6 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 6

“ம்ம்ம்மா…” என்று பசுவின் குரல் வீட்டின் பின்பக்கமிருந்து தீனமாகக் கேட்க படுக்கையில் சிவந்த விழிகளுடன் மெல்ல கண் மலர்ந்தாள் சக்தி.

கண்கள் மிளகாயை கண்ணில் தேய்த்து விட்டது போல் தீயாக எரிந்தன.

இரவில் சரியாக உறங்காததின் விளைவு என்று புரிந்தாலும், இன்னும் சற்று நேரம் எங்களுக்கு ஓய்வு கொடு என்று கண்கள் கெஞ்சினாலும் அதற்கு மேல் விழிகளுக்கு ஓய்வு கொடுக்க விருப்பமில்லை அவளுக்கு.

ஏற்கனவே நாட்களை வீணடித்துக் கொண்டிருப்பதாக எண்ணம் அவளுக்கு இருந்தது.

அவள் ஒன்று நினைத்து வர, இப்போது வேறொன்றாக அவள் திருமணம் முடிந்திருந்தது.

அதையும் கூட அவள் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் திருமணம் நடந்து முடிந்த இந்த இரண்டு நாட்களாக அவளின் யோசனை இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் பகலில் அவளால் சிந்திக்கவே முடியாத அளவு அந்த வீட்டு சூழ்நிலை இருந்தது.

நாட்டாமை குடும்பம் என்று யாராவது வீட்டிற்கு வந்து கொண்டே இருந்தனர்.

யாரையும் சந்திக்காமல் அறைக்குள் அடைந்து கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்குச் சர்வேஸ்வரன் விட வேண்டுமே?

நாட்டாமையின் புத்தம் புது மனைவியைச் சந்திக்க அக்கம்பக்க கிராமத்தில் இருப்பவர்கள் வந்து செல்ல, அவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்க, மனைவியை அறைக்குள் அடைந்து கிடக்க விடாமல் வெளியே வர வைத்திருந்தான்.

இரவோ அறைக்குள் நுழைந்ததும் உறங்காமல் அவளிடம் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பான்.

அவனின் செய்கையே தன்னை யோசிக்க விடாமல் செய்ய அவன் பயன்படுத்தும் யுக்தி என்று அவளுக்குப் புரிந்தது.

அதற்கு எல்லாம் அசந்து விட்டால் அவள் சக்தி இல்லையே?

பேசி பேசி அவன் முதலில் உறக்கத்தைத் தழுவிய பிறகு அவளின் சிந்தனை நீள்வதின் விளைவு அவளின் உறக்கம் தொலைய காரணமாகி போனது.

தான் வந்த காரியத்தை எவ்வளவு சீக்கிரமாகச் செயல்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செயல்படுத்தி விடவேண்டும் என்ற அவளின் முனைப்பு அவளின் உறக்கத்தையும் தொலைய வைத்திருந்தது.

படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவள் வீட்டின் பின்பக்கம் இன்னும் பசுவின் தீனமான அழைப்பு தொடர்வதையும், சர்வேஸ்வரன் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சப்தமும் கேட்க, எழுந்து ஜன்னலருகில் சென்று பார்த்தாள்.

வீட்டின் பின்பக்கம் பரபரப்பாக இருந்தது.

“எண்ணை ரெடியா முருகா? அம்மா நீங்க இந்தப் பக்கம் நில்லுங்க…” என்று சர்வேஸ்வரன் சொல்லிக்கொண்டே அங்கே கொட்டகையில் இருந்த பசுவின் வயிற்றைத் தடவிக் கொடுப்பதைப் பார்த்தாள்.

அங்கிருந்த சூழ்நிலையும், அவர்களின் பேச்சுமே அவளுக்குக் காரணத்தை விளக்கிவிட்டிருந்தது.

வீட்டின் பின்பக்கம் நான்கு பசு வைத்திருந்தனர். அதில் ஒரு பசுச் சினையாக இருப்பதைக் கண்டிருந்தாள். அந்தப் பசுத் தான் இப்போது ஈன்ற போகின்றது என்பது புரிய அங்கே பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

சர்வேஸ்வரனும், அவனின் அன்னையும் தான் சுற்றி சுழன்று மற்றவர்களையும் வேலை வாங்கியதுடன் தாங்களும் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிலும் தலையில் முண்டாசுடன் வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுழன்று வந்த கணவனை வியப்புடன் பார்த்தாள் சக்தி.

