8 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
தர்மா வந்ததிலிருந்து கடையின் உட்புறமே இருந்த சத்யவேணி அவன் பேசிக் கொண்டு இருந்ததை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
அதில் அவனின் கால் பற்றிய கேள்வி அவளின் தந்தைக்குத் தோன்றியது போல அவளுக்கும் தோன்ற, அதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற தவிப்பு உருவாகிய வேளையில் அவளின் தந்தையே அந்தக் கேள்வியைக் கேட்டு விடவும் அவன் சொல்லப் போகும் பதிலுக்காகப் பரபரப்புடன் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு காத்திருந்தாள்.
அவன் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை கால் நன்றாக இருந்தது என்று சொல்லவும் அதிர்வுடன் திரும்பினாள்.
குறையோடும், குறைகள் உள்ளவர்களைச் சுற்றிலும் தான் அவளின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவள் படித்ததும், தற்போது வேலை பார்ப்பதும் பார்வையற்றோர் பள்ளியில் தான் என்பதால் குறைபாடு அவளுக்குப் பெரிய விஷயம் இல்லை.
‘என்னைப் போல அவர்கள். அவர்களைப் போல நான்’ என்று தான் தோன்றியிருக்கின்றது.
அதேபோல் தர்மாவின் குறையையும் பெரிதாக எதுவும் நினைத்துக் கொண்டதில்லை. ஆனால் பிறக்கும் போதே இல்லாமல் இடையில் ஏற்பட்ட குறை என்று தெரிந்ததும் அவளின் மனம் துடித்தது.
எப்பொழுது அவனைத் தன் மனம் தேடுகிறது என்று உணர்ந்தாளோ அன்றே இனி அவனிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.
ஆனால் இந்த நொடி அப்படித் தள்ளி நிற்க முடியாமல் அவனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், தான் எடுத்து வைத்திருந்த முடிவை மறந்து “எப்படித் தர்மா சார்? என்னாச்சு?” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.
‘தன்னிடம் பேசாமல் ஒதுங்கி போகின்றாளே… ஏன்?’ என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியுடன் தியாகராஜனிடம் பேசிக் கொண்டிருந்தவனுக்குச் சத்யா பதட்டத்துடன் கேள்வி கேட்டது அவனின் மனதிற்குள் சிறு நிம்மதியை ஏற்படுத்தியது.
அதே நேரம் அவளின் கேள்விக்கான பதிலை நினைத்து பார்த்தவனின் உடலும், மனமும் இறுகிப் போனது. “அது ஒரு ஆக்ஸிடெண்ட்ங்க சத்யா…” என்றவனின் பதிலும் இறுக்கத்துடன் வந்தது.
அவனின் குரலில் இருந்த பேதத்தைக் கேட்டு சத்யாவின் நெற்றிச் சுருங்கியது.
அந்த நாட்களை நினைத்து வருந்துகின்றானோ என்று நினைத்தவள் “கவனமா இருந்திருக்கக் கூடாதா தர்மா சார்?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.
தங்கை சொன்னது அந்த நேரத்தில் சத்யாவின் ஞாபகத்தில் வந்தது. ‘பார்க்க ஹீரோ போல இருக்கார். ஆனா கால் தான்…’ என்று அவள் சொன்னது நினைவு வந்ததும் ‘அவ்வளவு லட்சணமாக இருப்பவனின் கால் திடீரென்று ஊனமானதும் எப்படி அவனுக்கு வலித்திருக்கும்?’ என்று நினைத்து அவனுக்காக வருத்தப்பட்டாள்.
அவளின் கேள்வியில் இன்னும் தான் அவனின் முகம் இறுகிப் போனது. “கவனமா இருந்ததால் தான் வெறும் காலோடு மட்டும் போய்ருச்சு…” என்று வலியும், இறுக்கமும் கலந்து சொன்னான்.
