8 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
‘வேண்டாமே சார்…’ என்று தன் வீட்டு வாசலில் நின்றிருந்த கதிர்நிலவனை இறைஞ்சுதலாகப் பார்த்தாள் நயனிகா.
‘முடியாது’ என்னும் விதமாய் அழுத்தமாக நின்றான் கதிர்நிலவன்.
“ப்ளீஸ் சார். அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் சார். அதான் பிரச்சனை முடிஞ்சதே. இனி ஏன் சார் சொல்லணும்?” என்று கேட்டாள்.
“இப்பத்தான் கட்டாயம் சொல்லணும் நயனிகா…” என்றான் பிடிவாதமாக.
“நயனி யார் வந்திருக்கா? கதவை திறக்க இவ்வளவு நேரமா?” அவளின் அம்மா சமையலறையிலிருந்து குரல் கொடுக்க,
“யாருமா?” என்று கேட்டபடி படுக்கையறையிலிருந்து வந்தார் அவளின் தந்தை ஞானசேகரன்.
அதற்கு மேலும் வேறு வழியில்லாமல், “உள்ளே வாங்க சார்…” என்று கதிர்நிலவனை அழைத்தவள், “எங்க சார் வந்திருக்கார்பா…” என்றாள்.
“ஹோ, வாங்க… வாங்க…” என்று ஞானசேகரன் வரவேற்க,
“வாங்க தம்பி, உட்காருங்க. காஃபி குடிப்பீங்க தானே?” என்று கேட்ட படி வந்தார் அபிராமி.
உள்ளே வந்து அமர்ந்தவன், “எதுவும் வேண்டாம்மா. நீங்களும் உட்காருங்க. கொஞ்சம் பேசணும்…” என்றான் கதிர்நிலவன்.
ஞானசேகரனும், அபிராமியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு மகளைப் பார்த்தனர்.
அவளோ தலையை நிமிர்த்தாமல் குனிந்த படி நின்றிருந்தாள்.
அஷ்வத்தைத் தனது காவல்துறை நண்பனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு அவர்கள் சென்றதும், நயனிகாவின் புறம் திரும்பிய கதிர்நிலவன், “இந்த விஷயத்தை உடனே உன்னோட அப்பா, அம்மாகிட்ட சொல்லணும் நயனிகா. வீட்டுக்கு கிளம்பு…” என்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சார்…” என்று அவள் அதிர்ந்து அழைக்க,
“மறுத்து எதுவும் பேசாதே நயனிகா. கிளம்புனா கிளம்பு…” என்றான் கண்டிப்புடன்.
பயத்துடன் அவனைப் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
இங்கே வந்த பிறகும் தரிப்பிடத்தில் வைத்து, “ப்ளீஸ் சார், சொல்ல வேண்டாம் சார்…” என்று கேட்டுப் பார்த்தாள்.
“வீட்டுக்குப் போ நயனிகா. நான் உன் அப்பா வந்ததும் கண்டிப்பா வருவேன்…” என்றான் பிடிவாதமாக.
அவளின் கெஞ்சுதலான பார்வைக்கும் அவன் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
அவன் சொன்ன படி இதோ அவள் அப்பா வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் வந்து நின்று விட்டான் கதிர்நிலவன்.
“என்ன சார், எங்க பொண்ணு சரியா படிக்கலையா?” என்று கேட்டார் ஞானசேகரன்.
ஞானசேகரனுக்கும் மகளின் பேராசிரியர் எதிர் வீட்டில் இருப்பது தெரிந்தாலும், இதுவரை அவனிடம் அவர் பேசியது இல்லை.
இப்போது என்றும் இல்லாமல் அவன் வீடு தேடி வந்திருக்கவும் மகளின் படிப்பை பற்றித் தான் ஏதோ சொல்ல வந்திருக்கிறான் போல என்று விசாரித்தார்.
“உங்க பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு தான் சார். ஆனா இந்தக் கொஞ்ச நாளா சரியா படிக்கலை…” என்று கதிர்நிலவன் நிறுத்த,
“என்னமா இது?” என்று மகளிடம் கேட்டார் ஞானசேகரன்.
