7 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 7

“இது என்ன நயனிகா?” என்று தன் கையில் இருந்த காகித கற்றைகளை அவள் புறம் நீட்டிக் கேட்டான் கதிர்நிலவன்.

“அசைன்மெண்ட் சார்…” என்ற நயனிகாவின் விழிகள் அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

“நிமிர்ந்து என்னைப் பார் நயனிகா…”

லேசாகத் தலையை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்தாள்.

“உனக்கு என்ன பிரச்சனை நயனிகா?” என்று அவளின் விழிகளை ஊடுருவி பார்த்துக் கேட்டான்.

அவனின் விழிகளைச் சந்திக்காதவள், “ஒரு பிரச்சனையும் இல்லை சார்…” என்றாள்.

“பிரச்சனை இல்லனா இந்த அசைன்மெண்ட்டை ஏன் இப்படி ஏனோ தானோன்னு செய்துட்டு வந்துருக்க? அப்ப வேணும்னே இப்படிச் செய்திருக்கியா?” என்று கண்டிப்புடன் கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்லை சார்…” என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.

“இப்படி எல்லாத்துக்கும் இல்லைன்னு சொன்னால் என்ன அர்த்தம் நயனிகா? உன்னோட போன செமஸ்டர் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன். நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிருக்க. அப்படியே டெவலப் செய்தால் கோல்ட் மெடல் வாங்க கூடச் சான்ஸ் இருக்கு. ஆனா இப்போ உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுறது போல இருக்கு.

கிளாஸ் சரியா கவனிக்க மாட்டீங்கிற. சம் போட சொன்னால் சிலை போல நிற்கிற. இப்போ அசைன்மெண்டை ரொம்ப மோசமா செய்துட்டு வந்துருக்க. இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? படிக்கும் ஆர்வம் போயிருச்சா?” என்று கேட்டான்.

“இல்லை… இல்லை சார். எனக்குப் படிக்கணும் சார். ரொம்ப நல்லா படிக்கணும் சார்…” என்றவளிடம் தெரிந்த பதட்டத்தைக் கேள்வியுடன் பார்த்தான் கதிர்நிலவன்.

“உன் வார்த்தையில் இருக்கும் வேகம் உன் படிப்பில் இல்லையே?” என்றான்.

அதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் தன் விரல்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘இவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னவாக இருக்கும்?’ என்று நினைத்தான்.

அவன் கேள்விப்பட்டவரை அவள் நன்றாகப் படிப்பவள். அவன் இங்கே வேலைக்கு வந்த புதுதில் கூடப் பாடவேளைகளில் சுறுசுறுப்பாக இருந்ததைக் கவனித்திருக்கின்றான். ஆனால் இந்தச் சில நாட்களாக அவளிடம் பெரிதும் மாற்றம்.

வீட்டில் கூட அவள் தம்பியுடன் வாயடிக்கும் சப்தம் அவன் வீடு வரை கேட்கும். ஆனால் இப்போது அவளின் குரலே நலிந்து தான் ஒலிக்கிறது.

அவள் வீட்டிலும் பெரும் அமைதி இருப்பது போல் உணர்ந்திருக்கிறான்.

பிரச்சனை இல்லாமல் இவள் இப்படி இருக்கக் கூடியவள் இல்லை என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன் பானுவிடம் அவள் அழுது கொண்டே பேசுவதைக் கண்டான்.

அது தான் வகுப்பறையில் திட்டியதற்காக இருக்கும் என்று தான் முதலில் நினைத்தான்.

ஆனால் இப்போது வேறு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது.

அசைன்மெண்ட் பேப்பரை டேபிளில் வைத்தவன், “உட்கார் நயனிகா…” என்றான்.

இருவரும் ஸ்டாப் ரூமில் இருந்தனர்.

அதுவரை ஒரு ஆசிரியராக அவளை நிற்க வைத்துக் கேள்வி கேட்டவன் இப்போது எதிரே இருந்த இருக்கையில் அமர சொன்னான்.

