7 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 7
“என்ன துர்கா, புதுப் புதுப் பழக்கமா இருக்கு? நீ எங்கேயும் விஷேசத்துக்குப் போக மாட்டியே… இப்ப என்ன புதுசா? அதுவும் பக்கத்து வீட்டு ஆள் கூட?” என்று விசமமாகக் கேட்ட வித்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூடப் பிடிக்கவில்லை துர்காவிற்கு.
கேலியாக, ஏதோ செய்யக்கூடாத காரியத்தைச் செய்துவிட்ட பாவனையில் சொன்ன வித்யாவின் குரலே அருவருப்பை ஏற்படுத்தியது என்றால் அவளின் அஷ்டகோணலாக மாறிய முகம் சகிக்க முடியாததாக இருந்தது.
“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு வித்யாக்கா. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்…” அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விலகி வந்தாள் துர்கா.
தனக்குப் பதில் சொல்லாமல் சென்றவளைப் பார்த்து நொடித்துக் கொண்டாள் வித்யா.
“அந்த வித்யா என்னமா கேட்டாள்? எதுக்கு முகத்தை அப்படித் திருப்பிக்கிட்டுப் போறாள்?” கடைக்குச் சென்ற மகள் வீட்டிற்குள் நுழைந்ததும் விசாரித்தார் சபரிநாதன்.
வாசலுக்கு நேராகக் கட்டிலை போட்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களில் மகள் வித்யாவை விட்டு விலகி வந்ததும் அவள் நொடித்துக் கொண்டதை கண்டிருந்தார்.
“நேத்து ஷாலினி வீட்டுக்குப் போனதை பத்தி கேட்டாங்கபா. ஆனா அவங்க கேட்ட விதம் சரியில்லை. அதான் பதில் சொல்லாம எனக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்று அவரிடம் தகவல் தெரிவித்தாள்.
பேசிக் கொண்டே இடுப்பில் இருந்த மகளைத் தந்தையின் அருகில் அமர வைத்து விட்டுச் சமையல் வேலையைச் செய்யச் சென்றாள்.
“அதானே, வம்புக்கு அலையவே யாராவது வந்துருவாங்களே. நீ அதை எல்லாம் காதில் வாங்கிக்காதேமா. இந்த மாதிரி ஆளுங்களுக்காக எல்லாம் நாம ஒதுங்கி வாழ முடியாது…” என்றார்.
“சரிப்பா…” என்றாள் துர்கா.
அவளுக்கும் அதுதான் சரியென்று பட்டது.
அதிலும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் பழகும் ஷாலினியின் நட்பை எல்லாம் யாருக்காகவும் விட்டுவிடக் கூடாது என்று தான் தோன்றியது.
விருந்தினர்கள் இருந்தும் தனக்காக நேரம் ஒதுக்கி தன்னுடன் பேசிய ஷாலினியின் நினைவு வந்தது.
முதலில் நித்திலன் பற்றி அவள் தன்னிடம் கேட்டது வித்தியாசமாக உணர வைத்தாலும், அதன் பிறகு அவனைப் பற்றிப் பேசாமல் தன்னைப் பற்றி மட்டும் விசாரித்ததும், வேறு விஷயங்களைப் பற்றிப் பேசியதும் மனதிற்கு இதத்தையே தந்திருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுப் பேச ஒரு தோழி கிடைத்ததில் துர்கா மகிழ்ச்சியாகவே இருந்தாள்.
வருணாவும் மிகவும் மகிழ்ச்சியாக விழாவில் வலம் வந்திருந்தாள். அங்கிருந்த பிள்ளைகளுடன் விளையாடி சந்தோஷமாக இருந்தாள்.
மகளின் மகிழ்ச்சி துர்காவின் முகத்தையும் மலர வைத்திருந்தது.
அதை நினைத்துக் கொண்டே வேலையை முடித்தாள் துர்கா.
அன்று மாலை “அங்கிள்…” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தான் நித்திலன்.
“என்ன தம்பி?” சபரிநாதன் கேட்க,
“வெளியே உட்கார போறீங்களா அங்கிள்? கட்டிலை எடுத்து வெளியே போடவா? எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க வெளியே வர்றீங்கனா உட்கார வச்சுட்டுப் போவேன்…” என்றான்.
“வர்றேன் தம்பி…” என்றார்.
உடனே கட்டிலை எடுத்து வாசலில் போட்டவன், அவரை வெளியே அமர வைக்க அழைக்க வந்தான்.