இரண்டு வருடங்களுக்கு முன் பேண்ட், சட்டையில் டிப்டாப்பாக வளைய வந்த சர்வேஸ்வரனுக்கும் இன்றைய சர்வேஸ்வரனுக்கும் பல விதமான வித்தியாசங்களைச் சொல்லிவிடலாம்.

முன்பை விட அவன் வாளிப்பு கூடிப்போயிருந்ததை அவனின் நெஞ்சுரம் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது.

அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவளின் கண்கள் அவனை ரசிக்க ஆரம்பித்தது.

“இதோ அவ்வளவு தான் மயிலு…” என்ற அவனின் குரலில் அவளின் பார்வை பசுவின் பக்கம் திரும்பியது.

மயிலு என்று பெயர் கொண்ட அந்தப் பசுத் தன் குட்டியை ஈன்று கொண்டிருந்தது. அடுத்தச் சில கணங்களில் முழுதாகத் தன் கன்றுவை வெளியே தள்ளிவிட்டு ஆசுவாசப்பட்டது போல ‘ம்ம்ம்மா…’ என்று பசுச் சப்தம் கொடுக்க, அந்தப் பசுத் தாயையும், புத்தம் புதிய கன்று குட்டியையும் பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

கீழே பசுவை பரிவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த சர்வேஸ்வரனுக்கு ஏதோ தோன்ற சட்டென்று தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

ஜன்னல் அருகே நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மனைவி பார்வையில் பட, அவளைப் பார்த்து மயக்கும் புன்னகை சிந்தியவன், ‘கீழே வா’ என்பது போல் தலையை அசைத்தான்.

அவனின் அழைப்பை கவனித்தவள் கவனியாதது போல் ஜன்னலை விட்டு விலகி குளியலறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.

நிதானமாகக் காலை வேலைகளை முடித்து, குளித்துவிட்டு அவள் வெளியே வந்த போது அறைக்குள் நுழைந்தான் அவளின் கணவன்.

“நம்ம மயிலு கன்னு போட்டுருக்கு சக்தி. உன்னைக் கீழே கூப்பிட்டேனே. ஏன் வரலை?” என்று கேட்டான்.

“நான் இங்கே இருந்தே பார்த்துட்டேன்…” என்று அவனின் பக்கம் திரும்பாமல் கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக் கொண்டே சொன்னாள்.

“நீ இங்கே இருந்து பார்த்ததை நானும் பார்த்தேன். ஆனா நான் கேட்டது கீழே ஏன் வரலைன்னு தான்…” என்றான்.

“நான் கீழே வந்து என்ன பண்ண போறேன்?” என்று இப்போதும் அவனின் பக்கம் திரும்பாதவளின் பதில் மட்டும் அவனைச் சென்று சேர்ந்தது.

தன் பக்கம் திரும்பாதவளை கண்டு அவனுக்குச் சுறுசுறுவென்று கோபம் ஏறும் போல் இருந்தது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் சில நொடிகள் நின்று அவளையே பார்த்தான்.

அவனின் பார்வை தன்னைத் தீண்டுகிறது என்று உணர்ந்தாலும் சிறிதும் சலனமில்லாமல் நிதானமாகத் தலையை வாரிவிட்டு பவுடரை எடுத்து முகத்தில் பூச ஆரம்பித்தாள்.

அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை நெருங்கும் ஆசை வந்தது.

ஆனால் அவள் சொன்ன வார்த்தை அவனைக் கட்டிப்போட இயலாமை தந்த எரிச்சல் அவனைச் சூழ ஆரம்பித்தது.

ஆனால் இப்பொழுது அவளிடம் வம்பிழுக்க விரும்பாதவன் அதற்கு மேலும் அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் குளியலறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

அவன் திரும்பி வெளியே வந்த போது கட்டிலில் அமர்ந்து கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

அவளைப் பார்த்துக் கொண்டே இடுப்பில் கட்டிய துவாலையுடன் கண்ணாடி முன் நின்றவன் ஈரத்தலையைத் துடைத்து விட்டான்.

பின் அலமாரியைத் திறந்து அன்றைய தன் உடையை எடுக்க ஆரம்பித்தான்.

அவன் வந்ததையும், அவன் செய்யும் வேலைகளும் புரிந்தாலும், சிறிதும் தலையைக் கூட உயர்த்தாமல் இருந்தாள் சக்தி.

