும் இந்தக் கம்பெனியில் தான் கேம்பஸில் வேலை கிடைத்தது…” என்ற உத்ரா தோழியை ஓரப்பார்வையாகப் பார்த்தாள்.
“தெரியுமே? அதுக்கென்ன இப்ப?” என்று சாதாரணமாகக் கேட்டாள் புவனா.
“அட! புவிக்குட்டிக்கு இப்ப எல்லாம் தைரியம் ரொம்ப வந்திருச்சுப் போல?” உத்ரா வியந்து கேட்க,
“பின்ன? இனி வேலை பார்க்க போறேன். இனியும் பயந்தா ஆகுமா?” என்றாள் புவனா.
“ம்ம்… தேறிட்ட போ!”
“அதோட குரு இனி என்னைத் தொந்தரவு பண்ண மாட்டார்னு தான் நினைக்கிறேன். அன்னைக்கு நான் படிக்கணும்னு சொன்ன பிறகு என்னைத் தொந்தரவு பண்ணலையே? அவர் படிப்பை முடிச்சுட்டு போன கடந்த இரண்டு வருஷத்தில் அதுக்குப் பிறகு நாங்க எங்கேயும் பார்த்துக்கவும் இல்லை…”
“நான் கூடப் பயந்தேன். குரு எதுவும் பிரச்சனை பண்ணுவானோன்னு. உன் பேச்சை கேட்டு அவன் விலகிப் போனது எனக்கு இன்னும் அதிசயம் தான்…” என்றாள் உத்ரா.
“சரி விடு! இனியும் அந்தப் பேச்சு வேணாம். இப்ப என் சிந்தனை எல்லாம் நாம எந்த டீம்ல இருக்கப் போறோம்கிறதுல தான் இருக்கு. நாம இரண்டு பேரும் ஒரே டீம்மா இருந்தா ரொம்ப ஹேப்பியா இருக்கும்…” என்றாள் புவனா.
இருவரும் உள்ளே சென்று தங்களைப் பற்றிய விவரம் சொல்ல, அவர்களை மீட்டிங் அறைக்குச் செல்ல சொன்னார்கள்.
அங்கே அவர்களைப் போல் முதல் முறையாக வேலைக்குத் தேர்வாகி வந்த சிலரும் இருக்க, அவர்களுடன் தோழிகளும் அமர்ந்து கொண்டனர்.
சற்று நேரத்தில் அங்கே ஓர் உயரதிகாரி வருகை தந்து அவர்களை வரவேற்றுப் பேச்சை ஆரம்பித்தார்.
புதியதாக வந்தவர்களுக்கு அடுத்தப் பத்து நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், அது முடிந்ததும் யார், யார் எந்த டீமில் வேலை செய்ய வேண்டும் என்பது பற்றிச் சொல்லப்படும் என்றும் அறிவித்து விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒரு பயிற்சியாளர் வர அவர்களுக்கான பயிற்சி தொடங்கியது.
மதியம் உணவிற்கான இடைவேளை வர, தோழிகள் இருவரும் கேண்டின் சென்று உணவை வாங்கி உண்டு விட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது “புவி…” என்ற அழைப்புக் கேட்க இருவரும் சப்தம் வந்த பக்கம் திரும்பினர்.
“எப்படி இருக்கப் புவி?” என்று கேட்டப்படி நின்று கொண்டிருந்தான் குரு.
அவனைப் பார்த்ததும் திடுக்கிட்டுத் தான் போனாள் புவனா.
உத்ராவிடம் ‘குரு இங்கே இருந்தால் எனக்கென்ன?’ என்று சவடாலாகப் பேசியவளுக்கு இப்போது அவனைக் கண்டதும் பழைய பயந்த சுபாவம் வந்து ஒட்டிக் கொண்டது.
குருவோ கல்லூரியில் பார்த்ததை விட உடல் முறுக்கேறி, கண்களில் மின்னிய வெளிச்சத்துடனும், உதட்டில் உறைந்து போன புன்னகையுடனும் நின்றிருந்தான்.
இருவரையும் சில நொடிகள் மாறி மாறிப் பார்த்த உத்ரா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
குருவை பார்க்க நேரிடலாம் என்று அறிந்திருந்த படியால் உத்ரா அவனைச் சாதாரணமாகவே எதிர்கொண்டாள்.
“என்ன புவி பதிலே சொல்ல மாட்டேங்கிற?” என்று குரு கேட்க,
அதிர்விலிருந்து மீளாமலேயே ‘நன்றாக இருக்கிறேன்’ என்பதாகத் தலையை அசைத்தாள்.
