7 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 7

நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அன்றைக்குப் பிறகு வசந்தாவும், தியாகராஜனும் மீண்டும் சத்யாவிடம் திருமணத்தைப் பற்றிப் பேசவே இல்லை.

தான் அன்னையிடம் பேசியதை எப்படியும் தந்தையிடம் சொல்லியிருப்பார் என்று அறிந்திருந்த சத்யா தந்தை தன்னிடம் எதுவும் கேட்பாரோ என்று நினைத்தாள்.

ஆனால் அவர் தான் கேட்டது அறியாமல் மனைவி சொல்லியபோது தான் கேட்டதைச் சொன்னவர், “இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாள் அப்படியே விட்டுவிடு.‌ சீக்கிரமே அவள் மனம் மாறினாலும் மாறும். அதுவரை பொறுமையாக இரு…” என்று மனைவியை அடக்கி வைத்திருந்தார்.

“அதுவரை வந்த சம்பந்தம் எப்படிக் காத்திருக்கும்?” என்று கோபப்பட்ட வசந்தாவை சமாளித்து வைத்தவர், தானும் மகளிடம் அதற்குப் பிறகு சாதாரணமாகக் கூடத் திருமண விஷயத்தைப் பற்றிப் பேசாமல் விட்டுவிட்டார்.

இருவரின் அமைதியும் சத்யாவை யோசனையுடன் சுற்ற வைத்தது. ஆனாலும் மீண்டும் அவர்கள் அந்தச் சம்பந்தத்தைப் பற்றிப் பேசாமல் இருந்தது ஒருவித நிம்மதியையும் தோற்றுவித்தது.

சத்யாவின் திருமண விஷயம் ஒருபுறம் கிடப்பில் கிடக்க, ஓடிச்சென்ற கடந்த ஒரு மாதத்திற்கு மேலான நாட்களில் சத்யவேணியுடன் இன்னும் நட்புடன் பழக ஆரம்பித்திருந்தான் தர்மேந்திரன்.

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருமுறை வந்து அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டே செல்வான்.

கடந்த வாரங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த தர்மா அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலுமே அவன் அவர்களின் கடை பக்கம் வரவே இல்லை.

மாலை வரை கடையில் இருந்த சத்யா வழக்கமாக வீட்டிற்குக் கிளம்பும் நேரம் சிறிது கடந்த பிறகும் காத்திருந்தாள். அவளை அறியாமலேயே ஒரு எதிர்பார்ப்பு அவளிடம் உருவாகியிருந்தது.

கடந்து சென்ற ஞாயிறுகளில் இந்த நேரம் தான் என்றில்லாமல் ஏதாவது ஒரு நேரத்தில் காலையோ, நண்பகலோ, மாலையோ என்று நினைத்த நேரத்தில் தான் வந்து சென்று கொண்டிருந்தான்.

அதனால் ஒருவேளை தான் கிளம்பிய பிறகு வருவானோ என்று நினைத்து சிறிது நேரம் காத்திருந்தும் அவன் வராமல் போக, அவளின் மனதின் ஓரத்தில் சிறு ஏமாற்றம் குடி புகுந்தது.

“என்ன சத்யா, இன்னும் வீட்டுக்கு கிளம்பாம உட்கார்ந்திருக்க? வீட்டுக்குப் போகப் பாதுகாப்பான பாதைனாலும் இருட்டின பிறகு போறது நல்லதில்லைமா. இப்பவே கிளம்பு…” என்று தியாகராஜன் சொன்ன பிறகுதான் மனமே இல்லாமல் கிளம்பினாள்.

இரவு தந்தை வீட்டிற்கு வந்த பிறகு அவரிடம் அவன் வந்து சென்றானா என்று விசாரிக்க‌ நினைத்தாள். ஆனால் தான் அப்படி விசாரிப்பது கண்டிப்பாக அதிகப்படியாகத் தோன்றும் என்று நினைத்தவள் அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள்.