“அப்பா… அது…” என்று அவள் தடுமாற,
“அதுக்குக் காரணமும் எனக்கு இப்பத்தான் தெரிய வந்தது. நான் இப்ப பேச வந்தது அவள் சரியா படிக்கலைன்னு சொல்ல இல்லை. அவளால் ஏன் சரியாகப் படிக்க முடியாம போனது என்ற காரணத்தைச் சொல்லத்தான்…” என்று கதிர்நிலவன் சொல்ல, அவளின் அன்னையும், தந்தையும் புரியாமல் கேள்வியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் நடந்தது அனைத்தையும் சொன்னவன், இன்று அந்த அஷ்வத்தைத் தான் போலீஸில் பிடித்துக் கொடுத்தது வரை சொல்லி முடித்தான்.
“என்னடி இதெல்லாம்?” முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்து கேட்டவர் அபிராமி தான்.
ஞானசேகரனோ மகளையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்னை, தந்தை இருவரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் இமைகள் நனைய நின்றிருந்தாள் நயனிகா.
“என்னடா இவன் எல்லாம் முடிஞ்ச பிறகு நம்மக்கிட்ட வந்து சொல்றானேன்னு உங்களுக்குத் தோணும் சார். நானும் முதலில் விஷயத்தை உங்ககிட்ட தான் நயனிகாவை சொல்ல சொன்னேன். ஆனா அவளுக்கு நீங்க எங்க அவள் படிப்பை நிறுத்திடுவீங்களோன்னு பயம்.
ஒரு ஸ்டூடெண்ட்டா அவள் பயம் நியாயம்னு எனக்குப் பட்டது. அதே மாதிரி நான் ஒரு ஆசிரியர் இடத்தில் இருந்து யோசித்தேன். பிரச்சனையைத் தீர்க்க நினைக்காம ஒருவேளை நயனிகாவின் படிப்பை நிறுத்துவதாக நீங்க சொன்னால் அப்போ உங்களைச் சமாளிக்கிறதா, இல்லை… அவளின் பிரச்சனையைச் சரி செய்றதான்னு அல்லாட வேண்டியது வந்திடுமோன்னு தோன்றியது.
பிரச்சனையைத் தீர்த்துட்டு வந்து சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியும்னு நினைச்சேன். அதோட மகளின் பிரச்சனை தீர்ந்து விட்டதுன்னு நிம்மதியும் கிடைக்கும்னு தான் இப்போ வந்து சொல்றேன். இப்பவும் சொல்லாமல் மறைக்க என்னால் முடிந்திருக்கும். ஆனா உங்க பொண்ணுக்கு நேர இருந்த ஆபத்து பற்றிப் பெத்தவங்களா உங்களுக்குத் தெரிஞ்சாகணும். நாளை பின்ன திரும்ப இது போல் பிரச்சனை வந்தால் நயனிகா தயங்காமல் உங்ககிட்ட சொல்ல முடியும்…” என்று பேசி முடித்தான்.
“என்னக்கா நீ? இப்படியா இவ்வளவு பெரிய விஷயத்தை மூடி மறைப்ப? அப்பாக்கிட்ட சொல்ல முடியலைனா என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம்ல? அவனை ஒரு கை பார்த்துருப்பேனே…” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளியிலிருந்து வந்த தயா கொதித்தெழுந்து கேட்டான்.
“இல்லடா தயா, அவன் ரவுடி மாதிரி இருந்தான்டா. அவனைச் சின்னப்பையன் நீ எப்படிச் சமாளிக்க முடியும்னு தான் சொல்லலை…” என்றாள்.
“யாரு நான் சின்னப்பையனா? நீ மட்டும் என்கிட்ட சொல்லியிருக்கணும். அவனை வகுந்திருப்பேன்…” என்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“டேய், என்ன பேச்சு பேசுற?” என்று மகனை அதட்டிய அபிராமி, “காலேஜில் நடக்கும் விஷயத்தை எல்லாம் என்கிட்ட வந்து சொல்லுவியே நயனி… இவ்வளவு பெரிய விஷயத்தை இந்த அம்மாகிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணலையா?” என்று கண்கலங்க மகளிடம் கேட்டார்.
