8 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த பெயர் பெற்ற கணினி தொழிற்நுட்ப அலுவலகம் அது.
காலைவேளையிலேயே முக்கால்வாசி அலுவலகத்தினரின் வருகையால் அந்த அலுவலகம் நிரம்பி வழிந்தது.
பலர் கணினியை வெறித்த வண்ணம் வேலையைச் செய்து கொண்டிருக்க, சிலர் மீட்டிங் என்று மீட்டிங் அறையில் கொலு வீற்றிருக்க, சிலர் கேண்டினை நோக்கி படையெடுத்த வண்ணமும் இருந்தனர்.
அவர்களில் ஒருவனாகச் சர்வேஸ்வரன் கணினியை இயக்கி தன் அன்றைய வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
அப்போது மேஜையின் மீதிருந்த அவனின் அலைபேசி அழைக்க, யார் என்று எடுத்துப் பார்த்தவனின் அதரங்கள் புன்னகையில் விரிந்தன.
“ஹலோ குட்மார்னிங் சக்தியாரே. என்ன இன்னைக்கு ஆபிஸுக்கு மட்டம் போட்டுட்டியா? காலையில் நான் பேசும் போது கூட இன்னைக்கு லீவ்னு சொல்லலையே…” என்று கேட்டான்.
“லீவ் போட்டால் தானே சொல்ல முடியும் ஈஸ்வர்?” என்று அந்தப் பக்கமிருந்து கேட்டாள் சக்தி.
“என்ன ஆபிஸுக்கு வந்திருக்கியா? உன் சீட் காலியா இருக்கே?” என்று கண்ணெட்டும் தூரத்தில் இருந்த அவளின் இருக்கையைப் பார்த்துக் கொண்டே சந்தேகமாகக் கேட்டான்.
“நான் இங்கே ஆபிஸ் பார்க்ல இருக்கேன். இங்க கொஞ்சம் வர முடியுமா ஈஸ்வர்?” என்று கேட்டாள்.
“உன் சீட்டுக்கு வராம அங்கே என்ன பண்ற சக்தி?”
“ஏன் சொன்னால் தான் வருவீங்களா ஈஸ்வர்?” என்று கேட்டவளின் குரலில் லேசான சிணுங்கல் தெரிய, அவனின் புன்னகை விரிந்தது.
“இதோ வர்றேன் சக்தி…” என்று இருக்கையை விட்டு எழுந்தான்.
“சீக்கிரம் வாங்க. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு…” என்று சொல்லிவிட்டு அழைப்பை வைத்தாள் சக்தி.
ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியும், சர்வேஸ்வரனும் ஆறு மாதங்களாகக் காதலித்துக் கொண்டிருந்தனர்.
அனுதினமும் அவர்களின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
சக்தியைத் தேடி சர்வேஸ்வரன் அலுவலகத்துடன் இணைந்திருந்த பூங்காவிற்குச் செல்ல, அங்கே அவன் எதிர்பார்க்காத வண்ணம் பரிசு தான் காத்திருந்தது.
எப்போதும் ஜீன்ஸ், டீசர்ட், சல்வார், டாப், லக்கின்ஸ் என்று வளைய வரும் சக்தி முதல் முறையாக அவனின் முன் சேலை கட்டிய பதுமையாக நின்று கொண்டிருந்தாள்.
ஆசையாகச் சேலை கட்டிவிட்டு வந்துவிட்டாலும் சரியாக இருக்கிறதா? எங்கேயும் நழுவுகிறதா? என்று நினைத்த வண்ணம் அவஸ்தையாகச் சேலையைச் சரி செய்து கொண்டிருந்த சக்தி, சர்வேஸ்வரனை கண்டதும் லேசான வெட்கத்துடன் அவனை எதிர்கொண்டாள்.
சர்வேஸ்வரனோ அவளைச் சேலையில் எழிலுடன் பார்த்துக் கண்ணில் வழிந்த மயக்கத்துடன் அவளின் அருகில் வந்தான்.