அவன் சபரிநாதனை தூக்கச் செல்லும் போது, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” என்றாள் துர்கா.
“என்னங்க?” அவன் கேள்வியாகப் பார்க்க,
“இதோ வர்றேன்…” என்றவள் அவளின் அறைக்குள் சென்றாள்.
வெளியே வந்த போது ஒரு சிறிய பை அவளின் கையில் இருந்தது.
“இந்தாங்க, இதில் என்னோட நகை இருக்கு. என்னால் அடகுக்கடைக்குப் போக முடியலை. நீங்க வெளியே போகும் போது இந்த நகையை அடகு வச்சுப் பணம் வாங்கிட்டு வர முடியுமா?” என்று கேட்டாள்.
“ஏங்க, பணத்தேவை இருக்கா?” என்று கேட்டவனை விநோதமாகப் பார்த்தாள்.
“ஆமா, உங்களுக்குக் கொடுக்கத் தேவைப்படுது. ஏற்கனவே நிறைய நாள் ஆகிடுச்சு. இன்னும் கொடுக்காம இருக்கேன்…” என்றாள்.
அப்போதுதான் அவள் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்குத்தான் நகையை அடகு வைக்கச் சொல்கிறாள் என்பதே அவனுக்குப் புரிந்தது.
“ஏங்க, நான் அவசரமா பணம் எதுவும் கேட்கலையே?” என்றான்.
“அதுக்காக நான் தள்ளிப் போட முடியாதேங்க. ஏற்கனவே உங்களுக்குக் கடன் வச்சுட்டோம்னு எனக்கு உறுத்தலா இருக்கு. ப்ளீஸ், எதுவும் மறுப்பு சொல்லாம வாங்கிக்கோங்க…” என்று நகை பையை நீட்டினாள்.
அவனுக்கு வாங்க விருப்பமே இல்லை. ஆனால் அவளைச் சங்கடப்படுத்தவும் யோசனையாக இருந்தது.
சில நொடிகள் எதையோ யோசித்தான்.
பின் முடிவுக்கு வந்தவனாக, “நகையை அடகு வச்சுட்டு அதை எப்படித் திருப்புவீங்க?” என்று கேட்டான்.
“மாசமாசம் கொஞ்ச கொஞ்சமா கொடுத்து திருப்பணும்…” என்றாள்.
“அப்போ எனக்கும் அதே போல் கொடுக்கலாமே? உங்களால் முடியும் போது கொஞ்ச கொஞ்சமா கொடுங்க. அடகு கடையில் கொடுப்பதற்குப் பதில் எனக்கு அப்படிக் கொடுப்பதில் உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே?” என்று கேட்டான்.
“அப்போ இந்த நகையை நீங்க வச்சுக்கோங்க. நான் எல்லாப் பணமும் கொடுத்ததும் வாங்கிக்கிறேன்…” என்றாள்.
“நகையை வச்சு நான் என்னங்க பண்ணப் போறேன்? உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நகையை நீங்களே வச்சுக்கோங்க…”
“இல்லங்க, அது சரிவராது. இல்லனா அடகு கடையிலேயே அடகு வச்சுப் பணம் வாங்கிக்கோங்க…” என்றாள் பிடிவாதமாக.
“அங்கிள் நீங்களாவது சொல்லுங்களேன். நான் நகையை வாங்கி வச்சுக்கிட்டா எனக்கு ஏதோ வட்டிக்காரன் போல ஃபீல் ஆகும்…” என்று அதுவரை இருவரையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சபரிநாதனை பேச்சிற்குள் இழுத்தான்.
அவரோ இருவரையும் யோசனையுடன் பார்த்தார்.
“என் மகள் சொல்வதும் சரியாத்தான் இருக்கு தம்பி. ஆனா உங்க சங்கடமும் புரியுது…” என்றவர் மகளின் புறம் திரும்பினார்.
“துர்கா, அதுதான் தம்பி கொஞ்ச கொஞ்சமா பணம் வாங்கிக்கிறேன்னு சொல்றார்ல. நமக்கு உதவி செய்த தம்பிக்கு மேலும் மேலும் சங்கடத்தைக் கொடுக்கக் கூடாதுமா. நகையை எடுத்துட்டுப் போய் உள்ளே வை. இந்த மாசம் சம்பளம் வந்ததும் ஒரு தொகையை ஒதுக்கி தம்பிக்கு கொடுத்திடலாம்…” என்றார்.