அவள் தயக்கத்துடன் அமர, “எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு நயனிகா. தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. என்னால் முடிந்த உதவி செய்றேன். இல்லனா ஒரு லேடி லெக்சரர்கிட்ட பேசுறியா? ஏற்பாடு பண்ணட்டுமா?” என்று தன்மையாகக் கேட்டான்.

எச்சிலை கூட்டி மென்று விழுங்கிய படி அவனைப் பார்த்த நயனிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இது போல் காதல் சொல்லி வந்து தொந்தரவு செய்பவனின் பிரச்சனையில் இவரால் எப்படித் தீர்வு காண முடியும் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

இவரிடம் சொன்னாலும் இவரும் விஷயத்தைத் தன் பெற்றோரிடம் தானே சொல்வார் என்று நினைத்தாள்.

அதுவும் இவரின் வீடு தன் வீடு எதிராகவே இருக்க, அவருக்குத் தன் பெற்றோரிடம் சொல்வது இன்னும் சுலபமாக அல்லவா போகும்.

இப்படி நினைத்தவள் அவனிடம் சொல்லாமல் தவிர்த்தாள்.

“இல்லை சார். எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் தான் கொஞ்சம் படிப்பில் கவன குறைவா இருந்துட்டேன். இனி இப்படி நடக்காது சார்…” என்றவளை நம்பாமல் பார்த்தான்.

அவள் எதையோ மறைக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

சொல்லாமல் அடம் பிடிப்பவளை அதற்கு மேலும் கட்டாயப்படுத்தாமல், “சரி, இனியாவது நல்லா படி. இந்தா, இன்னும் இரண்டு நாள் டைம் தர்றேன். வேற அசைன்மெண்ட் ரெடி பண்ணி கொண்டு வா…” என்று அவளின் அசைன்மெண்ட் பேப்பரை கொடுத்தான்.

“தேங்க்யூ சார்…” என்று பேப்பரை வாங்கிக் கொண்டு நடந்தவளை அவனின் பார்வை தொடர்ந்தது.

அன்று மாலை கதிர்நிலவன் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது நயனிகா சாலையில் ஒரு பையனுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

‘காதல் விவகாரம் போல. அதான் படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதோ?’ என்று நினைத்தபடி அவர்களைக் கடந்து காரை செலுத்தியவன் ஏதோ வித்தியாசமாகத் தோன்ற காரின் வேகத்தைக் குறைத்தான்.

கார் கண்ணாடி வழியாக நயனிகாவை கண்டவனுக்கு அவள் ஏதோ பதட்டத்துடன் நிற்பது போல் தெரிந்தது.

சில நொடிகள் நின்று அவன் கவனித்துக் கொண்டிருக்கும் போதே நயனிகா வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி அவனைக் கடந்து வேகமாகச் சென்றாள்.

அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனின் தோற்றத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

அவனின் தோற்றமும், அவனின் முகபாவமும் நம்பத்தகுந்தவனாகக் கதிர்நிலவனுக்கு நினைக்கத் தோன்றவில்லை.

ஆனாலும் காதலுக்குக் கண் இல்லையோ? என்று நினைத்துக் கொண்டு காரை கிளப்பிச் சென்றான்.

அன்று இரவு தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு மொட்டைமாடியில் நடைப்பயற்சி செய்யச் சென்றான் கதிர்நிலவன்.

அன்று வழக்கத்தை விட அரைமணி நேரத்துக்கு மேலாகவே நடந்து விட்டு மாடியின் ஓரத்தில் நின்றான்.

அப்போது மேலே யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, திரும்பி பார்த்தான்.

நயனிகா தான் இன்று அவள் மட்டுமாக மேலே வந்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் மேலும் அங்கே நின்று கொண்டிருக்காமல் கீழே இறங்கி செல்ல முடிவெடுத்தான்.

அவன் இந்நேரம் கீழே சென்றிருப்பான் என்று நினைத்து மாடியேறி வந்த நயனிகா, இன்னும் அவன் அங்கேயே இருக்கவும் மீண்டும் கீழே சென்று விடலாமா என்று நினைத்து தயங்கி நின்றாள்.

அவளின் தயக்கத்தைப் பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டி சென்றான்.

