7 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 7

இரவு மணி பதினொன்று.

நிச்சயதார்த்தத்திற்குத் தயாராகியிருந்த கோலத்தில் முகத்தில் இறுக்கத்துடன் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.

சில நொடிகளில் தன் வாழ்வில் எல்லாம் மாறி போனதை இன்னும் அவனால் நம்பக் கூட முடியவில்லை.

பெண்களைக் கண்ணியமாகப் பார்ப்பவன் மீது பாலியல் புகார்.

‘ஹா!’ என்று அலட்சியமாகச் சொல்ல முடியவில்லை.

பெரும் அவமானமாக இருந்தது.

அதுவும் அவனின் பெற்றோரே அவனை நம்பாமல் போனது… அதை விட அவனுக்குப் பெரிய தண்டனை இருக்காது.

ஆம்! பிரபஞ்சனின் பெற்றோர் அவனை நம்பாமல்தான் போயினர்.

போலீஸ் வந்து பிரபஞ்சனை கைது செய்வதாகச் சொன்னதும், அவர்களிடம் தான் அப்படிப்பட்டவன் இல்லை என்று அவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர்கள் காது கொடுத்து கூடக் கேட்கவில்லை.

அவனிடம் படிக்கும் மாணவி புகார் அளித்திருக்கிறாள். அதற்கு உடனே தாங்கள் நடவடிக்கை எடுத்து தீர வேண்டும் என்று உறுதியாக நின்று அவனைக் காவல் நிலையம் அழைத்தனர்.

சற்று நேரத்திற்கு முன் வரை அவன் அருகில் நின்று சிரித்துப் பேசியவள், ஜோடியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டவள், அவனின் விரலில் நாணத்துடன் மோதிரத்தை மாட்டியவள், அவனுக்கு இனிப்பை ஊட்டி விட்டவள் அவனை அருவருப்பாகப் பார்த்த பார்வையில் முதல் முறையாக உள்ளுக்குள் செத்துப் போனான் பிரபஞ்சன்.

நந்திதா அவளின் பெற்றோரிடம் ஓடி விட, அவனுக்காக வாதாடினாள் ராகவர்தினி. ஆனால் அவளின் பேச்சுக் காவல்துறையினரிடம் எடுபடவில்லை.

காவல்துறையினர் டைனிங் ஹாலில் இருந்து பிரபஞ்சனை அழைத்து வந்த போது மண்டபத்திற்குள் பெரும் சலசலப்பு.

நந்திதாவின் குடும்பத்தினர் பிரபஞ்சனின் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

“அய்யோ! எங்க பையன் இப்படிச் செய்வான்னு எங்களுக்குத் தெரியாதுங்க. அவனை நாங்க பத்திரை மாத்து தங்கம்னு நினைச்சோம். ஆனா உள்ளுக்குள் தகரமா இருந்திருக்கானே…” என்று அவனின் அம்மா சத்தம் போட்டு அழுததைக் கேட்டு இரண்டாம் முறையாகச் செத்துப் போனான் பிரபஞ்சன்.

‘என் அம்மாவா? என் அம்மாவா இப்படிப் பேசியது?’ நம்ப முடியாமல் பார்த்தான்.

“அக்கா, இவங்ககிட்ட அப்புறம் பேசலாம். நம்ம பிரபாவை அரெஸ்ட் பண்ண போலீஸ் போனாங்க. முதலில் அதை என்னன்னு பார்ப்போம்…” என்று மாதவன், அவர்களை டைனிங் ஹால் பக்கம் அழைக்க,

“அதைப் பார்த்து என்ன செய்யப் போறோம் மாதவா? இப்படிப் பெண் பித்துப் பிடிச்சுப் போய்ச் சின்னப் பொண்ணுங்க மேலேயே கை வச்சிருக்கானே. இனி அவன் முகத்தில் முழிச்சா கூடப் பாவம்!” என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவனின் தந்தை சுபேசன்.

அதைக் கேட்டவன் உள்ளுக்குள் மூன்றாம் முறை மடிந்து போனான்.

‘அப்பா… அப்பாவும் என்னை நம்பவில்லையா? இது எப்படிச் சாத்தியம்?’ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“அப்பா… அப்பா… அத்தானை போலீஸ் பிடிச்சுட்டு போறாங்க. நீங்களாவது சொல்லுங்கப்பா. அத்தானைப் பத்தி நமக்குத் தெரியாதாப்பா? அவங்களை விடச் சொல்லுங்கபா…” என்று தந்தையிடம் ஓடி ராகவர்தினி முறையிட்டதும், எல்லோரின் பார்வையும் போலீஸூடன் வந்த பிரபஞ்சன் பக்கம் திரும்பியது.