தந்தை சொன்ன பிறகு மறுக்க முடியாமல் நகையைத் திருப்பிக் கொண்டு போனாள் துர்கா.
அதைப் பார்த்து நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டான் நித்திலன்.
பின்னால் அந்த நகையை வைத்துத் துர்கா தன் மீது குற்றம் சொல்வாள் என்று அறிந்திருந்தால் அப்போதே அந்த நகையை வாங்கியிருப்பான் நித்திலன்.
ஆனால் அதை அறியாதவன் விட்ட நிம்மதி மூச்சுக்கு ஆயுள் கம்மியாகிப் போனது.
நாட்கள் அதன் வேகத்தில் நகர ஆரம்பித்தன.
சபரிநாதன் கைப்பிடியைப் பிடித்தபடி சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்தார்.
வருணா, நித்திலனின் ஒற்றுதலும் அதிகமாகியிருந்தது.
நன்றாக நடக்க ஆரம்பித்திருந்தாள் என்பதால் இப்போதெல்லாம் அவளே அவன் வீட்டில் இருக்கும் போது அவனின் வீட்டிற்கு நடந்து சென்று விடுவாள்.
அவளைப் பிடித்து வைப்பதே துர்காவிற்குப் பெரும்பாடாக இருந்தது.
அவன் சொன்னது போல் மாதமாதம் நித்திலனின் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் துர்கா.
அவனும் மறுப்புச் சொல்லாமல் வாங்கிக் கொள்வான்.
ஷாலினி, துர்காவின் நட்பும் வளர்ந்தது.
ஒரு நாள் கணவன் குழந்தையுடன் துர்காவின் வீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள்.
அந்தக் காம்பவுண்டில் இருந்த மற்ற குடித்தனக்காரர்கள் நித்திலன், துர்கா வீட்டுடன் பழகுவதையும், புதிதாக ஷாலினி குடும்பத்தினர் வந்து செல்வதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.
மற்ற குடித்தனக்காரர்கள் யார் எப்படி இருந்தால் என்ன என்று விலகிக் கொள்ள, வித்யா மட்டும் கண்கொத்திப் பாம்பாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அதை உடனே துர்காவிடம் கேலியாகக் கேட்பதும் உண்டு.
அப்படித்தான் ஒருநாள் துர்காவின் வீட்டிற்கு வந்தவள் மெல்ல நித்திலனின் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏன் துர்கா, அந்த ஆளுக்கு முப்பது, முப்பத்திரெண்டு வயசு இருக்காது?” என்று நயமாகக் கேட்டாள் வித்யா.
“யாருக்குக்கா?” துர்கா புரியாமல் கேட்க,
“அதுதான் உன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரனுக்கு?”
“நித்திலனுக்கா? தெரியலைக்கா…” என்றாள்.
“என்ன துர்கா அந்த ஆளு இங்கேயே தான் கிடையா கிடக்குறாப்புல. இது கூடவா கேட்டு தெரிஞ்சுக்கலை?” என்று என்னமோ அதிசயத்தைக் கேட்பது போல் கேட்டாள்.
அவள் கேள்வி போன திசையில் துர்காவின் முகம் இறுகியது.
நித்திலன் வீட்டிற்குள் கூட வர மாட்டான். சபரிநாதன் நடக்க முடியாத போது அவரைத் தூக்கி உதவி செய்ய வந்தவன், அவர் நடக்க ஆரம்பித்த பிறகு சபரிநாதனே வீட்டிற்குள் அழைத்தால் கூட வரமாட்டான்.
வாசலில் இருந்தே பேசி விட்டுச் சென்று விடுவான். இல்லையென்றால் சபரிநாதன் வெளியே அமர்ந்திருக்கும் போது அவருடன் பேசிக் கொண்டிருப்பான்.
அப்படிப்பட்டவனைப் போய் இங்கேயே கிடையாகக் கிடக்கிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? என்பது போல் வித்யாவை உறுத்துப் பார்த்தாள்.
வித்யா அதற்கெல்லாம் அசரவே இல்லை.
“எப்படியும் முப்பது வயசுக்கு மேல தான் இருக்கும் போல. அப்படி இருக்கும் போது எதுக்கு இன்னும் அந்த ஆள் கல்யாணம் முடிக்கலையாம்?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எனக்கு எப்படிக்கா தெரியும்? அவருக்கிட்ட தான் கேட்கணும்…” என்றாள் துர்கா.