அவளின் விட்டொத்தியான தன்மையைக் கண்ட சர்வேஸ்வரனுக்கு அதற்கு மேல் பொறுக்கவே முடியவில்லை.

உடையை எடுக்காமல் அலமாரியை மூடி விட்டு மனைவியின் எதிரே வந்து நின்றான்.

அவனின் காலடியை உணர்ந்து தலையை நிமிர்த்திப் பார்த்த மனைவியை முறைத்துக் கொண்டிருந்தான்.

‘இப்ப எதற்கு இந்த முறைப்பு?’ என்பது போல் அவள் விழியுயர்த்திக் கேட்டாள்.

“நீ இப்ப என் பொண்டாட்டி. அது ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்டான்.

“அதுக்கென்ன இப்போ?” என்று அமைதியாகக் கேட்டவளை ‘என்ன செய்தால் தகும்?’ என்பது போல் பார்த்தான்.

அவனின் கை முஷ்டி இறுகியது.

“ஒரு மனைவியோட கடமை என்னன்னு உனக்குத் தெரியாதா?” என்றவனின் கேள்விக்கு,

“அப்படி என்ன கடமை?” என்று இப்போதும் அவளின் கேள்வி அமைதியாக வந்து விழுந்தது.

“ஓஹோ! அப்போ ஒரு மனைவியோட கடமை என்னன்னு உனக்குத் தெரியலை. தெரிந்தாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க உனக்கு விருப்பமும் இல்லைன்னு எனக்குப் புரியுது. ஆனா இனி நீ அப்படி இருக்க முடியாது.

“ஒரு மனைவியா உன்னோட கடமை எதுவோ அதை நீ செய்தே தீரணும். அதன் முதல்படியா என் தேவைகளை எல்லாம் நீதான் கவனிச்சுக்கணும்…” என்றவனை முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தாள் சக்தி.

“என்ன அப்படிப் பார்க்கிற? நான் சும்மா வேடிக்கைக்கு உன்கிட்ட பேசிட்டு இருக்கலை. இப்போ இந்த நிமிஷம் நடைமுறை படுத்த ஆரம்பி. ம்ம்… எழுந்திரு. எனக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடு…” என்று அலமாரியை நோக்கி கையை நீட்டினான்.

சக்தியோ அவனின் முகத்தையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள். பின்பு அவன் சுட்டிக்காட்டிய அலமாரியைப் பார்த்தாள்.

“செய்ய முடியாதுன்னு சொன்னால்?” என்று கேட்டாள்.

அவளின் கண்களோடு தன் கண்களை மோத விட்டவன், “செய்ய வைப்பேன்…” என்றான்.

அவனின் கண்களில் இருந்த தீவிரம் அவளைக் கட்டிப் போட்டுவிடும் போல் இருந்தது.

அதனால் அவனின் கண்களைச் சந்திக்காமல் தாழ்த்திக் கொண்டவள், லேசாகத் தொண்டையைச் செருமி கொண்டாள்.

“நான் உங்களுக்கு மனைவியாக இருக்கவோ, மனைவியின் கடமையைச் செய்யவோ இந்த ஊருக்கு வரலை. உங்களுக்குக் கடமையைச் செய்ய மனைவி வேணும்னா… நான் முன்னாடியே சொன்னது தான். நான் வந்த வேலை முடிஞ்சதும் போயிடுவேன். அப்புறம் உங்க கடமையைச் செய்யத் தாராளமா ஒரு மனைவியை நீங்க கொண்டு வந்து…” என்று அவள் வார்த்தை முடியும் முன் சர்வேஸ்வரனின் கை அவள் புறம் நீண்டிருந்தது.

படுக்கையில் அமர்ந்திருந்தவளை அப்படியே பின்னால் தள்ளி விட்டான்.

சக்தி மல்லாக்கில் சென்று விழ அவளின் இருபுறமும் கைகளை ஊன்றிக் குனிந்தான்.

“வார்த்தை வரம்பு மீறினால் நான் என்ன செய்வேன்னு சொல்லியும், நீ அதே வார்த்தையைத் திரும்பச் சொல்றனா, அப்போ நான் சொன்னதைச் செய்யணும்னு நீ எதிர்பார்க்கிற…” என்றவன் அவளின் முகம் நோக்கி குனிந்தான்.

சக்தியோ முகத்தைத் திருப்ப, அவள் இதழ்களில் பதியப் போனவனின் அதரங்கள் அவளின் கன்னத்தைக் கொய்தது.