படிக்கும் பிள்ளைகளிடம் போய்த் தவறாக நடந்து கொண்டானே என்று அருவருப்பாக அங்கே இருந்த அவனின் உறவினர்கள் பார்க்க, அந்தப் பார்வையில் அடியோடு உள்ளுக்குள் இறந்து போனான் பிரபஞ்சன்.

அவனை யோசனையுடன் பார்த்த மாதவன் அவன் அருகில் வர போக, “நீங்க இதில் தலையிடாதீங்க. நாமளும் ஒரு பொண்ணு வச்சுருக்கோம்…” என்று அவரின் மனைவி மீரா கையைப் பிடித்து நிறுத்தி வைத்தார்.

“ஏய், என்னடி அத்தான்? வாயை மூடு. சின்னப் பொண்ணுங்க மேல கை வச்சுருக்கான். புரியாம பேசிட்டு இருக்க?” என்று மகளையும் அடக்கினார்.

“அம்மா…” அவள் ஏதோ சொல்ல வர, மீரா அவளைப் பேசவே விடவில்லை.

“ம்ம்… என்ன வேடிக்கை? நட!” என்று பெண் அதிகாரி அதட்ட, தன் பெற்றவர்களை உயிரற்ற பார்வை பார்த்த பிரபஞ்சன் அவர்களுடன் சென்றான்.

“நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை பத்தி தெரிஞ்சது. தப்பிச்சுட்டோம்!” என்ற பெண் வீட்டார் உடனே மண்டபத்தைக் காலி செய்தனர்.

சற்று முன் வரை கலகலவென்று இருந்த கல்யாண மண்டபம் சட்டென்று களையிழந்து போனது.

பிரபஞ்சனை போலீஸ் அழைத்துச் சென்றதும், அழுகையும், புலம்பலும் அங்கே இடம் பெற்றது.

“இவன் இப்படிப் பண்ணிட்டானே. நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலையே. பிள்ளையை அருமை பெருமையா வளர்த்திருக்கோம்னு சந்தோஷப்பட்டேனே. அது பொய்த்து போயிருச்சே…” என்று கஸ்தூரி அழ,

“நம்மை எல்லாம் ஏமாத்தி இருந்திருக்கான் கஸ்தூரி. நம்ம முன்னாடி நல்லவன் போல இருந்தே கழுத்தறுத்திருக்கான். முதலிலேயே தெரிந்திருந்தால் அவனைக் கண்டிச்சு வளர்த்திருப்பேன்…” என்று சுபேசன் புலம்ப,

“இப்ப அழுது புலம்பி என்ன செய்ய, வளர்க்கும் போதே பெண் பிள்ளைகளை இப்படி நாசம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி வளர்த்திருக்கணும்…” என்று உறவினர்கள் குற்றம் சொல்ல, என ஆளுக்கு ஒன்று அவர்கள் பேசிக் கொண்டே போக,

“போதும் நிறுத்துங்க!” என்று ஆவேசமாகக் கத்தினாள் ராகவர்தினி.

“ஏன் அத்தை மத்தவங்களுக்குத்தான் உங்க பிள்ளையைப் பத்தி தெரியாம போயிருச்சு. உங்களுக்குக் கூடவா உங்க பிள்ளை மேலே தப்பு இருக்காதுன்னு தெரியாம போச்சு?” என்று கஸ்தூரியிடம் கோபத்துடன் கேட்டாள்.

“அவனைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சுருக்கேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நம்பினேனே ராகா. ஆனா அவன் என் நம்பிக்கையைச் சாகடிச்சிட்டானே…” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“நிறுத்துங்க அத்தை. நிறுத்துங்க… நம்பிக்கையைச் சாகடித்தது அத்தான் இல்லை. நீங்க தான். அம்மா நம்மை நம்புவாங்கன்னு நினைச்ச அத்தானோட நம்பிக்கையை நீங்க சாகடிச்சுட்டீங்க…” என்று அவள் ஆவேசமாகச் சொல்ல, அவளை விக்கித்துப் பார்த்தார் கஸ்தூரி.

