7 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 7
பச்சை பசேல் என்றிருந்த புல்வெளிகளும், சுற்றிலும் கண்ணிற்குக் குளிர்ச்சியாகத் தெரிந்த காட்சிகளும் மனதின் புழுக்கத்தைப் போக்குவதாக இருந்தது.
மனதிற்கு இதம் சேர்த்த அந்தக் கிராமத்தின் பசுமையைக் கண்குளிர பார்த்தாள் சக்தி.
அந்தப் பசுமையில் மனம் அமைதியடைய முயன்றாலும் மனதின் ஓரத்தில் ஒரு முணுமுணுப்பு அவளைச் சற்று இறுகத்தான் வைத்தது.
ஏனோ எல்லாமே தன் கட்டுப்பாட்டை மீறிப் போவதாக ஒரு எண்ணமும், தான் நினைத்து வந்த காரியத்தை எப்படிச் செயல்படுத்துவது என்ற யோசனையும் அந்த முணுமுணுப்பிற்குக் காரணமாக அமைந்து போனது.
“இந்தா சக்தி, இந்த இளநியைக் குடி…” என்று அப்போது தான் பறித்த இளநியை மனைவியிடம் நீட்டினான் சர்வேஸ்வரன்.
வாங்கி அமைதியாக அவள் பருக, “டேஸ்ட் எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“ம்ம், ஓகே…” என்று மட்டும் சொல்லிவிட்டு முழுதாகப் பருகி முடித்தாள்.
“நம்ம ஊர் காய் ரொம்ப நல்லா இருக்கும் சக்தி. இங்கே இருந்து வெளியூருக்கு ஏற்றுமதியும் பண்றோம்…” என்றான்.
“இதெல்லாம் தெரிஞ்சி நான் என்ன பண்ண போறேன்?” என்றாள் அலட்சியமாக.
“தெரிஞ்சி வச்சுக்கணும்…” என்றான் அழுத்தமாக.
“ம்ப்ச்…” என்று அவள் சலிப்பாக உச்சு கொட்ட, “சக்தி…” என்று அழுத்தமாக அழைத்தான் சர்வேஸ்வரன்.
“நம்ம வாழ்க்கையில் எல்லா விஷயமும் நம்ம விருப்பப்படி மட்டுமே நடக்காது சக்தி. நம்மை மீறிய விஷயங்கள் சிலதும் நடக்கத்தான் செய்யும்…” என்றான்.
“நம்ம கல்யாணம் மாதிரி…” என்றாள் பட்டென்று.
“என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிற சக்தி. நம்ம கல்யாணம் வேணும்னா அவசரகதியில் நடந்திருக்கலாம். ஆனா நம்ம வாழ்க்கையில் நடக்க வேண்டியது தான் நடந்திருக்கு…” என்றான்.
உதட்டை லேசாகச் சுழித்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள் சக்தி.
அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவன் மேலும் ஏதோ சொல்ல வர, அப்போது அவர்களுக்குப் பின்னால் அரவம் கேட்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.
அவர்கள் வயலில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.
மீனாம்பிகை சக்தியை வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்ல, அதற்குக் கோபமாக ஏதோ சொல்ல முயன்றாள் சக்தி.
ஆனால் அவள் பேசும் முன் சர்வேஸ்வரனே சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டான்.
“சக்தி வீட்டுப் பொறுப்பைப் பார்ப்பாள்மா. ஆனா இன்னைக்கு இல்லை…” என்றான்.
“வேற என்னைக்கு?” மீனாம்பிகை கேட்க,
“இன்னும் ஒரு நாலு நாள் பிறகுமா…”
“அதுவரைக்கும் உம்ம பொஞ்சாதி என்ன செய்யப் போறா?”
“என் கூட வயலுக்கு வரட்டும். நம்ம நிலபுலன் எல்லாம் பார்த்து தெரிஞ்சிக்கட்டும். வீட்டுப் பொறுப்பை இப்போ கையில் எடுத்தா அப்புறம் அதை எல்லாம் தெரிஞ்சிக்க முடியாது. இப்பவே சக்திக்கு எல்லாம் காட்டிடுறேன். அப்பத்தான் அவளுக்கும் விவரம் புரியும்…” என்று ஏதேதோ சொல்லி அன்னையைச் சமாளித்தவன் தன்னுடனே வயலுக்கு அழைத்து வந்திருந்தான்.
