8 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 8
வினய்யின் வீட்டிற்கு வந்த இரண்டாம் நாள் மாலையில் பவ்யா கண்ணாடியின் முன் தலைவாரிக் கொண்டிருக்க அவளையே பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் வினய்.
கணவனின் பார்வையைத் தன் முன் இருந்த கண்ணாடி வழியாகக் கண்டு கொண்டவள் தலைவாரி முடித்துவிட்டு “இப்ப எதுக்கு என்னையே இப்படிப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க? மாமாவுக்கு உதவியா ஆபிஸ் போய்ருக்கலாம் தானே?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தாள்.
அவள் கேட்டதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டவன் “போயிருக்கலாமே!” என்று சொன்னபடி எழுந்து அவள் அருகில் வந்து இடுப்பில் இருந்த அவளின் கையை எடுத்து விட்டு அந்த இடத்தில் தன் கையை வைத்துக் கொண்டான்.
சேலையால் விலகி இருந்த அவளின் சருமத்தை தன் கைகளால் தடவிக் கொடுத்து பரிசோதித்தவன் “உன் மாமாவுக்கு உதவி செய்றதை விட உனக்கு உதவி செய்யத்தான் இப்போ எனக்கு ஆர்வமா இருக்கு” என்றபடி சட்டெனத் தன்னை நோக்கி இழுத்தான்.
அவனின் கையின் சீண்டலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழந்துக் கொண்டிருந்தவள் அவன் இழுப்பில் சுதாரித்து அவன் நெஞ்சில் கை வைத்து ஒரே தள்ளாகத் தள்ளி “இருக்கும்… இருக்கும்…! ஆளை பார்…!” என்றவள் அவன் சுதாரிக்கும் முன் அவன் கைகளிலிருந்து நழுவி கதவுப் பக்கம் சென்று “மாமா வர்ற நேரமாச்சு. கீழே வாங்க…! நான் முன்னாடி போறேன்” என்றுவிட்டு வெளியே சென்றாள்.
வினய்க்கும் தந்தையிடம் பேசவேண்டியது இருந்ததால் அவனும் கீழே சென்றான்.
அவர்கள் கீழே சென்று அமர்ந்திருக்கும் போதே அலுவலகத்தில் இருந்து வந்தார் ரங்கநாதன். மகனையும் மருமகளையும் பார்த்துச் சிநேகமாகச் சிரித்துவிட்டு அலுப்பாகச் சோஃபாவில் அமர்ந்தார்.
“இருங்க மாமா! காபி எடுத்துட்டு வர்றேன்” என்று பவ்யா உள்ளே செல்ல, “அப்பா நீங்க பிரஸ் ஆகிட்டு வந்ததும் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த வினய்.
மகன் பேசணும் என்றதுமே ரங்கநாதனுக்கு உள்ளுக்குள் பதறியது. ஆனால் வெளியில் நிதானமாக இருந்தவர் “இருப்பா… நான் போய் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன் பேசலாம்” என்றவர் உள்ளே சென்ற மருமகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றார்.
மகன், மருமகள் முன் எப்படி நடந்து கொள்வானோ என்றுதான் அவருக்குக் கவலையாக இருந்ததே தவிர, அவர் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவனை இங்கேயே இருக்க வைப்பதில் தான் உறுதியாக இருந்தார்.
உடை மாற்றி வந்தவருக்குப் பவ்யா காபியை தர, அதை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தார். அவர் முழுதாகக் குடிக்கும் முன்பே “எங்க மேரேஜ் சர்டிபிகேட் வந்துருச்சாப்பா?” என்று கேட்டான்.
அவன் அவசரப்பட்டுக் கேள்வி கேட்டாலும் நிதானமாகவே காபியை குடித்து முடித்துக் கப்பை டீப்பாயில் வைத்தவர் “வந்துருச்சு வினய். என் ரூம் டேபிளில் இருக்கு. போய் எடுத்துக்கோ!” என்றார்.