காலோடு மட்டும் போனது என்றால்? அப்போ உயிர் விஷயத்தில் இருந்தும் தப்பியிருக்கின்றானா? என்று நினைத்தவளுக்கு மனம் திடுக்கிட்டு போக “என்ன…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
அவள் அதைப் பற்றிக் கேட்க, கேட்க தர்மாவின் இறுக்கம் கூடிக் கொண்டே போனதை கண்ட தியாகராஜன் “சத்யா விடு…! வெறும் காலோடு போயிருச்சேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான் தர்மா தம்பி. இனி அதைப் பற்றிப் பேச வேண்டாம்…” என்று மகளிடம் ஆரம்பித்துத் தர்மாவிடம் முடித்தார்.
ஆனால் சத்யாவின் மனம் ஆறவே இல்லை. இன்னும் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவளின் மனம் துடித்தது.
தன் விலகல் முடிவையும் அந்த நொடி முற்றிலும் மறந்தே போனாள்.
ஆனாலும் தந்தை சொன்ன பிறகு மேலும் அதைப் பற்றிக் கேட்க முடியாது என்பதால் அமைதியானாள்.
அவனின் வேதனையில் பங்கெடுக்கச் சொல்லி அவளின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. அந்தத் துடிப்பை வெளிப்படையாகக் காட்ட தயக்கம் வந்து தடுக்க, அதுவரை பரிதவிப்புடன் இருந்த அவளின் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.
“அப்பா எனக்குத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நான் வீட்டுக்கு கிளம்புறேன். வர்றேன் தர்மா சார்…”அவன் இன்னும் அங்கே இருப்பதால் மரியாதைக்கு அவனிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
அவளின் முகம் இறுகி போனதை யோசனையுடன் பார்த்தவன், தானும் அதே நிலையில் இருந்ததால் “சரிங்க…” என்றதோடு முடித்துக் கொண்டான்.
“அப்போ நானும் கிளம்புறேன் அங்கிள். இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்தப் பக்கம் வர முடியுமானு தெரியலை. நேரம் கிடைச்சா வர்றேன் அங்கிள்…” என்று சத்யா கடையில் இருந்து வெளியே வந்த போதே சொன்னான்.
“சரிங்க தம்பி. நல்ல வேலை ஒன்னு செய்யப் போறீங்க. சிறப்பா நடக்கட்டும் தம்பி…” என்று அவனுக்கு விடை கொடுத்தார்.
“நன்றி அங்கிள்…” என்று மெல்ல நடந்து தர்மா தன் வண்டியின் அருகில் செல்ல, ‘அப்போ இன்னும் இரண்டு வாரத்திற்கு இவனின் குரலை கேட்க முடியாதா?’ என்று வெளியே தெரியாமல் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வுடன் நடந்து கொண்டிருந்தாள் சத்யா.
‘அந்த நல்ல விஷயத்தைப் பற்றிச் சத்யா எதுவும் சொல்வாளா?’ என்பது போல வண்டியில் ஏறும் வரை அவளின் மீது ஒரு கண்ணை வைத்திருந்த தர்மாவிற்கு அவள் எதுவும் சொல்லாமல் சென்று கொண்டிருப்பது ஏமாற்றத்தை தந்தது.
அவன் வர மாட்டேன் என்று சொன்னது மட்டுமே சத்யாவின் நினைவை ஆக்கிரமித்து இருந்ததால் அவளுக்கு அந்த நல்ல விஷயம் கூடப் பின்னுக்குப் போய்விட்டது என்று தர்மா அறியாமல் போனான்.
அவள் தன் நினைவில் தான் அப்படிச் செல்கிறாள் என்பதை அறியாமல் ‘தான் கால் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தியதால் கோபம் கொண்டு விட்டாளோ?’ என்று நினைத்தான்.
உண்மையில் அவனுக்குமே அந்த விபத்து பற்றி மேலும் பேச விருப்பம் இல்லை. அதனாலேயே தியாகராஜன் மேலும் அதைப் பேச வேண்டாம் என்று சொல்லவும் ‘நல்லதாகிற்று’ என மேலும் பேசாமல் இருந்து விட்டான். ஆனால் அப்படிப் பேச்சை பாதியில் கத்தரித்தது சத்யாவை வருத்தி விட்டது போலவே?