சக்தியும் வீட்டிற்குள்ளயே அடைந்து கிடைப்பதற்கு வெளிக்காற்றைச் சுவாசிப்போம் என்று நினைத்து அவனுடன் வந்துவிட்டாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அரவம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க வேலையாள் ஒருவர் நின்றிருந்தார்.
“என்ன நாச்சியப்பா?” என்று விசாரித்தான்.
“அய்யா, மோட்டார் ஏதோ மக்கர் பண்ணுது. நானும் ஏதேதோ செய்து பார்த்துட்டேன். ஒன்னும் வழிக்கு வரலை. இன்னைக்கு மேக்காலத் தண்ணி பாய்ச்சணும். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலைங்கய்யா. அதான் உங்ககிட்ட சொல்லிப் போடலாம்னு வந்தேன்…” என்றார்.
“அப்படியா? சரி, நீங்க போங்க வர்றேன்…” என்றவன் எழுந்தான்.
“நான் போய் அதை என்னன்னு பார்த்துட்டு வர்றேன் சக்தி. அதுவரை இங்க இருக்கியா?” என்று கேட்டான்.
“இருக்கேன்…” என்று சொல்லவும் மோட்டார் அறையை நோக்கி சென்றான்.
சக்தி தனியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்க, அப்போது அவளின் அலைபேசி அழைத்தது.
பிரேம் அழைத்துக் கொண்டிருந்தான்.
அழைப்பை உடனே ஏற்றவளுக்குச் சிக்னல் கிடைக்காமல் போக எழுந்து நடந்து கொண்டே பேச ஆரம்பித்தாள்.
“என்ன பிரேம் எப்படி இருக்க? அத்தை, மாமா எப்படி இருக்காங்க? அப்பா எப்படி இருக்கார்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
“நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம் சக்தி. நீ எப்படி இருக்க? இரண்டு நாளா நீ போனே போடலையே?” என்று கேட்டான்.
“அப்பாகிட்ட பேசினேனே பிரேம்…” என்றாள்.
“உங்க அப்பாகிட்ட பேசினா போதுமா? இந்த அத்தான்கிட்ட பேச வேணாமா?” என்று சீண்டினான்.
அவனின் தாய் தந்தையை அவள் அத்தை, மாமா என்று அழைப்பதால் அவன் தன்னை அத்தான் என்று அழைக்கச் சொல்லி சீண்டுவதும், சக்தி அதற்கு எகுறுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று தான்.
“போடா சொத்தான். அத்தானாம் அத்தான். பல்லைத் தட்டி கையில் கொடுத்துடுவேன் பார்த்துக்கோ…” என்றாள்.
“ஈஈஈ… இதோ பல்லை காட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். எங்கே தட்டுப் பார்க்கலாம்…” என்று சவால் விட்டான்.
“நான் பக்கத்தில் இல்லாத தைரியம். அதான் உனக்குக் குளிர்விட்டுப் போயிருச்சு…” என்று பல்லைக் கடித்தாள்.
“இல்லையா பின்ன? இப்ப நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? குட்டிச் சாத்தான் போலக் கூட இருந்தே கொடஞ்சிட்டே இருக்கும் நீ இப்ப என் பக்கத்தில் இல்லாம நான் அப்படியே ஃப்ரீபேர்ட்டா இருக்கேன்…” என்று மேலும் அவளைக் கடுப்படித்தான்.
“மகனே நேரில் வந்தேன்னு வச்சுக்கோ உன் கல்யாணத்துக்குப் பொக்கை வாய் கிழவனாத்தான் பொண்ணு பார்க்க போவ…” என்றாள்.
“அடிப்பாவி!” என்று அலறினான் பிரேம்.
“ஏற்கனவே என்னைத் தலையைப் பிச்சுக்க வைப்ப. அதில் பாதி முடியை காணோம்னு தேடிட்டு இருக்கேன். இப்போ பல்லும் போச்சுனா எனக்குக் கல்யாணமே நடக்காதே…” என்று சோக கீதம் பாடினான்.
“அப்போ பல்லு வேணும்னா பதவிசா பேசு…” என்று கெத்தாக மொழிந்தாள் சக்தி.
“அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே சக்தி?” விளையாட்டுப் பேச்சை முடித்துக் கொண்டு தீவிரமாகக் கேட்டான் பிரேம்.
“பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை பிரேம்…” என்றாள்.
“அவளை ஏன் அப்படியே விட்டுட்டு வந்தன்னு சொல்லி இங்கே அம்மா ஒரே திட்டு. சக்தி தான் போகச் சொன்னாள்னு சொன்னா, அவள் அப்படித்தான் சொல்லுவா. உனக்கு எங்க போச்சு புத்தி? அப்படி இப்படின்னு சொல்லி என்னை ஒரு வழி ஆக்கிட்டாங்க… என்றான்.
“நான் அத்தைக்கிட்ட பேசுறேன்…”
“ம்ம், அவங்களுக்கு ஏற்கனவே நாம அந்த ஊருக்குப் போனது பிடிக்கலை. அங்கிளுக்காகத்தான் அமைதியா இருந்தாங்க. இப்போ நீ அந்த ஊர் நாட்டாமையையே கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு தெரிஞ்சதும் இனி என்ன ஆகுமோன்னு அவங்களுக்குப் பயம்…”
“தேவையில்லாத பயம்னு சொல்லு பிரேம். சர்வேஸ் பார்க்கத்தான் முரடு. ஆனா அவர் குணம் அப்படி இல்லை. இங்கே எல்லாம் நான் சமாளிச்சுப்பேன்…” என்றாள்.
“நீ என்ன தான் சொன்னாலும் எனக்கும் கூடப் பயமாத்தான் இருக்கு சக்தி. உன்னைப் பத்தி அந்த ஊருக்கு முழு விவரமும் தெரியவரும் போது என்னாகுமோன்னு எனக்கு இப்பவே குலை நடுங்குது…” என்றவனின் குரலே நடுக்கத்தைப் பிரதிபலித்தது.
“ம்ப்ச், பயந்து சாகாதே பிரேம். எல்லாரும் மனுஷங்க தான். அதோட நம்ம மேலே எந்தத் தப்பும் இல்லைங்கும் போது எதுக்குப் பயந்து சாகணும் சொல்லு?” என்று கேட்டாள்.
“நம்ம மேலே தப்பு இல்லைன்னு நாம சொல்லிக்கிட்டா மட்டும் போதுமா? அந்த ஊர்காரங்களும் அப்படி நினைக்கணுமே? அதோட சர்வேஸுக்கே எல்லாம் தெரிய வரும் போது உன் வாழ்க்கையிலும் கூடப் பிரச்சனை வரலாம்…” என்றான்.
“சர்வேஸுக்கு எல்லாம் தெரியும்ன்னு தான் நினைக்கிறேன்…”
“என்ன சொல்ற சக்தி, தெரியுமா?” என்று அதிர்ந்து கேட்டான் பிரேம்.
“ம்ம், தெரிஞ்சே தான் கல்யாணம் பண்ணிருக்கார். அதான் ஏன்னு தெரியலை…” என்றாள்.
“அதுதான் உங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொன்னியே. ஏற்கனவே சட்டப்படி மனைவி ஆகிட்ட. இப்போ தாலி கட்டுவது தப்பு இல்லைன்னு நினைச்சுருப்பார். ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை சக்தி.
சர்வேஸ் இங்கே இருக்கும் போது நீங்க இரண்டு பேரும் லவ் செய்தீங்கன்னு தெரியும். அடுத்து உங்க அப்பாக்கிட்ட லவ் விஷயத்தைச் சொல்லணும் தானே சொல்லிட்டு இருந்தீங்க? அந்த நேரத்தில் தான் ட்ரைனிங் போனேன். நான் போன பிறகு என்ன நடந்தது? எதுக்கு உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தீங்க? அப்படி என்ன அவசரம்?” என்று கேள்விகளை அடுக்கினான்.
‘என்ன அவசரம்?’ என்று நினைத்தவளுக்குப் பழையது எல்லாம் ஞாபகம் வந்தது.
அவனிடம் மெல்லிய குரலில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள்.
“இவ்வளவு நடந்துருச்சா? ஆனா அந்த நேரத்தில் நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்…” என்றான் பிரேம்.
“ம்ம், அப்போ அப்பா மேல தான் தப்புன்னு தப்பா நினைச்சுட்டேன்…” என்று வருத்தமாகச் சொன்னாள் சக்தி.