கன்னத்தில் முத்தமிட்டவன், அவளின் பேச்சிற்குத் தண்டனை கொடுப்பது போல் கன்னத்தை மெதுவாகக் கடிக்க ஆரம்பித்தான்.

சக்தி அவனின் தீண்டலை ஏற்றுக்கொள்ள முடியாமல் நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ள முயல, அது நடந்தேறவே இல்லை.

சர்வேஸ்வரனின் பலம் அவளிடம் செல்லுபடி ஆகாமல் போனாலும் அவனை விலக்குவதில் அவள் குறியாக இருக்க, அவனோ அவளுக்குத் தண்டனை கொடுப்பதில் குறியாக இருந்தான்.

கன்னத்தைக் கடித்தவன், பேசிய வாயிற்குத் தண்டனை கொடுக்க இதழ்களைத் தேடி குனிந்தான்.

அவனை வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் வேண்டப்பட்டவன் தீண்டல் அல்லவா? அவளை மயக்கும் போல் இருந்தது.

‘இது தன் மனதை அலைபாய விடும் நேரம் அல்ல’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் தன் மேல் சாய்ந்திருந்த கணவனை வலுவாகப் பிடித்துத் தள்ளினாள்.

மங்கையின் அருகாமையில் மதிமயங்கி போயிருந்த வேங்கையவன், பெண் வேங்கையின் வலுவில் அவளை விட்டு அருகில் படுக்கையில் விழ, சக்தியோ பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“இந்தச் சில்மிஷம் செய்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் சர்வேஸ்வரா…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து அவளின் முன் நின்றவன் அவள் நீட்டிய விரலை பிடித்து, “என்னமோ அடுத்த வீட்டுக்காரன் சில்மிஷம் செய்தது போல மிரட்டுற? உன்கிட்ட சில்மிஷம் செய்ய எல்லா ரைட்ஸும் எனக்கு மட்டும் தான் இருக்கு…” என்றான்.

“என்னோட சம்மதம் இல்லாம என்னைத் தொட்டா கட்டினவனும் எனக்கு அடுத்த வீட்டுக்காரன் போலத்தான்…” என்று அவள் சொன்ன நொடியில் பட்டென்று அவளின் வாயின் மீதே ஒரு அடி போட்டான்.

“வாய்… வாய்… ஓவர் வாய்… இனி இப்படிப் பேசிப்பார், இனி வாய்ல அடிக்க மாட்டேன். கடிச்சு வச்சுடுவேன்…” என்றவன் அவளின் உதட்டை விரலால் நசுக்கினான்.

“ஷ்ஷ்!” என்று அவள் முனங்கவும் விட்டவன், “போ… போய் எனக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடு…” என்றான்.

“முடியாது!” சக்தி உறுதியாக மறுத்தாள்.

ஆனால் அவளை விட உறுதி நிறைந்தவனாக அவளின் தோளை வலுவாகப் பிடித்தவன் அப்படியே அலமாரியின் பக்கம் தள்ளிக்கொண்டு போனான்.

சக்தியின் திமிறல் அவனிடம் எடுபடவே இல்லை.

அலமாரியின் கதவை திறந்து மனைவியை முன்னே நிற்க வைத்து தான் பின்னால் நின்றவன், அவளின் கையைப் பிடித்துத் தானே ஒரு வேஷ்டி சட்டையை எடுக்கவும் வைத்தான்.

“இதை நீங்களே எடுத்து போட்டுட்டுப் போகவேண்டியது தானே? என்னை ஏன் டார்ச்சர் பண்றீங்க?” என்று எரிச்சல் பட்டாள் சக்தி.

“என்ன பண்றது என் பொண்டாட்டி சரியான வீம்புக்காரியா மாறிட்டா. அவளுக்குத் தெரியாததை நான் தானே தெரிய வைக்கணும்…” என்றவன், அவளின் கன்னத்தை லேசாகச் சுட்டிவிட்டு அவள் கையில் இருந்த துணியை வாங்கியவன், “இன்னைக்கு ட்ரையல் தான் சக்தியாரே. நாளையிலிருந்து நீதான் செய்யணும்…” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு அவளின் முன்பே உடையை மாற்ற ஆரம்பித்தான்.

அவனின் பேச்சிலும், செய்கையிலும் சக்தியின் முகம் கோபத்தில் சிவந்தது.