மகள் உயிர் தப்பி வந்திருக்கிறாள் என்பதில் உறைந்து போயிருந்தார். அவரின் வார்த்தைகள் நடுக்கத்துடனே வெளிவந்தது.
“இல்லமா… நீங்க அப்பாகிட்ட சொல்லிடுவீங்கன்னு…” என்று மென்று முழுங்கிய நயனிகாவின் வார்த்தைகள் தந்தையைப் பார்த்ததும் தயங்கி தடுமாறி நின்று போனது.
ஞானசேகரன் ஒன்றுமே பேசவில்லை. முகம் இறுக மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் பார்வை கதிர்நிலவனைச் சங்கடப்படுத்தியது.
“அப்போ அப்பாவா நான் இந்த வீட்டில் லாயிக்கில்லாதவனா இருக்கேன். அப்படித்தானே?” என்று மகளிடம் அழுத்தமாகக் கேட்டார் ஞானசேகரன்.
“அப்பா, அப்படி இல்லப்பா…” என்று கதறிய நயனிகா வேகமாக அவரின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
“அதான் உண்மை. இல்லனா என் மகளுக்கு ஒரு கஷ்டம் வந்தது கூட எனக்குத் தெரியாம இருக்குமா?” என்று அவர் தொடர்ந்து சொல்ல,
“அப்பா…” என்று அழுகையுடன் அழைத்து அவரின் கையைப் பற்றிக் கொண்டாள்.
“என் படிப்பை நிறுத்திடுவீங்களோன்னு பயம் வந்துருச்சுப்பா. அதான்…” என்றாள்.
“அப்போ என்னை நீ புரிஞ்சி வச்சுருக்கிறது அவ்வளவுதான் இல்லையா? அப்போ ஒரு அப்பாவா நான் தோத்துப் போயிட்டேன்…” என்ற ஞானசேகரனின் குரலில் இருந்தது வேதனை மட்டுமே.
“அய்யோ! என்னங்க நீங்க இப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?” என்று பதறி கேட்டார் அபிராமி.
“வேற எப்படிச் சொல்ல சொல்ற அபிராமி? இவளோட சாருக்கு மட்டும் விஷயம் தெரியாம இருந்திருந்தால் இந்நேரம் இவள் நம்ம முன்னாடி இப்படி உட்கார்ந்து இருப்பாள்னே சொல்ல முடிந்திருக்காதே அபிராமி. சாகவும் துணிந்தவளுக்கு இந்த அப்பாகிட்ட மட்டும் சொல்ல துணிவு வரலை பார்த்தியா?” என்று மனைவியிடம் கேட்டார்.
தந்தையின் வேதனை நயனிகாவின் மனதை போட்டு உலுக்கியது. தன் தவறு உறைக்க, தந்தையின் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.
அங்கே இருந்த சூழ்நிலை கதிர்நிலவனை அசவுகரியமாக உணர வைத்தது. ஞானசேகரன் வேதனைப்பட்டதைக் கண்டவனுக்குத் தான் விஷயத்தைச் சொல்லிருக்கக் கூடாதோ என்று எண்ண வைத்தது.
ஆனால் அடுத்த நொடியே தான் இப்போது மறைத்தால் நயனிகா இனி மேலும் தனக்கு ஒரு ஆபத்து வரும் போது சொல்லாமல் மூடி மறைக்கவே முயல்வாள். அப்படிச் சொல்லாமல் அவள் மீண்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றால் அவளின் பெற்றோருக்கு விஷயம் தெரிய வருவதே சரி என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.
“அப்பா… ஸாரிப்பா… நான் செய்தது தப்புத்தான். ஆனா…” என்று அவள் நிறுத்த,
“நான் உன் படிப்பை நிறுத்திடுவேன்னு எப்படி நினைச்சமா? யாரோ ஒரு பொறுக்கி உன்னை மிரட்டியதுக்கு நான் எப்படி உனக்குத் தண்டனை தருவேன்? நான் உங்ககிட்ட எல்லாம் கண்டிப்பாக நடந்துக்குவேன் தான். ஆனா அது உங்க நல்லதுக்காக மட்டுமே இருக்குமே தவிர, உங்களுக்குத் தீங்கு செய்ய இல்லை.