அவன் படிகளில் இறங்க ஆரம்பிக்கவுமே மாடியில் சுவரோரமாக அமர்ந்து வெடித்து அழ ஆரம்பித்தாள் நயனிகா.

அவளின் குரல் படிகளில் இறங்கி கொண்டிருந்தவனின் காதில் விழ, அவனின் கால்கள் சட்டென்று நின்றன.

தன் அழுகை குரல் ஓங்கி ஒலித்ததை உணர்ந்து சட்டென்று வாயை கையால் மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மீண்டும் மேலே ஏறி வந்த கதிர்நிலவன் கண்டது கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த நயனிகாவை தான்.

அவள் அவன் வந்ததை உணரவே இல்லை.

“நயனிகா…” என்று மெல்ல அழைத்தான்.

அவனின் குரலில் விதிர்த்து தலையை நிமிர்த்திப் பார்த்தவள், வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

“என்ன பிரச்சனை நயனிகா? எதுக்காக இப்படி இங்கே உட்கார்ந்து அழுதுட்டு இருக்க?” என்று கேட்டான்.

அவள் அடக்க முயன்றும் அடங்காமல் அவளையும் மீறி கண்ணீர் வடிந்து கன்னம் தாண்டி வழிந்து கொண்டிருந்தது.

“ஒ… ஒன்னுமில்லை சார்…” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.

“நில் நயனிகா!” என்றான் அதட்டலாக.

அவளின் கால்கள் தயங்கி நின்றன.

“ஒன்னுமில்லாத விஷயத்துக்கு யாரும் இப்படித் தனியா உட்கார்ந்து கதறி அழ மாட்டாங்க. உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு எப்பவோ புரிந்து விட்டது. நீ என் ஸ்டூடெண்ட்டாக இருந்தாலும் ரொம்ப உன் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன்.

ஆனா நீ இப்படி அழுவதைப் பார்த்துட்டு இனியும் என்னால் அமைதியா இருக்க முடியாது. ஒன்னு நீ என்ன விஷயம்னு சொல்றியா? இல்ல நான் நேரா உன் அம்மாகிட்டவே வந்து கேட்கட்டுமா?” என்று கேட்டான்.

“நோ… நோ… சார். அம்மாகிட்ட எதுவும் கேட்காதீங்க…” என்று வேகமாகப் பதறினாள்.

அவளின் பதட்டத்தை யோசனையுடன் பார்த்தான்.

“என்ன காதல் விவகாரமா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டவனை விக்கித்துப் பார்த்தாள்.

“சார்… அது… அது…” என்று அவள் திணற,

“இன்னைக்கு ஒரு பையன் கூட நீ ரோட்டில் நின்னு பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன். அவனைத் தான் லவ் பண்றீயா? என்ன, உங்க காதல் விஷயம் வீட்டில் தெரிந்து பிரச்சனை ஆகிடுச்சா?” என்று கேட்டான்.

அவன் தன்னை அந்த அஷ்வத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான் என்பதில் பதறியவள், அவனை லவ் பண்றீயா என்ற கேள்வியில் கூசிப் போனாள்.

“இல்லை சார்… இல்லவே இல்லை சார். நான் அவனை லவ் பண்ணலை சார்…” என்று பதறி துடித்துப் பதில் சொன்னாள்.

அவளின் பதட்டம் அவனுக்கு விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை உணர்த்த, சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்தான்.

நிலா வெளிச்சத்தில் அவளின் கண்களில் இருந்த ஈரம் பளபளத்துக் கொண்டிருந்தது.

அவளின் உதட்டோரம் வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, அவளின் தொண்டை குழி ஏறி இறங்கி, அவள் அவஸ்தையைக் காட்டிக் கொண்டிருந்தது.

ஈரத்தில் பளபளத்த அவள் விழிகள் ‘என்னை நம்பேன்’ என்பது போல் அவனை ஏறிட்டு இறைஞ்சுதலாகப் பார்க்க, அதனைக் கண்டவன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான்.

“அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாதப்ப எனக்காகவே என்கிட்ட கெஞ்சி நீ எனக்கு உதவி செய்த நன்றிவுணர்வு எனக்கு இன்னும் இருக்கு நயனிகா. நீ ஏதோ இக்கட்டில் மாட்டிக்கிட்டு இருக்கன்னு தெரிஞ்ச பிறகும் இனி என்னால் உன்கிட்ட ஒன்னும் கேட்காம போக முடியாது.