உள்ளே சென்று எடுத்து வந்தவன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டுப் பவ்யாவிடம் அதைக் கொடுத்து “பத்திரமா வை பவி! ஆமா உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்குல்ல? இல்லனா கூடப் பரவாயில்லை. அதுக்கும் விசா கூடச் சேர்த்தே அப்ளே பண்ணிருவோம்” என்று திட்டமிட்டவன் பவ்யாவின் முக மாற்றத்தை கூடக் கவனிக்காமல் தந்தையின் புறம் திரும்பி “அப்போ நான் நாளைக்கே வேலையை ஸ்டார்ட் செய்துறேன்ப்பா. அங்க போய்ப் பிசினஸ் ஆரம்பிக்கத் தேவையான பைனான்ஸியல் வேற ரெடி பண்ணப் பார்க்கணும்” என்றான்.
ரங்கநாதனுக்கு மகனின் பேச்சை விடப் பவ்யாவின் மீது தான் அதிகக் கவனம் இருந்தது.
அவள் மீது ஒரு கவனத்தை வைத்துக் கொண்டே “ஏன் வினய்… உன் முடிவை கொஞ்சம் மாத்திக்கிட்டா தான் என்ன? நம்ம கம்பெனியே நல்லா ஓடுது. அதுக்கு ஹெல்ப் பண்ணவே ஒரு ஆள் எனக்குத் தேவைப்படுது. இங்கே இன்னும் கொஞ்சம் கம்பெனியை டெவலப் பண்ணிட்டு அப்புறமா உன் அமெரிக்க விஜயத்தைப் பற்றி யோசிக்கலாமே?” என்று நிதானமாகக் கேட்டார்.
அவர் பேச்சை புரியாத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வினய். என்ன சொல்கிறார் இவர்? நான் ரொம்ப நாளா சொல்ற விஷயத்தைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இப்போது இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்? என்ற கோபம் எழ, “என்னப்பா விளையாடுறிங்களா? நான் அங்கே பிசினஸ் ஆரம்பிக்க எல்லா டீட்டைல்ஸும் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். இனி அதுக்குண்டான வேலையில் இறங்க வேண்டியது தான் பாக்கி.
அப்படி இருக்கும் போது இப்பவந்து முன்னாடி நீங்க சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க? இப்ப நான் கல்யாணம் முடிவாகுற சமயத்தில் கேட்டப்ப கூட நீ போய் வேலையை ஆரம்பி பின்னாடி நானும் வந்துறேன்னு சொல்லிட்டு இப்படிச் சொன்னா எப்படி?” மாற்றி மாற்றிப் பேசுகிறாரே என்ற கடுப்புடன் கேட்டான்.
அவனின் பேச்சுக்குப் பதில் சொல்லப் போன ரங்கநாதன் “என்ன நடக்குது இங்கே?” என்ற பவ்யாவின் கேள்வியில் அமைதியானார்.
வினய் தன் கையில் திருமணப் பதிவு சான்றிதழை கொடுத்துப் பாஸ்போர்ட் பற்றிக் கேட்டதில் இருந்தே அவனின் பேச்சுப் புரியாமல் அதிர்ந்து போயிருந்தாள்.
அதோடு விசா, அமெரிக்காவில் பிசினஸ் என்று பேச, பேச தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு. திருமணம் பேசும் போது தன் மாமனார் சொன்னது என்ன? இங்கே இப்போது இவர்கள் பேசிக் கொள்வது என்ன? என்று அவளுக்கு விளங்கவே இல்லை. அதனால் தான் அவர்களின் பேச்சில் குறிக்கிட்டாள்.
மனைவியின் கேள்வி புரியாமல் “என்ன பவி? எதைக் கேட்குற? நாம யூஎஸ் போறது பத்தி தான் அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று வினய் பதில் சொல்ல,
“என்… என்ன யூஎஸா…? யார்… யார் போறா?” என்று அதிர்ச்சியின் உச்சியில் நின்று கேட்டவளின் குரல் பிசிறு தட்டியது.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கி ரங்கநாதன் அமைதியாகத் தலை குனிந்திருந்தார்.
