7 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 7

திருமணமான புதிதில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இந்த ஆறு மாதங்களாகவும் இருந்து கொண்டிருந்தான் சூர்யா.

வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகம் செல்வதும், வெள்ளி இரவு அலுவலக நண்பர்களுடன் சென்று குடிப்பதும், சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு இரவு குடித்துவிட்டு வருவதும் அவனின் பழக்கம் என்று யுவஸ்ரீக்கு நன்கு பழகி போனது.

இதில் மனைவிக்கு என்று அவன் ஒதுக்கிய நேரங்கள் இரவு மட்டுமே.

ஊருக்குச் செல்லும் போது மட்டும் அவளுடன் இருப்பான்.

அது தவிர அவர்கள் மட்டும் இருந்த தருணங்களில் மனைவியிடம் அன்பாகப் பேசுவது, சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக வெளியே செல்வது என்ற எதுவும் செய்ததில்லை.

இவன் ஏன் இப்படி இருக்கிறான்? என்று புரியாமல் யோசித்து யோசித்து விடை கிடைக்காமல் குழம்பிப் போக மட்டுமே யுவஸ்ரீயால் முடிந்தது.

நண்பர்களுடன் செல்ல கூடாது என்று சண்டை போட்டு பார்த்தாள். அப்படித்தான் செல்வேன் என்றான். குடிக்கக் கூடாது என்றும் சண்டையும் போட்டு பார்த்து விட்டாள்.

அவள் சொன்ன பிறகு தான் அதிகம் குடித்து விட்டு வந்தான்.

தன்னால் தான் அதிகம் குடிக்கிறானோ என்று நினைத்து அதைச் சொல்வதையும் நிறுத்தி விட்டாள்.

அவன் குடிப்பது தெரிந்த சித்ராவும் மகனிடம் பேசி அந்தப் பழக்கத்தை விடச் சொன்னார்.

ஆனால் அவனோ கணினி வேலை தனக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதாகவும், அதில் இருந்து மீள மது தனக்குத் தேவையாக இருப்பதாகவும் சொல்லி சமாளித்தான்.

அவனின் தந்தையிடம் சொல்லி விடுவதாக மிரட்டிப் பார்த்தார்.

“அப்பாவே குடிப்பார்னு எனக்குத் தெரியும் மா…” என்று சொல்லி அவரின் வாயை அடைத்தான்.

குமரகுருவும் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது மது அருந்துவது உண்டு.

தந்தைக்கே அந்தப் பழக்கம் இருக்கும் போது மகனை என்ன சொல்லி திருத்துவது என்று சித்ராவிற்கும் தெரியவில்லை.

கணவனின் குடி பழக்கத்தைப் பற்றியோ, அவன் தன்னிடம் விட்டேத்தியாக நடந்து கொள்வதைப் பற்றியோ யுவஸ்ரீ தன் அன்னையிடம் சொல்லவே இல்லை.

அவளின் தந்தை இறந்த பிறகு பரிமளாவிற்கு ஒரு முறை மாரடைப்பு வந்திருந்தது.

அதில் இருந்து அவர் மீண்டதே பெரிய விஷயமாகிப் போனது.

இதில் மகள் வாழ்க்கை சரியில்லை என்று தெரிய வந்தால் என்ன ஆவாரோ என்று நினைத்து அன்னையிடம் அவள் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

கணவன் செய்வது சரியில்லை என்று அன்னையிடமும் சென்று விட முடியாது. அதனால் அவருக்கு எதுவும் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் அவளைக் கோழையாக்கி வைத்திருந்தது.

அதுவும் இரவு அவன் குடித்து விட்டு வந்து அத்து மீறுவதைச் சகித்துப் போவது தான் ஏதோ முதுகெலும்பில்லாத புழுவாக மாறி போனோமோ என்று அவளை மறுக வைத்துக் கொண்டிருந்தது.

அனைத்திற்கும் விடையாக அவனை விட்டு பிரிந்து போக அவளுக்குச் சில நொடிகள் போதும். ஆனால் அதற்குப் பின் என்ன?

கணவன் சரியில்லை அதனால் அவனை விட்டுப் பிரிகிறேன் என்று அவளால் பிரிய முடியாது.

பிரிந்தால் ஒன்று அன்னையிடம் செல்ல வேண்டும். மகள் வாழ்க்கையை நினைத்து நிச்சயம் அவர் மடிந்தே போவார். அல்லது தனியாக எங்கேயாவது செல்ல வேண்டும்.