“வாவ்! என் சக்தியாரா இது?” என்று ஆச்சரியமாக வாயைப் பிளந்து அவளைப் பார்த்தான்.
“சேலையில் எப்படி இருக்கேன் ஈஸ்வர்?” என்று முகம் விகசிக்கக் கேட்டாள் சக்தி.
“சொன்னா அடிப்ப சக்தி…” என்று கண்ணில் குறும்பு கூத்தாட சொன்னான்.
“ம்ப்ச், சும்மா சொல்லுங்க ஈஸ்வர். எனக்குச் சேலை எப்படி இருக்குன்னு தெரியாம படபடப்பா இருக்கு…” என்று சிணுங்கினாள் சக்தி.
“உன்னை அப்படியே மொத்தமா அள்ளிக்கணும் போல இருக்கு சக்தி. அவ்வளவு அழகா இருக்க…” என்றவன் மெல்ல அவளை நெருங்கி தோளின் மீது கையைப் போட்டு அவளின் காதின் அருகில் குனிந்தவன் “என்ன அள்ளிக்கட்டுமா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
“ம்ம்… அள்ளுவீங்க… அள்ளுவீங்க… தள்ளிப் போங்க. ஏற்கனவே சேலை எங்கே நழுவி விழுந்துடுமோன்னு பயந்துட்டே இருக்கேன். இதில் நீங்க வேற மேல கையைப் போட்டு நழுவ வச்சுடுவீங்க போல…” என்று அவனை விட்டு விலகி நின்றாள்.
“இது அநியாயம் சக்தியாரே. கண்ணையே கலங்கடிக்கிற மாதிரி அலங்காரமா வந்திட்டுக் கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கையும் பார்க்கணும்னா எப்படி?” என்று கேட்டான்.
“அது அப்படித்தான்” என்றவள் அவனைத் தொட அனுமதிக்கவே இல்லை.
அன்று முழுவதும் அவனைச் சுத்தலில் விட, மாலை வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்த பிறகும் சர்வேஸ்வரனுக்குப் பொறுமையாகப் போக முடியவில்லை.
இருவரும் வேலை முடிந்ததும் வழக்கமாகச் சந்தித்துக் கொள்ளும் காஃபி ஷாப் செல்லாமல் இந்த முறை அவளை வெளியே சந்திக்க ஆசை கொண்டான்.
வழக்கமாக இருவரும் ஒரே பைக்கில் காஃபி ஷாப் சென்று சற்று நேரம் பேசிவிட்டு மீண்டும் சக்தியின் ஸ்கூட்டியை எடுக்க அலுவலகம் வந்து விடுவர்.
இப்போதும் தன் பைக்கை எடுத்த சர்வேஸ்வரன் அவளைப் பின்னால் அமர சொன்னான்.
சேலை கட்டியதால் இரண்டு பக்கமும் கால் போட முடியாமல் ஒரு பக்கமாகப் போட்டு அமர்ந்தவள் அசகவுரியமாக உணர்ந்தாள்.
“கீழே விழுந்துடுவேனோன்னு பயமா இருக்கு ஈஸ்வர். ஒருபக்கமா உட்கார கஷ்டமா இருக்கு…” என்றாள்.
“என்னைப் பிடிச்சுக்கோ சக்தி. விழ மாட்ட. நான் மெதுவாகவே போறேன்…” என்றான்.
அவனின் தோளை பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்ததும் வண்டியை எடுத்தான்.
வண்டி நகர ஆரம்பித்ததுமே சரியாகப் பிடிமானம் இல்லாமல் தடுமாறியவள் சட்டென்று அவனின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டுப் பிடித்துக் கொண்டாள்.
காலையிலிருந்து அவளின் அருகாமைக்குத் தவித்துப் போயிருந்தவனுக்கோ ஜிவ்வென்று இருக்க, உணர்வுகளால் தாக்கப்பட்டவனாக வண்டியைப் பறக்க விட்டான்.
பைக் அவர்கள் வழக்கமாகச் செல்லும் காஃபி ஷாப்பையும் தாண்டி செல்ல, “கடையைத் தாண்டி போறீங்க ஈஸ்வர்…” என்றாள் சக்தி.