இந்தப் பிரச்சனையை எப்படியும் பேச வேண்டியிருக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் மருமகளின் திகைத்த தோற்றமும், அவளின் குரலில் இருந்த திணறலும் அவரைக் குற்றயுணர்வில் தவிக்க வைத்தது.
வினய் மனைவியின் கேள்வியில் இன்னும் குழம்பி போனான். “என்ன பவி? ஏதோ இப்பதான் புதுசா கேட்குற போலக் கேள்வி கேட்டுட்டு இருக்க? நாம இரண்டு பேரும் யூஎஸ்ல செட்டில் ஆகப் போறோம்னு உனக்குத் தெரியும் தானே? நீயும் கல்யாணத்துக்கு முன்னாடியே சம்மதம் சொல்லிட்டியே? இப்ப என்ன யார் யார் போறான்னு கேட்குற?” என்று கேட்டான்.
அவன் பேச, பேச ஏதோ சுழல் சுற்றுவது போல உணர்ந்த பவ்யா தன் கையில் இருந்த சான்றிதழை தவற விட்டாள். கையை வைத்து தன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவள் அடுத்து பேச வார்த்தை வராமல் தடுமாறினாள்.
“ஹேய்…! என்னடா…? முக்கியமானதை இப்படிப் போட்டுட்ட?” என்றபடி குனிந்து அந்தப் பேப்பரை கையில் எடுத்தவன், இவள் ஏன் இப்படி ரியாக்ட் செய்கிறாள் என்ற கேள்வியுடன் மனைவியைப் பார்த்துவிட்டு தன் பார்வையைத் தந்தையின் புறம் திருப்பினான்.
அவர் தங்களைக் கவனிக்காமல் தலை குனிந்து அமர்ந்திருந்தது வித்தியாசமாக இருக்க, “அப்பா…!” என்று அழுத்தமாக அழைத்தான்.
அவர் மெதுவாக மகனை நிமிர்ந்து பார்க்க “என்னப்பா இதெல்லாம்? பவி கேட்குறதை பார்த்தா அவளுக்கு விஷயமே தெரியாது போல இருக்கு. ஆனா நீங்க என்கிட்ட பவ்யா என் கூட யூஎஸ் வர சம்மதம் சொல்லிட்டானு சொன்னீங்க?” என்று அவரைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
‘என்ன நான் சம்மதம் சொன்னேனா?’ என்பது போல அதிர்ந்து போய்த் தன் மாமனாரை பார்த்தாள் பவ்யா.
மருமகளைத் தயக்கமாகப் பார்த்தவர் “சாரிமா பவ்யா… என் நிலைமை அப்படிச் சொல்ல வேண்டியதாகிருச்சு” என்று அவளிடம் மன்னிப்பு வேண்டியவர்,
மகனின் புறம் திரும்பி “ஆமாடா… நான் மருமககிட்ட எதுவும் சொல்லலை. நீ கல்யாணத்துக்குப் பிறகு இங்கேயே இருந்து நம்ம கம்பெனியை பார்த்துக்கப் போறன்னு சொல்லித்தான் கல்யாணத்தை முடிச்சு வைச்சேன். நான் முன்னாடி சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன். எனக்கு நீ யூஎஸ் போய்ச் செட்டில் ஆகுறதுல விருப்பம் இல்லை. உன்னை இங்கே இருக்க வைக்கத் தான் அப்படிச் சொன்னேன்.
இனியும் நான் உன்னைப் போக விட மாட்டேன். உனக்கு யூஎஸ் மட்டும் என்ன? உலகத்துல எந்த நாட்டுக்கு போகணும்னு ஆசையிருந்தாலும் போ! நல்லா சுத்திப்பாரு! அதுக்கு நான் தடையே சொல்ல மாட்டேன். ஆனா அதைவிட்டு இந்த ஊரு குப்பை. இங்க இருக்க மாட்டேன் வெளிநாட்டில் இருக்கும் சொகுசு வாழ்க்கை மட்டும் தான் பிடிக்கும். அங்க மட்டும் தான் மனுஷங்க வாழ்றது போல நீ பேசினா அதுக்கு நான் சரின்னு தலையாட்ட மாட்டேன்” என்று வேகமும், கோபமுமாகச் சொல்லி முடித்தார்.