அது சாத்தியமா? அப்போது மட்டும் மகளைக் காணவில்லை என்று அன்னை பாதிக்கப்பட மாட்டாரா? என்ற நினைப்பும் அவளை அமைதியாக்கி வைத்திருந்தது.

அப்போது கூடவே இருந்து அவனைத் திருத்த போகிறாயா? என்று கேட்டு மனசாட்சி குத்தி கிழிக்கும்.

அவனைத் திருத்தத்தான் நான் பெண்ணாகப் பிறந்தேனா? என்ற எண்ணமும் தோன்றும்.

இப்படி அவளுக்குள்ளேயே பலவித போராட்டங்கள் இருக்கத்தான் செய்தன.

ஆனாலும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

அதே நேரம் மனதில் ஒரு வித விரக்தி உண்டாகியிருந்தது.

கணவன் அவளுக்காக ஒதுக்கும் சில மணி நேரங்கள் அவளின் விரக்தியை விரட்டி விடும்.

ஆனால் அதைச் செய்யத் தவறியிருந்தான் சூர்யா.

அன்று திங்கள்கிழமை. இருவரும் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

இரவு சரியாகத் தூங்காதது உடலில் சோர்வு உண்டாகியிருக்க, அது அவளின் மனதிலும் பிரதிபலித்துச் சோர்வை உண்டாக்கியிருந்தது.

அதனால் மெதுவாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு மார்னிங் ஒரு மீட்டிங் இருக்கு. நான் சீக்கிரம் ஆபீஸ் போயாகணும். டிபன் ரெடியா பொண்டாட்டி?” என்று சமையலறை வாயிலில் நின்று கேட்டான் சூர்யா.

அவனை நிதானமாகத் திரும்பிப் பார்த்தவள், “இன்னும் இல்லை…” என்றாள்.

“ம்ப்ச்… இவ்வளவு நேரம் என்ன செய்ற?” என்று சிடுசிடுத்தான்.

அவனை முறைத்துப் பார்த்தாள் யுவஸ்ரீ.

‘இவனால் தான் எனக்குச் சோர்வு. இப்போது ஒன்றும் அறியாதவன் போல் எரிச்சல் பட்டால் மட்டும் ஆகிற்றா?’ என்ற கோபம் வந்தது.

“என்ன முறைப்பு? இப்ப சாப்பாடு வைப்பியா இல்லையா?” என்று கேட்டான்.

“நீங்க வெளியே சாப்பிடுவது என்ன புதுசா? வெளியே சாப்பிடுங்க. என்னால் முடியலை இன்னைக்கு…” என்றாள்.

“இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்றவன் கிளம்பிவிட, அவளுக்குச் சப்பென்று ஆனது.

முடியவில்லை என்றதும் என்ன ஏதென்று கேட்பான் என்ற சிறு நப்பாசை அவளுக்கு இருந்தது.

வழக்கம் போல் அதை நிராசையாக்கி விட்டுச் சென்றிருந்தான்.

கணவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்தும் தான் ஆசைப்பட்டது தவறு தான் என்று தன்னையே திட்டிக் கொண்டவள் தனக்கு மட்டும் உணவை தயாரித்து உண்டு விட்டு வேலைக்குக் கிளம்பினாள்.

சூர்யா ஒரு டீமிலும், அவள் வேறு ஒரு டீமிலும் இருந்தனர்.

அன்று சூர்யாவின் டீம் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

“என்னவாம் நந்தினி, ஒரே பரபரப்பா சுத்திட்டு இருக்காங்க?” என்று தோழியிடம் விசாரித்தாள் யுவஸ்ரீ.

“இன்னைக்கு ஒரு பிராஜெக்ட் முடிச்சுக் கொடுக்கணுமாம். ஏற்கனவே வேலை முடிந்ததாம். இன்னைக்குப் பைனல் டச் மட்டும் இருக்குன்னு தினு சொல்லிட்டு இருந்தார்.

ஆனால் இப்போ செய்து வச்ச வேலையில் ஏதோ குளறுபடி ஆகிடுச்சாம். பிராஜெக்ட் ரன் ஆகலை. அதைச் சரி பண்ண ஒரு வாரம் ஆகும். இன்னைக்கு முடியுற வேலை இழுக்குதேன்னு தினு வந்து புலம்பிட்டு போறார்…” என்று விவரம் தெரிவித்தாள் நந்தினி.

“இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சூர்யா சீக்கிரம் வந்தாரே. மீட்டிங் முடிந்ததா?”

“ஆமா மீட்டிங்ல தான் பிராஜெக்ட்டில் நடந்த குளறுபடி தெரிய வந்திருக்கு…” என்றாள்.

“சரி, அவங்க வேலையைப் பார்க்கட்டும். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்…” என்று தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் யுவஸ்ரீ.

நடுவில் காஃபி குடிக்க யுவஸ்ரீயும், நந்தினியும் கிளம்பினர்.

நந்தினி தினேஷையும் அழைத்தாள்.

“என்னால் இப்போ நகரக் கூட முடியாது நந்து. நீங்க போயிட்டு வாங்க…” என்றான்.

யுவஸ்ரீயின் பார்வை கணவன் புறம் சென்றது.

அவனின் கணினியை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

“வேலை இருக்கத்தான் செய்யும். காஃபி மாதிரி குடிச்சு ரிலாக்ஸ் செய்துக்கலாமே தினு?” நந்தினி கேட்க,

“எங்க இருந்து ரிலாக்ஸ் பண்ண? கிளைண்ட்டுகிட்ட இருந்து கேள்வி மேல் கேள்வி வந்துட்டு இருக்கு. பதில் சொல்ல முடியாம விழி பிதுங்கிப் போயிருக்கோம். நானாவது பரவாயில்லை.

சூர்யா காலையில் இருந்து சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கான். லீடர் அவன் தானே பதில் சொல்லியாகணும்? அவன் அதில் ஒரு வழி ஆகிட்டு இருக்கான்…” என்றான் தினேஷ்.

‘என்ன இன்னும் சாப்பிடலையா?’ என்று பதறிப் போனது யுவஸ்ரீயின் உள்ளம்.

சூர்யாவைப் பார்க்க சோர்ந்து தான் தெரிந்தான்.

காலையில் தான் அவனைச் சாப்பிட வைத்து அனுப்பியிருக்க வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டவள், உடனே கேண்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவன் உன்னை ஒரு பொருட்டாக நினைக்காத போதே அவன் ஒரு வேளை உண்ணவில்லை என்றதும் இவ்வளவு பதறுகிறாயே? இது உனக்கே ஓவராகத் தெரியவில்லை என்று அவளின் மனம் இடிந்துரைத்தது.

அவன் அப்படி நடந்து கொள்கிறான் என்பதற்காக நானும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமா? அப்படி விட்டேத்தியாக நடந்துகொள்வது அவனின் குணம். ஆனால் என் குணம் அது இல்லையே?

அவனுக்கு என்னைப் பிடிக்குமோ இல்லையோ? நான் அவனைப் பிடித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன். அவன் எப்படியோ போகட்டும் என்று என்னால் விட முடியாது. என் குணம் இதுதான்! என்று மனதுடன் போராடிக் கொண்டே சென்றாள் யுவஸ்ரீ.

அவளின் பின் நந்தினியும் செல்ல, “நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நந்தினி. நான் இதோ வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

யுவஸ்ரீ திரும்பி வந்த போது அவள் கையில் சாண்ட்விச்சும், ஒரு பன்னீர் ரோலும் இருந்தது.

சூர்யாவின் முன் வந்தவள் அவனின் மேஜையின் மீது வைத்தாள்.

சூர்யா கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்க, “சாப்பிட்டு வேலையைப் பாருங்க…” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

சென்றவளை கண்டவனின் கண்களில் மெல்லிய சலனம்.

அவனுக்கு வேலையில் நடந்த குளறுபடியில் சாப்பிட செல்லவே முடியவில்லை. மனைவி வைத்து விட்டு சென்ற உணவை வேகமாக எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

யுவஸ்ரீ காஃபி குடித்து விட்டு வந்த போது சாப்பிட்டு முடித்திருந்தான்.

இப்போது அவனின் டேபிளில் காஃபி கொண்டு வந்து வைத்தாள்.

“நான் காஃபி குடிக்க மாட்டேன்னு தெரியும்ல?” என்று கேட்டான்.

“தெரியாமல் என்ன? ஆனா இப்போ இது உங்களுக்குத் தேவைப்படும். உங்களுக்குத் தலைவலி வந்திருச்சு. எடுத்துக் குடிங்க…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றாள்.