“ஏய், வாயை மூடுடி! அத்தான்… அத்தான்னு சொல்றியே அவன் செய்த தப்புக்கு எல்லாம் சாட்சி இருக்குன்னு அந்தப் போலீஸ் சொன்னதை நீயும் தானே கேட்ட. அதுவும் ஒரு பொண்ணு, அதுவும் பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணு எப்படி இந்த மாதிரி ஒரு பொய்யை சொல்லுவா? இப்ப நாட்டில் இது போல வாத்தியாரே பிள்ளைங்ககிட்ட தப்பா நடந்துகிட்டதாக எத்தனை நியூஸ் பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது பிரபாவும் தப்புப் பண்ணிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?” என்று அவளின் அன்னை மீரா கேட்டார்.

“அதே தான்மா. ஒரு படிக்கிற பொண்ணு எப்படி இந்த மாதிரி வாத்தியார் மேல தப்பு சொல்லுவாள்? உண்மையாக அப்படி நடந்திருக்கப் போய்த் தானே அந்தப் பொண்ணு போலீஸ் வரை போயிருக்கு…” என்றார் கஸ்தூரி.

“யார் என்ன சொன்னாங்கன்னு யோசிக்காம, உங்க பிள்ளை அப்படிச் செய்வாரான்னு முதலில் யோசிக்க அத்தை…” என்றவள், அன்னையின் பக்கம் திரும்பினாள்.

“நீங்க என்ன கேட்டீங்க மா? அத்தான் தப்புப் பண்ணிருக்க மாட்டார்னு என்ன நிச்சயம்னு தானே? அவர் தப்பு பண்ணி இருக்க மாட்டாரென்ற நிச்சயம் தான்மா. எத்தனை முறை அவர் ரூமுக்குத் தனியா போயிருக்கேன். நான் அவரைத் தொட்டு பேசி இருக்கேன்மா. அப்போதுகூட அவர் தான் விலகிப் போவாரே தவிர விளையாட்டுக்கு கூட அவர் என்னைத் தொட்டு பேசியது இல்லை…” என்றாள்.

“நீ சொந்தம். உன் மேல கை வச்சா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு நல்ல பிள்ளை வேஷம் போட்டுருப்பார்…” என்றார் மீரா.

“உங்களுக்கு எல்லாம் எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியாதுமா…” என்று கோபத்துடன் கத்தியவள், சுபேசன் எதிரே போய் நின்றாள்.

“நீங்க கூட உங்க பிள்ளையை நம்பலையா மாமா?” என்று கேட்டாள்.

“உங்க அம்மா சொன்னதே தான்மா. ஒரு பொண்ணு இப்படி ஒரு குற்றம் அவன் மேல சொல்லிருக்காள்னா காரணம் இல்லாமல் இருக்குமாமா? நானும் அவன் எவ்வளவு நல்லவன்னு நம்பினேன். இப்படிச் செய்திருக்கானே… அப்படி என்ன படிக்கிற பொண்ணுங்க மேல மோகம்? இப்ப இந்தக் குடும்பத்தோட மானம், மரியாதை எல்லாம் போயிருச்சே…” என்றார்.

“யாரோ ஒரு பொண்ணு சொன்னதை நம்பிய நீங்க பெத்து வளர்த்த பிள்ளையை நம்பாமல் போயிட்டீங்களே. ச்சே… பாவம் அத்தான். இப்போ போலீஸ் ஸ்டேஷனில் இருப்பார். நீங்க யாரும் நம்பலைனா போங்க. நான் என் அத்தானை நம்புறேன். நான் போய் அவரை வெளியே கொண்டு வர ஏற்பாடு பண்ண போறேன்…” என்று கோபத்துடன் இரைந்தவள், வாசலை நோக்கி நடக்க,

“ஏய் ராகா, என்னடி பண்ற?” என்று அவளின் கையைப் பிடித்து நிறுத்தினார் மீரா.

“என்னை விடுங்கமா. நான் போகணும்…” என்ற ராகவர்தினி தன் கையை விடுவித்துக் கொள்ள முயல,

“உனக்கென்ன பைத்தியமாடி பிடிச்சிருக்கு? பெத்தவங்களே பேசாம இருக்காங்க. நீ ஏன் இந்தக் குதி குதிக்கிற? அதுவும் பொம்பள புள்ள விஷயத்தில் ஜெயிலுக்குப் போயிருக்கான். அவனைப் போய்க் காப்பாற்ற நினைக்கிற?” என்று மகளைத் திட்டினார் மீரா.