அதைக் கவனித்தும் கண்டுகொள்ளாதவன் நிதானமாக உடையை மாற்றி விட்டு, “சாப்பிட போகலாம் வா…” அவளின் கையைப் பிடித்து அறையை விட்டு அழைத்துப் போனான்.

அவனின் அடாவடிக்கு அடங்கிப் போக முடியவில்லை என்றாலும் அசைத்து கொடுத்தே ஆகவேண்டியது இருந்தது.

உணவறைக்கு மகனுடன் ஜோடி போட்டுக் கொண்டு வந்த மருமகளுக்கு முறைப்பையே வரவேற்பாகத் தந்தார் மீனாம்பிகை.

அவரின் முறைப்பு சக்திக்கு பழகிப் போய் விட, இப்பொழுதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டாள்.

மனைவியையும் தன்னுடனே அமர வைத்து சர்வேஸ்வரன் சாப்பிட சொல்ல, “நம்ம பழக்கம்னு ஒன்னு இருக்கு தம்பி. வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஆம்பிளைங்க சாப்பிட்டு எழுந்த பொறவு தான் சாப்பிடணும்…” என்றார்.

“இரண்டு நாளா சக்தி என் கூடத் தானேமா சாப்பிட்டுட்டு இருக்கா. இப்ப என்ன புதுசா?” என்று தாயிடம் கேட்டான்.

“அது புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட சோடிகனு விட்டுட்டேன். ஆனா இப்போத்தேன் ரெண்டு நாளு ஆகிடுச்சே. இனிமேட்டு உன் பொஞ்சாதியை நீ சாப்பிட்ட பிறகு சாப்பிட சொல்லு…” என்றார் விறைப்பாக.

அவரின் பேச்சுக்கு சக்தி நக்கலாகச் சிரித்தாள். ‘இப்ப நான் சாப்பிட்டே தீருவேன்னு சொன்னால் இந்தம்மா என்ன செய்யுமாம்?’ என்று நினைத்தாள்.

ஆனால் மனைவிக்குப் பேச இடம் கொடாத சர்வேஸ்வரன், “பரவாயில்லைமா. இனி அந்தப் பழக்கத்தை எல்லாம் கொஞ்சம் ஒத்தி வைங்க. சக்தி என் கூடவே சாப்பிடட்டும்…” என்று அந்தப் பேச்சை முடித்து வைத்தான்.

மகனிடம் அதற்குப் பேச முடியவில்லை என்றாலும் மீனாம்பிகையின் முணுமுணுப்புத் தொடரத்தான் செய்தது.

இருவரும் சாப்பிட்டு எழவும், சக்தி வழக்கம் போல் அறைக்குள் செல்லப்போக, “இந்த வீட்டுல எதுவுமே சரியில்லை தம்பி. சாப்பாட்டு விஷயத்தில் தான் அப்படிச் சொல்லிட்ட. அதுக்காக எல்லா விசயத்திலும் பொறுத்து போக முடியாது. உன் பொஞ்சாதிக்குன்னு ஒரு கடமை இருக்கு. எனக்குப் பொறவு வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக்கப் போறவ அவ தான். அதுனால சும்மா சும்மா உங்க மச்சுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காம வீட்டுக்குள்ள நடக்குறதை என்ன ஏதுன்னு பார்க்க சொல்லு…” என்றார் கறாராக.

இந்த முறை என் பேச்சு தான் நடக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது அவரிடம்.

‘இது என்னடா வம்பா போச்சு. மகன் என்னன்னா மனைவியா கடமையைச் செய்ன்னு சொல்றார். அம்மா என்னன்னா மருமகளா கடமையைச் செய்ன்னு சொல்றாங்க. இவங்க வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேனா என்ன? என்னை என்ன நினைச்சுட்டு இருக்காங்க இவங்க எல்லாம்?’ என்று சுறுசுறுவென்று ஏறிய கோபத்துடன் கணவனையும், மாமியாரையும் முறைத்துக் கொண்டு நின்றாள்.

சக்தி ஒன்று நினைத்து சர்வேஸ்வரனுடனான திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல, இப்போதோ அவள் நினைத்ததையும் மீறி அன்னையும், மகனுமாக அவளை அந்த உறவில் பிணைக்கப் பார்த்தனர்.

சக்தி அந்தப் பிணைப்பில் பின்னிக் கொள்வாளா? என்ற கேள்வியுடன் அன்றைய நாள் அமோகமாக ஆரம்பித்தது.