அன்னைக்கு எப்படி எனக்காக நீ யோசிச்சயோ அதே போல இப்ப நான் உனக்காக, உன் நல்லதுக்காகப் பார்க்கிறேன். சொல்லு, உனக்கு என்ன பிரச்சனை? நீ அந்தப் பையனை லவ் பண்ணலைனா அவன்கிட்ட எதுக்கு நின்னு பேசிட்டு இருந்த?” என்று தன்மையாகக் கேட்டான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு பேச தயாரானாள்.

“நான் சொல்றேன் சார். ஆனா நீங்க இதை என் வீட்டில் மட்டும் சொல்லிடாதீங்க சார்…” என்று இறைஞ்சுதலாகக் கேட்டவள், அஷ்வத் முதல் நாள் கல்லூரியில் கலாட்டா செய்ய ஆரம்பித்ததில் இருந்து இப்போது நடந்தது வரை சொன்னாள்.

“முதல் நாளே கத்தியை காட்டி மிரட்டியவன், இப்போ நாளைக்கு நான் அவன்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லலைனா கொன்னுருவேன்னு மிரட்டுறான் சார். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை…” என்று முடித்தாள்.

அவள் சொன்னதை எல்லாம் கேட்டு முகம் இறுக நின்றவன், “இவ்வளவு நாள் ஏன் விஷயத்தை மூடி மறைச்ச நயனிகா? முதல் நாளே உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே? நீ பெத்தவங்ககிட்டயே மறச்சது தானே அவனுக்கு உன்னை மிரட்ட வசதியா போயிருச்சு…” என்று கடுப்புடன் கேட்டான்.

“இல்ல சார், அப்பாகிட்ட சொன்னா படிக்க அனுப்ப மாட்டார்னு பயமா இருக்கு சார். அதனால் தான் சார்…” என்று அவள் தயங்கி நிறுத்த…

“அவர் அப்படித்தான் சொல்வார்னு உனக்கு என்ன நிச்சயம்?” என்றவன் குரலில் இருந்தது எரிச்சல் மட்டுமே.

அவளால் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தாலும் பரவாயில்லை. அவளால் முடியவில்லை என்னும் போது தன் பெற்றவர்களிடம் சொல்லி அவர்களின் நிழலில் பிரச்சனையைச் சரி செய்தால் தான் என்ன? அதை விட்டு இப்படிக் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறாளே என்று தான் அவனுக்குத் தோன்றியது.

“அப்பா ரொம்ப ஸ்ரிக்ட் சார். அதான்…” என்று அவனின் எரிச்சலில் கலங்கிய கண்களுடன் திணறினாள்.

“அதுக்காக இப்படித் தனியா இங்கே வந்து அழுதால் பிரச்சனை தீர்ந்துடுமா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லும் வகையறியாமல் நின்றிருந்தாள்.

“சரி, இப்ப என்ன செய்யலாம்னு இருக்க? அவன் கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கலாம்னு யோசிச்சியா?” என்று கேட்டான்.

“தெரியலை சார். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியவே இல்லை சார். பயமா இருக்கு சார். என்னை அவன் பண்ற டார்ச்சர்ல தான் என்னால் சரியா படிக்கவே முடியலை. வீட்டில் சொல்லவும் பயமா இருக்கு…” என்றாள்.

தலையைத் தன் இடது கையால் அழுந்த கோதிக் கொண்டவன் யோசனையுடன் மெல்ல நடை பயின்றான்.

பின் நின்று அவளிடம் சில விவரங்களைக் கேட்டறிந்தான்.

“ஓகே, நான் சொல்ற மாதிரி செய்!” என்று சொன்னவன், அவள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கினான்.

“சரி சார், சரி சார்…” என்று அவள் தலையை அசைத்தாலும் சிறு தயக்கமும் அவளிடம் இருப்பதை உணர்ந்தான்.