“காலையிலேயே உன்னைப் பார்க்க வரலாம்னு இருந்தேன். ஆனா வேலைக்குச் சேர்ற முதல் நாள் காலையிலேயே உன்னைப் பதட்டமடைய வைக்க வேண்டாம்னு தான் இப்போ வந்தேன்…” என்றான்.
அவனின் பேச்சின் சாராம்சத்தில் விழிகளை விரித்தாள் புவனா.
‘இவன் சொல்வதைப் பார்த்தால் நான் இங்கே வேலைக்கு வருவது இவனுக்கு முன்பே தெரியும் போலவே?’ என்பதாக அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிற புவி? எனக்கு எப்படி நீ இங்கே வேலைக்கு வருவது தெரியும்னா?” என்று கேட்டான்.
அவளின் முகப்பாவனையே அவனுக்கான பதிலைச் சொன்னது.
“நான் இங்கே உட்காரலாமா?” என்று அவளின் அருகிலிருந்த இருக்கையைக் காட்டிக் கேட்க, சம்மதமாக அவளின் தலை ஆடியது.
உத்ராவும் அங்கே தான் இருக்கிறாள் என்பதையே அவன் பொருட்படுத்தவில்லை.
அவனின் கண்கள் புவனாவை மட்டுமே மொய்த்தன.
புவனாவும் ஏனோ முன் போல அவனுக்குப் பயந்து ஓடி ஒளிய வேண்டும் என்று நினைக்கவில்லை.
“உன்கிட்ட நான் சொன்ன எதுவும் இன்னும் மாறலை புவி. உன்னை விரும்பும் அதே குரு தான் நான். என் காதல் விஷயம் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா உன் படிப்பை நிறுத்திடுவாங்கன்னு சொன்னயே… அதனால் தான் உன்னை விட்டுத் தள்ளி இருந்தேன்.
ஆனா உன்னை என் கண் பார்வையில் தான் வச்சுருந்தேன். அதனால் உன்னைப் பற்றிய விவரம் எல்லாமே எனக்குத் தெரியும். இப்போ படிப்பு முடிஞ்சு வேலையும் பார்க்க வந்துட்ட. இனியாவது என்னை லவ் பண்ணுவ தானே?” என்று கேட்டவனைக் கண்டு வாயடைத்துப் போனாள் புவனா.
இரண்டு வருடங்களுக்குப் பிறகும் திரும்பவும் இவன் இப்படிக் காதல் சொல்லிக் கொண்டு வருவான் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.
“சொல்லு புவி?” குரு கேட்க,
“ஹா… ஹான்! இல்லை லவ் எல்லாம் சரி வரா…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,
“அவசரப்பட்டு எதுவும் சொல்லாதே புவி. யோசிச்சு சொல்லு…” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.
வந்தான், சொன்னான், சென்றான் என்பது போல் வந்து சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.
“க்கும்…” என்று செருமல் சப்தத்தில் திரும்பிப் பார்க்க, உத்ரா தோழியைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“என்ன உத்ரா இப்படி?” குருவை நினைத்து அதிர்வுடன் கேட்டாள்.
“நான் கூடக் குருவை என்னமோன்னு நினைச்சேன். ஆனா அவன் ரூட்டே வேறயா இருந்திருக்கு…” என்றாள் சிரிப்புடன்.
“என்ன உத்ரா இப்படிச் சொல்ற? காலேஜோட தொல்லை முடிஞ்சி போயிருச்சுன்னு நினைச்சேன். ஆனா இன்னும் தொடருதே. இப்ப நான் என்ன பண்ணுவேன்?” தவிப்புடன் கேட்டாள் புவனா.
“குரு சொன்ன மாதிரி யோசி…”
“என்ன நீ, இவ்வளவு அசால்டா சொல்ற? நீ தானே சொன்ன கிஸ் பண்ணி உணர்வுகளைத் தூண்டிவிடுறவன் சொல்ற காதல் காதலே இல்லைன்னு. அப்புறம் அதுக்கு மேல யோசிக்க என்ன இருக்கு?”
“குருகிட்ட ஆரம்பம் தான் சரியில்லை. ஆனா ஃபினிஷிங் சரியா இருக்குன்னு தோணுது. அவன் காதலை எப்படி வெளிப்படுத்துறதுன்னு புரியாம சட்டுன்னு உணர்ச்சி வசத்தில் கிஸ் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன்.
ஆனா எப்போ உன் படிப்புக் கெட்டுட கூடாதுன்னு உன்னை விட்டு விலகி இருந்தானோ அப்பயே அவன் காதல் பொய்யில்லைன்னு புரியுது. நீ யோசி. அப்புறம் உன் முடிவு என்னமோ அதை அவன்கிட்ட சொல்லு. இதுக்கு மேல உங்க விஷயத்தில் நான் மூக்கை நுழைக்க மாட்டேன்…” என்றாள் உத்ரா.