என் பொண்ணு, என் பையன் நல்லதை மட்டுமே தான் முதலில் பார்ப்பேனே தவிர அவங்களுக்குக் கெடுதல் வரும் விஷயத்தை நினைக்க மாட்டேன்.
நீ என்கிட்ட சொல்லிருந்தால் என்னால் என்ன செய்ய முடியுமோ, அதைக் கண்டிப்பா செய்து உனக்குத் தொந்தரவு கொடுத்தவனை உன் வழியிலிருந்து விலக்கியிருப்பேனே தவிர, உன் படிப்பில் கை வச்சுருக்க மாட்டேன்.
வாழ்க்கைக்குப் படிப்பு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சவன் தான் உங்க அப்பா மா. ஆனா அது என் மகளுக்குத் தான் புரியாமல் போயிருச்சு…” என்றார் வருத்தத்துடன்.
“அப்பா… ஸாரிப்பா. என் தப்பு தான்பா. நான் தான் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன். இனி இப்படி மறைக்க மாட்டேன்பா. இனி என்ன நடந்தாலும் உங்ககிட்ட வந்து சொல்லிடுவேன். என்னை நம்புங்கப்பா…” என்றாள் நயனிகா.
“சரிமா விடு…” என்று மகளைத் தேற்றினார்.
அதன் பிறகு சில நொடிகள் அந்தக் குடும்பத்துக்கேயான பாசப் பரிமாற்றங்களும், மன்னிப்புப் படலமுமாக நகர்ந்தது.
அந்தக் குடும்பத்தைக் கண் குளிர கண்ட கதிர்நிலவனின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“ஸாரி சார்… நானாவது உங்ககிட்ட வந்து நேத்து சொல்லிருக்கணும்…” என்றான் கதிர்நிலவன்.
“பரவாயில்லை சார். என் மகளுக்கே என்னைப் பத்தி புரியாத போது உங்களை இதில் குற்றம் சொல்ல ஒன்னுமில்லை. நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். எங்க மகளைப் பத்திரமா எங்களுக்கு மீட்டு கொடுத்ததற்கு நன்றி சார்…” என்றார் ஞானசேகரன்.
“பரவாயில்லை சார். என்னால் முடிந்த சின்ன உதவி. நீங்க என்னைத் தம்பினே கூப்பிடலாம் சார்…” என்றான் கதிர்நிலவன்.
“சரிங்க தம்பி. நான் எதுவும் போலீஸ் கிட்ட பேசணுமா?”
“இல்லை சார். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என் ஃபிரண்ட் தான். அவன் கேஸை வேற வழியில் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான். நான் தான் படிக்கிற பொண்ணு கேஸ், போலீஸ் ஸ்டேஷன்னு அலைய வேண்டாம்னு கேட்டுக்கிட்டேன். அப்படியே ஏதாவது கூப்பிட்டாலும் நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க கவலைப்படாதீங்க…” என்றான்.
“நன்றி தம்பி…” என்றார்.
அவரைத் தொடர்ந்து அபிராமியும், தயாவும் நன்றி தெரிவித்தனர்.
“ஓகே, நான் கிளம்புறேன்…” என்று அவன் கிளம்பவும், அவனுக்குக் குடிக்கக் காஃபி கொடுத்து அதை அவன் குடித்த பிறகே விட்டார் அபிராமி.
அவர்களின் வீட்டிலிருந்து வெளியேறிய போது, அவனின் பின்னேயே வந்த நயனிகா, ” ரொம்ப ரொம்ப நன்றி சார்…” என்றாள் மனம் நெகிழ்ந்து.
அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “நல்லா படிச்சு நல்ல மார்க் எடு. அதுதான் நீ எனக்குச் சொல்லும் நன்றி…” என்றவன் இடது கையால் தன் வீட்டு கதவை திறக்க ஆரம்பித்தான்.
அப்போது அவளின் பார்வை அவனின் வலது கையை நோக்கி சென்றது.
சட்டையால் முழுதாக மூடியிருந்த கையைப் பார்த்ததும் அவளின் முகம் வேதனையில் கசங்கியது.
அவனுக்கு இடதுகை பழக்கம் வந்ததற்கான காரணமும் புரிந்தது.