அவரின் பேச்சில் நின்றுபடி தன் தந்தையிடம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தவன் தொப்பெனச் சோஃபாவில் அமர்ந்து தந்தையை அதிசயம் போலப் பார்க்க ஆரம்பித்தான்.
பவ்யாவிற்கு அவர்களின் பேச்சுக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. வினய் அதிர்ந்து போய்ச் சோஃபாவில் அமர்ந்ததில் இருந்தே அவனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை தான் பிடிக்கும் போல என்பதை மட்டும் அவளுக்குப் புரிய வைத்தது. தன் சம்மதம் இல்லாமல் தந்தையும் மகனுமாகத் தன்னை நடுவில் வைத்து விளையாடுவதாக நினைத்தவளுக்கு ஆத்திரம் வர பல்லை கடித்துத் தன்னைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
வினய் தந்தை இப்படிச் செய்வார் என்று நினைக்காததால் நொறுங்கி போனது போல அமர்ந்திருந்தான். அப்படி என்றால் இத்தனை நாளும் நான் சொன்னதற்கெல்லாம் சரி என்று சொல்லி தன்னை ஏமாற்றினாரா என்ன? கொஞ்சம் கூட இவர் இப்படிச் செய்வார் என்று எண்ணவில்லையே? அவருக்கு விருப்பம் இல்லை என்றால் அதையே சொல்லிருக்க வேண்டியது தானே? ஏன் நான் சொன்னதற்கு எல்லாம் சரி என்று தலையாட்டி விட்டு இப்போது தன் கழுத்தை அறுக்கிறார் என்று நினைத்தான்.
ஆம்! என்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார். என் ஆசையை நிறைவேற்றும் அப்பா என்று அவரை எவ்வளவு உயர்வாக எண்ணினேன்.
மகனின் ஆசையை நிறைவேற்றாத அப்பா எல்லாம் என்ன அப்பா? என்று உள்ளுக்குள் கொதித்தவன் தந்தையிடம் பேசும் விருப்பம் அற்று மனைவியின் புறம் திரும்பி “பவி அவர் மாத்தி, மாத்தி பேசி என்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டார். அவர் எப்படியும் போகட்டும் விடு. நீ என்ன சொல்ற? நாம மட்டும் யூஎஸ் போயிருவோமா? எனக்கு நிஜமா இங்க இருக்கவே பிடிக்கலை. எனக்கு அங்கே இருக்கும் சொர்க்க வாழ்வு தான் பிடிச்சிருக்கு. உன் பதில் என்ன?” என்ற நிதானமாகக் கேட்டாலும் நீ சரி என்று தான் சொல்ல வேண்டும் என்ற அழுத்தம் அவன் வார்த்தையில் இருந்தது.
அவனின் கழுத்தறுப்பு என்ற வார்த்தையில் அதிர்ந்த ரங்கநாதன் “டேய்… என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசுற கழுத்தறுத்தேன்னு? அப்படி என்னடா நான் உன் கழுத்தறுத்தேன்? என் மகன் என் கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா?” என்று எரிச்சலுடன் கேட்டார்.
“ஆமா கழுத்தறுப்பு தான். ஒரு வருஷத்துக்கும் மேலா நான் சொன்னப்ப எல்லாம் சரி, சரினு எனக்குச் சம்மதம் சொல்ற மாதிரி சொல்லிட்டு இப்ப எல்லாமே நடிப்புன்னு சொல்றது என்னைப் பொறுத்தவரை கழுத்தறுப்பு தான். இனி உங்ககிட்ட இது பற்றிப் பேசுறதா இல்லை. என் அப்பா போல உண்டானு நினைச்சுட்டு இருந்தேன்.
ஆனா உங்களை நீங்களே கீழே போட்டு உடைச்சது போல… உங்க மேல இருந்த மரியாதையைப் போக வச்சிட்டீங்க. இனி நானும் என் மனைவியும் இது பற்றிப் பேசி முடிவெடுத்துக்கிறோம். நீங்க உங்க கம்பெனியையே கட்டிட்டு அழுங்க” என்றவன் “பவி வா…! நாம நம்ம அறைக்குப் போய்ப் பேசுவோம்” என்று அழைத்தான்.
