7 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 7
மறுநாளில் இருந்து எழுந்து தன் அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் தேன்மலர்.
தான் மனம் உடைந்தே படுத்துக் கிடப்பதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்ற உண்மை உறைக்க, அன்று சோர்ந்து படுத்துக் கிடக்கவில்லை.
தன் அன்னையே கூடத் தான் இப்படிச் சோர்ந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைத்தவள் மனதை தேற்றிக் கொள்ள முயன்றாள்.
வீட்டு வேலைகளை முடித்தவள், தோட்டத்திற்குள் காலை வைத்தாள்.
முதலில் சாமந்தி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள். கை வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் அன்னையைச் சுற்றியே வலம் வந்தது.
தினமும் தாயும், மகளுமாகவே வேலை செய்து பழகிப் போயிருந்தார்கள். இருவரும் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருப்பர். தாயிடம் நன்றாக வாயாடுவாள் தேன்மலர்.
ஆனால் இப்போது பேசாமல் மௌனமாக வேலை பார்ப்பது மனதில் அழுத்தத்தை உண்டாக்கியது.
எதை நினைப்பது? எதை விடுப்பது? என்பது போல் அன்னையின் நினைவுகள் முட்டி மோதி அலைபாய்ந்து கொண்டு வந்தன.
தன் வயலுக்கு வந்த வைரவேல் செல்லும் வழியில் அவள் எழுந்து வேலையை ஆரம்பித்து விட்டதைப் பார்த்துவிட்டுச் சென்றான்.
அவனின் வயலில் அன்று நான்கைந்து பெண்கள் பூக்கள் பறிக்கும் வேலைக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு வேலையைப் பார்த்தனர்.
“நா கூட அந்தப் புள்ளய நல்லவனு நம்பி போட்டேன். ஆனா அவளும் அவ ஆத்தா மாதிரி தேன்னு இப்பல தெரியுது…” என்று ஒரு பெண் இன்னொருவரிடம் சொல்ல,
யாரைப் பற்றியோ புரணி பேசுகிறார்கள் என்பது புரிந்து அவர்களைக் கண்டு கொள்ளாமல் இன்னொரு பாத்தியில் இறங்கி தானும் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தான் வைரவேல்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அப்பெண்மணிகளுக்குப் பின்னால் இருந்த பாத்தியில் அவன் நின்றிருந்ததால் அவன் வந்ததை அவர்கள் கவனிக்காமல் அவர்களின் பேச்சுத் தொடர்ந்தது.
“யாரை சொல்ற கனகா?” இன்னொரு பெண் கேட்க,
“அதுதேன் பக்கத்து தோப்புக்காரி தேனு…” என்றாள் கனகா.
“அந்தப் புள்ளக்கு என்ன? அதுவே ஆத்தாளை இழந்து போட்டு ஒத்தைல கிடக்கு. அவ ஆத்தா இருந்தப்பவும் தான் உண்டு, தன் சோலி உண்டுன்னு இருக்குற புள்ள தானே?” இன்னொரு பெண்ணான சாந்தி கேட்க,
“நீ வேற விவரம் புரியாம பேசாத சாந்தி. ஏற்கனவே அவ குடும்பத்துக்குக் கெட்ட பேரு இருக்குன்னு அவ அடக்கி வாசிக்கிறது போலத்தேன் தெரியும். ஆனா உள்ளுக்குள்ள எம்புட்டு இருக்குன்னு இப்பதானே புரியுது. வயசும் இருவத்தி எட்டுக்கிட்ட இருக்கும். இம்புட்டு வருசம் செண்டும் அவளை எவனும் சீண்டலை.
இனியும் எவனும் சீண்ட மாட்டான்னு அவளுக்கு நல்லா தெரிஞ்சி போயிருச்சு. அதுதேன் வாட்டசாட்டமா எவன் கிடைப்பான்னு அலைஞ்சிட்டு இருந்தவளுக்குப் பொஞ்சாதியை இழந்தவன் கிடைச்சா சும்மா இருப்பாளா? இந்தா அவ ஆத்தா மாதிரி கை வரிசையைக் காட்ட ஆரம்பிச்சுட்டால…” என்றாள் கனகா.