“வேற வழி இல்லை நயனிகா. பேசி புரிந்து கொள்பவன் என்றால் நானே வந்து பேசி பார்ப்பேன். ஆனா அவனோட கேரக்டர் முரட்டுத்தனமா தெரியுது. அதுக்கு ஏத்த மாதிரி தான் நாமளும் செயல்பட்டாகணும்…” என்று சொல்ல, புரிந்து கொண்ட பாவனையில் தலையை அசைத்தாள்.

“உணர்ச்சி வசப்பட்டு எதுவும் அவன்கிட்ட பேசாதே. ஆனா அவனைப் பேச வைய். என்ன சரியா?” என்று கேட்டான்.

“சரி சார்…” என்றாள்.

“ஓகே, கவலைப்படாமல் போய்த் தூங்கு…” என்று அவளை அனுப்பினான்.

அவள் கீழே சென்ற சில நொடிகளுக்குப் பிறகு ஒரு போன்கால் செய்தவன், நாளை நடக்கப் போவதை பற்றித் தெளிவாகப் பேசி முடித்து விட்டு கீழே சென்றான்.

மறுநாள் மாலை நயனிகா கல்லூரி விட்டு கிளம்பும் போதே தானும் கிளம்பினான் கதிர்நிலவன்.

அவளை முன்னால் போகச் சொன்னவன், அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தத் தெருவில் நுழைந்ததுமே நயனிகாவின் வண்டியை மடக்கி நிறுத்தினான் அஷ்வத்.

அவர்களிடமிருந்து சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்ட கதிர்நிலவன் தன் கைபேசியை எடுத்தான்.

அஷ்வத் வந்ததும் தனக்கு நயனிகாவை ரகசியமாகப் போன் செய்யச் சொல்லியிருந்தான்.

அவளும் தன் கைபேசியில் அழைக்க, அந்த அழைப்பை ஏற்று அவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான்.

“ஹாய் செல்லக்குட்டி, இன்னைக்கு மாமா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இன்னைக்கு என் செல்லக்குட்டி என்கிட்ட லவ் சொல்ல போற நாள். நான் அப்படியே வானத்தில் பறந்துட்டு இருக்கேன். நீயும் லவ் சொன்னதும் உன்னையும் கூட்டிக்கிட்டு ஜோடியா பறப்பேன். எங்கே மாமாவுக்கு ஐ லவ் யூ சொல்லு…” என்று அஷ்வத் கொஞ்சலாகக் கேட்பது போல் இருந்தாலும் அவன் குரலில் இருந்தது என்னவோ அதிகாரம் மட்டுமே.

“இதோ பார் அஷ்வத் என்னைத் தொந்தரவு பண்ணாதே. எனக்கு உன்னைப் பிடிக்கலை. என்னை விட்டுடு…” என்று கெஞ்சலாகக் கேட்டாள் நயனிகா.

“என்ன பிடிக்கலையா? எங்கே இன்னொரு முறை சொல்லு?” என்று ஆத்திரமாகக் கேட்ட அஷ்வத் கையில் இப்போது கத்தி இருந்தது. அதை அவளுக்கு மட்டும் தெரியும் வண்ணம் ஆட்டிக் கொண்டிருந்தான்.

அவன் கத்தியை எடுத்ததுமே நயனிகாவின் முகம் வெளுத்துப் போனது.

“என்னை ஒன்னும் செய்துடாதே அஷ்வத். இப்படிக் கத்தியை காட்டி லவ் சொல்ல சொல்றீயே… உனக்குக் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?” என்று நயனிகாவின் அழும் குரல் கேட்க, இங்கே கதிர்நிலவன் காரின் ஸ்டேரிங்கை அழுத்திப் பிடித்தான்.

அவனின் முகம் இறுகி கோபத்தை வெளிப்படுத்த தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“செல்லக்குட்டி, செல்லக்குட்டின்னு கொஞ்சுறேன்னு நீ மிஞ்சி பார்க்கிறாயோ? அது இந்த அஷ்வத் கிட்ட நடக்காது. ஒன்னு நீ எனக்கு வேணும். இல்லை உன்னை யாருக்கும் இல்லாம பண்ணிடுவேன். எப்படி வசதி… லவ் சொல்றீயா இல்லையா?” என்று மிரட்டினான்.