“ஏன்னா அத்தான் தப்புச் செய்திருக்க மாட்டார்னு நான் உறுதியாக நம்புகிறேன். தப்பு செய்யாதவர் ஜெயிலில் இருக்கக் கூடாது. அவரை நான் வெளியே கொண்டு வர என்ன செய்யணுமோ எல்லாம் செய்வேன்…” என்று சொன்ன ராகவர்தினி அன்னையின் கைப்பிடியில் இருந்த தன் கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

“ராகா என்கிட்ட அடி தான் வாங்க போற. தேவையில்லாத வேலை செய்யாதே. நைட் பத்து மணி ஆகப்போகுது. இந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் போகத் துடிக்கிற. உன்னை நான் எங்கேயும் விட மாட்டேன்…” என்று மகளின் கையை மீண்டும் பிடித்துக் கொண்ட மீரா கோபமாகக் கத்தினார்.

அன்னையின் வார்த்தைகளைக் காதிலேயே ஏற்றிக் கொள்ளாமல் தன் கையை அவரிடமிருந்து விடுவித்துக் கொள்வதிலேயே இருந்தாள்.

“என்னை விடுங்கமா. நான் போயே ஆகணும்…” என்றாள்.

“நானும் சொல்லிட்டே இருக்கேன். அதென்ன அடம்?” என்று மீரா அவளை அடிக்கப் போக,

“மீரா… அவளை விடு!” என்று அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த மாதவன் அழுத்தமாகச் சொன்னார்.

“என்னங்க, நீங்களாவது இவளை பேசாமல் இருக்கச் சொல்லுங்க…” என்று மீரா கணவனிடம் முறையிட்டார்.

“நீ முதலில் அவளை விடு!” என்றார் மீண்டும் அழுத்தமாக.

“விட்டால் போயிடுவாள்ங்க…”

“போகட்டும் விடு!”

“என்னங்க, நீங்களும்…” என்று மீரா அதிர,

தந்தையை ஆவலாகப் பார்த்தாள் ராகவர்தினி.

“அவளை விடுன்னு சொன்னேன்…” இன்னும் மகளின் கையைப் பற்றியிருந்த மனைவியின் கையைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாகச் சொன்னார்.

கணவனின் அழுத்தத்தில் மனைவியின் கை தன்னால் விலகியது.

“அப்போ நீங்களும் அவள் போலீஸ் ஸ்டேஷன் போகட்டும்னு சொல்றீங்களா?” மீரா கேட்க,

“அவள் மட்டுமில்லை. நானும் கூடப் போறேன்…” என்றார்.

“அப்பா…” என்று ஆர்வமாகத் தந்தையின் அருகில் வந்தாள் ராகவர்தினி.

“என்ன சொல்ற மாதவா? அவன் பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்திருக்கான். பெண் பாவம் பொல்லாதது. அதை அவன் அனுபவிக்கட்டும், விடு…” என்றார் சுபேசன்.

“ஆமா மாதவா. நீ இதில் தலையிடாதே. இனி அவன் எங்க பிள்ளையே இல்லை. பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்தும் அவனுக்கு ஆதரவு தரும் பெத்தவங்க இல்லை நாங்க. அவன் என் முன்னாடி இருந்தால் நானே அவனுக்குத் தண்டனை தருவேன்…” என்றார் கஸ்தூரி.

“அது நம்ம வீட்டு பையன் உண்மையாகத் தப்பு செய்தால் தான் தண்டனை கொடுக்கணும் அக்கா…” என்று மாதவன் சொல்ல,

“அப்ப உன் பொண்ணு போல நீயும் அவன் தப்புப் பண்ணிருக்க மாட்டான்னு நம்புறியா? ஆதாரம் இருக்குனு அந்தப் போலீஸ் சொன்னாங்களே மாதவா?” என்று கேட்டார் கஸ்தூரி.

“நாம இன்னும் அது என்ன ஆதாரம்னு பார்க்கலையேகா? நம்ம பிரபா தப்பு செய்தானா இல்லையான்னு இன்னும் நமக்கு உறுதியா தெரியாது. போலீஸ் தான் அவன் தப்பு செய்துருக்கான்னு சொல்லிருக்கு. முதலில் அது உண்மையான்னு தெரிந்து கொள்வோம். அது உண்மையாக இருந்தால் இனி ஜென்மத்துக்கும் அவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன். என் பொண்ணையும் அவனுக்கு ஆதரவா பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன்…” என்றார் மாதவன்.