உள்ளே சென்று தன் வீட்டுக் கதவை மூடும் போது அவளின் விழிகள் தன் வலதுகையின் மீது இருப்பதைக் கண்டான்.
தன் கையைப் பார்த்து விட்டாள் போலும் என்று நினைத்தாலும் அதற்காக அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
நிதானமாகக் கதவை மூடி விட்டு உள்ளே சென்றான்.
வேதனையான பெருமூச்சுடன் நயனிகாவும் தன் வீட்டிற்குள் சென்றாள்.
“டேய் தயா, விளையாடாதே! அதுக்கு ஏதாவது ஆச்சு உன்னைச் சும்மா விட மாட்டேன்…” இரண்டு நாட்களுக்குப் பிறகு நயனிகாவின் குரல் தன் வீடு வரை கேட்க,
“ஸ்பீக்கர் திரும்ப வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது” என்று தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான் கதிர்நிலவன்.
அதன் பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் சுமூகமாகச் சென்று கொண்டிருந்தன.
நயனிகா தன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். இடையில் நடந்த மாடல் டெஸ்டிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள்.
அது இளங்கலை படிப்பிற்கான கடைசி வருடம் என்பதால் சிரத்தையுடன் படித்தாள்.
இன்னும் மெருகேற்றினால் கோல்ட் மேடலே வாங்கலாம் என்ற கதிர்நிலவனின் வார்த்தை அவளின் காதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, அதை நிறைவேற்றி விடும் ஆவலை தன் படிப்பில் காட்டினாள்.
வீட்டிலும் தம்பியிடம் அவளின் வால்தனம் தொடர்ந்தது.
நாட்கள் கடந்து செல்ல, தேர்விற்கான நாட்கள் நெருங்கின.
பேராசிரியர்களும் பாடத்தை எல்லாம் எடுத்து முடிக்கும் வேகத்துடன் பாடம் நடந்தி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தான் நயனிகாவிற்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்தது.
வெளி ஆட்கள் மூலமாக இல்லாமல் நோய் என்னும் அரக்கன் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.
முதலில் சாதாரணமாக ஆரம்பித்த காய்ச்சல் நாட்கள் செல்ல செல்ல வலுப்பெற்றதே தவிரக் குறையவே இல்லை.
பரிசோதனை செய்து பார்த்ததில் மலேரியா காய்ச்சல் இருப்பதாக முடிவில் வந்தது.
காய்ச்சல் விடுவதும், பின் மீண்டும் வருவதுமாக அவதிப்பட்டுப் போனாள்.
உடல் அவஸ்தையை விடப் படிப்பை பற்றிய மனவுளைச்சல் தான் அவளைப் போட்டு உலுக்கியது.
கோல்ட் மெடல் வாங்கிக் கதிர்நிலவனின் கூற்றை உண்மையாக்க வேண்டும் என்ற அதன் ஆசை தகர்ந்து விடுமோ என்று நினைத்தவள் உள்ளுக்குள் கலங்கி போனாள்.
அன்று மாலை மீண்டும் காய்ச்சல் வந்து விட, படுக்கையில் கண்ணீர் வடிய படுத்திருந்தாள் நயனிகா.
“ஏன்டி தலை ரொம்ப வலிக்குதா?” என்று மகளின் தலையை இதமாக வருடி விட்டு கேட்டார் அபிராமி.
‘இல்லை…’ என்று தலையை அசைத்தவளுக்குக் கண்ணீர் மட்டும் குறையவில்லை.
“அப்புறம் எதுக்கு இப்படி அழற?” என்றவரின் கேள்விக்கு மகளின் விசும்பல் தான் பதிலாகக் கிடைத்தது.
“உடம்பு வேற எதுவும் பண்ணுதா? டாக்டர்கிட்ட போவோமா?” என்ற கேள்விக்கும் மறுப்பே அவளின் பதிலாக இருந்தது.
அபிராமியும் ஒவ்வொன்றாகக் கேட்க, எல்லாவற்றிற்கும் மறுத்துக் கொண்டே வந்தாள்.
“என்னன்னு சொன்னால் தானே தெரியும். இப்படி அழுதுட்டே இருந்தால் இன்னும் காய்ச்சல் கூடப் போகுது…” என்று அதட்டல் போட்டு அவளை அடக்க முயன்றார்.