நயனிகாவோ அழுத்தமாக இதழ்களை மூடிக் கொண்டு நின்றாள்.

“எங்கே சொல்லு… என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லு. இப்ப நீ சொல்லலைனா நான் என்ன செய்வேன்னு சொல்ல மாட்டேன் செய்து காட்டுவேன்…” என்றவன் விழிகள் குரூரமாகப் பளபளத்தன.

‘சொல்ல மாட்டேன்’ என்பது போல் பிடிவாதமாக நின்றாள் நயனிகா.

“அப்போ நீ சொல்ல மாட்ட? இந்த அஷ்வத் சும்மா கத்தியை காட்டி மிரட்டுறான். ஆனா ஒன்னும் செய்ய மாட்டான்னு நினைச்சுட்ட அப்படித்தானே? ஆனா என்னைப் பத்தி உனக்குச் சரியா தெரியலை.

எனக்குப் பிடிச்ச பொருள் எனக்குக் கிடைக்கலைனா, வேற யாருக்கும் கிடைக்க விட மாட்டேன். உனக்குக் கொடுத்த டயம் முடிஞ்சி போயிருச்சு. இதான் லாஸ்ட் சான்ஸ். ஐ லவ் யூன்னு சொன்னா உன்னைச் செல்லம் கொஞ்சியே தாங்குவேன். மாட்டேன்னு சொன்னன்னு வச்சுக்கோ… ஒரே சொருகுதான். அப்புறம் உன்னை எமதர்மராஜா தான் கொஞ்சுவார்…” என்றான் கடுமையாக.

நயனிகா உள்ளுக்குள் நடுங்கி போய்க் கை கால்கள் வெடவெடக்க நின்றிருந்தாள். அவளின் பின்னால் கதிர்நிலவன் மட்டும் இல்லையென்றால் மயக்கம் போட்டே விழுந்திருப்பாள். அந்த நிலையில் தான் இருந்தாள்.

நடுங்கி போய் நின்றிருந்தாலும் அஷ்வத் கேட்டதற்கு அவள் வாயே திறக்கவில்லை.

அவளை ஆத்திரமாகப் பார்த்த அஷ்வத், “அப்போ லவ் சொல்ல மாட்ட? அப்ப இன்னும் நீ எதுக்குடி உயிரோட இருக்கணும்? செத்து தொலை…” என்று கத்தியவன் அடுத்த நொடி அவளின் வயிற்றை நோக்கி கத்தியை சொருக போனான்.

ஆனால் அடுத்த நொடி அவனின் கை அழுந்த பற்றப்பட்டது.

கத்தியை பிடித்திருந்த அஷ்வத்தின் கையைப் பிடித்துத் தடுத்த கதிர்நிலவன், அதே வேகத்தில் அவனின் கையை முறுக்கி முதுகிற்குப் பின்னால் வளைத்துப் பிடித்துக் கிடுக்கு பிடி போட்டான்.

அதில் கத்தி கீழே விழ, வலியின் வேதனையில் ஆஆ… வென்று கத்தினான் அஷ்வத்.

“யேய், யாருடா நீ? என் கையை விடுடா…” என்று துள்ளினான்.

“உன்னை விடுவதற்கா பிடிச்சேன்? எங்கே ஒரு டயலாக் விட்டயே இப்ப விடு பார்ப்போம். எமதர்மராஜா கொஞ்சுவாரா? இப்ப யாரை எமதர்மராஜா கொஞ்சுவார்னு பார்ப்போம்…” என்றவன் அஷ்வத்தின் கையை இன்னும் முறுக்கினான் கதிர்நிலவன்.

இப்போதும் கதிர்நிலவனின் வலது கை வழக்கம் போல் அவனின் கால்சட்டையின் பைக்குள் தான் இருந்தது. இடது கையால் அஷ்வத்தின் கையை முறுக்கியவன், தன் காலால் அவனின் முழங்காலில் ஒரு எத்து விட்டு அவனை மடங்கி அமர வைத்தான்.