எனக்குத் தலைவலி என்று இவளுக்கு எப்படித் தெரியும்? சென்றவளை பார்த்துக் கொண்டே யோசித்தான்.

அவள் உணவை கொண்டுவந்து வைத்த போது தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

அதைப் பார்த்துவிட்டு தான், தான் காஃபி குடித்துவிட்டு அவனுக்கும் காஃபி வாங்கி வந்தாள்.

நான் சொல்லாமலே என் வலி அவளுக்குத் தெரிகிறதே என்று மனைவியைப் பற்றி வியப்பும், யோசனையும் வந்தது.

அதைப் பற்றி மேலும் சிந்திக்க விடாமல் வேலை இழுக்க, காஃபியைக் குடித்துக்கொண்டே வேலையை ஆரம்பித்தான்.

அன்று மதியத்திற்கு அவனாகச் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான்.

மாலையானதும் யுவஸ்ரீ வீட்டிற்குக் கிளம்ப, அவளின் முன் வந்தான்.

“இன்னைக்கு வேலை முடிய நைட்டு எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்லமுடியாது. நான் லேட்டா தான் வருவேன். நீ சாப்பிட்டு விட்டு கதவை மூடிட்டு தூங்கு…” என்றான்.

“ம்ம், சரிங்க. நீங்க மறக்காம நைட் சாப்பிட்டு விடுங்க. வேலையில் மறக்க வேண்டாம்…” என்று சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பு…” என்று அவளை அனுப்பி வைத்தான்.

இரவு பதினொரு மணியளவில் சோர்ந்து வந்து சேர்ந்தான் சூர்யா.

அவனாகக் கதவை திறந்து உள்ளே வர, வீடு இருளாக இருந்தது.

விளக்கை போட்டதும் சோஃபாவில் படுத்திருந்தவள் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“வந்துட்டீங்களா?” என்று கண்ணைக் கசக்கி கேட்டவளை பார்த்துக் கொண்டே காலணியைக் கழற்றி வைத்தான்.

“தூங்கலையா நீ?”

“சோஃபாவில் படுத்து கொஞ்ச நேரம் தூங்கினேன். நைட் சாப்டீங்களா?”

“ம்ம், ஆச்சு…” என்றவன் முகத்தில் சோர்வை பார்த்தாள்.

அவன் அறைக்குள் சென்று உடையை மாற்றி விட்டு வெளியே வர, “சாப்பிட வாங்க…” என்றழைத்தாள்.

“நான் சாப்டேன்னு சொன்னேன்…”

“அது தெரியுது. ஆனா இப்ப உங்களுக்குப் பசிச்சிருக்கும். இந்த நேரம் வீட்டுக்கு வந்தால் சாப்பிடுவீங்க தானே? சாப்பிட்டால் தான் உங்களுக்குத் தூக்கம் வரும்…” என்றவளை கூர்ந்து பார்த்தான்.

எட்டு மணிக்கு சாப்பிட்டான் தான். ஆனாலும் இவ்வளவு நேரத்தில் பசித்திருந்தது.

அதையும் அவன் சொல்லாமலே புரிந்து சாப்பாடு எடுத்து வைத்த மனைவியைக் கண்களால் அளந்து கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

“நீ சாப்டியா?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்த கணவனை விநோதமாகப் பார்த்தாள்.

“பதில் சொல்லாமல் என்ன பார்வை இது?”

“நான் சாப்பிட்டேனா இல்லையான்னு எல்லாம் நீங்க கவலைப்படுவீங்களா என்ன?” என்று விரக்தியான குரலில் கேட்க, சூர்யாவின் முகம் மாறியது.

“ஏன் இப்படிக் கேட்குற?”

“நமக்குக் கல்யாணம் ஆனப்பிறகு முதல் முறையா என்கிட்ட இந்தக் கேள்வி கேட்டுருக்கீங்க…” என்று சொல்லும் போதே யுவஸ்ரீயின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

இதுவரை அவன் இந்தக் கேள்வியை அவளிடம் கேட்டதே இல்லை. அவன் வீட்டில் சாப்பிடும் போது அவளும் எதிரே அமர்ந்து சாப்பிடுவாள். அவன் நேரம் சென்று வரும் போது யுவஸ்ரீ உண்டு முடித்திருப்பாள்.