மகன் இப்படி எல்லாம் பேசுவான் என்று எதிர்ப்பார்க்காத ரங்கநாதன் மனம் உடைந்தார். ஆனாலும் இருக்கும் ஒற்றை மகனையும் கண்காணாத இடத்திற்கு அனுப்பி விட்டு அவன் எப்படியும் போகட்டும் என்று விட முடியாது என்று எண்ணியவருக்கு இன்னும் ஒரு ஆறுதல் இருந்தது.
மருமகளுக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை. அவள் சொன்னால் மகன் கேட்பான். எப்படியும் அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் என்று நினைத்தவர் மருமகள் என்ன சொல்ல போகின்றாள் என்பது போலப் பார்த்தார்.
பவ்யா புயலை உள்ளடக்கியவளாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு இருந்த கோபத்தில் எங்கே மரியாதை இல்லாமல் பேசி விடுவோமோ என்று நினைத்தாள். இந்த ஒரு மாதமாக ஊனும் உயிருமாக வினய்யுடன் ஒன்றாகிப் போனதெல்லாம் ஞாபகத்தில் கூட வரவில்லை. அந்தளவிற்கு அவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கையின் மீது வெறுப்பு அவளின் மனதில் மண்டிப் போய் இருந்தது.
பவ்யாவிற்கு இருந்த வெறுப்பிற்கு எதிர்பதமாக எல்லையில்லா விருப்பு இருந்தது வினய்க்கு.
பவ்யாவின் சிறிது நேர அமைதியை பொறுத்த வினய் பொறுமை இழந்து “எழுந்து வா பவ்யா!” என்று அழுத்தமாக அழைத்தான்.
கணவனை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்த பவ்யா “எங்கே பேசினாலும் என் முடிவு ஒன்னு தான் வினு” என்று அமைதியாகச் சொன்னாலும் அதில் ஒரு அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.
“என்ன முடிவு?” என்று வினய் கூர்மையாக அவளைப் பார்த்துக் கேட்க…
தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் எழுந்து நின்று வினய்யை நேருக்கு நேர் பார்த்து “என்னால பாரின் எல்லாம் வரமுடியாது வினு. அதோட உங்களையும் போக விடமாட்டேன்” என்று சொன்ன பவ்யாவின் வார்த்தையில் உறுதி இருந்தது.
மருமகள் குரலில் தெரிந்த உறுதியில் ரங்கநாதன் நிமிர்ந்து அமர, வினய்யின் உடல் விறைத்து நின்றது.
தந்தையையும், மனைவியையும் மாறி மாறி பார்த்தவன் “அப்போ நீயும் இவர் கூடச் சேர்ந்து ஒன்னுமே தெரியாதது போல நாடகம் ஆடுற? இவ்வளவு நேரம் உனக்கு விஷயம் தெரியாதது போல ஆக்டிங் தான் கொடுத்திருக்க. அப்படித்தானே…?” என்று கோபமாகக் கேட்டான்.
அவனின் நடிப்பு என்ற வார்த்தையில் கோபம் வர “நீங்க அப்பாவும், மகனும் சேர்ந்து தான் என்னை ஏமாத்திட்டிங்க. உங்களுக்குப் பாரின் வாழ்க்கை தான் பிடிக்கும்னு முன்பே தெரிஞ்சிருந்தா இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்று ஆத்திரத்துடன் கத்தியவளின் இமையோரம் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.
மனைவியின் குற்றச்சாட்டில் தந்தையை முறைத்துப் பார்த்தான்.