குழப்பத்துடன் தலையை ஆட்டிவைத்தாள் புவனா.
“சரி வா, கிளம்புவோம். ட்ரைனிங் ஆரம்பிக்கிற டைம் ஆகிடுச்சு…” என்று தோழியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் உத்ரா.
அன்றைய பயிற்சி வகுப்புகள் மாலையளவில் முடிய, தோழிகள் இருவரும் வீட்டிற்குச் செல்ல மின்தூக்கி அருகில் வந்தனர்.
கீழே சென்றிருந்த மின்தூக்கி சற்று நேரத்தில் மேலே வர, அதில் ஏற காத்திருந்தனர்.
அப்போது மின்தூக்கியின் கதவு திறக்க, அதிலிருந்து வெளியே வந்தான் முகில்வண்ணன்.
உத்ரா உள்ளே நுழைய, அவன் வெளியே வர என்று இருவரும் நேரெதிராகப் பார்த்துக் கொண்டனர்.
அவளை அங்கே கண்டதும் முகிலின் கண்கள் எதிர்பாரா அதிர்வை வெளிப்படுத்திவிட்டு அடங்கின.
ஆனால் உத்ராவோ யாரோ முன்னே பின்னே தெரியாதவனைப் பார்த்தது போல் விலகிச் சென்று மின்தூக்கியுனுள் நுழைந்தாள்.
“ஏய் உத்ரா, முகில் டி!” அவள் அவனைப் பார்க்கவில்லையோ என்று நினைத்து அவளின் கையைப் பிடித்துப் புவனா நிறுத்த முயல,
அவளை மின்தூக்கியுனுள் இழுத்துக் கொண்டாள் உத்ரா.
“உத்ரா?”
“ம்ப்ச், பேசாம நில்லு…” என்று அவளை உத்ரா அடக்க, மின்தூக்கி கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தது.
“ஏய், முகிலும் இங்கே தானே வேலை பார்க்கிறார். பாரேன் எனக்கு இப்பத்தான் ஞாபகம் வருது. ஆனா நீ ஏன் அவரைத் தெரியாதது போலப் பார்த்துட்டு வந்த?” என்று படபடவென்று கேட்டாள் புவனா.
உத்ரா பதில் சொல்லாமல் அமைதியாக அவளைப் பார்த்தாள்.
“உத்ரா என்னடி?”
“கொஞ்ச நேரம் பேசாம இருடி…” என்று மெதுவான குரலில் அருகே நின்றிருந்தவர்களைக் சுட்டிக்காட்டி அவளை அடக்கினாள்.
அவர்களுடன் இன்னும் இரண்டு பேர் அந்த மின்தூக்கியுனுள் இருக்க, புவனா மௌனமானாள்.
ஆனாலும் அவளின் கண்கள் உத்ராவை ஆராய்ச்சியாக வட்டமிட்டன.
உத்ராவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே இருந்தாள்.
மின்தூக்கியை விட்டு வெளியே வந்து பார்க்கிங்கில் நின்றிருந்த உத்ராவின் வண்டியின் அருகே வரும் வரை தோழிகளுக்கு இடையே எந்தப் பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை.
வண்டியின் அருகே வந்த பின்னும் உத்ரா அமைதியாக இருக்க, “உத்ரா என்னடி இது, ஏன் இப்படி இருக்க?” பொறுக்க முடியாமல் கேட்டாள் புவனா.
“எப்படி இருக்கேன்? எப்பவும் போலத்தானே இருக்கேன்?” அமைதியாகக் கேட்டாள் உத்ரா.
“அதான் கேட்கிறேன். நீ லவ் செய்தவரை நேருக்கு நேரா பார்த்தப் பிறகும் உன்னால எப்படி இவ்வளவு அமைதியா இருக்க முடியுது? இவ்வளவு மாசம் கழிச்சுப் பார்த்திருக்க. அதுக்காகவாவது உன் முகத்தில் மாற்றம் வந்திருக்க வேண்டாமா?” என்று வியப்புடன் கேட்டாள்.
“லவ் செய்தவரா? என் காதல் எப்போ இறந்த காலத்துக்குப் போச்சு? லவ் செய்கிறவர்னு சொல்லு, சரியா இருக்கும்…” என்று திருத்தினாள் உத்ரா.
“ஆஆ!” என்று வாயில் விரலை வைத்தாள் புவனா.
“எதுக்கு இத்தனை ஆச்சரியம்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி உத்ரா சிரிப்புடன் கேட்க,
“நீ இன்னும் முகிலை லவ் பண்றியா?”