‘ஆனால் நான் மேலும் விவரம் சொல்லியிருந்தால் இன்னும் தான் நீ அதிகம் வருத்தப்பட்டிருப்பாய் சத்யா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அன்று மீண்டும் தன் அக்கா வித்தியாசமாக இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனாள் கார்த்திகா. ‘இரண்டு நாளா நல்லா தானே இருந்தாள்? அதுக்குள்ள திரும்பவும் என்னாச்சு? ஏன் எப்படியோ இருக்கா? நான் கேட்டாலும் சொல்ல மாட்டாளே… இப்போ என்ன செய்றது?’ என்று புரியாமல் தவித்தாள்.
ஆனாலும் தனியாகத் தான் புலம்புவதற்குக் கேட்டு விடுவதே மேல். அப்படி என்னதான் சொல்லி சமாளிக்கின்றாள் என்று பார்ப்போம் என்று நினைத்து “அக்கா…” என மெல்ல அழைத்தாள்.
கண் இமைகள் திறந்தே இருக்க, முகம் இறுகி தங்கையின் அழைப்பிற்கு எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் இருந்தாள் சத்யவேணி.
தன் அக்கா அடிக்கடி அப்படி இருப்பதே கார்த்திகாவிற்குப் பயத்தைக் கொடுத்தது.
அதனால் அவளின் தோளில் கையை வைத்து “என்னக்கா ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டு உலுக்கினாள்.
“ஹா…! என்னடி? ஏன் என்னைப் போட்டு இப்படி உலுக்குற?” கனவில் இருந்து வெளியே வந்தவள் போலப் பதறி போய்க் கேட்டாள்.
“ஒன்னும் இல்லக்கா… பதறாதே…! நீதான் நான் கூப்பிட, கூப்பிட காதிலேயே வாங்காம ஏதோ யோசனையிலேயே இருந்த. அதான் உன்னை உலுக்கி கூப்பிட்டேன். சரி சொல்லு… இரண்டு நாளா நல்லா இருந்த. இன்னைக்குத் திரும்ப ஒரு மாதிரி இருக்க. உனக்கு என்ன தான் பிரச்சனை? என்கிட்ட சொல்ல தயக்கமா இருந்தா சொல்லு… அம்மாவை கூப்பிட்டு வர்றேன்”
“அம்மாவை எல்லாம் கூப்பிட வேண்டாம் டி. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. தர்மா சாருக்கு தான்…” என்று இழுத்தாள்.
“தர்மா சாருக்கா? அவருக்கென?”
“அன்னைக்கு சார் பார்க்க நல்லா இருக்கார். ஆனா கால் அப்படி இருக்குனு சொன்னீல?”
“அக்கா அது நான் கேலி பண்ண சொல்லலை. அன்னைக்கே நீ அட்வைஸ் பண்ணிட்டியே. திரும்பவும் அதை எதுக்குச் சொல்ற?”
“ஏய்…! நான் சொல்ல வர்றதை பொறுமையா கேளுடி…”
“சரி, சரி… கோவிச்சுக்காதேகா… சொல்லு…!”
“சாரோட காலு ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை நல்லா தான் இருந்ததாம். ஒரு ஆக்சிடெண்ட்ல தான் அப்படி ஆகிருச்சாம்”
“அச்சோ…! என்னக்கா சொல்ற?”
“ஹ்ம்ம்… எனக்கும் உன்னை மாதிரி தான் பதறி போயிருச்சுடி. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. பிறவியிலேயே இருந்திருந்தா நம்ம பிறப்பு அப்படித்தான்னு என்னை மாதிரி நினைச்சுட்டுப் போயிருக்க முடியும். ஆனா நல்லா ஆரோக்கியமா வாழ்ந்திட்டு இடையில் குறை வந்தா அவங்க மனசு எப்படி வலிச்சுருக்கும்?”
“ஆமாக்கா கஷ்டம் தான். பாவம் சார்… “
“ரொம்பப் பாவம் டி. அதுவும் அந்த ஆக்சிடெண்டுக்கு பின்னாடி சாருக்கு இன்னும் ஏதோ பலமான காயம் இருந்திருக்கும் போல டி. அதைப் பற்றிப் பேசும் போது அப்படியே அவரோட குரல் இறுகி போயிருச்சு…”
“கால் அப்படி ஆனதே பெரிய காயம் தானேகா? அதான் அப்படி இருந்திருப்பார்…”
“ப்ச்ச்…! இல்லடி அதையும் தாண்டி இன்னும் என்னமோ இருக்கு…”
“என்னக்கா சொல்ற? அப்படி என்ன இருக்கு? உன்கிட்ட சொன்னாரா?’