“யாரை வளைச்சுடா?” அதிர்ந்து கேட்டாள் சாந்தி.
“வேற யாரு இந்த வயலுக்காரன் வேலுவை தேன்…” என்று நொடித்துக் கொண்டு சொன்னாள் கனகா.
அவர்கள் யாரை பற்றியோ, எதைப் பற்றியோ பேசிக்கொண்டு போகட்டும் என்று வேலையில் கண்ணாக இருந்த வைரவேலுவின் காதில் தன் பேரை குறிப்பிட்டுச் சொன்னது விழ, பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவன் கைகள் அப்படியே நின்றன.
“அடிப்பாவி! வேலு தம்பியே இப்பத்தேன் பொஞ்சாதியை இழந்து தனிமரமா நிக்கிது. அதைப் போய் இப்படிச் சொல்லிக்கிட்டு இருக்குறவ?” என்று சாந்தி பதற,
“அதே தேன் நானும் சொல்றேன். வேலு பொஞ்சாதி உசுரோட இருந்திருந்தா ஏன் வேற எவளையும் தேடிப் போவுது? பொஞ்சாதி இல்லங்கவும் உடம்பு தெனவெடுத்துச் சுகம் தேடி அலையுது…” என்று கனகா சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த வைரவேலுவின் முகம் கோபத்தில் இறுகிப் போனது.
“அப்படிச் சொல்லாத கனகா, வேலு தம்பி ஏதோ தேனு ஆத்தா காரியத்தைச் செய்ய யாருமில்லைன்னு செய்துச்சு. அதுக்காக நீ இப்படி அந்தத் தம்பி மேல அபாண்டமா பழி போட கூடாது…” என்றாள் சாந்தி.
“அட, எவடி இவ? இன்னும் விவரம் புரியாம இருக்கா? காரியம் செஞ்சா அதோடு விட்டுப்போட்டு போவணும். அதை விட்டுப்போட்டு அடுத்த நாளும் அவ வீட்டுல வேலுக்கு என்ன வேலையாம்?” என்று நக்கலாகக் கேட்டாள்.
“என்ன கனகா சொல்ற? அடுத்த நாளு வேலு அவ வீட்டுக்கு போச்சா?”
“ஆமா, பின்ன நா விசயம் இல்லாம பேசுவேனா? அடுத்த நாளு இருட்டுன பிறகு அவ வீட்டுக்கு போனவன், ரொம்ப நேரம் செண்டு தேன் வெளியே வந்துருக்கான். அதோட விட்டானா? திரும்பச் செத்த நேரத்துல அவ வீட்டுக்கு சோறு கொண்டு போய்க் கொடுத்துருக்கான். இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?”
“இவ்வளவு நடந்துச்சா கனகா?”
“அட, ஆமாங்கிறேன். இவன் பொஞ்சாதியை இழந்தவன், அவ ஆத்தாளை இழந்தவ. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்காகப் போல…” என்று நக்கலாகச் சொல்லி சிரித்துக் கொண்டாள்.
“இப்படியும் நடக்குமா?” சாந்தி வியந்து கேட்க…
“ஏன் நடக்காதுங்கிறேன்? அவ ஆத்தா பக்கத்துத் தோப்புக்காரனை வளைச்சுப் போட்டு தானே அந்த எடத்துக்குகே சொந்தமானா. இப்ப மவக்காரி பக்கத்து தோப்புக்காரன் வேலுவை வளைக்கிறது என்ன பெரிய விஷயமா? ஆத்தா போலத்தானே மவளும் இருப்பா. அதுவும் அவ பரம்பரைய பத்தி நா சொல்லித்தேன் உமக்குத் தெரியணுமா என்ன?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டாள் கனகா.