“இன்னைக்கு உன்னை நான் வேற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன் சக்தியாரே. வெயிட் அன்ட் சீ…” என்றான்.
சற்று நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் வர, அதற்குள் வண்டியை விட்டான்.
அந்தக் கட்டிடத்தின் பெயரை பார்த்ததுமே தாங்கள் எங்கே வந்திருக்கிறோம் என்பது புரிந்துவிட, வண்டியை விட்டு இறங்கியதும் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
“என்ன சக்தியாரே நெற்றிக்கண்ணைத் திறக்குறீங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“இப்ப எதுக்கு என்னை உங்க பிளாட்க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க ஈஸ்வர்? தனியா கூட்டிட்டுப் போய் ஜல்சா பண்ணவா?” என்று கேட்டாள்.
“நோ, நோ… ஜல்சா மட்டுமில்லை. உன்னை மொத்தமாக அபேஸ் பண்ண பிளான் போட்டுத்தான் இங்கே தள்ளிட்டு வந்திருக்கிறேன்…” என்று வில்லன் போலச் சொல்லி குறும்பாகக் கண்சிமிட்டினான்.
“என்னது?” என்று அதிர்ந்தவள், “தொலைச்சுப்புடுவேன்! என்னைக் கொண்டு போய் ஆபிஸில் விடுங்க…” என்றாள் மிரட்டலாக.
“ஓஹோ! அப்படியா? எப்படித் தொலைக்கிறன்னு பார்ப்போம். வா…” என்று அவள் மிரட்ட நீட்டிய விரலை பிடித்து மடக்கி அவளை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றான்.
“ம்ப்ச்… விளையாடாதீங்க ஈஸ்வர். நான் கிளம்புறேன்…” என்று அவனிடமிருந்து தன் விரலை விடுவிக்க முயன்றாள்.
அவள் குரலில் இருந்த பேதமே அவள் சீரியஸாகச் சொல்கிறாள் என்பது புரிய “சக்தி…” என்று சற்று அதட்டலாக அழைத்துத் தன் முகம் பார்க்க வைத்தவன், “உனக்குக் களங்கம் வரவைக்கும் எந்தக் காரியத்தையும் நான் பண்ண மாட்டேன். என்னை நம்புவதாக இருந்தால் உள்ளே வா…” என்றான்.
அவனின் குரலில் இருந்த அழுத்தத்தை விட அவன் கண்கள் காட்டிய உண்மை அவளை மறுபேச்சுப் பேசாமல் அவனுடன் நடக்க வைத்தது.
இரண்டாவது மாடியில் அவன் வாடகைக்குத் தங்கியிருக்கும் பிளாட் இருக்க, இருவரும் மின்தூக்கியில் அந்தத் தளம் சென்று அவனின் பிளாட்டிற்குச் சென்றனர்.
தன் வீட்டின் கதவை திறந்தவன் “ஒரு நிமிஷம் இங்கேயே இரு. இதோ வந்துடுறேன்…” என்று வேகமாக உள்ளே சென்றான்.
திரும்பி வந்தவன் கையில் குங்குமம் இருந்தது.
“முதல் முதலா நீ சேலை கட்டியிருக்கும் போது இங்கே உன்னைக் கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு. உன்னை ஆரத்தி எடுத்தே வரவேற்க ஆசை தான். ஆனா அதுக்கு நேரமில்லை. இப்ப இதை மட்டும் வச்சுக்கோ…” என்றவன் அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டான்.
அவனின் வரவேற்பில் சக்தியின் மனம் நெகிழ, கண்களோ காதலில் பளபளத்தன.
“இப்ப உள்ளே வாங்க சக்தியாரே…” என்று அவளின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
உள்ளே சென்று கதவைத் தாழ் போட்டதும் “நீ போய்ச் சோஃபாவில் உட்கார் சக்தி. உனக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்…” என்றான்.