இரவு படுக்கையில் விழுந்த பிறகு அன்றைய நாளில் ஏதோ குறைந்த உணர்வு அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

அடுத்த இரண்டு நாட்களும் அப்படி இருக்க, மூன்றாவது நாள் அவளுக்கே தான் இருக்கும் நிலை வித்தியாசமாகத் தோன்றியது.

‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? எதற்கு இப்போ ஏதோ மிஸ்ஸான ஃபீலில் சுத்திட்டு இருக்கேன்? என்னுடைய நாட்கள் வழக்கம் போலத் தானே போகுது. அப்புறம் அப்படி என்ன மிஸ் பண்ணினேன்?’ என்று தனக்குத் தானே கேட்டு கொண்டாள்.

யோசனையின் முடிவில் அவளின் நினைவில் வந்து நின்றான் ‘தர்மேந்திரன்’.

தன் மனம் சொன்ன உணர்வில் “நோ…” என்று வாய்விட்டே சத்தமாகச் சொல்லியிருந்தாள்.

“என்னக்கா… என்ன நோ?” அவளின் அருகில் படுத்திருந்த கார்த்திகா புரியாமல் கேட்டாள்.

மனதின் தாக்கத்தில் இருந்தவளுக்குக் கார்த்திகாவின் கேள்வி கூடக் காதில் விழவில்லை.

“என்னக்கா…?” என்று அவளின் தோளில் கைவைத்து உலுக்கினாள். “என்னடி…?” என்று அவளின் உலுக்கலில் நினைவிற்கு வந்து கேட்டாள்.

“என்ன என்னடி…? எதுக்கு ‘நோ’னு சொன்னனு கேட்டேன்…”

“இல்லையே… நான் ஒன்னும் சொல்லலையே…” என்று மழுப்பினாள்.

“ஒன்னும் சொல்லலையா? என் காதில் விழுந்துச்சே?” குழப்பத்துடன் கேட்டாள் கார்த்திகா.

“நான் தான் சொல்லலைனு சொல்றேன்ல… பேசாம தூங்குடி…” என்று கோபத்துடன் அதட்டினாள்.

அவளின் அந்தக் கோபம் கார்த்திகாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற வைக்க, “அக்கா உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே? வெளியே போய்ட்டு வரும் போது எதுவும் நடந்ததா?” என்று தயங்கி, தயங்கி கேட்டாள்.

சத்யா பள்ளிக்கும், அவர்களின் கடைக்கும் தானே தான் போய்க்கொள்வாள். உதவிக் கோலை வைத்தும் தன் நடையின் மூலம் அனுமானித்துக் கொள்வது வைத்தும் போய்க்கொள்வாள். அதுவும் பல நாட்களுக்குப் பிறகான பயிற்சியில் மட்டுமே அது சாத்தியமாகிற்று.

பார்வை இல்லாத அக்கா தனியாகச் சென்று வரும் போது அவளுக்கு எதுவும் தொந்தரவு வந்திருக்குமோ என்று அஞ்சிய படி கேட்டாள்.

தங்கையின் கேள்வி சென்ற பாதையை உணர்ந்து திடுக்கிட்டாள் சத்யா. அதே நேரம் தங்கை தனக்கே பெரியவளாகி அக்கறையுடன் விசாரித்தது மனதை நெகிழ்த்தியது.

“சேச்சே…! எதுவும் பிரச்சனை இல்லை கார்த்தி. பத்திரமா தான் போய்ட்டு வந்தேன். இப்ப நான் வேற ஒரு யோசனையில் இருந்தேன். அதான் சட்டுனு கோபம் வந்துடுச்சு…” என்றவள் தன்னை விட்டு சிறிது தள்ளிப் படுத்திருந்த தங்கையின் கையைத் தேடி துழாவினாள்.

“என்னக்கா…?”