“அது தெரியும் கனகா. ஆனாலும் அவ அம்மா இம்புட்டு வருசமும் இருக்குற இடம் தெரியாம தானே வாழ்ந்தா? அது போலத்தேன் மவளும் இருப்பான்னு நினைச்சேன். ஆனாலும் இன்னும் கூட எனக்கு நம்பக் கஷ்டமாதேன் இருக்கு…” என்றாள் சாந்தி.
“நா சொல்றது அம்புட்டும் நிசந்தேன் சாந்தி. இல்லனா நேத்து அவன் அவ வூட்டுக்குப் போய்ட்டு வந்தான். உடனே இன்னைக்கு ஆத்தா செத்த துக்கத்தை எல்லாம் சீரணிச்சுட்டு எழுந்து சோலியைப் பார்க்க ஆரம்பிச்சுட்டா பாரு. ஆறுதல் நல்லாவே சொல்லிருப்பான் போலிருக்கு…” என்று கனகா கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் வரப்பில் ஏறி செல்ல ஆரம்பித்தான் வைரவேல்.
அவனின் மனம் தீயாக எரிந்தது. எந்த மாதிரியான அவப்பெயர் எனக்கு? செய்தது சாதாரண உதவி. அதற்கு எப்படிக் கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார்கள். அப்படிப் பெண்சுகம் தேடி அலைகிறவனா நான்? என்று தனக்குத் தானே வேதனையுடன் கேட்டுக் கொண்டான்.
அவனுக்கு வயலில் இருக்கவே பிடிக்கவில்லை. வீட்டிற்குச் சென்று மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து அவளிடம் பேச வேண்டும் போல் இருக்க, வீடு செல்லும் வரப்பில் நடக்க ஆரம்பித்தான்.
“யோவ், இந்தா. நில்லு…” என்று அப்போது அவனை அழைத்தாள் தேன்மலர்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவளின் சத்தம் கேட்டுப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த பெண்களும் திரும்பி பார்த்தனர்.
இரவு அவன் கொடுத்த தூக்குவாளியுடன் வந்தாள் தேன்மலர்.
“இந்தாய்யா ஒ வூட்டு தூக்கு. ரொம்ப நன்றியா…” என்று சொல்லி அவனிடம் தூக்குவாளியை நீட்ட, அதைப் பார்த்துக் கொண்டிருந்த கனகா, சாந்திக்குக் கண் ஜாடை காட்டினாள்.
சாந்தியும், கனகா சொன்னது உண்மைதான் போல என்று அவர்கள் இருவரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னிடம் தூக்குச்சட்டியை நீட்டியவளை வெறித்துப் பார்த்தான் வைரவேல்.
தேன்மலரின் முகத்தில் நன்றிவுணர்வு இருந்ததே தவிர வேறு எந்த உணர்வுகளும் இல்லை.
உடையில் சின்ன அலுங்கல் கூட இல்லை. கண்ணியமாக உடை உடுத்தி அவனின் முன் நின்றிருந்தாள்.
தன்னிடமோ, அவளிடமோ எந்தக் கல்மிஷமும் இல்லை. ஆனால் ஊரார் தங்களைப் பற்றித் தவறான செய்தியை பரப்புகின்றனர். என்ன மனிதர்கள் இவர்கள்? என்று மனதிற்குள் குமைந்து கொண்டான்.
அவனின் அந்தப் பார்வையை வித்தியாசமாகப் பார்த்தாள் தேன்மலர்.
உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டவன், அவள் கொடுத்த தூக்குச்சட்டியை வாங்கிக் கொண்டு, “இனிமே என்னைய எங்கன பார்த்தாலும் எங்கிட்ட பேசாதே!” என்று சொன்னவன் அடுத்த நொடி அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டான்.
“என்னாச்சு இந்தாளுக்கு? ஏன் இப்படிச் சொல்லிப் போட்டு போவது? அந்த ஆளுகிட்ட நா என்னைக்குக் காரணம் இல்லாம பேசியிருக்கேன்?” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே சென்றாள் தேன்மலர்.