ஆனால் அவனை நகர விடாமல் தடுத்த சக்தி, அவனின் பின்பக்கமாக அணைத்து நின்று முதுகில் முகம் புதைத்தவள், “ஐ லவ் யூ ஈஸ்வர்…” என்றாள்.
காதலியவளின் காதலில் மட்டுமல்லாது கையணைப்பிலும் கட்டுண்டவன், அப்படியே அவளை முன்னால் இழுத்து தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து அணைத்துக் கொண்டான்.
அணைப்பில் அடங்கியவளின் அருகாமையில் காலையிலிருந்து ததும்பி நின்ற ஆர்வம் தலை தூக்க, மெல்ல அவளின் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தான்.
வீட்டிற்குள் வர மாட்டேன் என்று அடம்பிடித்தவளோ அவனின் வரவேற்பில் மனம் நெகிழ்ந்து போனவள், மற்றதை மறந்து அவனுக்குள் கட்டுண்டு இருந்தாள்.
அவளின் நிலை இன்னும் அவனை மயக்க, “சக்தி…” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
“ம்ம்…” என்று அவள் அவன் முகம் பார்க்க,
“ஒன்னே ஒன்னு மட்டும் ப்ளீஸ்…” என்றான்.
‘என்ன?’ என்று அவள் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளின் இதழ் நோக்கி குனிந்தவன் தன் அதரங்களால் முற்றுகையிட ஆரம்பித்தான்.
இதழ்கள் இணைந்து இன்பத்தில் லயித்துக் கொள்ள, அவனின் கைகளோ அவளின் சேலை தாண்டி இடை சருமத்தை அழுத்தி கொடுத்தது.
சில நொடிகளுக்குப் பிறகு அவளை விட்டு பிரிந்தவன், “இதுக்கு மேலே போனா நான் கெட்டப் பையனா மாறச் சான்ஸ் இருக்கு. நீ அங்கே போய் உட்கார், வர்றேன்…” என்று கரகரத்த குரலில் சொன்னவன், அவளை விட்டு விலகி சமையலறைக்குள் விரைந்து சென்றுவிட்டான்.
“மட்டி, அவனை முறைச்சுக்கிட்டே உள்ளே வந்துட்டு, இப்ப என்னென்ன பண்ணி வச்சுருக்கேன்…” என்று தன்னையே திட்டிக் கொண்டு அவன் ஸ்பரிசித்த இதழ்களை இதமாகக் கடித்துக் கொண்டாள் சக்தி.
“என்ன சக்தி இன்னும் அங்கேயே நின்னுட்டு இருக்க? இந்தா இதைக் குடி. லெமன் ஜூஸ் தான் போட்டேன். உனக்குப் பிடிச்ச மாதிரி லைட் சுகரோட…” என்றவன் அவளின் மனநிலை புரிந்தாலும் இலகுவாகச் சூழ்நிலையை மாற்றி ஜூஸை கையில் கொடுத்தான்.
பின் சோஃபாவில் அமர்ந்து வேறு பேசி முற்றிலும் அவளின் தயக்கத்தை மாற்ற, சக்தியும் இலகுவாகப் பேச ஆரம்பித்தாள்.
“நம்ம காதலை பத்தி வீட்டில் சீக்கிரம் பேசலாம்னு இருக்கேன் சக்தி. ஆறுமாதமாகக் காதலர்களா மட்டும் இருந்துட்டோம். சீக்கிரம் தம்பதிகளாக மாறணும்னு ஆசையா இருக்கு…” என்று அவளின் உதடுகளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
அவனின் பார்வை உணர்ந்து உதட்டை சுளித்தாள்.
“என்ன பேசட்டுமா?” என்று கேட்டான்.
சக்திக்கும் அவன் கணவனாகத் தன் அருகிலிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்பதால் “பேசுங்க ஈஸ்வர். நானும் அப்பாகிட்ட பேசுறேன்…” என்றாள்.
“உங்க அப்பா என்னை மாப்பிள்ளையா ஏத்துக்குவார் தானே?” என்று கேட்டான்.