“நீ கேட்கலாம்ல உன் கூடத்தான் ரொம்பக் குளோசா பழகுறாப்புலயே…” என்று வித்யா இப்போதும் தன் விஷமத்தை வெளியே கொட்ட, துர்காவின் பொறுமை போய்விடும் போல் இருந்தது.
ஆனாலும் வித்யாவிற்கு இன்னும் கொம்பு சீவி விட விருப்பம் இல்லாமல், “என்கிட்ட எல்லாம் அவ்வளவா பேச மாட்டார்கா. என்கிட்ட பேச அவருக்கு என்ன இருக்கு? உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் அவர்கிட்டயே போய் ஏன் இன்னும் கல்யாணம் முடிக்கலைன்னு கேளுங்கக்கா…” என்று அமைதியான குரலில் சொல்லி பேச்சை முடித்துக் கொள்ளப் பார்த்தாள்.
“அந்த ஆளு என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காது. அதே உன்கிட்ட எல்லாம் நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுது. ம்க்கும், சோழியும் குடும்பியும் சும்மா ஆடாதுன்னு சொல்லிருக்காங்க. நீ எதுக்கும் கவனமா இரு துர்கா. அப்புறம் உனக்குத்தான் தேவையில்லாமல் கெட்டப் பெயர் வரும்…” என்றாள்.
‘இவங்களே எனக்குக் கெட்டப் பெயரை உருவாக்கி விட்டுருவாங்க போல இருக்கு. எப்படி இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுறாங்க?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், தன் கோபத்தை மௌனத்தின் மூலம் காட்டினாள் துர்கா.
அவளிடம் எதுவும் பெயரவில்லை என்றதும், “என்னமோ உன் நல்லதுக்குத் தான் சொன்னேன். அப்புறம் உன் இஷ்டம்…” என்று எழுந்து சென்றாள் வித்யா.
அப்போது வீட்டில் சபரிநாதன் இல்லை. மெல்ல கடை வரை நடந்து விட்டு வருகிறேன் என்று சென்றிருந்தார்.
இப்போது எல்லாம் அப்படி நடப்பது அவரது வழக்கமாகியிருந்தது. தந்தையின் கால் விரைவில் குணம் அடைந்ததில் நிம்மதியாகியிருந்தாள் துர்கா.
அவர் வீட்டில் இருந்தால் வித்யாவின் வாயை எப்படியாவது அடைத்திருப்பார்.
துர்காவாலும் அதைச் செய்ய முடியும் என்றாலும், தான் பேசினால் தன்னிடம் பேசியதை அப்படியே வெளியே பேசி பரப்புவாள் என்று அவளுக்குத் தெரியும்.
அடுத்த வீட்டு விஷயத்தை அப்படித் திரித்துப் பேசுவது அவளுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போய்க் கொண்டிருந்தாள் துர்கா.
பொறுமையும் கூடச் சில நாட்கள் மட்டுமே பொறுமையாக இருக்கும். பொறுமை கரையைக் கடந்தால் பூகம்பம் தான் என்று வித்யாவிற்குப் புரியாமல் போனது.
ஒருநாள் இரவு மகளுக்கு இருமல் மருந்து காலியாகிவிட்டது என்று கடைக்குச் சென்று வாங்கி வந்து கொண்டிருந்தாள் துர்கா.
அப்போது அவளின் பின்னால் யாரோ தொடர்ந்து வருவது போல் இருக்கத் திரும்பிப் பார்த்தாள்.
வித்யாவின் கணவன் தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவன் வீட்டிற்குச் செல்வானாக இருக்கும் என்று நினைத்துக் கண்டுகொள்ளாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
ஆனாலும் சிறிது நேரத்தில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் துர்கா.
அவன் பார்வை தன்னைத் துளைப்பது போலான உணர்வை உணர்ந்தாள்.
தான் நினைப்பது சரியா என்றும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஏனெனில் வித்யா தான் துர்காவிடம் பேசுவாளே தவிர, அவளின் கணவன் என்றும் அவளிடம் பேசியது இல்லை.
துர்காவை பார்த்தால் கூடப் பார்க்காதது போல் விலகிப் போவான். அவன் மட்டும் அல்ல, அந்தக் காம்பவுண்டில் உள்ள மற்ற வீட்டு ஆண்களும் அப்படித்தான் என்பதால் துர்காவிற்கு இதுவரை எந்தத் தொந்தரவும் இருந்தது இல்லை.