“போங்கம்மா, உங்களுக்கு என் கஷ்டம் எங்கே புரிய போகுது…” என்றாள்.
“சொன்னால் தானே புரியும். சொல்லாமல் புரிஞ்சிக்கலைன்னு சொன்னால் என்ன அர்த்தம்? இப்ப நீ என்ன காரணம்னு சொல்லலை… உதைபடுவ…” என்றார்.
“பைனல் எக்ஸாம் வரப் போகுது. இந்த நேரத்தில் போய் இப்படி உடம்பு சரியில்லாம படுத்துட்டேன். நான் கோல்ட் மெடல் வாங்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு…” என்றாள்.
“இன்னும் பாடம் தானே எடுத்துட்டு இருக்காங்கன்னு சொன்ன. இன்னும் ஸ்டடி லீவ் வேற இருக்கு. அப்ப படிச்சுக்கலாம். இதுக்குப் போயா அழுத?”
“அதுதான்மா பிரச்சனையே. இப்ப பாடம் எடுத்துட்டு இருக்காங்க. அந்தப் பாடத்தை நான் படிக்க வேண்டாமா? ஸ்டடி லீவ்ல நானா அந்தப் பாடம் படிச்சால் எப்படிப் புரியும்?” என்று கேட்டாள்.
“அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற?”
“லெட்சரர்ஸ்கிட்ட ஸ்பெஷல் பெர்மிஷன் கேட்டுத்தான் படிக்கணும். அதுக்கு அவங்களும் நேரத்தை ஒதுக்கி சரி சொல்லணுமேன்னு இருக்கு…” என்றாள் கவலையாக.
“கொஞ்சம் உடம்பு சரியானதும் கேட்டு பார்டி..” என்றார்.
“அப்படித்தான் செய்யணும்…” என்றவள், சொன்னபடி உடல் சற்று தேறியதும் கல்லூரிக்கு சென்று பேராசிரியர்களிடம் பேசினாள்.
பேராசிரியர்கள் பாடத்தைப் படிக்கும் படியும் அதில் சந்தேகம் வரும் போது தங்களிடம் வந்து கேட்டுக் கொள்ளும் படியும் சொன்னதால் அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அதன் படி தன் சந்தேகத்தையும் தீர்த்துக் கொண்டாள்.
ஸ்டடி லீவும் விடப்பட்டது.
அன்று மாலை வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தவளுக்குக் கணக்கில் ஒரு சந்தேகம் வர நேராகக் கதிர்நிலவனின் வீட்டின் முன் சென்று நின்றாள்.
அவளுக்குக் கதவை திறந்தவன், “என்ன நயனிகா?” என்று கேட்டான்.
“நான் காலேஜ் வராதப்ப நடந்த பாடத்தில் ஒரு சந்தேகம் சார். கேட்கலாமா?” என்று கேட்டாள்.
“என்ன சந்தேகம்? உள்ளே வந்து உட்கார். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்றேன்…” என்று கதவை திறந்து வைத்து விட்டு சமையலறைக்குச் சென்றான்.
அவள் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.
காஃபியும், மாலை சிற்றுண்டியும் தனக்காகத் தயார் செய்து கொண்டிருந்தவன், இப்போது அவளுக்கும் சேர்த்து தயாரித்து எடுத்து வந்தான்.
ஒரு கையில் காஃபி ட்ரேவும், இன்னொரு கையில் சிற்றுண்டி தட்டையும் எடுத்து வந்தவனை இமைகளைச் சிமிட்டி பார்த்தாள்.
முதல் முறையாக அவன் இரண்டு கையையும் ஒரே நேரத்தில் உபயோகிப்பதை கண்டவளுக்கு ஆச்சரியத்துடன் கேள்வியும் எழுந்தது.
“நீங்க ரைட்கேண்டும் நல்லா யூஸ் பண்றீங்களே சார். அப்படியிருக்கும் போது வெளியே உங்க வலதுகையைக் காட்டுவதே இல்லையே ஏன் சார்?” என்று நயனிகா ஆர்வக்கோளாறில் உடனே கேட்டு விட,
கதிர்நிலவனின் முகம் மெல்ல மாறி இறுகி போனது.