“கண்டிப்பா. அம்மா என்னோட பத்து வயசுலேயே இறந்த பிறகு எனக்காகவே வாழ்றவர். இதுவரைக்கும் எனக்குப் பிடித்ததை மறுக்காம கொடுத்தவர். உங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னா கண்டிப்பா மறுக்க மாட்டார்…” என்று பெருமையாகவே சொன்னாள்.
“அப்போ உன் சைட் ஓகே. என் சைட்டும் ஓரளவு ஓகே தான்…” என்றான்.
“ஓரளவா? என்ன ஈஸ்வர் இப்படிச் சொல்றீங்க?” என்று கவலையுடன் கேட்டாள்.
“ஹேய் கவலைப்படாதே சக்தி. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னு உறுதியை மட்டும் என்னால் கொடுக்க முடியும் சக்தி. அப்பா ரொம்ப நல்லவர். அவரே ஊரில் காதல் கல்யாணம் எல்லாம் பண்ணி வச்சுருக்கார். என்ன நாங்க நாட்டாமை குடும்பம் என்பதால் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருக்கலாம்…” என்றான்.
“அப்போ உங்க அப்பா, அம்மாவை சம்மதிக்க வைப்பது கஷ்டமா?” என்று கேட்டாள்.
“அப்படின்னு இல்லை சக்தி. உன்கிட்ட தான் முன்னாடியே சொல்லியிருக்கேனே? அப்பா எங்க ஊர் நாட்டாமை. அதனால் கட்டுப்பாடுகளும் அதிகம். ஊருக்கு நம்ம தான் முன்னுதாரணமா இருக்கணும்னு நினைப்பார். அவ்வளவு தான்…” என்றான்.
“நாட்டாமைனா என்ன ஈஸ்வர், இந்தக் காலத்திலுமா மரத்தடியில் உட்கார்ந்து தீர்ப்பு சொல்லிட்டு இருக்கார்?” என்று கேட்டவளின் குரலில் இருந்தது நிச்சயம் கேலியே தான்.
“நீ கேலி செய்தாலும் அதுதான் உண்மை சக்தியாரே…” என்றவனை நம்பமுடியாமல் பார்த்தாள்.
“எங்க ஊரிலேயும், செல்போன், கம்ப்யூட்டர், பட்டதாரிகள்னு நாகரீகம் கொஞ்ச கொஞ்சமா வளர்ந்துட்டு தான் இருக்கு சக்தி. ஆனா ஊர் கட்டுப்பாடுகளில் மட்டும் எந்த மாற்றமும் வர விட மாட்டோம். எங்க ஊருக்குன்னு சில நடைமுறைகளை மாற விடாம பாதுகாத்துட்டு வர்றோம்.
அதில் முதன்மையான இடம் உண்டுனா, அது நாட்டாமை, தப்பு செய்தால் விசாரித்துத் தண்டனை கொடுப்பதுன்னு இருப்பது தான். இதில் எந்தக் காம்ப்ரமைஸும் நாங்க செய்து கொள்வது இல்லை…” என்றான்.
“நாங்கன்னா? இதில் நீங்களும் அடக்கமா?” என்று கேட்டாள்.
“கண்டிப்பா நானும் தான். அதில் என்ன உனக்குச் சந்தேகம்?” என்று கேட்டான்.
“என்ன ஈஸ்வர் இது? இவ்வளவு படிச்சிருக்கீங்க, பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறீங்க. அப்படி இருந்தும் இன்னும் எப்படி இந்தப் பழமையான விஷயமெல்லாம் கடைபிடிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“படிச்சா பழமையை மறந்திடணும்னு இருக்கா என்ன? பட்டதாரி ஆனாலும் பழமைக்கு இன்னும் நாங்க மதிப்புக் கொடுக்கிறோம் சக்தி. ஊர் விதிக்கிற கட்டுப்பாடுகளை மீறி நாங்க நடந்துக்க மாட்டோம். ஒரு நிதர்சனம் என்ன தெரியுமா? எங்க ஊருக்கு அப்பாவுக்கு அப்புறம் நான் தான் நாட்டாமை…” என்றவனை நம்ப முடியாமல் விழி விரித்துப் பார்த்தாள்.