“ம்மா பவ்யா… நான் உன்னை ஏமாத்தணும்னு உன்கிட்ட இருந்து மறைக்கலைமா. நீ இந்தக் குடும்பத்துக்கு ஏத்த மருமகனு நினைச்சேன். உன்னை விட்டு விட மனசில்லாம தான்…” அவர் இழுக்க அவரைக் கூர்மையாகப் பார்த்து “என்னைப் பொண்ணு கேட்டு வரும்போது என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் விசாரிச்சேன்னு சொன்னிங்களே? என் வாழ்க்கைல என்ன நடந்ததுனு அப்போவே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. என் வெறுப்பைத் தெரிஞ்சிக்கிட்டே தானே எங்க கல்யாண முடிவை நீங்க எடுத்துருப்பீங்களோன்னு எனக்குத் தோணுது” என்று சொல்லி மாமனாரின் முகத்தைப் பார்க்க…
அவர் வேறு வழி இல்லாமல் ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தார்.
“நீ சொன்னா என் மகன் இங்கயே இருந்துருவானோன்னு நினைச்சேன். பெத்தவங்க பேச்சை விட வாழ்க்கை துணை பேச்சு ஒருவேளை அவன் மனசை மாத்தும்னு நினைச்சேன்” என்று சொன்னவர் “நீ எடுத்து சொல்லுமா… அவன் புரிஞ்சிக்குவான்” என்றார்.
இவர்கள் இருவரும் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு தலையில் கை வைத்து அமர்ந்திருந்த வினய் தந்தையைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரித்து “ஓஹோ…! பொண்டாட்டி பேச்சை கேட்டு மகன் நடப்பான்னு பிளான்? சபாஷ்…! நல்லா இருக்கு. ஆனா பாருங்க! யார் என்ன சொன்னாலும் நான் மாறுவதா இல்லை. என் முடிவு தான் இறுதியானது” என்று அழுத்தமாகச் சொன்னவன் பவ்யாவை பார்த்து “உனக்கு வெறுப்போ, விருப்போ எனக்குத் தெரியாது. ஆனா நீ என் கூட வர்ற! அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று கட்டளை போலச் சொன்னவன் அந்த இடத்தை விட்டு நகரப் போக…
“முடியாது… முடியாது…! கண்டிப்பா நான் வர மாட்டேன் வினய்! நீங்களும் போகக் கூடாது. நீங்க என் கூடத் தான் இருக்கணும். அங்கே வேண்டாம் வினய். சொன்னா கேளுங்க” என்று முதலில் கத்தி சொல்ல ஆரம்பித்தவள் பின்பு கெஞ்சலாகக் கேட்டாள்.
அவளைத் தொடர்ந்து ரங்கநாதனும் “டேய் வினய்… சொன்னா கேளு! உன் முடிவை கொஞ்சம் மாத்திக்க! இப்போ அங்க பிசினஸ் ஆரம்பிச்சாலும், நீ இங்கேயும் வந்து போனா கூடப் பரவாயில்லை. ஆனா நீ மொத்தமா அங்கே இருக்கணும்னு சொல்ற. அதுவும் அங்கே கொஞ்சம் பிசினஸ் செட்டில் ஆனதும் இங்கே கம்பெனியை வித்தே ஆகணும்னு அடம் பிடிக்கிற. அது என்னால நிச்சயம் முடியாதுடா.
என் கம்பெனியை ஒவ்வொரு பகுதியும் செதுக்கினது போலச் செதுக்கியிருக்கேன். அதைப் போய் வித்துற நீ கட்டாயப்படுத்தினதால தான் நான் உன்கிட்ட மாத்தி மாத்தி பேச வேண்டியதாகிருச்சு. அப்பாவையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன். இதுவரை நீ கேட்டது எதையும் அப்பா மறுத்து இருக்கேனா? இந்த ஒரு விஷயத்திலாவது அப்பா சொல்றதை நீ கேளேன்” என்று நிதானமாகவே தன் நிலையை மகனுக்குப் புரிய வைக்க முயன்றார்.
இருவரின் பேச்சையும் காதில் வாங்காதவன் அங்கிருந்து நகர்ந்து கொண்டே “இனி நான் எதுவும் பேசுறதா இல்லை. செயலில் காட்டுறேன்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
சொன்னது போலச் செய்து காட்டியதுடன் கணவன், மனைவி பிரிவிற்குப் பலமான அஸ்திவாரத்தை அன்றிலிருந்து கட்ட ஆரம்பித்தான்.