நேராக வீட்டிற்குச் சென்ற வைரவேல் தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.
“எய்யா, என்னய்யா… இந்த நேரத்துல வூட்டுக்கு வந்துருக்கீரு?” என்று அப்பத்தா கேட்டது கூட அவனின் காதில் ஏறவில்லை.
“என்னாச்சு இவனுக்கு? இந்த நேரத்துல வூட்டுக்கு வந்ததும் இல்லாம கதவை வேற மூடிக்கிட்டான்?” என்று புலம்பிய அப்பத்தா கதவை தட்டினார்.
“எய்யா வேலு, என்னாச்சுயா?” என்று கதவை தட்டியவருக்குச் சிறிது நேரம் எந்தப் பதிலுமே கிடைக்கவில்லை.
“வேலு…” என்று அப்பத்தா பதறி போய் அழைக்க, கதவை திறந்தான் வைரவேல்.
கையிலிருந்த மனைவியின் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக்கொண்டு கண்கள் சிவக்க பேரன் நின்ற கோலம் அந்த மூதாட்டியை அதிர வைத்தது.
“என்னாச்சு ராசா?” என்று அவனின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவிக்கொண்டு கேட்டார்.
“செத்த நேரம் நா எம் பொஞ்சாதி கூடத் தனியா இருக்கோணும் அப்பத்தா…” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
அவனின் குரல் கலங்கியிருந்தது. அது அவனின் மனகலக்கத்தையும் எடுத்துரைக்க, ‘பேரனுக்கு அவன் பொஞ்சாதி நியாபகம் ரொம்ப வந்துருச்சு போல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டவர்,
“சரிய்யா, இரு. ஆனா வெரசா வந்து போடுய்யா…” என்றார்.
சம்மதமாகத் தலையை அசைத்தவன் மீண்டும் கதவை தாழ் போட்டுக் கொண்டான்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், நெஞ்சோடு அணைத்திருந்த மனைவி குமுதாவின் புகைப்படத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
அப்புகைப்படத்தில் வெள்ளந்தியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் குமுதா.
சிரிப்பை சிந்திய அவளின் உதடுகளை மெதுவாக வருடினான்.
அவனின் நினைவு மனைவியை முதல் முதலாகப் பார்த்த நாளுக்குச் சென்றது.
வைரவேலின் திருமணத்திற்குப் பெண் தேடும் போது அவர்கள் ஊரிலிருந்து இரண்டு ஊரை தள்ளியிருந்த கோவிந்தன் வீட்டுச் சம்பந்தத்தைப் பற்றித் தரகர் மூலம் தெரிய வர, அப்பத்தாவுடன் பெண் பார்க்க சென்றான்.
குமுதாவும் மெல்லிய கரை வைத்த பட்டுடுத்தி அழகு புதுமையாக வந்து நின்றாள்.
குமுதா நல்ல சிவந்த நிறம். ஆனால் அவளின் நிறத்தை விட அவள் முகத்தில் இருந்த சாந்தம் தான் வைரவேலுவை கவர்ந்தது.
அதுவே அவனை உடனே திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைத்தது.
திருமணம் முடிந்த பிறகு குமுதாவின் குணம் எவ்வளவு மென்மையானது என்பதனை அறிந்து கொண்டான்.
அவளுக்கு அதிர்ந்து கூடப் பேச தெரியாதோ என்று அவன் நினைத்தது உண்டு.
அவனை ‘மாமா’ என்று தான் அழைப்பாள். ‘மாமா’ என்று அவள் மென்மையாக அழைக்கும் போதே உருகிப் போவான்.
அவளின் மென்மையும், அழகும், அலட்டிக் கொள்ளாத குணமும் அவனை அவள் மீது பித்துக் கொள்ள வைத்தது.
கண்ணு, ராசாத்தி… என்று விதவிதமாகக் கொஞ்சி மகிழ்வான்.