ஆனாலும் வந்ததும் அவன் சாப்பிட்டுப் படுக்கச் சென்று விடுவானே தவிர ‘நீ சாப்பிட்டியா? இல்லையா?’ என்ற எந்தக் கேள்வியும் அவனிடமிருந்து வராது.

இன்று அதிசயமாகக் கேட்டால் அவளும் தான் என்ன சொல்வாள்?

கணவனிடமிருந்து அவள் எதிர்பார்ப்பதும் இது போல் சின்னக் கரிசனையான வார்த்தைகளைத்தான்.

இன்று அவன் சொல்லாமலே அவனின் பசி உணர்ந்து உணவை கொடுத்த மனைவியின் மீது திடீர் கரிசனம் வந்ததால் அவளால் அந்தக் கேள்வியைத் தான் கேட்க முடிந்தது.

“இதென்ன பெரிய விஷயமா? கேட்க மறந்திருப்பேன். அதான் இப்ப கேட்குறேன்ல? சொல்லு!” என்றான்.

“ம்ம், சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டு வாங்க. நான் தூங்க போறேன்…” என்றாள்.

“இரு, நான் வந்ததும் போகலாம்…” என்றான்.

“எனக்குத் தூக்கம் வருது…”

“ஒரு பைவ் மினிட்ஸ் தானே?” என்றவன் வேகமாக உண்ண ஆரம்பித்தான்.

“விக்கிக்கப் போகுது. மெதுவா சாப்பிடுங்க…” என்றவள் அவனின் எதிரே அமர்ந்து கொண்டவள் கையால் கன்னத்தைத் தாங்கினாள்.

அவன் உண்டு முடிக்கும் போது அப்படியே தூங்கி வழிய ஆரம்பித்திருந்தாள்.

அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே உண்டு முடித்தான்.

அவள் முகத்தைப் பார்க்க பார்க்க, ஏனோ காலையிலிருந்து இருந்த டென்ஷன் எல்லாம் வடிவது போல் இருந்தது.

‘இவகிட்ட என்னவோ இருக்கோ?’ என்று நினைத்துக் கொண்டே கையைக் கழுவி விட்டு வந்தான்.

அவள் எழுந்து சென்றதை கூட உணராமல் அமர்ந்து கொண்டே தூங்கி கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

திரும்பி வந்தவன் இடையில் கை கொடுத்து அவளை அப்படியே தூக்கினான் சூர்யா.

“ஆஆ…” என்று பதறி எழுந்தாள் யுவஸ்ரீ.

“ஏய் பொண்டாட்டி, நான் தான். எதுக்குக் கத்துற?”

“உங்களை யாரு இப்ப என்னைத் தூக்க சொன்னது?” என்று கேட்டவள் அவனை விட்டு விலகி படுக்கையறைக்குள் சென்றாள்.

“என்னடி இது அநியாயமா இருக்கு? பொண்டாட்டி நமக்காக முழிச்சிருந்து சாப்பாடு போட்டுட்டு தூங்கி வழியிறாளேன்னு பாவமேன்னு தூக்கினா உள்ளே ஓடுற?” என்று அவளின் பின்னால் சென்று அறையின் கதவை தாழிட்டான்.

அதற்குள் படுக்கையில் சென்று படுத்திருந்தாள் யுவஸ்ரீ.

“திடீர்னு ரொம்பத் தான் கரிசனை. பேசாம தூங்குங்க…” என்றவள் அவனுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டாள்.

“என்னடி மூஞ்சை திருப்புற? இப்படி வா!” என்று அவள் இடையில் கையைப் போட்டு தன் பக்கம் திருப்பினான்.

“ஆஆ… கையை எடுங்க…” என்று பதறி அவனிடமிருந்து விலகினாள்.

“ஏய், என்னாச்சு? எதுக்குக் கத்துற? பக்கத்தில் வா. ஒன்னும் செய்யலை. கட்டிக்கிட்டு தூங்கணும். அதுக்குத்தான் கூப்பிட்டேன்…” என்றவன் விடிவிளக்கின் ஒளியில் அவள் முகம் பார்க்க, ஏதோ வலியை அனுபவித்துக் கொண்டிருப்பது போல் உதடுகளை அழுத்தமாகக் கடித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன? என்னாச்சு இடுப்பில்?” என்று அவளைத் தன் புறம் திருப்பினான்.

“ஒன்னுமில்லை, விடுங்க…” என்று மீண்டும் திரும்பிப் படுக்க முயன்றாள்.