“உன் கையைக் கொடு கார்த்தி…”

கார்த்திகா தன் கையை அக்காவின் கை மேல் வைக்கவும், அவளின் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்தி வைத்துக்கொண்டாள்.

“எனக்குத் தூக்கம் வரமாட்டீங்குது கார்த்தி. நான் உன் கையைப் பிடிச்சுக்கிறேன்…” என்றவள் ஆதரவு தேடும் குழந்தையாகப் பரிதவித்து வேறு சிந்தனைக்கு மனதை செலுத்த விடாமல் உறங்க முயன்றாள்.

தன் அக்காவின் புதிய செயலை யோசனையுடன் பார்த்தாள் கார்த்திகா. ‘தான் சிறியவள் என்பதால் தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ?’ என்று நினைத்தவள் :காலையில் அம்மாவிடம் சொல்லி பேச சொல்லவேண்டும்’ என்ற முடிவுடன் சத்யாவின் அருகில் இன்னும் கொஞ்சம் தள்ளிப்படுத்தவள் லேசாக அவளைத் தட்டி கொடுக்க ஆரம்பித்தாள்.

தங்கையின் பரிவில் சத்யாவிற்கு அழுகை வர பார்த்தது. ஆனால் அதைக் கண்டு மீண்டும் கார்த்திகா கேள்வி கேட்டால் இனி அவளைச் சமாளிப்பது கடினம் என்று நினைத்தவள் முயன்று உறங்க முயற்சித்தாள்.

மறக்காமல் காலையில் அன்னையிடம் தன் அக்காவை பற்றிச் சொல்லி மேலும் விசாரிக்கச் சொன்னாள் கார்த்திகா.

காலை உணவின் போது “என்னடி சத்யா… நைட் எதுவும் மனசை போட்டு குழப்பிட்டு படுத்திருந்தியா? இல்லை போய் வர்ற வழியில் எதுவும் பிரச்சனையா? இன்னைக்கு ஸ்கூலுக்கு அப்பா கூடப் போறியா?” என்று விசாரித்தார் வசந்தா.

“அதுக்குள்ளே இந்தக் கார்த்திப் புள்ள உங்ககிட்ட சொல்லிட்டாளா? எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைம்மா. ஏதோ யோசனையில் இருந்தேன். அவ்வளவு தான்! அப்பா எல்லாம் வேண்டாம். நானே போய்க்குவேன். எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்…” என அதற்கு மேல் பேச்சை வளர்க்க விடாமல் விரைவில் உண்டு விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய் சத்யா…! மெல்ல பார்த்துப் போடி… இப்போ ஏன் இப்படி வேகமா ஓடுற?” என்று வாசல் படியில் இருந்து கத்தினார்.

“சரிம்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே நிற்காமல் நடையைத் தொடர்ந்தாள்.

“என்ன வசந்தா… ஏன் கத்துற?” குளியலறையில் இருந்து வெளியே வந்த தியாகராஜன் கேட்டார்.

அவரிடம் சிறிய மகள் சொல்லியதையும், அதற்குப் பெரிய மகள் பதில் சொல்ல முடியாமல் நிற்காமல் ஓடுவதையும் சொன்னவர், “ஏதோ மறைக்கிறாங்க… என்னன்னு தெரியல. போற வழியில எதுவும் பிரச்சனையானு நீங்க ஒரு எட்டு பார்த்துட்டு வர்றீங்களா?” என்று கேட்டார்.

“சரிமா… நானும் அவள் பின்னாடி போறேன். வந்து சாப்பிட்டுக்கிறேன்…” என்றவர் குளித்து விட்டு வந்ததால் உடனே உடையை மாற்றிக்கொண்டு மகளின் பின்னே தானும் அவசரமாக வெளியேறினார்.

சத்யா பள்ளியின் உள்ளே செல்லும் வரை அவள் உணராத வகையில் நடந்து பின் தொடர்ந்தார் தியாகராஜன். அதோடு சுற்றி உள்ள சூழ்நிலையை ஆராய்ந்து அவளுக்கு யாரும் தொந்தரவு தருகிறார்களோ என்று கவனித்துக் கொண்டே சென்றார்.