அதிலும் அவளை ராசாத்தி என்று அழைத்து விட்டால் அவளின் முகம் பூவாக மலர்ந்து விடும்.
அதைப் பார்க்கவே அவள் பெயர் சொல்லி அழைப்பதை விட ராசாத்தி என்று தான் பெரும்பாலும் அழைப்பான்.
திருமணம் முடிந்து அவளுடன் வாழ்ந்த ஒரு மாதத்தில் திகட்ட திகட்ட அவளின் அன்பையும், காதலையும் பெற்றிருக்கின்றான்.
அதே அன்புடனும், காதலுடனும் ஜென்மம் முழுவதும் வாழும் ஆசை கொண்டான்.
ஆனால் அவளின் ஜென்மத்திற்கு அற்ப ஆயுள் தான் என்று அறிந்து அனுபவித்த போது சுக்கல் சுக்கலாக உடைந்தே போனான்.
“எம்மனசு முழுக்க நீ தேன் இருக்க ராசாத்தி. அப்படியிருக்க, நா உன்னைய மறந்து போட்டு இன்னொருத்தி பின்னாடி போயிருவேன்னு பேசுறாக ராசாத்தி. அப்படியா நா பொம்பள சுகத்துக்கு அலையுறவனா தெரியுது? மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு ராசாத்தி.
நீ ஏன்டி என்னைய விட்டுப் போட்டு போன? அதுனால தானே ஒ அப்பன்ல இருந்து புரணி பேசுற சிறுக்கி வரை என்னைய பத்தி பேசுறாக. அந்தப் புள்ள பாவமேனு ஒத்தாசை பண்ணியது தப்பா ராசாத்தி?” என்று புகைப்படத்திலிருந்த மனைவியிடம் கேள்வி கேட்டு அவள் பதில் சொல்ல காத்திருப்பது போல ஒரு நிமிடம் நிறுத்தினான்.
“எமக்குத் தெரியும் ராசாத்தி. நீ அதைத் தப்புன்னு சொல்ல மாட்ட. நீயே இப்போ உசுரோட இருந்திருந்தா, அவளுக்கு ஒத்தாசை பண்ண ஒடியிருப்ப…” என்றவன் வேதனையுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
“இனி அந்தப் புள்ள கூடப் பேசினா தானே அதுக்கும் கெட்ட பேரு, எமக்கும் கெட்ட பேரு? இனி பேச போறது இல்லை. அவளும் எழுந்து சோலியை பார்க்க ஆரம்பிச்சுட்டா. இனி அவளைப் பத்தி நா சும்மா கூட நினைக்க மாட்டேன் ராசாத்தி…” என்றவன் மீண்டும் அவளின் புகைப்படத்தை நெஞ்சோடு வைத்து அழுத்திக்கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
அவன் நெஞ்சில் புதைந்திருந்த குமுதா அதே வெள்ளந்தி சிரிப்புடன் இருந்தாள். ஆனால் இப்போது அவளின் சிரிப்புக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை அவளின் கணவன் உணரவே இல்லை.
அன்று மாலை வேலை முடிந்து ராமரின் வீட்டிற்குச் சென்றாள் கனகா.
“யோவ் ராமரு. காரியத்தைக் கச்சிதமா முடிச்சுப் போட்டு வந்துட்டேன். காசு கொடுயா…” என்று ராமரின் வீட்டிற்குள் சென்று கேட்டாள் கனகா.
“வா கனகா…” என்று அழைத்துக் கொண்டே உள்ளறையிலிருந்து வந்தான் ராமர்.
“என்னய்யா இன்னும் வூருக்கு போன உம் பொஞ்சாதி வரலையா?”
“இன்னும் மூணு நாளு ஆவும். ஆத்தா வூட்டுக்குப் போனாத்தேன் பொம்பளகளுக்கு நாளு, கிழமை போறதே தெரியாதே. சரி, அதை விடு. விசயத்துக்கு வா. நா சொன்னதை எல்லாம் சொல்லிட்டியா?” என்று கேட்டான்.