“எல்லாம் காதல் படுத்தும் பாடு. சர்வேஸூக்கு அப்போ இருந்த கோபம் எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டதுன்னு தான் நினைக்கிறேன். அதான் நீ யாருன்னு தெரிஞ்சும் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கார். அதனால் நாம கவலைப்படத் தேவையில்லை…” என்றான்.
“சர்வேஸுக்கு என் மேல இன்னும் காதலும் இருக்கலாம். என்னை விட்டுவிடக் கூடாதுன்னு கல்யாணமும் பண்ணிருக்கலாம் பிரேம். ஆனா இனி தான் நாம கவலைப்பட்டே தீரணும். ஏன்னா நான் இந்த ஊருக்கு வந்த விஷயத்தில் அவங்க அப்பாவோட கௌரவமும் அடங்கி இருக்கு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர் விட்டுக் கொடுத்துவிட மாட்டார். நான் ரொம்பவே போராட வேண்டியது இருக்கும்…” என்றாள் சக்தி.
“என்ன சக்தி இப்படிச் சொல்ற?” என்று பிரேம் கவலையாகக் கேட்க,
“நடக்கப் போறதை சொல்றேன். அதோட அவரோட அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை. இன்னொரு பக்கம் ஊர்காரங்க? எல்லோரையும் சமாளிக்கணும்…” என்றாள்.
“அதை நினைச்சாத்தான் எனக்குக் கவலையா இருக்கு சக்தி. ஒவ்வொருத்தரும் கெடா மீசைகாரங்களா இருக்காங்க…” என்று அவன் லேசான பயத்துடன் சொல்ல,
“அடேய்!” என்று பல்லைக் கடித்த சக்தி, “விட்டா நீ என்னையும் நடுங்க வைப்ப. பயந்தாங்கொள்ளி பக்கோடா. போனை வைடா…” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
பிரேமிடம் பேசிக் கொண்டே வரப்பில் நடந்து கொண்டிருந்த சக்தி, அப்போது தான் சுற்றிலும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
“இப்பத்தான் நாட்டாமைம்மா கண்ணுக்கு லட்சணமா இருக்கீங்க. அந்தக் குழாய் போட்டு பார்க்க சகிக்கலை. இனி எப்பவும் இப்படியே இருங்க…” வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு மூதாட்டி சக்தியை சேலையில் பார்த்து சொல்லியவர், கையை மடக்கி நெற்றியில் வைத்து நெட்டி முறித்தார்.
அவர் சொன்னதும் தன்னையே குனிந்து பார்த்து கொண்டாள் சக்தி.
கணவன் கண்டிஷன் போட்டுதற்காக என்று இல்லாமல், தன்னை இந்த ஊரார் கண்ணியமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன் உடையை மாற்றிக் கொண்டாள்.
ஊர்மக்களின் பார்வையில் இனி தான் ஒரு சதவீதம் கூடக் குறைந்து விடக் கூடாது என்ற முனைப்பு அவளிடம் இருந்தது.
சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளக் காரணகாரணிகளோடு நடந்து கொள்வது தப்பில்லை என்பது அவளின் எண்ணமாகி போனது.
“என்ன சேலை கட்டி என்ன ஆத்தா புண்ணியம்? நம்ம நாட்டாமை இருக்குற அழகுக்கு நாட்டாமை பொண்டாட்டியோட அழகு கொஞ்சோண்டு மட்டுத்தேன். அவரு எப்படி வாட்ட சாட்டமா இருக்காரு. ஆனா இவுக என்னமோ சாப்பாட்டையே காணாதவக கணக்கா நோஞ்சான் மாதிரியில்ல இருக்காக…” என்று ஒரு இளவட்ட பெண் மெதுவாக முணுமுணுத்தாள்.
“ஏய், நாக்கு மேல பல்ல போட்டு பேசாதடி சிறுக்கி. நாட்டாமை காதில் விழுந்தா நாக்கை அறுத்துப் போட போறார். அவர் பொஞ்சாதியை எப்படித் தேத்தணும்னு அவருக்குத் தெரியாதா என்ன? நீ வாயை மூடிகிட்டு கிட…” என்று அவளை அதட்டினார் அந்த மூதாட்டி.
அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டாலும் அனைத்தும் சக்தியின் காதில் விழத்தான் செய்தது.
அந்தப் பெண் ஏதோ பொறாமையில் பேசுகிறாள் என்று அவளின் பேச்சிலேயே புரிய, சக்திக்குப் புன்னகை தான் வந்தது.
‘நாட்டாமை அய்யா இந்த ஊர் மன்மத ராசா போல இருக்கு…’ என்று கணவனைப் பற்றிக் கேலியாக நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.
முன்பு அமர்ந்திருந்த மரத்தடிக்கு இன்னும் அவளின் கணவன் வந்திருக்கவில்லை.
தனியாக உட்கார்ந்திருக்கவும் பிடிக்காமல் மெல்ல மோட்டார் அறைப்பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
அங்கே மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் சர்வேஸ்வரனை காணவில்லை.
மோட்டார் அறையைச் சுற்றி வர, அங்கே வயலில் நின்றிருந்தவனை வியப்புடன் பார்த்தாள்.
காலையில் போல் தலையில் முண்டாசு கட்டி, இடுப்பு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மேலே சட்டையில்லாமல் உள்பனியனுடன் மம்பட்டியை கையில் வைத்துக் கொண்டு வரப்பை வெட்டி தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.
சக்தி வந்ததைக் கவனித்தவன், “அப்படி அந்தக் கல்லில் உட்கார் சக்தி. இந்த வரப்பை மட்டும் வெட்டி விட்டுட்டு வர்றேன்…” என்று சொன்னவன் மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.
அவன் சுட்டிக் காட்டிய கிணற்றடியில் கிடந்த கல்லில் அமர்ந்த சக்தி, இன்னும் அவனை வியப்பாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காலையிலும் எந்தப் பந்தாவும் இல்லாமல் பசுக் கன்றை ஈன்ற உதவி கொண்டிருந்தான். இப்போது வயல் வேலை.
மம்பட்டியை ஓரமாக வைத்துவிட்டு, வாய்க்காலில் கைகால் கழுவிவிட்டு அங்கே வந்த சர்வேஸ்வரன், “என்ன சக்தி அப்படிப் பார்க்கிற?” என்று கேட்டான்.
அவனின் தலை முதல் கால் வரை பார்வையால் வருடியவள், “பக்கா கிராமத்தானா மாறிட்டீங்க போல இருக்கு?” என்று கேட்டாள்.
“மாறுவதா? நான் எப்பவும் கிராமத்தான் தான். கொஞ்ச நாளா பட்டணத்துக்காரனா வேஷம் போட்டேன்னு வேணும்னா சொல்லலாம். எப்பவும் இதுதான் நிரந்தரம்…” என்று தன்னைச் சுட்டிக் காட்டி சொன்னவன், அவளின் அருகில் அமர்ந்தான்.
அதுவே சிறிய கல் தான். அதில் அவனும் அமர, இருவரும் இடித்துக் கொண்டு அமர வேண்டியது இருக்க, சக்தி எழுந்து கொள்ளப் போனாள்.
ஆனால் அவளை எழ விடாமல் தடுத்தவன், “உனக்கு ஞாபகம் இருக்கா சக்தி? நாம இரண்டு பேரும் ஒரே சேரில் உட்கார்ந்து இருக்கோம். நாம காதலிச்சிட்டு இருந்தப்ப நீ என் மடியில் எந்தத் தயக்கமும் இல்லாம உட்காருவ. ஆனா இப்போ எல்லா உரிமையும் இருந்தும் தள்ளிப் போற… ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டான்.
அவன் சொன்னதும் சக்திக்கும் பழையது எல்லாம் ஞாபகம் வந்தது. ஏற்கனவே பிரேமிடம் பேசியதில் அந்த நினைவுகள் அவளின் மனதை சுற்றி வந்து அவளைச் சுழன்றடித்துக் கொண்டிருந்தது.
சர்வேஸ்வரன் ஒரு பட்டதாரியாக, தன் காதலனாக, தங்கள் காதலுக்காகத் தன்னிடமே சண்டை போட்டவனாக என்று அவளின் கண் முன்னால் வலம் வந்தான்.
அவனின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனைத் தான் மறுதலித்த கணங்களும் வந்து போக, சக்தி அந்த நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்தாள்.