ஆனால் பள்ளி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகள் உள்ளே சென்றதும் ‘ஒருவேளை மாலையில் தொந்தரவு இருக்குமோ? அதையும் சாயந்தரம் வந்து பார்த்து விடுவோம்’ என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குத் திரும்பி மனைவியிடம் சொன்னார்.

“சரிங்க… சாயந்தரமும் ஒரு முறை பார்த்துட்டு வந்துருங்க…” என்று முடித்தார் வசந்தா.

பிரச்சனை மகளின் மனதிற்குள் தான் என்று தெரியாமல் அவளின் பிரச்சனையை வெளியே தேடி அலைந்தனர் சத்யாவின் பெற்றோர்.

அன்றைய உளறலுக்குப் பிறகு குடும்பமே தன் மேல் கூடுதல் கவனம் வைத்திருப்பதை ‘எதுவும் பிரச்சனையா?’ என்ற அவர்களின் விசாரிப்பின் மூலம் உணர்ந்தவள், இனி அப்படி ஒரு கேள்வி வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து எந்த யோசனையும் தன்னை மூழ்கடிக்க விடாமல் எதைப் பற்றியும் நினைக்காமல் மீண்டும் பழைய சத்யாவாகவே வலம் வர ஆரம்பித்தாள்

அடுத்த ஞாயிறன்று நான்கு மணிக்கு தியாகராஜனின் ஸ்டேஷ்னரி கடைக்கு வந்தான் தர்மேந்திரன். அப்போது தந்தை, மகள் இருவருமே இருந்தனர்.

அவன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வரும் போதே அவன் வந்ததைக் கண்டு கொண்டாள் சத்யா. அவன் வந்ததை உணர்ந்ததும், என்றுமில்லாத வகையில் தன் மனதில் ஏற்பட்ட சலனத்தை மறைக்க வேண்டும் என்ற உந்துதலில் அவளிடம் தடுமாற்றம் வந்து அமர்ந்து கொண்டது.

அதுவரை இருக்கையில் அமர்ந்து இருந்தவள் எழுந்து கடைக்குள் செல்வதுபோல் சிறிது தள்ளி இருந்த பொருள்கள் அடுக்கி வைத்திருந்த பலகையின் அருகில் நின்று எதையோ தேடுவது போல் அலமாரியை தடவி கொண்டு நின்றாள்.

“வாங்க தம்பி…” என்று சம்பிரதாயமாக வரவேற்ற தியாகராஜன் “அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போகுது தம்பி?” என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

“நல்லா போகுது அங்கிள். இப்போ போகிற வேலையோட இன்னும் கொஞ்சம் வேலை இழுத்துப் போட்டு செய்துகிட்டு இருக்கேன். அந்த வேலையோட டைட்டா போய்கிட்டு இருக்கு…” என்றவன் பார்வை உள்ளே நின்றிருந்த சத்யாவின் மீது படிந்து மீண்டது.

எப்பொழுதும் நடையை வைத்தே அவனின் வருகையை உணர்ந்து, அவன் கடையின் அருகில் வரும் முன்னே “வாங்க தர்மா சார்…” என்று வரவேற்பவள் இன்று அவன் நடந்து வரும் போது நொடி பொழுது மலர்ந்த முகத்தை அடுத்த நொடியில் அப்படியே மாற்றி இறுகிய முகத்துடன் அவள் உள்ளே தள்ளிப் போய் நின்றது அவனின் கவனத்தில் விழுந்தது.

உள்ளே சென்றவள் தன் குரல் கேட்ட பிறகும் கவனியாதது போல முதுகை காட்டி நின்றிருந்தவளின் செயலை கண்டு அவனின் கண்கள் யோசனையுடன் சுருங்கியது.