“என்ன சொல்றீங்க ஈஸ்வர்? அப்போ உங்க படிப்பு, வேலை?” என்று கேட்டாள்.
“படிப்பு அறிவை வளர்த்துக்க. இந்த வேலை என் ஆசைக்கு சக்தி. அப்பா, அம்மாவுக்கு இப்படி நான் தனியா வந்து வேலை பார்ப்பதில் விருப்பமில்லை. ஏன்னா எங்களுக்கே மில்லு, நிலம்னு நிறைய இருக்கு. அதைத்தான் பார்த்துக்கச் சொன்னாங்க.
ஆனா படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு திரும்ப வந்துடுறேன்னு சொல்லி, அப்பாவையும், அம்மாவையும் சமாளிச்சுட்டு வேலைக்கு வந்திருக்கேன்.
வந்த இடத்தில் தான் இந்தத் தேவதையைப் பார்த்தேன். திரும்ப எங்க ஊரில் செட்டில் ஆகும் போது இந்தத் தேவதையையும் கொத்திட்டுப் போயிடுவேன்…” என்று சொன்னவன் அவளின் கன்னத்தை இதமாக ஒற்றை விரலால் வருடினான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட சக்தியோ யோசனையில் மூழ்கினாள்.
அவன் தந்தை நாட்டாமை என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான். ஆனால் இதற்கு முன் இவ்வளவு விரிவாகப் பேசியது இல்லை. அதிலும் அவன் ஊரிலேயே செட்டில் ஆகிவிடுவான் என்பது அவளுக்குப் புதிய செய்தி.
“என்ன சக்தி, பட்டிக்காட்டில் வந்து எப்படி வாழ்வதுன்னு யோசிக்கிறீயா?” என்று அவளின் யோசனையான முகம் பார்த்துக் கேட்டான்.
“பட்டிக்காடு, பட்டணம்னு எல்லாம் நான் யோசிச்சது இல்லை ஈஸ்வர். எல்லா ஊரிலேயும் மனுஷங்க தானே வாழ்றாங்க. அது இல்லை பிரச்சனை…” என்றாள்.
“அப்புறம் என்ன பிரச்சனை? நீ வேலை பார்க்க முடியாதுன்னு யோசிக்கிறயா? அது நீ அங்கே வீட்டில் இருந்தே வேலை பார்க்கிற மாதிரி ஏற்பாடு செய்யலாம். இல்லனா இருக்கவே இருக்கு நம்ம மில். அதைப் பார்த்துக்கோ…” என்றான்.
“நீங்களும் என் கூடவே இருந்து நானும் வேலை பார்க்கிறதாக இருந்தால் எனக்குக் கசக்கவா போகுது? உங்க அப்பா, அம்மா தான் என்னை மருமகளா ஏத்துக்குவாங்களான்னு இப்ப கவலையா இருக்கு” என்றவள் கண்கள் லேசாகக் கலங்கித்தான் போனது.
இதற்கே சட்டென்று கலங்கி போகிறவளா இந்தச் சக்தி? அப்போது கிராமத்தில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் துடிப்பான சக்தி?
ஆம்! மெல்லினம் போல் மென்மையானவள் தான் சக்தி. இவர்களின் இந்த உரையாடலுக்குப் பின் வந்த சூழ்நிலையும், சில நிகழ்வுகளுமே அவளை இறுகி போக வைத்து அவளைச் சற்று வன்மையானவளாக மாற வைத்திருந்தது.
சக்தி, சர்வேஸ்வரனின் பெற்றோர் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் சொல்வார்களோ மாட்டார்களோ என்று கவலைப்பட்டாளே தவிர, தன் தந்தையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. அவர் சம்மதம் சொல்லிவிடுவார் என்று உறுதியாக நம்பினாள்.
ஆனால் அவளின் நம்பிக்கை ஆட்டம் காணும் வண்ணம் அவர்களின் திருமணத்திற்கு முதலில் மறுப்பு சொன்னவரே சக்தியின் தந்தை தாமோதரன் தான்.