“என் உயிர் இருக்குற வரை என் காதல் எனக்குள்ள இருக்கும் என்ற போது உன் கேள்வியே அநாவசியமானது புவிக்குட்டி…” என்று அலட்டாமல் சொன்னவளை அசந்து போய்த் தான் பார்த்தாள் புவனா.
அவளின் காதலுக்கு எதிர்காலம் உண்டா இல்லையா என்பது கூட உறுதியில்லாத நிலையில் இன்னும் முகிலை விரும்பிக் கொண்டிருக்கும் தோழியைக் கண்டு பிரமித்துப் போனாள் புவனா.
“என்னை அடிக்கடி இப்படிப் பார்க்கிறதே உனக்கு வேலையா போய்ருச்சு. நானும் சாதாரண மனுஷி தான் புவிக்குட்டி…”
“நீ தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிற உத்ரா. இப்பயும் காதலை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு உன்னால எப்படி முகிலை யாரோ போலப் பார்த்துட்டு வர முடிஞ்சது?”
“குருவே இங்கே தான் வேலை பார்க்கிறான்னு எனக்கு ஞாபகம் இருக்கும் போது முகிலை மறந்துடுவேனா என்ன? முகிலை எப்பவாவது இங்கே சந்திப்பேன்னு தெரிஞ்சே தானே வந்தேன்.
ஆனா முகிலை நீண்ட நாளுக்கு அப்புறம், அதுவும் என் எதிரே, ரொம்பப் பக்கத்தில் பார்க்க நேர்ந்த போதும் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளும் அந்த வேதனை இருக்கே…” என்றவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் கண்களை மூடி நின்றாள்.
உத்ராவின் முகம் வேதனையில் கசங்கியது. தன் வேதனையை அடக்கிக் கொள்ள உதடுகளைப் பற்களால் நெரிக்க ஆரம்பித்தாள்.
தோழியை அப்படிப் பார்க்க முடியாமல் தவித்துப் போன புவனா, அவளின் தோளில் கை போட்டு தன் தோளோடு அணைத்துக் கொண்டாள்.
சில நொடிகள் புவனாவின் கைகளுக்குள் அடங்கி இருந்தவள், பின் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
“என் உணர்வுகளைக் காட்ட முடியாது என்றா நினைக்கிற புவி? முகிலைப் பார்த்ததும் ‘ஹோ’ன்னு பெரிய இரைச்சலே எனக்குள்ள வந்து போகத்தான் செய்தது. நெஞ்சை எல்லாம் அடைகிற மாதிரி ஒரு படபடப்பு.
ஆனா அப்படி என் உணர்வுகளை வெளிக்காட்டினால் என்ன நடக்கும்னு நினைக்கிற? முகிலோட அலட்சியத்தை வேண்டுமானால் பதிலுக்குப் பெற்றுக் கொள்ளலாம்…” என்று வருத்த முறுவல் பூத்தாள் உத்ரா.
“ஏன் உத்ரா, இத்தனை நாளில் முகிலின் மனசு மாறி இருக்கலாம் இல்லையா? திரும்ப வேணும்னா பேசிப் பாரேன்…” என்று புவனா சொல்ல,
மறுப்பாகத் தலையை அசைத்தாள் உத்ரா.
“ஒரு முயற்சி தானே உத்ரா. உன்னை இவ்வளவு வேதனையோட பார்க்க கஷ்டமா இருக்குடி…” என்றாள் தவிப்பாக.
“ஹாஹா… உனக்குப் பேராசை தான் போ. இனி உன் தோழியை இப்படிப் பார்க்க பழகிடும் புவிக்குட்டி. ஏன்னா இனி முகிலிடம் பேசுவது எல்லாம் முடியாத காரியம்…” என்றாள் உத்ரா.
“உன்னால முடியாதுனா நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா?” என்று புவனா எதிர்பார்ப்புடன் கேட்க, உத்ராவின் மறுப்பு தலையாட்டல் இப்போது பலமாகவே வந்தது.
“வெட்டி வேலை பார்க்க நினைக்காம அமைதியா இரு!” என்றாள்.
“என்னடி இது? நீயும் பேச மாட்ட. என்னையும் பேச வேண்டாம்னு சொன்னா எப்படி?”
“இனி முகிலிடம் யார் பேசியும் பிரயோஜனம் இல்லைன்னு அர்த்தம்…”
“ஏன்?”
“ஏன்னா, இன்னொரு பொண்ணு கூட முகிலுக்கு நிச்சயம் ஆகிடுச்சு. முகில்வண்ணனுக்குக் கமலினி என்ற பெண்ணுடன் கல்யாணம் நடக்கப் போகுது…” என்று மரத்த குரலில் சொன்னாள் உத்ரா.