கண்களிலிருந்து கண்ணீர் வடிய, ஒரு நிம்மதியான சிரிப்பை உதட்டில் கசியவிட்டு நன்றி பொங்க கதிர்நிலவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நயனிகா.

அப்போது “சாரி… சாரி கதிர். ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிட்டேன். நீயே மடக்கி பிடிச்சுட்டியா? சார் தான் அந்தக் காதல் மன்னனா? இவனை என்கிட்ட விடு. இனி நான் பார்த்துக்கிறேன். இனி கனவில் கூட எந்தப் பொண்ணோட நினைப்பும் சாருக்கு வராம பார்த்துக்கலாம்…” என்று கண்சிமிட்டி சொல்லிய படி அங்கே வந்தவன் காக்கி உடையில் இருந்தான்.

போலீஸை அங்கே பார்த்ததும் தொடைகள் நடுங்கி, விழிகள் பிதுங்கி போனான் அஷ்வத்.

“வா ஜெகன். இவன் தான் அந்த அஷ்வத். அவன் இந்தப் பொண்ணைக் குத்த வந்த கத்தி கீழே கிடக்கு பார். அவன் இவளை குத்திடுவேன்னு மிரட்டிய ஆதாரம் இதில் இருக்கு…” தன் கைபேசியை அந்த ஜெகனிடம் கொடுத்தவன் அஷ்வத்தையும் அவனிடம் ஒப்படைத்தான்.

“கான்ஸ்டபிள், இந்த அய்யாவை வண்டியில் ஏத்துங்க. அந்தக் கத்தியை எடுத்து வைங்க. நான் என் ஃபிரண்ட்கிட்ட பேசிட்டு வர்றேன்…” என்றான் ஜெகன்.

“அப்புறம் எப்படி இருக்க நண்பா? நேத்து தான் சாருக்கு என் ஞாபகம் வந்தது போல?” என்று கேலியாகக் கேட்டபடி கதிர்நிலவனின் வயிற்றில் லேசாகக் குத்தினான் ஜெகன்.

“என்ன பண்றது ஜெகா, நேத்து நான் போன் போட்டு விஷயத்தைச் சொல்லியும் சினிமால கடைசியில் வரும் போலீஸ் போல லேட்டா தான் வந்து நிற்கிற. அப்படி இருக்கும் போது தினமும் நான் போன் போட்டா பேசுவியா என்ன?” என்று குறும்பாகக் கேட்ட நண்பனிடம் தன் அசடுவழிவதை காட்டிக் கொள்ளாமல் கெத்தாக நின்றான் ஜெகன்.

“சும்மா வாராதேடா கதிர். கிளம்பும் போது கமிஷனர் ஒரு வேலை சொல்லிட்டார். அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்று சமாளித்தான்.

நண்பர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு, அப்போது தான் நயனிகாவின் ஞாபகம் வந்தது போல் அவளின் புறம் திரும்பினர்.

“இவன் என் ஃபிரண்ட் நயனிகா. இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஜெகவீரன்…” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.

“இனி நீ ஒன்னும் பயப்படாதேமா. அவனை நான் பார்த்துக்கிறேன். கவலைப்படாமல் இனி நிம்மதியா படி…” என்றான் ஜெகவீரன்.

“ரொம்ப நன்றி சார்…” என்று கண்ணீர் வழிய நன்றி தெரிவித்தாள்.

“உன் நன்றியை கதிருக்கு சொல்லுமா…” என்றவன் கதிர்நிலவனின் புறம் திரும்பி, “அப்புறம் நண்பா, நான் கிளம்புட்டுமா?” என்று கை குலுக்கக் கையை நீட்டினான்.

கதிர்நிலவன் வழக்கம் போல் தன் இடது கையை நீட்ட, “டேய், உதை வாங்குவ. என்கிட்ட இந்தப் பாகுபாடு கட்டாதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்…” என்று ஜெகவீரன் முறைக்க,

மெல்ல சிரித்துக் கொண்டே தன் வலது கையை வெளியே நீட்டி நண்பனின் கையைப் பற்றிக் குலுக்கினான் கதிர்நிலவன்.

முதல் முறையாகக் கதிர்நிலவனின் வலது கையைக் கண்ட நயனிகாவின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.