“இல்லடி கார்த்தி… அப்பா அதுக்கு மேல கேட்காதேனு நடுவில் புகுந்து பேச்சை நிறுத்திட்டார். அதான் அவரோட காயம் என்னவா இருக்கும்னு யோசனையாவே இருக்கு…” என்று சொன்ன அக்காவை வினோதமாகப் பார்த்தாள் கார்த்திகா.
“என்னக்கா நீ அடுத்தவங்க விஷயத்தைப் பற்றித் தெரிஞ்சுக்க எப்பவும் ஆர்வம் காட்ட மாட்டியே. இப்போ மட்டும் என்ன? அவர் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தா நமக்கு என்ன?” என அக்காவின் முகத்தைக் கூர்மையாக ஆராய்ந்து கொண்டே கேட்டாள்.
“என்னடி இப்படி அடுத்தவங்கனு சொல்லிட்ட? நம்ம தர்மா சார் டி…” என்றவளை கண்கள் விரிய பார்த்தாள்.
“நம்ம தர்மா சாரா? இது எப்போதிலிருந்து?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
தங்கையின் அதிர்ச்சியைக் கவனத்தில் கொள்ளாமல் “நம்மகிட்ட பழகினதில் இருந்து தான். இது என்ன கேள்வின்னு இப்படிக் கேட்குற?” என்று கார்த்திகாவை அதட்டுவது போல் சொன்னாள்.
“அக்கா புரிஞ்சு தான் பேசுறியா? நம்ம கடைக்கு வர்ற எத்தனையோ பேரில் அவரும் ஒருத்தர். அவரோட நோட்டீஸ் வச்சுக்கவும், அமுதாக்காவை வேலையில் சேர்த்து விட்டு நாம உதவி பண்ணியதாலும் நன்றிக்காகக் கடைக்கு வந்து போய்ப் பேசிட்டு இருக்கார். அவ்வளவு தான்…!
“அப்படி இருக்கும் போது அவர் எப்படி நம்ம தர்மா சார் ஆவார்? அவரோட பர்ஷனல் விஷயத்தைத் தெரிஞ்சுக்க முடியலைன்னு நீ ஏன் கவலை படுற?” என்று கார்த்திகா பொட்டில் அறைந்தது போலக் கேட்ட கேள்வியில் சத்யாவின் முகம் வெளுத்துப் போனது.
‘அதானே யாரோ ஒரு மூன்றாவது மனிதர் தானே தர்மேந்திரன். அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவரைப் பற்றி அவரின் காயங்களைப் பற்றி அறிந்தே ஆகவேண்டும் என நான் ஏன் இவ்வளவு துடிக்க வேண்டும்? ஏதோ உதவி செய்த நன்றிக்காக வந்து இரண்டு வார்த்தை பேசி சென்றால் அவனின் ஜாதகத்தையே நம்மிடம் ஒப்பித்து விட வேண்டுமா என்ன?
என்னை விடப் பத்து வயது குறைந்தவளுக்குத் தெரிந்த இந்தச் சாதாரண விஷயம் கூட எனக்கு ஏன் தெரியாமல் போனது?’ என்று மனதில் கேள்விகளை அடுக்கியவளுக்கு ‘அவன் வெறும் மூன்றாவது மனிதன் மட்டும் தானா? யாரோ ஒருவனாக அவனை நினைத்திருந்தால் நீ அவனின் சொந்த விஷயங்களை அறிந்து கொள்ள இப்படித் துடிப்பாயா?’ என்ற கேள்வியும் அவளின் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
இரண்டு விதமாகவும் தோன்றிய கேள்வியில் சத்யாவின் மனது குழம்பி தவித்தது.
அதே நேரம் வெறும் நன்றிக்காக மட்டும் வந்து பேசுபவனை நினைத்து நான் ஏன் இவ்வளவு குழம்பி போக வேண்டும்? என்று மனதில் ஓரம் சுருக்கெனக் குத்திய வலியுடன் நினைத்துக் கொண்டாள்.