‘நாமும் முதலில் அது உண்மையா என்று தெரிந்த பிறகு கோபப்பட்டிருக்கலாமோ?’ என்ற சிந்தனையுடன் தம்பியைப் பார்த்தார் கஸ்தூரி.

காலம் கடந்த சிந்தனை என்று அவருக்குப் புரியாமல் போனது.

பள்ளி படிக்கும் ஒரு மாணவி எப்படித் தவறான புகார் தருவாள்? என்று கேள்வி அவரை மகன் மீது குற்றம் சுமத்த வைக்கப் போதுமானதாக இருந்தது.

போலீஸுடன் செல்லும் போது பிரபஞ்சன் பார்த்த பார்வையைக் கண்டிருந்தால் கூட மகன் தவறு செய்திருக்க மாட்டானோ என்று யோசித்திருப்பார். ஆனால் போலீஸ் சொன்னதை அப்படியே நம்பி மகனை நம்பாமல் போனவருக்கு மகனின் பார்வை எல்லாம் கவனத்தில் படவே இல்லை.

“நீ இரு ராகா, அப்பா போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிச்சுட்டு வர்றேன்…” என்று மாதவன் சொல்ல,

“இல்லப்பா, நானும் கூட வர்றேன். அத்தானை போலீஸ் அழைச்சுட்டு போகும் போது அவர் கண்ணில் உயிர்ப்பே இல்லைபா. ரொம்ப உடைந்து போயிருந்தார். நானும் வந்து பேசினால் அவருக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதோட எனக்கு உடனே அத்தானை பார்க்கணும். நானும் ஒரு பொண்ணு தானே. அத்தான் அப்படிப்பட்டவர் இல்லைன்னு நான் வந்து சொன்னால் போலீஸ் யோசிப்பாங்க…” என்றாள்.

“இந்த நேரத்தில் நீ எதுக்குன்னு யோசிக்கிறேன்…” என்றார் மாதவன்.

“அப்பா, ப்ளீஸ்! நானும் வர்றேனே?” என்று இறைஞ்சுதலாகக் கேட்ட மகளுக்கு அதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாமல் அவளையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் கிளம்பினார் மாதவன்.

“நான் எந்தத் தப்பும் செய்யலைனு பலமுறை சொல்லிட்டேன் மேடம். ஆனால் நீங்க காது கொடுத்தே கேட்க மாட்டீங்கிறீங்க. நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்க மேடம்…” என்று அந்தப் பெண் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

“உன்கிட்ட நான் விசாரிக்கும் போது பதில் சொன்னால் போதும். போ… போய் அங்கே உட்கார்…” என்று அதட்டலாகச் சொன்னவர், தொலைபேசியைக் கையில் எடுத்தார்.

“என் மேல யார் கம்பளைண்ட் கொடுத்தாங்க என்றாவது சொல்லுங்க மேடம்…” என்று கேட்டான்.

“யார் கம்பளைண்ட் கொடுத்தாங்கன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பல பொண்ணுங்க கூட விளையாடியிருக்கியோ?” என்று நக்கலாகக் கேட்டார்.

“நான் யார்கிட்டயும் தப்பா நடந்து கொண்டது இல்லை மேடம்…” என்றான் இறுக்கத்துடன்.

“அப்படியா? இதை என்னை நம்பச் சொல்றியா? நானே ஆதாரத்தை எல்லாமே கண்ணால் கண்டுட்டேன் சாரே. என் காதில் பூ சுத்த நினைக்காதீங்க…” என்று எகத்தாளமாகச் சொன்னவர், ‘போ…’ என்று சைகை காட்டினார்.

“என்ன ஆதாரம் மேடம்? அதையாவது சொல்லுங்க…” என்று கேட்டான்.

“இதோ பார், நீங்க கேட்குற கேள்விக்குப் பதில் சொல்ல நான் இந்த வேலையில் இல்லை. நான் கேட்குற கேள்விக்கு நீ பதில் சொன்னால் போதும். இப்போ போய்ப் பேசாமல் உட்கார். என் வேலையை முடிச்சுட்டு வந்து உன்கிட்ட விசாரணையை வச்சுக்கிறேன்…” என்றார் அழுத்தமாக.

அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை.