“யுவா… என்னன்னு சொல்லு…” என்றவனைக் கூர்ந்து பார்த்தாள்.

“என்ன?”

“இன்னைக்கு ஏதாவது போதி மரத்தை பார்த்துட்டு வந்தீங்களா?”

“நான் என்ன கேட்டால்…?”

“உங்க பேச்சு என்னைக் கேட்க வைக்குது…”

“சுத்தி வளைக்காம சொல்லு. டயர்டா இருக்கு. தூங்கணும்…” என்றான்.

“என்னைக்கும் இல்லாம சாப்பிட்டியான்னு கேட்குறீங்க. யுவான்னு பேர் சொல்லி கூப்பிடுறீங்க. அதிசயமா நடந்தால் நான் இப்படித்தான் கேட்க முடியும்…” என்றாள்.

“நான் பேர் சொல்லி கூப்பிடுவது புதுசா?” மெல்லிய அதிர்வுடன் கேட்டான்.

“பின்ன? நீங்களே யோசித்துப் பாருங்க. என்னைக்கு என்னைப் பெயர் சொல்லி கூப்பிட்டுருக்கீங்க?” என அவனிடமே கேட்டாள்.

யோசித்துப் பார்த்தான். பொண்டாட்டி என்று தான் பெரும்பாலும் அழைப்பான். இல்லையென்றால் பெயர் சொல்லாமல் மொட்டையாகத்தான் பேசுவான்.

அதெல்லாம் பெரிய விஷயமாகவே அவனுக்குத் தெரியவில்லை.

இப்போதும் கூட அதனால் என்ன என்று தான் தோன்றியது.

“சரி, அதை விடு! ஏன் கத்தின?” என்று கேட்டான்.

“அதான் ஒன்னுமில்லைன்னு சொன்னேன்ல…” என்றதும், அவனுக்குக் கோபம் வந்தது.

“நீ சொல்ல மாட்ட? நானே பார்த்துக்கிறேன்…” என்று அவளின் நைட்டியை உயர்த்தினான்.

“ம்ப்ச்… கையை எடுங்க…” வேகமாக அவனின் கையைத் தட்டி விட்டாள்.

“இதுக்குத்தான் நைட்டி போடாதே சொல்றேன்…” என்று கடிந்து கொண்டவன், அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் நைட்டியை விலக்கிப் பார்த்தான்.

ஆனால் அவள் பாவாடை கட்டியிருக்க இடையில் ஒன்றும் தெரியவில்லை. கேள்வியுடன் அவளின் பாவாடையை நெகிழ்த்திப் பார்க்க, “ஸ்ஸ், ஆஆ…” முனங்கினாள்.

அப்போது தான் இடையில் இருந்த காயம் கண்ணில் பட்டது.

இடையின் தோளை அறுத்து விரலில் பாதி அளவு நீளத்தில் வெள்ளையாகச் சதை தெரிந்தது.

“ஏய் பொண்டாட்டி, ஏன் இப்படி இருக்கு?” என்று கேட்டான் சூர்யா.

“செய்தவருக்குத் தெரியாதா? இந்தக் காயம் எப்படி வந்ததுன்னு?” என்று கேட்டாள்.

“என்ன நானா? நான் என்ன செய்தேன்?”

முதல் நாள் இரவில் குடிபோதையில் பாவாடையை நெகிழ்த்தி விடுகிறேன் என்று முயல, ஆனால் கயிறு முடிச்சு விழுந்ததில் நெகிழ்ந்த முடியவில்லை என்ற கோபத்தில் வெக்கென்று இழுத்திருந்தான். அது அவளின் இடையில் அறுத்து விட்டிருந்தது.

அதை அவனிடம் அவள் சொல்ல, அவனின் முகம் மாறியது.

“ஹோ, ஸாரி… மருந்து போடு…” என்றான் சிறுத்துப் போன குரலில்.

“ஏற்கனவே போட்டுட்டேன். நீங்க தூங்குங்க…” என்று சொல்லிவிட்டு உடையைச் சரி செய்து விட்டு அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்து விட்டாள்.

அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒருவித உறுத்தல்.

காயம் ஏற்படும் அளவில் முரட்டுத்தனமாக நடந்திருக்கிறோம். இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

திரும்பக் குடித்து விட்டு வந்தால் அவனின் கவனம் எல்லாம் காணாமல் போய் விடும் என்று அவனுக்குப் புரியவே இல்லை.