6 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 6

சத்யா, தர்மேந்திரனின் ஓட்டுனர் பயிற்சி மையத்திற்குச் சென்று வந்த பிறகு சில நாட்கள் கடந்திருந்தன.

அன்று இரவு உணவு முடிந்த பிறகு படுக்கப் போனவளை “உன்னோட கொஞ்சம் பேசணும் சத்யா…” என்று தடுத்து நிறுத்தினார் வசந்தா.

அன்னை பேச வேண்டும் என்று சொன்னதுமே சத்யவேணியின் மனது படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

அன்று திருமண விஷயமாகப் பேசியவர் தான். அதற்குப் பிறகு அன்னையும், தந்தையும் அவர்களுக்குள் பேசி வைத்திருந்தபடி இந்தச் சில நாட்களாக மீண்டும் அந்த விஷயத்தைப் பற்றி அவளிடம் பேசவே இல்லை.

மகளின் மனது திருமணத்தைப் பற்றி யோசித்து அதற்குத் தயாராகட்டும் என்று அமைதியாக இருந்து வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.

அவர்கள் பேசாமல் இருந்தது அவளுக்கும் நல்லதாயிற்று. கடந்து சென்ற நாட்களில் அவளும் யோசித்தாள். ஆனால் அந்த இரண்டாம் தாரம் என்ற வார்த்தை அவளின் மனதை போட்டு பிராண்டிக் கொண்டே இருந்தது.

என்ன முயன்றும் அதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தான் அதிகமாக ஆசைப்படுகிறோம், பெற்றோருக்குப் பாரமாக அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று புரிந்தும் ஏனோ அந்த விஷயத்தை அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பேசாமல் தன்னால் அந்த வாழ்க்கை வாழ முடியாது என்று முடிவாகச் சொல்லி அன்னை, தந்தைக்கு மகளாக மட்டும் இருந்து விடுவோம் என்ற முடிவிற்கே வந்து விட்டாள்.

அப்படி முடிவு செய்திருந்த நிலையில் வசந்தாவின் அழைப்பு அவளின் முடிவை சொல்லும் நேரம் வந்துவிட்டதை உணர்த்தியது.

மனதை திடப்படுத்திக்கொண்டு அமர்ந்தவள் “என்னம்மா? சொல்லுங்க…” என்று கேட்டாள்.

“உன் கல்யாண விஷயமா என்ன முடிவு பண்ணிருக்கச் சத்யா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“நான் உங்க மகளாகவே இருந்துறேன்மா…” என்று சொன்ன மகளை அதிர்வுடன் பார்த்தார் வசந்தா.

“சத்யா… என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறீயா?” என்று அதட்டினார்.

“நல்லா புரிஞ்சு முடிவு பண்ணி தான் பேசுறேன்மா…”

“என்ன புரிஞ்சு பேசுற? நீ எங்க மகளா மட்டும் எத்தனை காலத்திற்கு இருக்க முடியும்? இன்னும் சில வருஷங்கள் தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இருக்கும். ஆனா அதுக்குப் பிறகு தனியா இந்த உலகத்தில் என்ன செய்வ?”

“ப்ச்ச்… இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா.‌ நான் வாழ்ற வரை நீங்களும் நல்லா தான் இருப்பீங்க…” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

“இது உனக்கே அதிகமா தெரியலையா சத்யா? எங்க ரெண்டு பேருக்குமே வயசாயிருச்சு. எந்த நேரம் என்ன நடக்கும்னு சொல்ல முடியுமா? அர்த்தமில்லாமல் உளறாமல் விஷயத்துக்கு வா…! உங்க அப்பாவும், நானும் உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்‌ கொடுக்கணும்னு ஆசைப்படுகிறோம். எங்களோட இந்த நியாயமான ஆசையைக் கூட நிறைவேற்றி வைக்க மாட்டியா?”

“உங்க ஆசை நியாயமா இருக்கலாம்மா. ஆனா அதே நேரம் என் மனசையும் புரிஞ்சுக்கோங்கனு தான் சொல்றேன். அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்கிறீங்க?”