யார் இப்படித் தன் மீது புகார் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.

இனி தான் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் அங்கிருந்து இருக்கையில் சென்று அமர்ந்தான் பிரபஞ்சன்.

“ஹலோ சார், நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். நீங்க சொன்ன வாத்தியாரை அரெஸ்ட் பண்ணிட்டேன்…” என்று இன்ஸ்பெக்டர் யாரிடமோ தகவல் சொல்லிக் கொண்டிருக்கக் கூர்ந்து கவனித்தான்.

……………

“இனி தான் விசாரணையை ஆரம்பிக்கணும். உங்க பொண்ணைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. இனி நாங்க பார்த்துக்கிறோம்…” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

யாரிடம் பேசியிருப்பார்? எந்தப் பெண் அது? என்று யோசனையுடன் இருந்த போது, “அத்தான்…” என்றழைத்துக் கொண்டே அங்கே வந்தாள் ராகவர்தினி.

பதினோரு மணி ஆகியிருந்த அந்த நேரத்தில் அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து எழுந்தான்.

“ஏய், நீ ஏன் இங்கே வந்த? இந்த நேரம் மாமா உன்னை எப்படித் தனியா விட்டார்? வீட்டுக்குப் போ…” என்றான் வேகமாக.

“அப்பாவும் வந்திருக்கார் அத்தான்…” என்று பின்னால் திரும்பி பார்த்தாள்.

அவரின் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்து கொண்டிருந்தார் மாதவன்.

அவர் வருவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. பெற்ற தாய், தந்தையே அவனை நம்பவில்லை எனும் போது அவரின் வருகை அவனுக்கு எதிர்பாராததாகத்தான் இருந்தது.

“என்ன நடந்தது பிரபா? போலீஸ் சொன்னது உண்மையா?” என்று கூர்மையுடன் அவனை ஆராய்ந்து கொண்டே கேட்டார்.

“நீங்க கூட என்னை நம்பலையா மாமா? அது சரி, என்னோட அப்பா, அம்மாவே என்னை நம்பலை. உங்ககிட்ட அதை எதிர்பார்த்தது தப்புத்தான்…” என்றான் இறுக்கத்துடன்.

“உன் மேல இன்னும் சிறிது நம்பிக்கை இருப்பதால் தான் இங்கே வந்திருக்கேன் பிரபா…” என்று மாதவன் சொன்னதும், பிரபஞ்சனின் இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.

“ஹலோ, யார் சார் நீங்க? அங்கே என்ன பேச்சு?” என்று இன்ஸ்பெக்டர் சத்தம் போட,

“மேடம் நான் பிரபஞ்சனோட தாய் மாமா. ஒரே ஒரு நிமிஷம் பேசிக்கிறேன் மேடம்…” என்று அனுமதி கேட்டார்.

“இங்கே பேசக் கூடாது…” அவர் அதட்ட,

“இதோ போய்டுறோம் மேடம்…” என்றவர் வேகமாகப் பிரபஞ்சனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

“உன் மேல் யார் கம்பளைண்ட் கொடுத்தது பிரபா?” என்று விசாரித்தார்.

“நான் யார்கிட்டயாவது தவறாக நடந்திருந்தால் தானே மாமா என்னால் யாருன்னு சொல்ல முடியும்?” என்று பிரபஞ்சன் பளிச்சென்று சொல்ல, அதுவே அவனின் மீதான அவரின் நம்பிக்கை அதிகரிக்கப் போதுமானதாக இருந்தது.

“உங்களுக்கு வேண்டாத ஆள் யாராவது இருக்காங்களா அத்தான்? அவங்க கூட இப்படிப் போலி கம்பளைண்ட் கொடுத்திருக்கலாமே?” என்று கேட்டாள் ராகவர்தினி.

“எனக்கு அப்படி யாரும் இல்லை. எனக்கே தெரியாமல் யாரும் இருக்காங்களான்னு கூடத் தெரியலை. எனக்கு ஒன்னும் புரியவே இல்லை ராகா. ஸ்கூல் போனால் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். யார் இப்படி மாட்டி விட்டாங்கன்னு புரியவே இல்லை. நான் இப்ப என்ன செய்யப் போறேன்? என் மேல் விழுந்த பழியை எப்படித் துடைத்தெறிய போறேன்? எனக்குப் புரியவே இல்லை…” என்று உடைந்து போய்ச் சொன்னான் பிரபஞ்சன்.