“சொல்லாம இருப்பேனா? நீ சொன்னது என்ன? அதுக்கும் மேலேயே சொல்லிப் போட்டேன்…” என்றாள் பெருமையாக.
“அந்த வேலு பைய அம்புட்டயும் கேட்டானா?”
“பின்ன அவன் எம் பின்னாடி இருக்குற பாத்தியில இருக்கான்னு தெரிஞ்சே தேன் பேச்சை ஆரம்பிச்சேன். நா பேசுனது எல்லாம் கேட்டு பய முகத்தில ஈ ஆடலை…” என்றாள்.
“அம்புட்டையும் கேட்டுப் போட்டு சும்மாவா இருந்தான்? ஒ கழுத்தை பிடிச்சு வயலை விட்டு வெளியே தள்ளலை?” என்று கேலியாகக் கேட்டான்.
“தள்ள முடியுமா? இந்தக் கனகா யாருன்னு இந்த வூருக்கே தெரியும். புரணி பேசுறத்துக்கு இந்த வூருல இனி எவளாவது பொறந்து தேன் வரணும். என்னைய வெளியே தள்ளுனா, இப்ப நாலு பேருக்குகிட்ட மட்டும் சொன்ன விசயத்தை நா இந்த வூரு பூரா சொல்லிப் போடுவேன்னு பயம் இருக்கும்ல?” என்றாள் நக்கலாக.
“சரிதேன். பய இனி அடக்கி வாசிப்பான்ல?”
“அடக்கியா? எல்லாத்தையும் கேட்டு மூஞ்சை தொங்கப் போட்டுக்கிட்டு பேசாம போனான். இனி அந்தப் புள்ள தேனு பக்கமே திரும்பி பார்க்க கூட யோசிப்பான்னு நினைக்கிறேன்…” என்றாள்.
“அதுதேன் எமக்கு வேணும். இந்தா சோலியை சரியா முடிச்சுப் போட்டு வந்ததுக்குக் காசு…” என்று சட்டை பையில் இருந்து ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கி அவள் தன் ஜாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்ள, அவனின் வக்கிரமான பார்வை அவளைத் தழுவி மீண்டது.
அதைக் கவனித்தாலும் கண்டு கொள்ளாதவள், “ஆமா அந்தப் புள்ள தேனுவ என்ன செய்யப் போற ராமரு?” என்று குரலை தாழ்த்தி ரகசியமாகக் கண்சிமிட்டி கேட்டாள்.
“அதைத் தெரிஞ்சி நீ என்ன செய்யப் போற? ஒ சோலி முடிஞ்சது. எடத்தைக் காலி பண்ணு. இந்த விசயம் இனி வெளியே பேசுனா அந்த வேலு பய மாதிரி நா மூஞ்சை தொங்க போட்டு கம்முன்னு போக மாட்டேன். ஒ மூஞ்சை பேத்துப் போடுவேன் பேத்து…” என்று அவன் சிரித்துக் கொண்டே சொன்னாலும் அவனின் வார்த்தைகளில் குரூரம் தாண்டவமாடியது.
“சரிதேன். எனக்கு எதுக்கு உம் பொல்லாப்பு. நா போய் ஏ சோலி கழுதையைப் பார்க்கிறேன்…” என்று நொடித்துக் கொண்டு அவனின் வீட்டிலிருந்து வெளியேறினாள் கனகா.
“தேனுமலரு… உமக்கு ஒத்தாசை பண்ண ஓடி வரும் ஒருத்தனையும் ஏ வழியிலிருந்து விலக்கியாச்சு. இன்னும் உன்னைய காவ காக்குற நாயி தேன் இருக்கு. அதையும் ஒரு கை பார்த்துப் போட்டு உங்கிட்ட எங் கச்சேரியை வச்சுக்கிறேன்…” என்று வஞ்சனையுடன் சிரித்துக் கொண்டான் ராமர்.