“என்னடி உன் மனசு…? இரண்டாந்தாரமா வாழ்க்கைப்பட மாட்டனு அடம்பிடிக்கிறதா? மாப்பிள்ளை பற்றி ஒரு விவரமும் கேட்காம எடுத்ததும் மறுக்குறது சரியில்லைடி. அன்னைக்குத் தான் விவரம் கேட்காம நாங்க என்னமோ உன்னைப் பாழங்கிணத்தில் தள்ள போறது போலக் கோபமா கத்திட்டு போயிட்ட. இப்பவாவது கேளு. மாப்பிள்ளை… ” என்று மேலும் விவரம் சொன்ன போனவரை பேசவே விடாமல் “போதும் நிறுத்துங்கம்மா…” என்று கத்தி பேசவிடாமல் செய்திருந்தாள்.

என்றைக்கும் இல்லாமல் அவள் அதிகச் சத்தத்தில் கத்த, உள் அறையில் இருந்த கார்த்திகா பயந்து போய் வெளியே வந்து எட்டி பார்த்தாள்.

வசந்தாவும் திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தியவர் மகளின் முகத்தில் தெரிந்த ஆத்திரத்தில் வாயடைத்துப் போய்ப் பார்த்தார்.

அந்த நேரத்தில் சத்யவேணியின் முகம் செங்கொழுந்தாக மாறியிருந்தது. பார்வையில்லா கண்களைக் மூடி மூடித் திறந்தாள். கோபத்தில் முகத்தைத் திருப்பி, திருப்பி நாளா புறமும் அலை பாய்ந்து தவித்தாள்.

அப்போதுதான் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த தியாகராஜன் கதவை தட்ட கையைத் தூக்கியவர் உள்ளிருந்து கேட்ட சத்தத்தில் அப்படியே கையை அந்தரத்தில் வைத்திருந்தார்.

“ஹேய்…! என்னடி?” என்று அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த வசந்தா கோபத்துடன் கேட்க… “கார்த்தி நீ உள்ளே போய்‌க் கதவை மூடிட்டு படி…” என்று தங்கை இருக்கும் திசை பார்த்துச் சொன்னாள் சத்யா. அவளின் அவ்வளவு கோபத்திலும் தங்கை உள்ளே இருந்து வந்த காலடி சத்தத்தைக் கருத்தில் வாங்கியிருந்தாள்.

அவள் உள்ளே சென்றுவிட்டதைச் சத்தத்தை வைத்து உணர்ந்து அன்னை இருக்கும் திசை நோக்கி திரும்பியவள் “அம்மா… எனக்குக் கண்ணு தெரியாதுங்கிறது பெரிய குறை தான். ஆனா இந்தக் கண்ணு இல்லாதவளுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு தானே மா?” என்று கலங்கிய குரலில் கேட்டாள்.

அவளின் கலங்கலான குரலில் தாயின் மனமும் கலங்கி போனது. சத்யா தன் குறையைக் கூட ‘ஆமா… எனக்குக் கண்ணு தெரியாது தான். அதனால இப்போ என்ன?’ என்று நிமிர்வாகவே பதில் சொல்லும் அளவிற்குத் திடம் வாய்ந்தவளாக வளர வளர அவளின் மனதை தயாராக்கி கொண்டவள்.

எனக்குக் குறை இருக்கின்றதே என்று கண்ணீரும் கம்பலையுமாக இருப்பவளும் கிடையாது. மற்றவர்களைப் போல் தான் இல்லை என்ற வருத்தம் அவளுக்கு நிறைய இருந்ததும் உண்டு. ஆனால் காலப்போக்கில் அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டவள். எதற்கெடுத்தாலும் அழுபவள் இல்லை என்பதால் அவளின் இன்றைய கலங்கிய குரல் வசந்தாவை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அதனால் தன்னை விட்டு சிறிது தள்ளி அமர்ந்திருந்த மகளின் அருகில் சென்று அமர்ந்து அவளின் கன்னத்தில் கை வைத்து இதமாகத் தடவி விட்டவர், “சத்யாமா… எதுக்குடா இப்படிக் கலங்குற? உனக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு இந்த அம்மாவுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

“இத்தனை நாளும் தெரிஞ்சதுமா. ஆனா இப்ப தெரியலையோனு தோணுது. அதனால் தான் எனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசி என்னைக் கஷ்டப்படுத்துறீங்க…” என்றவள் இமைகள் படபடவென அடித்துக் கொண்டு அவளின் பரிதவிப்பை காட்டிக்கொண்டிருந்தது.

“உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு அம்மாவுக்கு ஆசையா? சொல்லு…! நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி குடும்பம், குழந்தைனு வாழணும்னு நானும் உங்க அப்பாவும் ஆசைப்படுறோம். அது நடக்க இப்போ தானா ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு. ஆனா அப்படி வர்ற சந்தர்ப்பத்தை நழுவ விடுவோம்னு நீ சொல்ற… அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராம நல்லா யோசிச்சு அப்புறம் முடிவு பண்ணு…” என்று வசந்தா தன்மையாகவே எடுத்துச் சொன்னார்.

“உங்க ஆசை தப்பு இல்லமா. ஆனா… ப்ச்ச்…!” என்று ஏதோ சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி “இல்லமா நான் இந்த விஷயத்தைப் பற்றி இதுக்கு மேல யோசிக்கிறதா இல்லை…” என்றாள்.

தான் இவ்வளவு பொறுமையாக எடுத்துச் சொல்லியும் சொன்னதையே சொல்லும் மகளைக் கண்டு வசந்தாவின் பொறுமை பறந்தது.

அவளின் கன்னத்தில் இருந்த தன் கையை எடுத்தவர் “முட்டாள் தனமா பேசாதே சத்யா…!” என்று அதட்டினார்.

“எதுமா முட்டாள் தனம்? எனக்குன்னு வர போறவன் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறதா முட்டாள் தனம்? எனக்குக் கண்ணு இல்லைனாலும் நானும் ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுஷி தானேமா? என் உடம்பில் இவ்வளவு பெரிய குறையை வச்சுக்கிட்டு நான் இப்படி நினைக்கிறது மிகப் பெரிய பேராசைனு எனக்கே தெரியுது. ஆனா என் மனசு ஏற்கனவே ஒருத்திக்கு புருஷனா இருந்தவரை ஏத்துக்க மாட்டிங்குதே… நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டவள் உதடுகள் அழுகையில் துடித்தது.

மகளின் பேச்சை கேட்டு வசந்தா விக்கித்து அமர்ந்து விட்டார். அவளின் ஆசை நியாயமானது தான். ‘ஆனால் இந்தச் சம்பந்தத்தை விட்டால் அவள் காலமெல்லாம் தங்கள் மகளாக மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்தால்…?’ என்ற கேள்வி அவரைப் பூதாகரமாகப் பயமுறுத்த அவளிடம் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

இருவரின் பேச்சையும் கேட்ட படி அப்படியே வாசற்படியில் அமர்ந்து விட்டார் தியாகராஜன். மகள் மனதில் என்ன உள்ளதென்று அவருக்கும் அறிய வேண்டிருந்தது. தகப்பன் முன்னால் சொல்ல மகள் சங்கடப்படலாம் என்று நினைத்தவர் அமைதியாக அமர்ந்துவிட்டார்.

“என்ன சத்யா இப்படி நினைக்கிற… உலகத்துல யாருமே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா? அவங்களையெல்லாம் நீ தப்புன்னு சொல்லுவியா? அவங்களும் சாதாரண மனுசங்க தானே?

பொண்ணுங்களே இப்போ மறுமணம் செய்துகிறது சகஜம். அப்படி இருக்கும்போது உன் எண்ணம் சரிதானானு நீயே கொஞ்சம் நினைச்சுப் பாரு…” என்று வசந்தா எடுத்துச் சொன்னார்.

“அம்மா, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு சொல்லலை. அப்படிக்‌ கல்யாணம் பண்ணிக்கிறவங்களையும் நான் தப்பு சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு இரண்டாம் தாரமா போறது பிடிக்கலை. அவ்வளவுதான்!

என் புருஷன் எனக்கு மட்டுமே புருஷனா இருக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். இன்னொருத்தி கூட வாழ்ந்து இல்லற சுகம் அனுபவித்து விட்டு அதே சுகத்தை என்கிட்டயும் தேடி வருவது எனக்குப் பிடிக்கல. போதுமா?” தாயிடம் இவ்வளவு விவரமாகப் பேச‌ வேண்டிவுள்ளதே என்று நினைத்தவளின் முகம் அசவுகரியத்தை வெளிபடுத்தியது.