அவனை மேலும் யோசனையுடன் இருக்க விடாமல் “அப்படி என்ன வேலை தம்பி? ” என்று கேள்வி கேட்டு அவனின் கவனத்தைத் தன் புறம் திரும்பியிருந்தார் தியாகராஜன்.

“டிரைவிங் தான் அங்கிள். ஆனா அது என்னைப் போலக் காலில் குறைபாடு உள்ளவர்களுக்கான தனிப்பட்ட முறையில் நடக்கப் போகும் ஸ்பெஷல் ட்ரைவிங் அங்கிள்…” என்றான்.

“என்ன தம்பி சொல்றீங்க? குறைபாடு உள்ளவர்களுக்கான ட்ரைவிங்கா? அவங்களால கார் ஓட்ட முடியுமா தம்பி?” என்று கேட்டார்.

“நான் ஓட்டுவேனே அங்கிள்? நான் பைக் ஓட்டுவதைப் பார்த்தீங்க இல்லையா? எனக்குக் காலில் கியர் போடுவது கஷ்டம். அதற்குப் பதிலாக நான் ஸ்டேரிங்கில் கியர் செட் பண்ணிருக்கேன். அதோடு வண்டியோட வெயிட்டை குறைக்கவும் சில வேலைகள் செய்து வைத்திருக்கிறேன். அதனால் தான் கால் இப்படி இருந்தும் என்னால் சுலபமா வண்டி ஓட்ட முடியுது. அதே மாதிரி தான் காருக்கும்.

எல்லாரும் வழக்கமா யூஸ் பண்ற கார் தான். ஆனா அதில் சில வேலைகள் பார்த்துக் காரில் காலால் செய்ற வேலையைக் கையால் செய்ய முடியும். காலில் குறைபாடு உள்ளவங்களும் இனி கார் ஓட்டலாம். இந்த முறை ஒரு மாற்றுத் திறனாளி கண்டுபிடிச்சது தான். அவரோட கட்டுரை ஒன்னு பார்த்த பின்பு தான் நானும் என் கால் இப்படி ஆன பிறகு இந்த முறையில் கார் ஓட்டக் கத்துக்கிட்டேன்.

என்னைப் போல இன்னும் சிலரும் பயன் பெறட்டும்னு நானும் என் டிரைவிங் ஸ்கூலில் அதை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். அதுக்குத் தான் லோன் போட்டு இரண்டு கார் வாங்கினேன். லோனுக்கும், கார் வாங்கவும்னு அதுக்கே இரண்டு வாரம் ஓடி போய்ருச்சு.

இனி அந்தக் காரில் அட்டாச்மெண்ட் பொருத்துற வேலை இருக்கு. அது முடிந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டுனர் பயிற்சினு ஒரு விளம்பரம் கொடுக்க ரெடி பண்ணனும். இன்னும் கொஞ்ச நாளைக்கு வேலை டைட்டாதான் போகும்…” என்றான்.

“ஓ…! நல்ல விஷயம் தம்பி… நல்லபடியா செய்ங்க. அப்புறம் தம்பி நான் ஒரு விஷயம் கேட்கலாமா?” என்று தயங்கிய படியே கேட்டார்.

“என்ன அங்கிள்? தயங்காம கேளுங்க…”

“பேசும் போது உங்க கால் இப்படியான பிறகு இந்த மாதிரி ட்ரைவிங் கத்துகிட்டதா சொன்னீங்க. அப்போ நீங்க பிறந்தப்ப உங்க கால் நல்லா இருந்ததா…?”

“இப்போ ஐந்து வருஷத்துக்கு முன்னாடி வரை என் கால் எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்லாதான் இருந்தது அங்கிள்…” என்று சொல்ல தியாகராஜன் மட்டும் இல்லாமல் அவ்வளவு நேரம் அவனின் பேச்சை கேட்ட படி நின்றிருந்த சத்யாவும் அதிர்ந்து திரும்பினாள்.