அதனால் தான்தான் தவறாக நினைக்கிறோமோ என்று நினைத்து மெல்ல பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அவள் திரும்பியதும் பட்டென்று கண்ணடித்தான் வித்யாவின் கணவன்.
துர்காவிற்குச் சட்டென்று விதிர்த்துப் போனது.
நிஜமாகவே தன்னைப் பார்த்து கண்ணடித்தானா என்று பயந்து அவனின் புறம் நன்றாகத் திரும்பிப் பார்க்க, அவனோ அப்புராணி போல முகத்தை வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.
‘அப்போ தான் கண்டது பொய்யா?’ என்று குழம்பிப் போனாள்.
வித்யாவின் கணவன் அவளைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விட, குழம்பிப் போன மனதுடன் வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள்.
அன்று முழுவதும் வித்யாவின் கணவனின் செய்கையை நினைத்துத் தூக்கம் துறந்து போனது துர்காவிற்கு.
மறுநாள் அவளின் வழக்கம் போல அதிகாலையில் துணிகளைத் துவைக்க அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு வெளியே வந்து துவைக்க ஆரம்பித்தாள் துர்கா.
இரவு சரியாகத் தூங்காததால் கண்கள் எறிந்தன. ஆனாலும் வேலைகளை முடித்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் முகத்தில் தண்ணீர் அடித்துக் கண்களை நன்றாகக் கழுவி விட்டு துணிகளைத் துவைக்க ஆரம்பித்தாள்.
அப்போது என்றைக்கும் இல்லாமல் வித்யாவின் வீட்டுக் கதவு அந்த நேரத்தில் திறக்கப்பட்டது.
திடுக்கிட்டு தலையை நிமிர்த்திப் பார்க்க, வித்யாவின் கணவன் கதவைத் திறந்து வெளியே வந்து வீட்டு வாசல் படியில் அமர்ந்து கொண்டான்
அவனின் வருகையை அந்த நேரத்தில் எதிர்பார்க்காமல் துர்காவின் மனம் பதறியது.
ஏற்கனவே சரியாக இருந்த உடையை நன்றாகத் திருத்திக் கொண்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவளால் சில நொடிகளுக்கு மேல் வேலையைத் தொடர முடியவில்லை.
அவன் வீட்டுப் படியில் அமர்ந்திருந்தாலும் அவனின் பார்வை முழுவதும் துர்காவைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது.
துவைக்கும் போது அவளின் உடல் அசைவுகளை வக்கிரமாகக் கண்டு கொண்டிருந்தான்.
நிமிர்ந்து பார்க்காமலேயே அவன் பார்வையை உணர்ந்தவளுக்குப் பயம் போய், கோபம் அந்த இடத்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தது.
‘பொண்டாட்டி அப்படினா புருஷன் இப்படியாக்கும். இவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்காங்க? ச்சீ, என்ன மனுஷங்க இவங்கயெல்லாம்?’ என்று அருவருப்புடன் நினைத்துக் கொண்டவள் தன் கோபத்தைக் காட்டும் விதமாகக் கல்லில் துணிகளை ஓங்கி அடித்துத் துவைத்தாள்.
மனம் தீயாக எரிந்தது. அவன் பார்க்கிறான் என்பதற்காக ஓடி ஒளியவும் முடியாது. அதையே தனக்குப் பயந்துவிட்டாள். அதனால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தை அவனுக்குக் கொடுத்துவிடும் என்று நினைத்தவள் தன் வேலையை நிறுத்தவில்லை.
வித்யாவின் கணவன் தன் பார்வையையும் மாற்றவில்லை. அங்கிருந்து எழுந்து செல்லவும் இல்லை.
அவன் பார்க்கிறான் என்று உணர்ந்தவள் வேகமாகக் கோபத்துடன் துணிகளை அலசி முடித்துக் காயப் போட்டாள்.
வீட்டிற்குள் சென்றவள் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்க வெளியே வந்தாள்.
அவள் குளியலறைக்குள் நுழைய முயன்ற போது, வேகமாக அங்கே வந்த வித்யாவின் கணவன் துர்காவை குளியலறைக்குள் தள்ளி, தானும் உள்ளே நுழைந்து சட்டென்று கதவை அடைத்தவன், அதே வேகத்தில் பயந்து கத்தப் போன துர்காவின் வாயையும் பொத்தியிருந்தான்.