மகளின் உணர்வுகளும் புரிந்தது. அவளின் எண்ணங்களும் புரிந்தது. ஆனால் ‘அவளின் ஆசை நாம் இருக்கும் நிலைமைக்குச் சரி வருமா என்ன?’ என்று நினைத்தவர் “இது வீண் பிடிவாதம் சத்யா. கல்யாணம் ஆகாதவனும் சுத்தமானவனா இருப்பான்னு என்ன நிச்சயம்?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியில் தடுமாறிய சத்யா அவருக்குப் பதில் சொல்லும் வகையறியாது தன் பார்வையில்லா கண்ணை இங்கேயும், அங்கேயும் நிலையில்லாமல் அலைய விட்டாள். அவளின் முகம் பதட்டத்துடன் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் எனத் திரும்பி தடுமாறியது.

மகள் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுவதை வசந்தா இரக்கத்துடன் பார்த்தார்.

“யோசி சத்யா. அப்படி இருந்தா நமக்குத் தெரியவும் போறதில்லை. இப்படி எல்லாம் ஒவ்வொரு விஷயமும் பார்த்தால் யாருக்குமே குடும்ப வாழ்க்கைனு ஒன்னு இருக்காது. சில உள்மன விகாரங்களைத் தெரிஞ்சுக்கிட்டா எல்லாருக்குமே குடும்ப வாழ்க்கை நல்லபடியா அமையாது.

நமக்குன்னு கிடைக்கிற வாழ்க்கையை நமக்கு ஏத்தமாதிரி மாத்திக்க வேண்டியது நம் பொறுப்பு தான். உன் வாழ்க்கையையும் நீ நினைச்சா நல்லா அமைச்சுக்க முடியும் சத்‌யா. காலமெல்லாம் தனியா வாழணும்னு நினைக்காம ஒரு நல்ல முடிவா எடு…!” என்றார்.

அன்னை சொல்ல வருவது சத்யாவிற்குப் புரிந்தது. ஆனால் அவளின் மனம் ஏனோ அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ‘தான் எதற்குமே இதுவரை ஆசைப்பட்டதில்லை. கிடைத்ததை வைத்து தான் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். என்னுடைய இந்த ஒரே ஒரு ஆசை கூட நிறைவேற கூடாதா?’ என்று நினைத்தவளுக்கு அவளின் பிடிவாதத்தை விட்டு தர முடியவில்லை.

“இல்லமா, நான் யோசிக்க மாட்டேன்…” என்று பட்டென்று பதில் சொன்னாள்.

தான் இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும் மகள் முதலிருந்து ஆரம்பிப்பதை கண்டு வசந்தாவிற்குக் கோபம் வந்தது.

“சத்யா…” என்று அதட்டி ஏதோ பேச போன வசந்தாவை நிறுத்த வைக்கக் கதவை தட்டினார் தியாகராஜன்.

மகளின் எண்ணம் தெரிந்ததும் அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் மேலும் சிறிது நாட்கள் விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தவர் மனைவியை இனியும் வழக்காட விடாமல் கதவை தட்டினார்.

கதவு தட்டும் ஓசையில் வசந்தாவின் பேச்சு அப்படியே நின்றது. சத்யாவும் கதவின் பக்கம் தன் முகத்தைத் திருப்பினாள்.

“அப்பாதான் வந்துட்டார் போல…” என்று சொல்லிக்கொண்டே எழுந்து கதவைத் திறக்கச் சென்றார்.

‘தான் பேசியதை எல்லாம் அப்பா கேட்டிருப்பாரோ?’ என்று நினைத்த சத்யா சங்கடத்துடன் சிறிது பதட்டம் அடைந்தாள்.

ஆனால் உள்ளே வந்த தியாகராஜன் எதையும் காட்டிக் கொள்ளாமல் “என்னமா எல்லாரும் சாப்டீங்களா?” என்று சாதாரணமாகக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அவரின் சாதாரணப் பேச்சில் நிம்மதியாக மூச்சு விட்டாள் ‌சத்யவேணி.